நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday 12 March 2013

புறநானூற்றில் பெண்ணியம்



முனைவர் இரா.சீதா,  தமிழ்த்துறைத்தலைவர்,    தூய பிலோமினாள் கல்லூரி,             மைசூரு.

புறநானூற்றில் பெண்ணியம்

                சங்க கால புறத்துறை வாழ்வியல் நிலைகளை புறநானூறும் பதிற்றுப்பத்தும் உரைக்கின்றன. வரலாற்று நிகழ்ச்சிகள் நேர் வரிசையாக கூறப்பெறவில்லை என்றாலும் அப்பாடல்கள் அக்கால மக்களின் பழக்க வழக்கங்கள், தொழில்முறைகள், பண்பாட்டுக் கூறுகள், கல்வி முதலியனவற்றை விளக்குகின்றன. இதில் பெரும்பான்மையான பாடல்கள் பல மன்னர்களையும் குறுநிலமன்னர்களையும் அவர்களின் வீரம், கொடை போன்றவற்றை விரிவாகப் பேசுகின்றன. சில பாடல்கள் அகத்திணை சார்ந்த தன்மையைக் காட்டினாலும் மன்னனின் பெயர் வெளிப்படையாக கூறப் பெற்றதால் அப்பாடல்கள் புறப்பொருளைச் சார்ந்து அமைக்கப் பெற்றுள்ளன.
சங்க காலத்துப் பாடல்களைப் பாடிய பெண்களாக
                அவ்வையார், மாறோகத்து நப்பசலையார், மாறிப்பித்தியார், ஒக்கூர் மாசாத்தியார், காவற்பெண்டு, குறமகள் இளவெயினி, தாயங்கண்ணியார், பாரிமகளிர் பூங்கண் உத்தியார், பெருங்கோப்பெண்டு, பேய்மகள் இளவெயினி, வெண்ணிக்குயத்தியார், வெறிபாடிய காமக்கண்ணியார், பொன்முடியார், அள்ளுற் நன்முல்லையார், காக்கை பாடினியார், நச்செள்ளீயார், முடத்தாமக் கண்ணியார் போன்ற பெண்பாற்புலவர்களைப் பார்க்கலாம். இவர்கள் மன்னனைப் புகழ்ந்து பாடுவது மட்டுமல்லாமல், அவனோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்தமையையும் காணலாம்.
                இது ஒரு பக்கம் இருந்தாலும் எல்லா நேரங்களிலும் மன்னரையே புகழ்ந்து பாடுவது மட்டுமல்லாமல், மன்னன் தவறு செய்ய அவனை சரியான வழி நடத்திய பாடல்களையும் நாம் இதில் பார்க்கலாம். உதாரணத்திற்கு, பாண்டியன் அறிவுடைநம்பிக்கு பிசிராந்தையார் கூறும் பாடல் புகழ் பெற்றதாகும்.
                                """"காய் நெல்லறுத்துக் கவளங் கொளினே                                  மாநிறைவில்லது பன்னட்காகும்...’’
புறநானூற்றுப் பாடல்களில் இடம் பெறும் பெண்கள் எத்தகையவர்?
1. குல பெண்கள்
2. தொழில்செய்யும் பெண்கள்
3. கலைப்பெண்கள்
இவர்களில் விறலியர் மற்றும் பாடினியர் என்ற இரு வகையைப் பார்க்கலாம்.
                குல பெண்களில் கணவனுடன் இருக்கும் பெண்கள் மற்றும் கணவனை இழந்த பெண்கள் என்ற இருவகை உள்ளது.
                கணவனை இழந்த பெண்களின் அவலநிலை சொல்லி முடியாதது : எத்தனை வேதனை?
                அவர்கள் தம் உணவு சுருக்கியது மட்டுமல்லாமல், அணிகலன்களைத் துறந்து வாழ்ந்தனர். அல்லியரிசி உண்டனர்.
கொய்தல் கட்டழிந்த வேங்கையின் மெல்லியல் மகளிரும் இழைகளைந்தரே
சிறுவெள்ளாம்பல் அல்லி உண்ணு கழிகல மகளிர் போல
இதை தாண்டி, பூதப்பாண்டியன் இறக்க, அவன் மனைவி பெருங்கோபெண்டு தீயில் பாய்ந்தாள்.
கணவனை இழந்த பெண்களுக்கு தீயும் குளமும் ஒன்றே.
                                """"பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற                           வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை                                            நள்ளிரும் பொய்கையும் தீயும் ஒரற்றே’’
புறநானூறு பெண்கள் வேலைகளாக கூறுவன யாவை?
1.             விருந்தினர்களுக்கு தெவிட்டாத உணவைத் தருதல்
2.             விருந்தினர் போற்றல்
3.             பெண்கள் மது கொடுக்க மற்றவர் அருந்துதல்
4.             பெண்கள் பெரிய தாலத்தில் நிலக்கடலை வறுத்தல் ; அதை குடிதொறும் கொடுத்தல்
5.             நீரிலிருந்து பூ பறித்தல், மண்ணிலே சிறு வீடுகட்டி விளையாடுதல்
6.             குளத்திலிலே நீராடுதல்
பெண்கள் நீரில் அல்லது நிலத்தில் விளையாடுதல் பல பாடல்களில் கழங்காட்டம் ஆடுதல் என்பது குறிக்கப்பெற்றுள்ளது.
சில விசேஷ செய்திகள்:
இதை தாண்டி பெண்கள் செயலாக
க. குமரிப் பெண்களாக இருந்தால் வீரம் நிரந்த ஆண் மீது காதல் கொள்ளுதல்
உ. குடும்பப் பெண்களாக இருந்தால், அதாவது திருமணம் ஆன பெண்களாக இருந்தால், வீரத்துடன் போராடி இறத்தல் எனும் பண்பு நமக்கு இல்லையே என போரிலே இறந்த வீர ஆண்களை நினைந்து அவர்கள் மகிழ்ச்சியில் ஏங்கி அழ, (எமன் வெட்கம் அடைந்தான் என்று பாதல் குறிப்பிடும்)
ங. கணவனைப் பிரிந்த பெண்கள் கீரை உணவு உண்ணுதல், குளிர்ந்த நீரில் மூழ்குவர்
                ஒரு பாடலில் தன் மனைவி குழந்தை பெற மன்னன் அவள் அருகில் இருந்து அவளுடைய மெய்நோவுக்கு உதவினான் என்ற குறிப்பு உள்ளது.
                இதை தாண்டி மன்னன் பரத்தமை ஒழுக்கம் புரிந்தவனாகவும் காட்டப்பட்டுள்ளான்.
இனி பெண்களின் நிலைகளாக சில பாடல்களைப் பார்ப்போம்:
க. பரிசிலுக்காகக் காத்திருத்தல்:
                பரிசிலுக்காக காத்திருத்தல் வேறு. குறிப்பிட்ட மன்னன் பரிசில் தராமல் காலம் தாழ்த்தும் போது தன் அவல நிலை கூறும் புலவரின் நிலை வேறு.
                பெருஞ்சித்திரனாரை நாம் எல்லோரும் அறிவேம். அவர் பண்பு மிகவும் போற்றப்பட்ட ஒன்று.  ஆனால், ஒருமுறை குமணன் பரிசில் கொடுக்க காலம் தாழ்த்திய போது தாள இயலாது அவர் கூறுவது இது;
                                """"வாழு நாலோ டியாண்டு பல உண்மையின்                                     தீர்தல் செல்ல தென் னுயிரைப் பல புலந்து                                 கோல்காலாகக் குறும்பல வொதுங்கி                                          நூல் விரித்தன்ன கதுப்பினள் கண்டுயின்று                                     முன்றிற் போக முதிர்வினள் யாயும்!’’
தாய் மிகவும் வாயதானவள். தனக்கு இறப்பு நேரவில்லையே என வருந்துபவள். மக்கள் பசியால் வாடுகின்றன. இதை தாண்டி, உப்பு வாங்க இயலாத வறியநிலை. அந்த நிலையிலும் குப்பை மேட்டில் விளைந்த கீரையில் இளையதாகப் பிரித்து வைத்து சமைக்கும் என்னை சமைக்கும் என்னை விரும்பும் என் விரும்பும் என் மனைவி என்று ஒரு பட்டியலில் தருகிறார்.
                இப்பாடலின் பொருள் """"என் நிலைமை மிகவும் மோசமானதுதான். இருந்தாலும் நீ முகம் மாறி கொடுக்கும் சிறிது குன்றியும் கொள்வல் (குன்றுமணி) என்று கூறடிகிறார். வயதாகிவிட்டது, உயிர் பிரியவில்லை என்று வேதனைபடும் தாயைப் பார்க்கிறோம்!
                கற்பிலே சிறந்த மனைவியையும் பார்க்கிறோம்! மிக மோசமான நிலைமை ஏற்பட்டபோதும் மானத்துடன் வாழத் துடிக்கும் குடும்பமாக புலவரின் நிலையை பாடல் விவரிக்கிறது.
                அவரின் குழந்தை பசியால் வருந்தி அழுகின்றது. தாயவள், நிலவைக் காட்டுகிறாள். புலி என சொல்லி அச்சமூட்டுகிறள். இதை தாண்டி உன் தந்தை வந்தால் உன் கோப முகம் காட்டு என்று பல பட பேசுகிறாள். சமாதானம் செய்கின்றாள். இருந்தும் பசியால் அம்மழலை துடிகின்றது.
                சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பணிந்து நின்று பாடும் பேய்மகள் இளவெயினி கூறுவது :
                நீ பகைவர்கள் போர்களத்திலிருந்து தப்பி ஓடியதைப் பார்த்தாய். உன்னைப் புகழ்ந்து பாடிய பாடினியும், பாணனும் பரிசில் பெறார்கள். பாடல் முடிகிறது. இதில் தனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்ற குறிப்பினைப் பெறுகிறோம்.
பாடல் வரிகள் :
                """"விறல் வேந்தனும்மே...                                                மறம் பாடிய பாடினியும்மே...                                              பாண்மகனும்மே...’’
என்று உம்என்று அழுத்தம் கொடுத்துப் பாடுவதால் அவரிடத்தில் ஒரு எதிர்பார்ப்பு தெரிகிறது. இது சற்று வேதனையான விஷயம்தான். பரிசிலுக்காகக் காத்திருப்பதைப் போல வலி எதுவுமில்லை.
இவர் மட்டுமல்ல, அவ்வையாரின் நிலையையும் பார்க்கலாம்:
அதியமான் பரிசில் கொடுக்க காலம் தாழ்த்துகிறான். தன்னைத்தானே சமாதானம் செய்துக் கொள்கிறார் அவர்.
                """"ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்                                பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்                                 தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ                                    --- அதியமான் பரிசில் பெருங்காலம்                                 நீட்டினும் நீட்டாதாயினும் யானை போலக்                                  கையகத்தது அது பொய்யாகாதே                                           அருந்தே மாந்த நெஞ்சம்                                               வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே’’
மனமே நீ வருந்த வேண்டா என்று கூறினாலும் இப்பாட்டு புலவரின் ஏமாற்றத்தைப் பதிவு செய்திருக்கிறது. இது அதியமானின் சற்று கவனமின்மை அல்லது பொறுப்பின்மைக்கு ஒரு சான்று  எனக் கொள்ளாலாமே. இதில் பரிசில் கொடுக்கக் கூடிய காலம் தாழ்த்தப்பட்டிருக்கிறது. அவ்வையார் தனிப்பட்டவர் அல்லர். அவரைச் சுற்றி ஒரு சமூகமே இயங்கிக் கொண்டிருந்தது. புலவர்கள் தனக்கு கிடைத்த பரிசை ஓம்பாது உண்டு மனம் கூம்பாது வீசும் வகையைச் சார்ந்தவர்கள். இதில் பெண் புலவர்களின் நிலையும் சற்று வேதனை மிக்கதுதான். மிக உச்சக்கட்டமாக எத்திசை செல்லினும் அத்திசை சோறேஎன்று கூறியவர் இல்லையா அவர்.
                ஆனால் இதே அவ்வையார்தான் பரிசில் பெறுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் இன்னொறு விறலியை ஆற்றுப்படுத்துகிறார். அவர் அந்தப் பெண்ணை அதியமானிடம் செல்லும்படி வழியும் கூறுகிறார்.
                                """"கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் எனச்                                சுரன் முதல் இருந்த சில்வளை விறலி                                           செல்வையாரின் சேணோன் அல்லன்......                                  வறத்தற் காலையாயினும்                                                 புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே
அவன் வேறு யாருமல்லன். அவர்தான் பகைபுலத்தோன் பல்வேல் அஞ்சி!
புறப்பாடல்களில் பரிசிலுக்காக பெண்கள் காத்து நிற்கும் நிலையை இப்பாடல்கள் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றன.
உ. மன்னனின் திறமையைப் போற்றும் தன்மை:
                அவ்வையாரின் பல பாடல்கள் இதற்குச் சான்றாக விளங்குகின்றன.
             அதியமான் மிகுந்த திறமை படைத்தவன் என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் அவ்வையார். ஒரு நாளைக்கு எட்டு தேர் செய்யும் தச்சன் ஒரு மாத காலம் முயன்று திட்பமுடன் தேர் சக்கரம் செய்தது போன்ற வலிமை உடையவன் அஞ்சி.
             பகைவர்களைப் பார்த்து கூறுகிறார். நீங்கள் முன் அணிப்படையையும் பின் அணிப்படையையும் கொண்டு போர் செய்வோம் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். காரணம் அஞ்சியைக் கண்டால் அஞ்சி ஓடுவீர்கள்.
""""கூழைதார் கொண்டு யாம் பொருதும் என்றல் ஓம்புமின்......’’
மன்றில் உள்ள முழவில் காற்றால் அசைவு ஏற்பட அது போர்பறையினது ஓசை என்று நினைத்து மகிழும் மன்னன் அஞ்சி.
             அஞ்சியைப் பார்த்து சொல்கிறார்: மன்னனே நீ போரில் விழுப்புண் பட்டு நிற்கிறாய். பகைவர்களோ உன்னால் கொல்லப்பட்டு இறந்தனர். இனி நீ எங்கே சென்று போர் புரிவாய்?
             நீ சிவனைப் போல நீண்ட காலம் வாழ்க! நெல்லிக்கனி (கொடுத்ததற்காக)
             யானயைக் குளிப்பாட்ட அது இனிமையான முறையில் தன் உடலைக்காட்டிக் கொண்டிருக்கும். அதுபோல் அஞ்சியும் இனிமையானவன்.
             அதியனமானின் கொட்டிலில் உள்ள படைக்லங்களின் முனைமுறிந்து உள்ளன.
அவ்வையார் அஞ்சியை மட்டுமல்லாது அவருடைய மகன் பொகுட்டெழினியையும் சிறப்பு செய்து பாடியுள்ளார்:
                பொகுட்டெழினி மீது பெண்கள் காதல் கொள்வர்.(அவன் வீரம் கருதி) பகை நாட்டை வெற்றி கொள்ளுவதால் அங்குள்ள யானைகள் எழினியில் நாட்டில் உள்ள நீர் நிலைகளில் நீர் அருந்தும். அதனால் தண்ணீர் பாழாகும் என்று மக்கள் அவன் மீது கோபம் கொண்டனர்(அவன் வெற்றிச் சிறப்பு)
சற்றே மாறுதலுடன் காணப்படும் பாடல்கள்:
ங. புலவர் தன் காதலை வெளிப்படுத்துவது ; இது கையறு நிலை என்றாகிறது:
                சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளியின் மீது நக்கண்ணையார் காதல் கொண்டார்.(அகம் என்றாலும் பெயர் வெளிப்பட்டதால் இது புறம் ஆயிற்று என்பர்).
             என் கை வலை கழலுகின்றன. என் தாயை நினைந்து அஞ்சுவேன்.
             நற்கிள்ளியைத் தழுவ நினைக்கின்றேன். ஆனால் ஊர் என்னை பழித்துப்பேசும். ஆகையால் இந்த ஊர் என்னைப் போல பெருவிதுப்புறுக’. (நான் படும் வேதனையை இவ்வூரும் அனுபவிக்க வேண்டும் என்றவாறு)
அடுத்த பாடலில், தன் நிலையும் பகைவர் நிலையும் ஒன்றே என்கிறார். கிள்ளி வறியவனாக இருந்தாலும் அவன் வலி மிகுந்த தோளை உடையவன். நான் அவனை பலமுறை காணும் நிலையில் இருந்தாலும் அவனை அடையப் பெறேன். போரிலே பகை வீரர்களுக்கும் வருத்தம் தருகிறான். எனக்கும் தருகிறான். (அவர்களுக்கு உடலிலே காயம்-- எனக்கு மனதளவிலே மிகப் பெரிய காதலையும் அது நிறைவேறாமல் போகுமோ என்ற வேதனையும் தருவதால் இருவருக்கும் வேதனை என்பதாயிற்று).
             அவன் போரிலே வெற்றி பெற இவருக்கும் அது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
                                """"ஆடு ஆடு என்ப ஒரு சாரோரே                                         ஆடன்று என்ப ஒரு சாரோரேர                                         ----யான் கண்டனன் அவன் ஆடாகுதலே’’
தன் மகிழ்ச்சியைக் கட்டுபடுத்த இயலாமல் பக்கத்தில் உள்ள போந்தை மரத்தை பொருந்தி நின்று அவன் பெற்ற வெற்றியை தான் பெற்றதாக எண்ணி மகிழும் உளப்பாங்கு னோக்கிற்குரியது.
ச. வீரம் எனலாமா அல்லது வீரத்தினூடே வெளிப்படும் சோகம் எனலாமா?
                காவற்பெண்டு (செவிலித்தாய்) - இவர் பாடிய பாடல் மிகவும் சிறப்பு பெற்றது எனலாம். பாடலில் ஒரு பெண் வீட்டின் அழகிய தூணைப் பற்றிக்கொண்டு நின் மகன் யாண்டுளனோ?’ என்று வினவுகிறாள்.
                                """"என்மகன் யாண்டுளன் ஆயினும் அறியேன்                                     புலி சேர்ந்து போகிய கல் அளை போல                                   ஈன்ற வயிறோ இதுவே                                             தோன்றுவன் மாதோ போர்களத்தானே!’’
மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது வீரத்தாயின் பெருமை என்பது போலத் தோன்றம். உண்மை. இருந்தாலும் இப்பாடலின் ஊடாக ஒரு வேதனை இழை ஓடுவதை மறுக்க முடியாது.
1.             பெண் என்பவள் ஒரு மகனுக்கு பிறப்பு தர வேண்டும் என்பது இக்காலத்திலும் நெருக்கப்படுகின்ற நிதர்சனம்.
2.             அவன் வீரம் மிக்கவனாக இருக்க வேண்டும். போரில் ஈடுபட வேண்டும். மகனாகப் பிறந்தாலும் தாயின் கடமை அவனைப் பெறுவதுடன் நின்று விடுகிறது.
3.             மகனின் எப்படிப்பட்ட நிலைக்கும் தாய் என்பவள் தயாராக இருக்க வேண்டும்.
4.             குகையின் கடமை புலிக்கு இடம் அளிக்க வேண்டும். அதை போல தாயின் வயிரும் அவன் பிறக்கும் வரையில் ஒரு தகுந்த பாதுகாப்பு தர வேண்டும். புலி போகும்; வரும் - அதை போல மகனும் வரலாம். இல்லை அவள் அவனை துறக்க தாயாராக இருக்க வேண்டும். யோசித்துப் பார்க்கையில் தாயின் மன வேதனை புரியும்.
அறியேன்.. ஈன்ற வயிறோ இதுவே...
யாண்டுளன் ஆயினும் அறியேன்..
                அறியேன் மற்றும் ஈன்ற வயிறோ இதுவே போன்றவை ஒரு தாயின் வேதனை மிகுந்த சொற்கள்.
                பொன்முடியார் பாடலில் இடம் பெறும் சொற்கள் இதற்கு இன்னும் அழுத்தம் கொடுக்கும்:
                                """"ஈன்று புறன்தருதல் என்தலைக் கடனே                                   சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே’’
                இங்கு ஒவ்வொருவரின் கடமைகள் பேசப்பட்டதைப் போலத் தோன்றினாலும் தாயின் மறுபக்கத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்.
                குறளின் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் என்ற கூரல் தாயின் இன்ப நிலையைக் கூறினாலும் பெற்ற தாய்க்கும் மகனுக்கும் இடையே ஏற்படுகின்ற இடைவெளியைத் தாய் மட்டுமே செரித்தாக வேண்டும். ஏற்றுக்கொண்டாக வேண்டும் அது சமுதாயம் அவளிடத்தில் அவளின் சம்மதம் சேட்காமலே திணிக்கின்ற ஒன்று.
                அறியேன்.. போர்க்களத்தானே என்ற சொற்களைப் பாருங்கள். அவளிடத்தில் யாரும் எதற்கும் சம்மதம் கேட்கவில்லை. பிறந்தது ஆண் என்றால் அது சமுதாயத்திற்கு நாட்டை காப்பதற்கு... போரிலே ஈடுபடுவதற்கு என்றாகி விட்டது. இதில் அவளின் இழப்புகளைப் பற்றி சமுதாயம் பெரியதாக கவலை படப் போவதில்லை. மனதின் ஓரத்தில் வேதனை இருந்தாலும் வீரம் மிகுந்தவள்என்பது போல் வாழ்ந்தாக வேண்டும். இல்லையென்றால் எதற்கு யாண்டு உளன் ஆயினும் அறியேன்என்ற வேதனை மிக்க சொற்கள்.
                புலி குகையை விட்டு நீங்கிய பிறகு அதற்கு அழகு, பெருமை கிடையாது. அதை போல, என் மகன் பிறந்தான் என்னை விட்டு பிரிந்தான்.. இனி இந்த வயிறு அழகிழந்து குகையைப் போலத்தான் என்ற உள் அர்த்தம் வெளிப்படுகிறது.
                நான் தான் அவனை போர் செய்ய அனுப்பினேன் என்பது வேறுநிலை. இங்கே அவளுக்கு அவள் மகனின் நிலை தெரியாது. அவன் போர்களத்தில் இருக்கலாம் என்ற ஒரு யூகம் உள்ளது. அதற்கு வீட்டின் நிலையும் காரணமாக இருக்கலாம். அவள் போரிலே தன் கணவனை இழந்த பெண்ணாகவும் இருக்கலாம். தன் மகனின் ஆண்மைத்தன்மையை ஏற்றிச் சொல்லும் அதே நேரத்தில், அந்த தாயின் தன் மகனைப் பற்றிய மன வேதனையும் புலப்படுகிறது.
ரு. மன்னன் தவறு செய்வானா? பரத்தை ஒழுக்கம் உடையவனாக இருப்பனா?
                வையாவிக் கோப்பெரும் பேகன் தன் மனைவியை விட்டு பிரிந்து உற்பரத்தையரிடம் தொடர்பு கொண்டு புற ஒழுக்கம் உடையவனாக இருந்தான். கபிலரும் பரணரும் அவனைத் திருத்த முயன்றனர். அவன் மனைவி கண்ணகியின் நிலை பரிதாபத்திற்குரியது.
                                """"கைவள் ஈகைக் கடுமான் பேக!                                          யார்கொல் அளியள் தானே...                                             நின்னும் நின் மலையும் பாட இன்னாது                                  இகுந்த கண்ணீர் நிறுத்தல் செல்லள்                                        முலையகம் நனைப்ப விம்மிக்                                             குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே!’’
அவளின் வேதனை மிகப்பெரியது. குளிரால் நடுங்கிய மயிலுக்கு போர்வை போர்த்தியவன் தன் மனைவியை எப்படி துறக்க முடிந்தது! இன்னொரு பெண்ணை நாடி போக முடிந்தது. இது அறியாமையா அல்லது அகங்காரமா? குழல் இணைவது போல என்பது பாடல் வரி குழல் இரங்கி ஒலிப்பது போல அவள் அழுதாள்.
                                விம்மி விம்மி அழுதாள் எப்படிபட்டது?
                மன்னனின் மனைவி மற்றவர் பார்க்க அழுவது என்பது கேவலமானது. உண்மையாக பார்க்கப் போனால், மனைவி மற்றவர் பார்க்கப்போனால், தலைவனின் பரத்தமைத் தன்மை எப்படிபட்ட மனவலிமை உடைய பெண்ணையும் தாக்கும். அதுவம் உயர் குடியில் பிறந்த பெண்களுக்கு வீரத்தைக் காட்டிலும் இன்னும் அவமானத்தைச் சேர்க்கும். ஒரு நாட்டின் மன்னனின் மனைவிக்கு இந்த நிலை என்றால் அதைவிட வேறு ஏழ்மையான நிலை தேவையில்லை.  இங்கே செல்வத்தின் தன்மை அது இருப்பதனால் வரும் செருக்கு அனைத்தும் இந்த ஒரு குணத்தினாலேயே சுக்கு நூறாக நொறுங்கிப் போகும். பாழ்ப்பட்ட பண்பு ஒருவனது குடியை, அவன் பெருமையைக் குலைக்கும்.
                பரணர் பாடல் பேகனின் சிறுமைக்கு இன்னும் வலு சேர்க்கிறது!
                மன்னனே! எம்முன் ஒரு இளைய பெண் அழுது கொண்டிருந்தாள். நீ பேகனுக்கு உற்வோ என்றோம்?
                                """"கிளையை மன் னெம் கேள் வெய்யோற்கு என..                          முகைபுரை விரலின் கண்ணீர் துடையா                                     யாம் அவன் கிளைஞரெம் அல்லேம் கேள் இனி                             எம்போல் ஒருத்தி நலன் நயந்து என்றும்                                   வரூஉம் என்ப வயங்கு புகழ் பேகன்                                        ஒல்லென ஒலிக்கும் தேரொடு                                              முல்லை வேலி நல்லூரானே’’
புலவருக்கு பரிதசில் பெரிதா? கடமை பெரிதா?
                பரணர் இவ்வாறு கூற அறிவிழந்த பேகன் அதனை ஒரு பொருட்டாகக் கருதாமல் அவருக்கு பரிசில் வழங்க முனைந்தான். அதைக் கண்ட பரணர்,
                                """"பசித்து வாரெம் பாரமும் இலமே...                                      யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள் இனி                             எம்போல் ஒருத்தி நலன் நயந்து என்றும்                                  வரூஉம் என்ப வயங்கு புகழ் பேகன்                                        ஒல்லென ஒலிக்கும் தேரொடு                                        முல்லை வேலி நல்லூரானே’’
கண்ணகியின் துன்பத்தைப் போக்க வேண்டும். அதுவே நாம் வேண்டும் பரிசில் என்றார்.
                இவர்களைத் தாண்டி அரிசில் கிழார் என்ற புலவரும் பேகனுக்கு அறிவு புகட்ட முயன்றனர்.
                                """"நின் அருங்கல வெறுக்கை                                              அவைபெறல் வேண்டேம் அடுபோர் பேக..!                                  நன்னாடு பாத என்னை நயந்து                                        பரிசில் நல்குவையாயின் குரிசில் நீ                                        நல்காமையின் நைவர சாஅய்                                             அருந்துயர் உழக்கும் நின் அரிவை..
                                தண்கமழ் கோதை புனைய                                                வண்பரி நெடுந்தேர் பூன்க நின் மாவே!’’
ஆகையால் பரத்தமை தன்மை என்பது மன்னனுடைய வாழ்க்கையிலும் இருந்தது என்பது தெளிவாகிறது. ஒரே ஒரு வித்தியாசம்! மன்னன் தவறு செய்தால் அதை கண்டிக்க புலவர்களோ மற்ற சான்றோர்களோ இருந்தனர். சாதாரண மக்கள் வாழ்க்கையில் அத்தன்மை இருந்தால் அதற்கு சமுதாயம் அங்கீகாரம் கொடுத்து விடுகிறது. எவ்வித மறுப்பும் காட்டுவதில்லை.
எ. பாரிமகளிரின் நிலைமை - மன்னன் இறந்து பட்டால் அவன் மக்களின் வாழ்க்கை நிலையும் சரியும்?
                எப்படிபட்ட உன்னதமான நிலையிலிருந்தாலும், ஒரு சரிவு ஏற்பட்டதெனில் வாழ்க்கையில் அதைவிட வேறு அவலம் தேவையில்லை என்று கூறலாம்.
தொல்காப்பியம் அவலத்தின் நிலைகளாக:
                இழவே, இளிவு,அசைவு, வறுமை என்று கூறும்.
                அசைவு என்பது வாழ்க்கையின் உச்சக்கட்டத்திலிருந்து ஏற்படும் மிகப் பெரிய சரிவு எனலாம். உதாரணமாக கோவலனின் நிலை மற்றும் இராவணனின் வாழ்க்கை எனக் கூறலாம்.
                புறநானூற்றிலும் இத்தகைய வாழ்க்கைக்கு பஞ்சமில்லை. மிகப்பெரியதாகப் பேசப்பட்டவன் பாரி. கபிலரின் தூய நட்பு இதை பறைச்சாற்றும். அவன் இறந்த பிறகு கபிலர் பாரியின் மக்களை, திருமணம் செய்விப்பதற்காக ஒவ்வொரு ஊராக அழைத்துச் செல்கிறார். என்ன வேதனை! எவ்வளவு அவமானம்?
                பாடல் 200 நெஞ்சை உருக்க வல்லது: கபிலர் விச்சிகோவினிடத்தில் கூறுகிறார். இத்தனை நாள் நீ  எனக்குக் கொடுத்தாய். இப்பொழுது நான் கொடுக்க நீ பெற்றுக் கொள்வாய்:
                                """"கறங்கு மணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த                          பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர்                                         யானே பரிசிலன் மன்னு மந்தணனீயே..                                   நினக்குயான் கொடுப்பக் கொண்மதி..’’
அவன் பாரி மகளிர் ஏற்றுக் கொண்டானா? இல்லையே! கொடுப்பது யார்? மிக்க சிறப்பு பெற்ற கபிலர். தமிழ் உலகம் போற்றும் கபிலர். புலவர் பாடினால் என்ன? தந்தால் என்ன? பொருள் யார்? பாரி மகளிர் ! தந்தையின் நிலை கேவலம்.. அவன் கொல்லப்பட்டான்! ஆகையால், தந்தையின் நிலை சீர்கெடும் போது, அவனுடைய மக்களுக்கு அவலம் தான் உண்டாகும் என்பதை இப்பாடல் மெய்ப்பிக்கிறது. அவன் மக்களை ஏற்று காப்பார் இல்லை.
                கபிலர் மனம் சோர்ந்து விடவில்லை. மக்களுடன் இருங்கோவேளிடத்தில் செல்கிறார்.
                                """"நெடுமாப் பாரி மகளிர் யானே                                           தந்தை தோழ னிவரென் மகளிர்                                       அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே..                                நீயே.. யான் தர இவரைக் கொண்மதி!’’
இப்பாடலில் கபிலர், பாரியையும் புகழ்ந்து, இருங்கோவையும் புகழ்கிறார். அவன் அதை பற்றி கவலை கொள்ளவில்லை மிகத் தீர்மானமாக அவனும் மறுக்கிறான். மிக்க வேதனை கொண்டவராக, இவர் கைவண் பாரி மகளிர் என்ற என் தேற்றாப் புன்சொல் நோற்றிசிற் பெரும! என்கிறார். விடுத்தெனன் என்று விடை பெறுகிறார்.
                இதைவிட தந்தையின் இறப்புக் கண்டு பாரி மகளிர் பாடும் பாடல் உள்ளத்தை உருக வைப்பது. அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் என்ற பாடலை யாரால் மறுக்க இயலும்? அ.சற்றே மாறுதலாக வீட்டில் கணவன் இல்லையென்றால், மனைவி விருந்தினர்களைப் போற்றத் தயங்கவாள் என்பது சங்க கால நிலைகளில் ஒன்று.
                உதாரணமாக, கோவலனிடத்தில் கண்ணகி பேசும் பொழுது விருந்தினர்களைப் போற்ற முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டால் என்பதைப் பார்க்கிறோம். சீதையும் இராமனைப் பற்றி நினைக்கையில் விருந்து கண்டு என்னுறுமோஎன விம்மினாள் என்பதாக கம்பர் கூறுவார்.
                மாறாக புறநானூற்றில் ஒரு பாடலில் (கருக) இளவிச்சிகோவினடத்தில் பெருந்தலைச்சாத்தனார் கூறுவது இது.
                கணவன் பொருளுக்காக சேட்புலம் சென்றால், மனைக்கிழவி தன் தகுதிகேற்ப
மற்றவர்க்கு பொருளைக் கொடுப்பர். அது அவருடைய கற்பின் மாண்பு என்று பாராட்டுகிறார்.
                                """"கிழவன் சேட்புலம் படனிரிழை யணிந்து..                                 பெண்டிரும் தம்பதம் கொடுக்கும்’’
இப்பாடல் எதற்காகப் பாடப்பட்டது என்றால் அவையிலே இளங்கண்டீரக்கோவும், இளவிச்சிகோவும் இருக்க சாத்தனார் முன்னவரை மட்டும் தழுவி பின்னவரை விட்டு விட்டார். அதற்கு அவர் கூறும் காரணம் பின்னவர், நன்னன் மரபைச் சார்ந்தவன் என்பதனால் தழுவவில்லை என்றவாறு. தவறு செய்தவனை தண்டிப்பது மட்டுமன்று. அவனுடைய மரபைச் சார்ந்தவர்களையுமே சற்று ஒதுக்கி விடுவதை இதன் மூலமாகப் பார்க்கிறோம். மேலும், கணவன் வீட்டில் இல்லையென்றாலும் மனைவி தன் கடமையை ஆற்றும் பண்பும் இதன் மூலம் பெறப்படுகிறது.
                இதுபோல பல உதாரணங்களின் பாடல்களின் மூலம் நாம் ஒரு முடிவுக்கு வரலாம்.
                புறநானூற்று பாடல்கள் சங்க கால மக்களின் வீரத்தை மட்டுமல்லாது அவர்களின் வேதனை, மனவருத்தம், அவமானம் போன்ற பலவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கிறது எனலாம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?