நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday 12 March 2013

புறநானூற்றில் மறப் பண்பாடு



முனைவர் இரா.ஜெகதீசன்,            இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,                  திருவள்ளுவர் பல்கலைக்கழகம்,  சேர்க்காடு, வேலூர் - 623 115

புறநானூற்றில் மறப் பண்பாடு

                சமூக வாழ்வில் மக்கள் அனைவரும் கண்டு அறிந்து அனுபவித்து மகிழ்வதைப் புறம்எனவும்;தலைவன் - தலைவி இருவரிடையே முகிழ்க்கும் உறவையும் இல்வாழ்க்கையையும் பிறர்க்கு அறிவிக்க இயலாக நிலையை அகம்எனவும் பகுத்தனர். போரில் புறம் காட்டா வீரர்களையும் தம் மக்களைப் போருக்குத் தெருட்டித் துணிவு தந்தனுப்பிய தாய்மார்களையும்;வீழ்ந்த வீரர்களுக்கு நடுகல் நாட்டிப் போற்றியதையும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. அரசன் மாற்றார் மீது படையெடுத்துச் சென்றதனையும்; ஆநிரை கவர்ந்து வந்ததனையும் போர் மரபாக மறப் பண்பாடாகப் புறநானூறு வழி நாம் அறிய முடிகிறது. அவ்வழி, மறப்பண்பாடுகளில் ஒருசிலவற்றை ஈண்டு காண்போம்.
                                வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா
என்பது பாரதியின் வாக்கு.
                கருவினிலி வளரும் மழலையின்  உயிரில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னைஎன்றார் கண்ணதாசன். தாயின் கருவில் உருவாகும் போதே ஒரு மனிதனின் பண்புகள் உருவாகிவிடுகின்றன என்பது மருத்துவ வல்லாரின் கூற்று. தமிழ்ப் பெண்களின் வீரம் செறிந்த பண்பினைப் போற்றிப் புகழ்கிறது புறநானூறு. மறம் என்பது வீரம், போர், கொலை, பாவம், வலி இன்னபிற பொருள்களை உணர்த்துவதாகக் கலைக்களஞ்சியம் இயம்புகிறது.
                சங்க நூல்கள் தமிழரின் போரையும் போர்முறையையும் பற்றி விரிவாகக் கூறுகின்றன. அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் இயற்கையாகவே மறப்பண்பு படைத்தவர்களாக விளங்கினர். அவருடைய வழக் வழக்கங்கள், தொழில், விளையாட்டு யாவும் போர்ப்பண்புடன் திகழ்ந்துள்ளன. தமது பிள்ளைகளின் மார்பில் ஐம்படைத்தாலி அணிவித்து ; இன்புற்றனர். சங்கு, சக்கரம், தண்டாயுதம், வாள், வில் ஆகிய ஐந்து கருவிகளின் உருவங்கள் அமைந்த இத்தாலியைப் பிறந்த ஐந்தாம் நாளில் பிள்ளைகளுக்கு அணிவித்தனர். இத்தாலியை அணிந்த சிறுபிள்ளைகளைப் பற்றி,
                                """"தாலி களைந்தன்று மிலனே’’ (புறம். 77:7)
எனப் புறநானூறும்;
                                """"பொன்னுடைத் தாலி என்மகன்’’ (அகம். 54:18)
என அகநானூறும் எடுத்துக் கூறியுள்ளன. புலியின் பல்லைக் கோர்த்து செய்த தாலிகளையும் இவர்கள் அணிந்திருந்தனர்.
                                """"புலிப்பல் தாலிப் புன்றலைச் சிறாஅர்’’ (புறம்.374:9)
                                """"புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி’’ (அகம்.7:18)
                                """"புலிப்பல் தாலிப் புதல்வன்’’ (குறுந். 161:3)
விளையாட்டு காலங்களில் சேவற்கோழி, ஆட்டுக்கடா, எருது முதலியவற்றைத் தம்முள் ஒன்றோடு ஒன்று மோதிப் போர் செய்யும்படி பயிற்சி அளித்து போர் செய்யவிட்டு அதனைப் பார்த்து மகிழ்வர்.
                வளவிய இதழை உடைய குளவியும் குறிஞ்சியும் வாடும்படி ஏறுகள் தம்மிற் பொருகின்ற ஆரவாரத்தை மலைபடுகடாம் குறிக்கின்றது.
                                """"வள்ளிதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய                                    நல்லேறு பொரூஉங் கல்லென் கம்பலை’’(மலைபடு.334-335)
ஏறுகள் பொருவதனால் சேறாகும் இடத்தைப் பற்றிப் பட்டினப்பாலை பின்வருமாறு இயம்புகிறது.
                                """"ஏறு பொரச் சேறாகி’’ (பட்டினப்.46)
போரென்று கேட்டால் அதனை விரும்பி ஆரவாரிக்கும் சிவந்த கண்ணையுடைய வீரர் தமிழர் என்பதை,
""""செருவேட்டுச் சிலைக்கும் செங்கண் ஆடவர்’’ (அகம்.157:4)
என அகநானூற்று வரி புலப்படுத்துகின்றது. ஊரில் உள்ள மன்றின்கண் உறங்கும் முழவினது காற்று எறிந்த தெளிந்த ஓசையையுடைய கண்ணின் ஒலியைக் கேட்பின் அது போர்ப்பறையென வீரர்கள் எண்ணி மகிழ்வதாகப் பின்வரும் புறநானூற்றுப் பாடல் இயம்புகிறது.
                                """"பொதுவிற் தூங்கும் விசியுறு தண்ணுமை                                வளிபொரு தெண்கண் கேட்பின்                                          அதுபோ ரென்னு மென்னையு முளனே’’(புறம்.89:7-9)
போரென்று கேட்பின் விரும்பும் மறவரையும் புறநானூறு குறிப்பிடுகின்றது.
                                """"போரெனிற் புகலும் புனைகழன் மறவர்’’ (புறம்.31:-9)
அரசன் பறவைகள் மூலம் போருக்குக் கூடாத நிமித்தம் கண்டால் பகையிடத்துப் போர்
செய்ய ஏவ மாட்டான். அதனால் மனம் உடைந்து தம்முடைய பூரித்த தோள்களைத் தட்டி ஒருவரோடு ஒருவர் பொருது மடிய வேண்டும் என்னும் மறப்பண்பு கொண்டு நிற்பர்.
                                """"உட்பகை யொருதிறம் பட்டெனப் புட்பகைக்                                     கேவான் ஆகலிற் சாவேம் யாமென                                        நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப’’(புறம்.68:11-13)
போரினைத் தமது பொழுதுபோக்காகக் கொண்டனர். இதனால்தான், சோழன் நலங்கிள்ளி வெல்லும் போரினைச் செய்யும் பாசறையின் கண்ணே இருந்தான். தன் நகரின்கண் இருத்தலை விரும்பவில்லை என புலவர் பாடினர்.
                                """"நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப்                                பாசறை யல்லது நீயொல் லாயே’’(புறம்.31:5-6)
அடுகின்ற போரை விரும்புதலால் அரசர் இரவில் கண்ணுறக்கமும் பெறார் என முல்லைப்பாட்டுப் பாடுகின்றது.
                                """"மண்டமர் நசையொடு கண்படை பெறாஅது’’(முல்லைப்.67)
இத்தகைய மறப்பண்பு படைத்த பெண்பாலாரும் வீரம் செறிந்த குணத்துடன் விளங்கினர். தம் வயிற்றில் பிறந்து தம் முலைப்பால் உண்ட மக்கள் மறம் குன்றாத மானமும், வீரமும் செறிந்த வீறாப்பும் உடையராதல் வேண்டுமென்பது தமிழ்த் தாய்மாரின் குறிக்கோள். புறங்காட்டி ஓடாத மேற்கோளையுடைய வீரனின் தாய், தன் மகனின் மாண்பைக் கண்டபொழுது அவளுடைய வாடிய முலைகள் பால் ஊறிச் சுரந்தன எனப் புறநானூறு கூறுகின்றது.
                                """"இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய                            சிறப்புடைய யாளன் மாண்பு கண்டருளி                                     வாடுமுலை யூறிச் சுரந்தன                                               ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே’’(புறம்.295:5-8)
போரின்கண் என் மகன் புறமுதுகிட்டு ஓடியிருப்பின் அவனுக்குப் பாலூட்டிய இம்முலையை அறுத்து எறிவேன் என்று வஞ்சினம் கூறிப் போர்க்களம் புகுந்து, தன் மகன் இறந்து கிடப்பது கண்டு, ஈன்ற பொழுதினும் பெருமகிழ்ச்சி கொண்டாள் ஒரு தமிழ்மகள் ஒருத்தி.
                                """"---------------------- சிறுவன்                                 படையழிந்து மாறினன் என்றுபலர் கூற                                  மண்டமர்க் குடைந்தனன் ஆயின் உண்டவென்                               முலையறுத் திடுவென் யானெனச் சினைஇக்                                கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்                                     செங்களந் துழவுவோள் சிதைந்தது வேறாகிய                             படுமகள்; கிடக்கை காணூஉ
                                ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே’’(புறம்.278)
நின்மகன் யாண்டு உளன் என்று வினவியவர்க்குப் புலிகிடந்து போகிய கல்முழைபோலல அவனைப் பெற்ற வயிறே இது; அவன் போர்முனையிடத்துத் தோன்றுவான்; அவனைக் காண வேண்டின் ஆண்டுச் சென்று காண்க என்று விடையிறுத்தாள் ஒருத்தி.
                                """"புலிசேர்ந்து போகிய கல்லளை போல                                          ஈன்ற வயிறோ இதுவே                                             தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே’’(புறம்.86:4-6)
காளையின் கடன்
                                """"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே                                   சான்றோன் ஈக்குதல் தந்தைக்குக் கடனே                                    வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே                               நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே                                    ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்                                         களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே’’(புறம்.312)
என்று பொன்முடியார் என்னும் பெண்பாற் புலவர் பாடியுள்ளார். பல்வேறு வீரப்பண்புகளையும் தமிழரின் செம்மாந்த மாண்பினையும் விளக்குவது இப்பாடல். மகனைப் பெற்றெடுத்தல் மட்டும் தாயின் பணியன்று. அவனைச் சமுதாயத்தில் உள்ள சிக்கல்களை எதிர்கொள்ளத் தக்க வகையிலும் பயன்படும் வகையிலும் உடல் வலிமையும் மனவலிமையும் உடையவனாகப் பாதுகாத்துச் சமுதாய மாந்தனாக ஆக்குவது அவன் கடமையாகும்.
                வீரச் சமுதாயத்தில் ஒரு தந்தை தன்னுடைய மகன் பெருவீரனாகத் திகழ்வதையே விரும்புவான். சமுதாயத்தின் தேவைகளுக்கு ஏற்ப அவனைப் போர்கலைகள் நிரம்பப் பெற்றவனாய் உருவாக்குதல் தந்தையின் கடமை. மகனறிவு தந்தையறிவுஎன்பது உண்மையாயினும், தம்மின் தம் மக்கள் அறிவுடையவனாய், வல்லமை படைத்தவனாய் உருப்பெறுவதற்குரிய சூழல்கள் உடையதாக வேண்டும். மனிதன் சமுதாயத்தின் தேவைக்கு ஏற்பச் சமுதாயத்தில் உருவாக்கப்படுகிறான். வீரச் சமுhயத்தில் ஓர் ஆண்மகன் வீரனாவதற்குரிய படைக்கருவிகளை வழங்கும் பணியைச் சமுதாயம் ஏற்றுக் கொண்டது. அனைத்திற்கும் மேலாக ஒரு குடிமகன் அரசினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நலத்துடனும் அச்சமின்றியும் வாழ வாய்ப்பு இல்லாதிருக்குமாயின் அவன் கற்ற கல்வியும் அவனிடம் உறைந்து நிற்கும் வீரமும் பயனற்றுப் போய்விடும் . அரசு அந்நாளில் வீரனாக வாழ்ந்து நாட்டைக் காத்த குடிமகனுக்கு அவன் வீரத்தைப் பாராட்டி நிலங்களைப் பரிசாசத்தந்து அவன் குடும்பம் மகிழ்வுடன் வாழ வழி செய்து தந்தது.
                தாய், தந்தை, சமுதாயம், அரசு என்ற நான்கு நிலைகளிலும் உதவியைப் பெற்ற ஒருவீரன் நன்றி பாராட்டும் பண்பைத் தலைமைப் பண்பாகக் கொண்டிருத்தல் வேண்டும். வீரச் சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவன் திருப்பிச் செய்யும் கடமை போர்க்களத்தில் பகைவர்களின் படைகளில் வலிமை வாய்நத யானைப் படையை அழித்து வெற்றியுடன் வலுவதாகும். ஒருவீரன் தாய்க்கு மகிழ்ச்சியையும்; தந்தைக்குப் பெருமையையும்; சமுதாயத்திற்குச் சிறப்பையும்; அரசுக்குப் பாதுகாப்பையும்; தன் வீரத்தால் ஈட்டுவதால் புகழ் பெறுகின்றனர். இவ்வாறு புகழ் மண்டி வாழும் வீரவாழ்வுதான் தமிழர் விரும்பிய நெறி என்பதனைப் பொன்முடியார் என்னும் வீரமகள் நமக்கு உணர்த்துவதை அறியலாம்.
ஈன்ற ஞான்றினும் பெரிதே
                எந்த மண் வீரமங்கையரைப் பெற்றிருக்கிறதோ? எத்துணைத் துன்பம் வரினும் அஞ்சாது துணிவுடன் தாங்கி வீரமைந்தரைத் தரும் தாயரைக் கொண்டிருக்கிறதோ? அந்த மண் வணக்கத்திற்து உரியதுஎன்று ஆங்கிலக் கவிஞர் பைரன் கூறுகிறார். அவரது கூற்று தமிழ் மண்ணுக்கு முற்றும் பொருந்துவதாகவே அமைந்துள்ளது. இவர்தம் கூற்றுக்கு மிகப் பொருத்தாமான சான்று பூதங்கண் உத்திரையாரின் பாடல்,
                                """"மீன்உண் கொக்கின் தூவி அன்ன                                        வால்நரைக் கூந்தல் முதியோர் சிறுவன்                                    களிறு எறிந்து பட்டனன் எனும் உவகை                                ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்                                        நோக்கழை துயல்வரும் வெதிரத்து                                         வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே’’(புறம்.277)
வயது முதிர்ந்த மூதாட்டி, அவள் தலை முழுவதும் நரைத்துப் போயிற்று. கொக்கின் இறகுகளைப் போன்ற பால்வண்ணக் கூந்தல், அம்முதிய தாய்க்கு இருப்பதோ ஒரே மகன். இனியொரு மகனை ஈன்றெடுக்கவும் இயலா அகவை. ஆயினும் அத்தாய் போருக்கு மகனைப் பேருவுவகையுடன் அனுப்புகிறாள். மகனின் இன்ப வாழ்வைவிடத் தாய் நாட்டின் மானம் காக்கப் போர்முகம் நோக்கிச் செல்வதையே விரும்புகிறது. அவள் வீர நெஞ்சம், போர்களத்தில் தீரத்துடன் போராடிய வீரமகன் வலிமிக்க களிறை ஆற்றலுடன் வீழ்த்துகின்றான். ஆனால், களிறை வீழ்த்தினானே தவிரக் காளையின் உயிர் காப்பாற்றப்படவில்லை. வீரம் விளைத்துத் தனக்கு உயிரூட்டிய தாய் மண்ணிலேயே அவன் வீர மார்பு பதிந்து கிடக்கிறது. இக்காட்சியைக் கண்ணுற்றாள் தாய். மைந்தன் மடிந்தான்என்பதால் கண்கள் கண்ணீரைச் சொரிக்ன்றன. அக்கண்ணீர்  வேதனைக் கண்ணீரல்ல ஆற்றல்சால் மகன் விளைந்த வீரம் குறித்துப் பொங்கிய உவகை நீர்என்கிறார் உத்திரையார். ஒரு பெண்ணின் உள்ள இயல்பை இன்னொரு பெண்ணால் தான் புரிய இயலும் என்பது உண்மை. உள்ளத்தால் உணர்ந்து உருகிப் பாடிய இப்பாடல் தமிழகத்தின் வீரவாழ்வை உலகிற்கு இன்றும் உணர்த்தி நிற்கிறது.
மானம் காத்த மறம்
                மானமா? உயிரா? என்று கேட்டாhல் மானமே பெரிது என்று வாழ்ந்த புகழ்மிகு வாழ்க்கை புறநானூற்று வாழ்க்கை. மானமிழந்து நூறாண்டு வளமுடன் வாழ்வதைவிட மானங்காக்கப் போராடி வீரனாக மடிவதையே மாண்பு எனக் கொண்ட இனம் தமிழினம். இந்த உயரிய பண்பு தமிழ்ப் பெண்களின் தனிப்பெரும் சொத்து.
                                """"நரம்பு எழுந்து உலகறிய நிரம்பா மென்தோள்                                   முளரி மருங்கின் முதியோள் சிறுவன்                                      படைஅழிந்து மாறினள் என்று பலர்கூற                               மண்டு அமர்க்கு உடைத்தனன் ஆயின் உண்டஎன்                           முலைஅறுத் திடவென் யான் எனச் சினைஇக்                               கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்                                     செங்களம் துழவுவோள் சிதைந்தது வேறாகிய                         படுமகன் சிடக்கை காணூஉ                                               ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே’’(புறம்.278)
நாட்டைக் காக்கப் போர்களம் சென்ற மகன் விழுப்புண் கொள்ளாது புறப்புண் பட்டு மடிந்திருப்பான் ஆயின், பாலூட்டிய இந்த மார்பகங்களை அறுத்தெறிவேன்என வஞ்சினம் கூறிய வீரப்பெண்ணைக் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் படம் பிடித்துக் காட்டுகிறார்.
                வீரத்தையே பாலாக ஊட்டி வளர்த்த மாண்பினை இங்கு நாம் காண்கிறோம். சாவுக்கு அஞ்சியவர்களில்லை தமிழர்; அச்சாவு இகழ்ச்சிக்கு உரியதாக அமைந்துவிடக் கூடாது; புகழ்ச்சிக்குரிய வீரம் செறிந்ததாக இருப்பதையே விரும்பினர் என்பது தெளிவு. செயல்படும் வீர மறக்குலப் பெண்கள்தாம் தமிழர் வீரத்திற்குச் செழுமை ஊட்டினர் என்பதைப் புறநானூறு நன்கு விளக்குகிறது. வீரயுகப்பாடல் என்பதற்கு அனைத்துத் தகுதிகளும் இந்தப் பாடலுக்கு உண்டு. மகளிர் வீரம் என்பதனையே தம் குடிப்பெருமையாகக் கொண்டு ஒழுகிய பான்மை தெரியவருகிறது. மாற்றார்க்குப் பணிந்து வளம் செறிந்த வாழ்க்கை வாழ்ந்து இன்பத்தை நுகர்வதை விரும்பினர் அல்லர். மானம் காக்கச் சினந்தெழுந்து போராடிப் போர்க்களத்தே வெற்றித் திருமகளைத் தழுவ இயலாது போனாலும் வீரங்காத்துமடிதலையே சிறப்பெனக் கருதி அவர்கள் வாழ்ந்தனர். பெரிதெனக் கருதும் உயிரையே ஒரு பொருட்டாகக் கருதாத வீரம் இருந்த காரணத்தால் புலவர்கள் வீரர்களைப் போற்றிப் புகழ்ந்தனர். புலவர்களால் போற்றப்படும் தகைமை வேண்டும் என வீரர் கருதி வாழ விரும்பிய நிலை உண்டானது. சமுதாயம் எதைப் போற்றுகிறதோ அதற்குத் தகவே மானிட வாழ்க்கை அமையும். எங்கே வீரம் தலையாயப் பண்பாகப் போற்றப்படுகிறதோ அங்குதான் வாழ்க்கை விடுதலை உணர்வோடு அமையும் தன்மானம் பெரிதெனக் கருதி வாழும் மாந்தர் அத்தகைய சமுதாயத்தில்தான் தோன்றுவர்.
                இன்றும் இந்தியப் போர்ப்படையில் தமிழர் பிரிவுக்குத் தனிச் சிறப்புண்டு. உயிரை விடுவரே தவிரப் புறங்காட்டிச் செல்லார் என்பதே அச்சிறப்பு. வழிவழி வந்த மறக்குடி மாண்பு இது என்பதனைப் புறநானூறு நமக்கு உணர்த்துகிறது.
செருமுகம் நோக்கிச் செல்க
                சங்க காலத்தை   வீரயுககாலம்   என்று கூறலாம் என்பது கலாநிதி கைலாசபதி
அவர்களின் கருத்து. கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முடிய உள்ள காலத்தை கிரேக்க, உரோமானிய வரலாற்றில் வீரயுகம்என்று குறிப்பிடுகின்றனர். வீரயுகம் என்பதற்குரிய கூறுகள் அனைத்தும் புறநானூற்றில் நம்மால் காண இயலும். அதற்கோர் சான்று ஒக்கூர் மாசாத்தியாரின் பின்வரும் பாடல்.
                                """"கெடுக சிந்தை கடிதிவள் துணிவே                                       மூதின் மகளிர் ஆதல் தகுமே                                               மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை                                    யானை எறிந்து களத்துஒழிந் தனனே                                       நெருதல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்                                 பெருநரை விலங்கி ஆண்டுப் பட்டனே                                இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி                               வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்                           பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி                                         ஒருமகன் அல்லது இல்லோள்                                             செருமுகம் நோக்கிச் செல்கஎன விடுமே’’(புறம்.279)
நாட்டைக் காக்க நடந்த போரில் தந்தையை இழந்தாள் மறத்தமிழ்ப்பெண் ஒருத்தி; காதல் கணவனையும் இழந்தாள்; ஆயினும், நெஞ்சம் தளர்புவுறவில்லை. போர்ப்பறை கேட்டதும் தன்குலம் விளங்கப் பிறந்த ஒரே மகனை அருகே அழைத்துக் கையில் வேல்கொடுத்துப் போர்க்கு அனுப்புகிறாள். மகனின் நிலை என்னவாகும் என்பதை அவள் அறியாமல் இல்லை. மகனை இழந்தபின் தன் வாழ்க்கை சிதறுண்டு போகும் என்பதும் நன்கு அறிவான். அறிந்த பின்னரும் சிந்தை கலங்காது தன் ஒரே மகனைப் போர்க்களத்திற்கு அனுப்பிக் களிப்புற்றாள்.
மறத்தில் அறம்
                வீரத்தைத் தெய்வமாகக் கருதி வழிப்படும் நிலை இருந்துள்ளது. எனினும்,அறஞ்சார்ந்த வீரமே பெருமை உடையதாய்க் கருதப்பட்டது. தகுதியுடையானோடு பொருதுவதே போற்றுதற்குரியதாயிற்று. புறமுதுகிட்டுப் போன ஒரு மறவனோடு போர்புரிய மறுத்தனர். தகுதியின்மை காரணமாகப் போர் மறுத்துச் சென்றதும் உண்டு.
                                """"அடுநை ஆயினும் விடுநை ஆயினும்                                   நீஅளந்து அறிது நின்புரைமை வார்கோல்                                செறிஅறிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்                                    பொலம்செய் கழங்கின் தெற்றி ஆடும்                                 தண்ஆன் பொருனை வெண்மணல் சிதையக்                          கருங்கைக் கொல்லன் அரம்செய் அவ்வாய்                                நடுங்கை நவியம் பாய்தலின் நிலைஅழிந்து                                    கமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்                                   கடிமரம் தடியும் ஓசை தன்னூர்                                      நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப
                                ஆங்குஇனி திருந்த வேந்தனோடு ஈங்குநின்                                  சிலைத்தார்; முரசம் கறங்க                                                மலைத்தனை என்பது நாணுத்தக வுடைத்தே’’(புறம்.36)
என்ற ஆலந்தூர்கிழார் பாடல் முற்கூறியமைக்குச் சான்றாகும்.
                மாற்றான் மேல் படையெடுத்து வந்தான் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். பகைவனின் காவற்காட்டு மரங்களைக் கிள்ளிவளவனின் வீரர்கள் வெட்டி எறிந்தனர். மரங்களை வெட்டி வீழ்த்தப்படும் ஓசைகேட்டும் பகை மன்னன் போருக்கு வரவில்லை. காவல் அமைந்த தன் மாளிகையில் வறிதே இருந்தான். இத்தகைய கூரமற்றவன் நின்னால் கொல்லப்பட்டால் என்ன? கொல்லப்படாது போயினால் தான் என்ன? கோழையுடன் நீ போர் புரியப் போகின்றாயா? அப்போரால் உனக்குப் புகழ் வாராது; பழிதான் மிஞ்சும் என்று இயம்புகின்றார் புலவர். மன்னனும் அதுகேட்டுப் போர் தவிர்த்துச் சென்றான். வீர மறப்பண்புகளுள் இதுவும் ஒன்று.
நின்னினும் நல்லன்
                வெற்றி பெற்றவரை மட்டும் வீரர்என்று கொண்டாடும் இக்காலப் போக்குப் பழந்தமிழரிடம் இருந்ததில்லை. வீரர்கள் எப்போதும் வெற்றி பெறுவர் என்று கூறஇயலாது. வெற்றிக்குக் காரணிகள் பல. எனவே, வெற்றி பெறாதவர் எல்லாரும் வீரமற்றவர் என்று கொள்வது அறிவுடைமை ஆகா. வெற்றியை ஈட்டினாலும் ஈட்டாது போனாலும், உண்மை வீரத்தைப் பாராட்டும் உயர் தகைமை அன்று நிலை பெற்றிருந்தது. வீரத்தில் தலை சிறந்தாக மானம் கருதப்பட்டது.
                பாரதத்தின் விடுதலைப் போரில் நினைவில் வைத்துப் போற்றப்பட வேண்டிய தீரன்பகத்சிங், வெள்ளை அரசு அவனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. இறப்பு கண்டு அம்மாவீரன் அஞ்சவில்லை. நான் சுத்த வீரன். என் தாயகத்தி விடுதலைக்காகப் போராடிய போராளி. என்னை வீரனுக்குரிய தகைமையோடு நடத்துங்கள். உங்களுக்குச் கற்றேனும் ஆண்மை இருக்குமாயின் என்னைத் தூக்கில் ஏற்றாதீர்;வீரனுக்குரிய சிறப்போடு சுட்டுக் கொல்க... என்று முழங்கினான். பகத்சிங்கின் அளப்பரிய இப்பெரு வீரம் ஈடு இணையற்றது என்று போற்றிப் பாராட்டப்படுகிறது. இதற்கு முன்னோடியாக மேம்பட்ட வீரத்தைப் புறநானூற்றில் நாம் காணமுடிகிறது.
                                """"நளியிரு முந்நீர் நாவர்ய ஓட்டி                                         வளிதொழில் ஆண்ட உரவோன் மருக                                களியியல் யானைக் கரிகால் வளவ                                         சென்றமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற                                     வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே                                    கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை                                   மிகப்புகழ் உலகம் எய்திப்                                            புறப்புண் நாணி வடக்கிருந் தோனே’’(புறம்.66)
என்பது வெண்ணிக்குயத்தியார் பாடல். வெண்ணிப் பறந்தலை என்னுமிடத்தில் நடந்த போரில் கரிகால் பெருவளத்தானும் பெருஞ்சேரலாதனும் பொருதனர். போரில் கரிகாலன் வாகை சூடினான். அவனது வேல் சேரலாதனின் மார்பு தைத்து பபுறத்து உருவியது. எனவேஇ முதுகில் புண் உண்டாயிற்று. தன் வீரத்திற்கு இழுக்கு ஏற்பட்டது என்று கருதிய சேரன் வடக்கிருந்து  உயிர் துறந்தான். வெண்ணிக்குயத்தியார் வெற்றி பெற்ற கரிககாலனின் வீரத்தைப் பெரிதும் பாராட்டினார். ஆனால், அத்துடன் நின்று விடவில்லை. வென்ற கரிகாலனைவிட மானம் கருதி வடக்கிருந்து உயிர்நீத்த சேரலாதன் சிறப்புடையோன் என்றும் மிகப்புகழாகிய வீர உலகம் அடைந்தனன் என்றும் குறித்தார் புலவர்.
                                """"இளிவரின் வாழாத மானம் உடையார்                                   ஒளிதொழு தேத்தும் உலகு’’(குறள்.970)
என்ற குறளிற்கு ஏற்ப பெருஞ்சேரலாதன் வாழாது உயிர்விடுத்த பெருமை உடையவன் என்பது தெளிவு.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமான்
                பெருஞ்சேரலாதனின் மாண்புரைத்த புறம் சேரமான் கணைக்கால் இரும்பொறையின் சிறப்பையும் பெருமையுடன் பதிவு செய்துள்ளது. சேரமான் திருப்போர்ப்புறத்தில் சோழன் செங்கண்ணான், சேரனைச் சிறைவைத்தான். சிறைப்பட்ட கணைக்கால் இரும்பொறை நீர்வேட்கையால் சிறைக்காவலரைத் தண்ணீர் தருமாறு வேண்டினான். காலம் தாழ்த்தித் தந்த நீரைப் பொறாது உயிர்நீத்தான். அப்போது பாடியது இப்பாடல் (புறம்.74). தன்னைச் சிறைப்படுத்தியதை நாயினைச் சங்கிலியால் புணைத்ததுடன் ஒப்பிட்டான். இப்பாடலில் தமிழரின் இயல்பு ஒன்று குறிப்பிடப்படுகிறது. பிள்ளை இறந்து பிறந்தாலும் தசைப்பிண்டாமாக வந்து பிறந்தாலும், அவற்றையும் வாளால் கீறி அடக்கம் செய்யத் தவறமாட்டார்கள். ஏனெனில், வாளால் மார்பின் புண்படல் வேண்டும் என்பது வீரமரபு. அத்தகைய செம்மாந்த மரபில் வந்த தான் உயிர் வாழ்தல் கருதி மானமிழந்து துடிக்கப் போவதில்லை என்ற சேரன் கூற்றில் ஒரு வீர இனத்தின் உயரிய பண்பு வெளிப்படுகிறது.
                                """"மறம் கந்துஆக நல்லமர் வீழ்ந்த                                        நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கென                                  வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ’’(புறம்.93)
என்று அதியமானைப் புகழ்ந்து ஔவையார் பாடிய பாடலிலும் வாளால் கீறி அடக்கம் செய்யும் தன்மையை அறிகின்றோம். வேறு எதனையும் விட வீரத்திற்கே முதலிடம் தருகின்ற பண்பட்ட ஒரு சமூகத்தைப் புறநானூற்று வாயிலாகக் காண முடிகிறது. இவ்வழி வீரமரபில் வந்தமையால்தான்,
                                மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்                                   உயிர்நீப்பர் மானம் வரின்’’ (குறள்.969)
என்று வள்ளுவப் பெருந்தகையால் பாட முடிந்தது. ஏனேனில், எந்த ஒரு கருத்தும் தானே தோன்றிவிடுவதில்லை. காலம் காலமாக வரும் பண்பாட்டின் அடிப்படையிலேயே அது உருவாக இயலும். தமிழரின் மான உணர்வு பற்றிப் பெரிதும் பேசும் நாம் அது எங்கிருந்து வந்தது என்பதனைஅறிந்து கொள்ளப் புறநானூறு பெருந்துணை செய்கிறது. வீரத்தில் பெருஞ்சிறப்புக்குரியது மானவீரமே என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க இயலாது.
நடுகல் வழிபாடு
                போரில் தன்வீரத்தை நிலை நிறுத்தி எதிரிப் படையைக் கலங்கடித்து இறுதியில் களத்தே வீழ்ந்து மடிந்த பெருவீரனின் நினைவாக நடுகல் நட்டு வழிபடும் வழக்கம் மரபாக இருந்து வந்துள்ளது. அவ்வாறு நடுகல் நட்டுச் செய்யப்பட்ட வழிபாடு பின்னர் ஊர்த் தெய்வ வழிபாடாக மலர்ந்தது என்று கருத இடமளிக்கிறது. வீரம் வழிபடும் நிலைக்கு உயர்ந்த தன்மையை இது விளக்குகிறது. இவ்வீர வழிபாட்டின் தொடர்ச்சியாகவே பின்னாளில் போற்றுதற்குரிய வீரர்களாக வாழ்ந்து சமூக நலன் கருதிப் போராடி வீழ்ந்துபட்ட முத்துப்பட்டன், மதுரை வீரன் ஆகியோர் தெய்வமாகவே வழிபட்ட நிலை உருவாகியுள்ளதைக் காணமுடிகிறது. வாழையடி வாழையென வரும் வீரத்தை தமிழர் இயல்பும் தெளிவாக அறியமுடிகிறது.
                                """"பெருங்களிறு அடியில் தோன்றும் ஒருகண்                                     இரும்பொறை இரவல சேறி ஆயின்                                        தொழாதனை கழிதல் ஓம்புமதி வழாது                                வண்டுமேம் படூஉம்இவ் வறநிலை ஆறே                                     பல்ஆத் திறள்நிரை பெயர்தரப் பெயர்தந்து                                   கல்லா இளையர் நீங்க நீங்கான்                                      வில்உமிழ் கடுங்கணை மூழ்கக்                                           கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே’’(புறம்.263)
என்னும் பெயர் அறியாப் புலவரின் பாடல் நடுகல் வணக்கம் பற்றிப் பேசுகிறது. வீரன் ஒருவன் ஆநிரையை மீட்டுத் தன்னோடு கொண்டு வந்தான். அவ்வாறு வருகையில் எதிர்த்து நின்ற பகைவரைத் தனியொருவனாக எதிர்த்து வென்று உயிர்நீத்தான். அவன் நினைவாக நடுகல் நட்டுப் போற்றினர். அவ்வழிச் செல்லும் பாணனே, அதனை மறவாது தொழுது செல்வாயாக’... என்று கூறும் செய்தியில் இருந்து நடுகல் வணக்கம் தோன்றியுள்ளதை அறிகிறோம்.
                                """"அணிமயில் பீலி சூட்டிப் பெயர்பொறித்து                                 இனிநட் டனரே கல்லும்’’ (புறம்.264)
                                """"ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை                                    ஓங்குநிலை வேங்கை ஒள்இணர் நறுவீப்                                    போந்தைஅம் தோட்டில் புனைந்தனர் தொடுத்துப்                             பல்ஆன் கோவலர் படலை சூட்டக்                                           கல்ஆ யினையே கடுமான் தோன்றல்’’(புறம்.265)
என்னும் பாடல் வரிகளும் நடுகல் வணக்கம் பற்றிக் கூறுகின்றன. நடுகல்லிற்கு மயிற்பீலி சூட்டியும் மலர்மாலை தொடுத்தும் அழகு செய்தனர். அக்கல்லில் வீரனின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது என்பன போன்ற செய்திகளை அறிகிறோம்.
                தமிழ்நாட்டில் சிலைகள் மண்ணில் கிடைத்திருப்பதும்,தலைவர்களுக்காக உருவாக்கி இருப்பதும் மிகுதி என்பது உண்மை. வாழ்ந்து மறைந்த சாதனைத் தலைவர்களுக்குச் சிலையெடுப்பதில் தமிழருக்கு ஆர்வம் மிகுதி. தமிழகத்தின் தலைநகரில் சென்னையைச் சுற்றிச் சிலைகள் அமைந்திருப்பதைக் காணலாம். இன்று தலைவர்களுக்குச் சிலை வைத்துப் போற்றும் வழக்கம் நடுகல் வணக்கத்தின் தொடர்ச்சியே... என்று கருதலாம்.
                சுருங்கக்கூறின், புறநானூற்றுப் பாடல்கள் அனைத்தும் பண்டைத் தமிழரின் மறப்பண்புகளை எடுத்தியம்பும் ஒரு பண்பாட்டுப் பெட்டகமாக உள்ளதைப் பாடலை உணர்வார் யாவரும் அறிவர்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?