ஆக்ஸிஜன்
டிரிங் டிரிங்
தொடர்ந்து செல்போன் ஒலித்துக் கொண்டிருந்தது.
பரமேஸ்வரி கையிலிருந்த பேனாவை வைத்து விட்டு, செல்லைப் பார்த்தாள்.
தூக்கி வாரிப் போட்டது. கோவிந்தராசன் என்ற பெயரிலிருந்து வந்த போன் தான்
காரணம். எடுப்பதா வேண்டாமா ஒரு நிமிட தயக்கம். ரிங்டோன் முடிந்து விட்டது. அரை மணி
நேரம் கழித்து மீண்டும் அடித்தது.
அதே கோவிந்தராசனிடமிருந்து போன் கால். மெல்லிய தயக்கத்துடன் எடுத்து, ஹலோ என்றாள்.
“ஹலோ. நான்தான் கோவிந்தராசன். பிஸியா” என்றான்.
“இல்லை. பேசலாம். எத்தன நாள் ஆச்சி. உங்க குரலைக் கேட்டு,
எல்லாம்
நலமா. . . . . உங்க மனைவி, பெரிய பொண்ணு, சின்ன பொண்ணு”
“ம்.ம். நலந்தான். நீ எப்படி இருக்கே. நாள் இல்லை. வருசம்
நாலு வருசமாச்சி. இப்ப ஊரடங்குல ஒவ்வொருத்தருக்கா போன் பண்ணலாம்னு தோணிச்சி. அதான்
அங்க எப்பிடி”
“ம், பொண்ணு விப்ரோவில வேலையில இருக்கா. வொர்க் பிரம் ஹோம்.
பையன் டிகிரி படிக்கிறான். அதான் எக்ஸாம் கேன்சலாயிடுச்சில்ல. உங்க பொண்ணுங்க”
“பெரியவ பி.எஸ்.சி., முடிச்சிட்டா. வீட்டில இருந்தே பரிச்சை
எழுதி பாஸாயிட்டா. சின்னவ பிளஸ் ஒன் அவளும் பாஸாயிட்டா. எல்லாம் கொரானாவோட
வரப்பிரசாதம்”
“இது வரமா சாபமானு தெரியல . . . போகப் போகத்தான் தெரியும். செல்லும் கையுமாவே
இருக்கற மாதிரி இருக்குது. ஆன்லைன் கிளாஸ்தான் எனக்கும் போயிட்டிருக்குது”
“நாங்க தான் ஸ்டுடியோவுக்குப் போக முடியல. ஆபிசுக்கும் போக
முடியல. இன்டஸ்டிரியே ஸ்தம்பிச்சிக் கிடக்குது.”
கோவிந்தராசன் அவளுடன் பி.எஸ்.சி வேதியியல் படித்தவன். அரசு இருபாலர்
கல்லூரியில்தான் படித்தார்கள்.
இருவருமே நல்ல படிப்பாளிகள். கோவிந்தராசனுக்கு நுண்கலை மன்ற மாணவர் தலைவர் பதவி
கிடைத்ததற்கு, அவனுடைய பன்முகத் திறமைகள் காரணம். பரமேஸ்வரி மேடையில்
நன்றாகப் பேசுவாள். கட்டுரை எழுதுவாள். அவ்வளவு தான். ஆனால் கோவிந்தராசன் நடனம்,
பாட்டு,
பேச்சு,
கவிதை,
பலகுரல்,
நாடகம்
எனக் கல்லூரியையே கலக்கிக் கொண்டிருந்தான்.
ஒரே வகுப்பு என்றாலும் அவ்வளவாக பேசிக் கொண்டதில்லை. பரமேஸ்வரி தான் உண்டு,
தன் வேலை
உண்டு என இருப்பவள். அவள் அப்பா எலக்ட்ரீசியன், அம்மா முருக்கு சுடும்
வேலைக்குச் சேர்ந்திருந்தாள். ஆட்டையாம்பட்டி முருக்கிற்கு ரொம்ப பிரசித்தம்.
கைக்குள் அடங்கும் முறுக்கிலிருந்து பெரிய தட்டம் அளவு முறுக்கு வரை குடிசைத்
தொழிலாகச் செய்து வந்தார்கள்.
பேருந்து கட்டணம் இலவசம் என்பதாலும், பிளஸ் டூவில் பள்ளியில் முதல் மதிப்பெண்
எடுத்ததாலும் கல்லூரிக்கு அனுப்பப்பட்டிருந்தாள். இல்லையென்றால் முறுக்கு கூட
இன்னொரு தொழிலாளி கிடைத்திருப்பார். கட்டம் போட்ட சிகப்பு சீட்டிப் பாவாடையும்,
வெள்ளைத்
தாவணியும, வழித்துச் சீவிய தலையும், எண்ணெய் வடியும் முகமும், ரப்பர் செருப்பும்,
கண்ணாடி
வளையல்களும் அவளைப் பட்டிக்காடு எனப் பறைசாற்றிக் கொண்டிருந்தன.
கோவிந்தராசன் அந்த ஏரியா கவுன்சிலர் மகன். பைக்கில் தான் வலம் வருவான்.
எனினும் அரசியல் செல்வாக்கு எதையும் காட்டிக் கொண்டதில்லை. கையில் தங்க வாட்சும்,
கழுத்தில்
தங்கச் சங்கிலியும் தவிர்த்துப் பார்த்தால் அவன் எல்லோரiயும் போலத்தான்
இருந்தான்.
கல்லூரிகளுக்கிடையேயான வேதியியல் துறை கிவிஸ் தேர்வு இருவர் போக வேண்டும் என்ற
போது, துறைத்தலைவர் பரமேஸ்வரியையும், கோவிந்தசாரனையும் தேர்ந்தெடுத்தார். ஒமலூரிலிருந்த
பொறியியல் கல்லூரியில், ஆறு கல்லூரிகளுக்கான போட்டிகள்.
“பரமேஸ்வரியா? ரம்யாவைத் தேர்ந்தெடுத்து இருக்கலாமே சார்.
ரம்யா தான் நல்லா படிப்பாங்க" என்று
கோவிந்தராசன் துறைத்தலைவரிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
“இல்லை. ரம்யாவால வர
முடியாதாம். அவங்க அக்கா திருமணம்னு மறுத்திட்டா. அதனால பரமேஸ்வரியைத் தேர்ந்தெடுக்கிறோம்.
இந்த மாசம் பதினைஞ்சாம் தேதி ஞாபகம் வைச்சிக்க. பரமேஸ்வரி கிட்டயும் சொல்லிட்டேன். நம்ம கல்லூரி இந்த
முறையாவது சுழற்கோப்பை வாங்கி வரப் பாருங்க. நூலகர் கிட்ட சில நூல்களைக் கொடுக்கச்
சொல்லியிருக்கேன். ரெண்டு பேரும் வாங்கிங்க” என்றார்.
“சரிங்க சார்” என்றபடி அரை
மனதுடன் வெளியே வந்தான்.
தன் நண்பர்களிடம், “போயும் போயும் பரமேஸ்வரியைப் போயி தேர்ந்தெடுத்திருக்காங்க.
அவ ஒரு புத்தகப்புழு பட்டிக்காடு. பொதுஅறிவு சார்ந்த க்விஸ் கேள்வி அதிகமா
இருக்கும். ‘இதுல சுழற்கோப்பை வேற வாங்கி வரணுமாம்.’” என்று சலித்துக் கெண்டான்.
“ஏட்டுச் சுரைக்காய்
கறிக்கு உதவாதுன்னு சொல்றது தான” என்றான் சங்கரன். தன்னைத் தேர்ந்தெடுக்கவில்லையே என்ற
ஆதங்கத்துடன்.
“ஏன் நீதான் சொல்லிப் பாரேன்’’ என்றான் முரளி.
“எத்தனாம் தேதி’’ என்றான் குமரன்.
“இந்த மாசம் பதினைந்தாம் தேதி’’
“இன்னும் நாலு நாள் தான் தான் இருக்கு’’
“சரி நான் நூலகத்துக்குப் போகணும். பாக்கலாம்’’ என விடை
பெற்றான் கோவிந்தராசன்.
நூலகத்தில் பரமேஸ்வரியைப் பார்த்தவுடன், பந்திக்கு முந்துங்கற
மாதிரி நூலகத்திற்கு முந்தி வந்துவிட்டாள் என நினைத்தான்.
பரமேஸ்வரி அவனைப் பார்த்ததும் புன்னகைத்து, “இங்க சில நூலுங்க
எடுத்து வைச்சிருக்கேன். துறைத் தலைவர் சொல்லாததும் இதுல இருக்கு உங்களுக்கு
வேணுங்கறத எடுத்துக்கங்க’’ என்றாள்.
“ம்.. நீங்க எதை எடுக்கப் போறீங்க’’ என்றான்.
“நீங்க எடுத்ததுக்குப் போக மீதிய நான் எடுத்துக்கலாம்னு தான்
காத்திட்டிருந்தேன்.’’ என்றபடி புத்தகங்களைக் காட்டினாள்.
மனதிற்குள் வியந்தவனாகச் சில நூல்களை எடுத்துக் கொண்டான். “ இதுல சில நூல்கள்
என்னிடமே இருக்கு. இல்லாததை மட்டும் எடுத்துக்கிட்டேன். அப்புறம் பதினைஞ்சாம் தேதி
ஒன்பது மணிக்கு பொறியியல் கல்லூரிக்கு வந்திருங்க’’ என்றபடி கிளம்பினான்.
ஒன்பது மணிக்கு பைக்கில் சென்று பொறியியல் கல்லூரி கலையரங்கத்திற்குச்
சென்றான். பரமேஸ்வரி முன்னதாகவே வந்து விட்டிருந்தாள்.
ஆறு கல்லூரிகளிலிலிருந்து பனிரெண்டு மாணவர்கள் வந்திருந்தார்கள். தனியார்
கல்லூரி மாணவர்கள் நன்றாகப் பளிச் சென்றிருந்தார்கள்.
அவர் அவர்களுக்குரிய கல்லூரியின் பெயர் ஒட்டப்பட்ட பகுதிக்கு சென்று நின்று
கொண்டார்கள்.
பேராசிரியர் சித்தார்த்தன் மிகப் பிரபலமான க்விஸ் போட்டி நடத்துநர். அவரது
கம்பீரமும், குரல்வளமும் பார்வையாளர்களையும், போட்டியாளர்களையும் கட்டிப் போட்டிருந்தது.
அரங்கு நிறைய ஆறு கல்லூரி மாணவர்கள் அமர்ந்திருந்தார்கள். முன் வரிசையில்
போராசிரியர்கள் உட்கார வைக்கப் பட்டிருந்தனர்.
நிகழ்ச்சி தொடங்கி சரியாக பத்து நிமிடத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன.
கோவிந்தராசன் சில கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் கொடுத்தான். பரமேஸ்வரியும்
சளைக்கவில்லை.
போட்டி விறுவிறு எனக்போய்க் கொண்டு இருந்தது. பொது அறிவு, நடப்பியல்,
துறைகள்
கேள்விகள் என இறுதிச் சுற்றினை நோக்கிய வடிகட்டலில் அவனுடைய அரசு கல்லூரியும் ஒரு
தனியார் கல்லூரியும் சம மதிப்பெண்ணில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி
இருந்தார்கள்.
கோவிந்தராசனுக்கு இறுதிச் சுற்று வரை வந்ததே பெரிய விசயம் என்றிருந்தது,
போகப்
போக மிகக் கடினமான கேள்விகள். சில கேள்விகளை அவன் கேள்விப்பட்டதேயில்லை இறுதிச்
சுற்றில் மூன்றே கேள்விகள் தான்.
முதல் கேள்விக்கு பரமேஸ்வரி பதில் சொல்லிக் கை தட்டலைப் பெற்றாள்.
அடுத்த கேள்விக்கு எதிர் தரப்பினர் கை தட்டல் பெற்று விட்டார்கள்.
ஒரே ஒரு கேள்வி தான். கோவிந்தராசனுக்கு நெஞ்சம் படபடவென்றது. துறைத் தலைவர்
சுழற் கோப்பை பற்றிச் சொன்னது நினைவிற்கு வந்தது.
“இதுவரை ஒருமுறை கூட அரசு கல்லூரி அதைப் பெற்றதில்லை. இந்த
முறை சுழற்கோப்பை நமக்குத் தான் கிடைக்க வேண்டும். அதனால தான் வருகைப் பதிவோடு
கூடிய விடுப்பை உங்கள் இருவருக்கும் கொடுக்கிறேன். அதுவுமில்லாம நூலகர் கிட்ட
நீங்க கேக்கற நூல்களை எல்லாம் தரச் சொல்லியிருக்கேன். பரமேஸ்வரி நல்லாபடிக்கிற
பொண்ணு தான். ஆனா இதுதான் அவளோட முதல் க்விஸ் புரோகிராம். முதல்ல அந்தப் பொண்ணு
பயந்து போயி வேணாம் நான் போகலனு சொல்லிச்சி, நாந்தான் உன்னைப்
பத்திச் சொல்லி தைரியம் கொடுத்தேன். அதனால உன்னோட பொறுப்பை உணர்ந்து இந்த
விடுப்பைப் பயன்படுத்திக்கோ. இந்த முறை மட்டும் நீ வாங்கிட்டா நம்ம பிள்ளங்களுக்கு
இருக்கிற தாழ்வு மனப்பான்மை போயிரும். அதுவுமில்லாம நம்ம கல்லூரிக்கும் பெருமை’’.
போராசிரியர் சித்தார்த்தனின் குரல் ஓங்கி ஒலித்தது. இதே இப்போது மூன்றாவது
கேள்வி. இந்த கேள்வி தான் சுழற்கோப்பை யாருக்கு முடிவு செய்யப் போகுது.
இதுவரைக்கும் சென்ற பத்து வருடங்களா இந்த சுழற்கோப்பை பல தனியார் கல்லூரி
மாணவர்கள்கிட்ட தான் இருந்தது. இப்ப இந்த வருடமும் இது அவங்க கிட்ட தான் இருக்கப்
போகுதா. இல்லை இறுதி கட்டம் வரைக்கும் முதல் முறையா வந்திருக்கிற அரசு கல்லூரி
மாணவர்களுடைய கல்லூரிக்குப் பெருமை சேர்க்கப் போகுதான்னு தெரிஞ்சிடும்’’ என்றார்.
தெரிந்ததெல்லாம் மறந்தது போலக் கோவிந்தராசன் உணர்ந்தான்.
“இதோ இது தான் மூன்றாவது கேள்வி.
“திரவ ஆக்ஸிஜன் எந்த வண்ணத்தில இருக்கும்’’ என்றார்.
கோவிந்தராசன் விழிபிதிங்கிப் போனான். அரங்கமே அமைதியாக உறைந்து போயிருந்தது.
தனியார் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
யாரும் எதிர்பார்க்காத தருணத்தில், பரமேஸ்வரி கை தூக்கினாள்.
“நீல வண்ணத்தில் இருக்கும்’’ என்றாள்.
“சபாஷ். சரியான பதில்’’ என்று சித்தார்த்தன்
சொல்லவும் அரங்கமே விசில் சத்தத்திலும், கை தட்டலிலும் அதிர்ந்தது.
கோவிந்தராசனுக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை பரமேஸ்வரியைப் பார்த்தான்.
அவள் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி. முதன் முதலாக அவள்ள சிரித்ததைக் கண் கொட்டாமல்
பார்த்தான். மிக அழகான முல்லைப் பூ போன்ற பற்கள். பளிச் சென்ற கண்கள். கூரான நாசி.
வினாக் குறி போன்ற காதுகளில் இரப்பர் வளையங்கள். கையில் இரப்பர் வளையல்கள்.
கிள்ளுவத்ற்குகூட சதையில்லாத ஒடுங்கிய தேகம். சம்பந்தமில்லாத வகையில் வெள்ளை
ஜாக்கெட்டும், சிகப்பில் பெரிய பூ போட்ட சீட்டி பாவாடையும், சம்பந்தமில்லாமல்
பச்சைத் தாவணியும் அணிந்து தேசியக் கொடியைப் போர்த்தியது போல் இருந்தாள்.
இதுவரைக்கும் அவள் ஆடையைப் பார்த்துத் தான் அவளை எடை போட்டு வந்திருந்தான்.
இறுதிச் சுற்று வரை வந்ததில் அவள் பங்கு அதிகம். இப்போது சுழற் கோப்பைக்குக்
காரணம் அவள்தான்.
மேடையில் இருவரும் சேர்ந்து வாங்கிய சுழற் கோப்பை தொடர்பான புகைப்படம்
பெரிதாக்கப்பட்டு, முதல்வர் அறையில் மாற்றப்பட்டது. முதல்வரும் துறைத்லைவரும்,
கோவிந்தராசனை
வெகுவாகப் பாராட்டினார்கள். “உன் மேல வச்ச நம்பிக்கை வீண் போகலைப்பா.
பரமேஸ்வரிக்கும் உன்னால பெருமை இந்தப் பொண்ணை அனுப்பறமேனு முதல்ல தோணிச்சி. அப்றம்
நீ சமாளிச்சிடுவேனு ஒரு நம்பிக்கை நம்பிக்கையைக் காப்பாத்திட்ட’’ என்றார்
துறைத்தலைவர்.
பரமேஸ்வரி மெல்லியதாகச் சிரித்தாள். எல்லோரும் கோவிந்தராசனால் தான் இந்தச்
சுழற் கோப்பை கிடைத்தது என நினைத்தார்கள். ஆனால் பரமேஸ்வரி யாரிடமும் எதையும்
சொல்லவில்லை. அன்றிலிருந்து கோவிந்தராசனின் போக்கே மாறி விட்டது.
பரமேஸ்வரியிடம் பேச்சுக் கொடுக்க முயன்றான். நூலகமே கதியாக பரமேஸ்வரி
இருந்தாள். கல்லூரி முடியும் தருவாயில் தான் அவளைப் பார்க்க முடிந்தது. ஆனால்
பேசச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கிடைத்தத் தருணங்களில் அவள் எதையாவது காரணம்
சொல்லி நழுவிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய கூச்ச சுபாவம், கிராமத்து வளர்ப்பு, ஏழ்மை, அவனுடைய
மேட்டிமைத் தனம் கண்டு ஒதுங்கல் என எத்தனையோ காரணங்கள். அடுத்த மூன்று வருடங்களும்
சுழற்கோப்பையை அவர்கள் கல்லூரியே பெற்றது.
மூன்றாம் ஆண்டு இறுதித் தேர்வன்று எப்படியாவது அவளிடம் பேசிவிட வேண்டுமென்று
தீர்மனித்தான். ஆனால் நண்பர்கள் குழுமியிருந்த கூட்டத்தில் எங்கும் பரமேஸ்வரியைக்
காணவில்லை ரம்யாவிடம் வாய் விட்டே கேட்டுவிட்டான்.
“அந்தப் பட்டிக்காடா? கடைசிப் பரிச்சை முடியறதுக்கு அரைமணி
முன்னால ப்யூன் வந்து கூட்டிட்டுப் போனாரு, அப்புறம் நான் பாக்கலை’’
என்றாள்.
“மாதேஸ்வரிய வேணா கேட்டுப் பாரு’’ என்றாள் நந்தினி.
“அவங்கப்பாவுக்கு ஏதோ மில்லுல வேலை செய்யும் போது ஷாக்
அடிச்சி தூக்கிப் போட்டுச்சாம். உயிரு போயிருச்சினு கேள்விப்பட்டேன். அதான் பரமேஸ்
கிளம்பிட்டாள். நல்ல வேளை கடைசி பரிட்சை எழுதிக்கிட்டு இருக்கும் போது நடந்தது.
இல்லைனா அவங்க குடும்பம் இருக்கிற இருப்பில அவ டிகிரி முடிக்கறதாவது ஒண்ணாவது’’
என்றாள்.
அதற்குப் பின் எவ்வளவோ முயற்சித்தும் பரமேஸ்வரி பற்றித் தகவல் இல்லை. டிகிரி
முடிந்த கையோடு பல பெண்களுக்குத் திருமணமாகி விட்டது. பரமேஸ்வரி நூலகத்திலே
பெரும்பாலும் இருந்ததால், அதிகமாக யாரிடமும் பேசிப் பழகியிருக்கவில்லை.
தெரிந்த நண்பர்கள் மூலம் விசாரித்த போது, அவள் தன் தாயுடன்
பாட்டி வீட்டிற்குக் குடி பெயர்ந்து விட்டதாகக் தகவல் கிடைத்தது. அவள் சென்ற ஊரைப்
பற்றி யாருக்கு எதுவும் தெரியவில்லை.
கோவிந்தராசன் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் உள்ளுக்குள்
புழுங்கிப் போனான். யாரிடமும் இதுபற்றி பேசவும் முடியவில்லை. முதல் கிவிஸ் நடந்த
அன்று அன்று அவர்கள் கல்லூரி பரிசிற்குத் தேர்ந்தெடுத்ததை அறிவித்தபோ, முகம்
மலர்ந்து ஒரு சிரிப்பு சிரித்தாளே. அதுவே அவன் காணும் இடமெல்லால் நிறைந்திருந்தது.
அவன் துறைத்தலைவரிடம் மதிப்பெண் சான்றிதழ் பெறச் சென்ற போது, அவராகவே,
“நீ தான்
முதல் மதிப்பெண் வாங்குவேனு நெனைச்சேன். ஆனா பரமேஸ்வரி வாங்கியிருக்கிறாள்.
இன்னும் வந்து சான்றிதழ்கூட வாங்கலை.
கடைசி பரிட்சையை சரியா எழுதாம போயிடுச்சே பாஸாவுமானு நெனைச்சேன். ஆனா
பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியா வரும்னு நெனச்சிப் பார்க்கலே. ஆண்டவன் ஒண்ணை
எடுத்துக்கிட்டு ஒண்ணக் குடுத்திருக்காரு. சரி நீ மேல சென்னையில போயி படிக்கப்
பாருப்பா. நீயும் நல்லாத்தான் மார்க் வாங்கிருக்கே” என்றார்.
சேலத்தில் எந்தக் கல்லூரியிலும் அவனுடைய மேல் படிப்பிற்கான பாடப்பிரிவு இல்லை.
மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் தலையாட்டி விட்டு வந்தான். அவர் சொன்னதுபோல
சென்னையில் எம்.எஸ்.சி., வேதியியல் படித்தான். மேடையில அவனுடைய பன்முகத் திறமையை,
நடுவராக
வந்திருந்த திரைப்பட இயக்குநர் பார்த்து வாய்ப்பு கொடுக்கவே, திரைப்படத்தில்
சேர்ந்து விட்டான். அவன் அப்பாவின் பணமும் செல்வாக்கும் அவனை உச்சத்தில் கொண்டு
சென்றன.
எத்தனையோ நடிகைகளுடனும், அழகிகளுடனும் பழகி விட்டான். ஆனால் நெஞ்சில் பச்சைக்
குத்தியது போல் பரமேஸ்வரி நீங்காமல் இருந்தாள்.
அவனுக்கு மணமுடித்து வைத்துப் பார்க்க, அவன் அப்பா செய்த முயற்சிகள்
வீணாகிக் கொண்டிருந்தன. பழைய நண்பர்கள் மூலமாக, பரமேஸ்வரியைப் பற்றி
அறிந்தான். பரமேஸ்வரி பிறகு மிகத் தாமதமாக வந்து கல்லூரியில் சான்றிதழ்களைப்
பெற்றுக் கொண்ட செய்தியை மட்டும் தான் தெரிந்து கொள்ள முடிந்தது.
இந்தப் பதினைந்து வருடத்தில் அவளை ரம்யா மூலமாகவும், மாதேஸ்வரி மூலமாகவும்
விசாரித்துப் பார்த்தும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
அவனுடைய நண்பன் முரளி உரிமையோடு அவனைக் கண்டித்துப் பார்த்து விட்டான். “நீ பரமேஸ்வரிய விரும்பறத அப்பவே
சொல்லிருக்கணும். இப்ப அந்தப் பொண்ணு எங்க இருக்குதுங்கறது தெரியாதது ஒரு
பக்கமிருக்கட்டும். உன்னை விரும்பறாளானு தெரியுமா? இன்னேரம் அத்தை மகனோ,
மாமன்
மகனோ அவனைக் கண்ணாலம் கட்டி நாலஞ்சு பிள்ளங்களுக்குத் தயாராக்கியிருப்பாங்க. உங்க
அப்பா அம்மா சொல்ற பொண்ணையே கட்டிக்க. பாரு நடிகை சஞ்சனாவுக்கு உம்மேல ஒரு கிரேஸ்
இருக்கிற மாதிரி தெரியுது. நீயும் செட்டிலாகிற வழிய பாரு” என்றான்.
பதினைந்து வருட தவம் ஒரு முடிவிற்கு வந்தது. அவன் தாய்க்கு ஏற்பட்ட கார்
விபத்தொன்றினால் உயிர் போகும் தருவாயில், வேறு வழியின்றி அத்தை மகளைக் கட்டிக்
கொண்டான். ஆனால் அவன் தாய் பிழைத்து விட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக மறக்கத்
தொடங்கியிருந்த போதுதான், ஒரு கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராக நுண்கலை மன்றம்
சார்பாக அழைக்கப்பட்டிருந்தான்.
அரசு கல்லூரி என்பதால் ஒத்துக் கொண்டான். மேடையில் அமர்ந்த பின் தான், நிகழ்ச்சி
தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த பெண்ணின் குரலினால் தாக்கப்பட்டு அவளைப்
பார்த்தான். அவனுடைய பரமேஸ்வரி, தூய கதர் ஆடையில், கண்ணாடி மாட்டிக் கொண்டு, சிறிய கொண்டை
போட்டுக் கொண்டு கம்பீரமான கணீர் குரலில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்
கொண்டிருந்தாள்.
அவனுக்குப் பரவசத்தில் வானில் பறப்பது போல இருந்தது. எப்பொழுது நிகழ்ச்சி முடியும்
எனக் காத்துக் கெண்டிருந்தான். நிகழ்ச்சி முடிந்த பின் முதல்வர் அறையில் பல
பேராசிரியர்களோடு அவளும் உட்கார்ந்திருந்தாள்.
அவனை அடையாளம் கண்டதாகவே தெரியவில்லை. மற்றவர்கள் முன் அவளிடம் எதுவும்
பேசவும் முடியவில்லை.
அவனுக்கு, தன் காரியதரிசி மூலமாக அவளுடைய எண்ணைப் பெறுவது மிக எளிதாகி
விட்டது. என் கிடைத்த அடுத்த நிமிடமே போன் செய்தான்.
“ஹலோ பரமேஸ்வரி யாருங்க”
“நான். நான்
கோவிந்தராசன். அன்னிக்கு உங்கக் கல்லூரிக்கு சீப் கெஸ்டா வந்திருந்தனே. நம சேலம்
அரசு கலைக் கல்லூரியில . . . . “
“ம். தெரியும்
எப்படியிருக்கீங்க. அன்னைக்கு உங்க கிட்ட பேச முடியல சாரி” என்றாள்.
“நான் உங்களப் பாத்துப்
பேசலாம்னு இருக்கேன் உங்களப் பாக்கலாமா”
நீண்ட இடைவெளிக்குப் பிறகு “கன்னிமாரா
நூலகத்திற்கு வர முடியுமா” என்றாள்.
“நூலகத்துக்கா . . .
. சரி நாளைக்கு சாயந்திரம் மூணு மணிக்குப்
பார்க்கலாமா” என்றாள்.
“ம். எங்க கல்லூரிக்கு அதுதான் பக்கம். சில நூல்கள் திருப்ப
வேண்டியிருக்கு. அதான்” என்றாள்.
“நோ ப்ராப்ளம். அங்கியே
பார்க்கலாம்” என்றான்.
மீண்டும் கல்லூரி நாட்களுக்குச் சென்ற நாட்களை நினைத்து, வானில் பறக்க
ஆரம்பித்தான். அவளிடம் பேச்சை எப்படி ஆரம்பிப்பது. என்ன டிரஸ் போடுவது, எந்த காரில்
போவது . . . . எப்படி கல்லூரி பேராசிரியரானாள்? வேளு என்னக் கேட்பது?. . . . கல்லூரியில் எப்போது டிசி வாங்கினாய்? . . . . . பல கேள்விகள் அவனுக்குள் இன்னொரு
பக்கம் தன் திருமணத்திற்கு முன் இது நிகழ்ந்திருக்கக் கூடாதா எனத் தோன்றியது. அது
சரி அவளுக்குத் திருமணம் ஆகாமலிருக்க வேண்டுமே எனவும் உள் குரல் கூறியது. எப்போதடா
விடியும்? என்றாகி விட்டது.
மிக எளிமையாக, கம்பீரமாக இருந்தாள். படிப்பும், வசதியான வாழ்க்கையும்,
நல்ல
உத்யோகமும் அடையாளம் தெரியாத அளவிற்கு அவளை மாற்றி விட்டிருந்தன.
எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல் முதலில் தடுமாறினான். அவளே ஆரம்பித்தாள்.
“நம்ம பழைய கல்லூரி நண்பர்கள் யாராவது உங்க தொடர்பில இன்னும் இருக்காங்களா?”
“ம். முனியப்பன்,
ரமேஷ்
ரெண்டு பேரும் சென்னையிலதான் இருக்காங்க. ரம்யா ஆல் இண்டியா ரேடியோவில இருக்கிறதா
கேள்விப் பட்டேன்” என்றான்.
“ஆமா. ரம்யாவை நானும்
ஒரு தடவை பாண்டி பஜாருல பார்த்தேன். காவ்யாவும் கார்குழலியும் சேலத்துல இருக்கறதா
சொன்னாங்க” என்றாள் பரமேஸ்வரி.
“நம்ம மணிமாலா மேடம். கோவைக்குப் போயிட்டதா சொன்னாங்க.
துறைத்தலைவர் கூட போன வருடம்தான் ஓய்வு பெற்றதாகச் சொன்னாங்க” என்றான்.
“பூங்காவனம் தமிழம்மா கூட சென்னையில தான் மகனோட
தங்கியிருக்காங்க. அவங்களோட கணீர் குரலை மறக்கவே முடியாது.”
“நீங்க அதற்குப்பிறகு படிப்பைத்
தொடந்திருக்க மாட்டிங்கன்னு நினைச்சோம்” என்றான்.
“அப்படித்தான் நானும் நினைச்சேன். டி.சி வாங்க வந்தப்ப மணிமாலா மேடம் தான்
சொன்னாங்க. அவங்களுக்கு கோவை கல்லூரியில இடம் மாற்றலாகியிருக்குனு. அவங்க கணவர்
இங்கியே சொந்த பிஸினஸ் செய்யறதால அவரால வர முடியாதுன்னும் மேடம் மட்டும் வார
விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து போற மாதிரினும் முடிவு பண்ணியிருக்கிறதாகவும்,
அவங்களுக்கு ஒத்தாசையா வந்து கூட இருந்தா அவங்க மாற்றலான கோவை கல்லூரியிலயே மேல
படிக்கலாம்னும் சொன்னாங்க. முதல்ல எங்க அம்மா ஒத்துக்கில. அப்புறம் மேடம்
ஹார்ட் பேசன்ட்றதால, இந்த உதவியை மட்டும்
செய்யுங்கனு துறைத்தலைவரும் சொன்னாங்க. அதுவுமில்லாம நான் பல்கலைக்கழகத்திலயே முத
மதிபெண் வாங்கியிருக்கிறத சொல்லி இது
எனக்குத் தான் நல்லதுனும் சொன்னதினால எங்கம்மா ஒத்துக்கிட்டாங்க. அதனால கோவை போயி
படிச்சேன்.” என்றாள்.
“ஆங். அந்த சுழற் கோப்பை இப்ப நம்ம கல்லூரியில தான்
இருக்குதாம்மா?” என்றான்.
“தெரியலை. நான் அதுக்குப் பின்னால அதைப் பத்தி யோசிக்கவே
இல்லை” என்றாள்.
“ஆனா நான் அதை மறக்கவேயில்லை. உங்களாலதான் அந்தக் கோப்பையே
நம்ம கல்லூரிக்கு வந்தது. அப்ப இத என்னால சொல்ல முடியல.”
“சே.சே. நம்ம ரெண்டு பேராலயும்தான் நம்ம கல்லூரிக்குக்
கிடைச்சது. ஏன்னோட முதல் க்விஸ் புரோகிராம் அது. ரொம்ப பதட்டமா இருந்தது. நீங்க
இருந்த தைரியத்தில தான் கொஞ்சம் ரிலீபா பீல் பண்ணேன். அதனாலதான் பதில் சொல்ல
முடிஞ்சது” என்றாள்.
“திரவ ஆக்ஸிஜன் பத்தி நீங்க சொன்ன பதிலை மறக்கவே முடியாது.
சான்சே இல்லை. நீங்க சொன்ன அந்த ஒரு பதிலால் தான் சுழற்கோப்பை நமக்கு கிடைச்சது” என்றான்.
“எனக்குத் தெரிஞ்சிருந்ததனால பதில் சொன்னேன். மற்றபடி ரெண்டு
பேராலயும்தான் வெற்றி கிடைச்சது” என்றாள்.
“அதுக்குப்புறம் உங்ககிட்ட பலமுறை பேச வந்தேன். நீங்க பிடி
குடுத்தே பேசலே” என்றான்.
சட்டென அவள் முகம் மாறியது.
இருவருக்குமிடையே பெரிய கனத்த அமைதி போர்வையாகிப் போர்த்திக் கொண்டது.
இருவருமே பார்வையை அந்த ஷாப்பிங் மாலின் பல கடைகள் நிறைந்த கூட்டத்தை நோக்கித்
திருப்பினார்கள்.
அவர்களை அறியாமலே மீண்டும் நேராக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்த
ஷாப்பிங் மால், அந்தக் கூட்டம், சத்தம், சுற்றிலுமிருந்த
வெளிச்சம், ஏறி இறங்கிக் கொண்டிருந்த எலிவேட்டர், குறுக்கு மறுக்கும் போய்க் கொண்டிருந்த
மக்கள், ஐசுகிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் எல்லாம் மறைந்தன.
ஒரு நிமிடம் பரமேஸ்வரிதான் நிலைமை உணர்ந்து தலை தாழ்த்திக் கொண்டாள்.
கோவிந்தராசன் நிலைமையை உணர்ந்து கொண்டான். அவனுடைய மனம் றெக்கைக் கட்டிப்
பறந்தது. முகம் பிரகாசமடைந்தது.
தன் திருமண வாழ்க்கை, மனைவி, தொழில் எல்லாவற்றையும் தாண்டி அவை தராத ஒரு நிறைவை அவன் மனம் உணர்ந்தது. தான் விரும்பிய ஒருவர்,
தன்னையும்
நேசிக்கிறார் என்பதை விட வேறென்ன சந்தோசம் இருக்கப் போகிறது?
எத்தனை வயதானால் என்ன? எத்தனை பெரிய ஆளாக இருந்தால் என்ன? எந்த நிலையில் இருந்தால் தான் என்ன?
பரமேஸ்வரியையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவளுடைய வறுமை,
அவளைக்
கட்டிப் போட்டு வைத்து இருந்திருக்கிறது. அதனால்தான் கல்லூரி நாட்களில் நழுவி
ஓடிக் கொண்டே இருந்திருக்கிறாள். இருவருக்கிடையில் செல்வாக்கு, பணம், அரசியல் என்னவெல்லாமோ
மிகப் பெரிய கோட்டைச் சுவற்றை எழுப்பியிருந்திருக்கிறது.
அவள் தன் மனதை வெளிக் காட்டாமல், தனக்குள்ளாகவே காலப் போக்கின் போக்கிற்கு
ஏற்ப வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
பரமேஸ்வரி சட்டென எழுந்தாள். “சரி நான் கிளம்பறேன். நேரமாயிருச்சி” என்றாள்.
“மறுபடி எப்பப் பாக்கலாம்” என்றான்.
“பார்க்கலாம். இந்த மாதிரி எப்பாவது தானாச் சந்தர்ப்பம்
கிடைச்சா” என்றாள்.
“ஏன் நாமாகவே சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கிட்டா என்ன” என்றான் கூடவே
நடந்து கெண்டு.
அவள் அவன் கண்களைப் பார்த்தாள். “எதுக்கு எனக்கு இரண்டு வயதில மகள்
இருக்கிறாள். கணவர் பள்ளியில வேலை செய்யறாரு. நம்மோட கல்லூரி பத்தியும், நண்பர்கள்
பத்தியும் தெரிஞ்சிக்கணும்னு தோணிச்சி. அதான் வந்தேன்” என்றாள்.
அவள் அவளையே உற்றுப் பார்த்தான். ஏதோ சொல்ல முடியாத சோகம் அவள் முகத்தில்
தெரிந்தது.`
“சரி மறுபடி பார்க்கலாம்” என்றபடி
புறப்பட்டு விட்டாள்.
தன் காரில் கண்டிப்பாக ஏற சம்மதிக்க மாட்டாள் எனத் தோன்றியதால், எதுவும்
மேற்கொண்டு அவன் சொல்லாமல் தலையசைத்து வைத்தான்.
அதற்குப் பின் பட நிறுவனம் சார்பாக, கம்போடியா, இந்தோனேசியா எனத் தொடர்
பயணம்.
உள்ளுக்குள் பரமேஸ்வரியின் பார்வை
உறைந்தே கிடந்தது. திரும்பிய பக்கமெல்லாம் அவளாகவே தெரிவது மாறவில்லை. மனைவியுடன்
கூட அவனால் முன்பு போல இருக்க முடியவில்லை. பெரிய பெண் பிறந்ததும், அவளிடமே
பெரிதும் தன் நேரத்தைக் கழித்தான். படத்தயாரிப்பு வேலையும் சேர்ந்து கொள்ளவே
அதிலேயே தன்னைக் கரைத்துக் கொண்டான்.
அந்த ஆண்டு அவன் இயக்கிய படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அந்த அளவிற்கு
அதிலேயே அவன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தான். முதன்முதலாக அதைப் பரமேஸ்வரியிடம்
தான் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. எத்தனையோ போன் கால்கள், வாழ்த்துகள்,
விருதுகள்,
நிகழ்ச்சிகள்
எதிலும் அவன் மனம் முழுமையாக ஒன்றவில்லை.
தன் படம் விருது பெற்ற விசயம் பரமேஸ்வரிக்குத் தெரியுமா? அவள் படம்
எல்லாம் பார்ப்பாளா? என் எண் அவளுக்குக் கொடுக்காமல் போனதும், அதை அவள்
கேட்காததும் நினைவிற்கு வந்து இம்சித்தது.
தானே போன் செய்தால் தான் என்ன? அவளின் லேண்ட் லைன் எண் தான் தெரிந்திருந்தது. மிகுந்த
தயக்கத்திற்குப் பிறகு, கிட்டத்திட்ட ஒரு மாதம் தயக்கத்திற்குப் பிறகு போன்
செய்தான்.
“ஹலோ, சங்கரலிங்கம் ஹியர் யாருங்க” என்றது குரல்.
ஒரு நிமிடம் மிரண்டு விட்டான். அவளுடைய கணவனாக இருக்குமோ?
போனைப் பதில் சொல்லாமல் வைத்தால் நிலைமை விபரீதமாகி விடும்.
“பரமேஸ்வரி மேடம் . . . .” என இழுத்தான்.
“இது அவங்களோட பழைய எண். அவங்க கிட்டதான் இந்த எண் இருந்தது.
இப்ப சரண்டர் பண்ணிட்டாங்க. நாங்க வேற” என்றார்.
“அப்படியா? சாரிங்க. அவங்களோட வேற எண் ஏதாவது தெரியுமா” என்றான்.
“இல்லீங்க. அவஙக வேற ஊரு போயிட்டாங்கன்னு கேள்விப்பட்டோம்.
அவ்வளவுதாங்க தெரியும்” என்றது அக்குரல்.
“சரிங்க” என்றபடி ரிசீவரை வைத்துவிட்டான்.
கல்லூரிக்கு காரியதரிசியை அனுப்பி விசாரித்த போது, அவள் கணவன் இறந்து
விட்டதாகவும், அதனால் பரமேஸ்வரி சொந்த ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கி சென்று
விட்டதாகவும் தகவல் கிடைத்தது.
தலயில் இடி விழுந்தது போல இருந்தது. பரமேஸ்வரிக்கு ஆறுதல் சொல்லக் கூட முடியாத
நிலையும், அவள் இப்போது சென்னையில் இல்லை என்பதும் அவனை நிலை குலைய வைத்து விட்டது. அவள்
கணவனின் ஊர் வேலூர் எனச் சொன்னதாக ஒரு நினைவு.
கோவை தான் சென்றிருப்பாள். கோவை கல்லூரிக்குச்
சென்று பார்க்கலாமா என்ற எண்ணமும், அவள் சந்திக்க மறுத்து விட்டால்? என்ற தயக்கமும் அவனைத்
தடை செய்து கொண்டிருந்தன. தொடர்ந்து அவனுக்குப் பல பட வாய்ப்புகள் குவிந்த
வண்ணமிருந்தன.
நாட்கள் கடந்து வருடங்களாயின. பல மனிதர்கள் அவன் வாழ்க்கையில் அவனைக் கடந்து
போய்க் கொண்டேயிருந்தார்கள். அவன் மனம் மட்டும் பரமேஸ்வரியிடமே நிலைபெற்று நின்று
விட்டது. எத்தனை வெற்றிகளைக் குவித்தாலும், பல மாளிகைகள்
வாங்கினாலும் உப்புத் தண்ணிக் குடித்தது போலவே இருந்தான்.
இதோ ஏழாவது முறையாகத் தேசிய விருது அவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவன்
படங்கள் எல்லாவற்றிலும் காதல்தான் இழையோடிக் கொண்டு இருந்தது. பல பல பரிமாணங்களில்
காதல் கதைகளை எடுத்து தன் காதலை முழுமையாக்க அவன் முயற்சித்துக் கொண்டே இருந்தான்.
எந்தப் படமும் அவனைப் பொறுத்த வகையில் முழுமையடையாததாகவே தோன்றியது.
அவன் படித்த கல்லூரியிலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. இப்போதைய முதல்வர்,
பழைய
மாணவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
எல்லாம் நன்கொடை வசூலிப்பதற்காகத் தான் இருக்கும் என நினைத்துக் கொண்டான்.
இன்னொரு புறம் பழைய நண்பர்களைச் சந்திக்கலாம். பரமேஸ்வரி கலந்து கொள்ள
வாய்ப்பிருக்கிறது.
நண்பர்களைத் தொடர்பு கொண்டு தான் செல்லவிருக்கும் செய்தியைத் தெரிவித்தான்.
பழைய மாணவர் நிகழ்வில், அங்கு முரளியைப் பார்த்ததும் அவனுக்கு ஆச்சரியமாக
இருந்தது. அவனுடைய ஊருக்குக் கவுன்சிலர் ஆகியிருந்தான். பெரும்படையோடு வந்திருந்தான்.
மாதேஸ்வரி தன் சொட்டைத்தலை கணவனோடு வந்திருந்தாள். அவளே வயதானது போலத்
தெரிந்தாள். பதினைந்து வயது மூத்த தாய் மாமனைக் கட்டியிருந்தாள். தொந்தி பெருத்து,
கேன்டீன்
சிமெண்ட் நாற்காலியில் மர நிழலில் உட்கார்ந்தவன் உட்கார்ந்தவன்தான். போண்டா,
பஜ்ஜி என
ஆர்டர் போய்க் கொண்டே இருந்தது.
மாதேஸ்வரி நண்பர்களைப் பார்த்ததும் கலகலப்பாகி விட்டாள். ஒவ்வொருவராகத் தேடிப்
போய்ப் பேசிக் கெண்டிருந்தாள்.
ரம்யா ஆளே மாறிவிட்டிருந்தாள். படித்த காலத்தில் மாடர்னாக வளைய வருவாள்.
இப்போது அல்ட்ரா மாடர்ன் ஆக மாறிவிட்டிருந்தாள். பாப் வைத்த தலைமுடியும், லிப்ஸ்டிக்கும்,
சிறிய
அளவில் கைவைத்துத் தைத்த ஜாக்கெட்டுமாக இன்னும் இளமையை நோக்கிப் படையெடுத்துக்
கொண்டிருந்தாள்.
எல்லோரிடமும் ஒப்புக்குப் பேசினாலும், அவன் மனம் பரமேஸ்வரியையை வழி மேல் விழி
வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
அவனைப் பல பேர் தொலைவிலிருந்து கை காட்டிப் பேசிக் கொண்டிருந்தார்கள். கல்லூரி
நிர்வாகமே மாலை போட்டு அவனை வரவேற்றிருந்தது. நண்பர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு பல
கேள்விகளாலும், பாராட்டுகளாலும் திணறடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மைக்கில் ஒரு குரல், “தோழர்கள் அனைவரும் கலையரங்கிற்கு வரவும்.”
கோவிந்தராசனுக்கு அத்தனை உணர்வுகளும் விழித்துக் கொண்டன. இது பரமேஸ்வரியின்
குரல்.
அவன் முக மாற்றத்தைக் கண்ட கணேசன், “இந்தக் கல்லூரியில இன்னி வரைக்கும்
இருக்கிற பாக்கியம் பெற்றது நம்ம பரமேஸ்வரிதான்” என்றான்.
“இந்த ஏற்பாடே பரமேஸ்வரி செஞ்சது தானே” என்றான்
முரளி.
“ஊரறிந்த இரகசியம். இது யாருக்குத் தெரியாது” என்றான்
கணேசன்.
முரளியும் கண்களும் கோவிந்தராசனின் கண்களும் சந்தித்துக் கொண்டன.
கூட்டம் அரங்கம் நோக்கி நகரவே, அரங்கிற்குள் நுழைந்த கோவிந்தராசன், முதல் வரிசையில் அவன்
பெயர் ஒட்டியிருந்த நாற்காலியில் அமர வைக்கப்பட்டான். மேடையை அவன் கண்கள் தேடின.
அவன் நினைத்தது போலவே, நிகழ்ச்சி தொகுப்பு பரமேஸ்வரிதான். இருவர் கண்களும் ஒருமுறை
சந்தித்து மீண்டன.
நிகழ்ச்சி முடிந்து கோவிந்தராசன், கார்குழலி, பரமேஸ்வரி, ரம்யா, கணேசன்,
முரளி
அனைவரும் சாப்பிடச் செல்லாமல், நாற்காலிகளை அருகருகே போட்டுக் கொண்டு பழைய கதைகளைப் பேசி
மகிழ்ந்தார்கள்.
பரமேஸ்வரியை எல்லோரும் கலாய்த்துக் கொண்டு இருந்தார்கள். இன்னும் கல்லூரி
படிப்பையே முடிக்காததால், அவள் மட்டும் மாணவி போல அங்கேயே தொடர்ந்து வந்து
கொண்டிருக்கிறாள் என்று கேலி பேசியதை, மிகுந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டாள்
பரமேஸ்வரி.
நண்பர்கள் குழுவில் பல விசயம் பேசி, பின் அவரவர் மற்றொருவருடன் பேசத் தொடங்கி
விட்டார்கள்.
கோவிந்தராசனும், பரமேஸ்வரியும் அமைதியாகி விட்டார்கள். கோவிந்தராசன் தான்,
“சென்னையிலிருந்து
இங்கு எப்ப வந்தீங்க” என்றான்.
“அந்த வருடமே இங்க வரவேண்டியதாயிடுச்சி. அவருக்கு எதிர்பாராம
ஒரு விபத்து. இந்தக் கல்லூரியில அப்ப காலியிடம் இல்ல. அதனால திருச்சிக்கு
மாற்றலாயிட்டேன். அங்கியே ஏழு வருடம். இங்க சொர்ணா மேடம் ஓய்வு பெற்ற பிறகு தான்
இங்கு மாற்றலாக முடிந்தது. இங்கு வந்து ஆறு வருடமாகுது” என்றாள்.
“நான் எட்டு வருடத்துக்கு முன்னால நீங்க இங்க மாற்றலாகி
வந்துருக்கிறீங்களானு முரளிகிட்ட கேட்டேன்”
“முரளிக்குத் தெரியாது. இந்த வருடம் தான் யாருக்கோ அட்மிசன்
வேணும்னு கேட்டு வந்தாரு. அப்பத்தான் பழைய நண்பர்களச் சந்திக்க ஒரு ஏற்பாடு
செய்யலாம்னு பேசிக்கிட்டோம். பத்திரிக்கையில தொடர்ந்து உங்களப் பத்தியும், உங்க படங்களைப்
பத்தியும் நியூஸ் வந்திட்டிருக்கும். தேசிய விருதுகளா வாங்கி குவிச்சிருக்கிங்க.
வாழ்த்துக்கள்” என்றாள்.
“அந்த வாழ்த்துல உங்களுக்கும் பங்கிருக்கு” என்றான் அவன்
கண்களைப் பார்த்தபடி.
அவள் ஒரு கணம் தடுமாறி விட்டாள். வார்த்தைகள் கொண்டைக் குழிக்குள் நின்று
விட்டன. அவனுடைய பார்வையிலிருந்த ஏதோவொன்று அவளை நிலை குலைய வைத்துக்
கொண்டிருந்தது. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.
“சாப்பாடு அருமை” என்று யாரோ ஒருவர்
சொல்லிக் கொண்டிருந்து காதில் விழவே, இருவரும் சுயநிலைக்கு மீண்டார்கள்.
அவனுக்கு இரு பெண் பிள்ளைகள். மூத்த பெண் எட்டாவது, இளைய பெண் ஐந்தாவதும்
படித்துக் கொண்டிருந்தார்கள்.
பரமேஸ்வரியின் பெண் அந்த ஆண்டு பிளஸ்டூ எழுதியிருந்தாள். பையன் பத்தாவது
படித்துக் கொண்டு இருந்தான்.
எண்களைப் பரிமாறிக் கொண்டார்கள். பரமேஸ்வரி அவனையும் நண்பர்களையும் யாரையும்
வீட்டிற்கு அழைக்கவில்லை. முரளியும் கலாவும் மாதேஸ்வரியும் கணேசனும் தான் எல்லோரையும்
வீட்டிற்கு வரும்படி கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
முரளி, மணிமாலா மேடம் இறந்தது
தொடர்பாகச் சொல்லியிருந்தான். அதைத் தெரிந்து கொள்வதற்காக பரமேஸ்வரிக்கு இடையில்
ஒரே ஒருமுறை தான் கோவிந்தராசன் போன் செய்தான். அவள் போன் எடுக்கவில்லை. அதற்குப்
பிறகு பல ஆண்டுகள் கழித்து இப்போதுதான் போன் செய்கிறான். இடையில் அவர்கள் மனதால்
பேசிக் கொண்டுதான் இருந்தார்கள்.
இரண்டாம் ஊரடங்கு கால கட்டத்தில் இந்தியாவே சோதனையில் மூழ்கியிருந்தது.
ஆசுபத்திரியில் இடம் இல்லை ஆக்ஸிஜன் இல்லை. ஆம்புலன்சு இல்லை. கங்கையில் பிணங்கள்
அப்படி அப்படியே போடப்பட்டுக் கொண்டிருந்தன.
தெருக்களில் மக்கள் கூட்டமில்லை. ஆனால் மயானங்களில் கூட்ட நெரிசல் தாள
முடியாமல் இருந்தது. மருந்துக் கடைகளில் கள்ள விற்பனை பெருகிக் கொண்டிருந்தது.
போன் வந்தால் பகீர் என்றது.
இந்தச் சமயத்தில் தான் கோவிந்தராசன் போன் செய்திருக்கிறான்.
“அங்க சேலத்தில நிலவரம் எப்படி”
“மோசமாத்தான் போயிட்டிருக்குது. அங்கியும் அப்படித்தானே” என்றாள்.
“ஆமா. படு மோசம். ஆம்புலன்சுக்குப் போன் செய்தா
ஆசுபத்திரியில இடமிருக்குதுனு கன்பர்ம் பண்ணிட்டு கூப்பிடுங்க. அப்படிங்கறாங்க”
“தெருவெல்லாம் வெறிச்சோடியிருக்குது. இரண்டு மாஸ்க்
போட்டுக்கிட்டுத்தான், வெளிய போற மாதிரி இருக்குது”
“ஊரெல்லாம் ஆக்ஸிஜன் பத்தித்தான் பேச்சா இருக்குது” என்றான்.
“உனக்குத்தான் ஆக்ஸிஜன்
பத்தி நல்லாத் தெரியுமே” என்றான்.
“ஆமா. நான் கெமிஸ்ட்ரி புரொபசர். பின்ன தெரியாம இருக்குமா.
தண்ணி தான் அடிப்படை. அதிலிருந்து தான் ஆக்ஸிஜன் எடுக்கறாங்க. ஆமா. எல்லா தொழில்
நிறுவனங்கள்லயும் ஆக்ஸிசன் உற்பத்தி பண்ண அனுமதி கொடுத்திருக்காங்க” என்றாள்.
எதிர்த்தரப்பு மௌனமாக இருக்கவே, ‘ஹலோ ஹலோ’ என்றாள்.
”கேட்டுட்டுத்தான்இருக்கேன். நேசம் தான் எல்லாக் கதைக்கும் அடிப்படை. அது தான்
ஆக்சிஜனுக்கே அடிப்படை. உரிய நேரத்திலேஆக்ஸிஜன் குடுக்கப்பட வேண்டியவங்களுக்கு கொடுக்கப்படலேன்னா?" அவன் கேட்டான்.
இப்போதாவது மனம் விட்டு ஏதோ சொல்லிவிடவேண்டும் போலிருந்தது
பரமேஸ்வரிக்கு.
"விதி!சிலிண்டர் அவங்க பொறுப்பிலே இல்லேன்னா என்ன செய்றது?" என்றாள்.
"........................."
ஒரு நெடிய மௌனத்திற்குப்பின் "ஹலோ" என்றான்
சிறிது நேரம் கழித்து, “ம். லைன்ல தான் இருக்கேன்” என்றாள்.
““இல்ல எனக்கு
விருது பலமுறைக் கொடுத்திருக்காங்க. கதையை எங்கியிருந்த எடுக்கறீங்கனு பலபேர்
கேட்டிருக்காங்க. ஆக்ஸிஜன் தான் எல்லாக் கதைக்கும் அடிப்படைனு என்னால சொல்ல
முடியில. அதான் யோசிச்ட்டிருந்தேன்“என்றான்.
மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் அவளும் அமைதியானாள்.
“ஹலோ” என்றான்
சிறிது நேரம் கழித்து, “ம். லைன்ல தான் இருக்கேன்” என்றாள்.
“சரி. மறுபடி பேசறேன். வேற ஒரு கால் வருது” என்று
கூறினான்.
“சரி” என்றாள். எதிர்த்தரப்பு அணைந்தது.
அன்று மாலை நியூசில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கோவிந்தராசன் ஆக்ஸிஜன் தக்க
சமயத்தில் கிடைக்காததால், மரணம் என வாசித்துக் கொண்டிருந்தார்கள்.
சென்னையிலிருந்து நண்பன் முரளியின் போன் கால் அது. “நியூஸ் பாத்தியா, ஆக்ஸிஜன் கிடைக்காம
கோவிந்தராசன் மரணம்னு சொல்லிட்டிருக்காங்க”
பரமேஸ்வரி மயக்கம் வரும் போலிருந்தது. எதுவும் சொல்லாமல் போனை ஆப் செய்து விட்டாள். நியூஸ் சானலை போட்டாள்.
எது உண்மை? எதுபொய்?
முரளிக்கு மறுபடி போன் செய்தான். “நியூஸ் பாத்தியா, ஆக்ஸிஜன் கிடைத்ததால் அவர் உயிர் தப்பினார்னும் சொல்லிட்டிருக்காங்க.ஆமாம் கோவிந்தராசன் பிழைத்துவிட்டான்” என்றான்.
பரமேஸ்வரி அந்த ஆக்ஸிஜன் வழங்கும் தைர்யம் உரிய நேரத்தில் தனக்கும்
கிடைத்திருந்தால்? என்று நினைத்து எதுவும் சொல்லாமல் போனை
ஆப் செய்து விட்டாள்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?