மாணவர்கள் திறன் வளர்த்தலில் பாடத்திட்டம் பெரும் பங்காற்றுகிறது.
மெக்காலே கல்விமுறைதான் தற்போதைய
குறைபாட்டிற்குக் காரணம் என்று கூறிக்கொண்டிருக்காமல், இந்தியக்
குழந்தைகளுக்கேற்ற கல்விமுறையை இந்தியாவின் எதிர்காலத்தைக் கவனத்தில்
கொண்டு, புதிய பாடத்திட்டங்களைக் கொண்ட கல்விமுறையை உருவாக்க வேண்டும்.
புரிந்துகொண்டு படிக்கும் கல்வி முறையும், புரிந்து கொண்டு படைப்புகளை உருவாக்கும் கல்விமுறையும் தற்காலத் தேவையாக உள்ளது.
அறநூல்களைப் பயிலுவதும், பாடமாக
வைப்பதும், பயன்படுத்துவதும் இன்று குறைந்துவிட்டது. வாழ்க்கையின்
நிலைகெடும் ஒவ்வொரு நிலையிலும், தக்க அறிவுரை அளித்துக் காக்கக்கூடியவை அற
நூல்கள். இவை பழைய அனுபவங்களின் சாரங்கள். இவற்றை மறக்காமல் பயின்று போற்ற
வேண்டும், மாணவர்களுக்குக் குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு இவற்றைக்
கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது.
மாணவர்
கற்கும் பாடங்கள் அறிவு சார்ந்து மாணவனின் சிந்திக்கும் திறனை
மேம்படுத்துவதாக அமையவேண்டும். அறிவு நுட்பமுடையவனாக ஒவ்வொரு மாணவரும்
உருவாகவேண்டுமெனில் சிறந்த ஆளுமைக்கான பண்புகள், மனவெழுச்சியைக்
கட்டுப்படுத்துதல் முதலானவற்றைத் தரக்கூடிய பாடத்திட்டங்கள்
வகுக்கப்படவேண்டும். அறநெறிப் பாடங்களே தன்னம்பிக்கை, சுய-மதிப்பு, சுய
முன்னேற்றம், ஒழுக்க வளர்ச்சி போன்ற பண்புகளை மாணவர்களிடம் தரக்கூடியவை.