நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Sunday 26 May 2013

ஆய்வு அனுபவங்கள் -2

 

ஆய்வு செய்வது எப்படி?

தொடர்ச்சி.....

2.ஆய்வு நெறிகள்

 

ஆய்வு என்பது தேர்ந்தெடுத்த சொற்களைக் கொண்டு,படிப்பவர் புரிந்து கொள்ளும் வகையில் உரிய தரவுகளைப் பொருத்தமுற அமைத்து பிழையற எழுத வேண்டிய ஒன்றாகும்.  கதை எழுதுவது,கடிதம் எழுதுவது,அறிக்கை எழுதுவது என ஒவ்வொன்றிற்கும் ஒரு மொழி நடை உள்ளது. ஆய்விற்குரிய நடையை எழுதி எழுதிப் பார்த்து, பயிற்சி பெறுவதன் மூலமே கைவசப்படுத்த முடியும். எத்தனை முறை எழுதிப் பார்ப்பது என்றால், ஆய்வு நடையை கற்றுக் கொள்ளும் வரை என்பது தான் சரியான பதிலாக இருக்கும்.

 தலைப்புத் தேர்வு

ஒரு ஆய்விற்குரிய தலைப்பைத் தேர்நதெடுப்பது மிக்க சவாலானது.       முதலில் களத்தைத்(field)(உம். பக்தி இலக்கியம்) தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.ஒருவன் விளையாடுவதற்கு திறமைகள் மட்டும் போதாது. விளையாடும் களமும் இன்றியமையாதது.ஆய்வாளர்  முன்பு பெற்ற பயற்சிகள் அவருக்குரிய களத்தை .தேர்வு செய்ய உதவும்.

சங்க இலக்கிய ஆய்வு மேற்கொள்ள விரும்பும் ஒருவர் உரைகளை மட்டும் நம்பி ஆய்வு மேற்கொள்ளக்கூடாது. சங்கப் பாடல் வரிகளை நேரிடையாகப் படித்து அவை கூறும் உண்மைப் பொருளை நுணக்கமாக அறிந்து கொள்பவராக இருக்க வேண்டும். அற இலக்கியம் எனின் உலகிற்குப் பொதுவானதாகிய அறத்தை  மதக் காழ்பின்றி நடுநிலையோடு  எடுத்துரைக்க தெரிந்திருக்க வேண்டும்.

பழைய இலக்கியங்களில்,தற்காலக் கோட்பாடுகளைப் பொருத்திப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால்,அவ்வக் காலத்திற்கேற்ற நூல்களை அவ்வக்காலத்திற்கேற்ற புரிதலோடு அணுக வேண்டும்.பக்தி இலக்கியத்தில் ஆய்வு மேற்கொள்ள விரும்பும் ஒருவர் அச்சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அச்சமயத்தின் பாற்பட்டு நில்லாமல் நடு நிலையோடு உண்மைப் பொருளை உணர்ந்து, அதை வெளிப்படுத்தக்கூடியவராக இருக்க வேண்டும்.

தற்கால இலக்கியங்களில் ஆய்வு மேற்கொள்ள புதிய புதிய கோட்பாடுகள் கைக் கொடுக்கின்றன.வட்டாரம் அல்லது ஒரு படைப்பாளரின் குறிப்பிட்ட படைப்புகள் என்கிற அளவில் ஆய்வுகள் நிகழ்த்தப்படலாம். ஆனால், ஒரு படைப்பாளரின் படைப்பில் ஆய்வு மேற்கொள்ள நேரும் பொழுது, முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை, அதன் போக்குகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.          

. நெறியாரோடு கலந்து பேசியும், சிறு சிறு கட்டுரைகளை எழுதிப் பயிற்சி பெற்றும் ஒருவர் தனக்குரிய களத்தைத் தீர்மானிக்க முடியும்.ஆய்விற்குரிய களத்தைத் தீர்மானித்த பின்னர் அதில் ஒரு பரப்பினை தேர்வு செய்ய வேண்டும்.

[உம்.பக்தி இலக்கியம்(களம்) -  சைவ சமய இலக்கியம்(பரப்பு)]

பின்னர்,அப்பரப்பினில் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
(உம்.பக்தி இலக்கியம்(களம்) -  சைவ சமய இலக்கியம்(பரப்பு)- பத்தாம் திருமுறை(பகுதி))

 ஆய்வுக்குரிய பகுதியைத் தேரந்தெடுத்தபின்னர், ஆய்வாளர் அந்நூலில் அல்லது தேர்ந்தெடுத்த பகுதியில் இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகள், அதற்கு கொடுக்கப்பட்ட தலைப்புகள் குறித்த தேடலைத் தொடங்க வேண்டும். அப்பகுதியில் அல்லது அந்நூலில் எத்தலைப்புகளில் ஆய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது என அறிவது புதிய தலைப்புகளைத் தெரிந்தெடுக்க உதவும்.அல்லது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் புதிய கோணத்தில் ஆய்வு நிகழ்த்த ஏதுவான தலைப்புகள் கிடைக்கும்.

            ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட ஆய்வு முழுமையான ஆய்வாக இல்லை என்று ஆய்வாளர் கருதினால், அதை இன்னும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பினால், அதே தலைப்பைக் கொடுப்பது ஏற்புடையது அல்ல. ஒரே தலைப்பில் இரு ஆய்வுகள் என்கிற எண்ணத்தைத் தோற்றுவித்துவிடும். .எனவே, ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுத் தலைப்பைத் தேரந்தெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. செய்த ஆய்வுகளையே செய்யாமலிருக்க,  மூலநூலை ஆழ்ந்து படித்து புதிய தலைப்புகளை உருவாக்க முயலலாம்.ஆய்வுத்தலைப்பைத் தேரந்தெடுப்பது சவாலானது மட்டுமல்ல, ஆய்வின் முதுகெலும்பே அதுதான். ஆராய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுத் தலைப்பு ஆய்வினை அழகாக முடித்துக் கொடுத்துவிடும்.உம். திருமந்திரத்தில் உடல் குறித்த சிந்தனைகள்

       பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தில் ஆய்வு மேற்கொள்வதாக இருப்பின் ஆய்வாளர், திருமுறை வரலாறு,சைவ சித்தாந்தக்கோட்பாடு,சித்தர் தத்தவம் போன்றவற்றைப் பற்றி ஓரளவு தெரிந்தவராக  இருக்க வேண்டும். இல்லையெனில் குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்தது போலவும், கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலவும் ஆகிவிடும். தெரியாத பகுதியைத் தேரந்தெடுக்காமலிருப்பதே நல்லது.

         ஆய்வுத் தலைப்பு கை விளக்கு ஒளி போன்றது. ஒளி காட்டும் பாதையில்தான் ஆய்வாளர் செல்ல வேண்டும். தலைப்பே இருட்டு போலத் தோன்றினால் ஆய்வு எவ்வாறு நகரும்? ஆய்வாளர் நின்ற இடத்திலேயே நிற்க வேண்டியது தான்.ஆய்வுத் தலைப்பைத் தேர்நதெடுக்கும் பொழுது  ‘ஓர் ஆய்வு‘ என வரும் தலைப்புகளைத் தவிர்த்துவிடவேண்டும். அது என்ன ஓர் ஆய்வு? எல்லா ஆய்வுகளுமே ஓர் ஆய்வு தான்.உம்.திருமந்திரத்தில் ஓர் ஆய்வு. இத்தலைப்பு எதைப்பற்றி ஆராய்கிறது என்பதில் தெளிவில்லாமல் உள்ளது.

ஆய்வுப் பொருள் பற்றிய ஆய்வாளரின் தெளிவின்மையை இத்தலைப்புகள் காட்டுகின்றன.கருதுகோளைத் தேர்ந்தெடுப்பதில், ஆய்வுச் சிக்கலை வரையறுப்பதில் தலைப்பிற்குப் பெரும் பங்கு உண்டு. ஆய்வாளர் ஒரு பொருளில் ஆய்வு செய்ய விரும்பினால் அது தொடர்பான நூல்களை முக்கியமாக மூலநூலை வாசித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு வாசிக்கும் பொழுதே கருதுகோள் மனதில் உருவாகிவிடும். ஒரு குறிப்பிட்ட கோணத்தில் ஆய்வு மேற்கொள்ளலாம் அல்லது மாறுபட்ட கோணத்தில் ஆய்வு மேற்கொள்வதற்குரிய தரவுகள் உள்ளன என்பது போன்ற எண்ணங்கள் தோன்றும். மூல நூலிலுள்ள அத்தகவல்கள் ஆய்வாளரின் மனதில் ஒரு தலைப்பை உருவாக்கிக் கொடுக்கும்.

        நெறியாளருடன் இணைந்து ஆய்வுச் சிக்கலை வெளிப்படுத்தக்கூடிய வகையில், படிப்பவர் இந்த கோணத்தில்,இந்த நோக்கத்தில் ஆய்வு இப்பொருளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெளிவாக அறியக்கூடிய வகையில் தலைப்பு உருவாக்கப்படவேண்டும். ஓர் ஆய்வு என்பது போன்ற தலைப்புகள், எந்த நோக்கத்திற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது  என்கிற தெளிவை உடையவை அல்ல. ஒரு குறிப்பிட்ட படைப்பாளரின் படைப்பில் ஆய்வு நிகழ்த்தும் ஒருவர், ‘ஓர் ஆய்வு‘ என்ற தலைப்பை இட்டால் அடுத்து வரும் ஆய்வாளர், முன்பு நிகழ்த்தப்பட்ட ஆய்வு எந்த நோக்கத்தில் நிகழ்த்தப்பட்டது என அறியாமல் தடுமாற நேரிடும். எனவே, ஆய்வு அறம் என்பதே தலைப்பை சரியாக தேர்வு செய்வதில்தான் ஆரம்பிக்கிறது .

             உம். வைரமுத்து கவிதைகளில் ஓர் ஆய்வு என்பதை விட,

வைரமுத்து கவிதைகளில் சமூகச் சிந்தனைகள் ,
வைரமுத்துக் கவிதைகளில் நடப்பியல் ,
வைரமுத்துக் கவிதைகளில் குழந்தைத் தொழிலாளர் சிக்கல் ,
வைரமுத்துக் கவிதைகளில் கல்விச் சிந்தனைகள்
முதலான தலைப்புகள் எந்த நோக்கத்திற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அழகாக வெளிப்படுத்தி நிற்பதைக் காணலாம்.

ஆய்வு என்பதே அறிவுபூர்வமாகச் சிந்தித்து மேற்கொள்ள வேண்டிய ஒன்று. தலைப்பு என்பது அதில் மிகவும் இன்றியமையாதது. அதிலேயே தெளிவில்லையெனில் ஆய்வு எப்படி சிறப்பாக நிகழ்த்தப்பட்டிருக்கும்? என்ற ஐயம் ஏற்படுத்தும். தலைப்பு முகம் போன்றது. அகத்தின் அழகு முகத்தில் தெரிந்து விடும். அது போல  ஆய்வாளரின் தலைப்பும் ஆய்வின் நோக்கத்தை,சிக்கலை வெளிக்காட்டி நிற்க வேண்டும்.


  தொடரும்..........