நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday, 29 April 2016

கோலமும் அலங்கோலமும்

கோலமும் அலங்கோலமும்
Image result for கோலம் போடும் பெண்கள் 
அழகான கோலம் போடலாம் என நினைத்து நம் வாழ்க்கையில் ஒவ்வொரு புள்ளியாக வைத்துக் கோலம் போடுகிறோம். ஆண்டவனோ மழையைப் பெய்ய வைத்து புள்ளிகளைக் கலைத்து மழைப் புள்ளிகளால் வேறு கோலம் போடுகிறான். நம் பார்வைக்கு அதுஅலங்கோலம்’. இறைவன் பார்வைக்கு அதுதான் கோலம். நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள். இப்படியிருக்க வேண்டும் . அப்படியிருக்க வேண்டும் என்று மனக் கொட்டைகளைக் கட்டிக் கொள்கிறோம். ஆனால் நினைப்பதற்கு மாறாக நடந்துவிட்டால் கடவுளைச் சபிக்கிறோம்.கடவுள் நம்மை மட்டும் சோதிப்பதாக நினைத்து நொடித்துப் போகிறோம். இதோ நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஏன் நமக்கு மாறாக நினைக்கிறதென்பது தெரிய வேண்டுமா?




ஒரு ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். நல்ல உழைப்பாளி. நம்பிக்கை பலம் உள்ளவன். கடவுளிடம் சென்று நேரிடையாகப் பேசக்கூடிய அளவிற்கு ஆன்மீக நோக்குடையவன். அவன் வருடம் முழுதும் பாடுபட்டும் திடீர் மழை, திடீர் புயல், திடீர் வறட்சி என மாறி மாறி தாக்கியதால் பயிர்கள் விளையவில்லை.
கடவுளிடம் சென்று கேட்காமல் தன் உழைப்பின் மூலமே உயர்வு காணலாம் என உழைத்து வந்த அவன், கடவுளின் மீது இதனால் கோபம் கொண்டான்.


நேரே ஆண்டவனிடம் சென்றான். உரிமையாகக் கோபித்துக் கொண்டான். ஏன் ஆண்டவனே இவ்வாறு செய்கிறாய்? மழையை அளவாகப் பெய்ய வைத்தால் என்ன? இப்படி ஒரேயடியாய்ப் பெய்ய வைத்து, வெள்ளமாகப் பெருக வைத்து அறுவடைக்குக் காத்திருக்கிற நேரத்திலே பயிரெல்லாம் அழிக்கிறாய். அளவாய் காற்றை வீச வைக்கத் தெரியாதா? புயலா அடிக்க வைக்கிறாய். சில சமயம் கடுமையான வெயில். ஆதனால பெரும் வறட்சி. கடவுளே உனக்குப் பஞ்ச பூதங்களை நிர்வகிக்கவே தெரியவில்லை. என்னிடம் உன் சக்தியைக் கொடு. நான் சரியாக நிர்வாகம் செய்து காட்டுகிறேன் என்று சவால் விடுகிறான்.
கடவுளுக்கு ஒரே மகிழ்ச்சி. அவனிடம் பொறுப்பை ஒப்படைத்தார். விவசாயிக்கு தன் உழைப்பின் மீதும், நிர்வாகத்தின் மீதும் பெரிய நம்பிக்கை. எல்லாச் சக்திகளையும் கட்டுப்படுத்தினான். எல்லாவற்றையும் அளவாகச் செயல்படுமாறு கட்டளையிட்டான். மழை அளவாகப் பெய்தது. இளவெயில் எப்போதும் இருந்தது. காற்றும் தென்றலாக வீசியது. நிலமும் விளைந்தது. பயிர்கள் வளர்ச்சி நன்றாகவே இருந்தது. கடவுளை அழைத்தான். பெருமை பொங்கக் கூறினான். நான் எப்படிச் செயல்பட்டேன் பார்த்தீர்களா? என்று கேட்டான்.
கடவுள் ஒப்புக்கொண்டார். சரி அறுவடை செய் என்கிறார். விவசாயி அறுவடை செய்தான். நெல்லை உதிர்த்துப் பார்த்தான். உள்ளே சிறிய அளவே நெல் இருந்தது. உதிர்த்துப் பார்த்தான். நெல் பொடிப்பொடியாக நொறுங்கியது. பல கதிர்களில் ஒன்றுமே இல்லை. எல்லாம் பதராக இருந்தன. விவசாயி திகைத்துப் போனான்.
கடவுள் அமைதியாகக் கூறினார். இதுதான் உனக்கும் எனக்கும் வித்தியாசம். நான் புயலைக் கொடுத்தபோது பயிர் மண்ணில் நிலைப்பதற்கு வேரைப் பலப்படுத்திக் கொண்டது.
மழையைப் பெருகச் செய்யும்போது வெள்ளத்தில் அழுகிப் போகாமலிருக்க வேர்கள் மண்ணுக்குள் ஆழமாகச் சென்றது. வறட்சியைக் கொடுக்கும்போது நீரைத் தேடி மண்ணின் பரப்பை நாடி விரிவடைந்தது. இதனால் பயிரானது கடுமையான சோதனைகளின் போதெல்லாம், பருவ நிலைக்கேற்றபடி தன்னைப் பலப்படுத்திக் கொண்டது. பயிர்களின் அத்தனை பாகங்களும் இதனால் உறுதியானது.. இதனால் அதில் உருவாகும் தானியங்களும் உறுதியாக இருந்தன. ஆனால் நீ எல்லாவற்றையும் அளவாக்கி விட்டாய். சகல வசதியும் கிடைத்ததால் பயிர்கள் சுகமாக வளர்ந்தன. சோம்பேறியாய் மாறி உறுதியிழந்தன. எனவே தான் உறுதியான தானியங்களை அவற்றால் கொடுக்கமுடியவில்லை.


பல சோதனைகளை சந்திக்கும் பயிர்கள்தான் ஊக்கத்தைக் கைவிடாமல் இருக்கும்.தன்னைப் பலப்படுத்திக்கொள்ளும். அப்படிப்பட்ட பயிர்களின் தானியங்கள் தான் உறுதியாக இருக்கும் என்றார்.
விவசாயி புரிந்து கொண்டான். எந்தத் துன்பமுமே வராமல் சுகமாகவே வாழ்ந்து வந்தால் நாமும் உறுதியற்றவர்களாக மாறிப் போய்விடுவோம். தொடர்ந்து வரும் துன்பங்கள் நமக்குச் சிந்தனையைத் தருகின்றன. உறுதியைத் தருகின்றன. மனதை பலப்படுத்துகின்றன. எந்தச் சோதனையிலும் உறுதியாக நிற்கக் கற்றுக் கொண்டால் அது நம்முடைய செயல்களில் பிரதிபலிக்கிறது. சோதனைகளைத் தாங்கியவனே எதையும் சாதிக்கிறான். நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போகும் என்கிறது ஒரு பழமொழி. கண்ணதாசனின் ஒரு பாடல்கள் நினைவிற்கு வருகிறது.

Image result for வயல் வெளிகள் 
"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை..  
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை.." என்கிறார் கண்ணதாசன்.


வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்! "
 என்கிறார் கண்ணதாசன் மற்றோரிடத்தில்..


சோதனைகளைத் தாங்கி உலக நம்மைக்குப் பாடுபட்டவர்களில் பலர் கடவுளாகவே கொண்டாடப்படுவதை நாம் அறிவோம்.


 தீர்வில்லாத எந்த ஒரு சோதனையும் இல்லை. அதுபோல விடிவேயில்லாத இரவுகளும் இல்லை. எனவே நம் சிந்தனையை வலுப்படுத்தவும், நம் மனதை உறுதிப்படுத்தவுமே நம் செயலை சிறப்பாக்கவுமே நமக்குத் துன்பங்கள் ஏற்படுகின்றன.
இப்போது சொல்லுங்கள் கடவுள் நம் வாழ்வில் ஏற்படுத்துவது அலங்கோலமா? அழகான கோலமா?


***********************************