பாராட்டு
பணமிருந்தும் பாராட்டும் குணமிலையேல் உயர்விலை.
பண்பிருந்தும் பாராட்டும் மனமிலையேல் பயனில்லை.
பணம் செய்யாததை செய்துகாட்டும் மாயவித்தை
பார் போற்றும் மானிடராகிட பாராட்டுங்கள்
பாராட்டிட வழிகளா இல்லை இப்பூவுலகில்
பாராட்டே குணங்களில் மிக உன்னதமானது
முகத்துக்கு நேராகப் புகழுவதும் பாராட்டே.
இகமறிய சொல்லால் மெச்சுவதும் பாராட்டே.
ஓசையெழ இருகை கைதட்டுவதும் பாராட்டே.
கைகளைப் பிடித்துக் குலுக்குவதும் பாராட்டே.
பின்முதுகில் தட்டிக் கொடுப்பதும் பாராட்டே.
சின்னஞ் சிறிய புன்னகைகூட பாராட்டே.
வெற்றியாளர்களை உயர்த்தி இருப்பதும் பாராட்டே.
சாதனையாளர்களின் சாதனைக்குப் பின்னிருப்பது பாராட்டே.
சாதனைகள் செய்வதற்கு தூண்டுகோல் இப்பாராட்டே.
தாய்தந்தையர் தந்திடவேண்டிய சொத்து பாராட்டே.
மண்ணை பொன்னாக்கிடும், பாதுகாப்பு உணர்வுதரும்
எண்ணத்தை மனதில் பதியமிடும், மனிதநேயமூட்டும்
நம்பிக்கையை வளர்க்கும்;
மனப்பாங்கை மேம்படுத்தும்
நம்பிய நல்லுறவுகளைத்
தழைத்தோங்கச் செய்யும்!
மனிதஉறவு வளர்க்கும், மானுடம் தழைத்தோங்கும்
கனிவுஅக்கறை பாராட்டும், உறவுகளில் உறவாடும்
நண்பர்களைச் சேர்க்கும், மாறாத நேசம்தரும்
பண்பானவர் என்றொரு அழகானபேர் கொடுக்கும்
சின்னசின்ன பாராட்டுக்கள் பெரிய சாதனைகளாகும்
பின்னிப் பிணைந்த உறவுகளில் பாராட்டே வேராகும்
சங்கப் புலவர் பாராட்டில் சேரன் வில்பொறித்தான்
மங்கையின் பாராட்டில் மாமலையும் சிறுகடுகானதே
பற்றற்ற மனிதரும் மயங்கிடுவர் பாராட்டில்
சுற்றத்தையும் வீட்டையும்
பாராட்டிப் போற்றிடு
அன்புணர்ந்த நெஞ்சுக்கு பாராட்டு கரும்பல்லவா
அன்பான பாராட்டில் அகிலமே கைகளுக்குள்
உன்னை நீ உண்மையாய் காண
உலகில் உனக்கொரு இடம் தேட
பாராட்டு பாராட்டு, பாராட்டு எதிரொலிக்கும்
பார் புகழ உன்னைப் பார்புகழ பாராட்டு.