திருமங்கையாழ்வார் - பன்முகநோக்கு
முன்னுரை
ஆழ்வார்களில் மிக அதிகமான பாமாலைகளை வகை வகையாகத் திருமாலுக்குப் புனைந்தவர். ஆழ்வார்களில் கடைசியாக அவதரித்தவர். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஓராயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். இந்தியா முழுமையுமுள்ள 108 திருமால் திவ்ய தேசங்களில் 86 திருமால் திவ்ய தேசங்களைத் தரிசித்து அத்தலங்களின் பெருமையுணர்த்தும் வகையில் அவற்றின் மீது பாடல்களைப் பாடியவர். தம் துணைவியார் குமுதவல்லியுடன் எழுந்தருளியுள்ள பெருமைக்குரியவர். திருமாலின் அவதாரங்களை அனைத்துப் பாசுரங்களிலும் இடம்பெறுமாறு பாடியவர். இயற்கைச் சூழலை வர்ணிப்பதில் வல்லவர் எனப் பல பெருமைக்குரியவர் திருமங்கையாழ்வார். ஆசுகவி, மதுரகவி,சித்திரக்கவி, வித்தாரக்கவி என்னும் நான்கு வகையான கவி புனைவதில் வல்லவர். எனவே ‘நாலுகவிப் பெருமாள்‘ எனப்பட்டவர். பல்வேறு யாப்பு வடிவங்களைப் பக்தியிலக்கியத்தில் பயன்படுத்திக் கொண்ட இவருடைய படைப்புகளின் சிறப்புக் குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.
இவருடைய படைப்புகள்
1. பெரிய திருமொழி 2. திருவெழுக்கூற்றிருக்கை 3. திருக் குறுந்தாண்டகம்
4. திரு நெடுந்தாண்டகம் 5. பெரிய திருமடல் 6. சிறிய திருமடல் போன்றவையாகும்.