முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Monday, 9 December 2013

சங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை


 சங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரைமுன்னுரை


        ஒருவன் உணவின்றிச் சில வேளைகள் வாழலாம்; ஆனால் உடையின்றி அரைக் கணமும் வாழ இயலாது. அரசரின் மானத்தையும், ஆண்டியின் மானத்தையும் காக்கக் கூடியது உடை. துறவிகளும் துறக்காத சிறப்புடையது உடை. தீ மூட்டி வேள்வி செய்யும் அந்தணரின் தொழிலைவிட, தீ மூட்டி உணவு சமைக்கும் சமையல் தொழிலைவிட உயர்ந்தது நெசவுத் தொழில் என்பதால்தான் வள்ளுவரும், கம்பரும் நெசவுத் தொழில் மேற்கொண்டனர் என்பது வரலாறு கூறும் உண்மை.


மேலும் வாசிக்க....
உழவுத் தொழிலை மேற்கொள்ளும் போது, சில உயிர்கள் அழிய வாய்ப்புள்ளது. நெசவுத் தொழில் உயிரை விடச் சிறந்த மானத்தைக் காப்பதோடல்லாமல் எவ்வுயிருக்கும் தீங்கு தராதது. எனவேதான் ‘திருக்கை வழக்கம்’ என்னும் நூல் உழவுத்தொழிலை ‘வெய்யத்தொழில்’ (கொடுந்தொழில்) என்றும், நெய்தற் தொழிலை ‘தூய தொழில்’ என்றும் கூறுகிறது. மேலும், உடலை வான் தரும் மழை, வெயில், பனி, காற்று இவற்றினால் வருத்தாமல், நிழலிலேயே மேற்கொள்வதற்குரிய தொழிலும் நெசவுத் தொழில்தான் என்கிறது. மிக்க இழிவினையுடைய கள் விற்பதினால் வரும் அதிக வருவாயைவிட, தூய நெசவு தொழில் செய்து அதில் வரும் குறைந்த வருவாயைப் பெறுவதே மேல் என்றும் அதை மேற்கொள்பவரே மேலானவர் என்றும் திருக்கை வழக்க நூல் கூறுகிறது. (செங்குந்தர் பிரபந்தத் திரட்டு : 55-60)

‘ஆடையது சிறப்பெல்லாம் அணிவோரின் சிறப்பே ; ஆடையுடையான் அவைக்கஞ்சான் ; ஆடையில்லா மனிதன் அரை மனிதன்’ போன்ற பழமொழிகளெல்லாம் நெசவுத் தொழிலின் பயனைக் கூறுகின்றன.

சங்க காலத்தில் பருத்தி பயிர் செய்வதும், நூல் நூற்பதும், ஆடை நெய்வதும், அதை விற்பதும் பெரிய அளவில் தொழிலாக நடந்திருக்கிறது. வணிகர், அரசர் போன்ற செல்வந்தர்கள் பட்டாடை அணிந்து மதிப்புடன் விளங்கினர். புலவராக இருந்த போதும் அறுவை வணிகன் இளவேட்டனார் ஆடை விற்பனை செய்ததால் ‘அறுவை வணிகன்’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்றிருக்கிறார்.

பருத்தியிலிருந்து பஞ்சும், பஞ்சிலிருந்து ஆடையும் உருவாக்கப்படுகிறது. பருத்தி செடிவகையைச் சார்ந்த ஒரு தாவரமாகும். உண்பதற்குரிய உணவு உழவுத்தொழில் மூலம் கிடைப்பது போல, உடுப்பதற்குரிய உடையும் உழவுத் தொழிலிருந்தே கிடைக்கிறது என்பதால் உழவுத்தொழிலுக்கு அடுத்த நிலையில் வைத்து போற்றக்கூடிய சிறந்த தொழிலாக நெசவுத் தொழிலைக் குறிப்பிடலாம். நெசவுத்தொழிலுக்கு அடிப்படையானவை பருத்தி மற்றும் பட்டின் இழைகளாகும்.

பருத்தி (டinn)

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பழந்தமிழர் பருத்திச்செடியின் அருமையை உணர்ந்து, அதை உணவிற்காகவும் நூலாக்கி கயிறு திரிக்கவும், ஆடை நெய்யவும் பயன்படுத்தியுள்ளனர்.

பருத்திவேலி சீறூர்
தமிழர்கள் தொழில் நுட்பத்தில் மேம்படுவதற்குப் பருத்தியும் ஒரு காரணமாகும். தீ, சக்கரம் இரண்டும் கண்டுபிடித்த பின்னர், மனித நாகரிகம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியது என்பர். அதைப் போல மனிதன் சிந்திக்கத் தொடங்கியவுடன் காற்று, பனி, வெயில், மழை போன்றவற்றிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள இழை, தழை, மரப்பட்டை, தோல் போன்றவற்றை அணிந்தான். ஆனால், அவனுடைய முழுத் தேவையையும் அவை நிறைவு செய்யவில்லை. பருத்தி இழையிலிருந்து நூல் எடுக்கக் கற்றுக் கொண்ட பின்னர் அவனுடைய வாழ்க்கை தொழில்நுட்பம் நிறைந்ததாக மாறிப்போனது. பருத்தி நூல் கண்டுபிடிப்பு ஒரு மாபெரும் புரட்சியாகும்.

பருத்திச் செடிகள் ஊருக்குப் புறத்தேயும் வீட்டிற்கு வெளியேயும் வளர்க்கப்பட்டன. போர்ச்சூழல் நிரம்பிய அக்காலத்தில், நாட்டின் மானம் காக்கவும், பெண்களின் மானம் காக்கவும் கை கொடுத்து உதவியது பருத்திச் செடியே.
""""பன்னல்வேலி இப்பணை நல்ஊரே"" (புறம். 35 : 20)
என்று பருத்தியை வேலியாக உடைய ஊர்களைப் புலவர்கள் பாராட்டியுள்ளனர். ஊருக்குப் புறத்தே பரந்து விரிந்துள்ள பருத்திச் செடிகள் ஊருக்கே வேலிபோல விளங்கியதை இப்பாடல் உணர்த்துகிறது.
""""கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்
தாழி முதற் கலித்த கோழிலைப் பருத்தி"" (அகம். 129 : 6-7)
என்ற அகப்பாடல் வீட்டிற்குப் புறத்தே கற்கள் சூழ்ந்த பகுதியில் விளைந்துள்ள கோழிலைப் பருத்தி பற்றிக் கூறுகிறது.

பருத்திச் செடியிலிருந்து எடுக்கப்பட்ட கொட்டையை உணவிற்காகவும், கொட்டையைச் சுற்றி வளர்ந்துள்ள இழைப் பகுதியை எடுத்து நூலாகவும் பயன்படுத்தியுள்ளனர். இந்நூலைக் கொண்டு கயிறு திரித்து, அக்கயிற்றினைப் பலவித பயன்களுக்காகவும் பயன்படுத்தியுள்ளனர். பருத்தியிலிருந்து தயாரிக்கப்பட்ட பருத்தி ஆடை கிரேக்கம், எகிப்து, சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு தமிழரின் பெருமையை உலகெங்கும் நிலைநாட்டியுள்ளது. அதைப்போல பட்டுப்புழுவிலிருந்து நூலெடுத்துப் பட்டாடையாக்கி அதையும் விழாக்காலங்களிலும், திருமண நாளிலும் அணிந்துள்ளனர். இக்கட்டுரை பருத்தி இழையிலிருந்து எடுக்கப்பட்ட நூல் மற்றும் பட்டு புழுவிலிருந்து எடுக்கப்பட்ட நூல் இரண்டும் சங்கத்தமிழர் வாழ்வில் பெற்றிருந்த இடத்தை ஆராய்கிறது.

பருத்திச் செடியின் உணவுப்பயன்

பருத்தியிலிருந்து கிடைக்கும் கொட்டையை பறவைகளும், மனிதர்களும் உணவிற்காகப் பயன்படுத்தியுள்ளனர். அகப்பாடலொன்று, வீட்டின் புறத்தே வளர்ந்துள்ள பருத்திச் செடியிலுள்ள முற்றிய காயை ஆண் பறவையொன்று, தன் அலகால் குத்திப் பிளந்து, கொட்டையை எடுத்து பெண் பறவைக்கு உண்ணக் கொடுத்தது என்கிறது. மேலும் அப்பறவை கீழே சிதறவிட்ட பஞ்சிழைக்குள் எடுக்காமல் விடப்பட்டப் பருத்திக் கொட்டைகளை வறுமையுற்ற பெண்கள் உணவிற்காகச் சேகரிப்பர் என்கிறது. இக்கொட்டை இனிப்புச் சுவையுடையது.

""""பொதி வயிற்று இளங்காய் பேடை ஊட்டி
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண்காழ்
நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும்"" (அகம்.129 : 8-10)
இக்காலத்திலும் மதுரை, கோவை மாவட்டக் கிராமங்களில் பருத்திப்பால் பருகப்படுகிறது. இது நெஞ்சுச் சளி, நெஞ்சு பாரம் போன்றவற்றிற்கு அருமருந்தாகக் கருதப்படுகிறது. சித்த வைத்தியமும் இதை மருந்தாகப் பயன்படுத்துகிறது. பருத்திக் கொட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சில உணவுத் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. மாடுகளுக்குப் பருத்திக் கொட்டை அரைத்துக் கொடுக்கப்படுகிறது. எண்ணெய் பிழிந்த பின் கிடைக்கும் சக்கை ‘புண்ணாக்கு’ ஆகும். இதுவும் மாட்டிற்குத் தீவனமாகிறது. இதனால் மாட்டின் பால் அடர்த்தியாகக் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கையாகும்.

பருத்தியின் தொழிற்பயன்

சங்க காலத்தில் போரில் இறந்துபட்ட வீரர்களின் மனைவியர் தன் மானத்தைக் காக்கவும்,
சுற்றத்தைப் பேணவும் பருத்திச் செடிகளையே நம்பியிருந்தனர். பருத்தியைக் கொண்டு வாழ்கை நடத்தியவர்களைப் ‘பருத்திப்பெண்டீர்’ (புறம்.125 :1) என அழைத்துள்ளனர். பெரும்பாலும் கைம்பெண்டிரே இத்தொழில் ஈடுபட்டுள்ளனர்.

            ஊரைச் சுற்றி விளைவிக்கப்பட்டுள்ள பருத்திச் செடிகளே இவர்களின் வாழ்வாதரமாக இருந்துள்ளது. கோடைக்காலத்தில் பருத்திச் செடியிலுள்ள காய்முற்றி வெடித்து, பஞ்சிழை வெளிவரும். வெண்மையான பருத்திக் கொட்டையைச் சுற்றிப் பஞ்சு இழைகள் சூழ்ந்திருக்கும். இவ்விழையில் செல்லுலோசும், மெழுகும் கலந்திருக்கும். இதை நீக்கினால் தான் பருத்தி இழை நிலைப்பு, உறுதி, மென்மை போன்ற தன்மைகளைப் பெறும் என்பதால் இதை அடித்து பக்குவப்படுத்துவர். இப்பருத்தியை """"கோடைப்பருத்தி"" (புறம். 393) என்றும் இதன் பூவை """"பாரம்"" (குறிஞ்சிப்பாட்டு. 92) என்றும் சங்க இலக்கியம் கூறுகிறது. இப்பருத்திப்பூவை பறித்து, பெரிய மூட்டைகளில் கட்டி வீடு முழுதும் நிறைத்திருப்பர்.
""""கோடைப் பருத்தி வீடு நிறை செய்த
மூடைப் பண்டம் மிடை நிறைந்து அன்ன"" (புறம். 393 : 12-13)

என நல்லிறையனார் இப்பாடலில், கிள்ளிவளவன் கொடுத்த இறைச்சி நிரம்பிய உணவை உண்ட புலவரின் சுற்றத்தாரின் வயிறு, பருத்திப்பெண்டிர் வீட்டில் அடுக்கி வைத்திருந்த பஞ்சு மூட்டைகள் வீட்டை நிறைந்திருப்பதைப் போல நிறைந்திருந்திருந்தது எனக் கூறுகிறார்.
கைம்பெண்கள், பருத்தி இழையிலிருந்து கொட்டையைப் பிரிந்தெடுக்க இரும்பினால் செய்யப்பட்ட தாள் மற்றும் வில் முதலான கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
""""ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த
நுணங்கு நுண் பனுவல் போல"" (நற். 353: 1-2)
""""எஃகுறு பஞ்சிற்று ஆகி"" (நற். 247 : 4)
""""வில்லெறு பஞ்சியின்"" (அகம். 133: 6)

போன்ற தொடர்கள் தாள், வில் போன்ற பஞ்சடிக்கும் இரும்பினால் செய்யப்பட்ட கருவிகளைப் பற்றிக் கூறுகிறது. இவ்வாறு இக்கருவிகளினால் பன்முறை அடிக்கப்பட்ட பருத்தி இழையானது மென்மையான பஞ்சாக மாறுகிறது. இப்பஞ்சானது மிகமிக நுண்ணியதாக இருக்கும். இப்பஞ்சு வேக வைக்கப்பட்ட இறைச்சி போல கடினத் தன்மையும் இழுவைத் தன்மையும் நீங்கி மிக மென்மையாக இருந்ததாக ஒரு புலவன் கூறுகிறான்.

""""பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன
நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழுங்குறை"" (புறம். 125: 1)

இங்கு வேக வைக்கப்பட்ட இறைச்சிக்குப் பஞ்சு உவமை கூறப்பட்டுள்ளதைப் போல, வெண்மேகத்திற்கும், கடல் நுரைக்கும் உவமை கூறப்பட்டுள்ளது.

""""வில்எறி பஞ்சிபோல, மல்கு திரை
வளிபொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளிகடற் சேர்ப்பனொடு"" (நற்.299:7-9)

வில்லைக் கொண்டு அடிக்கப்பட்ட பஞ்சானது, கடல் அலை கரையில் கொண்டு வந்து சேர்த்த கடல் நுரையோடு ஒப்பிடப்படுகிறது. கடல் நுரையானது பொங்கிப் பெருகி நிறைந்திருப்பதைப் போல, அடிக்கப்பட்ட பஞ்சு இருப்பதால் பஞ்சை ‘பொங்கல்’ என்றும் அழைத்துள்ளனர்.
""""பொங்கல் வெண்காழ்"" (அகம். 129:9)
மற்றொரு பாடலும் பஞ்சினை மேகத்திற்கு உவமை கூறுகின்றது.
""""பெய்து புறந்தந்து பொங்கல் ஆடி
விண்டுச் சேர்ந்த வெண்மழை போல"" (ப.ப.55:14-15)
பருத்திப் பெண்டிர் வில் கொண்டு பருத்திப்பூவை அடிக்கும் பொழுது, பஞ்சு இழையானது சிதறுண்டு வெண்மேகம் போல அறையெங்கும் சிதறிக்கிடக்கும் என்கிறது இப்பாடல். பஞ்சு நூலாவதற்குள் அடிக்கப்பட்டும், தூற்றப்பட்டும், முறுக்கப்பட்டும் பலபாடுகள்படும். இதை,
""""பஞ்சாகி நூலாய்ப் பல பாடுநீ படுதல்
அஞ்சா துயிர் காக்க வல்லவோ"" (செங்குந்தர் துகில் விடுதூது. 204-205) (www.project madurai.org) என்று பிற்கால நூல் கூறுகிறது.
இதிலிருந்து நன்கு அடிக்கப்பட்ட வெண்பஞ்சின் மென்மைத்தன்மை மேகத்தோடும், நுண்ணிய தன்மை கடல் நுரையோடும் ஒப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கொட்டையிலிருந்து பிரிக்கப்பட்ட பஞ்சானது பின்னர் நூலாக மாற்றப்படுகிறது. பஞ்சு நூலாக மாற்றும் முறையை பிற்கால நூலாகிய நன்னூல் ஒரு நூற்பாவின் மூலம் கூறுகிறது. நூற்கும் பெண் தன் கைகளைப் பயன்படுத்தி, கதிர் என்னும் கருவியின் உதவியால் பஞ்சினை நூலாக மாற்றுவதைப் போல, ஒரு புலவன் சொற்களாகிய பஞ்சினை செய்யுளாக மாற்றுவதற்கு, அறிவு என்னும் கதிரைப் பயன்படுத்த வேண்டும் என்கிறது.
சொற்கள் - பஞ்சு
செய்யுள் - இழை (நூலிழை)
எழுதுபவன் - நூற்கும் பெண்
எழுதுபவனின் வாய் - நூற்கும் கை
அறிவு - கதிர் (நன். எழு. 24)
""""----- கதிர் பொலவுறூஉம்
ஏந்தல் கொடு நின்றோங்கும் ஏமக்கை"" (திருக்கை. 143)
பெண்டிர் கதிர் என்னும் கருவி கொண்டு பஞ்சினை நூலாக மாற்றியுள்ளனர் எனத் திருக்கை வழக்கநூலும் கூறுகிறது.
இவ்வாறு கதிரினால் உருவாக்கப்பட்ட நூலிழைச் சிலந்தி வலைபோல மெல்லியதாக இருந்ததை சங்கப் பாடல் சுட்டுகிறது. பாலை நிலத்தில் இலை உதிர்ந்த வேல மரத்தின் விரிந்த கிளைகளில் சிலந்திகள் வலைபின்னியுள்ளன. இவ்வலையின் ஒரு மெல்லிய இழை ‘சிலந்தி நூல்’ என அழைக்கப்பட்டுள்ளது. சிலந்தி நூலை ‘நூலாம்படை’ என்று இன்றும் வழங்குவதைக் காணலாம். """"சிலம்பி நூலின் நுணங்குவன"" (அகம். 224:7) இதிலிருந்து சிலம்பி நூலினைப் போல நுண்ணிய நூலிழை இருந்துள்ளது என அறியலாம். மற்றொரு பாடலும் நூலின் தோற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
""""கால் கடுப்பு அன்ன கடுஞ்சொல் இவுளி
வால் வெண் தெவிட்டல் வழிவார் நுணக்கம்"" (அகம். 224:5-6)
என்ற வரிகள் விரைவாகச் செலுத்தப்பட்ட தோரில் பூட்டப்பட்ட குதிரைகள், விரைந்து செல்வதால் அவற்றின் வாயில் நுரை தள்ளுகிறது. அந்நுரைகள் ஒன்று சேர்ந்து சிலந்தி நூல் போல் மாறி வழிகின்றன. காற்றின் வேகத்தில் அந்நூலானது அலைப்புண்டு தலைவனின் ஆடையில் படிகின்றது எனக் கூறுகின்றன. இதிலிருந்து பருத்தியிலிருந்து எடுக்கப்பட்ட வெண் நூலின் தோற்றம் நன்கு புலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நூலைக் கொண்டு ஆடை நெய்வோர் பாவை உருவாக்குவர். பா என்பது பிரித்தல் எனப் பொருள்படும். பிரித்து வைக்கப்பட்ட நூலின் வரிசையே பா என அழைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ‘விதைகளைப் பாவு செய்தல்’ எனக் கூறுவது இன்றும் விதைகளைப் பிரித்து வயலில் நடுவதைக் குறிக்கிறது என்பதை அறியலாம். தமிழ்விடுதூது, ‘நூலை’ (book) ‘பஞ்சுபடா நூலே, பலர் நெருடாப் பாவே’ என்கிறது. பஞ்சிலிருந்து எடுக்கப்படும் இழையானது ‘பா’ ஆவதற்குள் பலமுறை அடிக்கப்படும். பாவான பின் பலமுறை பலரால் விரல்களால் நெருடப்பட்டும், கோலால் அடிக்கப்பட்டும் தூய்மைப்படுத்தப்படும். இப்பாடுகள் எதுவும் புத்தகமாகிய நூலுக்கு  இல்லையாதலால் தான் தமிழ்விடுதூது ‘பஞ்சுபடா நூல், பலர் நெருடா பா’ என்கிறது. இப்பிரித்து வைக்கப்பட்ட நூலிழைகளானது, பாலை நிலத்தில் வேலமரக் கிளைகளில் சிலந்திகள் கட்டியுள்ள விரித்து வைத்தாற் போன்ற வலையைப் போலிருந்தது என ஒரு அகப்பாடல் கூறுகிறது.
""""இலை உலறிய புன் தலை உலவை
வலை வலந் தனைய ஆக, பல உடன்
சிலம்பி சூழ்ந்த புலம்கெடு வைப்பின்
துகில்ஆய் செய்கைப் பா விரிந்தன்ன"" (அகம். 293 : 1 -4)
துணியை உருவாக்குவதற்காக விரித்து வைக்கப்பட்ட ‘பா நூல்’ வரிசைப்போல, சிலந்தி வலையைப் பின்னியிருந்தது என்ற செய்தி பாவின் அமைப்பை நன்கு விளக்குவதாக உள்ளது.
பெருஞ்சித்திரனார், தலைமுடி நரைத்த தன் மனைவியின் எண்ணெய்க் காணாத கூந்தலானது, நூல் விரிந்து கிடந்தாற் போல், வெளுத்து விரிந்திருக்கும் என """"நூல் விரிந்தன்ன கதுப்பினள்"" (புறம். 159: 4) என பாவோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
ஒரு பா என்பது இழை எண்ணிக்கையில் நெய்யும் துணியைப் பொறுத்து மாறுபடும். பல்வேறு விதமான துணிகளுக்கு பல்வேறு விதமான எண்ணிக்கையில் நூல் தேவை. (தற்காலத்தில் வேட்டிற்குரியஒரு பா = 3200 இழைகள் உடையது. துண்டுக்குரிய ஒரு பா = 1500 இழைகள் உடையது)
உலகாளும் அரசர்களுக்கும், கூழைக் குடித்து வாழும் ஏழை எளியோர்க்கும், மானத்தைக் காத்துதவக் கூடிய ஆடையை நெய்யும் மகளிர் ஓய்வின்றி இரவு நேரத்திலும் உழைத்து நெய்த செய்தியைப் புறம் பதிவு செய்துள்ளது.
""""பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்து"" (புறம். 326:5)
இரவு நேரத்தில் சிறிய தீ எரியும் விளக்கு ஒளியிலும் பஞ்சிலிருந்து நூல் எடுத்தல், நூல் நூற்றல் முதலான வேலைகளைச் செய்துள்ளனர். மேலும், """"பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்"" (புறம். 324) என்ற பாடலானது பருத்திச் செடிகள் நிரம்பியுள்ள பகுதிகளில் எலிகள் நிறைந்திருக்கும். அதைப் பிடிப்பதற்காக வேட்டுவச் சிறுவர்கள், செடிகளுக்குள் நுழைந்து செல்வர் என இப்பாடல் கூறுகிறது.
""""இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை
உயிர் நடுக்குற்றுப் புலாவிட்டு அரற்ற
சிறையும் செற்றையும் புடைநாள் எழுந்த"" (புறம்.326 : 2-4)
காட்டுப்பூனையின் வருகைக்கு அஞ்சிய கோழி சிறகை விரித்து அரற்ற, அவ்வோசையைக் கேட்டு நூல் நூற்றுக் கொண்டிருந்த பெண் நூற்பதைவிட்டு எழுந்தாள் என இப்பாடல் கூறுகிறது. பருத்திக் கொட்டையை உண்பதற்காக எலிகள் வீட்டில் வளை வைத்திருக்கும். இந்த எலிகளைப் பிடிப்பதற்காகக் காட்டுப்பூனைகள் வரும் என்ற செய்தி, இதில் மறைமுகமாகப் புலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால்தான் இத்தொழிலை, """"எக்காலும் ஏய்ப்பில் தொழில்"" (திருக்கை.128) எனத் திருக்கை வழக்க நூல் குறிப்பிடுகிறது. ஓய்வில்லாத தொழில் என்பது இதன் பொருளாகும்.
""""------- வையகத்தில்
சீரிகையாற் பண் சேர்த்து நன்னூல் பாவாக்கிக்
காரிகையார் தாரால் கலை செய்யும்""
(செங்குந்தர் துகில்விடுதூது: 33-34)
என்று பிற்கால நூலும் பெண்கள், பருத்தியிலிருந்து நூல் எடுத்து, பஞ்சாக்கி, ஆடை நெய்யும் சிறப்பினைப் பற்றிக் கூறுகிறது.
கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் நூல் நூற்கும் தக்ளிகள் கிடைத்துள்ளன. இது 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தொல்லியலாளர்கள் கூறுகின்றனர் (தினமலர், 1.6.2012). இதைப்போல தாமிரபரணி கரையோரம் உள்ள ஆதிச்ச நல்லூரில் கிடைத்த பழங்காலத் தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன. இதை ஆய்வு செய்த ஜெர்மானிய அறிஞரான ஜாகர், பிரெஞ்ச் நாட்டறிஞரான லூயி வேப்பிக்கியூ போன்றோர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருட்கள் அவை என கணித்துள்ளனர்  தமிழகத்தின் பல ஊர்களுள் இன்றும் பருத்தியூர், எலவம் பட்டி, ஆடையூர் (திருவண்ணாமலை மாவட்டம்), நெசப்பாக்கம், மடிப்பாக்கம், சிந்தாரிப்பேட்டை (சின்ன தறிப்பேட்டை) என வழங்குவது பழங்காலத்தின் தொடர்ச்சியேயாகும்.

புறநானூற்றில் பருத்திச் செடிகள் நிறைந்த ஒரு ஊரைப் பற்றிய குறிப்பு வருகிறது. அடைநெடுங்கல்வியாரால் பாடப்பட்ட இப்பாடல் மகட்பாற்காஞ்சித் துறையைச் சார்ந்தது. நால்படை உடைய மன்னர் பலர், பருத்திச்செடி நிரம்பிய அவ்வூரைச் சார்ந்த வீரன் ஒருவனின் மகளை மணம் செய்து கொள்ள பெண்கேட்டு வந்தனர். ஆனால், அவ்வீரன் பெண் கொடுக்க மறுத்து விடவே, அம்மன்னர்கள் அப்பெண்ணிற்காகப் போரிடத் துணிந்தனர். இதனால் நால்வகைப் படைகளையும் திரட்டி வந்து அவ்வூரிலேயே தங்கிவிட்டனர். அவர்களின் களிறுகளால் சோலைகளும், குதிரைகளால் மக்கள் வாழும் தெருக்களும், வீரர்கள் படைக் கருவிகளைக் கழுவுவதால் நீர்த்துறைகளும் பாழாயின. போர் தொடங்குவதற்கு முன்னரே பாழாகி வரும் இவ்வூர், போர் தொடங்கிவிட்டால் என்ன ஆகுமோ என்ற கவிஞரின் வினா அவலத்தை வெளிப்படுத்தி நிற்கிறது. புலவர் பருத்திச் செடிகளுக்காகவும் வருத்தப்படுவது சிந்தித்தற்குரியது.

""""என் ஆவது கொல் தானே
பன்னல் வேலி இப்பணை நல்ஊரே"" (புறம். 315 : 20-21)
வீரர்கள் வாழும் அவ்வூருக்குப் போரும், போர்ச் சூழலும் புதியதன்று. ஆனால், போரில் இறந்துபட்ட வீரர்களின் மனைவியர் தம் மானத்தையும் சுற்றத்தையும் காக்க, அப்பருத்திச் செடிகளை மட்டுமே நம்பியுள்ளனர். மீண்டும் போர் ஏற்பட்டு பல வீரர்கள், அழிவராயின், கைம்பெண்கள் மிகுதியாவர். இந்நிலையில் பருத்திச் செடிகளும் அழிந்துவிட்டால், அவர்களின் வாழ்வாதாரமே அடியோடு பாழ்பட்டுப் போகும் என்பதை உணர்ந்தே கவிஞர், பருத்திச் செடிகளின் அழிவைக் குறித்து கவலைப்படுகின்றார். பருத்திச் செடிகள் போர்ச்சூழல் நிலவிய சங்ககாலத்தில் மிகுதியும் பயிரிடப்பட்டிருக்கின்றன. மன்னர்கள் பருத்திச் செடிகளை நடுவதில் கவனம் செலுத்தியுள்ளனர்.

போரில் ஆடவர் மிகுதியும் இறந்துபடும் நிலையில் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கைம் பெண்களையும், முதியவர்களையும் மட்டுமே ஒரு நாடு நம்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது. போருக்குப்பின் நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வையும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்காக சங்ககால மன்னர்கள் பருத்திச் செடிகளைப் பெரிதும் நம்பியிருந்தனர். பருத்திப் பெண்டிரான பெண்களின் மானத்தையும் காக்கக் கூடிய பருத்திச் செடிகளை மிகுதியும் பயிரிட்ட அதியமானைப் பொன்டிமுடியார் என்னும் பெண்பாற்புலவர் """"பருத்திவேலிச் சீறூர் மன்னன்"" (புறம். 299) எனப் பாராட்டுகின்றார்.

பருத்திச் செடிகள் பெரிதும் வளர்க்கப்பட்டு பெண்களின் மானமும் நாட்டின் மானமும் காக்கப்பட்டுள்ளது. பஞ்சிலிருந்து எடுக்கப்பட்ட நூலைக் கொண்டு, ஆடை நெய்வது மட்டுமின்றி பல்வேறு கயிறுகளையும் திரித்துப் பயன்படுத்தியுள்ளனர். பருத்திச் செடியிலிருந்து பஞ்சும், கயிறும், ஆடையும் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தமிழரின் வாணிகமும், நாகரிகமும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது எனத் துணிந்து கூறலாம். 18ம் நூற்றாண்டில் உலகின் தொழில் புரட்சிக்கு வித்திட்டதாக நெசவுத்தொழிலை உலக நாடுகள் போற்றும். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அந்த தொழிற்புரட்சியைப் பருத்தியிலிருந்து நூல் உருவாக்கிய போதே பழந்தமிழன் செய்துவிட்டான்.

பருத்தி நூலிலிருந்து உருவாக்கப்படும் கயிற்றின் அருமையை தமிழர் நன்கு அறிந்தவர்களாதலாலே பலவித தொழில்களுக்கு அதைப் பயன்படுத்தியுள்ளனர். தற்காலத்தில் நாரிலிருந்து திரிக்கப்படுவது கயிறு என அழைக்கப்படுகிறது. ஆனால், பருத்தி இழையிலிருந்து பெற்ற நூலைக் கொண்டு திரித்த ‘கயிற்றையே’ பழந்தமிழர் கயிறு என வழங்கியுள்ளனர்.

பருத்தி இழை - நார் இழை வேறுபாடு

பருத்தியிலிருந்து எடுக்கப்பட்ட நூலிழையினைப் பயன்படுத்தி பலவகைக் கயிறுகளை உருவாக்கியுள்ளனர். மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்படுவது நார் ஆகும். இந்நாரினைக் கொண்டு மணிகளைக் கோர்ப்பது, பூக்களைக் கட்டுவது முதலான வேலைகளைத் தமிழர் செய்துள்ளனர். மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்படும் இழையை நார் என்றும் பருத்தியிலிருந்து எடுக்கப்படும் இழையை நூல் என்றும் அழைத்துள்ளனர். நூல் இழையைக் கொண்டு திரித்து உருவாக்கப்படுவதே கயிறு ஆகும். நிலையான பயன்களுக்குக் கயிறையும், அன்றாடப் பயன்களுக்கு நாரையும் பயன்படுத்தியுள்ளனர். பொன்னால் செய்யப்பட்டக் குவளை மலர், தாமரை மலர், முத்து போன்றவற்றைக் கோர்க்க நூல் கயிறையும், அத்திப்பூ, வேப்பம் பூ முதலிய செடியிலிருந்துப் பறிக்கப்பட்ட பூக்களைக் கட்ட நாரையும் பயன்படுத்தியுள்ளனர்.
பூவை நாரால் தொடுத்துள்ள செய்தியை, """"நார்ச் செறியத் தொடுத்த கண்ணி"" (புறம். 81: 3) என்ற பாடல் சுட்டுகிறது. சோழன் கிள்ளிவளவன் ஆத்திமாலையை நாரால் தொடுத்து அணிந்திருந்தான் என்ற இச்செய்தி அன்றாடம் வாடிவிடும் பூக்களை நார் கொண்டு தொடுத்ததை உறுதிசெய்கிறது.
நறை எனப்படும் ஒருவகைச் செடியிலிருந்து நார் எடுக்கப்பட்டது. இதைக் கொண்டு வேங்கைமலரைத் தொடுத்துள்ளனர்.
""""நறை நார்த் தொடுத்த வேங்கை அம்கண்ணி"" (புறம். 371: 3)
கானகத்தில் நீராடச் சென்ற மகளிர் அங்குள்ள வேங்கை மலர்களைப் பறித்து நாரால் தொடுத்து மாலையாக அணிந்து கொண்டனர் என இப்பாடல் கூறுகிறது.
பொன்னாலாகிய தாமரை மலரை, வெள்ளியால் செய்யப்பட்ட நாரைக் கொண்டு கோர்த்த செய்தியை,
""""ஒள் அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப் பெற்றிசினே"" (புறம்.11 : 17-18)
வெள்ளியால் செய்யப்பட்ட வடம், மரத்திலிருந்து பிரித்த இழையைப் போலிருந்ததாலும், அதை நாருக்குப் பதிலாகப் பயன்படுத்தியதாலும் வெள்ளி வடத்தையும், நார் என்றே அழைத்துள்ளனர். வெள்ளி நாரால் சேர்க்கப்பட்டப் பொன் தாமரை மலர்களாகிய மலர்களைப் புலவர்களுக்குச் சேரமன்னன் வழங்கியதாக பேய்மகள் இளவெயினி பாடியுள்ளார்.
வல்வில் ஓரியும், வெள்ளி நாரைக் கொண்டு கோர்த்த பொன் குவளை மலர்களைப் புலவர்க்குப் பரிசாகக் கொடுத்துள்ளான்.
""""பனி நீர்ப் பூவா மணிமிடை குவளை
வால்நார்த் தொடுத்த கண்ணி"" (புறம். 153 : 8-9)
பனியில் பூக்காத குவளைமலர் என்பது, பொன்னால் உருவாக்கப்பட்ட குவளை மலரைக் குறிக்கிறது. இதை மணியோடு இடையிடையே வெள்ளி நாரைக் கொண்டுத் தொடுத்துள்ளனர். வால் என்ற சொல் வெண்மையைக் குறிக்கிறது. """"வால் எயிற்று அம் நல்வாய்"" (கலி. 56 : 21) இங்கு வெண்மையான நார் என்பது வெள்ளி நாரைக் குறிக்கிறது.
மரப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் இழையை ‘நார்’ எனக் கூறிய செய்தியைச் சில பாடல்கள் வழி அறியலாம்.
""""பெருங்கயிறு வாங்க முறிந்து நிலம் படாஅ
நாருடை ஓசியல் அற்றே"" (குறுந். 112 : 4-5)
கோபம் கொண்ட பெரிய களிறு ஒன்று மரத்தைக் கொம்புகளால் தாக்க, அம்மரத்தின் கிளைகள் முறிந்தது. முழுவதும் முறிந்துவிடாமல், அதன் கிழிந்த பட்டையானது மரத்திலிருந்து கீழே தொங்கிக் கொண்டிருந்தது. இவ்விடத்தில் கிழிந்து தொங்கும் மரப்பட்டை, ‘நிலம்படாஅ நார்’ எனப்பட்டுள்ளது.
""""உயங்கு நடை மடப்பிடி வருத்தம் நோனாது
நிலைஉயர் யாஅம் தொலையக் குத்தி
வெண்நார் கொண்டு, கை சுவைத்து"" (குறுந். 307 : 5-7)
பாலை நிலத்தில் நீர் வேட்கை வருத்தத்தைத் தாங்காத களிறு தன் பிடிக்காக, யாஅமரத்தினைத் தந்தத்தினால் குத்திக் கிழித்து, பட்டையை நார் போல உரிக்கும். பட்டை உரிந்து வெண் நார் வெளிப்படும். இதிலிருந்து வரும் நீரினை பிடி சுவைக்கும். இதே செய்தியை அகப்பாடலும் கூறுகிறது.

""""கவை முறி யாஅத்து
நார் அரை மருங்கின் நீர்வரப் பொளித்துக்
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்"" (அகம். 257)

பாலை நிலத்திலுள்ள யாஅமரத்தின் பட்டையை உரித்து, அந்நாரின் நீரைச் சுவைத்து களிறானது சக்கையைத் துப்பி வைக்கும். இச்சக்கையானது அவ்வழி வருவோருக்குத் தீமூட்ட சுள்ளியாகப் பயன்படும் என இப்பாடல் கூறுகிறது.

""""பிடி பசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்"" (குறுந். 37)

இப்பாடலும் பிடியின் தாகத்தைத் தணிக்க, பெரிய கையுடைய வேழம், யாஅம் மரத்தின் மென்மையான கிளைகளைக் கிழிக்கும் என்கிறது. மரத்திலிருந்து, அதன் பட்டையிலிருந்து எடுக்கப்படுவது நார் ; பருத்தியானது செடிவகையைச் சார்ந்தது. இதை தாவரவியலாளர் இருவித்திலைத் தாவரம் என்பர். இதன் நூலே உறுதியானது. 

இலவமரம் - பஞ்சு கொடுக்கக்கூடியதென்றாலும், அதிலிருந்து நூல் எடுத்து கயிறாகவோ, ஆடையாகவோ மாற்றமுடியாது. இப்பாடல்களிலிருந்து மரத்திலிருந்து உரிக்கும் இழைகளை ‘நார்’என்றும் பருத்தியிலிருந்து எடுக்கப்படும் இழைகளை ‘நூல்’ என்றும், நூலைத் திரித்து உருவாக்கப்படுவது ‘கயிறு’ என்பதும் அறியவருகிறது. மேலும், மரத்தின் பட்டையிலிருந்து உரிக்கப்படும் இவ்வகை நார் எளிதில் அழியக்கூடியது என்பதாலேதான், அதில் எளிதில் காய்ந்துவிடக்கூடிய இயற்கை மலர்களை மட்டும் கட்டியுள்ளனர். மிகவும் வலிமைதரும் பருத்தி நூல் கயிற்றையே பல தொழில்களுக்கும் பயன்படுத்தியுள்ளனர்.

பருத்தி நூல் கயிறு

எழுதிய நூலைக் கொண்டு புலவரின் ஆற்றலை அறிவது போல, பருத்தி நூலைப் பயன்படுத்திய தமிழரின் செயல்திறனைக் கொண்டே அவர்களின் நுண்ணறிவுத் திறனையும் அளவிடமுடியும். மெல்லிய கயிறு - ஞாண் என்றும், வலிய கயிறு - கயிறு, புரிநூல் என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
பஞ்சி இழை, நூலாக மாற்றம் பெற்ற நிலையில், அந்நூல் தமிழர் என்னும் பட்டத்தை வானளாவ உயர்த்தியச் செய்தியைச் சங்க இலக்கியம் பல பாடல்களில் பதிவு செய்துள்ளது. பருத்தியிலிருந்து உருவாக்கப்பட்ட நூலை ஒன்றோடொன்று சேர்த்து முறுக்கும் பொழுது, வலிமையான முறுக்குண்ட கயிறு கிடைக்கிறது. பயன்படுத்தும் பணிகளுக்கேற்ப இதற்கு பாசக்கயிறு, தாம்புக்கயிறு, வேள்விக்கயிறு, பெருவலைக் கயிறு, சிமிலிக் கயிறு, முழவுக்கயிறு, காப்புக்கயிறு, பூங்கயிறு, அணிக்கயிறு, பூண்மணிக்கயிறு, ஊஞ்சல் கயிறு, முடிக்கயிறு, நூல்சரடு, முத்துகோர்க்கும் நுல் என பல பெயர்களை வைத்து தமிழர் அழைத்துள்ளனர்.

1.பாசக்கயிறு

முல்லை நில மகளிர் தயிரை, மரத்தினால் செய்த மத்தினைக் கொண்டு கடைவர். தயிர் கடைவதற்கென்றே நிறுவப்பட்ட தூணில் ‘பாசம்’ என்றும் கயிறைச் சுற்றி, அதை மத்தினோடு இணைத்து மாறிமாறி இழுப்பர். மத்தானது இப்பாசக் கயிற்றால் தொடர்ந்து இயக்கப்படுவதால் தயிரானது கடையப்படுகிறது. இதனால் மத்தனாது தேய்ந்துள்ளது என முல்லைக்கலி கூறுகிறது. மத்தோடு இணைக்கப்பட்ட கயிறை """"மத்தம் பிணித்த கயிறு"" (கலித். 110 : 10) என்கிறது முல்லைக்கலி. """"விளம் பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப் பாசம் தின்ற தேய்கால் மத்தம்"" (நற். 12: 2) 

விளம்பழம் போடப்பட்டதால் மணக்கும் தயிர்ப்பானையில் மத்து பாசக்கயிறு கொண்டு கடையப்படுவதையும், இதனால் மத்தின் கால் தேய்ந்துள்ளதையும் இப்பாடல் சுட்டுகிறது. ‘பாசம் தின்ற தேய்கால் மத்தம்’ என்ற தொடரில் வரும் ‘பாசம்’ என்பது கயிற்றைக் குறிக்கிறது. கயிறு திரித்து விற்போரைச் சிலம்பு ‘பாசவர்’ என்கிறது (17)

2.தாம்புக்கயிறு

மாடு கட்டுவதற்காக முல்லைநில மக்கள் பயன்படுத்தும் கயிறு ‘தாம்பு’ எனப்பட்டுள்ளது.
""""தீம்பால் கறந்த கலம் மாற்றி ; கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து"" (கலி. 111 : 1-2)
என்ற பாடல் கன்று, மாடு முதலானவற்றை தாம்புக்கயிற்றால் தூணில் கட்டுவர் என்கிறது. மற்றொரு பாடல்,
""""------ கன்றோடு செல்வேம் ; எம்
தாம்பின் ஒருதலை பற்றி"" (கலி.116: 2)
மேய்ச்சலுக்காக கன்று, மாடு போன்றவை அழைத்துச் செல்லப்படும் பொழுது, அவை வழிமாறிப் போய் விடாமலிக்க அவற்றின் கழுத்தில் தாம்பு கயிற்றைக் கட்டி மறு பகுதியை கையில் பிடித்து இழுத்துச் சென்றிடுவர் ஆயர் என்கிறது.

3. வேள்விக்கயிறு

பரசுராமன் அரசர் குலத்தை முற்றிலுமாக வேரறுத்த பின், ஒரு வேள்வி செய்தான். அவ்வேள்வி களத்தில் அவன் வெற்றியைக் காட்டும் விதமாக ஒரு வலிய பெரிய தூணை நிறுத்தி, அதில் பல அழகிய வண்ணக் கயிறுகளைக் கட்டினான். மிகுந்த காவலும் அதற்கு ஏற்படுத்தினான் என அகப்பாடல் கூறுகிறது.
""""முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி
கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின்,
அருங்கடி நெடுந்தூண்"" (அகம். 220 : 6-8)
அக்காலத்தவர், காண்பவர்கள் விரும்பத்தக்க வகையில் பல வண்ணக் கயிறுகளைப் பெரிய நெடுந்தூணில் கட்டி, வேள்விக்குப் பின் பொதுமன்றத்தில் அதை நிறுத்தி, தன் வெற்றியைப் பறை சாற்றியுள்ளனர் என்பது இதனால் தெரிய வருகிறது. வேள்வித்தூணில் கட்டப்படும் கயிறு ஆதலால் இதனை ‘வேள்விக்கயிறு’ என்றழைத்துள்ளனர்.

4. பெரிய வலைக்கயிறு

பரதவர்கள் கடலில் பெரிய மீன்களைப் பிடிப்பதற்கேற்ற வகையில், முறுக்கிய நூலினால் செய்யப்பட்ட வலிமையான கயிற்றைக் கொண்டு வலை தயாரித்துள்ளனர். வலிமையான இக்கயிறு வலை பின்னுவதற்கேற்ற வகையில் மெல்லியதாகவும் இருக்கும். இத்தகைய வலிமையான மெல்லிய கயிற்றை உருவாக்குவதற்கு ‘வடிக்கதிர்’ என்ற கருவியைப் பயன்படுத்தியுள்ளனர்.
""""வடிக்கதிர் திரித்த வல் ஞாண் பெருவலை
இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார்"" (நற். 74)
ஞாண் என்பது மெல்லிய வலிமையான கயிறு எனப்பொருள்படும்.
""""நுண் ஞாண் சவ்வலை"" (அகம். 290 : 4)
என்ற அகப்பாடலும் நுண்மையான மெல்லிய வலிய கயிற்றைக் கொண்டு வலை பின்னப்பட்ட செய்தியைத் தெரிவிக்கிறது. கடலில் எறியப்படும் வலை நீரில் மூழ்கும் போது வலை என்று தெரியாத வகையில் மெல்லியதாகவும், பெரிய மீன்களைத் தாங்கக்கூடிய வகையில் வலிமையானதாகவும் இருக்கவேண்டும். அதற்கேற்ற வகையில் மீன் வலைகளானது பின்னப்பட்டுள்ளதை இப்பாடல்கள் பதிவு செய்துள்ளன.
அந்தணர்க்குரியதாகத் தொல்காப்பியம் நான்கு பொருட்களைக் கூறுகிறது.
""""நூலே கரகம் முக்கோல் மனையே
ஆயுங்காலை அந்தணர்க்கு உரிய"" (தொல். 3: 615)
இதில் நூல் என்பதற்குப் பூணூல் எனப்பல உரையாசிரிகள் பொருள் கூறியுள்ளனர். ஆனால், கையில் அந்தணர் பூணூலை எடுத்துச் செல்ல மாட்டார்கள். கழுத்தில் தான் அணிவார்கள். தொல்காப்பியர், கையில் எடுத்துச் செல்லும் பொருளைதான் பட்டியலிட்டுள்ளார். நூலை, அடுத்து கரகம் வருவதால் அது கரகத்தை எடுத்து செல்வதற்குரிய நூலே ஆகும். இது ‘உறிநூல்’ என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது.

5. சிமிலிக்கயிறு

பல மெல்லிய நூல்களைக் கொண்டு முறுக்கப்பட்ட கயிறு ‘புரிநூல்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. இப்புரிநூல் சிறிய பொருட்களைக் கட்டி எடுத்துச் செல்வதற்கு உறியாகப் பயன்பட்டுள்ளது.
முனிவர்களால் ‘கரண்டை’ எனப்படும் சிறிய பானையை நீர் எடுத்துச் செல்லப் பயன்படுத்தியுள்ளனர். இக்கரண்டையானது கல்லில் பொத்தல் ஏற்படுத்தினாற் போன்ற சிறிய வாயினை உடையது. கரண்டை கீழே சாய்ந்தாலும் சிறிய அளவு நீரே வீணாகும். இக்கரண்டை எனப்படும் சிறிய பானையைப் பல வடங்களுடையப் புரி நூலால் செய்யப்பட்ட உறியில் வைத்து கையில் எடுத்துச் சென்றுள்ளனர். பல வடமுடைய புரிநூலால் ஆன உறியானது ‘சிமிலி’ என அழைக்கப்பட்டுள்ளது.

""""கல்பொறிந்தன்ன இட்டு வாய்க் கரண்டைப்
பல்புரிச் சிமிலி நாற்ற நல்கி வர"" (மதுரைக்காஞ்சி. 483-484)

மணிமேகலை ‘சிமிலியில்’ கரண்டை எனப்படும் பானையை எடுத்துச் செல்லும் முனிவர்களை ‘சிமிலிக் கரண்டையான்’ (மணி. 3: 86) எனக் கூறுகிறது. கலித்தொகை ‘உறித் தாழ்ந்த கரகம்’(கலி.9) என இதைப் பதிவு செய்துள்ளது. கரகம் என்பது கரண்டையாகும் (சிறிய பானை). கையில் எடுத்துச் செல்லும் விளக்கையும் சிமிலி என அழைத்திருக்கலாம். அதுவே ஆங்கிலத்தில் சிம்னி என வழங்கியிருக்கலாம்.

6. முழவுக்கயிறு

ஊர் மன்றத்துக்கு நடுவே முழவானது தொங்கவிடப்பட்டுள்ளது. மக்களுக்குப் போர் பற்றிய தகவல்களை உடனடியாகத் தெரிவிக்க இம்முழவு பயன்பட்டுள்ளது. போரில்லாக் காலத்து வீசிய பெருங்காற்றானது இதன் மீது மோதுவதால் அக்கயிறானது அலைப்புண்டு, முழவைக் கட்டப்பட்ட தூணில் மோத வைக்கும். அப்பொழுது ஏற்படும் ஓசையைப் போர் அறிவிப்பு என மன்னன் நினைத்துக் கொள்வான் எனப் புறநானூறு கூறுகிறது.
""""பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொருதெண் கண் கேட்பின்"" (புறம். 89: 7-8)
இங்கு ஊர் நடுவே நடப்பட்ட தூணில் முழவைக் கட்டப் பயன்படுவதால் இது முழவுக்கயிறு எனப்பட்டது.

7. காப்புக் கயிறு

இறை வழிபாட்டிற்காகச் செல்பவர்கள் எடுத்துச் செல்லும் பூசைக்குரிய பொருட்களில் நூலும் இருந்தது. இதை காப்பாக கையில் கட்டிக் கொண்டனர் என பரிபாடல் காப்பு கயிறு பற்றி கூறுகிறது. திருப்பரங்குன்ற முருகனைத் தொழச் செல்பவர்கள், சந்தனம், மணமிக்கமலர், மணி, கயிறு, மயில் முதலானவற்றை கைகளில் ஏந்திக்கொண்டு செல்கின்றனர்.
""""வேறுபடு சாந்தமும், வீறுபடு புகையும்
ஆறு செல் வளியின் அவியா விளக்கமும்
நாறுகமழ் வீயும், கூறும் இசை முழவமும்
மணியும், கயிறும், மயிலும், குடாரியும்"" (பரி. 8 : 97-100)
என பரிபாடல் வழிபடு பொருள்களில ஒன்றாக நூலும் இருந்துள்ளது எனக் கூறுகிறது.
""""கைந்நூல் யாவாம்"" (குறுந். 218. 2)
இப்பாடலில் கொற்றவைக்கு நோன்பு மேற்கொண்டு, கையில் காப்புக்கயிறு கட்டியுள்ளதாக தலைவி கூறுகிறாள். நெடுநல்வாடையில் அரசமாதேவி கையில் வலம்புரி சங்கினால் செய்யப்பட்ட வளையல்களோடு, கடிமை எனப்படும் காப்பு நூலையும் அணிந்திருந்த செய்தி கூறப்பட்டுள்ளது.
""""வலம்புரி வளையொடு, கடிகை நூல் யாத்து"" (நெல்நல். 142)
இவ்வாறு இறை வழிபாட்டிற்குரிய பொருட்களில் ஒன்றாகவும், காப்பு நாணாகக் கட்டிக் கொள்ளவும் காப்புக்கயிறு பயன்பட்டுள்ளது.

8. அணிக்கயிறு

தேரில் குதரை மற்றும் யானைகளைக் கட்டுவதற்காகப் பயன்படுத்திய கயிறு ‘அணிக்கயிறு’ எனப்பட்டது. """"யானை கயிற்று"" (அகம். 128) """"புரவி இழை அணி நெடுந்தேர்"" (அகம். 254 : 12) இதைத் தற்காலத்தில் கடிவாளக் கயிறு என அழைக்கிறார்கள். இக்கடிவாளக் கயிற்றை இழுத்து விடும் பொழுது, அடக்கப்பட்ட குதிரை குறிப்பறிந்து விரைவாகச் செல்கிறது என அகப்பாடல் கூறுகிறது.

""""செல்க பாக! எல்லின்று பொழுதே
வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப"" (அகம். 224 : 2)
குதிரையை அடக்கக் கூடிய வகையில் அதற்குக் கட்டப்படும் கடிவாளக் கயிற்றை ‘மத்திகை’ என்று பரிபாடல் கூறுகிறது.

""""மார்பு அணி கொங்கைவார் மத்திகையாய் புடைப்பர்"" (பரி. 9: 46)

இங்கு மத்திகைக்கயிறு என்பது நூலால் ஆன சாட்டையைக் குறிக்கிறது. மற்றொரு பாடல் தேரில் பூட்டப்பட்ட கடிவாளக் கயிற்றை இழுத்து விட்டபடியே குதிரையை வேகமாக ஓட்டிக் கொண்டு தலைவர் வருவார் என்று கூறுகிறது.

""""வயம்படு பரிப்புரவி மயக்கம் வருவார் ;
தேர் அணிஅணி கயிறு தெரிபு வருவார்"" (பரி. 9: 52-53)
இதை ‘நூல் மாலை’ என்றும் அழைத்துள்ளனர் என்பதைக் குறுந்தொகை வழி அறியலாம்.

""""நூல் மாலை"" (குறுந். 173 : 2)

குதிரை, யானையைத் தேரில் பூட்டப்பயன்படும் கயிறு அணிகயிறு, அடங்கு கயிறு, நூல்மாலை எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.

9. பூண்மணிக் கயிறு

ஆயர் தொழுவத்தில் வளர்க்கும் மாடுகளுக்குக் கழுத்தில் நூலினால் கோக்கப்பட்ட மணிகளை அணிவித்துள்ளனர். இதை ‘பூண்மணிக்கயிறு’ என அழைத்துள்ளனர்.

""""புல்ஆர் கல்ஆன் பூண்மணி கொல்லோ?""(குறுந். 275: 4)

கழுத்தில் பூட்டப்பட்ட மணி ‘பூண்மணி’ என்றும் அதை கட்ட உதவும் கயிறு ‘பூண்மணிக்கயிறு’ எனவும் அழைக்கப்பட்டுள்ளது. ஒளிவீசக் கூடிய மணிகளைக் கொண்டு நூலினால் கோக்கப்பட்ட மாலைகளைக் கழுத்தில் தலைவன் அணிந்திருந்தான் என """"கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்"" (புறம். 88 : 4) என தலைவன் அணிந்த மாலை ‘நுண்பூண்’ என குறிக்கப்பட்டுள்ளது.

10. ஊஞ்சல் கயிறு

சிறுவர்கள் வேங்கை மரங்களின் கிளைகளில் ஊஞ்சல் கட்டி விளையாடியுள்ளனர். ஊஞ்சல் பலகையானது, முறுக்குண்ட உறுதியான கயிற்றினால், மரக் கிளைகளில் கட்டப்பட்டுள்ளது. இக்கயிறு ‘புரிக்கயிறு’ எனப்ட்டுள்ளது. புரி என்பது முறுக்கப்பட்ட கயிறு ஆகும். பல புரிகளைக் கொண்டு முறுக்கப்பட்டப் பெரிய கயிறு ஊஞ்சல் கயிறாகப் பயன்பட்டுள்ளது. இதை ‘முரற்சி’ என்ற சொல் குறிக்கிறது.

""""கருங்கால் வேங்கைச் செவ்வீ வாங்கு சினை
வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக்
கை புனை சிறுநெறி வாங்கி"" (நற். 270: 10)
விடுபுரி முரற்சி என்பது முறுக்கப்பட்ட கயிறுகளை ஒன்றிணைத்து மேலும் முறுக்கப்பட்ட வலிமையான கயிறு என்ற பொருளில் இங்கு பயிலப்பட்டுள்ளது.
11. புரிக்கயிறு
சுறாமீன் போன்ற பெரிய மீன்களைப் பிடிக்கக் கூடிய பரதவர்களும் ஊஞ்சல் கயிறு போன்று வலுவான புரிக் கயிற்றைப் பயன்படுத்தியுள்ளனர்.
""""--------- நோன்புரிக்
கயிறு கடை யாத்த கடு நடைஏறி உளித்
திண் திமில் பரதவர்"" (நற். 388 : 3-7)

பரதவர் வலிமையான புரிக்கயிற்றின் ஒருபுறம் ஈட்டியைக் கட்டி, கடலில் சுறா போன்ற பெரிய மீன்கள் தென்படும் பொழுது அதன் மீது வீசி எறிவர். ஈட்டியானது மீனைக் குத்திப் பற்றியவுடன், புரிக்கயிற்றின் மறு முனையை படகிலிருந்து தப்பிக்கப் பல போராட்டங்களை நிகழ்த்தும் ; கயிற்றை அறுத்துவிட முயற்சிக்கும் ; தன் போக்கில் கடலுக்குள் இழுக்கும். மீனின் இப்போராட்டங்களையெல்லாம் தாங்கக் கூடிய வகையில் முறுக்குண்ட புரிக் கயிறானது வலிமையாக இருக்கவேண்டும். அதற்கேற்ற வகையில் முறுக்கிய கயிறைக் கொண்டு, மேலும் முறுக்கப்பட்ட வலிமையான புரிக்கயிற்றைப் பரதவர் பயன்படுத்தி உள்ளனர். ‘நோன்’ என்பது மிக வலிமையாக முறுக்கப்பட்டது எனப் பொருள்படும். ‘பண்’ என்பது பாய்மரக்கயிறு என அழைக்கப்பட்டுள்ளது.

12. பூங்கயிறு

பூங்கயிறு என்பது சிறுதேர், பொம்மை யானை, பொம்மைக் குதிரை முதலானவற்றை சிறுவர் கயிற்றில் கட்டி இழுத்துச் செல்வதற்குப் பயன்படுவது ஆகும். ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரே பொம்மை யானை, குதிரை, தேர் முதலானவற்றை இழுத்து விளையாடுவர். அவர்களின் மெல்லிய கைகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்படுவதே ‘பூங்கயிறு’ ஆகும்.

""""கவழம் அறியா நின் கைபுனை வேழம்
புரிபுனை பூங்கயிற்றின் பைய வாங்கி"" (கலி. 80 : 7-8)
சிறுவர், கவளச் சோற்றை அறியாத கையால் செய்யப்பட்ட மரயானையை முறுக்கப்பட்ட மெல்லிய பூங்கயிற்றினால் கட்டி அதை இழுத்து விளையாடி மகிழ்ந்தனர் எனக் கலித்தொகை கூறுகிறது.
""""பொற்காற் புதல்வர் புரவியின்றுருட்டும்
முக்காற்சிறு தேர்"" (பட்டினப்பாலை)

குதிரைகள் பூட்டப்படாத, மூன்று கால்களை உடைய சிறுதேரையும் (நடைவண்டி) இழுத்து விளையாடி உள்ளனர். தளர் நடையுடைய ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்களே தேரை உருட்டி விளையாடினர் என்று ஐங்குறுநூறு கூறுகிறது.

""""சிறுதேர் உருட்டும் தளர் நடை"" (ஐங். 403)

குறுந்தொகை, சிறுவர் தச்சன் செய்த சிறுமரக் குதிரையின் மீது ஏறி விளையாட முடியாது எனினும், அதை கையில் கயிறு கட்டி இழுத்து விளையாடி மகிழ்ந்தனர் என கூறுகிறது.

""""தச்சன் செய்த சிறுமா வையம் ஊர்ந்து இன்புறாஅ
ராயினும் கையின் ஈர்த்து இன்பூறூஉம்
இளையர்-----"" (குறுந். 6 : 1-3)

இவ்வாறு, சிறுவர் இழுத்து விளையாடுவதற்கேற்ற வகையில் உருவாக்கட்ட மெல்லிய கயிறு ‘பூங்கயிறு’ எனப்பட்டுள்ளது.

13. கோர்க்கும் நூல்

சங்ககால ஆடவரும் பெண்டிரும் முத்துமாலை, பொன்மாலை, பூமாலை போன்றவற்றை அணிந்துள்ளனர். இவற்றைக் கோர்ப்பதற்கு நூலினாலாகிய சரடு பயன்பட்டுள்ளது. இச்சரடை ‘அடர்ந்த நூல்’ என அழைத்துள்ளனர். முத்துக்களை நூலில் கோர்த்து அணிந்துள்ள தலைவி பற்றிக் கூறுமிடத்து, அவள் கண்ணீர் பெருகி மார்பணிகளை நனைத்தது என்று,

""""நெகிழ் நூல் முத்தின்"" (அகம். 289 : 11)
நூலறுந்து விழும் முத்துக்கள் போலத் தலைவியின் கண்ணிலிருந்து கண்ணீர் பெருகி வந்தது என்று புலவர் கூறுகிறார். நூலில் பலவிதமாக முத்துக்களைக் கோர்த்து அணிந்துள்ளனர். தலையணியாகவும், கழுத்தணியாகவும், இடையணியாகவும் முத்துகோர்த்த மாலைகள் அணியப்பட்டுள்ளன. மூன்று வடத்தினால் செய்யப்பட்ட முத்துமாலை பற்றிக் கலித்தொகை கூறுகிறது.
""""கயம் தலை மின்னும் கதிர்விடு முக்காழ்"" (கலி. 80 : 2)
நீரோட்டம் பாயக்கூடிய மின்னும் முத்துக்களை, மூன்று வரிசை நூல்களினால் கோத்துத் தலைவி அணிந்த செய்தியை இப்பாடல் கூறுகிறது.
மன்னர்கள் பரிசாகத் தரும் பொன்னாலாகிய தாமரை மலர்களை, வலிமையான நூல் சரடினால் கோர்த்துப் பாணர்கள் தலையில் சூட்டிக் கொள்ளுதலைப் புறநானூறு பதிவு செய்துள்ளது.
""""அழல் புரிந்த அடர் தாமரை
ஐது அடர்ந்த நூற் பெய்து"" (புறம். 284 : 3-4)
அடர்த்தியான நூலைக் கொண்டு பொன் தாமரைகளைக் கோர்த்துள்ளனர். பாடினிகள் பொன்னால் செய்யப்பட்ட கழுத்தணிகளைப் பெற்றுள்ளனர். இக்கழுத்தணியானது நூலிழையினால் கோர்க்கப்பட்டுள்ளதால், இதை """"விழுக்கழஞ்சின் சீர் உடைய இழை"" (புறம். 11 : 12-13) என்றும் """"இழை பெற்ற பாடினி"" (புறம். 11) என்றும் புலவர் கூறுகிறார். தற்காலத்தில் செயின் (ஊhயin) எனக் கூறுவது போல, அக்காலத்தில் தங்க மாலையை ‘இழை’ என அழைத்துள்ளனர். பலவித வண்ண மலர்களை நூலில் கட்டி தார், மாலை கண்ணியாக அணிந்துள்ளனர். தார் என்பது கழுத்திலிருந்து கால் வரை நீண்டு தொங்கும் மலர்மாலை ; மாலை என்பது கழுத்திலிருந்து இடைவரை தொங்கும் மாலை, கண்ணி என்பது தலையில் வளையம் போல் சூடிக் கொள்ளும் மாலை. இம்மூவகைகளிலும் பூக்களைக் கட்டி ஆடவரும் பெண்டிரும் அணிந்துள்ளனர். தார் என்பது தகுதியுள்ளவர்கள் மட்டுமே அணியக்கூடிய ஒன்று. மாலை என்பது அனைவரும் வயது வேறுபாடின்று அணியக் கூடியது. கண்ணி என்பது இளைய வயதினர் கொண்டாட்டங்களின் போது அணியக் கூடியது. தற்காலத்தில் இக்கண்ணியைச் சில மடத் தலைவர்கள் மட்டுமே அணிகின்றனர்.
""""கைபுனை தாரினர், கண்ணியர்"" (பரி. 2: 11)
""""புனைவகை தைஇயினர் பூங்கோதை நல்லார்
தகை வகை தைஇயினர் தார்
வகைவைக தைஇயினர் மாலை ; மிகமிகச்
சூட்டும் கண்ணி"" (பரிபாடல். 20 -23)
""""தார் அணி கொண்ட உவகை தலைக்கூடி"" (பரி. 2 : 6)
தைஇயினர் எனில் ‘அணிந்து கொள்ளுதல்’ எனப் பொருள்படும். தாரையும் மாலையையும் அணிந்து கொண்டு, கண்ணியைத் தலையில் சூட்டிக் கொண்டனர் எனக் கூறுவது அணிதலிலும் வேறுபாட்டை உணர்ந்து தகுந்த சொற்களால் அதை வேறுபடுத்திக் காட்டியுள்ளனர் தமிழர் என்பதை அறியலாம். இவ்வாறு பலவிதப் பூக்களினால் மாலைகளைக் கட்டுவதற்குரியதாக நூலினைப் பயன்படுத்தியுள்ளனர்.

14.கிணற்றுக்கயிறு

கிணறுகளிலிருந்து நீர் இறைப்பதற்கு ஏற்றவகையில் கயிற்றினைப் பாத்திரத்தோடுக் கட்டி பயன்படுத்தியுள்ளனர். இதுவும் முறுக்குண்ட புரிநூலினால் ஆன கயிறு ஆகும்.

""""சிரறு சில ஊறிய நீர் வாய்ப்பத்தல்
கயிறு குறு முகவை"" (ப.ப. 22 : 13-14)

நீரை இறைப்பதற்குரியக் குறு முகவை கிணற்றில் நீர் இறைப்பதற்கேற்ற வகையில் சிறிய வாயினை உடையதாக இருந்துள்ளது. பாத்திரத்தின் வாய்ப்பகுதியில் கட்டப்படும் கயிறு என்பதால் அக்கயிற்றை, ‘நீர் வாய்ப்பத்தல் கயிறு’ என அழைத்துள்ளனர்.

15. கூத்துக்கயிறு

ஆரியர் கூத்து என்ற ஒருவகைத் கூத்து சங்க காலத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது. நீண்ட மூங்கில் கழிகளை நிலத்தில் ஊன்றி, அதன் மேல் பகுதியில் கயிறு கட்டி இரு மூங்கில் கழிகளுக்கு இடையே கட்டப்பட்ட அக்கயிற்றில் ஆடுமகள் நடந்து காட்டும் கூத்தே ஆரியர் கூத்து ஆகும். பொதுமக்கள் கூடுமிடங்களில் இக்கூத்தினை நிகழ்த்தி ஆடுமகள் பிழைப்பு நடத்தியதைக் குறுந்தொகை பதிவு செய்துள்ளது.
""""ஆரியர் கயிறாடு பறையின்"" (குறுந். 7 : 4)
என்ற பாடல் கயிற்றால் ஆடுமகள் நடக்கும் பொழுது பறைக் கருவியில் இசையெழுப்பி வேடிக்கைக் காட்டுவர் எனக் கூறுகிறது.
""""------ ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின்"" (குறி. பா : 193-194)
என்ற பாடலும் கயிற்றின் உதவியால் சிலர் பிழைப்பு நடத்தியதைப் பதிவு செய்துள்ளது.

16. முடிக்கயிறு

போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் தோல்வியடைந்த மன்னனையும், அவன் சுற்றத்தாரையும் பழிவாங்குவதற்காக அவனுடைய குலமகளிரின் தலைமுடியை மழிக்கச் செய்து, மழிக்கப்பட்ட தலைமுடிகளைக் கொண்டு கயிறு திரித்து, அக்கயிற்றினைக் கொண்டு யானைகளைத் தேரில் பூட்டச் செய்து, அத்தேரில் நகர்வலம் வந்துள்ளனர்.
""""பல் இருங்கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி"" (ப.ப. 5ம் பத்து : 16)
கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் என்னும் சேர மன்னன் தான் வென்ற பகைவர்களது மனைவியராகிய குலப் பெண்களின் கரிய கூந்தலைக் கொண்டு திரிக்கப்பட்டக் கயிற்றினைக் கொண்டு யானைகளைத் தேரில் பூட்டச் செய்தான் என இப்பாடல் கூறுகிறது.
நற்றிணைப் பாடல், நன்னன் என்ற மன்னனும் இதைப்போலவே செய்தான் என்கிறது.
""""வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே"" (நற். 270 : 10-11)
இவ்வாறு பகை மன்னர்களை அவமானப்படுத்துவதற்காக வெற்றி பெற்ற மன்னர்கள், பெண்களின் முடிக்கயிறு கொண்டு தேரில் யானையைப் பூட்டியுள்ளனர். நூல்கயிறு போலவே முறுக்கப்பட்டதால் இதனை ‘கூந்தல் முரற்சி’ என்றழைத்துள்ளனர்.

17. வில்ஞாண்

வில்லின் இருபுறமும் கட்டுவதற்குரிய கயிறு ‘வில்ஞாண்’ எனப்பட்டது.
""""கைபுனை வல்வில் ஞாண் உளர் நீயே"" (கலி. 7 : 6)
மெல்லிய வலிமையான ஞாணாகிய கயிற்றைக் கொண்டு தலைவன், தன் கையினால் வில்லின் இருபுறமும் இறுகக் கட்டினான் என இப்பாடல் கூறுகிறது. எனவே, வில்லில் பூட்டுவதற்குரிய கயிறு, ‘வில் ஞாண்’ என அழைக்கப்பட்டுள்ளது.

18. இடைஞாண்

இடையில் கட்டுவதற்கான மெல்லிய உறுதியான கயிற்றை இடைஞாண் என்றழைத்துள்ளனர். சிறுவர் இடையிலும் காலிலும் ஒலி எழுப்பும் கிண்கிணியை ஞாண் கொண்டு அணிந்திருந்தனர் என
 """"கிண்கிணி ஆர்ப்போவாஅடி"" (குறுந். 148) """"கிண்கிணிப் புதல்வர்"" (புறம். 198) முதலான பாடலடிகள் உணர்த்துகின்றன.

19. நுண்கயிறு

கட்டடக்கலை தொழில்நுட்பத்திலும் கயிறு பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசியின் அரண்மனையைக் கட்டும் கட்டடக் கலை நுணுக்கம் அறிந்த தச்சர்கள், மிக நுட்பமாக நூல் பிடித்துப் பார்த்து அளவினை குறித்துக் கட்டடம் கட்டியுள்ளனர். இதை நெல்வாடை கூறுகிறது.
""""நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு
தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்பமனை வகுத்து"" (நெல்நடு : 76-78)

நாள், திசை பார்த்து மனைகள் வகுக்கப் பெற்றன. காலத்தை அறிய கோல்களை நட்டு, அவற்றின் நிழல் அளவு அறிய, கயிற்றைப் பயன்படுத்தி மனை அளவு வகுத்துள்ளனர். நுண்ணிய கயிற்றை இதற்குப் பயன்படுத்தியுள்ளனர்.

பட்டு(silk)

பருத்தி நூலிலிருந்து பல்வேறு தொழிலுக்குரிய கயிற்றையும், ஆடையையும் உருவாக்கிய தமிழர்கள் பட்டை மிகக் குறைவான அளவிலேயே பயன்படுத்தியுள்ளனர். மிக அரிதாகவே அணியக் கூடிய பட்டாடை மன்னர்களும், வசதி படைத்தோரும் மட்டும் அணியக் கூடியதாக இருந்தது. கலித்தொகைப் பாடல் ‘உலண்டு’ எனப் பட்டுப் பூச்சியைக் குறிக்கிறது. உலண்டு என்ற பட்டுப்பூச்சியின் நிறத்தை ஒத்த ஏறு என்னும் காளை மாட்டின் கண்களுக்கு அஞ்சாமல், முல்லை நில இளைஞர்கள் பாய்ந்தனர் என்கிறது இப்பாடல்,

""""உலவை"" (கலி. 11 : 10)

""""மேற்பாட்டு உலண்டின் திறன் ஒக்கும்"" (கலி. 101 : 15)

உலவை என்பது மரக்கொம்பு இதில் கூடு கட்டுவதால், இப்புழுவிற்கு உலண்டு எனப் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

உலண்டு எனும் புழு தன்மேலே கட்டிய கூட்டின் திறன் போல காளையின் கண்கள் இருந்ததாக இப்பாடல் கூறுவதால், இப்புழுவை பட்டுப்புழு எனக் கருதலாம். பட்டுப் பூச்சியிலிருந்து பட்டு எடுக்கும் முறை குறித்து வேறு குறிப்புகளில்லை. ‘நூலாக் கலிங்கம்’ என்று ஒரு ஆடை குறிப்பிடப்படுகிறது. மாமரத்தை ‘பறவாக் கொக்கு’ என்றும், வேங்கை மரத்தை ‘பாயா வேங்கை’ என்றும், காயாம் பூவை ‘பறவாப் பூவை’ என்றும் தமிழர்கள் அழைத்ததைப் போல தக்கினி என்னும் கதிர் கருவியால் நூற்காத நூலிருந்து உருவாக்கப்பட்ட ஆடையை ‘நூலாக்கலிங்கம்’ என அழைத்திருக்கலாம்.
பருத்தி இழையானது கதிர் கருவியால் நூலாக்கப்படும். ஆனால் பட்டுக் கூட்டிலிருந்து நூலை மிகப் பாதுகாப்பாக எடுக்க வேண்டும். மிக மெல்லிய ஒளிவிடும் பட்டு நூல் மிக கருவி கொண்டு எடுப்பது எளிதல்ல. அதை கையாலே பழந்தமிழர் எடுத்திருக்க வேண்டும். எனவே தான் ‘பட்டு ஆடையை’ நூலாக் கலிங்கம் என அழைத்துள்ளனர். இக்கலிங்க ஆடை, பகன்றைப் போன்ற வெள்ளிய நாரால் வெள்ளிய நிறத்தினால் ஆனது என

 """"கழுவுறு கலிங்கம் கடுப்ப சூடி"" (ப.ப. 76 : 13) என மன்னன் அணிந்த பட்டாடையைப் பதிற்றுப்பத்து கூறுகிறது.

""""பொலம்புரி ஆடை"" (பரிபாடல். 3 : 88)
""""பொன்னின் தோன்றிய புனை"" (பரிபாடல். 4 : 59)

போன்ற பரிபாடல் வரிகள் திருமால் பொன்னைப் போல் மின்னுகின்ற ஆடை அணிந்திருந்ததைச் சுட்டுகின்றன. பருத்தி ஆடை மின்னுவதில்லை. பட்டாடையே மின்னக்கூடியது. எனவே, ‘மின்னுகின்ற ஆடை’என்பது பட்டாடையைக் குறிக்கிறது.

பட்டுப்பூச்சி மருத மரத்தின் (கூசைஅiயேடயை ஹசதரயே) இலைகளை உண்ணக்கூடியது. தெற்காசிய நாடுகளில் மிகப்பரவலாகக் காணப்படும் இம்மருதமரம் இந்தியாவிலும் நேபாளத்திலும் மிக அதிகமாகக் காணப்படுகிறது. இது நீர்த்துறைக்கள் உள்ள பகுதிகளில் செழுமையாக வளரக்கூடியது. இதன் பட்டையை உரித்து ஆடையாக உடுத்தியுள்ளனர். இதன் பட்டையை உரித்தால் நார் எளிதாக வரக்கூடியது. இதைத் தற்காலத்தில் சாயம் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். இம்மரத்தைப் பற்றிய ஏராளமான தகவல்கள் சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

""""செம்மருது"" (பொருந. 189)
""""செவ்வி மருதின் செம்மல்"" (குறுந். 50)
""""இருள் புனை மருதின்"" (நற். 330)
""""வையை மருதோங்கு"" (சிலம். 14 : 72)
""""வையை திருமருதம்"" (பரி. பா. 22 : 45)
""""திருமருத முன்றுறை"" (பரி. பா. 7 : 83)

முதலான குறிப்புகள் மருத மரத்தைப் பற்றிய பல தகவல்களைத் தருகின்றன. நீர்க்கரையோரங்களில் செழித்து வளரும் இம்மரத்தின் இலைகளைப் பட்டுப் பூச்சிகள் உணவாக உட்கொள்ளக் கூடியவை (றறற. யசள.பசin.படிஎ) என்பதால், பழந்தமிழகத்தில் பட்டுப் பூச்சிகள் கட்டும் கூட்டிலிருந்து நூலெடுத்து பழந்தமிழர் பட்டாடையைத் தயாரித்துள்ளனர்.

பருத்தி ஆடைகளைக் கஞ்சியில் போட்டு தோய்த்த பின்னரே உடுத்தமுடியும். ஆனால், பட்டு ஆடைகளை கஞ்சியில் போட்டு தோய்க்கத் தேவையில்லை. எனவே பட்டாடையை """"கோபத்தன்ன தோயாப் பூங்கில்"" (திருமுருகு. 15) என்று திருமுருகாற்றுப்படைக் கூறுகிறது. பட்டாடையிலும் சாயம் தோய்த்து அணிந்துள்ளனர். சிவந்த சாயம் தோய்த்த பட்டாடையை முருகன் அணிந்திருந்த செய்தியை இப்பாடல் கூறுகிறது.

""""கதிர்விடு நுண் பூண்"" (புறம். 88 : 4)

சூரியன் போல் மின்னுகின்ற நுண்ணிய நூல் என்பது இதன் பொருள்.
சீனா ‘பட்டின் தாயகம்’ என அழைக்கப்படுகிறது. கி.மு. 3000 ஆண்டுகளிலிருந்தே சீனா பட்டு ஆடைகளை உற்பத்தி செய்து வருவதாக வரலாறு கூறுகிறது. அவர்களுக்கு இணையாகத் தமிழரும் பட்டுப்பூச்சிக் கூட்டைச் சூடான நீரில் போட்டு, அக்கூடு நூலாக மாற்றம் பெறுவதை அறிந்து, அதிலிருந்து நூல் எடுத்து பட்டாடை நெய்து அணிந்துள்ளனர். வாணிகமும் செய்துள்ளனர். திருமணக் காலங்களில் திருமண உடையாகப் பெண்கள் பட்டாடையை உடுத்தியிருந்தனர் என,
""""காதல் கொள்வதுவை நாள் கலிங்குத்துள் ஒடுங்கி"" (கலி. 69 : 3)
கலித்தொகை கூறுகிறது.

தொகுப்புரை

சங்ககாலத் தமிழரின்காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு என தொல்லியல், நாணயவியல், கல்வெட்டியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அக்கால கட்டத்திலேயே பருத்தியிலிருந்து நூல் எடுத்து, கயிறு திரித்து ஆடை நெய்து பல தொழில்களில் தமிழர்கள் மேம்பட்டு விளக்கியுள்ளனர். கயிற்றினைப் பயன்படுத்திப் பல தொழில் நுட்பங்களைக் கண்டறிந்துள்ளனர். கப்பல் கட்டும் தொழில், கட்டடக்கலைத் தொழில், மீன்பிடி தொழில், உள்ளூர் தொழில்கள் போன்றவற்றிற்காக கயிற்றைப் பயன்படுத்தித் தொழில் நுட்பத்தில் மேம்பட்டுள்ளனர்.

பருத்தி நூலைவிட பட்டு நூல் நுண்மையானது. நூலெடுப்பதிலும் சிக்கல் உள்ளது. எனவே தான், பருத்தி இழையிலிருந்து நூலெடுத்து கயிறு திரித்தது போல, பட்டு நூலிலிருந்து கயிற்றை உருவாக்காமல் ஆடை ஒன்றையே உருவாக்கியுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து முத்துமாலைகளும், கயிறு வகைகளும், ஆடை வகைகளும் பிற நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. சீனர்கள் பட்டாடையைப் பயன்படுத்திய அதே காலக் கட்டத்திலேயே, பட்டுப் புழுவிலிருந்து நூல் எடுத்து தமிழர்களும் பட்டாடையை உடுத்தி மகிழ்ந்துள்ளனர்.

 

துணைநூற்பட்டியல்

1.ஆலிஸ் .அ.,(உ.ஆ) - பதிற்றுப்பத்து,நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ் (பி) லிட்.3 ஆம் பதிப்பு - பிப்ரவரி 2007.
2.இளவரசு.சோம.,(உ.ஆ) - நன்னூல் - எழுத்ததிகாரம்,மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
3. சரவணசதாசிவம்., (உ.ஆ) - திருக்கை வழக்கம் - செங்குந்தர் பிரபந்தத் திரட்டு,
            ஒட்டக்கூத்தர் மன்றம்,80/ஏ, திருக்கச்சி நம்பி தெரு,காஞ்சிபுரம் - 631 503.முதற்பதிப்பு - மே 1993.
4. சுப்பிரமணியன்.பெ., - பரிபாடல்,முதலிய மூவர் (உ.ஆ) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
5. செயபால்.இரா.,(உ.ஆ) - அகநானூறு,நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ்(பி)லிட்.3ஆம் பதிப்பு - பிப்ரவரி 2007.
6. தட்சிணாமூர்த்தி.அ.,(உ.ஆ) - ஐங்குறுநூறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
7. தமிழண்ணல்., (உ.ஆ) - தொல்காப்பியம் ,மீனாட்சி புத்தக நிலையம்,மதுரை - 1.முதற்பதிப்பு - 2008.
8.நாகராசன்.வி., (உ.ஆ) - குறுந்தொகை,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.3 ஆம் பதிப்பு - பிப்ரவரி
9. பாலசுப்பிரமணியன்.கு.வெ., - புறநானூறு,முதலிய அறுவர் (உ.ஆ) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
10. பாலசுப்பிரமணியன்.கு.வெ.,(உ.ஆ)- நற்றிணை,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
11. மோகன்.இரா., (உ.ஆ) -பதிற்றுப்பத்து,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

12. விசுவநாதன்.அ.,(உ.ஆ) - கலித்தொகை,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.


இணைய தளங்கள்

1.     (www.ars.grin.gov)
2.     (www.project madurai.org)
3.    (www.wikipedia.com)
2 comments:

  1. தங்களுடை கட்டுரையின் மூலமாக பருத்தியின் அருமையை உணர்ந்து கொண்டேன். இது போன்று சங்க இலக்கிய மாந்தர்களின் உரையாடலில் மோதல்கள் பற்றி இருந்தால் தெரியப்படுத்தவும்

    ReplyDelete
  2. Congrats. Very nice presentation about cotton and Silk.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?