நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday, 27 December 2013

சிலப்பதிகாரம் 7.கானல்வரி

7. கானல் வரி

வயத்தமாலை கையிலிருந்த நல் வாழை மாதவி தொழுது வாங்கி,
திருத்தி, கோவலனிடம் நீட்ட, அவன் அதை வாங்கி,
கானல் வரி பாடத் தொடங்குதல்
கட்டுரை

சித்திரப் படத்துள் புக்கு, செழுங் கோட்டின் மலர் புனைந்து,
மைத் தடங் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி;
பத்தரும், கோடும், ஆணியும், நரம்பும் என்று
இத் திறத்துக் குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி-
பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல்,                        5

கண்ணிய செலவு, விளையாட்டு, கையூழ்,
நண்ணிய குறும்போக்கு, என்று நாட்டிய
எண் வகையால் இசை எழீஇ;
பண் வகையான் பரிவு தீர்ந்து;
மரகதமணித் தாள் செறிந்த மணிக் காந்தள் மெல் விரல்கள்,            10
பயிர் வண்டின் கிளை போல, பல் நரம்பின்மிசைப் படர;
வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல்,
சீருடன் உருட்டல், தெருட்டல், அள்ளல்,
ஏர் உடைப் பட்டடை, என இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக் கரணத்துப்                                15
பட்ட வகை தன் செவியின் ஓர்த்து-
‘ஏவலன்; பின், பாணி யாது?’ என,
கோவலன் கை யாழ் நீட்ட - அவனும்,
காவிரியை நோக்கினவும், கடல் கானல்  வரிப் பாணியும்,
மாதவி - தன் மனம் மகிழ, வாசித்தல் தொடங்கும் - மன்.                1



முகம் உடை வரி - ஆற்று வரி
காவிரியை நோக்கிப் பாடியன

திங்கள் மாலை வெண்குடையான்,
சென்னி, செங்கோல் - அது ஓச்சி,
கங்கை - தன்னைப் புணர்ந்தாலும்,
புலவாய்; வாழி, காவேரி!
கங்கை - தன்னைப் புணர்ந்தாலும்,
புலவாதொழிதல், கயல் கண்ணாய்!
மங்கை மாதர் பெரும் கற்பு என்று                                    2
அறிந்தேன்; வாழி, காவேரி!

மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் - அது ஓச்சி,
கன்னி - தன்னைப் புணர்ந்தாலும்,
புலவாய்; வாழி, காவேரி!
கன்னி - தன்னைப் புணர்ந்தாலும்,
புலவாதொழில், கயல் கண்ணாய்!
மன்னும் மாதர் பெரும் கற்பு என்று                                    3
அறிந்தேன்; வாழி காவேரி!
உழவர் ஓதை, மதகு ஓதை,
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி!
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன் - தன்                                        4
வளனே; வாழி, காவேரி!

சார்த்து வரி - முகச் சார்த்து
புகார் நகரைச் சிறப்பித்துப் பாடுதல் - - - தோழி தலைமகன் முன்
நின்று வரைவு கடாதல்

கரிய மலர் நெடுங் கண் காரிகைமுன் கடல் - தெய்வம்
காட்டிக் காட்டி,
அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று, ஏழையம் யாங்கு
அறிகோம், ஐய?
விரி கதிர் வெண் மதியும் மீன் கணமும் ஆம்  என்றே,
விளங்கும் வெள்ளைப்
புரி வளையும் முத்தும் கண்டு - ஆம்பல் பொதி அவிழ்க்கும்
புகாரே, எம் ஊர்.                                        5

காதலர் ஆகி, கழிக் கானல், கையுறை கொண்டு,
எம் பின் வந்தார்
ஏதிலர் - தாம் ஆகி, யாம் இரப்ப, நிற்பதை யாங்கு
அறிகோம், ஐய?
மாதரார் கண்ணும், மதி நிழல் நீர் இணை கொண்டு
மலர்ந்த நிலப்
போதும், அறியாது - வண்டு ஊசலாடும்
புகாரே, எம் ஊர்.                                        6

மோது முது திரையான் மொத்துண்டு, போந்து அசைந்த
முரல் வாய்ச் சங்கம்
மாதர் வரி மணல்மேல் வண்டல் உழுது அழிப்ப,
மாழ்கி, ஐய!
கோதை பரிந்து அசைய, மெல் விரலால் கொண்டு ஓச்சும்
குவளை மாலைப்
போது சிறங்கணிப்ப, போவார் கண் போகாப்
புகாரே, எம் ஊர்.                                        7

முகம் இல் வரி
குறியிடத்துச் சென்ற பாங்கன் தலைமகளது காதல் மிகுதியைக்
குறிப்பினால் அறிந்து கூறுதல்

துறை மேய் வலம்புரி தோய்ந்து மணல், உழுத
தோற்றம் மாய்வான்,
பொறை மலி பூம் புன்னைப் பூ உதிர்ந்து, நுண் தாது
போர்க்கும் கானல்,
நிறை மதி வாள் மகத்து நேர் கயல் கண் செய்த
உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே
தீர்க்கும் போலும்,                                        8

கானல் வரி
கழற்று எதிர்மறை

நிணம் கொள் புலால் உணங்கல் நின்று, புள்
ஒப்புதல் தலைக்கீடு ஆக,
கணம் கொள் வண்டு ஆர்த்து உலாம், கன்னி
நறு ஞாழல் கையில் ஏந்தி,
மணம் கமழ் பூங் கானல் மன்னி, மற்று ஆண்டு ஓர்
அணங்கு உறையும் என்பது அறியேன்; அறிவேனேல்,
அடையேன் மன்னே.                                            9

வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில்,
மலர் கை ஏந்தி,
விலை மீன் உணங்கல் பொருட்டாக
வேண்டு உருவம் கொண்டு, வேறு ஓர்
கொலை வேல் நெடுங் கண் கொடுங் கூற்றம் வாழ்வது
அலை நீர்த் தண் கானல் அறியேன்; அறிவேனேல்,
அடையேன் மன்னே.                                            10

நிலைவரி
தமியளாக இடத்து எதிர்ப்பட்ட தலைவியை நோக்கித்
தலைமகன் கூறுதல்

கயல் எழுதி,  வில் எழுதி, கார் எழுதி, காமன்
செயல் எழுதி, தீர்ந்த முகம் திங்களோ, காணீர்!
திங்களோ, காணீர் - திமில் வாழ்நர் சீ¦றுhர்க்கே
அம் கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே!                    11

எறி வளைகள் ஆர்ப்ப, இரு மருங்கும் ஓடும்,
கறை கெழு வேல் கண்ணோ கடுங் கூற்றம், காணீர்!   
கடுங் கூற்றம், காணீர் - கடல் வாழ்நர் சீறுhர்க்கே
மடம் கெழு மென் சாயல் மகள் ஆயதுவே!                            12

புலவு மீன் வெள் உணங்கல் புள் ஓப்பி, கண்டார்க்கு
அலவ நோய் செய்யும் அணங்கு இதுவோ, காணீர்!
அணங்கு இதுவோ, காணீர் - அடும்பு அமர் தண் கானல்
பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே!                        13

முரி வரி
பாங்கன் கேட்பத் தலைமகன் உற்றது உரைத்தல்

பொழில் தரு நறு மலரே, புது மணம் விரி மணலே,
பழுது அறு திரு மொழியே, பணை இள வன முலையே,
முழு மதி புரை முகமே, முரி புரு வில் இணையே,
எழுது - அரு மின் இடையே - எனை இடர் செய்தவையே.                14
திரை விரிதரு துறையே, திரு மணல் விரி இடமே,
விரை விரி நறு மலரே, மிடைதரு பொழில் இடமே,
மரு விரி புரி குழலே, மதி புரை திரு முகமே,
இரு கயல் இணை விழியே - எனை இடர் செய்தவையே.                15

வளை வளர்தரு துறையே, மணம் விரிதரு பொழிலே,
தளை அவிழ் நறு மலரே, தனியவள் திரி இடமே,
முளை வளர் இள நகையே, முழு மதி புரை முகமே,
இளையவள் இணை முலையே - எனை இடர் செய்தவையே.             16

திணைநிலை வரி
புணர்ச்சி நீட, இடந்தலைப்பாட்டில் புணர்தலுறுவான் ஆற்றாமையால் கூறுதல்

கடல் புக்கு, உயிர் கொன்று, வாழ்வர் நின் ஐயர்;
உடல் புக்கு, உயிர் கொன்று, வாழ்வைமன் நீயும்;
மிடல் புக்கு அடங்காத வெம் முலையோ பாரம்;
இடர் புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய்!                        17

கொடுங் கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை;
நெடுங் கண் வலையால் உயிர் கொல்வைமன் நீயும்;
வடம் கொள் முலையான் மழை மின்னுப் போல
நுடங்கி உகும் மென் நுசுப்பு இழவல் கண்டாய்!                        18

ஓடும் திமில் கொண்டு உயிர் கொல்வர் நின் ஐயர்;
கோடும் புருவத்து உயிர் கொல்வைமன் நீயும்;
பீடும் பிறர் எவ்வம் பாராய்; முலை சுமந்து
வாடும் சிறு மென் மருங்கு இழவல் கண்டாய்!                        19

குறியிடத்துத் தலைமகளைக் கண்ட பாங்கன் கூற்று
அல்லது

தலைவியைப் புணர்ந்து நீங்கும் தலைமகன்,
அவளை விடுத்தல் அருமையால், ஆற்றனாய்த்
தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்

பவள உலக்கை கையால் பற்றி,
தவள முத்தம் குறுவாள் செங் கண்,
தவள முத்தம் குறுவாள் செங் கண்
குவளை அல்ல! கொடிய, கொடிய!                                    20

புன்னை நீழல் புலவுத் திரைவாய்
அன்னம் நடப்ப, நடப்பாள் செங் கண்,
அன்னம் நடப்ப, நடப்பாள் செங் கண்
கொன்ன வெய்ய! கூற்றம், கூற்றம் !                                21

கள் வாய் நீலம் கையின் ஏந்தி,
புள் வாய் உணங்கல் கடிவாள் செங் கண்,
புள் வாய் உணங்கல் கடிவாள் செங் கண்,
வெள் வேல் அல்ல! வெய்ய, வெய்ய!

காமம் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா
இடும்பை எய்தியோன் சொல்லுதல்

சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்;
சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்;
ஊர் திரை நீர் வேலி உழக்கித் திரிவாள் பின்
சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்.                            23



கட்டுரை

மாதவி, கலவியால் மகிழ்ந்தாள்போல்
கோவலனிடம் இருந்த யாழை வாங்கி,
புலவியால் கானல் வரி பாடத் தொடங்குதல்

ஆங்கு, கானல் வரிப்பாடல் கேட்ட மான் நெடுங் கண் மாதவியும்,
‘மன்னும் ஓர் குறிப்பு உண்டு; இவன் தன் நிலை மயங்கினான்’ என,
கலவியால் மகிழ்ந்தாள்போல், புலவியால் யாழ் வாங்கி,
தானும் ஓர் குறிப்பினள் போல், கானல் வரிப் பாடல் - பாணி,
நிலத் தெய்வம் வியப்பு எய்த, நீள் நிலத்தோர் மனம் மகிழ,
கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாடத்
தொடங்கும் மன்.            24

ஆற்றுவரி
காவிரியை நோக்கிப் பாடியன

மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
மணிப் பூ ஆடை - அது போர்த்து,
கருங் கயல் - கண் விழித்து, ஒல்கி,
நடந்தாய்; வாழி, காவேரி!
கருங் கயல் - கண் விழித்து, ஒல்கி,
நடந்த எல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை;
ஆறிந்தேன்; வாழி, காவேரி!                                    25
பூவர் சோலை மயில் ஆல,
புரிந்து குயில்கள் இசை பாட,
காமர் மாலை அருகு அசைய,
நடந்தாய்; வாழி, காவேரி!
காமர் மாலை அருகு அசைய,
நடந்த எல்லாம் நின் கணவன்
நாம வேலின் திறம் கண்டே;
அறிந்தேன்; வாழி, காவேரி!                                    26
வாழி அவன் - தன் வள நாடு
மகவாய், வளர்க்கும் தாய் ஆகி,
ஊழி உய்க்கும் பேர் உதவி
ஒழியாய்; வாழி, காவேரி!
ஊழி உய்க்கும் பேர் உதவி
ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும்
ஆழி ஆள்வான், பகல் வெய்யோன்
அருளே; வாழி, காவேரி!                                        27


சார்த்துவரி
புகாரைப் பற்றிய பாடல்கள்
கையுறை மறுத்தல்

தீம் - கதிர் வாள் முகத்தாள் செவ் வாய் மணி முறுவல்
ஒவ்வாவேனும்,
‘வாங்கும் நீர், முத்து’ என்று, வைகலும், மால் - மகன் போல்
வருதிர், ஐய!
வீங்கு ஓதம் தந்து, விளங்கு ஒளிய வெண் முத்தம்;
விரை சூழ் கானல்
பூங் கோதை கொண்டு; விலைஞர் போல் மீளும்
பூகாரே, எம் ஊர்,                                        28

தோழியிற் கூட்டம் கூடி, பின்பு வந்து வரைவல்
என்ற தலைவனுக்குத் தோழி கூறுதல்

மறையின் மணந்தாரை வன் பரதர் பாக்கத்து
மடவார் செங் கை
இறை வளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம் - யாங்கு
அறிகோம்? ஐய!
நிறை மதியும் மீனும் என, அன்னம் நீள் புன்னை
அரும்பிப் பூத்த
பொறை மலி பூங் கொம்பு ஏற, வண்டு ஆம்பல் ஊதும்
புகாரே, எம் ஊர்,                                        29
உண்டாரை வெல் நறு ஊண் ஒளியாப் பாக்கத்துள்,
உறை ஒன்று இன்றித்
தண்டா நோய் மாதர் தலைத் தருதி என்பது யாங்கு
அறிகோம்? ஐய!
வண்டால் திரை அழிப்ப, கையான் மணல் முகந்து,
மதிமேல் நீண்ட,
புண் தோய் வேல் நீர் மல்க, மாதர் கடல் தூர்க்கும்
புகாரே, எம் ஊர்.                                        30
       
திணைநிலை வரி
அறியேன் என்று வலிதாகச் சொல்லி , பாங்கி குறைநயப்பித்தல்

புணர் துணையோடு ஆடும் பொறி அலவன் நோக்கி,
இணர் ததையும் பூங் கானல் என்னையும் நோக்கி,
உணர்வு ஒழியப் போன, ஒலி திரை நீர்ச் சேர்ப்பன்,
வணர் சுரி ஐம்பாலோய்! வண்ணம் உணரேனால்.                         31

காமம் மிக்க கழிபடர் கிளவி

தம்முடைய தண்ணளியும், தாமும், தம் மான் தேரும்,
எம்மை நினையாது, விட்டாரோ? விட்டு அகல்க;
அம் மென் இணர அடும்புகாள்! அன்னங்காள்!
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்.                             32

புன்கண் கூர் மாலைப் புலம்பும் என் கண்ணே போல்,
துன்பம் உழவாய், துயிலப் பெறுதியால்;
இன் கள் வாய் நெய்தால்! நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வரக் கண்டறிதியோ?                            33

புள் இயல் மான் தேர்-ஆழி போன வழி எல்லாம்,
தெள்ளு நீர் ஓதம்! சிதைத்தாய்; மற்று என் செய்கோ?
தெள்ளு நீர் ஓதம்! சிதைத்தாய்; மற்று எம்மோடு ஈங்கு
உள்ளாரோடு உள்ளாய்; உணராய்; மற்று என் செய்கோ?                34

நேர்ந்த நம் காதலர் நேமி நெடுந் திண் தேர்
ஊர்ந்த வழி சிதைய ஊர்கின்ற, ஓதமே;
பூந் தண் பொழிலே! புணர்ந்து ஆடும் அன்னமே!
ஈர்ந் தண் துறையே! ‘இது தகாது’ என்னீரே,                             35

நேர்ந்த நம் காதலர் நேமி நெடுந் திண் தேர்
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய்; வாழி, கடல் ஓதம்!
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய்; மற்று எம்மொடு
தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால்; வாழி, கடல் ஓதம்!                     36

மயங்கு திணைநிலை வரி
அலர் அறிவுறுத்தி வரைவுகடாதல்

நல் நித்திலத்தின் பூண் அணிந்து,
நலம் சார் பவளக் கலை உடுத்து,
செந்நெல் பழனக் கழனிதொறும்
திரை உலாவு கடல் சேர்ப்ப!
புன்னைப் பொதும்பர் மகரத் திண்
கொடியோன் எய்த புதுப் புண்கள்
என்னைக் காணாவகை மறைத்தால்,
அன்னை காணின், என் செய்கோ?                                37
வாரித் தரள நகை செய்து,
வண் செம் பவள வாய் மலர்ந்து,
சேரிப் பரதர் வலை முன்றில்
திரை உலாவு கடல் சேர்ப்ப!
மாரிப் பீரத்து அலர் வண்ணம்
மடவாள் கொள்ள, கடவுள் வரைந்து,
‘ஆர் இக் கொடுமை செய்தார்?’ என்று                                    38
அன்னைஅறியின், என் செய்கோ?

புலவு உற்று, இரங்கி, அது நீங்க,
பொழில்-தண்டலையில் புகுந்து உதிர்ந்த
கலவைச் செம்மல் மணம் கமழ,
திரை உலாவு கடல் சேர்ப்ப!
பல உற்று, ஒரு நோய் துணியாத
படர் நோய் மடவாள் தனி உழப்ப,
அலவுற்று, இரங்கி, அறியா நோய்
அன்னை அறியின், என் செய்கோ?                                    39

பொழுது கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்கு
உரைத்தல்

இளை இருள் பரந்ததுவே; எல் செய்வான் மறைந்தனனே;
களைவு-அரும் புலம்பு நீர் கண் பொழீஇ உகுத்தனவே;
தளை அவிழ் மலர்க் குழலாய்! தணந்தார் நாட்டு உளதாம்கொல்-
வளை நெகிழ, எரி சிந்தி, வந்த இம் மருள் மாலை!                            40

கதிரவன் மறைந்தனனே; கார் இருள் பரந்ததுவே;
எதிர் மலர் புரை உண் கண் எவ்வ நீர் உகுத்தனவே;
புது மதி புரை முகத்தாய்! போனார் நாட்டு உளதாம்கொல்-
மதி உமிழ்ந்து, கதிர் விழுங்கி, வந்த இம் மருள் மாலை?                    41

பறவை பாட்டு அடங்கினவே; பகல் செய்வான் மறைந்தனனே;
நிறை நிலா நோய் கூர, நெடுங் கண் நீர் உகுத்தனவே;
துறு மலர் அவிழ் குழலாய்! துறந்தார் நாட்டு உளதாம்கொல்-
மறவை ஆய், என் உயிர்மேல் வந்த இம் மருள் மாலை?                        42

சாயல் வரி
மெதுவாகச் சொல்லிக் குறைநயப்பித்தல்
அல்லது
ஆற்றுவிக்கும் பொருட்டுத் தோழி இயற்பழிக்க,
தலைமகள் இயற்பட மொழிதல்

கைதை வேலிக் கழிவாய் வந்து, எம்
பொய்தல் அழித்துப் போனார், அவர் நம்
பொய்தல் அழித்துப் போனார், அவர் நம்
மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர்.                                    43

கானல் வேலிக் கழிவாய் வந்து,
‘நீ நல்கு’ என்றே நின்றார் ஒருவர்:
‘நீ நல்கு’ என்றே நின்றார், அவர் நம்
மான் நேர் நோக்கம் மறப்பார் அல்லர்.                                    44

அன்னம் துணையோடு ஆடக் கண்டு,
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்;  
நென்னல் நோக்கி நின்றார், அவர் நம்
பொன் நேர் சுணங்கின போவார் அல்லர்.                                45

முகம் இல் வரி
காமம் மிக்க கழிபடர் கிளவி

அடையல், குருகே! அடையல் எம் கானல்,
அடையல், குருகே! அடையல் எம் கானல்,
உடை திரை நீர்ச் சேர்ப்பற்கு ஊறு நோய் உரையாய்;  
அடையல், குருகே! அடையல் எம் கானல்.                                46

கட்டுரை
மாதவி பண்ணுப் பெயர்த்துப் பாடத் தொடங்குதல்

ஆங்ஙனம் பாடிய ஆய் - இழை, பின்னரும்,
காந்தள் மெல் விரல் கைக்கிளை சேர் குரல்
தீம் தொடைச் செவ்வழிப்பாலை இசை எழீஇ,
பாங்கினில் பாடி, ஓர் பண்ணுப் பெயர்த்தாள்.                                47

முகம் இல் வரி
தலைவி மாலைப் பொழுது கண்டு கூறுதல்

நுளையர் விளரி நொடிதரும் தீம் பாலை
இளி கிளையில் கொள்ள இறுத்தாயால், மாலை!
இளி கிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்,
கொளை வல்லாய்! என் ஆவி கொள்;   வாழி, மாலை!                        48

பிரித்தார் பரிந்து உரைத்த பேர் அருளின் நீழல்
இருந்து, ஏங்கி, வாழ்வார் உயிர்ப் புறத்தாய், மாலை!
உயிர்ப் புறத்தாய் நீ ஆகில், உள் ஆற்று வேந்தன்
எயில் - புறத்து வேந்தனொடு என் ஆதி, மாலை?                             49

பையுள் நோய் கூர, பகல் செய்வான் போய் வீழ,
வையமோ கண் புதைப்ப, வந்தாய், மருள் மாலை!
மாலை நீ ஆயின், மணந்தார் அவர் ஆயின்,
ஞாலமோ நல்கூர்ந்தது;   வாழி, மாலை!                                    50

வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகன்
சிறைப்புறத்தானாகத் தோழி ஆறுதல்

‘தீத் துழைஇ வந்த இச் செல்லல் மருள் மாலை
தூக்காது துணிந்த இத் துயர் எஞ்சு கிளவியால்,
பூக் கமழ் கானலில் பொய்ச் சூள் பொறுக்க’ என்று,
மாக் கடல் - தெய்வம்! நின் மலர் அடி வணங்குதும்.                         51

கட்டுரை
கோவலன் ஊழ்வினையால் மனம் மாறுபட்டு
மாதவியைப் பிரிந்து போதல்

எனக் கேட்டு,
‘கானல் வரி யான் பாட, தான் ஒன்றின்மேல் மனம் வைத்து,
மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள்’ என
யாழ்-இசைமேல் வைத்து, தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின்,
உவவு உற்ற திங்கள் முகத்தாiளைக் கவவுக் கை ஞெகிழ்ந்தனனாய்,
‘பொழுது ஈங்குக் கழிந்தது ஆகலின், எழுதும்’ என்று உடன் எழாது,
ஏவலாளர் உடன் சூழ்தர, கோவலன் - தான் போன பின்னர் -
மாதவி, கோவலனுடன் இன்றி, தனியவளாய்
ஆயத்துடன் தன் மனை புகுதல்

தாது அவிழ் மலர்ச் சோலை, ஓதை ஆயத்து ஒலி அவித்து,
கையற்ற நெஞ்சினளாய், வையத்தின் உள் புக்கு,
காதலனுடன் அன்றியே, மாதவி தன் மனை புக்காள்-
‘ஆங்கு,
மா இரு ஞாலத்து அரசு தலை வணக்கும்,
சூழி யானை, சுடர் வாள் செம்பியன்
மாலை வெண்குடை கவிப்ப,
ஆழி மால் வரை அகவையா’ எனவே,

2 comments:

  1. எதற்காக இங்கே சிலப்பதிகார வரிகளை 'அப்படியே' எடுத்துப் போட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இதற்கு பதில் சிலம்பு வரிகளுக்கு உங்கள் நோக்கில் உரை எழுதியிருதாலும் அது உருப்படியான ஒரு காரியமாக அமைந்திருக்கும்.

    ReplyDelete
  2. எதற்காக இங்கே சிலப்பதிகார வரிகளை 'அப்படியே' எடுத்துப் போட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இதற்கு பதில் சிலம்பு வரிகளுக்கு உங்கள் நோக்கில் உரை எழுதியிருதாலும் அது உருப்படியான ஒரு காரியமாக அமைந்திருக்கும்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?