கீதாஞ்சலி
-ஆங்கில மூலம் கவியோகி இரவீந்தரநாத் தாகூர்
-தமிழாக்கம் சி ஜெயபாரதன், கனடா
கீதாஞ்சலி – திறனாய்வு
கீதாஞ்சலி கவிதை மொழிபெயர்ப்பு என்று படித்துமுடித்த பின், மீண்டும்
அட்டைப்படத்திற்கு வரும்போதுதான் தெரிகிறது.
‘உடையும் பாண்டம்‘ என்ற கவிதை, ‘நந்தவனத்திலோர் ஆண்டி‘ என்ற சித்தர் பாடலை
நினைவுப்படுத்துகிறது. பிறவிகள் தொடரும் மாய உலகத்தில் இப்பாண்டத்தின் மீதுதான்
எத்தனை விருப்பு? இப்பாண்டத்தின் மீதான நிலையாமை ஒருபுறம். முதுமையில் ஆற்றல்குன்றி
இறுதியில் வலிமையின் விளிம்பு தொட்டு, எனது பயணம் முடிந்ததுதான் போனதோ? என்ற ஏக்கம் ஒருபுறம். எனினும், வாழ்வதிலுள்ள ஆசை மறுபுறம். ‘புதிய கீதங்கள்
பொங்கி எழுந்தன இதயத்தில்‘ என்ற வரிகள் வாழ்வின் மீதான விருப்பத்தை வெளிப்படுத்தி,
ஒவ்வொருகணமும் வாழ்வதின் மீதான பிடிப்பை வெளிப்படுத்துகிறது
மனிதன் வாழ்வில்தான் எத்தனை சலனங்கள்?
ஏக்கங்கள்? எதிர்பார்ப்புகள்?
அச்சங்கள்? நம்பிக்கைகள்?
அலை எழுந்து கரையைத் தொடமுயன்று முடியாமல் மீண்டும் மீண்டும் தொடர்ந்து முயல்வதைப்
போன்று ஒவ்வொரு மனிதனும்தான் வாழ்வில் எவ்வளவு முறை முயன்று தோற்கிறான். மீண்டும்
முயல்கிறான். விடுகிறான். ஆனாலும், வாழ்வின் மீதான ஆசை அவனை விடுவதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருவத்திலும் மாறாமல்
தொடரும் எழுதலும் விழுதலுமான தொடர் நிகழ்வை, ஒரு குழந்தையிலிருந்து தொடங்கி மரணம்
வரையிலான பதிவுகளை இந்நூலும் குழந்தையிலிருந்து தொடங்கி முதிர்ச்சி நிலை வரை முடித்திருக்கிறது.
இதை ஆழ்ந்து படிப்பவர்கள், ஒவ்வொரு கவிதையிலும் தன்னையே காண்பர். ஒவ்வொரு வரிகளும்
வாசகனை அவனுக்கே அடையாளம்காட்டுகிறது.