முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Saturday, 30 April 2016

ஆசிரியர்- மாணவர் உறவு
ஆசிரியர்- மாணவர் உறவு


Image result for professor

ஒரு சொல் சிறுசொல் அதுகுரு சொல்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திரு வார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே

இது திருமந்திரப்பாடல் வழி வெளிப்படலாகும் குரு – சீடர் உறவு நிலை. இது குருகுலத்தில் பயிலும் சீடர்கள் மேற்கொள்ள வேண்டிய வழி முறைகள். குருகுலத்தில் வாழ்க்கைக் கல்வியாகிய சுயஒழுக்கம், பொது ஒழுக்கம், தன்னமின்மை, தனது தேவைகளைத் தானே பூர்த்தி செய்தல், வேற்றுமையின்மை, நட்பு பாராட்டல், பிறருக்கு உதவுதல் இவை குருகுல மாணவர்கள் கற்றுக் கொண்ட வாழ்க்கைப்பாடங்கள். குருகுல முறையில் அனைவருக்கும் சமமான கல்வி தராமை, ஓராசிரியர் போன்ற குறைகளும் உள்ளன. அது போல  நிறைகளும் உள்ளன. குரு – சீடன் முறையில் குரு சொன்னதை செய்து முடிப்பவன் சீடன். தற்கால ஆசிரியர் – மாணவர் உறவில் ஆசிரியர் சொன்னதை உடனே மறந்து விடுபவன் மாணவன். இந்து மத்த்தில் குரு தெய்வமாகவே வணங்கப்படக் கூடியவர். கபீர்தாசர் கடவுளும் குருவும் ஓரிடத்தில் தோன்றினால் யாரை வணங்குவது என்பதற்கு குருவைத் தான் முதலில் வணங்க வேண்டும் என்கிறார். கடவுளைக் காட்டியவரே குரு என்பதால் குருதான் மேன்மையானவர். கடவுளை மட்டுமா காட்டுபவர் குரு?

தாய் தந்தையைக் காட்டுவார்.
தந்தை குருவைக் காட்டுவார்
குரு உன்னை உனக்குக் காட்டுவார்.

 ஒரு மாணவன் தன் திறமைகளை குருவின்  மூலமாகவே அறிந்து கொள்கிறான்.


இன்றைய கல்வி முறையில் ஆசிரியர் – மாணவர் உறவு நிலை சொல்லிக் கொள்ளும் படி இல்லை. இவர்களுக்கிடையிலான உறவில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. வகுப்பு மாணவனோடு ஓடிப் போகும் ஆசிரியை, மாணவியிடம் தவறுதலாக நடக்கும் ஆசிரியர், ஆசிரியரை ஒரு தலையாகக் காதலிக்கும் மாணவி மாபெரும் சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

சிறுவயதில் நான் ஒன்றாம் வகுப்புப் படிக்கும்போது நடந்த நிகழ்ச்சி. இன்றும் நினைவிருக்கிறது. அப்போது உட்கார பலகைதான். தாங்கிகளுடைய கரும்பலகைதான். இருபது மாணவ மாணவிகள் இருப்போம். சிலேட்டும், சிலேட் பென்சிலும் ஒரு மஞ்சள் பையுடன் வண்ண ஆடையில் பள்ளி என்ற ஞாபகம். அரசு பள்ளிதான். வயதான மேரி டீச்சர் கரும்பலகையில் அழகாக அகர, ககர வரிசைகளை கோடு போட்டு எழுதியிருந்தார். எழுதி விட்டு எங்களை எழுதச் சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார். நான் சீக்கிரம் எழுத வேண்டுமென்று கரும்பலகைக்கு முன்னால் போய் நின்று கொண்டு ஒரு கையில் கனமான சிலேட் பலகையைத் தாங்கியபடி எழுதத் தொடங்கினேன். பின்னால் மாணவர்கள் ஆசிரியையிடம் என்னை நகரச் சொல்லி கூச்சலிட்டார்கள். அப்போது தான் நான் உணர்ந்தேன் பிறருக்கு மறைத்ததை. மேரி டீச்சரை அச்சத்தோடு பார்த்தேன். டீச்சர் கனிவோடுஅம்மா அப்படிக் கரும்பலகை ஓரமா நின்னு எழுது. சீக்கிரமா எழுதிடலாம்என்றார். என் மனதைப் புரிந்து உடனடியாகக் கனிவோடு பதிலளித்ததை இன்றும் மறக்க முடியவில்லை. அவர் என்னைத் திட்டியிருக்கலாம். உட்கார்ந்து எழுதும்படி மிரட்டியிருக்கலாம். அடித்திருக்கலாம். தட்டிக்குப் பிறகு அமர்ந்துள்ள மற்றொரு ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் அந்த ஆசிரியரிடம் அடி வாங்கி அழுவதைக் கேட்டு மிரண்டிருக்கிறேன்.ஆனால் பிற மாணவர்களுக்கு நான் மறைத்தபடி நின்றதை சரியான விதத்தில் புரிந்துகொண்டு பக்குவமாக நடந்து கொண்ட அவர் இன்னும் நினைவிலிருக்கிறார். அவர் சொல்லிக்கொடுத்த எதுவும் நினைவில் இல்லை இந்த நிகழ்ச்சியைத் தவிர. நான் சரியான விதத்தில் புரிந்து கொள்ளப்பட்டேன் என்பதே என்னுடைய புரிதலாக இருந்தது. அப்போதுதான் எனக்குப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் ஊன்றப்பட்டிருக்க வேண்டும். அதுபோல் ஐந்தாம் வகுப்பில் குப்புசாமி வாத்தியார் கையில் நகசுத்தி வந்து எழுதமுடியாமல் தவித்த போது என் நோட்டில் அவரே முத்துமுத்தாகத் தேர்விற்கான வினா விடைகளை ஐந்து பக்கங்கள் எழுதித் தந்தார். அந்த அழகான கையெழுத்தும் மாணவர்கள் மீதான அக்கறையும் இன்று நான் பேராசிரியராகப் பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் மறக்க முடியவில்லை.
இவர்களெல்லாம் பண்டிகை நாளின்போது கூடபள்ளிக்கூடம் போவேன்என்று நான் அடம்பிடிக்கக் காரணங்களாயினர்.

அரசுப்பள்ளிதான். ஒரே ஆசிரியர்தான் எல்லாப் பாடங்களையும் எடுத்தார். 20 மாணவர்கள் தான். ஒவ்வொரு மாணவருமே இருபது பேரின் பெயரையும் ஒப்பித்தோம். ஒன்றாகச் சத்தமிட்டு மனனம் செய்தோம். கூடுதல் மாணவர்கள் ஒரு வகுப்பிலிருந்தால் வகுப்பு பிரிக்கும் போது எந்த வகுப்பில் இருக்க விரும்புகிறாய் என்று ஐந்தாம் வகுப்பில் கேட்டு அதற்கேற்று பிரித்த ஞாபகம்.
ஆசிரியர்-மாணவர் உறவு என்பது வகுப்பாசிரியை ஒரு தாய் போலவும், ஆசிரியரெனில் தந்தை போலவுமான பயம் கலந்த மரியாதை இருந்தது. ஆசிரியர்களுக்குள்ளும் நல்ல புரிதல் இருந்திருக்க வேண்டும். ஆசிரியர்களும் மனதில் சுதந்திர உணர்வோடு இருந்ததால் தான் மாணவர்களிடம் அக்கறையோடு நடந்து கொண்டிருக்கிறார்கள் எனப் பின்னாளில் நினைத்ததுண்டு.
இடையில் என்னவாயிற்று?

ஆசிரியர் பயிற்சி பெற்ற காலத்தில் பயிற்சிக்காக அரசு பள்ளியில் வகுப்பெடுத்தபோது வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை கேட்டு மிரண்டு போனதுண்டு. எட்டாம் வகுப்பில் ஒரு வகுப்பில் மட்டும் தொண்ணூறு பேர். இப்படி 5 வகுப்புகள் பெரிய வகுப்பறைகள் இல்லை. கரும்பலகையைத் தொட்டு விடும் தூரத்தில் மாணவர்களின் மேசைகள். ஒரு வரிசையில் நெருக்கியபடி ஏழு அல்லது ஆறு மாணவர்கள். பெண் பிள்ளைகள் பின் வரிசையில். ஒரே கூச்சல். கரும்பலகை பக்கம் திரும்பி எழுத முடியாது. மாணவர்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள். முன்னால் நின்று பேசி பாடம் எடுத்தால் உட்கார முடியாமல் நெளிவார்கள்.டீச்சர் இவன் இடிக்கிறான். இவன் தள்ளறான்என முறையீடுகள். எப்படிச் சமாளிக்கிறீர்கள் என வகுப்பாசிரியரிடம் கேட்டபோது அவர் அலட்சியமாகச் சொன்னார், ‘எல்லாம் வானரக் கூட்டம். மரத்துக்குப் பதிலா பெஞ்சுகள் இருக்கிறது. தாவிக்கிட்டே இருப்பானுக என்றார்.எப்பப்பாரு ஒரே சத்தம் தான். அடங்கவே மாட்டானுக. ஏப்படா தப்பிப்போம்னு இருக்கும்என்றார். மாணவர் எண்ணிக்கை மிகுதி எனக் குறைபட்டுக் கொண்டார். பாவம் அவர்தான் என்ன செய்திட முடியும்? மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆசிரியர் எண்ணிக்கை குறைவு. வகுப்பறைகளும் குறைவு.

ஒன்று எனக்குப் புரிந்தது. நான் படித்த காலத்தில் மாணவர் எண்ணிக்கை குறைவு. பின்னாளில் கல்வியின் அருமை உணர்ந்து மாணவர் எண்ணிக்கை கூடியிருக்கிறது. ஆனால் கல்வி நிலையங்களிலும், ஆசிரியர் எண்ணிக்கையிலும் மாற்றம் ஏற்படவில்லை. அதே ஆசிரியர் அது வகுப்பறைகள். மேலும் அந்த ஆசிரியர் சொன்னார் +2 வகுப்பில் ஒரு வகுப்புக்கு 130 மாணவர்கள். இரண்டு ஆசிரியர்தான் உள்ளனர். அவர்களுக்கு இன்னும் தலைவலி என்றார்.

அப்போது அரசுப் பள்ளிகள் மிகுதியாக இருந்தன. தற்போது அவை குறைந்து போய்விட்டன. பல பள்ளிகளில் 2000 மாணவர்கள் படித்த இடத்தில் தற்போது 40 பேர்தான் உள்ளனர். எங்குப் போனார்கள் இவர்கள்? கல்வி கற்க அனுப்பப்படும் மாணவர்கள் எண்ணிக்கை கூடியிருக்குமே தவிரக் குறைந்திருக்காது.

இங்குதான் பல மாற்றங்கள் எல்லா நிலைகளிலும் ஏற்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவன தொடக்கம், போதுமான ஆசிரியர் எண்ணிக்கை, அளவான மாணவர்கள், நல்ல வகுப்பறை, சூழல் இவை அங்கு பெருகப் பெருக மாணவர்கள் எண்ணிக்கை அரசு பள்ளிகளில் சரிந்து போய் விட்டது.

இப்போது எல்லோருக்கும் படிப்பதற்கு அரசுப் பள்ளி வேண்டாம். ஆனால் அரசு வேலை அதுவும் ஆசிரியர் வேலை வேண்டும். நல்ல பள்ளி என்பது தூய்மையான வகுப்பறை, பாதுகாப்பான குடிநீர், போதுமான கழிப்பறைகள், சரியான ஆசிரியர்-மாணவர் விகிதம் இவை உடையவை மட்டுமா?

இவை அனைத்தையும்விட மிக இன்றியமையாதது ஆசிரியர் மாணவர் நல்லுறவு அல்லவா? நான் ஒரு கல்லூரியில் பணியாற்றத் தொடங்கியபோது மாணவர்களிடம் பொதுவாகப் பேச்சு கொடுத்துப் பார்த்தேன். அவர்களைக் கவர்ந்த ஆசிரியர் யார்? ஏன்? பல வகுப்புகளில் மாணவர்கள் ஒரே ஆசிரியரைச் சுட்டிக் காட்டினார்கள். அவர்கள் சொன்ன காரணம் வேடிக்கையானது. அந்த ஆசிரியர் ஓர் ஆங்கிலப் பேராசிரியர். ஆங்கிலத்தைக் கண்டாலே அலறும் கிராமப்புற மாணவர்களை அவர் எப்படிக் கவர்ந்தார்?  

Image result for professor 
அந்த ஆசிரியர் தன் வகுப்பு மாணவர்கள் எங்குத் தட்டுப்பட்டாலும் முதலில் அவர்தான் வணக்கம் தெரிவிப்பாராம். வகுப்பில் ஒரு மணி நேரத்தில் குறைந்த 1/2 மணி நேரமாவது ஒரு நண்பரைப்போல அவர்களின் குடும்பப் பின்னணியை விசாரிப்பாராம். சிக்கல்களுக்குத் தீர்வுகள் கூடக் கூறுவாராம். தன் பலத்தை மட்டுமின்றி, பலவீனத்தையும் மாணவர்களிடம் கூறி ஆங்கிலம் ஒரு மொழிதான், வெள்ளை ஒரு நிறம் என்பது போல என மிக இயல்பாகத் தன்னம்பிக்கை ஏற்படுத்துவாராம். ஒரு நண்பரைப் போலப் பழகியிருக்கிறார். மொழியைத் திணித்து, தன் புலமையை மிகுதிப்படுத்தி மாணவர்களை அச்சுறுத்தாமல், பாடங்களைக் குறித்த திகிலை ஏற்படுத்தாமல் மிக இயல்பாகப் பாடங்களைப் புரியும்படி நடத்தியதோடு, அவர்களை மாணவர்களாகப் பாவிக்காமல் சக மனிதர்களாகப் பாவித்து முதலில் தானே வணக்கம் கூறி மாணவர்களின் தயக்கத்தை உடைத்துக் காட்டியிருக்கிறார். ஆனால் அவர் துறையில் பிற பேராசிரியர்கள் அவரை ஒரு பேராசிரியராகவே கருதியதில்லை என அறிந்து வியந்து போனேன். எத்தகைய முரண்? சக பேராசிரியர்களோடு அவரைப் பார்க்க முடியாது. அவரைச் சுற்றி எப்போதும் மாணவர் கூட்டமிருக்கும். தேநீர் கடையில் கூட அவரைச் சுற்றி மாணவர்களைத் தான் பார்க்க முடியும். ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்குப் பிறகு அந்த மாவட்டத்தில் ஆங்கில இலக்கியம் படித்த மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததற்கு அவரே காரணம் என நான் கருதியதுண்டு.

எந்தத் துறையும் உயர்வு பெறுவது ஒரு சில மனிதர்களால்தானே.
சான்றாண்மைபற்றிப் படித்திருக்கிறோம். அந்த ஆசிரியர் சான்றாண்மை மிக்கவராக வாழ்ந்தே காட்டியிருக்கிறார். சிறப்பான அறிவு, சுதந்திரமாகச் செயற்படும் திறன், எதை நினைத்தும் தயங்காத தன்மை, மாணவரை மதிக்கும் பாங்கு, மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்ல விதைகளைத் தூவிய ஆளுமை, மாணவர்களைச் சக மனிதர்களாகக் கருதி அவர்களுக்கு முதலில் வணக்கத்தைத் தான் செலுத்திய மனிதம். இப்படிப்பட்ட ஆசிரியரை எந்த மாணவன்தான் சிறந்த வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ள மாட்டான்?

Image result for professor 

கல்வி கற்பிக்கும் ஆசிரியர். தனி மனித வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் அடிப்படைக் காரணியாகிறார். இளம் தலைமுறையினரோடு நெருங்கிப் பழகும் ஆசிரியர்கள் மாணவர்களை உரிய முறையில் புரிந்து கொண்டு செயல்பட்டால் கல்வியின் சவால்களைச் சமாளித்து விட முடியும்.
ஆளுமை நிறைந்த, தன்னம்பிக்கை உடைய ஆசிரியர்கள் தான் இன்றைய தேவை. இவை இல்லா ஆசிரியர்களே இன்றைய சவால்கள்.
ஓர் ஆசிரியரிடம் மாணவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள். எப்போதும் மாணவர்கள்பால் அக்கறையுடன், சுறுசுறுப்புடனும், பாடத்தில் மட்டுமின்றிப் பிற தகவல் சார்ந்த பரந்த அறிவு, சுயகட்டுப்பாடு, ஆக்கத்திறன் மிக்க, கடமை தவறாத, பொறுமையான தன்மையுடனும் கூடிய மாணவர்கள் அணுகக்கூடிய எளிய மனிதராக இருக்கக்கூடிய ஒருவரையே எதிர்பார்க்கிறார்கள்.

ஆசிரியர் மாணவர் உறவை பாதிக்கக்கூடியவையாக இருப்பவை ஆசிரியர் - மாணவர் எண்ணிக்கை விகிதம், சில தனியார் நிறுவனங்கள் ஆசிரியரை அடக்கியாளுதல், சரியான வகுப்பறையின்மை, வேறுவழியின்றி ஆசிரியர் தொழிலுக்கு வந்த ஆசிரியரின் ஈடுபாடற்ற தன்மை, தொடர்ந்து துறை சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ளாமை, மாணவர்களைப் பற்றிய குறைவான மதிப்பீடு, தன் ஆளுமையை மேம்படுத்திக் கொள்ளாத போக்கு, இயந்திரத்தனமாக அரைத்த மாவையே அரைப்பது, பாடம் நடத்துவதில் சலிப்பு, மாணவர்களைப் பொறுத்தவரையில் தொடர்ந்து பலமணி நேரம் உட்கார்ந்த இடத்திலேயே அமர்ந்து பாடங்களை கேட்டுக் கொண்டேயிருப்பது, சந்தேகம் கேட்பதில் தயக்கம்  போன்றவையாகும்.

பல கல்வி நிறுவனங்கள் கல்வியின் மேன்மை பற்றி அறியாத பெரு வணிகர்களால் இலாப நோக்குடன் மட்டுமே நடத்தப்படுகின்றன. பண்ணையடிமைகள் போல் ஆசிரியர்களை நடத்தும் நிலை சில இடங்களில் உள்ளது. உண்மையான காரணங்களுக்குக்கூட விடுப்புத் தராமை, யாராவது ஆசிரியர் வரவில்லையெனில் வந்த ஆசிரியருக்கு கூடுதல் வகுப்புகள் தருதல், குறைவான ஆசிரியர்களை வைத்துக்கொண்டு நிறைய வகுப்புகளை நடத்தச் செய்தல், ஆசிரியர் நலன் குறித்த அக்கறையின்மை, அரசு நிர்ணயித்த ஊதியத்தில் ஓரளவே தருதல் போன்றவை ஆசிரியர்-மாணவர் உறவையும் பாதிக்கின்றன. பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களே பதில் சொல்ல வேண்டிய சூழல் இதுபோன்ற நெருக்கடிகளினால் ஆசிரியர்கள் தடம் மாறி போகிறார்கள். ஆசிரியர்-மாணவர்கள் உறவில் இசைவின்மை தோன்றிவிடுகின்றது.

பல பள்ளி நிறுவனங்கள் பெற்றோர்கள் விரும்பும் வகையில் மாணவர்களை மதிப்பெண் எடுக்க வைப்பதாகக் கூறி விளம்பரப்படுத்திச் சேர்த்துக் கொள்கின்றனர். பெற்றோரும் தம் வருமானத்திற்கு மீறி பணத்தைக் கொண்டு வந்து கொட்டுகின்றனர். இடையில் சிக்கித்தவிப்பது ஆசிரியர்களும், மாணவர்களும்தான். நிறுவனத் தலைவர்களிடம் ஆசிரியர்களும், பெற்றோர்களிடம் மாணவர்களும் கூண்டிலடைக்கப்பட்ட விலங்குகளாக மாட்டிக் கொள்கின்றனர். எந்தப் பறவையாக இருந்தாலும் அது கோழி முட்டைதான் போட வேண்டும். ஆசிரியர் போட வைக்க வேண்டும். மாணவர்கள் மனதை, மண்டையைப் பிளந்து பாடத்திட்டங்களைக் கொட்ட வேண்டும். மாணவர்கள் தேர்வுத்தாளில் புள்ளி, கமா கூட மாறாமல் அப்படியே படித்தவற்றைப் பிரதிகள் போல எழுத வேண்டும். எல்லோரும் டாக்டர்களாகி விட வேண்டும். டாக்டர்களுக்கான கல்லூரிகள் குறைவு, கட்டணங்களும், மறைமுகக் கட்டணங்களும், தேவையான மதிப்பெண்களும் மிகுதி என்பதால் எல்லோரும் என்ஜினியர்களாகி அயல்நாடுகளுக்குச் சென்று அந்நாட்டுப் பணம் முழுவதையும் தாய்நாட்டுக்கு அனுப்பிட வேண்டும் என்ற வகையில் பொறியியலாளராக உருவாக்கப்படுகிறார்கள். பிளாஸ்டிக்கில் அரிசி மற்றும் செயற்கையான முட்டையைச் சீனா தயாரிப்பது போல இந்தியா செயற்கையாக மதிப்பெண் போடும் மாணவர்களை உருவாக்கி வருகிறது.

நிறுவனங்களின் நெருக்குதல்களையும், பெற்றோரின் ஆசையையும் மாணவர்களின் மீது திணிக்க வேண்டிய சூழலில் ஆசிரியர்கள் மாணவர்களின் நேரிடையான பொறுப்பிற்கு ஆளாகின்றனர்.
அன்று கைம்மாறு வேண்டாக் கடப்பாடுடையவர்களாகத் திகழ்ந்த ஆசிரியர் இன்று எத்தனை பட்டங்கள் பெற்றும் உரிய வேலை கிடைக்காமல், தனியாரிடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கும் வேளையில், மாணவர்களைக் கண்டும் பயப்படும் நிலை உள்ளது. கொஞ்சம் அதட்டிச் சொன்னால் போச்சு. உடனே தற்கொலை. மரியாதை என்பதை மாணவர்களிடம் கேட்டுப்பெற வேண்டிய நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர். பெரும்பணம் கொடுத்து படிக்கும் மாணவர்களிடம் ஏதாவது தவறு ஏற்பட்டால் அதைச் சுட்டிக் காட்ட ஆசிரியர் முயலும்போது அதை அவன் ஏற்றுக் கொள்வதில்லை. வேறு வழியின்றி ஆசிரியர் தங்களை மாற்றிக் கொள்ளும் நிலையே நிலவுகிறது. தொடர்ந்து பாடத்திணிப்பால் பொது விசயங்களை ஆசிரியர் பேச மாட்டாரா என ஏங்கும் மாணவர்கள் அதை ஆசிரியர் வெளிப்படுத்த இயலா நிலை புரியாமல் ஆசிரியரை வெறுத்து கொலை செய்யும் நிலைக்குப் போய் விடுகின்றனர்.மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் சுதந்தரமில்லை என்ற நிலையே இன்றைய போக்கு.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?