நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday, 11 June 2021

மீண்டெழுதல் கதைகளில் சமூகம்

 

மீண்டெழுதல் கதைகளில்  சமூகம்

                                                                                                                                               

முன்னுரை

                எழுத்தாளர்கள் மூன்றுவகை. முதல் வகை: தம் பொழுதைப் போக்கிக் கொள்ள, பொழுதுபோக்காக எழுதுபவர்கள். இரண்டாம் வகை: சமூகம் பற்றிய புரிதலோடு, வாழ்வின் இன்ப, துன்பங்களைக் கதையினூடாகச் சொல்லிச் செல்பவர்கள். மூன்றாவது வகையினர்: எழுத்தை ஆயுதமாகக் கருதுபவர்கள். பாரதி ஆயுதம் செய்வோம். நல்ல காகித. செய்வோம் என்றான். பாரதியைப் பொறுத்தவரையில் எழுத்ததான் அவனுடைய ஆயுதம். அதைத்தான் அவன் காகிதத்தில் தந்து சென்றுள்ளான். எனவேதான் எனக்குத் தொழில் கவிதைஎன்றான். வாள்முனையைவிட பேனாமுனை வலிமையானதுஎன்பதை நாம் அறிவோம். அத்தகைய எழுத்தை ஆயுதமாகக் கொண்ட படைப்பாளர்கள் சமூகம் மாறும் - மாற்றப்பட வேண்டும் - சமூகம் மாற்றப்படும் என்ற உறுதியான கொள்கைப் பிடிப்போடும் நம்பிக்கையோடும் எழுதுபவர்கள். இலா.வின்சென்ட் அவர்கள் மூன்றாம் வகையினர்.

கதைகளின் சிறப்பு

*    விளிம்பு நிலை மக்களின் துயரங்கள்

*    சக மனிதர்கள் தங்களுக்குள் மேற்கொள்ளும் வன்முறை.

*    மாந்தரின் அகமன உணர்வு வெளிப்பாடு.

*    கருப்பொருளின் மீதான நுட்பமான விவரிப்பு.

*    தனிமனித, குடும்ப, சமூக அவலங்கள்

*    மாறிவரும் வாழ்க்கை மதிப்புகள்

போன்றவற்றை எளிய மொழியில் அழகியலோடு இலா.வின்சென்ட் வெளிப்படுத்தியுள்ளார்.

                உணர்ந்த விரும்பும் கருத்துகளின் முனைகள் சில இடங்களில் மிகக் கூர்மையான வெளிப்படுகின்றன. பெரும் வீச்சென மொழியை அதன் இலகுத்தன்மையுடன் வெளிப்படுத்துகிறார்.

                பாத்திரப்படையில் தங்குதடையின்றி பல்வேறு சித்திரங்களை உருவாக்கியபடி செல்கிறார்.

                மீண்டெழுதல் கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தளத்தில் இயங்குகின்றன. இந்து, இசுலாமிய, கிருத்துவ மதம் சார்ந்த பாத்திரங்கள் மிக இயல்பாகப் படைக்கப்பட்டுள்ளன.

உழைப்பதற்குக் கைகளையும், இழப்பதற்கு அடிமைத்தளை என்னும் விலங்குகளையும் தவிர வெறொன்றும் இல்லாதவர்களுக்குப் பொருளாதாரச் சமத்துவத்தையும் அதிகாரத்தில் பங்கையும் பெற்றுத் தருவதற்கான போராட்டமே புரட்சி (கஞ்சித் தொட்டி) என்பதைக் கதைகள் உணர்த்துகின்றன.

பொருளாதார வேறுபாடு என்ற மையப் புள்ளியையும் இல்லாமையின் காரணமாக அனுபவிக்க நேரிடும் துயரங்களையும் கதைகள் மிகக் சிறப்பாகப் பதிவு செய்துள்ளன.

மனித இனத்தில் சரிபாதியான பெண்ணினத்தைப் பலவீனமானவன் என்றும், சுதந்திரத்திற்கு இலாயக்கற்றவள் என்றும் புறம் தள்ளியதோடு, அவர்களுடைய உரிமைகளையும் செவிசாய்க்காமல் போகும்பொழுது பெண்கள் தாங்களே முன்வந்து போராடுகின்ற சூழல் ஏற்படுகிறது. இழப்புகளைப் பொருட்படுத்தாது போராடத் துணியும் பெண்களை, அவர்கள் தரப்பு நியாயத்தை, நேர்மையான வழியில் இலா.வின்சென்ட் அவர்கள் பதிவு செய்துள்ளார்.

மனிதனின் மேன்மைகளை, உயர்பண்புகளை, இலட்சியங்களை மட்டுமின்றி அவனது குறைகளை, பண்புக் கேடுகளைச், சிறுமைகளைச், சீரழிவுகளை, வக்கிரங்களை, மனித சமூக அவலங்களைச் சிறப்பாகச் சித்தரித்துள்ளார்.

சமூக மதிப்புகள், வாழ்க்கை மதிப்புகள் அம்மதிப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் கதைகளில் வெளிப்படுத்தப்பட்டுளன.

பொதுவாக, மண்ணின் மணம் கமழப் படைக்கப்படுகையில்தான் கதை உயிர்த்தன்மை பெறுகிறது. அவ்வகையில் இலா. வின்சென்டின் கதைகளில் சேலம் வட்டாரத் தன்மை கதைகளுக்கு உயிர்ப்புத்தன்மை கொடுத்துள்ளது.

மிகச் சிறப்பாக மீண்டெழுதல் கiiயில் கையாளப்பட்டுள்ள மொழிநடையைக் குறிப்பிடலாம். சிறியசிறிய சொற்கள், சிக்கனமான வாக்கியங்கள், புலமையை வெளிப்படுத்தாத பாசாங்குத்தனமில்லாத எளிய நடை, சறுக்குத் தளத்தில் வாழை மட்டை மீதமர்ந்து சறுக்கிக் கொண்டு வருவதைப்போல கதை ஆரம்பித்தால், படிக்கிறோம் என்ற உணர்வு ஏற்படுவதற்குள் நச்எனக் கதை முடிந்துவிடுகிறது. ஆனால், முடிவுகள் மனதில் வெகுநேரம் சலனத்தை ஏற்படுத்தி விடுகின்றன.

மீண்டெழுதல்என்ற நூலின் ( க்ஷடிடிம ) தலைப்பு ஒரு நூலாக ( வாசநயன )இருந்து, அனைத்துக் கதைகளின் ஊடாகவும் பரிணமித்து அவற்றை மணிகளாக்கி உள்ளன. ஒரு அழகிய மாலையாக மீண்டெழுதல்உருவாக்கப்பட்டுள்ளது.

காமநாயக்கனூர், கொண்டலாம்பட்டி, குகை, தம்மம்பட்டி, உடையாப்பட்டி, செவ்வாய் பேட்டை, பனைமரத்துப்பட்டி எல்லப்ப நாயக்கனூர். ஆட்டையாம்பட்டி, பெரியாப்பட்டி, சங்கர் நகர் எல்லாம் தெரிந்த இடங்கள், பாத்திரங்களின் பெயர்களும் சேலம் பகுதி பெயர்கள்தான். பாவாயி அம்மாள், எல்லம்மாள், அய்யம்மாள், பெருமாயி, காளியம்மாள், காத்தாயி.

கதை மாந்தர்களின் சிறப்பு

1)            பெண்களின் சிக்கல் - எதிர்கொள்ளும் முறை

2)            உழைப்பாளர்களின் நிலை

பெண் கதைமாந்தர்கள் இலா.வின்சென்டின் கதைகளில் மிகச் சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளனர். இச்சமூக அமைப்பில் தனக்கு நீதி கிடைக்காதபோது, அதை எதிர்த்துப் போராடத் துணிந்து செயல்படும் பெண்களைப் பற்றி பல கதைகள் பேசுகின்றன. அப்பெண்களின் வரிசையில் ரவுக்கை -  பொம்மக்கா, வீரம் என்பது.. - பாவாயி அம்மாள் மன வளம் - ஷகி, பகுபதம் -  சங்கீதம், சரஸ்வதி, மீண்டெழுதல் - எல்லாம்மாள், ஆத்தாஆத்தா - அய்யம்மாள் போன்றோர் படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவரும் சந்திக்கும் சிக்கல்கள் வெவ்வேறானவை. அனைவரும் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த அடித்தட்டுப் பெண்கள். அனைவரும் நியாயத்தின் பொருட்டு ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுபவர்களாக, சுயமாகச் சிந்திக்க கூடியவர்களாக இழப்புகளைப் பெரிதுபடுத்தாமல் துணிவுடன் களமிறங்குபவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர்.

இச்சமூகம் குறுகிய கண்ணோட்டத்தோடு பெண்களின் மீது சுமத்தியுள்ள கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, பெண்ணை மனுஷியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்று போராடுகின்றார்கள்.

ரவுக்கதை கதையில் வாழ்வியல் மாற்றங்களை ஏற்கத் தயங்கும் பழமைவாதிகளுக்கும், மாற்றங்களை விரைந்து ஏற்க விரும்பும் இளைய தலைமுறைக்கும் ஏற்படும் தலைமுறை இடைவெளி, சிக்கல் பதிவு செய்யப்பட்டள்ளது. இதனால் பாதிக்கப்படும் பொம்மக்கா, தனி ஒருத்தியாக நின்று இருதரப்பாருக்குமிடையில் போராடுகிறாள்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பெண்கள் ரவுக்கை என்னும் மேலாடை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. வயதுக்கு வந்தவுடன் பெண்களின் கல்வி நிறுத்தப்படுகிறது. ஆனால், இளைஞர்கள் கல்லூரிக்குத் செல்கிறார்கள். படித்த இளைஞகள் நாகரிகமாக வாழ விரும்பும்பொழுது, தம் சமூக கட்டுப்பாடான பெண்கள் ரவுக்கை அணியாத பழக்கத்தை அநாகரிகமாகக் கருதுகிறார்கள். இதில் முத்துசாமி, என்ற இளைஞர் தான் விரும்பிய உரிமையுள்ள அக்கா மகள் பொம்மக்காவை இதனால் மணக்காமல் , ரவுக்கை அணிந்த வேறொரு பெண்ணை ஊர் கட்டுப்பாட்டை மீறி யாருக்கும் கவலையில்லை. இக்கதை -  தோள்சீலைக் கலகத்தை நினைவூட்டுகிறது.

1822 முதல் 1859 வரை குமரி மாவட்டத்தில் திருவிதாங்கூ. அரசாட்சிக்கெதிராக நடந்த சுமார் முப்பது ஆண்டு காலம் நீட்டித்த போராட்டத்தை மீண்டும் நினைக்குக் கொண்டுவந்துள்ளது. கீழ்சாதிப் பெண்கள் மேலாடை அணிவதை எதிர்த்து, உயர்சாதி வகுப்பினரும், உயர்சாதியினர் இந்த அடக்குமுறையை எதிர்த்து தாழ்த்தப்பட்ட மக்களும் நடத்திய இருமுனைப் போராட்டம் அது. அப்போது திருவிதாங்கூர் அரசை ஆட்சி செய்து கொண்டிருந்தவர் பார்வதிபாய் என்கிற பெண் அரசி. அவர் ஒரு சட்டம் இயற்றுகின்றனர். (3.2.1829) """"தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் மேலாடை அணிவதற்கு உரிமையற்றவர்கள். எனவே, மேலாடை அணியும் வழக்கத்தை நிறுத்தும்படி கட்டளை இடப்படுகிறது.

ஒரு பெண் அரசியாக, அதிகாரப் பதவியில் வீற்றிருந்தும் பெண்களுக்கெதிராக இப்படிப்பட்ட ஒரு சட்டம் இயற்றியிருக்கிறார் என்றால், அச்சமூகத்தில் வாழ்ந்த பிற பெண்களின் நிலையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

ஒரு அரசியான பார்வதிபாய் செய்ய முடியாத மிகப்பெரிய புரட்சியை ரவுக்கை கதைநாயகி பொம்மக்காb சய்ய காட்டுகிறாள்.

இத்தோள்சீலைக்கலகப் போரட்டத்தில் பெண்களுக்கு ஆதராவாகக் களம் குதித்த ஆண்கள் சிறையிலடைக்கப்பட்டு, பல கொடுமைகளுக்கு ஆளானார்கள். அவர்களின் பலர் தங்கள் சமூகப் பெண்களின் உரிமைக்காகப் போராடி உயிரையும் இழந்தனர். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த கல்வியறிவற்ற ஆண்கள் அவர்கள். ஆனால் ரவுக்கை கதையில் வரும் முத்துசாமியோ கல்லூரிக்குச் சென்று படிக்கும் வாய்ப்புப் பெற்றவன். சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவன். க்ஷபாம்மக்காவை உயிருக்கு உயிராக நேசிக்கிறான். ஆனால், அவனுடைய சமூகம் இன்னும் மாற்றமடைய வெகுகாலமாகும். அதுவரை அவனுக்குப் பொறுமையில்லை. க்ஷபாம்மக்காவை மணப்பதென்பது அவனுக்குக் கௌரவக் குறைவாகத் தோன்றுவதால், ரவுக்கை அணியும் வேறொரு பெண்ணை மணந்து கொள்கிறான்.

தன் சமூக மூடபழக்கவழக்கத்தை நிறுத்த அவன் முன்வருவதில்லை. அவனுடைய கல்வி அவனுக்கு வசதியாக வாழவும், சிக்கலிருந்து விலகிக் கொள்ளவும், தப்பித்துக் கொள்ளவுமே பயன்பட்டுள்ளது.

ஆனால், பொம்மக்கா தனியொருத்தியாகத் துணிந்து ஊரை எதிர்த்துப் போராடுகிறாள். கோழையைப்போல வேறொரு பெண்ணை மணந்துகொண்ட முத்துசாமியை, ‘அம்பிளையே இல்லைஎன்கிறாள். பெண்பிள்ளைகளைப் பழமைக்குள் தள்ளும் பஞ்சாயத்தாரை இத்தினெ வருசம் ஆம்பாளைங்க பேசி என்னய்யா கிளிச்சிட்டீங்க’ (23) என்றும் கேட்டு தலைகுனிய வைக்கிறாள். நியாயமற்ற பஞ்சாயத்தாரையும் ஊரையும் பொருட்படுத்தாது ரவுக்கைஅணிந்து கொள்கிறாள்.

இக்கதையின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த ஏற்படுத்த பெண்தான் போராட வேண்டும் என்பதை மிக ஆழமாக ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

வீரம் கதையில் வரும் பாவாயி அம்மாள் வீரம் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் ஜல்லிக்கட்டிற்கு எதிராகக் குரல் கொடுக்கிறாள். தன் இரு மகன்களையும் காளைகளின் கொம்புகளுக்குப் பலிகொடுத்த அவர் மனுசங்களையும் மாடுகளையும் சாகடிக்கறதுக்குப் பேருதான் ஜல்லிக்கட்டா? வீரம் என்பது இதுதானாஎன்கிறாள். வீரம் என்பது பிறரை அடக்குவதில் இல்லை. தன்னை அடக்குவதில்தான் இருக்கிறது. உயிர்களைப் பலியிடுவதில் வீரம் இல்லை. உயிர்களைக் காப்பாற்றுவதில் தான் வீரம் இருக்கிறது என்பதையும் பிறரைத் துன்புறுத்துவதும், நம்மை நாம் துன்புறுத்திக் கொள்வதும் வீரம் இல்லை என்பதையும் ஆசிரியர் இக்கதையில் அழகாகக் கூறியுள்ளார்.

மனவளம் கதையில் வரும் ஷகி கணவனால் பல வகையில் துன்புறுத்தப்பட்டு. இரு குழந்தைகளோடு தாய் வீட்டிற்கு வந்து விடுகிறாள். அவளுடைய இளவயது தோழன் வயதில் சிறியவன் அவளுக்கு வேறொரு மறுமணம் முடிக்க முயற்சிக்கிறான். இரு குழந்தைகளுள்ள அவளை யாரும் மணமுடிக்க முன்வராதபோது தானே மணமுடித்துக் கொள்வதாக விருப்பம் தெரிவிக்க வயது வேறுபாடுகாட்டி ஷகி மறுக்கிறாள்.

""""நபியைவிட அவர் மனைவி வயதில் மூத்தவர்என்று அவன் கூறும் சமாதானங்களை ஷகி ஏற்க மறுக்கிறாள். பரிதாபத்தின் பொருட்டோ, செய்து கொள்ளப்படுபவை திருமணங்கள் அல்ல என்பதினால் மேற்கல்வி பயிலப் போவதாகக் கூறுகிறாள். கல்வி ஒன்றே பெண்களின் துயர்துடைக்கும் மருந்து என்பது இக்கதையின் அடிக்கருத்தாக உள்ளது.

பகுபதம் கதையில் வரும் பெண்களின் சிக்கல் பெண்களே ஏற்படுத்திக் கொண்ட சிக்கல், ஆணாதிக்கத்திற்கு எதிராகச் செயல்படுவதாக நினைத்து, இரு ஓரினச் சேர்க்கைப் பெண்கள் மணமுடித்துக் கொள்கிறார்கள். இன்றைய மருத்துவ அறிவியல் வளர்ச்சியைப் பயன்படுத்தி ஒரு பெண்களின் கருமுட்டையை எடுத்து விந்துவை விலைக்கு வாங்கி மற்றொரு பெண்ணின் கருப்பையில் வைத்து குழந்தை பெறுகிறார்கள். இருவரும் சேர்ந்து வாழ முடியாத சூழலில் குழந்தை யாருக்கு?’ என்று நியாயம் கேட்டு நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள். குழந்தை கருமுட்டையைக் கொடுத்த பெண்ணுக்குரியதா? அல்லது கருவில் சுமந்த பெண்ணுக்குரியதா எனப் புகழ்மிக்க வழக்குரைஞர்களும்கூட வாதாடியும் தீர்ப்பு கூற முடியாமல் வழக்கு தள்ளி போடப்படுகிறது. இயற்கைக்கு மாறானவை எல்லாம் மேலும் சிக்கலையே தரும் என்பதை இக்கதை உணர்த்துகிறது.

மீண்டெழுதல்கதை பொருளாதார வேறுபாடு என்ற மையப் புள்ளியையும், இல்லாமையின் காரணமாக அனுபவிக்க நேரிடும் துயரங்களையும் எடுத்துக் காட்டியுள்ளது. மாமனாரின் மருத்துவச் செலவிற்கு வாங்கிய கடனுக்காக, சதாசிவக்கவுண்டரிடம் எல்லாம்மாளும், பாலுவும் அடகாகிறார்கள். அவனோ, அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதோடு எல்லம்மளையும், தன் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்திக்கொள்கிறான். எல்லம்மாள் உடன்பட மறுக்கும்போது, கடன் தொகையை இரட்டிப்பாக்கி கையெழுத்து வாங்கிக் கொண்டு, அவள் கணவனைக் (பாலு ) கடுமையாக வேலை வாங்குகிறான். இதிலிருந்து விடுபட கிட்னி தரகர்களிடம் பாலு கிட்னியை விற்கிறான். அவனோ பபதி பணத்தைக் கொடுத்து தலைமறைவாகிவிட, எல்லம்மாள் சதாசிவக் கவுண்டரிடம் சரணடைவதைவிட, தன்னுடைய கிட்னியையும் விற்று கடனை அடைத்து விடுகிறாள். வறுமை என்பது சிறுமையன்று. பொருளால் ஒரு குடும்பம் வறுமைப்படலாகாது என்ற எண்ணமுடைய எல்லம்மாள் நம் மனதில் உயர்ந்து நிற்கிறாள்.

ஆத்தா ஆத்தா கதையில் வரும் அய்யம்மாள் தன் கணவனையும் மாமியாரையும் உயிராக நேசிப்பவள். கணவனுடன் தானும் சேர்ந்து கல்லுடைக்கச் செல்பவள். குழந்தை வளர்ப்பு குடும்பப் பொறுப்பும் அவளை வாட்டி வதைக்கின்றன. இதனால் அவளுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. கணவன் அவளை விடுத்து வேறொரு பெண்ணோடு தொடர்பு வைக்கிறான். இக்கற்பு மீறலைச் சகித்துக் கொள்ளமுடியாமல், தன் குழந்தையோடு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். முதுமை நோயால் துன்புறும் மாமியாருக்காக வீடு திரும்புகிறாள். அவள் மாமியாரோ அவள் எடுத்த முடிவு சரிதான் என உணர்ச்சி தன்னிடமிருக்கும் பணத்தைக் கொடுத்து வழியனுப்புகிறாள். ஒரு பெண்ணின் மனஉணர்வை வேதனையை, துக்கத்தைப் புரிந்து கொண்ட மற்றொரு பெண்ணை இங்குக் காட்சிப்படுத்தி உள்ளார் ஆசிரியர். அவருக்குப் பாராட்டுகள்.

மேற்கூறிய கதைகளில் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதிஎன்ற பழமையான மரபை மாற்றவும், சமஉரிமையை நிலைநாட்டவும், அதற்காக எதையும் இழக்கத் தயாராக இருக்கவும் கூடிய முன்மாதிரிப் பெண்களைப் பார்க்க முடிகிறது. இலா.வின்சென்டின் பெண் பாத்திரங்கள் வெறும் படுக்கையறைப் பதுமைகள் அல்லர். பெண்ணுக்கு ஏற்படும் சிக்கலை உணர்த்து அதற்கு எதிராகத் தனியொருத்தியாகவே நின்று போராடும் பெண்களைத்தான் இக்கதைகள் காட்டுகிறது.

பெண்களின் இன்னொரு பக்கத்தையும் காட்டத் தவறுவதில்லை. சில கனவுகளோடு என்னும் கதை பெண்ணுக்கு கல்வியும் பொருளாதாரச் சுதந்திரமும் கிடைத்துவிட்டால் விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையைப் பொடியாக்கி விடுகிறது. பெற்றோர்கள் தம் ஆசையைக் குழந்தைகளின் மீது திணிப்பதால், பிள்ளைகள் திசைமாறிப் போய்விடுகிற அவலத்தை இக்கதைச் சுட்டிக்காட்டுகிறது. பெற்றோர்களின் ஆசைகள் நிறைவேறும். ஆனால், பிள்ளைகள் தொலைந்துபோய் விடுவார்கள் என்ற உண்மையை இக்கதை சுட்டிக்காட்டியுள்ளது.

இரண்டு ஓநாய்களும் ஒரு நாயும்என்ற கதையில் வரும் பத்மாவிற்கு அவள் மாமியாருக்கும் இடையில் ஏற்படும் புடவைப் பிரச்சனை விசுவரூபமெடுத்து தனிக்குடித்தனத்திற்கு வழிவகுக்கிறது. தனிக்குடித்தனம் நடத்தும் பத்மாவிற்கும் அவள் கணவன் முருகேசனுக்கும் இடையில் வேறொரு வகையில் பிரச்சனை தொடங்குகிறது. இருவருமே விட்டுக்கொடுத்துப் போகாமல் அவரவர் தரப்பு நியாயங்களை வாதிட்டு மேலும் விரிசலை உண்டாக்கிக் கொள்கிறார்கள்.

பெண்கள் வேலைக்குச் செல்வதால் கிடைக்கும் பணப் பயன்களை அனுபவிக்கும் ஆண்களால் அவள் பொதுவில் வைக்கும் நியாயங்களை ஏற்றுக்கொள்ளமுடிதில்லை. யார் விட்டுக்கொடுப்பது என்பதிலேயே சமரசம் ஏற்படாத நிலையில் விவாகரத்துகள் பெருகி வருவதை வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது. இதிலிருந்து மாறுபட்ட கதையாக உயிர்த்தாகம் படைக்கப்பட்டுள்ளது. அமலாவும் சேவியரும் காதலித்து மணமுடித்துக் கொள்கிறார்கள். ஆனால், சேவியரின் நண்பன் கலையரசனோடு அமலா பழகுகிறாள். அவனுடன் பழகுவதைக் கண்டிக்கும் கணவனை விடுத்து கலையரசனோடு சென்று வாழத் தொடங்குகிறாள். கலையரசன் அவளை ஏமாற்றிவிட அமலா, தாயிழந்த நிலையில் சேவியரிடம் மீண்டும் வர அவன் அவளை மன்னித்து ஏற்றுக்கொள்கிறான். உண்மையான அன்பிருந்தால் மிகப் பெரிய சிக்கல்கள் கூட பகலவனைக் கண்ட பனித்துளிபோல் காணாமல் போய்விடும் என் உண்மையை இக்கதை உணர்த்தி நிற்கிறது.

உழைப்பாளர் சிக்கல்

நெசவாளர்களின் சிக்கல், பனையேறிகளின் சிக்கல், கல்லுடைக்கும் மக்களின் துயரங்கள் என அடித்தட்டு மக்களின் சிக்கலை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார். கைத்தறியாக இருந்தாலும், விசைத்தறியாக இருந்தாலும் நெசவாளர்களின் வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரிதான் என்பதைக் கஞ்சித்தொட்டி கதையும், மீண்டெழுதல் கதையும் சுட்டிக்காட்டகின்றன. தறிக் குழிக்குள்ளிருந்து மீண்டெழ அம்மக்கள் நடத்தும் போராட்டங்கள், பஞ்சு நூலாகி துணியாவதற்குப் படும் பாடுகளைவிட அதிகம். அற்புதமான வேலைப்பாடுகளுடைய மின்னும் பட்டுத்துணிகளை நெய்யும் கலைஞன் அர்த்தனாரி, இறுதியில் வாழ வகை தெரியாமல் மனைவியின் பிரசவச் செலவு செய்யக் கூட இயலாதவனாகக் கஞ்சித்தொட்டியை நாடி ஓடுகிறான். தறியோடும் சேலையோடும் பிணைந்த அர்த்தனாரி சுலோச்சனாவின் வாழ்க்கையில் வறுமை என்னும் சிக்கல் அவிழ்க்க முடியாமல்போன அவலத்தை இக்கதை பதிவு செய்துள்ளது.

மீண்டெழுதல்கதையோ, கைத்தறியிலிருந்து மீண்டு விசைத்தறிக்குள் அடைக்கலமாகும் பாலு-எல்லம்மாள் வாழ்க்கையைப் படம்பிடிக்கிறது. தம் உடல் உறுப்புகளையே விற்கும் அளவிற்கு அவர்கள் பெருமுதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள். தறிக்குழியா சவக்குழியா? என்று கேட்குமளவிற்கு நெசவாளர்களின் வாழ்க்கையோடு பிணைந்துவிட்ட நெசவுக் தொழில் இன்று அவர்களின் மானத்தைக் காக்கும் நிலையிலில்லை என்பதை ஆசிரியர் மறைமுகமாகப் புலப்படுத்துகிறார்.

ஓற்றைப்பனை

                க்ஷவளிநாட்டுச்சரக்கினை விற்பதற்காக, உள்நாட்டுப் பொருட்களைத் தடை செய்யும் அவல நிலையை ஒற்றைப்பனையின் மூலம் ஆசிரியர் புலப்படுத்துகிறார். பழனி என்ற பனையேறி இதனால் சுடப்பட்டு கொல்லப்படுகிறார். கள்ளும், கலப்படச் சரக்கும், ஓயினும் பனையேறிகளின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிட்டதை இக்கதை வெளிப்படுத்தியுள்ளது. இரத்தப்பலி கேட்கும் அந்நிய முதலீடுகளின் கோரக் கைகளில் சிக்குண்டு சின்னாபின்னமாகும் எளிய மக்களின் வாழ்க்கையை எளிய நடையில் வெளிப்படுத்தியுள்ளார்.

சாதிக்சிக்கல்

                அந்நிய முதலீகள் உள்நாட்டு மக்களை ஒடுக்குவது ஒருபுறம் நிகழ்கிகறதென்றால் சாதி என்னும் பெயரில் இரத்தப்பலி கேட்கும் மனிதர்களும் நம்மிடத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். கூ என்னும் கதையும் வடுக்கள் என்னும் கதையும் சாதிச் சிக்கலை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்படும் வன்முறைகளை, அதற்காக அவர்கள் கற்பிக்கும் நியாயங்களைக் காட்சிப்படுத்தியுள்ளன. உண்ணும் உணவிலும், குடிக்கும் நீரிலும்கூட சாதி பார்க்கும் அவலம் எத்தனைப் பெரியார்கள் பிறந்து வந்தாலும் மாறப்போவதில்லை என்பதை உணர்த்துகிறது.

                சாதி மாறித் திருமணம் செய்து கொண்ட தம்பதியரை அவரவர் குடும்பங்கள் ஏற்றுக்கொண்டாலும்கூட, ஊரார் ஏற்றுக் கொள்வதில்லை. ஏதாவதொரு வகையில் சிக்கலை ஏற்படுத்தி சாதிக் கலவரங்கள் தோன்ற வழிவகுத்தவிடுகின்றனர்.

மனிதம்?

                மனிதம் சாகுமோ என்ற கதை பணிநிரந்தரமில்லாத ஆசிரியர்கள் பணி நிரந்தரமாவதற்கு, பணி நிரந்தரமுள்ள ஆசிரியர் யாராவது இறந்தால்தான் உண்டு என்ற நிலை உடையவர்களாக உள்ளனர்.

                வேலை தேடும் வேலைதான் இன்றைய இளைஞர்களின் வேலையாக இருக்கிறது.

வேலையை இலக்காக வைத்தே கல்வி கற்கப்படுகிறது, கற்பிக்கப்படுகிறது. நாட்டின், தனிமனிதனின் பொருளாதார மேம்பாட்டை வைத்து உருவாக்கப்படும் கல்வித்திட்டங்கள் வேலையில்லாப் பட்டதாரிகளைத்தான் உற்பத்தி செய்கின்றன. வாழ்க்கையில் வேண்டிய வேலை கிடைக்காதபோது கல்வியை மட்டுமன்றி சகமனிதர்களையும் சுமையாகக் கருதும் போக்கு நிலவி வருகிறது.

                கல்வியென்றும் கலையென்றும்

                வாழ்வென்றும் தனித்துத்தனித்து

                பொய்யாகி நாளும் போச்சு - இன்று

                வாழ்வில் மீதமென்ன ஆச்சு ( ப.250 )

என்ற கவிஞர் கு.கணேசன் அவர்களின் வ.கிள் வேலைத் தேடித்தேடியே முதுமையடைந்துவிடும் பட்டதாரிகளின் வாழ்க்கையைப் படம்பிடித்துள்ளது. இதற்குத் தீர்வாக,

                மாற்றான் உதவி தேவையில்லை உழைக்கலாம்

                நாட்டிற்குப் பெருமைதனை ஒன்றாகச் சேர்க்கலாம்

                வயல்வெளியைப் பசுமை வண்ணங்கள் ஆக்கலாம்

                வாலிபநெஞ்சின் சோம்பலை நாளும் போக்கலாம் ( ப.245 )

                என்று படித்தவர் உடலுமைப்பில் ஈடுபட்டால் அவர் குடும்பமும், நாடும் உயரலாம் என்கிற தீர்வைக் கூறுகிறார்.

முடிவுரை

                இலா. வின்சென்ட் அவர்கள் சமகால வாழ்வினை நாடிப்பிடித்துச் செல்லும் ஒரு மருத்துவன்போலச் செயல்பட்டுள்ளார். நிகழ்கால வாழ்வின் உண்மைகள்தான் அவர் கதைகளின் அடிநாதம். இவர் கதைகள், படிக்கும் வாசகர் மனதையும் பாதித்து சிந்தனையைத் தூண்டிவிடுகின்றன. பெண்களின் சிக்கல்களுக்குத் திர்வு அவர்களின் சிந்தனைத் தெளிவிலும் போராட்டக் குணத்திலுமேதான் உள்ளது என்பதையும், உழைப்பாளர்களின் சிக்கல் இணைந்து போராடினால் தான் தீரும் என்பதையும் கதைகள் தீர்வாகக் கூறுகின்றன.

கலைஞரின் சிறுகதைகள் காட்டும் சமூகம்

               

முனைவர் ஜ. பிரேமலதா

தமிழ் இணைப் பேராசிரியர்

அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி )

சேலம் - 7

 

முன்னுரை

                தன்னிகரற்ற அரசியலாளர், மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், பாடலாசிரியர், நடிகர், நிர்வாகி, பத்திரிக்கையாசிரியர் வெளியீட்டாளர் என்று பன்முக ஆளுமையில் அரசப் புலவராக வலம் வந்த பெருமையுடையவர் கலைஞர் மு. கருணாநிதி. திரைப்படத் துறையில் தனி முத்திரைப் பதித்தவர். “கன்னித்தமிழ் இருக்கிற வரை இருக்கிற பெயர் கருணாநிதி’’ என்கிறார் வலம்புரிஜான். “அரசியல் ( ப.27) சாணக்கியம் இலக்கியப் பிரக்ஞை இரண்டும் இணைவது அபூர்வம்’’ என்பார் இந்திரா பார்த்தசாரதி. அந்த இரண்டும் இணைந்த யுத்தப் பேரிகையே கலைஞர் கருணாநிதி. பல்வேறு திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய பெருமையுடைய கருணாநிதி படைப்பிலக்கியங்களுக்கு ஆற்றியுள்ள பங்கு மகத்தானது. புனைக்கதை இலக்கியங்களான நாவல்களிலும், சிறுகதைகளிலும் பெரும் பங்காற்றியுள்ளார். புதையல், வெள்ளிக்கிழமை, சுருளிமலை, வான்கோழி, ஒரே இரத்தம், ஒரு மரம் பூத்தது முதலான சமூக நாவல்களையும், ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டிசிங்கம், பொன்னர்சங்கர், பாயும்புலி, பண்டாரக வன்னியம் முதலான வரலாற்று நாவல்களையும் படைத்துள்ளார். கிழவன் கனவு என்ற சிறுகதை தொடங்கி இருநூறு சிறுகதைகளுக்கும் மேலாக எழுதியுள்ளார். சிறுகதைகளிலும் தான் பின்பற்றிய பகுத்தறிவுப் பாதையிலிருந்த விலகாமல், திராவிட இயக்கக் கருத்துக்களை உயிரோட்டமான நடையில் படைத்துள்ளார். திராவிட இயக்க எழுத்தாளர்கள் அண்ணா, ஆசைத்தம்பி, தென்னரசு, டி.கே. சீனிவாசன், தில்லை வில்லாளன் போன்றோர் வரிசையில் கலைஞர் அவர்களுக்குத் தனி இடம் உண்டு.

சிறுகதைகள்

                கலைஞரின் சிறுகதைகள் எளிய மனிதர்களின் மனநிலை வாழ்க்கைமுறை, விருப்பங்கள், சாதிசமய மறுப்பு, கலப்புத் திருமணம், தீண்டாமை, பெண்ணடிமை, விளிம்பி நிலை மக்களின் ஏமாற்றம், பெண்ணை உடலாக மட்டுமே பார்க்கும் நிலை போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளன.

                புராணங்களைச் சாடும் வகையில் இவருடைய கதைகள் ( நளாயினி ) அமைந்துள்ளன. நாட்டின் சூழலை நையாண்டி செய்யும் ஆலமரத்துப் புறாஇவருடைய நகைச்சுவை உணர்விற்கு சிறந்த உதாரணம்.

                இவர் பாலியல் தொழில் செய்யும் பெண்களை மையப்பொருளாக்கி அவர்களின் நிலையை, அவர்கள் அச்சூழலுக்குத் தள்ளப்பட்ட சூழலை மனிதாபிமான நோக்கில் சிறுகதையில் படைத்துள்ளார்.

கலைஞர் தமது காலத்தோடும், சமுதாயத்தோடும், நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறார் என்பதை அவர் தம் சிறுகதைகளின் கருக்கன் சான்று பகர்கின்றன.

சமயங்கள் மக்களை மூடநம்பிக்கைக்கும் ஆழ்த்துகின்றன. இயல்பான அறிவையும்கூட கெடுத்து, மணிதர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி மனிதநேயத்தையும் அழித்துவிடுகின்றன என்பதை கலைஞரின் சிறுகதைகள் அடிநாதமாகக் கொண்டுள்ளன.

சங்கிலிச்சாமி என்ற சிறுகதை மக்கள் கண்கண்ட தெய்வமாகப் போற்றும் சங்கிலியானந்தசாமியின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது. இரயில் தண்டவாளத்தை தன் கையாளை வைத்துத் தகர்க்கச் செய்து, தன் ஞான திருஷ்டியால் இரயில் தண்டவாளம் உடைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, இரயில் சங்கிலியை நிறுத்தி பயணிகளைக் காப்பாற்றி சங்கிலிச்சாமிஎனப் பட்டம் பெற்று ஊரை ஏமாற்றுகிறார். அவரை நம்பும் சின்னப்பண்ணை முதலியார் சாமியார் தன் வெள்ளிக் கட்டிகளைத் தங்கக் கட்டிகளாக மாற்றித் தருவார் என நம்ப, சாமியாரோ, தன் சீடனையும் ஏமாற்றிவிட்டு வெள்ளியோடு தப்பி ஓடுகிறார். சீடனும், சின்னப் பண்ணையும் சாமியரைக் கண்டுபிடித்து அவரைக் கொலைசெய்து, அவர் நிஷ்டையில் சமாதியாகிவிட்டதாகக் கூறி, விழா நடத்தி மடத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கிறார்கள். சங்கிலியானந்தா கடவுளின் பெயரால் தன்னை நம்பியவர்களை ஏமாற்றுகிறார். ஏமாற்றப்பட்டவர்களோ அவரையே கொலை செய்து அவர் புகழைத் தங்களுக்குச் சாதகமாக்கிப் பணம் சம்பாதிக்கிறார்கள்.

                சாமிகளுக்கு மாபெரும் மடம், சம்பந்தம் மடத்தின் சாமி

                 முதலியார் மடத்தின் சொந்தக்காரர், இரண்டாயிரம் . ரூபாய்

 வெள்ளிக்கட்டி நஷ்டம், ... ஆனால் இருபதாயிரம் ரூபாய் எடை

 வெள்ளிக்கட்டி லாபம், அதுவும் வளர்கிற லாபம்... மக்களின்

 மடமை இருக்கும் வரை அந்த லாபம் குறையாது’’

                                                                                                                ( க.சி.ப. 56 )

                ஆட்டக்காவடி கதையில் வரும் மிராசுதாரர் மிருகண்டு அலகுகளைக் குத்திக்கொண்டு பால்காவடி எடுக்கிறார். வழியில்வ கனிமொழி என்ற பெண்ணைக் கண்டு காமம் கொள்கிறார். இப்படி பக்திப் பழமாகக் காட்சியளிக்கும் இவர் கணிமொழியின் வீட்டிற்கே சென்று அவளைக் கற்பழிக்கவும் முயலுகிறார்.

                பிரேத விசாரணை சிறுகதையில் வரும் அண்ணாமலை ஊர் கோயிலைக் காட்டுகிறார். ஆனால் தாழ்த்தப்பட்டவர்களை உள்ளே அனுமதிப்பதில்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட கருப்பாயியை தன் இச்சைக்குப் பயன்படுத்திக் கொண்டு, அவளைக் கைவிட்டு விடுகிறார். இவர் கட்டிய கோயிலுக்குள் இருக்கும் வினை தீர்த்த சுவாமி தாழ்த்தப்பட்டவர்களின் வினைகளைத் தீர்ப்பதில்லை. இந்தக் கோயிலில் பகுத்தறிவுவாதிகள் சிலர் சேர்ந்து அரிசன ஆலயப் பிரேவேசம் நடத்தத் திட்டமிடுகிறார்கள். இதற்குள் பிரவதவேதனையில் துடிக்கும் கருப்பாயியைத் தாழ்த்தப்பட்டவன் என்பதால் அரசு மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுக்கிறார். அதேசமயம் அண்ணாமலையின் தலைவலியைக் கேட்டு மருத்துவம் பார்க்க ஓடுகிறார். கருப்பாயியின் வயிற்றிலுள்ள குழந்தை அண்ணாமலையுடையது தான் என்றாலும் அவள் ஏழை, தாழ்த்தப்பட்டவள் என்பதால் அவளுக்கு மருத்துவம் மறுக்கப்படுகிறது. வேறு வழியின்றி கருப்பாயி கோயில் குளத்தில் விழுந்து உயிரைவிட, உண்மையறியாத மக்கள்,

                                சண்டாளர்களைக் கோயிலில் விழுறதுண்ணா சாமிக்கு

                                 அடுக்கவில்லை. சகுணத்தடை ஏற்பட்டுவிட்டது.’’

                                                                                                                                ( க. சி. ப. 62 )

என்று அரிசன பிரேவேசத்தைக் குறை கூறுகிறார்கள். மருத்துவரும், மருத்துவ உதவியாளரும் சாதி பார்த்து மருத்துவம் பார்க்கும் இழிநிலையை, கடவுளுக்குக் கோயில் கட்டும் ஒருவன் ஒரு பெண்ணைச் சீரழித்து கைவிட்டு தற்கொலைக்குத் தூண்டி தன் குழந்தையையே கொலை செய்யும் பாதகத்தை இக்கதை சுட்டுகிறது. ஒடுக்கப்பட்ட சாதியினர் பிணமான பின்னரே அரசு மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படும் அவலத்தையும் எடுத்துரைத்துள்ளது.

தப்பிவிட்டார்கள் என்ற சிறுகதை நாடுபோற்றும் வள்ளலாகிய, நாகேசுவரன் கோயிலுக்கு நவராத்திரி உபயம் கொடுத்தவராகிய, அகிலாண்டேசுவரி ஆலயத்தில் ஆயிரங்கால் மண்டபம் அமைத்த, புண்ணியவான் என்று மக்களால் போற்றப்படும் செல்வந்தராகிய இராமதுரையின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது. தன் ஆலையில் வேலை செய்யும் விட்டலின் மனைவி தங்கத்தைச் சீரழிக்கின்றார்.

அபாக்கிய சிந்தாமணி கதையில் வரும் இராமலிங்க சிவானந்தம் இராமலிங்க அடிகளாரின் அருட்பாக்களை, தேவார, திருவாசகங்களை மனப்பாடம் செய்து, வாயில் சிவ மந்திரத்தை எப்போதும் உச்சரித்துக் கொண்டே இருப்பவர். சிந்தாமணி என்ற அனாதைப் பெண்ணுக்கு குருகுலத்தில் அடைக்கலம் கொடுக்கிறார். அவர் மகனுக்கும் அவளுக்கும் ஏற்படும் காதலை அறிந்தவுடன், சுத்த சமரச சன்மார்க்கத்தைக் கைவிட்டுவிட்டு, சிந்தாமணி மீது களங்கம் சுமத்தி, அவளை விரட்டி தெருவில் பிச்சைக்காரியாக்கி விடுகின்றார்.

மேற்கூறிய கதைகளில் வரும் சங்கிலிச்சாமி, சின்னச்சாமி, மிருகண்டு, அண்ணாமலை, இராமலிங்க சிவானந்தம் போன்றோர் கடவுள் என்ற போர்வையைப் போத்திக் கொண்டு போலிவேடம் போட்டுக் கொண்டு பிறர் வாழ்க்கையைக் குறிப்பாக இளம்பெண்களின் வாழ்க்கையைச் சீரழிக்கின்றனர். இவர்களின் கடவுளின் போர்வையினால் மக்களும் ஏமாந்து உண்மையறியாமல் பாதிக்கப்பட்ட பெண்களை இழிவுபடுத்துகின்றனர்.

சமுதாயத்தில் சிலர் தமது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், பிறரைச் சுரண்டவும், கடவுளின் பெயரால் மூடநம்பிக்கைகளை விதைத்து, தனி மனித முன்னேற்றத்தையும், சமக விழிப்புணர்வையும் தடை செய்து வருகிற போக்கைக் கலைஞர் இச்சிறுகதைளின் வழி வெளிப்படுத்துகின்றனர்.

                மனிதன் பிறந்து வளர்ந்து நிர்ணயிக்கப்பட்ட பிறகுதான்

                  கடவுள் என்கிற வஸ்து நிச்சயம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்

                 ஆதை யாரும் மறுக்க முடியாது’’

என்ற பெரியாரின் கருத்தை உள்வாங்கிக்கெண்ட கலைஞர் தாம் படைத்த கதைமாந்தர்களின் துணை கொண்டு, மனிதன் தன் சுயநலத்திற்காகப் படைத்த படைப்பாகிய ஆண்டவனைக் கொண்டு சாதி, சமயம், தீண்டாமை முதலானவற்றைப் படைத்துப் பிரிவினையை ஏற்படுத்தி உள்ளதால், கடவுளை பல இடங்களில் சாடுகிறார்.

                                நம்பினோர்க்குக் கைகொடுக்காத ராமபிரானைவிட இந்த

                                 விஷம் இனிது’’

                                                                                                                                ( விஷம் இனிது, ப. 237 )

என்கிறார்.

மதம் ஒரு போதை என்பதைவிட ஓர் அணுகுண்டு என்பதே பொருந்தும் என்பதை அணில் குஞ்சு கதை சொல்கிறது. இராமன் கதை தெரியாத நிலையில் அணில் குஞ்சு மேல் பாசம் காட்டிய இராவுத்தர், இராமன் அருள்பெற்ற உயிரினம் என்ற தெரிந்த நிலையில் அதைத் தூக்கி ஏறியச் சொல்கிறார். மத பேதம் மனிதனைத் தாண்டி பிற உயிரினங்களையும் பிரித்தாள்கிறது. அய்யங்காரும் இராவுத்தர் அணிலைத் தொடக் கூடாது என்கிறார். மக்களின் குரூர மன விகாரங்களை நுட்பமாக கலைஞர் வெளிப்படுத்தியுள்ளார். மனதில் வேற்றுமை தோன்றிவிட்டால் பகைக்கு ஒரு அணில் குஞ்சுகூட காரணமாகிவிடுகிறது. கடவுளின் பெயரால் மனிதர்கள் பிரிவினை உணர்வை பெறுவதோடு மூடநம்பிக்கையினால் வாழ்வையும் இழக்கிறார்கள். கலைஞரின் வெள்ளிக்கிழமை ந hவலின் வரும் சிவநேசம் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உடையவர். ஆனால் மகள் திருமணம் தடைபட்டு, மூவரும் மனஉளைச்சல் அடைந்து இறக்கின்றனர். “கடல் கொந்தளிப்பில் நாடு நகரங்கள் நாசமாவதையும், அமைதியோடு பார்த்துக் கொண்டிருக்கிற ஆண்டவன் சிவநேசர் குடும்பத்திலே ஏற்பட்ட சிறு கொந்தளிப்பு கண்டா அதிர்ச்சி அடையப் போகிறான்’’ ( வெள்ளிக்கிழமை, ப. 78 ) என்று கதாசிரியர் கேள்வி கேட்கிறார்.

ஆட்டக்காவடி என்ற கதையில் மூடநம்பிக்கையை எதிர்த்து கடவுள் நம்பிக்கையைக் கைவிட்டு பகுத்தறிவுப் பாதையில் நடைபோடும் கணவன், மனைவி இருவரும் வறுமையில் வாடுகின்றனர். கணவன் காவடியாட்டம் ஆடுபவன். கடவுள் மறுப்பு கொள்கை பின்பற்றிய பிறகு ஆட்டக்காவடியைக் கைவிட்டுவிடுகிறான். ஆனால் வறுமையிலிருந்து மீள முருகன் கோவிலுக்கு கூலிக்காக காவடி ஆட்டம் ஆடப்போவதாக தெரிவிக்கிறான். மனைவி மறுப்பையும் மீறி காவடியாட்டம் ஆடுகிறாள். ஆனால் மனைவி கொள்கைப் பகுத்தறிவுப் பாதையில் பயணிப்பவர்களுக்கு மன உறுதி தேவை என்பதை இக்கதை சுட்டுகிறது. இவ்வாறு கடவுள் மறுப்பும், பகுத்தறிவு பாதையின் தேவையையும் வலியுறுத்தும் கதைகள் கலைஞரின் எடுப்பான நடையில் பொருத்தமான கதைப்பாத்திரங்களோடு வெளிப்பட்டுள்ளள.

பெண்களின் நிலை

கடவுள் மறுப்பு, பகுத்தறிவுப்பாதை என்ற நோக்கிலான கதைகளில் பெண்களின் துயரத்திற்குக் காரணம் சமயம் சார்ந்த மூடநம்பிக்கைகளே என்பதை முன்னிறுத்திக் செல்கிறார். கங்கையின் காதல் கதையில் வயதான சிவனை மணமுடித்த கங்கையின் நிலையைப் படம்பிடிக்கிறார். நளாயினை கதை குஷ்டரோகிக்கு வாழ்க்கைப்பட்ட நளாயினியின் வாழ்க்கை துயரத்தைப் படம் பிடிக்கிறது.

கொத்தக்கிளிஎன்ற சிறுகதை பெண்களைக் குறிப்பாக, அழகான பெண்களைப் போகப் பொருளாகக் கருதி அனுபவித்து கைவிட்டுவிடும் காதலனைத் திராவகம் ஊற்றி அவனுடைய அழகைச் சிதைத்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ளும் விமலா என்ற பெண்ணைப் பற்றிக் கூறுகிறது. இது போன்று கைவிடப்படும் பெண்கள்,வேறுவழியின்றி பெறுகின்ற குழந்தையைக் குப்பைத் தொட்டியில் போடுகின்ற அவலத்தை மற்றொரு கதை பேசுகிறது. பிரேத விசாரணைஎன்னும் சிறுகதை, சாதியால் ஒடுக்கப்பட்ட கர்ப்பிணி பெண் பிணமான பின்னரே மருத்துவமனைக்குள் அனுமதிக்கப் படுவதை அவலத்தோடு எடுத்துரைத்துள்ளது. குப்பைத்தொட்டிகதை குப்பைத்தொட்டி கதை சொல்லும் போக்கில் வேண்டாத சடப்பொருள்களை, தூக்கிப்போடுவது போலவே, வேண்டாத உயிருள்ள குழந்தையையும், குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுப் போகும் சமூகச் சீரழிவைப் படம் பிடித்துள்ளது.

சீமான் வீட்டச் சீக்காளிஎன்ற கதை இதன் கதைமாந்தர் மனிதர் தான் என்பதைப்போல கதையை நகர்த்தி இறுதியில் சீக்காளி என்பது ஒரு நாய் என்பதாக முடிகிறது. மனிதப் பிறவிக்குக் கிடைக்காத மதிப்பு, உயர்குல மக்களின் வீட்டில் இருக்கும் நாய்க்குக் கிடைக்கும் என்பதைச் சுட்டும் கதையாக இக்கதை உள்ளது. தாய்மை என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் உரியது. வயிற்றில் சுமப்பது மட்டும் தாய்மை அல்ல, பெற்ற குழந்தையை முறையாக வளர்ப்பதுதான் தாய்மை. ஆதை ஓர் ஆண் செய்தாலும் அவனும் தாய்மையுடையவனே என்பதை சுமந்தவன்(ள்)என்ற கதை சொல்லுகிறது. அண்ணியைத் தன்னுடன் இணைத்து பேசும் சூழலில் உண்மையை நிரூபிக்க அண்ணி கொடுக்கும் விஷத்தையும் மகிழ்வோடு பருகும் ஆணின் தன்மானத்தை உயர்த்தும் விஷம் இனிதுகதையில் படைத்துள்ளார்.

முடிவுரை

                மு.க. முக்காஜி, மூனாகானா, மறவன், விமான், மாலுமி போன்றவை கலைஞர் எழுதிய சிறுகதைகளில் அவர் பயன்படுத்திய புனைப்பெயர்கள். பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் பட்டைத் தீட்டப்பெற்ற கலைஞரின் சிறுகதைகள் தமிழ்ச்சமூகத்தின் அவவத்தைச் சுட்டியுள்ளன. சமுதாயத்தில் புரையோடிப் போன புண்களின் இரணங்களைக் காட்டுவதோடு அதற்கான காரணங்களையும், தீர்வுகளையும் கலைஞர் போகிற போக்கில் சொல்லிப் போகிறார். கு.ப.ரா அழகிரிசாமி, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், பாணி ஒரு ரகம் என்றால் கலைஞரின் பாணி இன்னொரு ரகம். மூடநம்பிக்கைகள் சமூக முன்னேற்றத்திற்குத் தடை என்பதை உணர்த்தி சிறந்த சமுதாயம் அமைய வழிகாட்டியுள்ளார்.

                                                                                பயன்பட்ட நூல்

                கருணாநிதி (1986 ) - கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள், பாரதி நிலையம், சென்னை.

 

 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?