பாசமாக நட்பாக அன்பாக வீரமாக நல்லவராக
தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதுதான்
மனித வாழ்வின் குறிக்கோளா?
யாரோடாவதாது ஒப்பிட்டுப் பார்த்து
ஒரு படி மேலே இருக்க வேண்டுமென்பது கட்டாயமா?
அப்போதுதான் மதிப்பு என ஏமாற்றிக் கொள்கிறோமா?
நான் என்ற அடையாளம் எதுவரை?
நம் மரணம் வரை. அவ்வளவே.
ஒரு பூ, ஒரு காற்று, ஒரு மேகம், ஒருபுழு, ஒரு புல்
அதனதன் போராட்டம் வேறு.
வாழ்க்கைப் பாடு வேறு
மலர்வதற்குள் ஒரு பூவிற்கு எத்தனைப் போராட்டம்?
முளைப்பதற்குள் ஒரு புல்லுக்கு எத்தனை மிதிபடல்?
சிலர் வாழ்வில் தான் எத்தனை போலித்தனம்?
எல்லோருக்கும் எத்தனையோ போராட்டம்.
சிலருக்கு நாமே போராட்டம்.
மகிழ்வதற்கு எத்தனையோ காட்சிகள்
இரசிப்பதற்கு எத்தனையோ நிகழ்ச்சிகள்
இயற்கைத்தரும் போலித்தனமில்லா வாழ்க்கை பெருவரம்
எவ்வளவு முயலுமோ அவ்வளவு முயலுவோம்
இயல்பு நிலை என்பதை நோக்கிய பயணம்பாதுகாப்பானது.
ஆனால் துயரம் நிறைந்தது.
நம்மைத் தெரிந்தவர்களிடம் நிரூபிக்கத் தேவையில்லை
நம்மைத் தெரியாதவர்களிடமும் நிரூபிக்கத் தேவையில்லை
எப்படியும் நம்பப் போவதில்லை என்பதால்...
நம்பிக்கை இருக்கிறதென்றால்
நிரூபிக்கத் தேவையில்லை.
நிரூபிக்கத்தான் வேண்டுமென்றால்
நம்புவதற்கு ஏதுமில்லை.