முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Tuesday, 27 September 2016

கண்ணகி - ஒரு பெண்நிலை வாதம்

Image result for கண்ணகி  

கண்ணகி-ஒரு பெண்நிலை வாதம்

 

கோவலன் பாண்டியனால் கொல்லப்பட்ட பின்னர் கண்ணகி இடது முலையை திருகி மதுரை மீது விட்டெறிந்து மதுரையை எரித்தாள் என்று சிலம்பு கூறுகிறது.
 ‘‘சிலப்பதிகாரம் கூறுவது போல் கண்ணகி தானே தனது இடது முலையைத் திருகி எறிந்தாளா, அல்லது அவளது முலை அறுக்கப்பட்டதா என்பதே அது. சிலம்பு பற்றி சிலப்பதிகாரம் என்ற பெயர் பெற்ற நூல் இறுதியில் முலைப்பூசல் பற்றி அடிக்கடி கூறுகிறது. ஒருவேளை முறைகேட்க மன்னனிடம் கண்ணகி சென்ற போது அவன் ஆட்களால் கண்ணகியின் முலை அறுக்கப்பட்டு அதனால் தான் மக்கள் அரசனையும் அரசியையும் கொன்று நகரத்தையும் அழிக்கு மளவுக்குக் கடுஞ்சினங் கொள்ள உடனடிக்காரண மானதோ என்று கருதத் தோன்றுகிறதுஎன்ற குமரிமைந்தன் கருத்தும் கவனிக்கத்தக்கது.


முலையறுத்தல் என்பதும் முலை இழப்பு என்பதும் ஒரு குறியீட்டு உணர்வாக இந்திய இலக்கியங்களில் பயின்று வருகிறது. முலையைப் பறித்து எறிவது என்பது தன் பெண்மையை அழித்துக் கொள்வதற்கான ஒரு குறியீடாகும். நாச்சியார் திருமொழியில் ஆண்டாளின் பாடலொன்றில், முலையைக் கிழங்குபோல் கிள்ளி எறிவேன் என ஆண்டாள் கூறுகிறாள்.

கொள்ளும் பயன் ஒன்று இல்லாத
கொங்கை தன்னை கிழங்கோடு
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்து என் அழலைத் தீர்வேனேஎன ஆண்டாள் கூறுவதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 கொள்ளும் பயன் ஒன்று இல்லாத கொங்கைஎனுமிடத்து அதன் பயன் இருவகைத்து. ஒன்று பாலியல் சார்ந்தது  மற்றது தாய்மை சார்ந்தது. ஆண்டாள் கண்ணனை மணவாளனாக வரித்துக் கொண்டாலும், மனித வாழ்விற்குரிய இல்லறம் நடத்தவில்லை. கண்ணகியும் சில நாட்கள் இல்லறம் நடத்தினாலும், கணவனோடு நீண்ட நாள் இன்பம் துய்த்து வாழவில்லை. மேலும், கோவலனுடன் கூடி மாதவி இன்பம் துய்ப்பதோடு, ஒரு மகவிற்கும் தாயாகி கொளளும் பயனாகிய கொங்கையின் பயனைஅடைந்து விட்டாள். இவ்வகையில் பெண்மைக்கே சிறப்பு சேர்க்கும் இப்பயனை கண்ணகி பெறவில்லை. இதனால் கண்ணகி பெண்ணுக்கென விதிக்கப்பட்ட சமூகக் கடமையை நிறைவேற்ற இயலா சூழலைப் பெற்று மனத்துயரடைகிறாள்.

Image result for கண்ணகி 
கண்ணகியின் உளவியலில் கண்ணகியின் பெண்மைப் பண்பிற்கு ஏற்பட்ட இழிவாகவே இந்நிகழ்வும் பதிவாகி உள்ளது. கண்ணகியின் பெண்மைத்தன்மை மீதான பர்வையை உளவியலடிப்படையில் முனைவர் மெய். இரெ. எழிலி பெயல் இதழில்(பெயல்,அக்டோபர் 2015) ஒரு கட்டுரை ஆக்கியுள்ளார். அறிஞர் யுங்கின் கொள்கையடிப்படையில் மனையறம் படுத்த காதையின் வெண்பாவை ஆராயும் எழிலி அப்பாடலில் பயின்று வரும் தூமப்பணிஎன்ற சொல்லைக் கொண்டு கண்ணகியின் இல்லற வாழ்க்கையை ஆராய்ந்துள்ளார். தூமப்பணி என்பது இரு ஆண்பாம்புகள் ஒரு பெண்பாம்பைக் கவருவதற்கு தன் வலிமையைக் காட்ட மேற்கொள்ளும் பிணைப்பு ஆகும். கோவலன் கண்ணகி இருவரின் வாழ்க்கையை குறித்துக் கூறும்பொழுது காமப்பணிஎன்று கூறாமல், தூமப்பணி என்று கூறுவது உளவியலறிஞர் யுங்கின் கூற்றின்படி கோவலனிடம் பெண்மை தன்மை மிகுந்தும், கண்ணகியிடம் ஆண்மை தன்மை மிகுந்துமிருப்பதையே மறைமுகமாகச் சுட்டுகிறதென்கிறார்.

Image result for கண்ணகி 
இயற்கையில் எந்த உயிரும் முழு ஆண்மையும், முழு பெண்மையும் பெற்றிருப்பதில்லை. ஆணுக்குள் பெண்மையும், பெண்ணுக்குள் ஆண்மையும் கலந்தே இருக்கும். இருபாலிமையாக இருக்கும் உயிர்களின் அடிப்படையில் சிறிது ஆண் தன்மை மிகுந்த பெண்ணை யின்என்றும் சிறிது பெண் தன்மை மிகுந்த ஆணை யான்என்றும் யுங் குறிப்பிடுகிறார்.

சிலப்பதிகாரக் கதையடிப்படையில் சொல்லால் விடப்பட்ட இடைவெளிகளை வாசகர் உணர்ந்து அறிந்து கொள்ளட்டும் என்ற நோக்கில் விடப்பட்டவையாகக் கருதி நோக்கும் பொழுது சில புரிதல்கள் ஏற்படுகின்றன. வணிக குடிசார் மரபில் பிறந்த கண்ணகி கோவலன் இருவரில் வணிக குடிசார் ஆண்மைத்தன்மை மிகுந்தவளாக கண்ணகியும், பெண்மைத்தன்மை மிகுந்தவனாக கோவலனும் சுட்டப்படுகின்றனர்.

வணிகக்குடியில் பிறந்தவனாக இருந்தும் அக்குடிசார் தொழிலை மேற்கொள்ளாததோடு, அவ்வடையாளத்தையும் பெறாதவனாகக் கோவலன் விளங்குகிறான். கலைகளின் மீதான நாட்டம், பொருட்களின் இருப்பறியாமல் செய்கின்ற தானம், பொருளைப் பெருக்கத் தெரியாத மடமை இவை நிறைந்தவனாக உள்ளான். மேலும் குலத்தொழில் மரபை சிறிதும் அறியாதவனாக இருந்தான் என்பதற்கு, கண்ணகியிடமிருந்து இரண்டு சிலம்பைப் பெற்று விற்கச் செல்லாமல் ஒற்றைச் சிலம்பை மட்டும் பெற்று விற்கச் செல்கிறான். ஒற்றைச் சிலம்பை எவரும் வாங்கார் என்ற வணிக பொது புத்தி அவனிடம் இல்லை.
கண்ணகி, கோவலனின் வணிக குடிசார் மரபினை அறியாத அவனைச் சுட்டிக்காட்டும் விதமாக போற்றா வழக்கம் புரிந்தீர்என்கிறாள். இது வணிகத்தை அவன் மேற்கொள்ளாததையே சுட்டிக் காட்டுகிறது. தானம் தருமம் செய்வது தவறில்லை. ஆனால் பொருளைப் பெருக்கத் தெரியாமையே போற்றா ஒழுக்கம்எனக் கண்ணகியால் மறைமுகமாகச் சுட்டப்படுகிறது. அவள் அவனது வணிக குல மரபை மேற்கொள்ள வேண்டுமென்ற எதிர்பார்ப்போடு காத்திருந்ததை ஐயை இல்லத்தில் மதுரை வந்த பின் யாவதும் ஆற்றியிருந்தேன்என்பதின் மூலம் வெளிப்படுத்துகிறான்.

அதுவே கண்ணகியின் இந்த எதிர்பார்ப்பே மாநாய்க்கன், மாசாத்துவான் போன்றோரின் உதவியை நாடாமல் தடுத்து, சிலம்பைக் கொண்டு வணிகம் மேற்கொள்ள கோவலனைத் தூண்டியிருக்கிறது. எனவேதான் அவன் ஒரு முடிவெடுக்குமுன் சிலம்புள கொண்ம்என்று தன் கருத்தை முன்னிறுத்தி வணிகத் தொழிலில் ஈடுபடவைகக் காரணமாக இருந்திருக்கிறது.

மாநாய்க்கன், மாசாத்துவான் இருவருக்கும் கண்ணகி, கோவலன் இருவரும் ஒரே வாரிசுகள். பெரு வணிக குல மாந்தர்களாகிய இருவரிடத்தும் சென்றிருந்தால், உரிமையடிப்படையிலேயே பெரும் பொருள் அவர்களுக்குக் கிட்டியிருக்கும். ஆனால், கண்ணகிக்கு, கோவலன் தன் குலசார் மரபான வணிகத்தை மேற்கொள்ள வேண்டுமென்ற ஏக்கம் உந்துதல் ஏற்பட்டதால்தான் அவனை வணிகத்தை மேற்கொள்ளத் தூண்டுகிறாள்.

Image result for கோவலன் 
எனினும் கண்ணகி எதிர்பார்த்ததைப் போல கோவலன் வணிகத் தொழிலை சிறப்புறத் தொடங்கவில்லை. மாணிக்கப் பரலுடைய ஒற்றைச் சிலம்பை விற்கக் கிளம்புகிறான். முன்பின் தெரியாத ஊரில், வணிகக்கடைகள் இருக்க, அவற்றை நாடாமல் சிலம்பின் தரமறியாமல் சிலம்பு விற்க வந்தவன் போல் வழியில் கண்ட பொற்கொல்லனிடம் அதை விலை பேசுகிறான். எவ்வித பிணைப் பொருளும் பெறாமல் நம்பி பொற்கொல்லனிடம் ஒப்படைக்கிறான். தானம் கொடுத்ததனைப் போல் வணிக சிந்தனையின்றி காத்திருக்கிறான். குல மரபு அறியாத அவனுடைய இச்செயலே அவன் இறப்பிற்கும் காரணமாகிறது.

மாறாக இல்லத்திற்குள் வாழ்ந்து வந்தவளான, மண்மகள் அறியாத பாதமுடைய கண்ணகி, வணிக குலமரபு சார்ந்த ஆண்தன்மையைப் பெற்றிருக்கிறாள்.
இதை பாண்டியன் நெடுஞ்செழியனுடன் அவள் உரையாடும் விதத்திலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.
Image result for கண்ணகி 
பாண்டியன் நெடுஞ்செழியன் மனைவியின் காலிலுள்ள சிலம்பு முத்து உடையதாகத்தான் இருக்கும் என்பதை அவள் மதுரையில் யாரையும் கேட்டபின் தெரிந்து கொள்ளவில்லை. வணிககுலசார் மரபில் பிறந்தவளான கண்ணகி அக்குல மாந்தர்களுக்கேயுரித்தான வணிக சிந்தனையை ஆணைப் போல் இயல்பாகவே பெற்றிருக்கிறாள் என்பதற்கு பாண்டியனிடம் அவள் தன் சிலம்பில் உள்ளது மாணிக்கப்பரல்கள்என்று உறுதிபடக் கூறுவதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
கண்ணகி - கோவலன் இருவருக்குமிடையே இந்த இடைவெளியிருந்ததனாலே தான் கோவலன் மாதவியிடம் சரணடைந்திருக்கிறான் எனத் தோன்றுகிறது. எனினும் தன் காத்திருப்பும், தன் ஆளுமையும் சிதைந்து போன நிலையில் சமூகக் கட்டமைப்பின் மீதான எதிர்வினையாற்றுபவளாக கண்ணகி சீற்றம் கொள்கிறாள்.

இச்சமூகச் சூழலில்  பெண் தன்மைக்குள்ளும், தாய்மைக்குள்ளும் அடக்கப்பட்ட ஒரு பெண் தொடர்ந்த காத்திருத்தலுக்குப்பின் வஞ்சிக்கப்படும்பொழுது, அவள் சீற்றம் அறச் சீற்றமாகிறது. ஒரு சமூகம் ஒரு பெண்ணின் மீது கட்டமைத்துள்ள இது போன்ற ஆளுமை சிதைவு முறையிலான மறைமுக வன்முறைக்கு எதிராக செயல்கடுகிறாள். தன் பெண்மைக்கான அடையாளத்தைக் காட்டும் முலையின் தொன்மை நம்பிக்கை மீதான கட்டுக்கதையை தகர்க்கிறாள். ஆணாதிக்கச் சமூகத்தில் முலை என்பது வளமையின் குறியீடாக அடையாளப்படுத்தப்பட்டு பெண் போற்றப்படுகிறாள். ஆனால் அதே சமூகம் அம்முலை மீதான அவளின் இன்ப போக விழைவையும், தாய்மைத் தன்மையையும் தன்போக்கிலேயே தீர்மானித்து அவள் ஆளுமையைச் சிதைத்து விடுகிறது. பெண்ணின் ஆளுமைச் சிதைவிற்குக் காரணமான முலையின் மீதான திணிப்பை எதிர்வினையாக்க முயலுகிறாள். இதே நிலையை குஜராத்தி நாட்டுப்புறக்கதையிலும் காணலாம். பகுச்சரமாதா கதையில் சரன் இனத்தைச் சேர்ந்த பகுச்சரா என்பவளும் அவளது தங்கையும் ஒரு நாள் தேரில் செல்லும்போது, பாப்பியா என்பவனால் தாக்கப்படுகிறார்கள். எதிரிகள் தாக்கும்போது அவர்களை எதிர்த்து வெல்லமுடியாத நிலையில், சகோதரிகள் இருவரும் தங்கள் இன வழக்கப்படி தங்களை அழித்துக் கொள்ளும் முகமாக தங்களது முலைகளை அறுத்துக் கொள்கிறார்கள். இப்படி முலை அறுப்பதன் வழியாக, தங்களின் பெண்மைத் தன்மை மீதான கட்டமைப்பை அறுத்து எறிகிறார்கள் எனக் கொள்ளலாம்.முலையறுத்த பெண்கள் தெய்வமாக்கப்படுவது கண்ணகி கதையிலும் நிகழ்ந்துள்ளது. இது,சமூகம் முலை அறுப்பின் மீது தெய்வத்தன்மையை ஏற்றி பெண்ணின் சீற்றத்தை மறைப்பதாகக் கருத இடம் வகுக்கிறது.

சீற்றமடைந்த பெண்ணைத் தெய்வமாக்கி விடுவது  அவளை அடக்கி வைப்பதற்கான ஒரு வழியாகவும் இருக்கலாம். கண்ணகி தொன்மம் நுhலின் ஆசிரியர் சிலம்பு நா. செல்வராசு ””””கண்ணகியின் முலை என்பது பெண் மீது திணிக்கப்பட்ட பத்தினித்தனம்என்ற பெயரில் தமிழ் அறத்தால் அடுக்கி வைக்கப்பட்ட  பாலியல் ஆற்றலின் வெளிப்பாடு தான். மதுரையை எரித்ததுஎன்கிறார்.மேலும், வீடு திரும்பிய கணவனுடன் இல்வாழ்வை துவங்க எண்ணிய ஒரு பெண் தன் கணவன் அறமற்ற முறையில் கொல்லப்பட்டதைக் கேட்டவுடன் பீறிட்டுக் கிளம்பிய சமூகம் மற்றும் அரசு முறை மீதான கோபமும் அவளுக்குள் இத்தனை நாள் ஊட்செறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு கிடந்த பாலுந்த ஆற்றலின் கொதிநிலையும்தான் மதுரையை எரித்த வெப்பம்”” என்கிறார்.

தாய் வழிச் சமூகத்தில் பெண் முலை ஆற்றல் அளப்பரியது. தாயின் முலை மனித குலத்தைத் தழைக்க வைக்கும் வளமையின் குறியீடு. புனித ஆற்றல் கொண்டது. சங்க இலக்கியங்களில் பரவலாக வரும் அணங்கு என்னும் ஆற்றலை உள்ளடக்கியதுஎன்ற கருத்தாக்கம் உள்ளது. அதனடிப்படையில் பெண்ணின் மீதான சமூகக் கட்டமைப்பிலான அடக்கமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு அவளுடைய ஆளுமை சிதைக்கப்பட்டால் அவள் அச்சமூகத்தை எரிக்கவும் செய்வாள் என்பதே கண்ணகி முலை அறுத்தலின் உண்மை வெளிப்பாடாகும்.


1.குமரிமைந்தன் (http://kumarimainthan.blogspot.in/2009/07/2.html)
2.சிலம்பு நா. செல்வராசு கண்ணகி தொன்மம் காலச்சுவடு பதிப்;பகம், நாகர்கோவில்
3.முனைவர் மெய். இரெ. ஏழிலி, பெயல் (ஆய்விதழ்) பெயல் பதிப்பகம், 12 ராகவேந்திரா கார்டன்,ஞானாம்பிகை மின் அஞ்சல், கோவை
4.ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை, சிலப்பதிகாரம்,ராமையா கதிப்பகம், சென்னை -14 ஆண்டு 2008


1 comment:

  1. Subbiah Ravi அவர்களின் கருத்து மின்னஞ்சலில் பெறப்பட்டது

    சிலப்பதிகார காலம் கிறித்துவிற்கு பிந்திய நான்காம் நூற்றாண்டு என்று அனுமானிக்க இடம் உண்டு.அந்த காலத்தில் வேத,சமண,பெளத்த நம்பிக்கைகள் அவரவர் மக்களிடைய இடம் வேண்டி சச்சரவுகளில் ஈடுபட்ட காலமிது.கோவலன்-கண்ணகி திருமணம் அக்கினி சாட்சியாக நடந்ததும்,இந்திர விழாவும்,மாதவி மணிமேகலை,கவுந்தி அடிகள் பாத்திரங்களும் இந்த நம்பிக்கைகளின் தரவாக விளங்குகின்றன.அரசன் முறை தவறுதல் கூடாது,பத்தினி தன்மை பேண வேண்டும் என்பதுடன்,முறையன்றி மாந்தர் அல்லலும் பொழுது இலக்கிய சமன்பாடு ஆக “ஊழ் வினை”யும் ஆசிரியருக்கு உதவுகின்றன.அதுதான் ஊழ் வந்து உருத்துதும்!.ஒரு பாவமும் அறியா மாதவி,மணிமேகலை,கண்ணகி,கோவலன் இவர்களுக்கு நேர்ந்த அவலங்களுக்கும் முற்பிறவி ஊழ் விடை கொண்டாகி விட்டது.முக்காலமும் உணர்ந்த கவுந்தி அடிகள் கூட நடக்க போவது அறிந்திருந்தும் கோவலன்-கண்ணகி மதுரை செல்வதை தடுக்க வில்லை.இல்லகியங்களும் வரலாறும் மூக்கு அறுத்தலும்,முலை அறுத்தலும்,தலை கொயதலும்,கண்கள் நீக்க படுதலும் மலிந்து கிடைகின்றன.இன்றளவும் பழி கொள்ள தலை முடி விரித்து காத்திருக்கும் பெண்டிர் தென்னகத்தில் உண்டு. காதறுத்தல் வருத்த படா வாலிபர் சங்கத்திலும் எதிரொலித்ததே!கண்ணகி-கோவலன் தனிப்பட்ட ஆண் பெண் ஆளுமை தற்கால உளவியல் விதி படி ஆராய படுகின்றது.முத்து பரல்-மாணிக்க பரல் தர்க்கம் தற்கால தட இயலுக்கு முன்னோடி.பெண்மையின் ஆளுமையை அங்கீகரித்துதான் பெண்ணின் அணிகலத்தை நூற் பெயராக கொண்டார் போலும். டென்மார்க் இளவரசன் ஹாம்லெட் அரசனை கொல்ல ஏன் விழைந்தான் என்பதை இருபதாம் நூற்றாண்டு சிக்மன்ட் ப்ராய்டில் உளவியலாக விடை தேட வில்லையா?ஒரு பொருள் நேர்த்தியாக கொள்ளும் பொழுது அதனுடன் எதிர்மறையும் ஏதுவாகின்றது.கோவில் சிற்பங்களில் சிறப்புற முலை அமைக்க பட்ட போதிலும் எதிர் மறையாக போர்களில் எதிரிகளை அவமான படுத்தும் உக்தியாக இந்த அறுப்பும் தொடர்திருக்கலாம்.கணவன் மாண்டு விட்டதால் பெண்மையின் இலக்கணமாக பேணப் பட்டதை கண்ணகியே நீ’க்கி இருக்கலாம்.பின்னால் ஏற்பட்ட உடன் கட்டை ஏறுதல் வழக்கத்திற்கு ஆரம்பப்பொறியாக கொள்ளலாம்.ஆசிரியருக்கு உச்ச கட்டத்தை எழுதும்பொழுது மிகைப் படுத்தும் சுதந்திரம் உண்டு.அந்த வகையில் மதுரை எறிபடுதலை கொள்ளலாம்.முடிதவற மன்னன்,பத்தினி தன்மை இவற்றிக்கு அப்பால் ஊழ் என்று அமைக்க பட்ட பெரும் காவியம்.ஆனால் ஈண்டு நோக்கும் பொழுது அணைத்து பாத்திரங்களும் ஏற்கெனவே முடிவு செய்ய பட்ட நாடகத்தில் ஒரு அங்கமே என்றவண்ணம் ஆசிரியரால் ஊழ் அதிகாரம் என்று பெயர் அமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?