ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் திருமணச் சிக்கல்
ஆணும், பெண்ணும் இணைந்து சமூகத்தில் ஒரு அங்கமாவதற்கான நிகழ்வையே திருமணம் என்கிறோம். திருமணம் என்பது சமுதாயக் கட்டுக்கோப்பிற்காக ஆணும் பெண்ணும் அன்பு கொண்டு இயற்கையான எழுச்சிகளைப் பூர்த்தி செய்து கொள்ள ஒருவர்பால் ஒருவர் திருப்தி கொண்டு ஒத்து வாழ்வதற்கானதோர் ஒப்பந்தமே. குடும்ப வாழ்விலும் சமுதாய வாழ்விலும் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் மதித்து, மரியாதை கொடுத்து தோழமையுணர்வுடன் பங்கு கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.” (நளினிதேவி.நா., 1991:143-144)
மனித இனம் தன் பால் உந்துதலை ஒரு நிறுவன அமைப்பிற்குள்
நிறைவு செய்து கொள்ள ஏற்படுத்திய முறையே திருமணமாகும்.” (பக்வத்சலபாரதி,:1990:368) திருமணம் என்பது சட்டமுறைப்படி
அமையும் சடங்காகும்” என பெர்ரண்டு ரஸ்ஸல் கூறுவார்.
(மாதவன். கோ,
1965:29) ஒரு பாதியாய பெண்ணும் மற்றொரு
பாதி
யாய ஆணும் ஒன்றுபடுவது என்னும் தொடர்பிலிருந்து எழும் சமூக அமைப்பே குடும்பம் ஆகும்.
குடும்பம் நீடித்து நிலைப்பதற்குத் திருமண ஏற்பாடு இன்றியமையாதது.” (திலகவதி. க,
2001:24)
திருமணம் என்பது பெண்ணை ஒரு
குடும்பத்திலிருந்து இன்னொரு
குடும்பத்திற்கு மாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்டது. திருமணம் பெண்ணிற்குச்
சமுதாயத்தில் மதிப்பை ஏற்படுத்தி பெண்ணை முழுமையாக்குவதாகக் கருதப்பட்டு
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.”(இலட்சுமி.சி.எஸ், 1986:142)
மேற்கூறப்பட்டவற்றிலிருந்து ஆணும் பெண்ணும்
மனமொத்து ஆணைந்து சமமாக அன்பைப் பகிர்ந்து கொண்டு வாழ்வதற்கான வாழ்க்கை ஒப்பந்தமே
திருமணம் என்பது புலப்படுகிறது. சமூகத்தில் ஆண்கள் முதன்மையானவர்கள் என்றும்
கருதப்பட்டு வருகின்ற காரணத்தினால் திருமணம் என்பது பெண்களைப் பொருத்த அளவில்
மனமொத்த வாழ்க்கை ஒப்பந்தமாக இருப்பதில்லை. ஆணைவிடத் தாழ்ந்தவளாகக் கருதப்படும்
பெண் ஆணை மணக்க வரதட்சணை தரவேண்டியுள்ளது. பெண்ணைப் பெற்றவர்கள் தம் உழைப்பின்
பெரும்பகுதியைத் தன் மகள் பொருட்டு வரதட்சணையாகத் தருவதால் அவளைச் செலவாகக் கருதி
பிறப்பு முதலே தூற்றுகின்றனர். அவளைச் சுமையாகக் கருதுகின்றனர்.
ஒரு ஆணையும் பெண்ணையும் உரிமையுடன் குடும்பம்
நடத்துவதற்காகச் சேர்த்து வைக்கும் மண வினை இன்று மலையைப் பெயர்த்து வைக்கும் அளவிற்குப்
பெருஞ் செயலாகப் போய்விட்டது.” (சரோஜா.கோ, 2000:84) பெண் சிறுவயது முதலே திருமணத்திற்காகப் பல கட்டுப்பாடுகளோடு
வளர்க்கப்படுகிறாள். பெண்ணாகப் பிறப்பெடுத்ததன் பயனே இணுக்குக் கட்டுப்பட்டு
வாழ்வதற்காகத்தான் என்று போதிக்கப்படுகிறாள். அவனுடைய விருப்பத்திற்கேற்ப, அவன் மனம் கோணாமல், சகல விதத்திலும் ஒத்துப் போகக்
கூடிய வகையில் வாழ்வதே அவள் வாழ்வின் நோக்கம் ஆகும்.
இப்படி வளர்க்கப்பட்ட பெண்ணே நல்ல குடும்பத்துப்
பெண் என்று பாராட்டப்படுகிறாள். பெண் உடல், மனம், அறிவு இவற்றிற்குப் பிறரைச் சார்ந்து வாழப் பழகிவிட்டதாலும், இளமை தொட்டே திருமணமே அவள் வாழ்வின் குறிக்கோள் என வளர்க்கப்பட்டு
விட்டமையாலும், சமூகப் பாதுகாப்புக் கருதியும் திருமணம் அவளுக்கு
நிர்பந்தமாகிவிட்டது.” (கமலா.பொ.நா, 1994:62)
இவ்வாறு திருமணம் முடிக்கப்பட்ட பின்னரும் சீர்
வரிசை என்ற பெயரில் பெண் பிறந்த வீட்டிற்குத் துரத்தப்படுகிறாள். பெற்றவர்களும்
பெண்ணிற்குச் செய்வது கடமை என்று சமூகத்தின் கட்டுப்பாட்டிற்கு ஏற்ப, கடன்பட்டாவது செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பெண்களும் வாழ
வேண்டிய கட்டாயத்தினால் பெற்றோரின் இயலா நிலையறிந்தும் சீர்வரிசைப் பொருளைத்
தொடர்ந்து பெற்றோரிடம் கேட்ட வண்ணம் உள்ளனர். இதனால் பெண்களைப் பிறவியிலேயே
கொல்லவும் அதை நியாயமென்று நினைக்கவுமான சமூகச் சூழல் தோன்றிவிட்டது. இதனால்
பெண்களின் வாழ்வில் திருமணமே சிக்கல் மிகுந்ததாகத் தோன்றுகிறது. பெண்களுக்குத்
திருமணச் சிக்கல் பலவகைகளில் எழுகிறது. ஆர்.சண்முகசுந்தரத்தின்புதினங்களில் அவை
கீழ்க்கண்ட வகைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவை.
1. பொருந்தாமணம்
2. உரிமையின்மை
3. பெண் பார்த்தல்
4. மாப்பிள்ளை வீட்டார் போக்கு
5. குடும்பத்தகுதி, குடும்ப
ஊறுப்பினர் நடவடிக்கை
6. வரதட்சணை
7. பாலியல் வன்முறை
5.5.1. பொருந்தா மணம்
பெண்களின் மண வாழ்வு சார்ந்த சிக்கல்களில்
பொருந்தா மணம் முக்கியமானது. பெண்ணினுடைய வாழ்க்கைச் சிக்கல்கள் பெரிதும் திருமண ஒப்பந்தங்களை
மையமிட்டே எழுகின்றன. வாழ்க்கையில் ஆணைகின்ற ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்
மனப்பொருத்தத்தைப் பார்க்காமல், குலப்பொருத்தம், பொருள் பொருத்தம், சாதிப் பொருத்தம் எனப் பல
பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன.
பல பொருத்தங்கள் பார்த்துச் செய்யப்படுகின்ற
திருமணத்தில் ஒருவருக்கு எவ்வகையிலும் பொருந்தாத் துணையை இணைத்து வைப்பது
பொருந்தாத் திருமணம் எனப்படுகிறது.” (செந்தமிழ்ச்செல்வி.
தி, 2001:68) இங்குப் பொருந்தாத் திருமணம் என்பது வயது வேறுபாட்டை அடிப்படையாக
எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆண் தன்பாலின ஆசைக்கு வயது வரம்பை விதித்துக்
கொள்வதில்லை. எந்த வயதிலும் அவனுக்குப் பெண் தேவை என்று சமூக அமைப்பும்
காரணங்களைக் கற்பித்திருக்கிறது. முதுமைக் காலத்தில் வேலைக்காரி போல பணி செய்யவும், பாலின வேட்கையைத் தீர்க்கவும் மனைவி இளையவளாக வேண்டுமென்று இளவயதுப் பெண்களை
மணந்து கொண்டனர். பெரும்பான்மையான இளம் கைம்பெண்கள் பெருகிப் போனதற்குக் காரணம் இளம்
பெண்ணை வயது முதிர்ந்த ஆண்கள் மண முடித்துக் கொள்வதே ஆகும்.
உலக இன்பத்தை நுகர்ந்து அலுத்து போயிருக்கும்
பழுத்த கிழவனாயினும், தம் மனைவியர் இறந்துபட்டவுடன்
மறுமணம் புரிய முயலுகின்றான். அதுவும் தக்க பருவமும், எழிலும் பொருந்திய இளம் கன்னியர்களைத் தம் துணைவியாகத் தேர்ந்தெடுத்துக்
கொள்கிறான். ஆனால் ஒரு பெண்மகள் கொழுந்தன் இறந்து விட்டால் பதினாறு வயது
கட்டழகியேயாயினும் தன் ஆயுட்காலம் முழுவதும் அந்தோ! தம் இயற்கைக் கட்புலனை வலிய அடக்கிக்
கொண்டு, மனம் நைந்து வருந்தி மடியும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு
வருவது என்னே அநியாயம்” எனப் பெரியார் (1997:69) கூறுகிறார்.
பெண் தெய்வம் கல்லா? இக்கொடுமையை எழுதக் கையும் ஒடவில்லை. பெண் கொலை, பெண் கொலை” (1998:203) என்று திரு.வி.க. கொலைத் தொழிலுக்கு ஒப்பாகப் பொருந்தா
மணத்தைக் குறிப்பிடுகிறார்”. இப்படிப்பட்ட கொடுமையான
மணங்கள் பெரிதும் நிகழ்ந்ததற்கான காரணத்தை லா.சா.ரா, கன்னிகழியாமல்
பெண்ணை வைத்திருக்கலாகாது என்றும் புதல்வர் பேறு இல்லாதோர், புத்தென்னும் நகரத்தில் கிடக்க நேரிடும் என்றும் சமயத்தின் பெயரால்
வழங்கப்பட்ட நம்பிக்கைகளும், மறுமணம் என்ற பெயரில் பல
பொருந்தாமணங்கள் நிகழக் காரணமாயின.” (1997:87) என்று
குறிப்பிடுகிறார்.
ஆர்.சண்முகசுந்தரத்தின்அறுவடை புதினத்தில் எழுபது
வயது சின்னப்ப முதலியாரின் பெண் ஆசையின் காரணமாகப் பொருந்தா மணம் ஏற்பாடு
செய்யப்படுகிறது. தேவானையின் தந்தை நாச்சிமுத்து சமூக விரோதமாக சீட்டாடி போலீசில்
மாட்டிக் கொள்ள,
அவனுக்குப் பணம் கொடுத்து உதவிய சின்னப்ப
முதலியார் பதிலுக்கு அவனுடைய பதினைந்து வயது மகளைக் கேட்கிறார். சின்னப்ப முதலியாரின்
பணத்தின் மேல் கொண்ட ஆசையால் நாச்சிமுத்து சம்மதிக்கிறான். பெண் பொருளியல் பண்டம்
தான் என்பதை அன்று முதல் இன்று வரை ஆணாதிக்கச் சொத்துரிமை நியாயப்படுத்தி அமுல்
செய்து வருகின்றது.” (இராயகரன். பி, 2001:153) அக்காலச் சமுதாய நிலையில் பெண் சடப் பொருளாக இருந்த நிலை
தெளிவாகிறது. வறுமைச் சூழல், ஆடம்பர மோகம், பணத்தாசை போன்றவை காரணமாக ஏழைப்
பெண்களை விற்பனை செய்யும் வகையிலேயே பொருந்தாமணங்கள் நிகழ்ந்துள்ளன. இது போன்ற
பொருந்தாமணங்கள் தங்கு தடையின்றி நடைபெறுவதற்கான சூழ்நிலைக் காரணங்களையும் ஆர்.சண்முகசுந்தரம்புதினத்தில்
தெளிவுபடுத்தியுள்ளார்.
இப்பொருந்தாமணத்தை ஆதரிப்பவர்கள் மூவர்.
1. மணமுடித்துக் கொள்ளும் ஆண்
2. பெண்ணின் தந்தை
3. இத்திருமணத்தால் ஆதாயமடைபவர்கள்.
5.5.1.1. ஆதரிப்பவர்கள்
மணமுடித்துக் கொள்ளும் ஆண் சின்னப்பமுதலியார்
மருமகளோடு சண்டை போட்டுக் கொண்டு தனிக் குடித்தனம் வந்து விட்டதால் வயதான
காலத்தில் பார்த்துக் கொள்ள மனைவி தேவைப்படுகிறாள்.
“ஏமஞ்
சாமத்திலே ஒரு வாயை வலிச்சது, வயித்தெ வலிச்சது. யாருங்கமாமா
இருக்கிறாங்க பாக்கறதுக்கு காத்தாலே வந்து சேதி தெரிஞ்சிக்கிட்டுப் போறவங்க தானே?” (அ.வ:11) காணாச்சுனை புதினத்திலும் இதே காரணத்திற்காக எண்பத்திரண்டாவது
வயது பெரியவருக்கு மூன்றாவதாக இளவயதுப் பெண் மணமுடிக்கப்படுகிறாள். (கா.சு : 46-47)
மற்றொரு காரணம் ஜாதக நம்பிக்கை. சோசியக்காரன்
சொல்லியிருக்கிறான். எஞ்சாதகத்திலே இன்னொரு சுபகாரியம் இருக்குதுன்னுதா சொன்னான்
மாப்பிளெ!” (அ.வ:38) என்று கூறி சின்னப்பமுதலியார்
தனக்குப் பெண் தேடுமாறு கூறுகிறார்.
மூன்றாவது காரணம் பெண்பித்து. திருமணக்கவலை அவரைச்
சதாவாட்டித் துன்புறுத்திக் கொண்டிருந்தது.” (அ.வ:41) எத்தனை சுகமிருந்தும் தமக்கு ஒரு சுகமிருப்பதாக அவருக்குப் புலப்படவில்லை. (அறுவடை.:42) இக்காரணங்கள் எதையும் திருமணமாகிப் பதினைந்து வயதில் வாழ்க்கையிழந்த ஒரு
கைம்பெண் கூற முடியாது. சிந்திக்கவும் இயலா நிலை சமூகத்தில் நிலவி வருகிறது.
பெண்ணின் தந்தை பெண்ணின் தந்தையாகிய
நாச்சிமுத்துவிற்கு உழைத்துப் பிழைப்பது அவமானமான செயல். ஆனால் ஆடம்பரமாக வாழவேண்டும்.
தன் ஆடம்பரத்திற்கேற்ப வசதியான இடமாக மகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு
மாப்பிள்ளைக்கு வரதட்சணை தரவேண்டும். ஆனால் அவன் விரும்பியது போல வசதியான
மாப்பிள்ளை, அவனுக்குப் பணம் கொடுத்து தேவானையை மணமுடித்துக் கொள்ளக்
காத்திருக்கிறார். இதனால் குடும்ப வறுமையும் நீங்கும், தேவானை பற்றிய திருமணக் கவலையும் இல்லை, வரதட்சணைக்காக
சம்பாதிக்க வேண்டியதும் இல்லை. எனவே, தேவானையிடம்
மிக எளிதாகக் கூறுகிறான். எத்தனெ நாளைக்கடா இப்படியே கஷ்டப்படறது? ஏராளமா நகை போடப்போறாரு. தம் சொத்தெல்லாம் ஊம் பேருக்கு எழுதி வைக்கப் போறாரு” (அ.வ:65) அவளின் மனநிலைப்பற்றி அவனுக்குக் கவலையில்லை.
சின்னப்பமுதலியார் கொடுத்த பணத்தில் வாங்கிய ஒபன் கோட்டும், ஷீவும், பூட்சும் போட்டவுடன் உலகமே சுவர்க்க லோகமா மாறி விடுகிறது.
(அறுவடை :70)
இத்திருமணத்தால் ஆதாயம் பெறுபவர்கள் இருவர்.
கருப்பண்ணமுதலியாருக்குச் சின்னப்பமுதலியாரின் பணம் தான் குறி அவருடைய இரண்டு
மகன்களின் திருமணத்தை நடத்தப் பணம் தேவை. அது சின்னப்பமுதலியாரிடம் ஐராளமாக இருக்கிறது.
எனவே அவர் மனதில் திருமண ஆசையைத் தூண்டி அதன் மூலம் ஆதாயம் தேட முனைகிறார். எழுபது
வயதான சின்னப்ப முதலியாரிடம் ஒன்றும் தெரியாதது போல வயதைக் குறைத்துக் கேட்கிறார்.
அம்பது அம்பத்தைந்து இருக்குமிங்கறீங்க?..... அதுக்கு மேலே
ஒரு பயல் மதிச்சிட்டான்னா என் காதை அறுத்துக்கறேனுங்க” (அ.வ. :10) என்று அவர் மனதை குளிரவைத்து, அவருடைய
சொத்தை அனுபவிக்க இன்னொரு மகன் பிறப்பான் என்று ஆசைகாட்டுகிறார்.
இதனால், சின்னப்பமுதலியார், தனக்கு வரப்போகும் மனைவியையும், அவள் மூலம் தனக்கு ஏற்படப்போகும் சந்தான பாக்கியத்தையும் எண்ணி மனம்
பூரித்துப் போனார்.” (அ.வ.:50) இளவயது மணப்பெண்ணைத் தேட பணத்தைக் கருப்பண்ண முதலியாரிடம் வாரி வழங்குகிறார்.
தன் மகனுடைய கலியாண ஜவுளிகளை எல்லாம் கூட இந்தச் செலவிலேயே சேர்த்துக்கொண்டார். அதோடு
அரிசி, பருப்பு முதலிய சாமான்களும் மூட்டை மூட்டையாக கருப்பண்ண
முதலியார் வீட்டுக்குப் போய் சேர்ந்தன.” (அ.வ.:70)
அவரைப் பொருத்தவரையில் சின்னப்பமுதலியாருக்குச்
சிறுவயதில் பெண்ணை மணமுடித்து வைப்பது பாவமல்ல. எல்லாக் கலியாணங்களுமே இன்பமான
குடும்ப வாழ்க்கையாக அமைந்து விடுகிறதா? இன்பம்
கிட்டும் என்று முதலில் எதிர்பார்த்து ஏமாந்து போவதில்லையா? ஆனால் சின்னப்பமுதலியார் விஷயத்தில் அப்படி ஏமாந்து போவதற்கு இடமில்லையல்லவா? அந்த வகையில் பார்த்தால் கலியாணத்தின் இரம்பத்திலேயே வெற்றி தானே? பெண் கொடுக்கிறவரும் சம்மதித்து, கலியாணப்
பெண்ணும் சம்மதித்துக் கல்யாணம் செய்து கொள்வதாயிருந்தால் அதைவிடப் பொருத்தமான
மணம் வேறெங்காகிலும் ஊண்டா? மாப்பிள்ளை கிழவனாக இருந்தால் என்ன? குமரனாக இருந்தால் என்ன?” (அ.வ:40) திருமணத்திற்காகப் பாடுபடும் அவருக்கு அதில் இதாயமிருக்கிறது என்பது மட்டுமல்ல
திருமணமாகாத ஏழைப் பெண்ணின் குடும்பத்தின் வறுமையையும் நீக்க அவர் காரணமாக இருக்கிறார்.
எனவே அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
இதுபோல் தேவானையின் காதலன் சுப்பிரமணியனுக்கும் இரட்டை
ஆதாயம். தேவானை யாரையோ திருமணம் செய்து கொண்டு எங்கோ போய்விடப் போவதில்லை. அவனுடைய
தாத்தாவை மணந்துகொண்டு அவன் வீட்டிற்குத்தான் வரப்போகிறாள். எனவே, இதுவரை கிடைத்து வந்த இன்பம் தடையின்றிக் கிடைக்கும். தாத்தா தரமறுத்த
சொத்தும் தேவானையிடம் தான் இருக்கப் போகிறது. பாலுணர்வின் அடிப்படையில் ஆணுக்கு இயல்பாகவே
அமைந்து விடுகிற ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை, வக்கிரமான
குரூரத்தனங்களாக பொருளியல் தளத்தில் மாறுவதை இப்பாத்திரம் மூலம் அறிய முடிகிறது. ஆண்
தன் ஆதிக்க வெறியை, ஒவ்வொரு கால கட்டங்களிலும்
செயல்படுத்தித் தனக்குச் சாதகமாக்கிக் கொள்வான் என்பதற்குச் சுப்ரமணியன் சிறந்த உதாரணமாகும்.
பெண்ணைப் பணயமாக்கி எல்லாவற்றையும் தனக்குச்
சாதகமாக்கிக் கொள்ளும் ஆண் இனத்தின் தன்னலத்தையே இது போன்ற திருமணங்கள்
படம்பிடிக்கின்றன. சின்னப்பமுதலியார் போன்ற பணபலம் ஊடைய பெண் ஆசை பிடித்த
பேராசைக்காரர்கள் பணச் செருக்கினால் பெண்களை மிக எளிதாக விலைக்கு வாங்கிவிடும்
சமூக அவலம் தமிழ்நாட்டில் பெருகிப் போனதால் தான் இளம் விதவைகளின் எண்ணிக்கையும்
பெருகிப் போனது.
5.5.1.2. எதிர்ப்பவர்கள்
பொருந்தா மணக் கொடுமையைப் பெண்கள்தான் எதிர்க்கின்றனர்.
அதுவும் மறைமுகமாகவே எதிர்ப்பைக் காட்டுகின்றனர். தேவானையின் அத்தை அங்கம்மாள்
மற்றும் சின்னப்பமுதலியாரின் மருமகள் போன்றோர். இம்மணத்தைக் குறித்து நாச்சிமுத்து
கூறியவுடன், அங்கம்மாள் வாய் திறந்து ஒன்றும் பேசவில்லை. தேவானையை அருகில்
இழுத்துக் கட்டிக்கொண்டு ஒ வென அழுதாள்.” (அ.வ:57) ஆனால், திருமண நாளில், தேவானை
சுமக்க முடியாமல் போட்டிருக்கும் நகை தினுசுகளையும், விலை உயர்ந்த
சேலை கட்டியிருப்பதையும் பார்க்க அங்கம்மாள் கூடச் சற்று ஆறுதலடைந்தாள்.” (அ.வ.:71) பெண்ணின் திருமண வாழ்க்கையில் தலையிடும் உரிமை இல்லை என்பதோடு, பெண்ணின் வாழ்க்கையைவிடச் செல்வமே பெரியது என்ற கொள்கை அவளிடம் வெற்றி
பெற்றுவிடுகிறது. சின்னப்பமுதலியாரின் மருமகளும் மறைமுகமாகவே எதிர்ப்பைக்
காட்டுகிறாள். கருப்பண்ணமுதலியாரிடம், சாகப் போற
கெழவனுக்கு நீ கல்யாணத்தெப் பண்ணிவெச்சிட்டு ஊரிலே இருந்திருவயா” (அ.வ.:49) என்று மிரட்டுகிறாள்.
ஆனால், திருமண
நாளில், பெண்ணுக்கு நடக்க வேண்டிய சீர்களை எல்லாம்
சின்னப்பமுதலியாரின் மருமகளே முன்னிருந்து நடத்தி வைத்துக் கொண்டிருந்தாள். வீண்
பயமுறுத்தல்களினால் காரியம் பலிக்காது. சொத்து முழுவதும் அடியோடு போய்விடும் என்று
உறுதியாகத் தெரியவே” (அ.வ.:70) முன்னிருந்து கல்யாணத்தை நடத்த அவளே வந்துவிட்டாள். இங்குச் சொத்தின் முன்
வைராக்கியங்கள் தளர்ந்து இணங்கிய வரை லாபம் என்ற நடைமுறை வாழ்க்கைப் போக்கு
தென்படுகிறது. மனநிழலிலும் பணத்திற்கு ஆசைப்பட்டு பாப்பா என்ற நாடக நடிகை, குஞ்சாள் என்ற பெண்ணைக் கிழவருக்குக் கட்டி வைக்கிறாள்.
பொருந்தாமணத்தை ஆண்கள் வெளிப்படையாக வரவேற்க
பெண்கள் மறைமுகமான எதிர்ப்பு தெரிவிக்கும் அவல நிலை மட்டுமின்றி அதுவும் பயனற்றுப்
போவதைக் காணமுடிகிறது. ஆர்.சண்முகசுந்தரம்பொருந்தா மணக்கொடுமையை வெறுத்துள்ளார். இதனால்
பொருந்தாமண ஆசையில் தன்னை இளைஞனாகவும், கட்டழகனாகவும்
கருதிக் கொண்டிருக்கும் சின்னப்ப முதலியாரை குறித்து, ஆனந்தத்தால் கடகடவெனச் சிரித்தார் குரங்கு கூடச் சிரித்தால் முகம்
நன்றாகத்தானிருக்கும் போலிருக்கிறது.” (அ.வ.:10) என்று நையாண்டி செய்கிறார். வறுமை, வரதட்சணைக்
கொடுமை, பெற்றோரின் பொறுப்பின்மை, ஆடவரின் ஆதிக்க
நிலை முதிய ஆடவர்களை இளம் பெண்கள் மணம் புரியும் நிலை ஏற்படுகிறது.
5.5.2. உரிமையின்மை
உலகத்தின் எந்தச் சமுதாயத்திலும் வாழ்க்கைத் துணைத்
தேர்ந்தெடுப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பொதுவாக, தமிழ்க் குடும்பங்களில் பெற்றோர் தம்முடைய மக்களின் திருமணம்
தொடர்பான கருத்துக்களை அறிந்து கொள்ள முன்வருவதில்லை. கூச்சம் காரணமாகப்
பெற்றோரிடம் மக்களும் தெரிவிப்பதில்லை. இதனால் பல விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன.
மனம் பொருந்தாமல் கட்டாயத்திற்காக மணம்புரிந்து கொள்வதும் ஒரு வகையில்
பொருந்தாமணம்தான். பொருந்தாமை என்பது மனம், வயது, அழகு, செல்வம் என்ற பல அடிப்படைகளில்
உருவாகலாம்.”
(கண்ணகி துரைசாமி, 2001:137)
பெண்களைக் கண்ணும் கருத்துமாகப் பேணிக் காத்து ஒருவனிடம் ஒப்படைக்க
வேண்டும். என்னும் எண்ணம் சமூகத்தில் திகழ்கிறது. பெண் தன்னுடைய வாழ்வைத் தானே
திட்டமிட்டுக் கொள்ளக் கூடியவள் என்னும் நம்பிக்கை இன்று வரை ஏற்படவில்லை.” (சரோஜா, கோ, 2000:46) மிகச் சிறிய வயதிலேயே பெண்களுக்கு மணமுடிப்பதால் பெண்களின் அறியாமையைக்
காரணம் காட்டுவர். எனினும் திருமணத்தின் போது ஆணிடம் விருப்பம் கேட்கப்படுவதுபோல
தன்னிடம் கேட்கப்படாததைப் பெண்ணும் பெரிதாகக் கருதுவதில்லை. அப்படி ஒரு உரிமையிருப்பதையே
படிப்பறிவற்றிருப்பதால் அறியும் வாய்ப்பும் ஏற்படுவதில்லை.
திருமண உரிமை என்பது பொதுத்தன்மையுடையதாக இருப்பினும், அதுவே ஆண், பெண் என்ற இருபாலரிடமும்
வெவ்வேறு நிலைகளில் சமுதாயத்தில் செயல்படுத்தப்படுகிறது. ஆணிற்கும், பெண்ணிற்கும் சமுதாயம் காட்டும் ஒரு தலைக் கண்ணோட்டம் இங்கு
தெளிவாகின்றது.”
(செந்தமிழ்ச் செல்வி, 2001:50)
ஆர்.சண்முகசுந்தரம்புதினங்களில் திருமண உறவு பூவும்பிஞ்சும், எண்ணம் போல் வாழ்வு, விரிந்த
மலர், சட்டிசுட்டதடா, காணாச்சுனை, அதுவா?இதுவா?, தனிவழி, அறுவடை, அழியாக்கோலம் போன்ற
நாவல்களில் இடம் பெற்றுள்ளது. எந்த புதினத்திலும் பெண்ணின் விருப்பத்தைப் பெற்றோர்
கேட்பதில்லை. பூவும்பிஞ்சும் புதினத்தில் சிறுவயதிலேயே செல்லாயாளையும் -
மாரியப்பனையும் அணைத்து இரு குடும்பப் பெரியவர்களும் பேசிக் கொள்கின்றனர்.
ஆனால், அவர்கள் வளர்ந்த
நிலையில் பொருளாதார ஐற்றத்தாழ்வு பெரிய இடைவெளியை ஏற்படுத்திவிடுகிறது.
செல்லாயாளின் குடும்பமும் மாரியப்பன் குடும்பமும் பகை கொண்டு விடுகின்றன. எனவே, செல்லாயாளுக்கு வேறிடத்தில் அவள் தந்தை மாப்பிள்ளை
பார்க்கிறார். இதையறிந்து மாரியப்பன், செரி நீ
கண்ணாலம் பண்ணிக்கப் போறே?” என்று பரிகசிக்கிறான். அவளோ, சித்தோட்டுக்காரருக்கு இரண்டாங் குடியாக் கேக்கறாங்க.
செல்லண்ணனுக்கு மூணாங் குடியாக் கேக்கறாங்க. செல்லண்ணனுக்கு மூணுங் குடியாக்
கேக்கறாங்க. எங்க ஒயன் யோசனை பண்ணிட்டு இருக்காங்க. உண்ணி இரு கையிலே புடிச்சுக்
குடுப்பாங்களோ தெரியலே.” (பூ.பி:87) என்று தன் அவல நிலையை
விளக்குகிறாள்.
அறிவுத்திறமும், துணிவும்
பெற்று தந்தைக்கு இலோசனை கூறக் கூடியவளுமான செல்லாயாள், தன்னை வயதான கிழவனுக்குத் தந்தை மணமுடிக்க நினைக்கும்
நிலையில் மறுப்பேதும் கூறுவதில்லை. திருமண உரிமையைப் பொருத்தவரை ஆண்கள் மௌனமாக இருக்கலாம்.
ஆனால், பெண்கள்
மௌனமாக்கப்பட்டார்கள்.” (சரசுவதி வேணுகோபால், 1994:3)
குடும்ப வறுமைச் சூழல், குடும்பமானம், பெற்றவர்களின் மனவேதனை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு
பொருந்தா மணத்திற்குப் பெண்களும்
சம்மதித்து விடுவதைக் காண முடிகிறது. சட்டிசுட்டதடா வேலாத்தாளின் தந்தை அவளுடைய
விருப்பம் கேட்காமல் காடையூர் மாப்பிள்ளையைப் பேசி முடித்து விடுகிறார். ஆனால்
தான் அங்கமுத்துவை தான் விரும்புவதைத் துணிவுடன் தக்க நேரத்தில் வெளிப்படுத்தி
விடுகிறாள். அவள் உறுதியைக்கண்ட தந்தை வேற வழியின்றி சம்மதிக்கிறார்.
பூவும்பிஞ்சும் வேலாத்தாளும் மாரியப்பனைத் தன் தந்தையிடம் பேசவிட்டு சிக்கலுக்கு
முற்றுப்புள்ளி வைக்கிறாள். ஆனால், தானே தன் தந்தையிடம்
கூறுவதில்லை. எண்ணம் போல் வாழ்வு ருக்மணி மற்றும் விரிந்த மலர் பாலாமணி போன்றோரும்
திருமண உரிமை எடுத்துக் கொள்கின்றனர். சட்டிசுட்டதடா வேலாத்தாள் முதலில்
தயங்கினாலும் பின் தன் முடிவை உறுதியாக வெளிப்படுத்திவிடுகிறாள்.
இவ்வாறு கிராமத்துப் பெண்கள் தங்கள் திருமண உரிமையைத்
தாங்களாகவே எடுத்துக் கொள்வதை, மகாப் பெரிய அரக்கன்
வீழ்ந்தான். தேவர்கள் பூமாரி சொரிந்தார்கள்.” (ச.சு:188) என்று இதுவரையிலும் பெண்களை அடக்கி வைத்து உரிமையைப்
பறித்துக் கொண்டிருந்த ஆதிக்க அரக்கனின் அழிவைக் குறிப்பாகக் காட்டுகிறார்.
காணாச்சுனை
லட்சுமியின் திருமணம் உறுதி செய்யப்பட்ட நிலையில் லட்சுமியிடம் ஒப்புதல்
கேட்கப்படுவதில்லை. அவள் கதிர்வேலுவை மனதளவில் விரும்புவதால் சிக்கல் எழுவதில்லை.
மாப்பிள்ளை பிடிக்கவில்லையென்றாலும் அவள் அதைக் கூற முடியாது. தந்தையின் ஆதிக்கக்
குணம் அப்படிப்பட்டது. தந்தை நாராயணமுதலியார், கதிர்வேலுவின்
தங்கை கமலத்தையும் தன் ஆதிக்கத்தின் பேரில் மகன் நடராஜனுக்கு மணமுடிக்க விரும்புகிறார்.
கமலம் படித்த பண்புள்ள பெண். நடராஜன் எர் சுற்றி, இருவருக்குமுள்ள பொருந்தாமையைக் கண்டு அவர் மனைவி இதை எதிர்க்கிறாள்.
ஆனால் நாராயணமுதலி போகப் போக எல்லாம் செரியாப் போயிரும். இந்த இரண்டுக்கும்
பொருத்தம் பாக்கறதை விட இது நடந்ததிண்ணா வெளையற பலனை நெனச்சுப் பாரு. அதனாலே என்ன
லாபம் தெரியுமா?
சொத்தும் வெளியே போகாது” (கா.சு.:141) என்கிறார்.
ஆனால், கமலம் சம்மதிப்பாளா என்று கேட்கும் மனைவிக்கு, அட போ! எருதைக் கேட்டுட்டுத்தான் சலங்கையைக் கட்றாங்களா?” (கா.சு.:144) என்று சமூகம் பெண்ணைப் பார்க்கும் பார்வையில் அலட்சியமாகப்
பதிலளிக்கிறார்.
ஆனால், கல்வி பெற்ற கமலம் அதை
ஊடைத்தெறிகிறாள். தான் எருதல்ல என்பதை நிரூபித்து, நாராயண
முதலியைத் தலை குனிய வைக்கிறாள். எனவே, பெண்
கல்வி கற்றுத் தெளிவு பெற்றால் பொருந்தாமணங்கள் நடைபெறாது என்பதை இப்பாத்திரம்
மூலம் ஆசிரியர் உணர்த்துகிறார். பெண்கள் தங்கள் உரிமையைத் தாங்களே எடுத்துக் கொள்ள
வேண்டும். அப்போதுதான் பெண்களின் வாழ்வில் திருமணம் சிக்கலாக இருக்காது என்பதே இப்புதினங்கள்
காட்டும் செய்தியாகும். பெண்மகள் தனக்கினிய தலைவனைத் தானே தெரிந்தெடுத்து வந்த
வழக்கமொன்றே,
அந்நாளைய பெண்ணுரிமைக்குப் போதிய சான்றாக
நிற்கிறது. (திரு.வி.க, 1998:41)
எனினும், மரபிற்குட்பட்டே இவ்வுரிமையைப்
பெண்கள் பெற முயல வேண்டும் என்று ஆசிரியர் கருதியுள்ளார். மூ.அ. சாவித்ரி தன் அத்தை
தனக்குத் திருமண ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறியதும் தன் விருப்பமின்மையைத்
தெரிவிக்காமல் தப்பித்துக் கொள்ளும் போக்கில் தன் தோழியர் வீடுகளுக்குச்
செல்கிறாள். திருமணமான ஆண்களின் இரட்டை வேடத்தைக் கண்டு கொள்கிறாள். ஆனால், வீணான அவதூறுக்கு ஆளாகி மாமன் இறப்பிற்குக் காரணமாகி
விடுகிறாள்.
பிணி அன்னார் பின் நோக்காப் பெண்டிர் (நாண்:33) கூற்றுக்கு ஐற்றாற்போல கற்றிறிருந்தும் அதைச் சரிவரப்
பயன்படுத்தத் தவறி விடுகிறாள். மரபை மீறி செயல்பட்டால் என்ன நிகழும் என்பதை அதுவா?இதுவா? என்ற புதினத்தின்
மூலம் காட்டுகின்றார். அருக்காணி நுண்ணிய அறிவும், புத்திசாலித்தனமும்
கொண்டு தன் சிக்கல்களை இனங்கண்டு முடிவெடுக்கும் திறன் படைத்தவள். அவளை வளர்க்கும்
சித்தி, சித்தப்பா இருவரும் அருக்காணியின் மனம் நோகும் படி
நடந்தறியாதவர்கள். எங்கூடப் படிக்கிற பொண்ணு இந்தத் தினுசிலே போட்டிட்டு
வந்திருந்தது என்று சிறுமி கூற வேண்டியது தான் பாக்கி பள்ளியிலிருந்து அவள் மேனியை
மின்னாக்கக் காத்திருக்கும்.” (அ.இ.:68) மகள் கேட்கும் அனைத்தையும் வாங்கிக் கொடுப்பதில் ஆனந்தமடைவர்.
அருக்காணியும் அவர்களை விட்டுச் சிறிது நேரம் பிரிந்திருக்கமாட்டாள். ஆனால் அவள்
திருமணத்தகவலை மறைத்து விடுகிறார்கள்.
திருமணமென்று வரும்பொழுது பெற்றோர் தம் விருப்பத்திற்கேற்பவே
செயலாற்றுகின்றனர். பெண்ணின் அறிவை, தைரியத்தை, பாராட்டும் பெற்றோர், மாப்பிள்ளையைத்
தீர்மானிக்கும் உரிமையை மட்டும் அவளுக்குக் கொடுக்காமல் பறித்துக் கொள்கின்றனர்.
பெற்றோர் திருமண விசயத்தில் மாறுபட்டு நடப்பதை விரும்பாத அருக்காணி தானும்
முரண்பட்டுச் செயல்படுகின்றாள்.
தன் உரிமையைத் தன் பெற்றோரிடம் வெளிப்படையாகக் கூறி தன்
விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் நேர்வழியில் செல்லாமல் பெற்றோரைப் போலவே
மறைவாகச் செயல்படுவதால் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்வதில்லை. அவள் மணக்க விரும்பிய மணி வராத நிலையில்
சிறிதும் பொருத்தமில்லாத காளிமுத்துவோடு ஒடி விடுகிறாள். அவளுடைய குடும்பம், கல்வி, கௌரவம், சுயமரியாதை, அந்தஸ்து
போன்றவற்றிற்குச் சிறிதும் பொருந்தாத காதலிக்காதவனோடு வாழ்க்கையைத் தொடருகிறாள்.
பெண்ணின் திருமணம் அவளுடைய சம்மதத்தோடு தான் நடக்க வேண்டுமென்ற கருத்தைச் சொல்ல
வந்த இப்புதினம்,
கல்வி கற்ற நாகரிகமான பெண் எப்படியும்
முடிவெடுப்பாள் என்ற கருத்தையே முன் வைத்திருக்கிறது. மாயத்தாகம் புதினத்திலும்
இறுமுகத்தை மாப்பிள்ளையாக உறுதி செய்த நிலையில் வள்ளியிடம் அவள் விருப்பம்
கேட்கப்படுவதில்லை.
மேற்குறிப்பிட்ட புதினத்திலிருந்து மாறுபட்டவை எண்ணம்போல்
வாழ்வு, விரிந்த மலர், தனிவழி
புதினங்கள். எணணம்போல் வாழ்வில் சிற்றூரிலிருந்து தொழில் நகரமான திருப்பூருக்கு இடம்
பெயரும் ருக்மணி அச்சூழலுக்கு ஏற்ப தைரியம் பெற்று விடுகிறாள். மில்களின் சங்கத்
தலைவர் ரங்கசாமியுடன் பல இடங்களுக்கும் சென்று வருகிறாள். தன் காதலை வெளிப்படுத்தி
அவனையே மணந்து கொள்கிறாள். தாய் தடை கூறுவதில்லை. விரிந்த மலர் பாலாமணி
சுதந்திரமான இயக்கமுடையவள். தன் காதலை ஆசிரியர் பரமசிவத்திடம் வெளிப்படுத்தி அவரையே
மணந்து கொள்கிறாள். தாய் மாரக்காள் பல உரிமைகளைத் தன் மகளுக்கு வழங்குகிறாள். திருமணத்தைக்
காரணம் காட்டி அவளை வீட்டில் கட்டிப்போடுவதில்லை. பல இளைஞர்களோடு பழகுவதற்கான
வாய்ப்பை பணியாற்றுமிடத்தில் மகள் குஞ்சாள் பெற்றிருப்பதால், வீட்டிற்கு இளைஞர்கள் வந்து பேசிக் கொண்டிருப்பதையும் தாய்
பொருட்படுத்துவதில்லை. உடன் வாழும் கிட்டப்பனை விரும்பும் குஞ்சாள் யாரிடமும்
கூறாமல் அவனை மணந்து கொள்கிறாள். ஒரே வீட்டிலேயே வாழ்பவர்களாக இருந்தாலும்
காதலனிடம் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவதோடு எதிர்காலம் குறித்தும் கேட்கிறாள்.
எங்க பக்கம் வறண்ட பிரதேசம் போரிங் மெஷன் அதுதான்
பாதாளத்திலும் இருக்கும், தண்ணீரை மேலே கொண்டு வரும்
யந்திரங்கள் செய்யப் போகிறேன். நம் வாழ்க்கையும் வளம் கொழிக்கும்.” (த.வ.:95) என்று கிட்டப்பன் உறுதியாகக்
கூறியபின் தான் அவனைத் தாலிகட்டச் சொல்கிறாள். நகர்ப்புறங்களில் கல்வி கற்கும் அல்லது
வேலை பார்க்கும் இளைஞர்கள் சினிமா மற்றும் பல வைபவங்களில் கலந்து கொள்ளுவதால்
கிராமச் சூழல் மற்றும் பெற்றோரின் கட்டுப்பாடு ஆகியவற்றில் விடுதலை கிடைக்கிறது. இது
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக அமைகிறது. பெற்றோரின்
கட்டுப்பாட்டை மீறி வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதற்கு முக்கிய காரணம் வேலை
பார்க்கும் இடமும் வேலையின் தன்மையுமாகும்.” (இராபர்ட்
சத்திய ஜோசப் : 1996:97)
திருமண உரிமையை எடுத்துக் கொள்ளும்
பெண்களுக்குத் திருமணம் சிக்கலாக மாறுவதில்லை என்பதே மேற்குறித்த புதினங்களின்
கருத்தாகும்.
திருமண உரிமையை எடுத்துக் கொள்ளாத பெண்களின் வாழ்க்கைச்
சிக்கல்களும் அதன் விளைவுகளும் குறித்து அறுவடை, அழியாக்கோலம், வரவேற்பு புதினங்கள் காட்டுகின்றன. அறுவடை புதினத்தில்
காதலன் கைவிட்ட நிலையிலும் தேவானை துவண்டு போவதில்லை. தந்தை நாச்சிமுத்து எழுபது
வயது சின்னப்பமுதலியாருக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்ததைத் தீர்மானமாகக் கூறுகிறான்.
உன்னைச் சின்னப்ப முதலியாருக்குக் கட்டிக் கொடுப்பதுன்னு தீர்மானம் பண்ணிட்டேன்.” (அ.வ.:65)
தேவானைக்கு அத்திருமணக் காட்சி நிழலாடுகிறது. சின்னப்ப
முதலியார் கழுத்தில் மாலையை வாங்குகிறாள். எதிரில் அடுத்த கணமே மணமேடையின் அலங்காரங்களெல்லாம்
பூந்தேருக்குச் செய்துள்ள அலங்காரங்களாக மாறுகிறது. ரோஜாப் பூ மாலையா அது? கிடையவே கிடையாது. எருக்கலை மாலையல்லவா அது? சின்னப்ப முதலியார் பழையபடியே தான் ஊட்கார்ந்து
கொண்டிருக்கிறார். அவருடைய அலங்காரங்களும் அப்படியே தானிருக்கின்றன.
மூக்குத்துவாரத்தில் எதற்காகப் பஞ்சு வைத்து அடைத்திருக்கிறார்கள்? வாய்கூடக் கொஞ்சம் திறந்து தானிருக்கிறது. பழுப்பேறிய
பற்கள் பார்ப்பதற்கு விகாரமாகயிருக்கிறதே! கெட்டு மேளம் பறையொலி போலக் கேட்கிறதே!
பார்க்கப் பார்க்கப் பயமாயிருக்கிறதே. தேவானையால் உட்கார்ந்திருக்க முடியவில்லை.
ஒயோ! அப்பா! என்று கூவிக் கொண்டே குப்புற விழுந்து நாச்சிமுத்துவின்
காலைப்பிடித்துக் கொண்டாள். (அ.வ. : 66)
அவளால் அவ்வளவு தான் செய்ய முடியும். உரிமையை வெளிப்படுத்த
முடியாத சூழல்,
வறுமை, கல்வியின்மை
போன்றவை அவளைப் பிணைத்துள்ளன. காதலனின் துரோகத்தை விடத் தந்தையின் துரோகம்
பலமடங்காக அவள் உயிரை வாட்டிவிடுகிறது.
இதுபோலவே அழியாக்கோலம் நிர்மலாவும் திருமண உரிமையைப் பெற
முயல்வதில்லை. தன் காதலனிடம் கூறி அவனைத் தன் தந்தையுடம் பேசுமாறு
வற்புறுத்துகிறாள். இதே புதினத்தில் வரும் முத்தாயாளின் தாய் தந்தையரும்
முத்தாயாள் திருமணம் குறித்து அவளிடம் விருப்பம் கேட்பதில்லை. அவளுக்குத்
தொடர்ந்து ஏற்பட்ட திருமணத் தடையால் அவள் விருப்பம் பெரியதாகக் கருதப்படுவதில்லை.
காதல் உரிமையைப் பெறும் வரவேற்பு ருக்கு திருமண உரிமை பெறுவதில் தந்தையின்
பிடிவாதத்தால் தோற்றுப் போகிறாள்.
ஆண்கள் தங்களின் உரிமையை எப்படி வேண்டுமானாலும்
பயன்படுத்தலாம் என்ற நோக்கில் செயல்படுவதை
அழியாக்கோலம் சுட்டிக் காட்டுகிறது. முத்தாயாளைப் பெண்பார்க்க வரும்
சாமிநாதன் கருப்பண்ணன் வீட்டில் சிறிது நேரம் தங்க நேர்கிற சந்தர்ப்பத்தில்
நிர்மலாவைப் பார்த்து அவளை மனஉறுதியும் செய்து கொள்கிறான். இதைத் தவறென்று யாரும்
கூற முன்வருவதில்லை. இன்னாருக்கு இன்னபடி என்று பிரம்மன் அண்ணெக்கே எழுதி இருக்கானே!
அண்ணைக்கு எழுதிய எழுத்தை யாராலே அழிக்க முடியும்? (அ.கோ:95) அது தான்லே பொருத்தம்கறது.” (அ.கோ:98) என்று கடவுளின் பேரிலும், ஜாதகத்தின்
பேரிலும் பழி போட்டு விதியைத் துணைக்கு அழைக்கின்றனர். இது குறித்து எதிர்ப்பும்
கிளம்பாமல் இல்லை. என்னூட்டுக்கு அந்த வெங்கமேட்டான் வந்திருந்தா நல்லா சூடு
கொடுத்து தட்டிவிட்டிருப்பேன்” (அ.கோ:95) ஆனால் விதிக் கோட்பாட்டிற்கு முன் இக்கருத்து எடுபடுவதில்லை.
ஆண் செய்யும் தவறுகளை ஆணின் உரிமை என்றும் அதனால்
பாதிப்புகள் ஏற்படும் போது கடவுள் மேல் பழி போடுவதுமான போக்கே சமுதாயத்தில்
நிலவிவருகிறது. திருமணத்திற்கு முந்தைய காதலிலும் உரிமைச்சிக்கல் உள்ளது. பூவும்
பிஞ்சும் புதினத்தில் சிறு வயதில் ஆணைத்துப் பேசப்பட்டதால்
மாரியப்பனும்-செல்லாயாளும் இயல்பாகவே அன்பு பூண்டுள்ளனர். வளர்ந்த நிலையில் இதைத்
வெளிப்படுத்துவதில் தயக்கம் ஏற்படுகிறது. வெளிப்படையாகப் பேசிக் கொண்டாலும் காதலை
வெளிப்படுத்துவதிலுள்ள சிக்கல் இருபாலார்க்கும் ஏற்படுவது இயல்பு. இத்தயக்கத்தைப்
பெண்களே ஊடைக்க வேண்டும் என்பது ஆர்.சண்முகசுந்தரத்தின் கருத்தாக உள்ளது.
பெற்றோர் வேறிடத்தில் மணம் பேசும் நிலையில் தான் மாரியப்பனை
விரும்புவதை நயமாக அவனிடம் செல்லாயாள் வெளிப்படுத்துகிறாள். தன் திருமணம் குறித்து
அவன் கேலி செய்யும் நிலையில், நீண்ட நேரத்திற்குப்
பிறகு, கண்ணிலே காணாத போனா மனசு அடிச்சுக்குது. கண்டா பேசறதுக்கு ஒண்ணுமில்லே” என்று அவள் தயங்க, அவன்
இச்சரியத்தோடு,
பேச ஒண்ணுமில்லையா” என்று கேட்டு விட்டு அவள் முகத்தையே ஊற்றுப் பார்த்துக்
கொண்டிருந்தான். காதலுற்ற செய்தியினை மாதருரைத்தல் வழக்கமில்லை என்று குயில்
கூறலாம். ஆனால் அச்சமும் நாணமும் நாய்களுக்கல்லவா வேண்டும். செல்லாயாள் தன் காதல் உரிமையைத்
தானே எடுத்துக் கொள்கிறாள். இதனால், பொருந்தாமணக்கேடு
தவிர்க்கப்படுவதோடு அவள் திருமணச் சிக்கலும் தீர்ந்துவிடுகிறது. தன் திருமண உரிமையைத்
தந்தையிடம் பெற முயலா விட்டாலும் காதலனிடம் காதல் உரிமையைப் பெற அவள் தயங்குவதில்லை.
சட்டிசுட்டதடா வேலாத்தாள் பொருளாதார இடைவெளி, பரம்பரைக் கௌரவம், தந்தையின்
நம்பிக்கை, அண்ணன்களின் எதிர்ப்பு போன்றவற்றைச் சந்திக்கிறாள். காதலில்
சிக்கலில்லை. காதலைத் தந்தையிடம் ஊரைப்பதில் தான் சிக்கல். தந்தையின் மனதை
தமையன்கள் காயப்படுத்தியது போல் தானும் காயப்படுத்திவிடக் கூடாது என்ற உணர்விருப்பினும்
அதற்காகக் காதலை இழக்கவும் அவள் விரும்பவில்லை. தந்தையிடம் நேரிடையாகவே தன் காதலை
வெளிப்படுத்தி உறுதியுடன் வெல்கிறாள். காணாச்சுனை லட்சுமி, இரண்டு உரிமையையும் எடுத்துக் கொள்வதில்லை. குடும்ப மரபு
கட்டுப்பாடே காரணம். அழியாக் கோலம் நிர்மலா, முத்தாயாள்
இருவரும் காதல் உரிமையை வெளிப்படுத்துவதில் துணிந்து செயல்படுகின்றனர்.
நிர்மலாவிடம்,
அறைமட்டுமா எல்லாமே உனக்குச் சொந்தம்தான்” என்று துரை கூற, அப்படிச்
சொல்ல முடியுமா?
என்று அவள் வெடுக்கென்று கேட்டு விட்டாள். உள்ளத்திற்குள்
உள்ளது வெடுக்கென்று வெளிப்பட்டு விட்டது.” ஏன்
முடியாது என்றான். வேணுமானால் அப்படி எண்ணிக் கொள்ளலாம்.”
உரிமை இல்லாதபோது எண்ணம் எப்படி வரும்.” (அ.கோ:46)
இதுபோல தக்க
சமயத்தில் முத்தாயாளும் வெளிப்படுத்துகிறாள். ஆனால் தன் பெற்றோர் முடிவெடுத்த
பின்னரே தன் காதலை வெளிப்படுத்துகிறாள். நம்ம கல்யாண நாயம் பேசிக்கிட்டாங்க.” நம்ம கல்யாணம்?” ஆமாங்கிண்ணு
சொல்றனே!” யாரு!” அய்யனும் அம்மாளுந்தான்!” பல்லி பக்கத்து மரத்திலிருந்து இச் கொட்டிற்று!” பார்த்தீங்களா? நல்ல
சயனம்” (அ.கோ:204) அதிர்ந்து
பேசத் தெரியாத யாரிடமும் பேசியறியாத அப்பாவிப் பெண்ணாக இருக்கும் முத்தாயாள் தன்
காதல் உரிமையை மிக நயமாக வெளிப்படுத்துகிறாள்.
லட்சுமி தவிர்த்த ஏனைய பாத்திரங்கள் தங்கள் காதல் உரிமையை
மிக எளிதாக எடுத்துக் கொள்கின்றனர். கதிர்வேலு மிகவும் கூச்ச சுபாவமுள்ளவனாக இருப்பதால்
இருவரும் பேசிக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படுவதில்லை. காதல் உரிமை மற்றும்
திருமண உரிமையை எடுத்துக் கொள்ளும்
பெண்கள் பொருந்தாத் திருமணம் போன்ற கொடுமைகளிலிருந்துத் தப்பித்துக்
கொள்கிறார்கள்.
காதல் உரிமையை மட்டும் பெறும் பெண்கள் காதலனின்
கோழைத்தனத்தால் திருமணச் சிக்கலைச் சந்திக்கின்றனர். பொருளாதாரம், கல்வியறிவு, நாகரிக வளர்ச்சி, உழைப்பின் மேன்மை, இரோக்கியமான
குடும்பச் சூழல் போன்றவற்றைப் பெற்ற பெண்கள் மண உரிமை, காதல் உரிமை பெறுவதற்குத் தயங்குவதில்லை. இது போன்ற உரிமைகளை
பெண்கள் தாங்களாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே புதினங்களின் கருத்தாக உள்ளது.
5.5.3. பெண் பார்த்தல்
பெண் பார்த்தல் என்பது பெண்ணைக் குடும்பத்திற்கு ஏற்றவளா எனச்
சோதிக்கும் முறையாக உள்ளது. பழங்காலத்தில்
பெண்பார்க்கும் முறைகளில் பெண்ணிடம் மண் உருண்டை எடுக்கச்செய்தல், விளக்கேற்றச் செய்தல், நீர்க்குடம்
எடுக்கச் செய்தல் போன்ற முறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. மண் உருண்டை எடுக்கச்
செய்தலில் வயல்,
மாட்டுக்கொட்டாய், வேள்விச் சாலை, வற்றாத
ஐரி போன்ற பகுதிகளிலிருந்து எடுத்து வரும் மண் உருண்டையில் ஏதாவது ஒன்றைப் பெண் எடுத்தால்
அவளை மணக்க சம்மதம் தெரிவிப்பர். மாறாக, சூதாடும்
இடம், நாற்சந்தி, வறண்ட நிலம், சுடுகாடு போன்றவற்றிலிருந்து எடுத்துவரும் மண் உருண்டையில் ஒன்றை
எடுத்தால் பெண்ணை மணக்க மறுத்துவிடுவர். மண் உருண்டை எடுக்குமிடம் பற்றிப்
பெண்ணிடம் தெரிவிக்கப்படுவதில்லை. விளக்கேற்றச் செய்தலில் விளக்கேற்றும் பெண்
கையில் ஒட்டும் எண்ணெயைக் குத்து விளக்கின் விளிம்பில் தடவினால் ஏற்றுக்கொள்ளப்படுவாள்.
மாறாக, தலையிலோ, சுவறிலோ தடவினால்
மறுக்கப்படுவாள். நீர்க்குடம் எடுத்தலில் நிறை குட நீரைத் தளும்பாமல் எடுத்துவர
வேண்டும். (நஞ்சுண்டன்.வ., 2002:39-41)
பெண்களின் திருமண வாழ்விற்கான சிக்கல் பெண் பார்த்தல் என்ற
நிகழ்ச்சியிலேயே ஆரம்பித்து விடுகிறது. ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டு
மறுத்துவிடுவதென்பது பெரிதாகச் சிக்கலைத் தோற்றுவிப்பது இல்லை. ஆனால் பெண்ணைப்
பார்க்காமலே மறுத்துவிடுவது என்பது தேவையற்ற சந்தேகத்தை ஏற்படுத்தி பெண்ணின்
வாழ்வைச் சீர் குலைத்து விடுகிறது. எனவேதான் பெண் வீட்டார் மிகுந்த எச்சரிக்கையுடன்
செயல்படுகின்றனர். இதற்கு வீட்டின் மூத்த தலைமையாக உள்ள ஆண் தான் பொறுப்பேற்றுச்
செயல்பட வேண்டும் என்ற நிலை உள்ளது. மாப்பிள்ளை வீட்டினரும் இந்த எச்சரிக்கையை அறிந்து
தம் குலப் பெருமைக்கேற்பவே பெண் பார்க்க ஏற்பாடு செய்வர்.
மாயத்தாக புதினத்தில், தாய், தந்தையில்லாததால் கோபால் தன் தங்கை வள்ளிக்கு தன் நண்பனோடு
மாப்பிள்ளைப் பார்க்க வருகிறான். அதை இந்தப் பசங்களா மாப்பிளெ பாக்கறவங்க?” (மா.தா.:46) என்று மாரியப்ப
முதலியார் கேட்க,
காவேரியம்மாள், ஐனப்பா? இட்டை மாட்டைச் சந்தையிலே விக்கிற மாதிரி, இந்தச் சிறுசுக பொண்ணு வேணுமாண்ணு கேக்க வந்திருக்குதே” (மா.தா.:47) என்று
விமர்சிக்கிறாள். அதற்கு ஆறுமுகம், கோபால் தன் தங்கைக்கு
மாப்பிள்ளை பார்க்க வந்திருப்பது எப்படித் தவறாகும் என்று கேட்க, தப்பு ஒண்ணுமில்லே.
பெரியவர்களைக் கூட்டியாந்திருக்க வேண்டும். நா எங்கியுமே இப்படிக்
கண்டதில்லே” (மா.தா.:47) என்று கூறுகிறாள். தானாக வலிய வந்திருப்பதால் பெண்ணுக்குப்
தோசம் இருக்குமென்று சந்தேகப்படுகிறாள். தாய், தந்தையில்லையென்றாலும்
எர்ப் பெரியவர்களையோ, சொந்தத்தில் உள்ள மூத்த
பெரியவர்களையோ அழைத்து வர வேண்டும் என்பது நியதியாக உள்ளது.
சட்டிசுட்டதடா புதினத்தில் இதே போன்று, வேலாத்தாளின் திருமணம் தொடர்பாக, அவள் தந்தையோடு பகைத்துக் கொண்ட மாரப்பனும், பழனியப்பனும் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்குகின்றனர்.
மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்ப்பதற்கு வர இயலாது என மறுத்துவிடுகின்றனர். அவர்களுடைய
இரு மனைவியரும் சேர்ந்து முயற்சி செய்கிறார்கள். ஆனால், உங்க மாமனார் ஆயனைக் கூட்டியாங்கோ! பெரிய பண்ணாடி இல்லாமே
பொண்ணு நாயம் இரு கிட்டேப் பேசறதிண்ணு சொல்லீட்டாங்களாம்?” (ச.சு.:-177)
பாரம்பரியமான குடும்ப அமைப்பு, ஒருவரை அவர் விரும்பியபடியான வாழ்க்கைத் துணையைத்
தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. பெற்றோரும், உறவினர்களும், நெருங்கிய
நண்பர்களும் ஆணைந்து முடிவெடுத்த பின்னரே பாரம்பரிய குடும்ப அமைப்பில் பெண்ணையோ
மாப்பிள்ளையையோ பார்க்கக் கிளம்புகின்றனர். இம்முறையில் மணமுடித்து வாழ்க்கை
நடத்தப் போகும் தம்பதிகள் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள், துன்பங்கள்
போன்றவற்றிற்கு இவர்களே பொறுப்பேற்று சரியான வழிகாட்டுதலைச் செய்கிறார்கள்.
இனிய இல்லறம் நடத்துவதற்குப் பாரம்பரியமான குடும்ப அமைப்பில்
உள்ள நிறைகளாக இவற்றைக் குறிப்பிடலாம். எனவே தான், பொறுப்பேற்றுக்
கொள்ளக் கூடியவர்கள் பெண், மாப்பிள்ளை குறித்த அனைத்துத்
தகவல்களையும் திரட்டிய பின்னரே பெண் பார்க்கவும், மாப்பிள்ளை
பார்க்கவும் ஒத்துக் கொள்கிறார்கள். இக்காரணங்களினால் பெண்ணைப் பார்க்காமலேயே ஒருவர்
மறுத்துவிடுவது பெண்ணின் வாழ்வில் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஒரு தரம் ஒருத்தர்
கழிச்சுக் கட்டினா அப்புறம் என்ன முட்டுக் குடுத்தாலும் அது நிக்கறதே இல்லை.” (அ.கோ.:54) எனவே, பெண பார்த்தல் என்பது பெண்ணின் வாழ்வில் மிக முக்கிய
நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.
பெண்வீட்டாரும் தாங்கள் எதிர்ப்பார்க்கக்கூடிய வகையில்
மாப்பிள்ளை வீட்டாரும், மாப்பிள்ளையும் இருக்க
வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். பெண்ணைக் கொடுக்குமிடம் பெரிய குடும்பமாக இருக்க
வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் உண்டு. பெரிய குடும்பம், நல்ல பண்ணையம் பட்டக் காரருக்கு சொந்தமாமுல்லோ” (ச.சு.:176) கள்ளுத்
தண்ணி குடிக்காதவனா, பொளப்புத்தளப்பைப்
பார்த்துக்கிட்டு, ஒளுக்கமா வெள்ளாமை
வெளைச்சலைப் பாக்கறவனா இருக்கோணும்கோ!” (அ?.இ?.:15)
ஆணுக்கும் பெண் பார்த்தல் என்பது சில சிக்கல்களைத்
தோற்றுவித்து திருமணத் தடையை ஏற்படுத்துமென்பதை, சாமியப்பனுக்கு
ஏழு எட்டு வருஷமாகப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வயசு கிட்டத்தட்ட
முப்பது இகியும் இன்னும் திருமணம் முடிந்த பாடாக இல்லை......... நிச்சயம் எல்லாம்
முடிந்த பிறகு ஒரு தரம், முகூர்த்த நாளுக்கு இரண்டு
நாள் இருக்கப் பெண்ணின் தாய் மாமன் காலமாகிவிட்டார். எங்களுக்கு ஒண்ணும் தடை கெடையாதுங்க
தேதியை வேணுமானால் தள்ளி வெச்சுக்குங்க என்று சாமியப்பன் சார்பில் சொன்னார்கள். ஆனால், அது நடக்கவில்லை..... அப்பன் ஆத்தாள் இல்லாததுக்கு ஏன்
கொடுக்கவேணும்....... என்று கன்னபுரத்து பெண் வீட்டார்
பின்வாங்கிவிட்டார்கள்...... திருமணத்தை எங்கேவைத்துக் கொள்வது என்ற சர்ச்சைகளால் இரண்டு
தரம் தடைபட்டுப் போயிற்று.” (அ.கோ.:24-25) மூலம் காட்டுகிறார்.
சகுனத்தடை, கருத்துவேறுபாடு, தாய், தந்தையின்மை போன்றவை ஆண்களுக்குச்
சிக்கலை ஏற்படுத்தினாலும், அவன் எத்தனை பெண்களை
வேண்டுமானாலும் பார்த்து மறுக்கலாம் என்ற உரிமை உள்ளது. அவனுக்குச் சொத்து இருக்கிறது. சாமியப்பனை, அவனுக்கென்னடா ராசாப்போல என்று தான் சொல்வார்கள்.
குத்தகைக்கு விட்டாலும் நாலைந்து ஆயிரத்துக்கு அடைபடும். பருத்தியும் புகையிலையும்
அந்த மண்ணுக்கு நன்றாக வந்தன.” (அ.கோ.:25) எனவே, கவலையின்றி பல பெண்களைப்
பார்த்தும் பார்க்காமலும் மறுப்பு சொல்லிவிடும் உரிமையை எடுத்துக் கொள்கிறான். ஆண்களுக்குப்
பெண்பார்த்தல் என்பது பொழுதுபோக்கு. ஆனால், பெண்களுக்கு
அது விதியின் விளையாட்டு என்று கற்பிக்கப்படுகிறது.
எனவே, மாயத்தாகம் ஆறுமுகம்
வழியாகப் பெண்பார்த்தல் பற்றி தன் கருத்தை ஆசிரியர் வெளியிடுகிறார். எனக்கு எவ்வளவு
உரிமை இருக்கிறதோ, அவ்வளவு உரிமை கலியாணப்
பெண்ணுக்கும் இருப்பதாக நினைப்பவன் நான். நீங்களெல்லாம் ஆண் பெண் சமத்துவம் என்று
வாயளவில் பேசுகிற ஆசாமிகள். நான் காரியத்திலே செய்து காட்டுகிறவன். நீ போய் அந்தப்
பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து என்னைக் காட்டி, பிடித்ததா” என்று கேள் என்று சொல்லிவிட்டான்.” (மா.தா.:52) ஆறுமுகம் சொல்லிய
படியே செய்தும் காட்டுகிறான். ஆசிரியர் பெண் பார்த்தல் நிகழ்ச்சியின் மூலமாகப்
பெண்கள் அடிமைப்படுத்தப்படுவதையும் அதனால் வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவிப்பதையும்
பார்த்து அந்நிகழ்ச்சியே தேவையற்றது என
நினைக்கிறார். அதை மாற்ற முடியாது எனில் அப்பெண்ணிற்கும் அவ்வுரிமை கொடுக்கப்பட
வேண்டும் என்ற கருத்தை இதன் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.
5.5.4. மாப்பிள்ளை வீட்டார் போக்கு
மாப்பிள்ளை வீட்டாரின் நிலையற்ற மனப்போக்கு பெண்களின்
வாழ்வில் நிரந்தரச் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. முத்தாயாளைப் பெண் பார்க்க
வரும் சாமிநாதன்,
நிர்மலாவைப் பார்த்து பிடித்துவிட திருமண உறுதி
செய்து கொள்கிறான். இதனால் முத்தாயாள்-நிர்மலா இருவர் வாழ்க்கையும்
பாதிக்கப்படுகிறது. இங்கே வந்தவர்கள் அங்கே போனதும் வேறொரு பெண்ணை நிச்சயித்துக்
கொள்வதென்றால் கல்யாணம் என்பது என்ன விளையாட்டா? மாராக்காளைப்
பொறுத்தவரை அது ஒரு பயங்கர விளையாட்டு!” (அ.கோ.:59) இதனால் முத்தாயாள்-நிர்மலா குடும்பத்திற்குள் பகை ஏற்படுகிறது.
இரு பெண்களையும் ஒப்பிட்டு, அவம் பொண்ணு பித்தளை! நம்ம
பொண்ணு தங்கக் கம்பி! இதை நாமளா சொல்றோம்? அசலூர்காரர்கள்
சொல்றாங்க”
(ப-166) என்று
பகையை வளர்த்துக் கொள்கிறார்கள்.
எனவே, முத்தாயாளை இரண்டாம் முறை
பெண் பார்க்க வந்தவர்கள், இதில் என்னவோ கோளாறு இருக்கிறது
என ஒதுங்கிக் கொண்டார்கள்” (ப-121) தொடர்ந்து திருமணத்தடை ஏற்பட்டு முத்தாயாளின் வீட்டின்
நிம்மதி பறி போகிறது. மகளைப் பெற்றோர் வெறுத்தொதுகுக்கும் நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர்.
இதுபோல நிலையற்ற மனம் கொண்ட மாப்பிள்ளை வீட்டாரின் போக்கு சட்டிசுட்டதடாவிலும் இடம்
பெற்றுள்ளது. மாரப்பன், பெற்றோர் ஏற்பாடு செய்த
திருமண நாளில் மீனாட்சி என்ற விடுதிப் பெண்ணுடன் ஒடிவிடுகிறான். இதனால் அவமானம்
தாங்காமல் மணப்பெண் தூக்கு மாட்டிக்கொள்கிறாள். (ச.சு.:90)
ஆனால், மாரப்பன்
மீனாட்சியையும் திருமணம் செய்து கொள்வதில்லை. சில நாள் கழித்து தனித்து திரும்பி
வருகிற அவன்,
மீண்டும் பெற்றோர் ஏற்பாடு செய்த வசதியான
பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். அவர்களும் அவனுக்காக காத்திருந்ததைப் போலப்
பெண் கொடுக்கின்றனர். (ச.சு.:90) ஆண்கள் செய்யும்
தவறுகள் பெண்களின் வாழ்வில் மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வை அவலமாக்குகிறது.
சிறு தவறும் செய்யாத பெண்களின் வாழ்வில் அந்நிய ஆடவர்களின் பொறுப்பற்ற செயல்
சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. ஆனால், ஆண்
செய்யும் மிகப் பெரிய தவறுகளும் பெரிதுபடுத்தப்படுவதில்லை.
காணாச்சுனை புதினத்தில் கதிர்வேலு-லட்சுமி திருமண உறுதி
முடிந்த நிலையில் வணிக நோக்கோடு நாராயண முதலி நடராஜன்-கமலம் திருமணத்தை நடத்த
விரும்புகிறார். இருவருக்கும் பொருத்தமில்லை எனினும், போகப் போக எல்லாம் செரியாய் போயிடும். இந்த ரண்டுக்கும்
பொருத்தம் பாக்கறதைவிட இது நடந்ததிண்ணா வெளையற பலனை நெனச்சுப்பாரு. அதனாலே என்ன
லாபந் தெரியுமா?
சொத்தும் தனியே போகாது. அவனுக்கு ஒரு நல்ல
பாதுகாப்புவேண்டாமா?” (கா.சு.:141-143) என்று இதயக் கணக்குப் பார்த்துப் பொருத்தமில்லாதவர்களுக்கு
மணமுடித்துவிடத் துடிக்கிறார். இதனால் லட்சுமி, கமலம் இருவர்
வாழ்விலும் சிக்கல் ஏற்படுகிறது. பெண்ணைக் கேவலமாக நினைப்பதே இது போன்ற
சிக்கல்களுக்குக் காரணம்.
5.5.5. குடும்பத்தகுதி, குடும்ப
ஊறுப்பினர் நடவடிக்கை
ஒரு பெண்ணின் திறமைக்கு அப்பாற்பட்டு அவளை ஒருவர்
தேர்ந்தெடுப்பதற்கு முக்கியக் காரணமாக இருப்பது அவளுடைய குடும்பப் பின்னணியாகும்.
திருமணம் இரு நபர்களை விட இரு குடும்பங்களுக்கிடையிலான தொடர்பாக இருப்பதால்
திருமணத்தில் குடும்பம் முக்கிய இடத்தை வகிக்கிறது.” (இராபர்ட்
சத்தியஜோசப்.தா,
1996:97) திருமணத்திற்காக மணமகளைத்
தேர்ந்தெடுப்பதற்குமுன் அவளுடைய குடும்பத் தகுதியும், குடும்ப உறுப்பினர் நடவடிக்கைகளும் பற்றி மாப்பிள்ளை
வீட்டார் விசாரிப்பர். பெண்ணின் அழகு, பொருளியல்நிலை
போன்றவற்றை விடக் குடும்பத் தகுதியே பெரிதும் முன் நிறுத்தப்படும்.
கிராமப்புறங்களில் சொந்தங்களுக்குள்ளும், உறவினர்களுக்குள்ளும்
மணமுடித்துக் கொள்ளக் குடும்பத் தகுதியே முக்கியக் காரணியாகவுள்ளது.
சந்தைக்கு வருகிறவர்களிடம் வெங்க மேட்டு வீராத்தாள் தன்
தம்பிக்குக் கீரனூரில் பார்த்த பெண் வீட்டைப் பற்றிப் பல கேள்விகள் கேட்டுக்
கொண்டே இருந்தாள். ஒரு வாரம் கேட்ட இளிடம் அடுத்த வாரம் விசாரிக்கமாட்டாள்” (அ.கோ. :98) ஒரு எரைக் குறித்து
வருகிற தவறான தகவல்களை வைத்தும் பெண் எடுக்கத் தயங்குவார்கள் என்பதை, கீரனூர் இளுக போக்கிரித்தனத்துக்குப் பேர் போனவங்க” (அ.கோ.:103) என்று
கேட்ட வீராயி பெண் எடுக்கத் தயங்குகிறாள். இதே புதினத்தில் வரும் முத்தாயாளின் அண்ணன்
கிட்டப்பன் பொறுப்பற்றுத் திரிபவன். அவனைப் பற்றிக் கேள்விப்படுபவர்கள் அந்த
வீட்டில் பெண் எடுக்க மாட்டார்கள் என்று தாய் மாராக்காள் கவலைப்படுகிறாள். (அ.கோ.:59)
பூவும் பிஞ்சும் புதினத்திலும் மணியக்காரர் தவறான வழி
சென்று எரை ஏமாற்றியதால், அவர் வீட்டில் பெண் எடுக்க
யாரும் முன் வருவதில்லை. குடும்பக் கௌரவமும், ஒற்றுமையுந்தான்
அவர்கள் கண்ணைக் கரிக்கும் அதிலே எசகேடு இருப்பதாகத் தெரிந்தால் அந்தப் பக்கமே
தலைவைத்துப் படுக்க மாட்டார்கள்” (பூ.பி.:87) என்று நிலையை ஆசிரியர் விளக்குகிறார். பெண்ணின் அழகு, இனிமை, குணம்
போன்றவற்றையெல்லாம் குடும்பத் தகுதிக்குப் பின்னரே நினைத்துப்பார்ப்பர்.
ஆனால், குடும்ப
ஊறுப்பினர்களின் தனித்த குண இயல்புகள் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மாயத்தாகத்தில்
வள்ளியின் தகப்பன் பற்றி, ஒரு வகையில் கிறுக்கன்தா.
நம்ம சாதியிலே யாரும் மொய் வாங்கப்படாதுன்னு அவந்தா மொதெல்ல செஞ்சா. போனாக்
கலியானத்தைப் பாத்துக்கிட்டு புறப்பட்டுடுவான்... புள்ளெ நல்லாயிருந்தாப் போதும்.
நமக்கெதுக்கு மத்த பேச்சு” (மா.தா.:19) என்று மாப்பிள்ளை வீட்டார் பொருட்படுத்துவதில்லை. திருமணம் என்பது
இருநபர்களைவிட இரு குடும்பங்களுக்கிடையேயான தொடர்பாக இருப்பதால் தான் குடும்பம் உயர்ந்த
இடம் வகிக்கிறது. ஒரு பெண்ணின் திறமைக்கு அப்பாற்பட்டு அவனைத் தேர்ந்தெடுப்பதற்கு
முக்கியக் காரணமாக இருப்பது குடும்பத்தகுதியும் குடும்ப ஊறுப்பினர் நடவடிக்கையும் என
இதனால் தெளிவாகிறது.
5.5.6. வரதட்சிணை
வரதட்சிணை என்பது திருமணத்தின் போது கொடுக்கும் அல்லது
கொடுக்க ஒப்புக் கொள்ளும் பணமோ, பொருளோ ஆகும். சங்க
காலத்தில் அந்தப் பணத்திற்கு பரியம் என்று பெயர். இரம்ப காலத்தில் பெண்ணுக்கு
மாப்பிள்ளை வீட்டார் மணமுவந்து பொருள் கொடுத்தனர். அதை வைத்துத்தான் வரன்
கொடுக்கும் தட்சிணை வரதட்சிணை என்று வழங்கப்பட்டது. நாளடைவில் வரனுக்குக்
கொடுக்கும் தட்சிணை என்று தலைகீழாக மாறி நடைமுறைக்கு வந்திருக்கிறது.” (செந்தமிழ்ச்செல்வி. தி, 2001:83-84) இதை மணப் பெண் பணம் என்று கூறும் பக்வத்சலபாரதி, இப்பிரிக்கா, பிலிப்பைன்சு
சுபானும் மக்கள்,
இந்தியாவில் கோண்டு, பெய்கர், காசா போன்ற இந்தியப்
பழங்குடிகளிடம் இம்முறை நிலவி வருவதைக் குறிப்பிடுகிறார்.
மணப் பெண் வீட்டார், மணமகன்
வீட்டாருக்குப் பொருள் கொடுப்பதை மணக் கொடை என்றும் இந்தியாவின் பெரும்பான்மை, கிழக்கு ஒரோப்பா, தெற்கு இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இம்முறை நிலவி வருவதைக்
குறிப்பிட்டு இத்தொகை குடும்பத்தில் ஒரு தனி மனிதரின் பல ஆண்டுக்கால உழைப்புக்கு
உடாகும் என்றும் கணிக்கிறார். (1990:411-413) இந்தியாவில்
முகமதியர் இட்சி செய்த போது, இந்தியப் பெண்களை மணந்தும்
கவர்ந்தும் கலப்பு இனச் சமுதாயத்தை உருவாக்க
முற்பட்டதால்,
பெண்ணைப் பெற்றவர்கள் பணம்கொடுத்து தம் இனத்தில்
அவளுக்கு மணமுடித்தனர். அந்நிய ஆதிக்கம் குறைந்த நிலையில் இது முறைப்படுத்தப்பட்டு
தீவிரமாக்கப்பட்டது. இங்கிலாந்து, சீனா போன்ற
நாடுகளிலும் இக்கொடுமை நிலவி வந்திருக்கிறது.” (ஜெய்குமார்.
அ. 1999:54)
வரதட்சணை வழக்கில் முதலில் பிராமணரிடையில் தோன்றி வளர்ந்து
பின் எல்லா சாதியாரிடையிலும் பரவியது. இந்து மதத்தில் மட்டுமின்று எல்லா மதத்தாரிடமும்
நிலை பெறத் தொடங்கியது.” (குமாரசாமி. சி.என்., 2001 -177) ஆண் பரிசும் கொடுத்துப் பெண் பெற்ற முறைக்குப் பதில், பெண் சீதனம் கொடுக்கும் முறை பெண்ணைச் சுமையாக்கியது.
சொத்துரிமை ஆணின் கையில் இருந்த நிலையில் மேலும் சீதன மூடாக அவளது சொத்தைத்
தனதாக்கும் கண்ணோட்டத்தில் சீதனம் கொடுப்பது பெண் மீதான சுமையாக மாறியது.” (இராயகரன்.பி.,2001-149)
தமிழில் மணப்பெண் பணம் என்பது பரியம் என்றும் மணக்கொடை
சீதனம் என்றும் வழங்கி வந்திருக்கிறது. ஆர்.சண்முகசுந்தரம்புதினத்தில் பரியமும், சீதனமும் இடம் பிடித்துள்ளன. பொருந்தா மணம் புரிய
விரும்பும் எழுபது, எண்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்கள்
இளைய பெண்களை மணந்து கொள்ள பரியம் கொடுத்துள்ளனர். சாமியப்ப முதலியார், பத்துப்பவுன் என்னங்க மாப்பிள்ளெ? இரவது பவுனைப் போட்டுட்டு வாங்க. உங்களெ இரு வேண்டாமினது? ஊங்களுக்குப் பணந்தானே வேணும்?” (அ.வ. :52) என்று கேட்கிறார். இதனால்
பெண்ணைச் சுமையாகக் கருதும் பெற்றோர் இத்திருமணத்தை விரும்பி வரவேற்கின்றனர்.
பெரும்பணம் பெற்றவர்கள் இதனால், பல மனைவியரை மணந்து
கொள்வது வழக்கமாகி உள்ளது. தனிவழி நாவலில் சிங்காரம் மேஸ்திரிக்கு மூன்று மனைவிகள்
நகர தொழில் வளத்தின் பணப் பெருக்கம் பல மனைவியரை மணந்து கொள்ள இடம் தந்துள்ளது.
பூவும் பிஞ்சும் புதினத்தில் செல்லாயாளின் தந்தை வசதியாக இருந்த
காலத்தில் பல இளைஞர்கள் அவளைப் பெண் கேட்கின்றனர். வறுமையுற்ற காலத்தில் இவரே வலிய
போய் கேட்க,
கருங்கங் காட்டுச் செல்லணன் சொல்லி அனுப்பி இருந்தான்.
செல்லண்னுக்கு அறுபதுக்கு மேல் இகிறது. செல்லாயாளுக்கு தாத்தா போல் இருப்பான்.” (பூ.பி:82) செல்லாயாளின்
தாத்தாவும் செல்லணனும் ஒத்த வயதுடையவர்கள். வேறு வழியின்றி செல்லாயாளை மணமுடிக்க அவள்
தந்தை ஒப்புக் கொள்கின்றார்.
ஒரளவு வசதிபெற்ற பெண் வீட்டுக் குடும்பத்தினர் தங்கள்
தகுதிக்கு மேல் மாப்பிள்ளையை எதிர்ப்பார்ப்பதால் தட்சிணை அதிகம் கொடுத்து மணம்
பேசுகின்றனர். பெண்ணைப் பெற்றவர்கள் பெண்ணை வயிற்றில் நெருப்பாகக் கருதுவதால்
பணத்தைப் பொருட்டாகக் கருதுவதில்லை. பத்து பவுன் நகை போடலாம். அதுக்கு மேலே கேட்டா
அங்கியே மில்லு மொதலாளியோ என்னங்க மாமா எனக்கு வாயிலே நொழய மாட்டீங்குது!...
சமிஞ்ச கொமுரியை எட்டிலே வெச்சிக்கிட்டு இருக்கறாப்பலே இருக்குதுங்க.” (த.வ.-75) கி.பி.1980க்குப் பிறகு
வரதட்சணை வழக்கம் உழைக்கும் வர்க்கத்தாரிடையே பரவியது. இதற்கு, அரசாங்கச் சலுகைகளால் அவர்கள் பெற்ற கல்வி வாய்ப்பும், பணி வாய்ப்புமே காரணங்களாக அமைகின்றன” என அருணாதினகரன் குறிப்பிடுகிறார். (2003:1165)
அதற்கு முன்பிருந்தே இவ்வழக்கம் நடைமுறையில் நிலவி
வந்துள்ளது. மாப்பிள்ளையின் பொருளாதாரம், கல்வித்
தகுதி, வருமானம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு விலை நிர்ணயிக்கப்படுகிறது.
பணம் படைத்த ராக்கியப்பன் தன்மகன் முத்தாயாளைக் குறித்துப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. மனைவியிடம், பாத்துக்கிட்டே இரு! காசு இருக்குதின்னா முத்தாயாளைத்
தேடிக்கிட்டு நாய் ஒடியாறது.” (அ.கோ.:157) என்று கூறுகிறான்.
பெண்ணை மையமாக்கி ஆண்கள் நடத்தும் கீழ்த்தரமான வணிகம் தான்
வரதட்சிணை. ஒர் ஆணிடமிருக்கும் சொத்தினை அபகரித்துக் கொள்ள இன்னொரு ஆண் வைக்கும்
பந்தயப் பொருள் தான் பெண். மனிதனை மனிதன் சுரண்டி ஊபரியை ஆண் திரட்டத் தொடங்கிய
போது பெண் அங்கு பலவீனமான ஜீவன் இக்கப்பட்டாள்.” (இராயகரன்.பி., -142) இது சிக்கலாக மாற்ற மடையும் நிலையில், ஆண்களைச் சிக்கலின் மூலத்திலிருந்து நீக்கிவிட்டு, பெண்கள் தான் காரணம் என்று பெண்களே கருதும் வண்ணம், நடப்புச் சமுதாயம் பெண்களைப் பலிகடா இக்குகிறது. சாமிநாதன்
நிர்மலாவின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, மணக்க
மறுத்துவிட,
திருமணம் நின்று விடுகிறது. ஊர்ப் பெண்கள் அடிப்படைப்
சிக்கல் ஆராயாமல், சாமிநாதனின் தமக்கை
வீராயாதான் வரதட்சணை அதிகம் கேட்டுத் திருமணம் நிற்கக் காரணமென்று கூறுகின்றனர்.
வரதட்சிணை கொடுக்க முடியாத ஏழைகள், பெரிய எடத்திலே இருந்து நம்ம கிட்டே எதுக்கு வாராங்க” (அ.வ.:22) என்று ஐங்குவதைக்
காணமுடிகிறது. அதுபோல மிக வசதியான பெண்களை ஒரளவு வசதியானவர்களுக்குக் கொடுக்க
முன்வரும் போது,
பெண்ணுக்குத் தோசம் கீசம் இருக்குமா? குத்தம் ஐதாச்சும் இருக்குமாசாமி? மடியைப் புடிச்சு ஐனப்பா மாங்காயைப் போடறாங்க” (மா.தா.-48) என்று சந்தேகம்
தோன்றுகிறது.
எனவே, தான் மணமுறை பெண்களின் இயல்பான
மனநிலையைக் கெடுத்து, அவர்களுக்குத் தடையாக
மாறிவிட்டது. வரதட்சிணை என்பது நச்சு வட்டமாகச் சமூகத்தையே சுற்றி வளைத்துக்
கொண்டு விட்டது.”
(வளவன். சா. :1995-117) இந்நச்சு வளையத்திற்குள் மூச்சு விடமுடியாமல் சிக்கிக்
கொண்ட பெண்கள்தான், எழுபது வயதிற்கு மேற்பட்ட
கிழவர்களை வேறு வழியின்றி மணந்து கொள்ள முன் வருகின்றனர். திருமணத்தைப் பணம்தான் உறுதி
செய்கிறது. இத்தகைய பணத்தை அடிப்படையாகக் கொண்ட திருமணங்கள் தான் குடும்ப அமைப்பைச்
சீர்குலைத்து விடுகின்றன. இதனால் ஆண் ஒரு பெண்ணைத் தள்ளி வைத்துவிட்டு இன்னொரு
பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். பத்து வள்ளம் பூமியும் ஒம்பது பவுன் நகையும்” மைலாத்தாளின் கணவனை மாற்றி அவளைத் தள்ளி வைத்து மறுமணம்
முடிக்கும்படி செய்து விடுகிறது. (ஊ.தா.:14)
உலகின் அனைத்து மதங்களும், தர்மம், தியாகம் போன்ற தன்மைகளை ஊயர் பண்புகளாகவும், ஐமாற்றுதல், இரங்கிப்பெறுதல், திருட்டு போன்ற செயல்களை இழி குணங்களாகவும் போதிக்கின்றன. அவ்வாறே
சிறிய அளவில் திருடுபவன் சாதாரணக் குற்றவாளியாகவும், பெரிய
திருட்டுக்களைச் செய்பவன் கடும் தண்டனைக்குரியவனாக இருப்பதும் உலக நடைமுறை. ஆனால், இந்த இயற்கை விதிக்கு வரதட்சணை மட்டும் மாறுபட்டது. பெண் வீட்டாரிடமிருந்து அதிகமாக வரதட்சணையின்
பெயரால் திருடுபவன் சமூகத்தில் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்.
இம்முறை மாற வேண்டுமெனில், மணத்தின்
தத்துவத்தை அறிந்த ஆண்கள் வர வேண்டும் அல்லது மணமுறை என்ற அமைப்பு மாற்றப்பட
வேண்டும்.”
(மாரியம்மாள்..கி., 1993:173) திருமணத் தத்துவத்தைப் புரிந்து ஒருவருக்கொருவர் விட்டுக்
கொடுத்து வாழும் இன்பமான திருமண ஏற்பாடுகளை நாம் என்று செய்யப் போகின்றோம். அன்றுதான்
உண்மையில் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக இருக்கும்.” (இராமதாஸ்.ஜெ, 2001:32)
5.5.7. பாலியல் வன்முறை
காதல் என்ற பெயரில் பெண்ணிற்கு நம்பிக்கை ஏற்படுத்தி, அதைத் தன் பாலியல் தேவைக்குப் பயன்படுத்தி ஏமாற்றிக்
கைவிடுவது நடைமுறையில் நிகழ்கின்றது. இவ்வுறவு ஆணுக்குப் பெண் ஒத்துழைக்கும் வரை, சமூகத்திற்குத் தெரியும் வரை, பெண்
கருத்தரிக்கும் வரை இயல்பாகவே நடைபெறுகிறது. ஆணின் முகத்திரை திருமணம் என்று
பேச்செடுக்கும் நிலையில் கிழிந்து விடுகிறது. காதல் அறம் என்பார் கற்பின் விலை என்னவென்பார்” (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், 1937:100)
பாலியல் ரீதியாகப் பெண் ஐமாற்றப்படும் பொழுதுதான், காதல் என்பது வன்முறையாகத் தோன்றுகிறது. வஞ்சிக்கப்பட்ட
பெண் அந்த ஆணிடம் விசுகாசமாக நடக்க மறுத்து, தனது உணர்ச்சியைச்
சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்ள முனைந்தால், ஆணாதிக்கம்
தன்னைப் பாதுகாக்க, அதை அவளின் நிலையற்ற
தன்மையின் பலவீனமாக இட்டுக் காட்டுகின்றது.” (இரயாகரன்.
பி.,
2001:143) கற்பு என்பது காலம்
காலமாகப் பெண்களின் பெயர், இருப்பு,உணர்வு ஆகியவற்றைப் பொருட்படுத்தாத ஆண்களின் அடக்கு முறை ஆயுதமாகும்.
பொருளாதாரக் காரணிகளின் அடிப்படையில் பெண்ணை உடைமைப் பொருளாக்குவதற்கு கற்பு என்ற
கோட்பாடு துணை போயிற்று” (பிரேமா. இரா, 1995:65)
தேவானை சுப்ரமணியனிடம் பழகும் நிலையில் காதலை உண்மையாகக்
கருதுகிறாள். எனவே, அவனிடம் தன்னை இழக்கிறாள்.
ஆனால் சுப்ரமணியனுக்குக் காதல் ஒரு பொழுது போக்கு. இருவர் உரையாடலிலும் அது
வெளிப்பட்டு நிற்கிறது. தேவானை தன் தந்தை தனக்கு மாப்பிள்ளை பார்த்து வரும்
செய்தியைக் கூறிய நிலையில், எங்கப்பா என்னெ ஒரு
பணக்காரனுக்குக் கட்டிக் குடுக்கப் போறாராம்.” அப்படியா
நெசமானுமா? எனக்கே தெரியாதே?” தெரிஞ்சா
என்ன பண்ணுவீங்களாம்?” என்ன பண்ணுவனா! அது எனக்கே
தெரியாது” என்று வீரமுடன் கூறினான் சுப்ரமணியன். ஆனால் மனதிற்குள் இந்தப்
பதில் அவனுக்குச் சிரிப்பை உண்டாக்கியது. (அ.வ:27)
திருமணம் அவன் தாத்தாவோடு நிச்சயிக்கப்பட்டு விட்ட நிலையில்
அதைச் சுப்ரமணியனிடம் கூறும் தேவானையின் பரபரப்பிற்குப் பொருத்தமின்றி, எவனயாவது கட்டிக்கிட்டு எங்காச்சும் போயிருந்தயானால் நமக்கு
எவ்வளவு கஷ்டம்?
எங்க தாத்தனெக் கட்டிக்கிறது நல்லதாப் போச்சு” (அ.வ.:68) என்று கூறும் அவன் பதிலில் தான் முந்தைய செயலுக்கான பாலியல்
வன்முறை வெளிப்பட்டு நிற்கிறது. தேவானை அவன் சொன்ன தெல்லாம் பொய்யா எனக் கேட்க, நான் சொன்னது நெசந்தான். ஆனால் அது பொய்யாப்போனதுக்கு நா என்ன
செய்யட்டும்?”
(அ.வ.:68) என எகத்தாளமாகக்
கேட்கிறான்.
பாலியல் சார்ந்த ஆதிக்கமே பெண்ணடிமைத்தனத்தின் முதல்
வித்தாக உள்ளது. ஆணும் பெண்ணும் பாலியல் தொடர்பின்றி நட்போடு பழக இயலாது என்ற எண்ணம்
ஆண் பெண் இருவர் மனத்திலும் விதைக்கப்படுகிறது. ஆனால் கற்பு என்பது பெண்களுக்கு
மட்டும் வேலியாகப் போடப்படுகிறது. கற்பென்னும் வாழ்க்கை மதிப்பு பெண்ணுடன் தொடர்பு
கொண்ட ஒரு நெறியாகவே அனைவராலும் கருதப்படுவதால், அதற்குரிய
வரையறைகளை அவள் மீறுவதற்கான சூழல்கள் உருவாகும் பொழுது, அவள் ஒழுக்கக்கேடானவளாக எண்ணி ஒதுக்கப்படுகிறாள். பழங்காலத்தில்
இளமை மணம் பரிந்துரைக்கப்பட்டதற்கும், பெண்கல்வி
தடுக்கப்பட்டதற்கும் கூட அவளது கற்பைப் பாதுகாக்கும் நோக்கமே காரணமாயிற்று.” (சுசிலா.எம்.ஐ, 1989:292)
இக்கற்புக் கோட்பாட்டினால் ஒருமுறை தன்னை இழந்த பெண்
வாழ்நாள் முழுவதும் மனதளவில் ஊனமுற்றவளாக வாழ நேரிடுகிறது. இதனால் தான் தேவானை
போன்ற பெண்கள் தற்கொலையை நாடுகின்றனர். பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்
மணவாழ்க்கைக்குத் தகுதியற்றவளாகத் தன்னைக் கருதிக் கொள்ளும்படியான உணர்வைச் சமூக அமைப்பு அவளுக்குள் விதைத்து
விடுகிறது. அதனால் திருமணம் பின்னர் வாழ்க்கைப் போராட்டமாக மாறிவிடுகிறது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?