கலைஞரின் சிறுகதைகள் காட்டும் சமூகம்
முன்னுரை
தன்னிகரற்ற அரசியலாளர், மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், பாடலாசிரியர், நடிகர், நிர்வாகி, பத்திரிக்கையாசிரியர் வெளியீட்டாளர் என்று பன்முக ஆளுமையில் அரசப் புலவராக வலம் வந்த பெருமையுடையவர் கலைஞர் மு. கருணாநிதி. திரைப்படத் துறையில் தனி முத்திரைப் பதித்தவர். “கன்னித்தமிழ் இருக்கிற வரை இருக்கிற பெயர் கருணாநிதி’’ என்கிறார் வலம்புரிஜான். “அரசியல் ( ப.27) சாணக்கியம் இலக்கியப் பிரக்ஞை இரண்டும் இணைவது அபூர்வம்’’ என்பார் இந்திரா பார்த்தசாரதி. அந்த இரண்டும் இணைந்த யுத்தப் பேரிகையே கலைஞர் கருணாநிதி. பல்வேறு திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய பெருமையுடைய கருணாநிதி படைப்பிலக்கியங்களுக்கு ஆற்றியுள்ள பங்கு மகத்தானது. புனைக்கதை இலக்கியங்களான நாவல்களிலும், சிறுகதைகளிலும் பெரும் பங்காற்றியுள்ளார். புதையல், வெள்ளிக்கிழமை, சுருளிமலை, வான்கோழி, ஒரே இரத்தம், ஒரு மரம் பூத்தது முதலான சமூக நாவல்களையும், ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டிசிங்கம், பொன்னர்சங்கர், பாயும்புலி, பண்டாரக வன்னியம் முதலான வரலாற்று நாவல்களையும் படைத்துள்ளார். கிழவன் கனவு என்ற சிறுகதை தொடங்கி இருநூறு சிறுகதைகளுக்கும் மேலாக எழுதியுள்ளார். சிறுகதைகளிலும் தான் பின்பற்றிய பகுத்தறிவுப் பாதையிலிருந்த விலகாமல், திராவிட இயக்கக் கருத்துக்களை உயிரோட்டமான நடையில் படைத்துள்ளார். திராவிட இயக்க எழுத்தாளர்கள் அண்ணா, ஆசைத்தம்பி, தென்னரசு, டி.கே. சீனிவாசன், தில்லை வில்லாளன் போன்றோர் வரிசையில் கலைஞர் அவர்களுக்குத் தனி இடம் உண்டு.