நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday 29 May 2013

ஆய்வு அனுபவங்கள் - 5

ஆய்வு செய்வது எப்படி?

 

தொடர்ச்சி...

5.நான்கு உத்திகள்


மேற்கோளை ஆய்வில் கையாளும் முறையில் நான்கு உத்திகள் உள்ளன.

1. அடிக்குறிப்பு முறை


தரவுகளை மேற்கோள்களாகப்  பயன்படுத்திய நிலையில்  மேற்கோள் குறி முடியுமிடத்தில் சற்று மேல் நிலையில் எண்களிடவேண்டும். இந்த எண்கள் மேற்கோள் எண்கள் எனப்படும். 1,2,3, .. என்ற எண்களிட்ட பின் அப்பக்கத்திலேய கீழப்பகுதியில் ஒரு கோட்டை இட்டு அதற்கு கீழ் எண்களுக்குரிய ஆசிரியர்,நூல்,பக்கம் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும்.

இம்முறையில்  ஆய்வாளர் ஒவ்வொரு முறையம் ஆய்வைத் திருத்தம் செய்ய திரும்ப திரும்ப வரைவினை எழுதும்போது பக்கங்கள் மாற்றமடையும் .இரண்டாம் வரைவில் சில மேற்கோள்கள் இடையில் சேர்க்கப்படலாம்.சில நீக்கப்படலாம் . புதிய கருத்துகள் சேர்க்கப்படலாம். இது போன்ற மாற்றங்களின் போது, பக்கங்கள் மாற்றமடையும். எண்களும் மாற்றமடையும்.  மேற்கோள் எண்ணுக்கேற்ப அடிக்குறிப்புகளை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டி வரலாம்.  

2.சான்றென் விளக்கம்


இம்முறையிலும் தரவுகளை மேற்கோள்களாகப்  பயன்படுத்திய நிலையில்  மேற்கோள் குறி முடியுமிடத்தில் சற்று மேல்நிலையில் எண்களிடப்படவேண்டும். இந்த எண்கள் மேற்கோள் எண்கள் எனப்படும். 1,2,3, .. என்ற எண்களிட்ட பின், இயலின் முடிவில் தனிப் பக்கத்தில் சான்றென் விளக்கம் என்ற பகுதியை உருவாக்கி மேற்கோள் எண்களுக்கேற்ப,எண்களுக்குரிய ஆசிரியர்,நூல்,பக்கம் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும்.

3. மேற்கோள் எண் இல்லா முறை


இது மேற்கோள்களின் குறி முடியுமிடத்திலேயே  அடைப்புக் குறிக்குள் ஆசிரியர் பெயர்,ஆண்டு,பக்க எண் முதலானவற்றைக் குறிப்பிடும் முறையாகும். 

 பண்டிதமணி  அவர்கள், இம்மூன்று பொருட்களையும் வரிசைப்படுத்தும் பொழுது தேன்-பால்-கரும்பு என்ற வரிசையில் அமைத்துள்ளார்.தேன் புழுக்களின் எச்சில் மயமாகவும், பால் ஊனுடம்பின் சாரமாகவும் உள்ளவை….கரும்பங்கட்டி எச்சில், ஊன் கலப்பு முதலிய குற்றம் இலாதாய், உடலுக்கு நலம் பயப்பதாகும். இம்முறையில் ஆண்டவன் அன்பரை ஆட்கொள்ளுங்கால், தேனைப்போல, வயப்படுத்தும் பாலைப் போலப், பின் பயன் விளைவித்து இனிமை தரும் கரும்பங்கட்டியைப் போலத் தூய இன்பம் அளித்துக் காப்பான்” (கதிரேசஞ்செட்டியார்.மு,1985.285-286)

 ஒரே ஆசிரியரின் இரு நூல்கள் கையாளப்படும் நிலையில் பதிப்பு ஆண்டும் பதிப்பித்த மாதமும் கண்டிப்பாக  மாறுபடும். எனவே குழப்பம் ஏற்படாது.  இம்முறையில் மேற்கோள்கள் இடையில் நீக்கப்பட்டாலும்,சேர்க்கப்பட்டாலும்,புதிய கருத்துக்களை சேர்த்தாலும்  பக்கங்களோ எணகளோ மாற்றப்படவேண்டியதில்லை.

மேலும், ஆய்வினைப் படிப்பவர்கள் அந்த மேற்கோளின் அருகிலேயே அது குறித்த விவரங்கள் இருப்பதால் பக்கங்களைத் தேடி விவரங்களை அறிய வேண்டியதில்லை. இதழ்களிலிருந்து எடுக்கப்படும் தரவுகளுக்கு,  “திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவு பூமிக்குள் ஊடுருவி நிலத்தையும்,நிலத்தடி நீரையும் பாழாக்கிவிட்டது. இனி புல்,பூண்டு முளைக்க முடியாத அளவு காற்றிலும் விசம் பரவியுள்ளது. இதனால் 9000 ஏக்கர் விவசாய நிலம்,185 ஊர் குடிநீர்,3500 கிணறுகள்,பாழ்பட்டு 600000 கால்நடைகள் இறந்து,600போ் மரணமடைந்துள்ளனர்.மண்ணும்,நீரும் மாசாகிவிட்டதால் பாம்புகள்.மண் புழுக்கள் உள்ளிட்ட உயிரினங்கள் காணாமல் போய்விட்டன.”(புதியதலைமுறை,மார்ச் 2013,ப.24)
என்றும் நாட்டுப்புற ஆய்வாயின் ( தங்கவேலு,ம.,2012,செப்20) என்றும் தகவல்கள் தரலாம்.

தொகுப்பு நூல்களிலிருந்து எடுக்கப்படும் மேற்கோள்கள் இவ்வாறு தரப்படவேண்டும். உதாரணமாக இம்மேற்கோளைக் குறிப்பிடலாம். மகாராசன் என்பவர் ஒருநூலில் தொகுத்தளித்த பல கட்டுரைகளிலிருந்து, மு.இராமசாமி என்பவரின் கட்டுரையிலிருந்து கீழ்வரும் மேற்கோள்எடுக்கப்பட்டது.

 “அர்த்தநாரீஸ்வரர் ஆணுக்கு பெண்ணை ஒளிக்க முடியாமல் அம்பலப்பட்டு நிற்கும் அரவாணித் தன்மையின் பருண்மையான மறு உள்ளீடுதான் என்று இத்தோற்றத்தை மு.இராமசாமி குறிப்பிடுகிறார்.(மகாராசன்(தொ.ஆ.,).2007.17)


        மேற்கோள் எண்கள் இடத் தேவையில்லாத இம்முறையில் எத்தனை முறை வரைவுகள் எழுதினாலும்,மேற்கோள் எண்கள் தொடர்பான சிக்கல்கள் இல்லை. திரும்ப திரும்ப எழுத நேரும் பொழுது மேற்கோள்கள் மாற்றப்படவேண்டிவரின் இம்முறை ஆய்வை எளிதாக்கும். ஆய்வு நிறைவடையும் நிலையில் கூட புதிய தரவுகள் கிடைப்பின் அவற்றையும் சிக்கலின்றி மேற்கோளாகச் சேர்த்துக் கொள்ளலாம். இத்தரவுகளுக்கான நூல் விவரங்களைத்  துணைநூற்பட்டியலில் கண்டு கொள்ளலாம்.

ஒரு பட்டத்திற்காக மேற்கொள்ளப்படும்  ஆய்வு என்பது, பக்க வரையறைகளை உடையது. சில பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்விற்குரிய ஆய்வேடுகள் 250 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிக்குறிப்பு மற்றும் சான்றென் விளக்கப்பகுதிகள் இடம் பெறும் ஆய்வுகளில் அவற்றிற்காக குறைந்தது பத்து பக்கங்களாவது  ஒதுக்க வேண்டி உள்ளது. இம்முறையில் அது தவிர்க்கப்படுகிறது.


4. நுட்ப முறை 


இம்முறை நுட்பமாகக் கையாளப்படும் முறையாகும். மேற்கோள் எண்  இடப்படுவதில்தான் நுட்பம் உள்ளது. இது   புதிய முறையாகும். ஆய்வு நிறைவடைந்த நிலையில்தான் எடுக்கப்பட்ட மேற்கோள்களுக்கு எண்களிடப்பட வேண்டும்.கையாளப்பட்ட தரவுகளுக்குரிய நூல்களை அகரவரிசைப்படுத்தி  துணைநூற்பட்டியலைத் தயாரித்துக்கொள்ளவேண்டும். இதில் முதல் நூலிலிருந்து ஆய்வு முழுவதும் கிட்டத்தட்ட பத்து மேற்கோள் கையாளப்பட்டிக்குமாயின் அத்தனை மேற்கோள்களுக்கும் எண் 1 என்ற எண்தான் கொடுக்கப்படவேண்டும். ஒரே இயலில் நான்கு முறை பயன்படுத்தியிருப்பின் அத்தனை மேற்கோள்களுக்கும் 1 என்கிற மேற்கோள் எண்தான் இடம் பெற வேண்டும்.

உதாரணமாக அகிலன் அவர்களின் நூலிலிருந்து இயல் ஒன்றில் மூன்று மேற்கோள்களும் ,இயல் இரண்டில் இரண்டு மேற்கோளும், மூன்றாம் இயலில் ஒரு மேற்கோளும்  எடுக்கப்பட்டிருந்தால் அத்தனை மேற்கோள்களுக்கும் மேற்கோள் எண் 1 தான். மேற்கோள் எண்கள் கொடுக்கப்படும் இடத்திற்கருகிலேயே பக்க எண்கள் இடம்பெறவேண்டும். உதாரணத்திற்கு
மாணிக்கவாசகரின் பாடல்களிலிருந்து ஒரு ஆய்வாளர்  மூன்று மேற்கோளை எடுத்துப் பயன்படுத்தியுள்ளார். துணைநற்பட்டியலில் திருவாசகம் 8ம் இடத்தில் உள்ளது என வைத்துக் கொள்வோம்.

“உருத்தெரியாக் காலத்தே உள்புகந்தென் மாமன்னிக்
கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட”8(ப.141)

“ஈண்டிய மாயா இருள்கெட எப்பொருளும் விளங்க” 8 (ப.156)

“பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்”8(.106)

இம்முறையில்  தரவுகளைப்பயன்படுத்திய நூல்களின் பட்டியலைத்தான் தரமுடியும் .எத்தனை நூல்கள் துணைநூற்பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்பதைக்கொண்டு ஆய்வாளரின் ஆய்விற்கான உழைப்பை வெளிப்படுத்தக்கூடியது இம்முறை. துணைநூற்பட்டியலை வளமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக மேற்கோள்கள் எடுக்கப்படாத நூல்களை இம்முறையில் சேர்க்க இயலாது.

மேற்கோள்குறி


 மேற்கோள் குறிகளைக் ஆய்வில் கையாளும் பொழுது கவனிக்கப் படவேண்டியவை.முதலில் மூல நூலிலிருந்து எடுக்கபட்ட தரவினை எவ்வித மாற்றமின்றி அப்படியே கையாள்வது.  ஒற்றை மேற்கோள், இரட்டை மேறகோள் என இருவகைகள் உள்ளன. அனைவருக்கும் தெரிந்த பொதுச் செய்திகளான பழமொழி உள்ளிட்ட தகவல்களைக் குறிப்பிடுமிடத்தும், தரவுகளைச் சுருக்கித் தரும் நிலையிலும்,மேற்கோளுக்குள் மேற்கோள்கள் இருப்பின் அதற்கும் ஒற்றை மேற்கோள் இடப்படவேண்டும்.


மூலநூல்கள் மற்றம் துணை நூல் தரவுகளை அப்படியே கையாளும் பொழுதும், சேகரித்த நாட்டுப்புறப்பாட்டு முதலானவற்றிற்கும் இரட்டை மேற்கோள் இடப்படவேண்டும். மேற்கோள் குறி என்பதே அதை மேற்கோள் எனத் தனித்துக் காட்டுவதற்காகத்தான்.   தட்டச்சிடும்பொழுது தடித்த எழுத்துகளில் அதை மட்டும் காட்டத் தேவையில்லை.


தொடரும்...







ஆய்வு அனுபவங்கள் -4

 

ஆய்வு செய்வது எப்படி?

தொடர்ச்சி....

4.தரவுகளைத் திரட்டும் முறை  

மூலநூலிலிருந்துத் துணைநூல்களிலிருந்தும் தரவுகளைச் சேகரிக்கும் பொழுது, சேகரிக்கப்படும் தகவல்கள் ஆய்வில் கையாளப்பட்டால், மேற்கோளாகப் பயன்படுகின்றன.மேற்கோள் அட்டை அல்லது ஒருவெள்ளைத்தாளின் கிழித்த பாதிப் பகுதியை தரவுகளைச் சேகரிக்கப் பயன்படுத்தலாம். இதில் மூன்று தகவல்கள் பதிவுசெய்யப்படவேண்டும்.

 1.தரவு  பொருண்மையைப் பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும் வகையிலான  சிறு தலைப்பு.
2.தரவு பகுதி எடுக்கபட்ட நூலின் பக்கஎண்அல்லது பாடல்எண்
3.நூல் பற்றிய முழுவிவரங்கள்(நூலாசிரியர் அல்லது பதிப்பாசிரியர் அல்லது தொகுப்பாசிரியர் பெயர்(கள்)., நூல்பெயர், முகவரி,பதிப்புஆண்டு மற்றும்  பதிப்பு விவரம்முதலானவை)


     தரவுகளைச் சேகரிக்கும் பொழுது, அனைத்துத்  தரவுகளையும் மேற்கோளாகக் கையாள்கிறோமோ இல்லையோ. சேகரிக்கும் பொழுதே மேற்கூறிய மூன்று தகவல்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும்.மேற்கோளாகவும்,சான்றென் விளக்கம் மற்றும் துணைநூற்பட்டியல்  போன்ற பய்னபாட்டிற்காகவும் உதவக்கூடிய வகையில் இவை சேகரிக்கப்படுகின்றன.பதிப்பாசிரியர்கள் நூலாசிரியர்கள் போன்றவர்களை த் தெளிவாகக் குறித்துக்கொள்ளவேண்டும்.

        திருவாசகம் என்கிற நூலை எழுதியவர் மாணிக்கவாசகர் என்றாலும் அவர்  அந்நூலை வெளியிட்டிருக்கமாட்டார். அந்நூலை யாராவது ஒருவர் தற்காலத்தில் உரை எழுதி பதிப்பித்திருக்கலாம். அவ்வகையில் பதிப்பாசிரியர் அல்லது உரையாசிரியர் பெயரைத்தான் குறித்துக் கொள்ளவேண்டும். சிலர் தொகுத்திருக்கலாம். அவர்களைத் தொகுப்பாசிரியர்களாகக் குறித்துக் கொள்ளவேண்டும்.

           ஒவ்வொரு தரவுளும் ஏதோ ஒரு பொருண்மையைக் கொண்டிருக்கும். இவற்றைச்  சேகரிக்கும் பொழுதே அதன் பொருண்மையைச் சிறுதலைப்பாக்கி தரவின்  மேல் பகுதியில்  அடிக்கோடிட்டு சிறு தலைப்பாக எழுதிக்கொள்ளவேண்டும். தரவுகளைப் பகுத்து சிறுசிறு தொகுப்பிற்குள் அடக்க இம்முறை உதவும்.ஒரே தலைப்பிற்குள் மிகுதியான தரவுகள் மூலநூலிலிருந்து கிடைக்கும் பொழுது அதை இயல் தலைப்பாக அமைத்துக்கொள்ளலாம். ஏனையவற்றை கிடைக்கும் தரவுகளைக் கொண்டு இயல்களுக்குள் சிறுசிறு உட்தலைப்புகளாகப் பயன்படுத்தலாம். இவ்வாறு சேகரித்து பகுத்துத் தொகுத்த பின்னரே எழுதத்தொடங்கவேண்டும்.

       ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பற்றியோ,ஒரு படைப்பாளரைப் பற்றியோ முன்பே தீர்மானித்த முடிவை வைத்துக்கொண்டு அதன் கோணத்தில் ஆய்வை எழுதக்கூடாது.அவ்வாறு எழுதுவது நின்ற இடத்திலேயே நிறபதற்குச் சமம். ஆய்வு என்னும் படகைச் செலுத்த வேண்டுமெனில், தீர்மானித்த முடிவு என்னும் கட்டிலிருந்து அதை விடுவித்து விட வேண்டும். அப்போதுதான் ஆய்வு சரியான பாதையில் முன்னேறும்.

          காய்த்தல்,உவத்தல் அகற்றி கிடைத்துள்ள தரவுகளடிப்படையில் ஆய்வு அறத்திலிருந்து மாறாமல், ஆய்வு நோக்கத்தையே  நினைந்து, கருதுகோளை உணர்ந்து ஆய்வை எழுதத்தொடங்கவேண்டும். ஒவ்வொரு இயலை எழுதத் தொடங்கும் போதும்,ஆய்வாளர் மனதில் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.


         நெறியாளரிடம் எழுதிய இயலைக்கொண்டு சேர்க்குமுன்னர், இரு முறையாவது எழுதிப்பார்த்துவிட வேண்டும்.   இதனை முதல் வரைவு,இரண்டாம் வரைவு எனக் குறிப்பிடலாம்.

முதல் வரைவு

முதல் வரைவில் மூன்று செய்திகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

1.என்ன சொல்லப்போகிறோம் அதை எப்படி சொல்லப்போகிறோம் என்பதில் தெளிவு.
2.எந்த நோக்கத்திற்காக  ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்பதில் கவனம்.
3.ஆய்வினைப் படிப்பவர்களைக் கருத்தில் கொண்ட மொழிநடை.

முதலில் முதல் இயலைத்தான் எழுதவேண்டும் என்பதில்லை. தரவுகள் மிகுதியாகக் கிடைத்துள்ள இயல்களை முதலில் எழுதலாம்.முதல் வரைவில் என்ன, எப்படி என்பதில் தெளிவு தேவைப்படுவதைப்போல, எவ்வளவு தகவல்களைத் தரப்போகிபோகிறோம் என்பதிலும் தெளிவு தேவை. ஏனெனில் 

            ஒரு இயலுக்கு ஏராளமானத் தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் கிடைத்த தரவுகள் அனைத்தையும் பயன்படுத்தி விடவேண்டும்மென்ற ஆர்வத்தில் பிற இயல்களைக் கருத்தில் கொள்ளாமல் எழுதினால், ஒரு இயல் மிகப் பெரியதாகவும்,மற்றவை மிகச் சிறியதாகவும் அமைந்து விடும். ஒரு நாற்காலியின் நான்கு கால்களும் எப்படி சீரானதாக அமைந்துள்ளனவோ அதைப்போல இயல்கள் அமைவதுதான் சிறப்பு. எனவே பக்க வரையறைகளைக் கருத்தில் கொண்டு உட்தலைப்பிற்கேற்ற வகையில் தரவுகளை முறைப்படுத்திக்கொண்டு எழுதுவதே சரியாக முறை. தரவுகளை இயலுக்கேற்ப முறைப்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் ஆய்வு  தலைப்பையே கேள்விக் குறியாக்கி விடும். 

எளிய மொழிநடையில்,தெளிவான முறையில் சொல்ல வந்த கருத்தை முறைப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சிறு சிறு தொடர்களில் எடுத்துரைக்கவேண்டும்.முதல் வரைவினை எழுதும் பொழுது தயக்கம் அச்சம் போன்றவை ஏற்படும்.நோக்கத்தை பற்றிக் கொண்டு தரவுகளைக் மனதில் வரிசைப்படுத்தி கொண்டு அச்சமின்றி எழுத வேண்டும். அப்போதுதான் புதிய சிந்தனைகளும் புதிய உத்திகளும் தோன்றும். முதல் வரைவில் நிறுத்தற்குறி, கருத்துப்பிழை,ஒற்றுப்பிழைகளை கருத்தில் கொள்ளத் தேவையில்லை.

எதையும் எழுதுவதற்கு முன் மனதில் ஒரு முறை அதைப் பற்றி சிந்தித்து தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.   எந்த கருத்தை முதலில் கூறுவது, எந்த கருத்தை அடுத்தடுத்து கூறுவது எனத் தெளிவாகத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். எழுதும்பொழுது தடங்கலின்றி சொற்கள் இயல்பாக வந்து ஆய்வு நடையில் அமைய, ஆய்வுப் பொருள் குறித்த தெளிவும், தரவுகளைப் பொருத்தமுற அமைக்கும் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

            ஆய்வுப்பொருள் குறித்த மூலநூலையும் துணை நூல்களையும் ஆழ்ந்து படிந்திருந்தால்தான், ஆய்வு  சிறப்பாக அமையும். ஆய்வாளர் தான் சொல்ல வந்த கருத்தைப் படிப்பவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளும் வகையில், எடுத்துரைக்கவில்லையெனில் படிப்பவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரிடும்.         சொற்களின் பொருண்மை பற்றிய அறிவும், அதைச் சரியான இடத்தில் சரியாகப் பயன்படுத்த வேண்டிய விழிப்புணர்வும் உள்ளவரே சிறந்த ஆய்வாளராக முடியும். நிறைய நூல்களைப் படிப்பதால் மட்டுமே ஒருவர் ஏராளமான சொற்களை அறிய முடியும் அதைச் சரியாகப் பயன்படுத்தவும் முடியும். எனவேதான்,எழுதுவது ஒரு கலை எனப்படுகிறது.

எழுதுவதற்கு முன் மிகுதியான தரவுகளைச் சேகரித்துவிட்டது போலத் தோன்றும்.ஆனால்,எழுதும்போது தான் அவற்றில் சில தேவையில்லாதது என்றும் இன்னும் தேவை என்பதும் தெரியும்.எனினும் தயக்கமின்றி முதல் வரைவை முழுமையாக எழுதிவிட வேண்டும். ஓரளவிற்கு உருவம் கொடுத்த இயலில் உள்ள குறைகளை இரண்டாம் வரைவில் சரிசெய்து விட வேண்டும்.

முதல்  வரைவில் உள்ள கருத்துப்பிழை உள்ளிட்ட பிழைகள்,  உட்தலைப்பில் ஒழுங்கின்மை, சீரற்ற மொழிநடை,   ஒருமை-பன்மை மயக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்தி தேவைப்படும் மேற்கோளைச் சேகரித்து உரிய இடங்களில் பொருத்தி சரி செய்ய வேண்டும். இவ்வாறு சரி செய்த முதல் வரைவினை வாய்விட்டு ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டும். கண்கள் கண்டுபிடிக்காததை காதுகள் கண்டுபிடித்துவிடும்.கீழக்கண்ட முறையில் சரிசெய்யலாம். 

^


இரண்டாம் வரைவு


முதல் வரைவில் திருத்தங்களைச் செய்து, அதிலுள்ள குறைகளை நீக்கி,தேவைப்படும் புதிய தரவுகளைச் சேகரித்து உரிய இடத்தில் பொருத்திய பின்னரே  இரண்டாம் வரைவு எழுதப்படவேண்டும். இரண்டாம் வரைவில் கவனிக்கப்படவேண்டிய ஒன்று பத்தியமைப்பு.

ஒரு பத்தி என்பது ஒரு கருத்தைத் தொடங்கி,அக்கருத்து நிறைவுறும் வகையிலும் தொடரக்கூடியது. அக்கருத்து நிறைவடையும்போதுதான் அப்பத்தி நிறைவடையும். கருத்தின் தன்மையைப் பொறுத்து ஒரு பத்தி மூன்று வரிகளிலும் இருக்கலாம். முப்பது வரிகளிலும் இருக்கலாம்.

ஆய்வினைப் பொறுத்தளவில் தேவையற்ற சொற்கள் என ஒரு சொல் கூட இல்லாதவகையில், சொல்ல வந்த செய்தியினைச் செறிவுடன் சுருக்கமாக எடுத்துரைக்க வேண்டும். அடு்த்த கருத்தையோ, அக்கருத்திற்கு மாறான கருத்தையோ,மேற்கோளையோ அடுத்த பத்தியில் அமைக்கவேண்டும்.

தன்மை,முன்னிலை நிலையில் ஆய்வு அமையக்கூடாது. படர்க்கை நிலையிலிருந்தே ஆய்வினை நிகழ்த்த வேண்டும். உணர்ச்சிநடை,பெருமிதநடை,வினாநடை,பிறமொழி கலப்புநடை முதலான நடைகளைத் தவிர்த்து கூடுமான வரையில் தூய தமிழ்ச் சொற்கள் மட்டுமே இடம்பெறும் வகையில் ஆய்வு நிகழ்த்தப்படவேண்டும்.தேவைப்படின் தூய தமிழ்ச்சொற்களுக்கருகில் பிறமொழிச்சொற்களை அடைப்புக்குறிக்குள் தரலாம். ஒவ்வொரு இயலும் அவ்வியலுக்குரிய தலைப்பை ஒட்டி சிறு முன்னுரைப் பகுதியைக் கொண்டிருக்கவேண்டும். அது போல இயலின் முடிவு அந்த இயலில் ஆராயப்பட்டு கண்டறிந்த மெய்மைகளை தொகுத்து கூறுவதாக அமைய வேண்டும்.

மேற்கோள் என்பது இருவகைப்படும்.

 1.படைப்பிலக்கியங்களில் ஆய்வு நிகழ்த்தப்படுமாயின், மூலநூலிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகள் அல்லது  நாட்டுப்புற ஆய்வு எனின் சேகரிக்கப்பட்ட தரவுகள் 

2. மூலநூல் அல்லாத பிறவற்றிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகள்..

             இயல் தலைப்பிற்கேற்ற வகையிலும்,ஆய்வு நோக்கத்திற்கேற்ற வகையிலும் இத்தரவுகள் பொருத்தமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மூலநூல் தரவுகளுக்குத் தொடர்புடைய துணைநூல் தரவுகளைப் பகுத்துத் தொகுக்கும் வகைப்படுத்தும்போது ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். துணை நூல் தரவுகள் மூலநூல் தரவுகளுக்கு அரணானவையாகவும்  இருக்கலாம். முரணானவையாகவும் இருக்கலாம்.

           மூலநூல் கருத்துக்களைச் சரியாக விளங்கிக் கொண்டு அதற்கேற்ற தரவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முரணான சருத்தாயின் எவ்வாறு,எதனடிப்படையில் முரண்படுகிறது அது குறித்த ஆய்வாளரின் கருத்து யாது, எது ஏற்புடையது என்பதனைத் தெளிவு படுத்திய பின்னரே ஆய்வினை மேற்கொண்டுத் தொடரவேண்டும்.

          உதாரணமாக மாணிக்கவாசகரின் காலம் குறித்து ஒரு தெளிவின்மை உள்ளது. மூலநூலில் உள்ள கருத்துக்களை முறையாகப் பயின்று காலம் குறித்த ஒரு தெளிவை உண்டாக்கிக்கொள்ள வேண்டும். பின் பல்வேறு ஆய்வாளர்களின் மாணிக்கவாசகரின் காலம் குறித்த கருத்துகளைத் தொகுக்கவேண்டும். அதை வரிசைப் படுத்திக் கொள்ள வேண்டும். மறைமலையடிகள், அ.ச.ஞானசம்பந்தன் உள்ளிட்ட பிற அறிஞர்கள் கூறும் கருத்துக்களில் எது ஏற்புடையது என ஆய்வாளர் கருதுகிறாரோ அக்கருத்தை ஆய்வில் அதற்கான காரணத்தோடும் ஆதாரத்தோடும் தெளிவுபடுத்தி விட வேண்டும். எனவே, துணை நூலில் திரட்டப்பட வேண்டிய தரவுகள்  சிக்கலுக்கேற்ப திரட்டப்பட வேண்டும்.

1.மூலநூலிலிருந்து எடுக்கப்படும் தரவுகள், செய்யுள் பகுதியாயின் இவ்வாறு தரலாம்.
"பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி" (புறம் - 264)
                           "ஊர்நனி யிறந்த பார்முதிர் பறந்தலை" (புறம் - 265)

உரைநடையாயின்,  (ஒரு நாவலிலிருந்து எடுக்கப்பட்ட  தரவு  இது.)
 
தகப்பன்கொடி நாவலின் இறுதியில் அம்மாசியின் வாழ்நாள் முடிவுக்கு வரும் நிலையில் அமையும் பகுதி,“தீடிரென்று அவனை ஒரு கை தூக்கிக்கொண்டு பறந்தது. கோழிக்குஞ்சைப் போலத் தான் தூக்கிச் செல்லப்படுவதாய் நினைத்தான் அம்மாசி.  அதன் தொடுகை மிருதுவாக இருந்தது. இறக்கையடிப்புகள் மென்மையாக வீசிவிடுவது போல அருகிலேயே அவனை வருடின. மண்ணில் கால் பரவ விடாமல் சமவெளிகளுக்கும் மலைமுகடுகளுக்கும் நீர்ப்பரப்புகளுக்கும் மேலாய்க் கடந்து பறந்தது அது.  மண் தேலியிருக்கிற திட்டுகளில் காலை ஊன்றி விடலாம் என்று அவன் முயற்சிக்கும் போது அது இன்னும் மேலாய் காற்றில் எழுந்தது” (தகப்பன் கொடி, பக.46) என்றவாறாக அமைகிறது.


2. மூலநூல் அல்லாத பிறவற்றிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகள்..

உரைநடையாயின்,

""""இன்னும் அவர்கள் உயிரோடு இருக்கப்போவது ஒரு சில ஆண்டுகள் தான். அதுவரை அவர்கள் தங்கள் விருப்பப்பட்டபடி வாழ்ந்து விட்டுத்தான் போகட்டுமே. அவர்களுக்குத்  தேவையானதை வாங்கிக் கொடுத்து அவர்கள் சொல்லைக் கேட்டு நடந்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் பொறுப்பு இளைய தலைமுறையினருக்கு உண்டு. ""  (நடராஜன்.வி.எஸ் ,2008:123) 

மேற்கோள்களை இதழ்களிலிருந்தும் திரட்டலாம். உதாரணமாக,இவ்வாறு தரலாம்.

  ‘தினகரன்’ நாளிதழில் வெளியான செய்தி ‘அளம்’ நாவலுடன் ஒப்புநோக்கத் தக்கதாக இருக்கிறது. """" கல்யாணியின் கணவர் கணபதிக்கு வருமானம் போதாததால் குழந்தைகள் பசியால் வாட வறுமைக்கு வயிறு இரையாகிப் போனதை கல்யாணியால் சகிக்க முடியவில்லை . அதனால் பெண்கள் கடைக்குக் கூட வராத காலத்தில் டயர் பஞ்சர் ஒட்டுகிற கடையில் வேலைக்கு சேர்ந்தார் . கணவர் இறந்ததால் அப்பா , அம்மா இரண்டு பேருக்குமான கடைமையை முடித்துவிட்டார். மூன்று மகள்களுக்கும் , ஒரு மகனுக்கும் திருமணம் செய்து முடித்துவிட்டார். அதற்காக 33 வருடங்களாக பஞ்சர் ஒட்டிக் கொண்டு இருக்கும் கல்யாணிக்கு வயது 60.""  (வசந்தம் - தினகரன் இணைப்பு,    11 .5. 2008 : 3)    
 
தொடரும்......



ஆய்வு அனுபவங்கள் -3


  ஆய்வு செய்வது எப்படி?

தொடர்ச்சி.....

3.இயல் பிரிப்பு


           ஆய்விற்குரியத்  தலைப்பைத் தேர்நதெடுத்த பின்னர், இயல்களைத் தலைப்பிற்கு பொருத்தமான வகையில். முதலில் பொது நிலையில் நின்று மேலோட்டமாகப் பிரிக்க வேண்டும். பொதுநிலையில் நின்று பிரிப்பது என்பது தரவுகளைத் திரட்டுவதற்குமுன் மேற்கொள்ள வேண்டிய ஒன்றாகும். பிரித்த இயல்களுக்கேற்ப தரவுகளைத் திரட்டுவதா, தரவுகளுக்கேற்க இயல்களைப் பிரிப்பதா என்கிற யைம் ஏற்படும் கோழியிலிருந்து முட்டையா?முட்டையிலிருந்து கோழியா? என்கிற குழப்பம இங்கு தேவையில்லை.தரவுகளுக்கேற்ற வகையில்தான் இயல்களைப் பிரிக்க வேண்டும்.  பொதுநிலையிலிருந்து மேலோட்டமாகப் பிரிப்பதென்பது சுரைக்குடுவையைக் கொண்டு நீச்சல் பழகுவது போன்றது. 

            பொது நிலையில் நின்று பிரிக்கப்படும் இயல்கள் தரவுகளை எப்படிச் சேகரிப்பது என்ன தரவுகளைச் சேகரிப்பது போன்ற முதல்நிலை தயக்கத்தை நீக்க உதவுகின்றன.இவை அனுமானங்களைக் கொண்டு பிரிக்கப்படுபவை. அவ்வளவே. ஆதாரங்களடிப்படையில் பிரிக்கப்படுபவை அல்ல. அனுமானத்தில் அடிப்படையில் பிரிக்கப்படும் இவ்வியல்கள் தரவுகளைத் தயக்கமின்றி தேட உதவுகின்றன. இதனடிப்படையில் திரட்டப்படும் தரவுகள் இயலுக்குத் தகுந்தாற்போல் மிகுதியாகக்கிடைக்கலாம்;சில குறைவாகக் கிடைக்கலாம்;சில இயலுக்கு எதிர்பார்த்ததைவிட மிகுதியாகக் கிடைக்கலாம்; சில கிடைக்காமலே போகலாம்;மாறாக, நினைத்துப் பார்த்திராத புதிய தரவுகள் மிகுதியாகக் கிடைக்கலாம்.

             தரவுகள் முழுவதும் சேகரிக்கப்பட்ட பின்னர் இத்தரவுகளின் அடிப்படையில்தான் இயல்கள் மீண்டும் ஒரு முறை பிரிக்கப் படவேண்டும்.பொதுநிலையில் பிரித்த சில இயல்கள் நீக்கப்பட்டு, புதிய இயல்கள் உருவாகலாம். எப்படியாயினும் ஆய்வு நோக்கம், தலைப்பு,கருதுகோள் இவற்றினின்றும் மாறாத வகையில் இயல்கள் பிரிக்கப்படவேண்டும். பொது நிலையில் பிரித்த இயல்களையே பற்றிக்கொண்டு எழுதத்தொடங்குவதென்பது இயல்களுக்கேற்ற தரவுகள் கிடைக்காத நிலையில்,தேவையற்ற தரவுகளைக் கொண்டு நிரப்புவதற்கு வழி வகுத்துவிடும். ஆய்வு இரயில் தடம் புரண்டு இலக்கையே மறந்து விடும் நிலை ஏற்படும். எனவே, தரவுகளைக் கொண்டு இயல்களைப் பிரிப்பதே சிறப்பானது.

              ஆய்வு நோக்கம் இலக்கு எனில், ஆய்வுத் தலைப்பு தண்டவாளம், ,இயல்கள் இரயில் பொட்டிகள் ஆகும். இயல்கள் ஒன்றக்கொன்று பொருண்மையடிப்படையில் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.தரவுகளை உயிருள்ள பயணிகளோடு ஒப்பிடலாம். சென்னை செல்லும் பயணி சென்னை செல்லும் இரயிலில் அமர்ந்தால்தான் இலக்கு நோக்கி பயணிக்க முடியும். அதுபோல,தரவுகளும் ஆய்வு நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பொருத்தமுடையனவாக இருக்க வேண்டும். பொருத்தமில்லாத தரவுகள் தவறான இலக்கிற்கே சென்றடைய உதவும். ஆய்வாளரை குழப்பிவிடும்.

                பெண்ணியம் என்னும் கோட்பாட்டை ஒரு படைப்பாளரின் படைப்பில் பொருத்திப் பார்க்கும் வகையிலான ஆய்வு எனில்  பெண்ணியம் குறித்து முதலில் அறிந்திருக்கவேண்டும். பெண்ணியக் கோட்பாடு  தோன்றிய வரலாறு, உட்பிரிவுகள், பெண்ணியம் குறித்த மாற்றுப் பார்வைகள்,இந்திய சூழலில் அதன் விளைவுகள் முதலான அடிப்படைப் புரிதல்களைப் பெற்ற பின்னரே ஆய்வினைத் தொடங்கவேண்டும்.

           பெண் பிறப்பு முதல் இறப்பு வரையில் நடத்தப்படும் சூழல் குறித்த படைப்பாளரின் பார்வையைப் பெண்ணிய நோக்கில் அப்போதுதான் அணுகி ஆராய முடியும்.பெண்ணியம் குறித்த ஆய்வகளுக்குப் பெண்ணியக் கோட்பாடு பற்றிய அறிமுகத்தையும் அதன்  பல உட்பிரிவு  வகைகளில் எந்த வகையின் அடிப்படையில் படைப்பாளரின் படைப்புகள் ஆராயப்படுகின்றன என்ற தகவல்களையும்  உடையதாக  இயல் இருக்கவேண்டும். சில ஆய்வேடுகளில்  முன்னுரை,முடிவுரை நீங்கலாக இயல்கள் பிரிக்கப்படுகின்றன.இவ்வாறு பிரிப்பதில் முன்னுரையை முதல் இயலாகச் சேர்ப்பதா என்கிற ஐயம் எழுகிறது. எது முன்னுரை என்ற கேள்வியும் எழுகிறது.
                                                                          ஆய்வுநோக்கம்,ஆய்வுச்சிக்கல்,தலைப்பு,எல்லை,கருதுகோள்,ஆதாரங்கள்,
இயல்பிரிப்பு  முதலான செய்திகளைத் தாங்கியிருக்கும் பகுதி முன்னுரைப் பகுதியா? அல்லது பெண்ணியம் குறித்த ஆய்வுகளில் பெண்ணியக் கோட்பாட்டைக்கூறும்  பகுதி முதல் இயலா?  ஆய்வு நோக்கம் அதன் சிக்கல், அதன் எல்லை, கருதுகோள், தலைப்பிற்கான ஆதாரங்கள், இயல்பிரிப்பு போன்றவை தெரியாமல் ஒரு ஆய்வை படிப்பவர் அணுக முடியாது.  இது ஆய்வு குறி்த்த அறிமுகப் பகுதி.முன்னுரையில்லாமல் எவ்வாறு முடிவுரை பகுதி அமைக்க முடியும்? முன்னுரை,முடிவுரையை நீக்கிவிட்டு எப்படி ஆய்வை ஆய்வாகக் கொள்ளமுடியும்?எனவே தமிழ் ஆய்வுகளில் முன்னுரை முடிவரை நீங்கலாக என்ற சொற்கள் தேவையா என ஆராய்வது அவசியமாகிறது. முன்னுரை,முடிவுரை உட்பட்டு எனப் பிரிப்பது தான் பொருத்தமாக இருக்கும். இவ்வடிப்படையில் .இயல்கள் பொதுவாக ஐந்து  முதல் ஏழு வரை இருக்கலாம்.

உதாரணத்திற்கு, இயல்கள் பிரிக்கப்படும் போது,பெண்ணியத்திற்கு கீழ்க்கண்டவாறு  பிரிக்கலாம். பிரபஞ்சனின் பெண்ணியச் சிந்தனைகள் என்கிற தலைப்பிற்கு,பொது நிலையில் இயல்களை இவ்வாறு பிரிக்கலாம்.

முன்னுரை
பிறந்த வீட்டுச்சூழலில் பெண்கள்
புகுந்த வீட்டுச்சூழலில் பெண்கள்
தனித்து வாழும் பெண்கள்
சமூக சூழலில் பெண்கள்
அரசியல் சூழலில் பெண்கள்
முடிவுரை

முன்னுரை பகுதி ஆய்வு பற்றிய அறிமுகத்தை உடையதாக அமையவேண்டும்.

      பொதுநிலையில் நின்று பிற இயல்களைப் பிரித்த பின்னர்,ஒவ்வொரு இயலிற்குள்ளும் குறிப்பிடத்தக்க உள் சிக்கலை மையப்படுத்தும் வகையில் ஏராளமான தரவுகள் கிடைக்கலாம்.பிறந்த விட்டுச்சூழல் குறித்த இயலுக்கு பெண் பிறப்பு - வளர்ப்பு வேறுபாடு, கல்வி,முதிர்கன்னி,திருமணத்திற்குப் பின்னர் புகுந்த வீட்டில் அவளுடைய உரிமை,மணவாழ்வு முறிந்த நிலையில் புகுந்த வீட்டில் வாழ நேர்ந்தால் சந்திக்கும் சிக்கல்கள் போன்ற தரவுகள் தேடப்படவேண்டும்.

       ஒரு படைப்பாளரின் படைப்பில் பிறப்பு,வளர்ப்பு உள்ளிட்ட  சிக்கல்களுக்கானத் தரவுகள் ஏதுமின்றி பெண் கல்வி பெறும் சூழல் குறித்த பதிவுகள் மட்டும் மிகுதியாக் கிடைக்கும் சூழலில், குடும்ப சூழலில் பெண்கல்வி என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்து அதையே இயல் தலைப்பாகவும் அமைத்துக் கொள்ளலாம்.ஏராளமான தரவுகள் இருக்கும் பொழுதுதான்  ஆராய்வது எளிதாக இருக்கும்.முதிர்கன்னி குறித்த பதிவுகளும் ஏராளமாக காணப்படுமாயின் அதனை அடுத்த இயலாக வைக்கலாம்.
அதுபோல பணிமகளிர் சிக்கல் குறித்த எத்தரவுகளும் படைப்பாளரின் படைப்புகளில் கிடைக்கவில்லையெனில் அந்த இயலை நீக்கிவிடலாம்.தனித்து வாழும் பெண்கள் குறித்த தரவுகளில் திருமணமாகாமல் தனித்து வாழும் பெண்கள்,திருமணமாகி தனித்து வாழும் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் எனப் பிரித்து தரவுகளைத் தேடலாம்  அரசியல் சூழலில் பெண்களின் மீதான அரசியல் செயல்பாடு,அரசியல் என்னும் அதிகார மையத்தில் வெற்றிகொண்ட பெண்கள் நிலை, ஓட்டுவங்கிகளாக கருதப்பட்டு நடத்தப்படும் பெண்கள் முதலான பிரிவுகளுக்குள் தரவுகளைத் திரட்டலாம் .இதில் ஒரு உள் சிக்கலுக்கு ஏராளமானத் தகவல்கள் கிடைக்கும் நிலையில் அதையே இயல் தலைப்பாக அமைக்கலாம்.

     பொதுவாகக் கோட்பாடுகளைப் பொருத்திப் பார்க்கும் ஆய்வுகளில், அக்கோட்பாடு பற்றிய செய்திகளை விரிவாகவே கூறிவிடுவது நன்று.அதைப் பற்றிய தெளிவானக் கருத்தியலை ஆய்வாளர் நன்கு புரிந்து கொண்ட பின்னரே ஆய்வைத் தொடங்க வேண்டும். கோட்பாடு அடிப்படையில்தான் கருதுகோள் உருவாக்கப்படவேண்டும்.அனைத்து இயல்களும் இக்கோட்பாட்டினடிப்படையில்தான் ஆராயப்படவேண்டும்.புதிய கோட்பாடுகளாகத் தற்காலத்தில் கருதப்படுபவை தலித்தியம்,பெண்ணியம்,சிறாரியம்,அரவாணியம்,முதியோரியல்,சூழலியல்,
தமிழ்க் கணினியியல்போன்றவை.

          இக்கோட்பாடு குறித்த தெளிவினை ஏற்படுத்திக்கொண்ட பின்,அதற்கேற்ப இயல்களை அமைக்க வேண்டும். சில ஆய்வுகளில் பொருத்தமில்லாத வகைகளில் சில இயல்கள் அமைக்கபட்டிருக்கும் எவ்வாறெனில், மேற்குறிப்பிட்ட சமூகச் சிக்கல்கள் சார்ந்த தலைப்புகளைத் தேரந்தெடுத்துவிட்டால் அது தொடர்பான சிக்கல்களை மையப்படுத்தும் இயல்கள் அமைக்கப்பட வேண்டும். 

உதாரணமாக, தமிழ் நாவல்களில் முதியோர் சிக்கல் என்னும் தலைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால்,முன்னுரை பகுதியில் நோக்கம் சிக்கல்,எல்லை,முதன்மை ஆதாரங்ளைப் பற்றிய செய்திகளைத் தர வேண்டும். 

       இரண்டாம் இயல் முதியோர் என்பதற்கான சொல் விளக்கம். வயது வரையறை,தமிழ் இலக்கியத்தில் அன்று முதல் இன்று பதிவாகியுள்ள முதியோர் குறித்த பார்வைகள், மருத்துவர்களின் பார்வையில்,உடல், உள, உணவு அடிப்படையிலான செய்திகள்,உலக அளவில் முதியோர் நடத்தப்படும் நிலை போன்றவற்றை உள்ளடக்கியதாக அமைவது சிறப்பாக இருக்கும்.

        மூன்றாவது இயல் எடுத்துக்கொண்ட நாவல்கள் பற்றியும், அதில் இடம்பெறும் முதியோர்களின் நிலை குறித்தும்,நாவலாசிரியர்களின் முதியோர் குறித்த பார்வை குறித்தும்,முதியோர்களை  சில வரையறைக்குள் அடக்கி விளக்கும் நிலையிலும் அமைய வேண்டும். 

        நான்காம் இயல் நாவல்களில் முதியோர்க்கு ஏறபடும் சிக்கல் பற்றி வயது,உடல் தளர்ச்சி,ஓய்வு,தலைமுறை இடைவெளி, குடும்ப,சமூக நிலைகளில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களை நாவல்களின் வழி ஆராயப்படவேண்டும்.

         ஐந்தாம் இயல் நாவல்களில் வழி நின்று பிடிவாதம்,மரபு மற்றும் சமூக மாற்றத்தை  வெறுத்தல்,பழிவாங்கல், பழம்பெருமை முதலானவற்றால் தனி மனிதர்க்கும், குடும்ப சமூக உறவுகளுக்கும் சிக்கல்களை ஏறபடுத்துதல் முதலான,முதியோரால் ஏற்படும் சிக்கல்களை ஆராய்வதாக அமைவது நன்று. 

   ஆறாவது இயல் முதியோர் வழிகாட்டல் என அமைந்து அனுபவப் பெட்டகங்கள்,உயிருள்ள நூல்கள் என்றடிப்படையில் நாவல்களின் வழி அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை சொல்லும் அறிவுரைகள், வாழ்க்கையில் சந்தித்த சிக்கல்களை அணுகிய விதம் போன்றவற்றை ஆராய்வது நன்று.

     முடிவுரை பகுதி ஆய்வாளரின் நடுநிலையை வெளிப்படுத்தும் வண்ணமும்,சமூகக் கண்ணோட்டத்துடனும், இன்றைய இளைஞர்கள் நாளைய முதியவர்கள் என்ற நடப்பியல் உண்மையைப் புரிந்த நிலையிலும் நாவலாசிரியர்களின் முதியோர் குறித்த தகவல்களைத் தருவதாய் அமையவேண்டும்.மேற்குறித்த இயல்கள் பொது நிலையில் நின்று பிரிக்கப்பட்டவை.எடுத்துக்கொள்ளும் முதன்மை நூல்களுக்குத் தகுந்தாற்போல தரவுகளைப் பொறுத்துஇயல்கள் மாற்றத்திற்கு உள்ளாகலாம்.

        பெரும்பாலும் தற்கால ஆய்வுகளில் இயல்கள் ஒரே மாதிரியாக வருகின்றன.ஒரு படைப்பாளரின் படைப்பில் கதை மாந்தர்,குடும்பம்,சமூகம் என்றளவிலேயே ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. ஒரு ஆய்வைப் பார்த்ததைப் போலவே, வெவ்வேறு படைப்பாளர்களின் படைப்புகளில் இயல்கள் பிரிக்கப்படுகின்றன.இதைத் தவிர்த்து குறிப்பிட்ட படைப்பாளரின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இயல்கள் அமைக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும்.தரவுகள் அடிப்படையில் பிரிக்கப்படும் இயல்கள் மட்டுமே படைப்பாளரைப் புதிய கோணத்தில் அணுகி புதிய இயல்களைப் பிரிப்பதற்கு உதவும் என்பதை ஆய்வாளர் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இயல்களுக்குள் ஒழுங்கமைப்பு மற்றும் 

தலைப்பிற்கேற்ற பொருத்தப்பாடு


              இயல்கள் பொருண்மையடிப்படையில் இணைக்கப் பட்டிருப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவை முறையாக அமைக்கப்படும் முறை.

        திருவாசகத்தில் தொடரனியல் என்னும் ஆய்விற்குள் மொழியியல் பற்றிய அறிமுக இயல், ஒலியன், உருபன்,தொடரமைப்பு, மொழிநடை,யாப்பமைதி, கருத்துப்புலப்பாடல் உத்திகள் போன்றவற்றில் தரவுகளைப் பொருத்து இயல்களை அமைத்துக் கொள்ளலாம். ஆனால் இவ்வியல்களுக்குள் ஒரு இயலாக  மாணிக்கவாசகரின் பாடல்களில் மகளிர் விளையாட்டுகள் என்பது இடம் பெறக்கூடாது. அது போலப் பெண்ணியம் குறித்த தலைப்பைத் தேர்நதெடுத்து இயல்களைப் பிரிக்கையில் ஒரு இயலாக அப்படைப்பாளரின் இலக்கிய நயம் என்பது இடம் பெறக்கூடாது.

மாலனின் பெண்ணியச் சிந்தனைகள் என்கிற ஆய்வில் ஒரு இயலாக மாலனின் படைப்பில் இலக்கிய நயம் என்பது பொருந்தாது. அது போல ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றிய நூல்களை ஆராயும் பொழுது,கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் தரவுகள் இடம்பெற வேண்டும். அதற்குப் பொருத்தமில்லாத வகையில் மற்றொரு காலத்தில் தோன்றிய தரவுகளைக் கொண்டு அமைக்கப்பட்ட இயல் இடம் பெறக்கூடாது.