கலைஞரின் சிறுகதைகள் காட்டும் சமூகம்
முன்னுரை
தன்னிகரற்ற அரசியலாளர், மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், பாடலாசிரியர், நடிகர், நிர்வாகி, பத்திரிக்கையாசிரியர் வெளியீட்டாளர் என்று பன்முக ஆளுமையில் அரசப் புலவராக வலம் வந்த பெருமையுடையவர் கலைஞர் மு. கருணாநிதி. திரைப்படத் துறையில் தனி முத்திரைப் பதித்தவர். “கன்னித்தமிழ் இருக்கிற வரை இருக்கிற பெயர் கருணாநிதி’’ என்கிறார் வலம்புரிஜான். “அரசியல் ( ப.27) சாணக்கியம் இலக்கியப் பிரக்ஞை இரண்டும் இணைவது அபூர்வம்’’ என்பார் இந்திரா பார்த்தசாரதி. அந்த இரண்டும் இணைந்த யுத்தப் பேரிகையே கலைஞர் கருணாநிதி. பல்வேறு திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய பெருமையுடைய கருணாநிதி படைப்பிலக்கியங்களுக்கு ஆற்றியுள்ள பங்கு மகத்தானது. புனைக்கதை இலக்கியங்களான நாவல்களிலும், சிறுகதைகளிலும் பெரும் பங்காற்றியுள்ளார். புதையல், வெள்ளிக்கிழமை, சுருளிமலை, வான்கோழி, ஒரே இரத்தம், ஒரு மரம் பூத்தது முதலான சமூக நாவல்களையும், ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டிசிங்கம், பொன்னர்சங்கர், பாயும்புலி, பண்டாரக வன்னியம் முதலான வரலாற்று நாவல்களையும் படைத்துள்ளார். கிழவன் கனவு என்ற சிறுகதை தொடங்கி இருநூறு சிறுகதைகளுக்கும் மேலாக எழுதியுள்ளார். சிறுகதைகளிலும் தான் பின்பற்றிய பகுத்தறிவுப் பாதையிலிருந்த விலகாமல், திராவிட இயக்கக் கருத்துக்களை உயிரோட்டமான நடையில் படைத்துள்ளார். திராவிட இயக்க எழுத்தாளர்கள் அண்ணா, ஆசைத்தம்பி, தென்னரசு, டி.கே. சீனிவாசன், தில்லை வில்லாளன் போன்றோர் வரிசையில் கலைஞர் அவர்களுக்குத் தனி இடம் உண்டு.
சிறுகதைகள்
கலைஞரின் சிறுகதைகள் எளிய மனிதர்களின் மனநிலை வாழ்க்கைமுறை, விருப்பங்கள், சாதிசமய மறுப்பு, கலப்புத் திருமணம், தீண்டாமை, பெண்ணடிமை, விளிம்பி நிலை மக்களின் ஏமாற்றம், பெண்ணை உடலாக மட்டுமே பார்க்கும் நிலை போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளன.
புராணங்களைச் சாடும் வகையில் இவருடைய கதைகள் ( நளாயினி ) அமைந்துள்ளன. நாட்டின் சூழலை நையாண்டி செய்யும் ‘ஆலமரத்துப் புறா’ இவருடைய நகைச்சுவை உணர்விற்கு சிறந்த உதாரணம்.
இவர் பாலியல் தொழில் செய்யும் பெண்களை மையப்பொருளாக்கி அவர்களின் நிலையை, அவர்கள் அச்சூழலுக்குத் தள்ளப்பட்ட சூழலை மனிதாபிமான நோக்கில் சிறுகதையில் படைத்துள்ளார்.
கலைஞர் தமது காலத்தோடும், சமுதாயத்தோடும், நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறார் என்பதை அவர் தம் சிறுகதைகளின் கருக்கன் சான்று பகர்கின்றன.
சமயங்கள் மக்களை மூடநம்பிக்கைக்கும் ஆழ்த்துகின்றன. இயல்பான அறிவையும்கூட கெடுத்து, மணிதர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி மனிதநேயத்தையும் அழித்துவிடுகின்றன என்பதை கலைஞரின் சிறுகதைகள் அடிநாதமாகக் கொண்டுள்ளன.
சங்கிலிச்சாமி என்ற சிறுகதை மக்கள் கண்கண்ட தெய்வமாகப் போற்றும் சங்கிலியானந்தசாமியின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது. இரயில் தண்டவாளத்தை தன் கையாளை வைத்துத் தகர்க்கச் செய்து, தன் ஞான திருஷ்டியால் இரயில் தண்டவாளம் உடைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, இரயில் சங்கிலியை நிறுத்தி பயணிகளைக் காப்பாற்றி ‘சங்கிலிச்சாமி’ எனப் பட்டம் பெற்று ஊரை ஏமாற்றுகிறார். அவரை நம்பும் சின்னப்பண்ணை முதலியார் சாமியார் தன் வெள்ளிக் கட்டிகளைத் தங்கக் கட்டிகளாக மாற்றித் தருவார் என நம்ப, சாமியாரோ, தன் சீடனையும் ஏமாற்றிவிட்டு வெள்ளியோடு தப்பி ஓடுகிறார். சீடனும், சின்னப் பண்ணையும் சாமியரைக் கண்டுபிடித்து அவரைக் கொலைசெய்து, அவர் நிஷ்டையில் சமாதியாகிவிட்டதாகக் கூறி, விழா நடத்தி மடத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கிறார்கள். சங்கிலியானந்தா கடவுளின் பெயரால் தன்னை நம்பியவர்களை ஏமாற்றுகிறார். ஏமாற்றப்பட்டவர்களோ அவரையே கொலை செய்து அவர் புகழைத் தங்களுக்குச் சாதகமாக்கிப் பணம் சம்பாதிக்கிறார்கள்.
“சாமிகளுக்கு மாபெரும் மடம், சம்பந்தம் மடத்தின் சாமி
முதலியார் மடத்தின் சொந்தக்காரர், இரண்டாயிரம் . ரூபாய்
வெள்ளிக்கட்டி நஷ்டம், ... ஆனால் இருபதாயிரம் ரூபாய் எடை
வெள்ளிக்கட்டி லாபம், அதுவும் வளர்கிற லாபம்... மக்களின்
மடமை இருக்கும் வரை அந்த லாபம் குறையாது’’
( க.சி.ப. 56 )
ஆட்டக்காவடி கதையில் வரும் மிராசுதாரர் மிருகண்டு அலகுகளைக் குத்திக்கொண்டு பால்காவடி எடுக்கிறார். வழியில்வ கனிமொழி என்ற பெண்ணைக் கண்டு காமம் கொள்கிறார். இப்படி பக்திப் பழமாகக் காட்சியளிக்கும் இவர் கணிமொழியின் வீட்டிற்கே சென்று அவளைக் கற்பழிக்கவும் முயலுகிறார்.
பிரேத விசாரணை சிறுகதையில் வரும் அண்ணாமலை ஊர் கோயிலைக் காட்டுகிறார். ஆனால் தாழ்த்தப்பட்டவர்களை உள்ளே அனுமதிப்பதில்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட கருப்பாயியை தன் இச்சைக்குப் பயன்படுத்திக் கொண்டு, அவளைக் கைவிட்டு விடுகிறார். இவர் கட்டிய கோயிலுக்குள் இருக்கும் வினை தீர்த்த சுவாமி தாழ்த்தப்பட்டவர்களின் வினைகளைத் தீர்ப்பதில்லை. இந்தக் கோயிலில் பகுத்தறிவுவாதிகள் சிலர் சேர்ந்து அரிசன ஆலயப் பிரேவேசம் நடத்தத் திட்டமிடுகிறார்கள். இதற்குள் பிரவதவேதனையில் துடிக்கும் கருப்பாயியைத் தாழ்த்தப்பட்டவன் என்பதால் அரசு மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுக்கிறார். அதேசமயம் அண்ணாமலையின் தலைவலியைக் கேட்டு மருத்துவம் பார்க்க ஓடுகிறார். கருப்பாயியின் வயிற்றிலுள்ள குழந்தை அண்ணாமலையுடையது தான் என்றாலும் அவள் ஏழை, தாழ்த்தப்பட்டவள் என்பதால் அவளுக்கு மருத்துவம் மறுக்கப்படுகிறது. வேறு வழியின்றி கருப்பாயி கோயில் குளத்தில் விழுந்து உயிரைவிட, உண்மையறியாத மக்கள்,
“சண்டாளர்களைக் கோயிலில் விழுறதுண்ணா சாமிக்கு
அடுக்கவில்லை. சகுணத்தடை ஏற்பட்டுவிட்டது.’’
( க. சி. ப. 62 )
என்று அரிசன பிரேவேசத்தைக் குறை கூறுகிறார்கள். மருத்துவரும், மருத்துவ உதவியாளரும் சாதி பார்த்து மருத்துவம் பார்க்கும் இழிநிலையை, கடவுளுக்குக் கோயில் கட்டும் ஒருவன் ஒரு பெண்ணைச் சீரழித்து கைவிட்டு தற்கொலைக்குத் தூண்டி தன் குழந்தையையே கொலை செய்யும் பாதகத்தை இக்கதை சுட்டுகிறது. ஒடுக்கப்பட்ட சாதியினர் பிணமான பின்னரே அரசு மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படும் அவலத்தையும் எடுத்துரைத்துள்ளது.
தப்பிவிட்டார்கள் என்ற சிறுகதை நாடுபோற்றும் வள்ளலாகிய, நாகேசுவரன் கோயிலுக்கு நவராத்திரி உபயம் கொடுத்தவராகிய, அகிலாண்டேசுவரி ஆலயத்தில் ஆயிரங்கால் மண்டபம் அமைத்த, புண்ணியவான் என்று மக்களால் போற்றப்படும் செல்வந்தராகிய இராமதுரையின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது. தன் ஆலையில் வேலை செய்யும் விட்டலின் மனைவி தங்கத்தைச் சீரழிக்கின்றார்.
அபாக்கிய சிந்தாமணி கதையில் வரும் இராமலிங்க சிவானந்தம் இராமலிங்க அடிகளாரின் அருட்பாக்களை, தேவார, திருவாசகங்களை மனப்பாடம் செய்து, வாயில் சிவ மந்திரத்தை எப்போதும் உச்சரித்துக் கொண்டே இருப்பவர். சிந்தாமணி என்ற அனாதைப் பெண்ணுக்கு குருகுலத்தில் அடைக்கலம் கொடுக்கிறார். அவர் மகனுக்கும் அவளுக்கும் ஏற்படும் காதலை அறிந்தவுடன், சுத்த சமரச சன்மார்க்கத்தைக் கைவிட்டுவிட்டு, சிந்தாமணி மீது களங்கம் சுமத்தி, அவளை விரட்டி தெருவில் பிச்சைக்காரியாக்கி விடுகின்றார்.
மேற்கூறிய கதைகளில் வரும் சங்கிலிச்சாமி, சின்னச்சாமி, மிருகண்டு, அண்ணாமலை, இராமலிங்க சிவானந்தம் போன்றோர் கடவுள் என்ற போர்வையைப் போத்திக் கொண்டு போலிவேடம் போட்டுக் கொண்டு பிறர் வாழ்க்கையைக் குறிப்பாக இளம்பெண்களின் வாழ்க்கையைச் சீரழிக்கின்றனர். இவர்களின் கடவுளின் போர்வையினால் மக்களும் ஏமாந்து உண்மையறியாமல் பாதிக்கப்பட்ட பெண்களை இழிவுபடுத்துகின்றனர்.
சமுதாயத்தில் சிலர் தமது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், பிறரைச் சுரண்டவும், கடவுளின் பெயரால் மூடநம்பிக்கைகளை விதைத்து, தனி மனித முன்னேற்றத்தையும், சமக விழிப்புணர்வையும் தடை செய்து வருகிற போக்கைக் கலைஞர் இச்சிறுகதைளின் வழி வெளிப்படுத்துகின்றனர்.
“மனிதன் பிறந்து வளர்ந்து நிர்ணயிக்கப்பட்ட பிறகுதான்
கடவுள் என்கிற வஸ்து நிச்சயம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்
ஆதை யாரும் மறுக்க முடியாது’’
என்ற பெரியாரின் கருத்தை உள்வாங்கிக்கெண்ட கலைஞர் தாம் படைத்த கதைமாந்தர்களின் துணை கொண்டு, மனிதன் தன் சுயநலத்திற்காகப் படைத்த படைப்பாகிய ஆண்டவனைக் கொண்டு சாதி, சமயம், தீண்டாமை முதலானவற்றைப் படைத்துப் பிரிவினையை ஏற்படுத்தி உள்ளதால், கடவுளை பல இடங்களில் சாடுகிறார்.
“நம்பினோர்க்குக் கைகொடுக்காத ராமபிரானைவிட இந்த
விஷம் இனிது’’
( விஷம் இனிது, ப. 237 )
என்கிறார்.
மதம் ஒரு போதை என்பதைவிட ஓர் அணுகுண்டு என்பதே பொருந்தும் என்பதை அணில் குஞ்சு கதை சொல்கிறது. இராமன் கதை தெரியாத நிலையில் அணில் குஞ்சு மேல் பாசம் காட்டிய இராவுத்தர், இராமன் அருள்பெற்ற உயிரினம் என்ற தெரிந்த நிலையில் அதைத் தூக்கி ஏறியச் சொல்கிறார். மத பேதம் மனிதனைத் தாண்டி பிற உயிரினங்களையும் பிரித்தாள்கிறது. அய்யங்காரும் இராவுத்தர் அணிலைத் தொடக் கூடாது என்கிறார். மக்களின் குரூர மன விகாரங்களை நுட்பமாக கலைஞர் வெளிப்படுத்தியுள்ளார். மனதில் வேற்றுமை தோன்றிவிட்டால் பகைக்கு ஒரு அணில் குஞ்சுகூட காரணமாகிவிடுகிறது. கடவுளின் பெயரால் மனிதர்கள் பிரிவினை உணர்வை பெறுவதோடு மூடநம்பிக்கையினால் வாழ்வையும் இழக்கிறார்கள். கலைஞரின் வெள்ளிக்கிழமை ந hவலின் வரும் சிவநேசம் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உடையவர். ஆனால் மகள் திருமணம் தடைபட்டு, மூவரும் மனஉளைச்சல் அடைந்து இறக்கின்றனர். “கடல் கொந்தளிப்பில் நாடு நகரங்கள் நாசமாவதையும், அமைதியோடு பார்த்துக் கொண்டிருக்கிற ஆண்டவன் சிவநேசர் குடும்பத்திலே ஏற்பட்ட சிறு கொந்தளிப்பு கண்டா அதிர்ச்சி அடையப் போகிறான்’’ ( வெள்ளிக்கிழமை, ப. 78 ) என்று கதாசிரியர் கேள்வி கேட்கிறார்.
ஆட்டக்காவடி என்ற கதையில் மூடநம்பிக்கையை எதிர்த்து கடவுள் நம்பிக்கையைக் கைவிட்டு பகுத்தறிவுப் பாதையில் நடைபோடும் கணவன், மனைவி இருவரும் வறுமையில் வாடுகின்றனர். கணவன் காவடியாட்டம் ஆடுபவன். கடவுள் மறுப்பு கொள்கை பின்பற்றிய பிறகு ஆட்டக்காவடியைக் கைவிட்டுவிடுகிறான். ஆனால் வறுமையிலிருந்து மீள முருகன் கோவிலுக்கு கூலிக்காக காவடி ஆட்டம் ஆடப்போவதாக தெரிவிக்கிறான். மனைவி மறுப்பையும் மீறி காவடியாட்டம் ஆடுகிறாள். ஆனால் மனைவி கொள்கைப் பகுத்தறிவுப் பாதையில் பயணிப்பவர்களுக்கு மன உறுதி தேவை என்பதை இக்கதை சுட்டுகிறது. இவ்வாறு கடவுள் மறுப்பும், பகுத்தறிவு பாதையின் தேவையையும் வலியுறுத்தும் கதைகள் கலைஞரின் எடுப்பான நடையில் பொருத்தமான கதைப்பாத்திரங்களோடு வெளிப்பட்டுள்ளள.
பெண்களின் நிலை
கடவுள் மறுப்பு, பகுத்தறிவுப்பாதை என்ற நோக்கிலான கதைகளில் பெண்களின் துயரத்திற்குக் காரணம் சமயம் சார்ந்த மூடநம்பிக்கைகளே என்பதை முன்னிறுத்திக் செல்கிறார். கங்கையின் காதல் கதையில் வயதான சிவனை மணமுடித்த கங்கையின் நிலையைப் படம்பிடிக்கிறார். நளாயினை கதை குஷ்டரோகிக்கு வாழ்க்கைப்பட்ட நளாயினியின் வாழ்க்கை துயரத்தைப் படம் பிடிக்கிறது.
‘கொத்தக்கிளி’ என்ற சிறுகதை பெண்களைக் குறிப்பாக, அழகான பெண்களைப் போகப் பொருளாகக் கருதி அனுபவித்து கைவிட்டுவிடும் காதலனைத் திராவகம் ஊற்றி அவனுடைய அழகைச் சிதைத்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ளும் விமலா என்ற பெண்ணைப் பற்றிக் கூறுகிறது. இது போன்று கைவிடப்படும் பெண்கள்,வேறுவழியின்றி பெறுகின்ற குழந்தையைக் குப்பைத் தொட்டியில் போடுகின்ற அவலத்தை மற்றொரு கதை பேசுகிறது. ‘பிரேத விசாரணை’ என்னும் சிறுகதை, சாதியால் ஒடுக்கப்பட்ட கர்ப்பிணி பெண் பிணமான பின்னரே மருத்துவமனைக்குள் அனுமதிக்கப் படுவதை அவலத்தோடு எடுத்துரைத்துள்ளது. ‘குப்பைத்தொட்டி’ கதை குப்பைத்தொட்டி கதை சொல்லும் போக்கில் வேண்டாத சடப்பொருள்களை, தூக்கிப்போடுவது போலவே, வேண்டாத உயிருள்ள குழந்தையையும், குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுப் போகும் சமூகச் சீரழிவைப் படம் பிடித்துள்ளது.
‘சீமான் வீட்டச் சீக்காளி’ என்ற கதை இதன் கதைமாந்தர் மனிதர் தான் என்பதைப்போல கதையை நகர்த்தி இறுதியில் சீக்காளி என்பது ஒரு நாய் என்பதாக முடிகிறது. மனிதப் பிறவிக்குக் கிடைக்காத மதிப்பு, உயர்குல மக்களின் வீட்டில் இருக்கும் நாய்க்குக் கிடைக்கும் என்பதைச் சுட்டும் கதையாக இக்கதை உள்ளது. தாய்மை என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் உரியது. வயிற்றில் சுமப்பது மட்டும் தாய்மை அல்ல, பெற்ற குழந்தையை முறையாக வளர்ப்பதுதான் தாய்மை. ஆதை ஓர் ஆண் செய்தாலும் அவனும் தாய்மையுடையவனே என்பதை ‘சுமந்தவன்(ள்)’ என்ற கதை சொல்லுகிறது. அண்ணியைத் தன்னுடன் இணைத்து பேசும் சூழலில் உண்மையை நிரூபிக்க அண்ணி கொடுக்கும் விஷத்தையும் மகிழ்வோடு பருகும் ஆணின் தன்மானத்தை உயர்த்தும் ‘விஷம் இனிது’ கதையில் படைத்துள்ளார்.
முடிவுரை
மு.க. முக்காஜி, மூனாகானா, மறவன், விமான், மாலுமி போன்றவை கலைஞர் எழுதிய சிறுகதைகளில் அவர் பயன்படுத்திய புனைப்பெயர்கள். பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் பட்டைத் தீட்டப்பெற்ற கலைஞரின் சிறுகதைகள் தமிழ்ச்சமூகத்தின் அவவத்தைச் சுட்டியுள்ளன. சமுதாயத்தில் புரையோடிப் போன புண்களின் இரணங்களைக் காட்டுவதோடு அதற்கான காரணங்களையும், தீர்வுகளையும் கலைஞர் போகிற போக்கில் சொல்லிப் போகிறார். கு.ப.ரா அழகிரிசாமி, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், பாணி ஒரு ரகம் என்றால் கலைஞரின் பாணி இன்னொரு ரகம். மூடநம்பிக்கைகள் சமூக முன்னேற்றத்திற்குத் தடை என்பதை உணர்த்தி சிறந்த சமுதாயம் அமைய வழிகாட்டியுள்ளார்.
பயன்பட்ட நூல்
கருணாநிதி (1986 ) - கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள், பாரதி நிலையம், சென்னை.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?