நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday 30 August 2014

கயிறு



              


கயிறு
          2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழர்கள் நூலிலிருந்தும் நாரிலிருந்தும் பல்வேறு கயிறுகளை  உருவாக்கியுள்ளனர்.  தொழிலுக்குஏற்ற வகையில் பல வகைகளில் அதைப் பயன்படுத்தியுள்ளனர். கயிறு திரித்தல் பற்றி பழமொழிகள் பல உள்ளன. ‘கயிறு திரிக்கிறான்‘ என ஏமாற்றுபவர்களைப் பற்றிக் கூறுகிறோம். ‘தூங்கினவன் தொடையிலே திரித்தவரை லாபம்‘ என்ற பழமொழி, கயிறு தொடையில் வைத்து திரிக்கப்படுவதையும்,அதனால் ஏற்படும் தொடை வலியிலிருந்து தப்பித்துக்கொள்ள தூங்கிக் கொண்டிருந்நதவனின் தொடையிலே திரித்து திரித்தவரை லாபம் எனச் செயல்பட்டவர்களைப் பற்றியும் கூறுகிறது.விடுகதைகளும் உள்ளன.இங்கு ஒன்று மட்டும்.  ‘கன்று நிற்க கயிறு மேயுதாம்‘ என்ற விடுகதைக்கு பதில் பூசணிக்கொடி என்பது. ஆனால் அத்தகைய கயிற்றைத் திரித்துத்தான் தமிழன் எப்படியெல்லாம் ஏற்றம் கண்டுள்ளான் என நினைத்தால்  வியப்பாக இருக்கும். சங்க இலக்கியத்தில் தமிழர்கள் பயன்படுத்திய கயிறுகளைப் பற்றி ஏராளமான குறிப்புகள் உள்ளன.

Monday 18 August 2014

மகளிர் -குதிரை அணிகலன்கள்



மகளிர் அணியும் - குதிரை அணியும்

 கலித்தொகைப் பாடலொன்று, (மருதன் இளநாகனார்-மருதக்கலி)
 பெண்ணின் அணிகலனோடு குதிரைக்கு அணிவிக்கப்படும் அணிகலன்களை ஒப்பிட்டுக் கூறுகிறது. குதிரை அணிகள் அனைத்தும் பருத்தி நூலால் முறுக்கப்பட்ட கயிற்றினால் ஆனது. ஆனால் பரத்தை அணிந்திருக்கும் அணிகலன்களோ அனைத்தும் தங்கத்தினால் ஆனது.

Sunday 17 August 2014

ஆங்கில மாயை நூல் குறித்து...

ஆங்கில மாயை நூல் குறித்து...... சேலம் தமிழ்ச் சங்கம்

என் உரைகள்

திருவாசகத் தேன் என்னும் தலைப்பில் சேலம் ரோட்டரி அரங்கில் உரை நிகழ்த்திய போது...



Friday 15 August 2014

சங்கத் தமிழரின் சூழல்தூய்மை









ஆடை துவைத்தல்
  சுற்றுப்புறத் தூய்மையை வலியுத்தும் வகையில்நீர்அருந்தும் துறையில் ஆடை துவைத்தல்கூடாது என்பதை,‘துறைஇருந்து ஆடைகழுவுதல் இன்னாஎன்கிறது இன்னா நாற்பது.(23) மக்கள் பயன்படுத்தக்கூடிய இடங்களில் தூய்மையைப் பேண வேண்டும். ஆற்றங்கரை ஓரங்களில் துணி துவைப்பதால் நீரின் தூய்மை பாதிக்கப்படுகிறது.அழுக்கு மற்றும் சோப்பிலுள்ள வேதிப்பொருட்கள் சேர்வதால் நாளடைவில் நீரின் தன்மை பாதிக்கப்பட்டு பருகுவதற்கு தகாததாகி விடும் அபாயம் உள்ளது என்பதால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் நீர்த்துறைகளுக்கருகில் ஆடை துவைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துள்ளனர்.
சூழல்தூய்மை  - நோய் வராமலிருக்க









  
வேனிற்காலங்களில் நீர்வளம்

சூழல் காப்போடு அதனைத் தூய்மையாகப் பேண வேண்டியதும் அவசியம்.இல்லையேல் நோய் தோன்றும். இந்நிய மக்களில் எழுபது சதவீத மக்கள் பெரிதும் நோயினால் பாதிக்கப்படுவதற்கு நீர் மாசுபாடே காரணமாகும். வேனிற்காலங்களில் நீர்வளம் குறைந்து கிருமிகள் பெருகும். அக்காலத்தில் நீரைக் காய்ச்சிப் பருக வேண்டும் என நாலடியார்,‘குடநீர் அட்டு உண்ணும்‘(382) பழக்கத்தை வலியுறுத்துகிறது.




வேனிற்காலத்தில் நோய் வராமலிருக்க புது மண்பானையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் புது மண்பானையின் மண் மணம் நீங்க பாதிரிப் பூக்களைப் போட்டு வைக்க வேண்டும் என்றும் நாலடியார் கூறுகிறது.ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு தண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு”(நாலடியார்39) என்கிறது இப்பாடல். தற்காலத்தில் R.O. Water பயன்படுத்துகிறோம் பழந்தமிழர் இதை இயற்கை முறையைக் கையாண்டு யாதொரு செலவுமின்றி பயன்படுத்தி இருக்கிறார்கள்.







உமிழ்நீர் உமிழ்வது
 பொதுஇடத்தில் உமிழ்நீர் உமிழ்வது கூடாது என்பதை ஆசாரக்கோவை இழியாமை நன்குமிழ்ந்தெச்சி அறவாய்‘(27)என்கிறது.  

வாய் கழுவுதல்
 உணவு உண்பதற்கு முன்னும் பின்னும் வாய் கழுவுதல் அவசியம் என்கிறதுஆசாரக்கோவை(27).

கண்நோய் - மெட்ராஸ் ஐ






 வைரஸ், மெட்ராஸ் ஐ போன்ற தொற்றுக்கள் கண்களைப் பாதிக்காமலிருக்கப் பிறர் பயன்படுத்திய பொருட்களைப் பயன்னபடுத்தக்கூடாது என்பதை, ”கண்ணெச்சில் கண்ணூட்டார்என்று ஆசாரக்கோவை (41)கூறுகின்றது..


 பழங்களைப் பழுக்க வைக்க
 தற்காலத்தில் செயற்கை முறையில் பழங்களைப் பழுக்க வைக்கக் கார்பைடு கற்களைப் பயன்படுத்துகின்றனர்.இதனால் வயிற்றுப் போக்கு,ஒவ்வாமை ஏற்படுகிறது.இயற்கை முறையில் பழுக்க வைப்பதின் சிறப்புப் பற்றி நாலடியார்,

வேம்பின் இலையுள் கனியினும் வாழை

தீஞ்சுவை யாதும் திரியாதாம்”(244)
என்ற பாடல் மூலம் வேப்ப மர இலைகளுக்குள் பழங்களைப் பழுக்க வைப்பது சிறந்த முறை என்கிறது.



இயற்கையோடு இணைந்த வாழ்வே இனிய வாழ்வு என வாழந்ததினால் நீர் ஆதாரம்,தூய்மை முதலான மேம்பாட்டுத்திட்டங்களைச் சங்கத் தமிழர் அறச்செயல்களோடு இணைத்துச் செய்துள்ளனர். .


 



 


சீதாயணம் – நாடக நூல் அறிமுகம்





  


சீதாயணம் – நூல் அறிமுகம்
திரு. வையவன் நடத்தும் சென்னை தாரிணி பதிப்பகம்திரு. சி. ஜெயபாரதன் அவர்களின் சீதாயணம் நாடகத்தைஒரு நூலாக வெளியிட்டுள்ளது. ஜெயபாரதன் அவர்கள் இணைய தமிழ் வாசகர்களுக்கு மிகவும் அறிமுகமானவர். விண்வெளி ஆய்வுகள், இயற்பியல் விளக்கங்கள் போன்றவற்றைத் தவறாமல் தாங்கி வருபவை அவரது அறிவியல் கட்டுரைகள். சீதாயணம் நாடகமும் முன்பு திண்ணை இணைய இதழில் தொடர்ந்து வெளியானதுதான். 

சீதாயணம் என்னும் நாடகநூல் சீதாதேவியின் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்துள்ளது. சீதாயணம் சரியான ஆதாரங்களினடிப்படையில் எங்கும் சறுக்கிவிடாமல் மிகவும்  ஜாக்கிரதை உணர்வோடு கூடிய மிகவும் நேர்மையான பதிவு. . ஜெயபாரதன்அவர்கள்  சீதாதேவியின் பாத்திரமாகவே மாறி விட்டிருக்கிறார். மிகவும் துணிவோடு துல்லியமான தகவல்களின் அடிப்படையில் ஊகங்களை எல்லாம் நீக்கி விட்டு உண்மைத்தரவுகளை நம்பகத்தன்மையோடு  வெளியிட்டுள்ளார்.
 
இலக்கிய ஆய்விலும் அறிவியல் அணுகுமுறைதான் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று மாணவர்களுக்கு வலியுறுத்துவோம்.  ஜெயபாரதன் அவர்கள்    அடிப்படையில் விஞ்ஞானியாக அமைந்து விட்டதும், அதுவும் இந்திய பெண்மணிகளில் தலைசிறந்தவளாகக் கருதப்படுகிற பெண்மணியான சீதாதேவியின் வாழ்க்கையை ஆராய்ந்து, அறிவியல் ஆய்வினைப்போல் நடுநிலையோடு நின்று உண்மையை வெளியிட்டுள்ளதும், ஆணாதிக்கப்போக்கினால் சீதாதேவியின் கதை இராமனின் கதையாக மாற்றப்பட்டிருப்பதாகக் கூறியிருப்பதும் பெண்ணிய ஆய்வுகளுக்கு வலிமையைக் கூட்டியுள்ளது. பெண்ணிய ஆய்வில் இந்த நாடகம் ஒரு மைல்கல். பெண்ணியலாளர்கள், புராண இதிகாச மாந்தர்களை இதுபோல் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய தேவையை இந்த நாடகம் சிறப்பாக உணர்த்தியுள்ளது.

  பெண் என்பவள் உருவாவதில்லை,உருவாக்கப்படுகிறாள் என்ற கூற்று எவ்வளவு உண்மை. எல்லா வல்லமையும் உடைய பெண், திருமணம் என்ற பெயரால் வலிமையற்று அன்பிற்காக ஏங்கி இறுதிவரை அந்த அன்பு கிடைக்காத சூழலில் மரணத்தைத் தஞ்சமடையும் இழிநிலை இன்னும் தொடர்வதுதான் வேதனையிலும் வேதனை.

அனுமனை மனிதன்தான் என்று ஜெயபாரதன் அவர்கள்  ஆணித்தரமாகக் கூறியுள்ளார். இராமனின் வெற்றுச் சமாதானங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பது போன்ற தெளிவும்,மனைவியைக் கைவிட்ட இராமனோடு சீதாவையும் இணைத்து ஆதர்ச தம்பதிகளாக வணங்கிவரும் பக்களின் பேதமையைத் துகிலுரித்துக் காட்டியிருக்கிற பாங்கும்,இந்த இராமனுக்கு கோயில் எழுப்புவதற்காகப் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கும் அவல நிலையைச் சுட்டிக் காட்டி,அதற்குத் தீர்வும் கூறிச் சென்றுள்ள சமூக அக்கறையும் மிகமிக சிறப்பாக அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 ‘
அன்பில்லாதவரைக் கண்டால் அம்ம நான் அஞ்சுமாறேஎன்ற மாணிக்க
வாசகரின் வரிகளில் ஒலிக்கும் அச்சம் சீதாவின் அவலக்குரலிலும் நாடகம் முழுவதும் ஒலித்து கொண்டேயிருக்கிறது..இந்த உலகில் உள்ள மனிதர்களெல்லாம், வளங்களெல்லாம் பெண்ணின் கொடைகளே. ஆனால், பெண்ணிற்கு எதுவும் சொந்தமில்லை.அவள் வாழ்க்கை கூட அவளுக்குச் சொந்தமில்லை. மனிதப் பிறவியாகக் கூட கருதாத நிலைதான் உள்ளது என்பதை சீதாதேவியின் வாழ்க்கை மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.  நானும் சீதை தற்கொலைதான் செய்து கொண்டிருப்பாள் என்று எண்ணம் கொண்டிருந்தேன். அதை ஜெயபாரதன் அவர்கள்  படைப்பில்  படித்தபோது வியந்துபோனேன்.

அன்னை சீதைக்கே அந்நிலையென்றால்.............? 
இன்று பெண்ணைக் கருவிலேயே கொன்றுவிடும் மாக்கள் நிறைந்த இந்த  உலகில் பெண்களின் நிலை ? “வால்மீகி, சீதாயணம் என்று தான் பெயர் வைத்து இருப்பார்,, ​இராமனை சாதாரணனாகத்தான் அவர் படைத்திருக்கிறார், பின்னால் வந்தவர்கள்தான் இராமனுக்குக் கடவுள் சாயம் பூசி விட்டார்கள்“ என்ற கசப்பான உண்மையை உண்மையான மனிதராக இருந்து (மதம்கடந்து) வெளியிட்டுள்ளத் ஜெயபாரதன் அவர்களை  வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.
அட்டைப்படமும் உள் படங்களும் மிக அருமை. ஜெயபாரதன் அவர்களின்  நாடகத்திற்கு வலிமை சேர்த்துள்ளன. நல்ல கட்டமைப்பு. எளிதில் படிக்கக் கூடிய கைக்கு அடக்கமான வடிவம். வடிவத்தில் சிறியது என்பதினால் குறளை குறைத்து எடைபோட்டுவிட முடியுமாஅதுபோல்தான் .சீதாயணமும்.

மதச்சார்புத்தன்மைகளைப் பெண்ணியம் கண்டு கொள்வதில்லை. மாறாக புறந்தள்ளி வருகிறது.ஏனெனில் மதமும் பெண்ணடிமைத்தனத்தை மறைமுகமாக வலியுறுத்துகிறது. பெண் மையநோக்கில் மடடுமின்றி தனி மனித நோக்கே பெண்ணியத்தின் மையப் புள்ளியாதலால், ஆணுக்குரிய விதி, பெண்ணுக்குரிய விதி என்று பாகுபடுத்தாமல் பொதுநோக்கிலேயே பெண்ணியக் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.ஒரு விதி அல்லது நியதி ஆணுக்குரியதென்றால் அது பெண்ணுக்கும் உரியதே.
ஆணாதிக்கச்சிந்தனைகள் தாய்ப்பாலோடே கலந்தூட்டப்படும் இச்சமூகத்தில் ஜெயபாரதன் மாற்றிச் சிந்தித்திருப்பது பெரிதும் பாராட்டுக்குரியதே.
jayabarathan.wordpress.com/seethayanam/
puthu.thinnai.com/?p=25398