கருணைக்கடல்
இராமாநுசர் காவியம்
இருபதாம் நூற்றாண்டில் எழுந்த காப்பியங்கள் இந்திய மற்றும் தமிழ்த் தேசிய, அரசியல் தலைவர்களின் வரலாற்றினைப் படைக்கும் காப்பியங்களாகவே எழுந்துள்ளன. அவ்
வரிசையில் மணிமகுடமாக சமயாச்சார்யா ஒருவரின் வாழ்க்கையைப்
படைக்கும் காப்பியமாக இராமானுச காப்பியம் மலர்ந்துள்ளது.சமயம் சார்ந்த
பொதுவுடைமைக் கருத்துக்கள்,
பகுத்தறிவு கருத்துக்கள் சாதி சமயச் சிக்கல்கள், சமுதாய ஏற்றத் தாழ்வுகள் போன்றவற்றை அக்காலச் சூழலைக் கருத்தில் கொண்டு
இக்காப்பியம் இயற்றப்பட்டுள்ளது.இருபதாம் நூற்றாண்டு வாழ்க்கை வரலாற்றுக் காப்பியங்களாகப் பண்டிதை அசலாம்பிகை
அம்மையின் காந்தி புராணம்,
மாலிறையன் இயற்றிய அம்பேத்கர் காவியம், ம. இராமனின் ஸ்ரீ இராகவேந்திர மகாகாவியம், கண்ணதாசனின் இயேசு காவியம்
வரிசையில் சிற்பியின் கருணைக்கடல் இராமானுச காவியமும் இணைந்து தமிழன்னைக்கு மேலும்
ஒரு புதிய அணிகலனாகத் திகழ்கின்றது. 20ம் நூற்றாண்டின் முதல் காவியமான
பாஞ்சாலி சபதம் எழுதிய பாரதியார், எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு
இவற்றினுடைய காவியமென்று தற்காலத்திலே செய்து தருவோன், நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான். ஓரிரண்டு வருடத்து
பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன்
காவித்துக்குள்ள நயங்கள் குறைபடாமலும் நடத்தல் வேண்டும் என்று பாஞ்சாலி சபத முகவுரையில்
குறிப்பிட்டிருப்பார். பாரதியில் தோய்ந்த கவிஞர் சிற்பி அவர்களும் பாரதியின்
வாக்கினை உள்வாங்கி சற்றும் பிசகாமல் அற்புதமான காவியத்தைக் காலமறிந்து சிறப்பாக
வெளியிட்டுள்ளார்.