பௌத்தமும் சேலம் நாட்டுப்புற தெய்வ வழிபாட்டு மரபுகளும் –
மயிலை சீனி. வேங்கடசாமியின் பார்வையினூடே......
மயிலை சீனி. வேங்கடசாமியின் பார்வையினூடே......
முன்னுரை
கிறித்துப் பிறப்பதற்கு முன் தோன்றிய உலகத் தத்துவ ஞானிகளில் மிக உயர்ந்த இடத்தை வகிப்பவர் புத்தர். மனிதர்க்கெட்டாத எந்தத் தத்துவத்தையும் புத்தர் சொல்லவில்லை. வாழ்வியலை நெறிப்படுத்தலும் மக்கள் மனதைப் பண்படுத்துதலுமே அவரின் நோக்கங்கள். புத்தருக்கு சமகாலத்திலிருந்து, கிட்டத்தட்ட கி.பி.11ஆம் நூற்றாண்டுவரை
தமிழகத்தில் கொங்குமண்ணில் பௌத்தம் சிறப்புற்றிருந்திருக்கிறது. புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு
வழிபாடுகள் நடந்துள்ளன. பௌத்த, சமணச் சமயங்கள் 8ம் நூற்றாண்டுக்குப் பின்னர்ப் புறக்கணிக்கப்பட்டு மறக்கடிக்கபட்டுவிட்டன. ஆனால் வழிபாடு செய்யப்பட்ட சிலைகள் சிதைக்கப்பட்டது போக எஞ்சியுள்ளவை
அவை புத்தர்சிலைகள் என்று தெரியாமலே இந்து மதக்கடவுளர்களின் சிறுதெய்வங்களாக வழிபடப்பட்டு
வருகின்றன.