முனைவர் ஜ.பிரேமலதா,
தமிழ்இணைப்பேராசிரியர்,
அரசு
கலைக்கல்லூரி,சேலம்-7
தொல்காப்பியர் கூறும் நூல்
முன்னுரை
தொல்காப்பியர், பொருளதிகார மரபியலில்
நான்கு வருணத்தாருக்குரியப் பொருட்களைப் பற்றிக் கூறுமிடத்து, நூல் என்ற சொல்லையும் குறிப்பிட்டிருக்கிறார். இச்சொல்
தொடர்பாக உரையாசிரியர்கள் பலரும் பலவித கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
இக்கருத்துக்களிலுள்ள சாதியச் சார்புத் தனைமையைக் கண்டறிந்து உண்மையை
வெளிப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.
நூற்பா நூலே
கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய ( 3: 615)
இந்நூற்பாவிற்குரிய
பொருள் அந்தணர்களுக்குரிவை நூல்,கரகம்,முக்கோல்,மணை என்ற நான்கு பொருட்கள்
என்பதாகும்.
1.நூல் - நூல் என்பதற்குப் பூணூல் என உரையாசிரியர்கள்
பலரும் பொருள் கொண்டுள்ளனர்.(இதைப் பற்றியே இக்கட்டுரை ஆராய்கிறது.)
2.கரகம் – சிறிய பானை
3.முக்கோல் -உயிர் மூலப்பொருளின் விகாரமாகிய உடம்பைக்
கொண்டிருத்தல் போல் இறைவன் உடம்பு, உயிர் இவையிரண்டையும் தனது
உடம்பாகக் கொண்டுள்ளான். இறைவன்,உடல்,உடம்பு என்ற இம்மூன்று
தத்துவங்களும் ஒன்றை விட்டொன்று பிரியாமல் எக்காலத்தும், தத்தம் இயல்பை விடாமல் ஒன்று சேர்ந்துள்ளன என்பதை விளக்கவே
இறைவனை வழிபடுபவர்கள், துறவிகள் மூன்று கோல்களை
ஒன்றாகப் பிணைத்து கையில் வைத்திருப்பர். இதை "முக்கோல்" என்பர்.
துறவிகள் இவ்வாறு முக்கோல் ஏந்தும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்திருப்பதை
தொல்காப்பிய செய்யுள் வரிகளால் அறியலாம்.
4.மனை – அமருவதற்குரிய சிறிய பலகை.
உரையாசிரியர்கள்
கருத்து
இதில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நூல்
என்னும் சொல்லுக்குத்தான் உரையாசிரியர்கள் பலரும் பலவாறாகப் பொருள் கொண்டுள்ளனர்.
இங்கு குறிப்பிடப்படும்
நூல் என்பது எது?
உரையாசிரியர்களின்
கருத்துகளை முதலில் பார்ப்போம்.
1.தொல்காப்பிய முழுமைக்கும் உரை வகுத்த இளம்பூரணர், ‘நூலும் கரகமும் முக்கோலும் மணையும் ஆராயுங் காலத்து
அந்தணர்க்கு உரிய‘ என்கிறார்.
2.உரையாசிரியர் பேராசிரியர் அவர்கள், (இ.சுந்தரமூர்த்தி பதிப்பு)”நூலினை முற்கூறினான் பிறப்பு
முறையானுமென்பது .இனிக் குடுமியுங் குசையம் (தருப்பை) போல்வன...குண்டிகை-நீர்
முகந்து வைத்திருக்கும் கலம். யாமை மனை-யாமை வடிவால் செய்த
இருக்கைப்பலகை....பிறப்புமுறை-அருபிறப்பாளன் என்னும் பிறப்பு முறை. சிறப்பு முறை – நூல் தாங்கிய பின்னரே கரகம் முதலிய தாங்குதல் பற்றிய சிறப்பு
முறை”(ப.636-637)
என்கிறார். இங்கு, பேராசிரியர் பிறப்பு முறையால் பெறப்படுவது நூல் என்பதினால் அது
பூணூலையேக் குறிக்கிறது எனலாம்.
3.உரையாசிரியர் வ.த.இராமசுப்பிரமணியம் அவர்கள்,”முப்புரிநூல் அணிவது ஏழு வயதுப்பருவத்தில்
அந்தணச்சிறுவர்களுக்குச் செய்யும் சடங்குமுறை. இருபிறப்பாளர் எனலும்ஆம்.” (ப.482)என்கிறார்.இங்கு
வெளிப்படையாகவே பூணூல் எனக் குறிப்பிடப்படுகிறது.
4.தமிழண்ணல் அவர்கள்,
அந்தணர்க்குரியவை
முப்புரிநூல், கமண்டலம்(கரகம்), முக்கோல் தண்டு, மனை இருக்கை ஆகியன.
நூல்-முப்புரிநூல் கரகம்-கமண்டலம்.”என்கிறார்.
5.ஞா.மாணிக்கவாசகன் என்பார்,“நூல்-சுவடி
(முப்புரிநூல் என்பாரும் உண்டு.)”என்று நூல் என்பதற்கு சுவடியாக
இருக்கலாம் என ஊகித்துள்ளார். அந்தணர், துறவிகளாய் இடம் விட்டு இடம்
செல்லும் துறவோராவர். இங்கு நூலெனக் கூறப்பட்டது பொத்தகக் கட்டை இது:
" பூதியு மண்ணும் பொத்தகக் கட்டும்
மானுரி மடியு
மந்திரக் கலப்பையும்
கானெடு மணையுங்
கட்டுறுத் தியாத்த
கூறை வெள்ளுறிக்
குண்டிகைக் காவினர்" (பெருங்கதை – 7 ம் நூ )
6.பாவலரேறு ச.பாலசுந்தரம் அவர்கள்,“முந்நூலும்(முப்புரிநூல்) கமண்டலமும்,முக்கோலும்,இருக்கை மனையும்
அந்தணர்க்குரிய உடைமையாகும்” என்பதோடு முப்புரிநூல் அந்தணர்,அரசர் தவிர்ந்த ஏனையோர் நூல் பூணுதல் ஆரியர்
வழக்கமாகும்....முந்நூலும் மனையும் பொது. கரகமும் முக்கோலும் துறவு
பூண்டோர்க்குரியவாகும் என்கிறார்.(ப.211-212).இங்கு பாலசுந்தரம் அவர்கள், ஆரிய மரபில் அந்தணர்,அரசர் தவிர்த்தவர்களுக்கும்
பூணூல் அணியும் வழக்கம் இருந்தது என்கிறார்.
நால்வகை
வருணத்தாருக்கும் உரியது பூணூல்
தொல்காப்பியர்
குறிப்பிடும் நூல் பூணூல் என்றால், தமிழகத்தில் அந்தணர் எனப்படும்
(ஆரியர்கள்) பார்ப்பனர்கள் மட்டும் பூணூல் அணிபவர்கள் அல்லர். தொல்காப்பியம்
சொல்லுகின்ற அனைத்து வர்ணத்தவருமே பூணூல் அணிபவர்கள்தான்.
1.இன்றைக்குத் தாழ்த்தப்பட்டவர்களாகச் சொல்லப்படும் பறையர்
சமூகத்தவர், தாங்கள் பூணூல் அணிவது குறித்து
இன்றுவரையிலும் பாடிவரும் பாடல்களை வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள்.
"முந்திப் பிறந்தவன் நான்
முதல் பூணூல்
தரித்தவன் நான்
சங்குப் பறையன்
நான்
சாதியில்
மூத்தவன் நான்"- என்கிறது அப்பாடல்.
ஞானவெட்டியார்
பாடல்கள்,
"... ... பூணூலந்
தரணிமுத
லென்பறையில் தழைத்த தாண்டே"
“பூணூல் தரித்துக் கொள்ளுவோம் - சிவ சிவ
பொறியுமைம்
புலனையுந் தொழுது கொள்ளுவோம்
வேண விருதுகளும்
விகிதமாய்
வெண்குடை, வெண்சாமரமும் பிடித்துக் கொள்வோம்"
“பூணூல் பிறந்ததெங்கே -சிவசிவ" http://saanron.webs.com/katuraikal.htm என்று சான்று காட்டுகிறார்.
2.விஸ்வபிராமணர்கள் எனப்படும் கம்மாளர்கள் தாங்களே
உண்மையான பார்ப்பனர்கள் என்று நீதிமன்றம் சென்று வாதாடிய வரலாறுதான் 'சித்தூர் ஜில்லா அதாலத்'
என்று புகழ்
பெற்றது. அந்தக் கம்மாளர்கள் கிருஷ்ண யஜூர் வேதத்தின் தைத்ரிய சம்ஹிதையைப்
பின்பற்றி வேத கர்மாக்களுடன், உபநயனம் எனப்படும் பூணூல்
அணியும் சடங்கைச் செய்து கொள்பவர்கள் என்பதற்கு ஆதாரமாக ஆந்திர மாநிலத்தில் பல
கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
3.நாட்டுக் கோட்டை நகரத்தார் என்று சொல்லப்படும்
செட்டியார்கள் பூணூல் அணிபவர்கள். வன்னியர்களில் ஒரு பிரிவினர் முத்திரை போட்டுக்
கொள்வது என்கிற பெயரில் பூணூல் அணிகின்ற சடங்கைச் செய்து கொள்கின்றனர்.
4. ஆப்பிரிக்காவின் எகிப்பது நாட்டிற்கு ஆரியர்கள்
செல்வதற்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. அதில் உள்ள
உருவங்கள் சிலவற்றில் பூணூல் போன்று மார்புக்குக் குறுக்கே வரையப்பட்டுள்ளது. அது
பூசாரிகளின் ஓவியங்களாக இருக்கலாம் என அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், பூணூல் அணிதல் என்பது சூரிய வழிபாடு தொடர்புடைய ஒரு மதச்
சின்னம். இஸ்லாமியர்கள் தலையில் குல்லாய் அணிவது போல இது ஒரு மதச் சின்னம்
அவ்வளவே.
புலையன்
என்ற சொல்லுக்கு தமிழ் லெக்சிகனில் (Tamil
Lexicon) “கீழ்மகன்” (கீழ்ச்சாதியான்) என்று பொருள் தரப்பட்டுள்ளது. அதே
சொல்லுக்குப் “புரோகிதன்” என்று வேறொரு பொருளும் தரப்பட்டுள்ளது.
புரோகிதர்
என்றால் மதகுரு (Priest); சமயத் துறையின் தலைமகன். சமயச்
சடங்குகளை நிகழ்த்துவது இவரது சிறப்புரிமை. இந்தத் தலைமகன் எப்படிக் கீழ்மகனாகவும்
கருதப்படமுடியும்? இது ஆழ்ந்து ஆய்வு
செய்வதற்குரியதாகிறது.
சமயச்
சடங்குகளில் கடவுள்வழிபாட்டுச் சடங்குதான் முதலிடம் வகிப்பது. இதற்கு அடுத்து
புராதன சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது ஈமச்சடங்காகும். திருமணச்
சடங்கு முதலியவெல்லாம் காலத்தால் மிகவும் பிற்பட்டவை. எனவே கடவுள் வழிபாட்டைத்
தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இறுதிச்சடங்குதான் முதல்இடத்தில் இருப்பது.
பழந்தமிழகத்தில்
இத்தகைய பெருமைவாய்ந்த இறுதிச் சடங்கை நடத்திவைக்கும் மரியாதைக்குரிய மதகுருவாகப் “புலையர்” இருந்தனர். குடிமக்களுக்கு
மட்டுமல்லாது மன்னர்களின் இறுதிச் சடங்குகளையும் இவர்களே செய்துள்ளனர்.
சுடுகாட்டில், இறந்தமன்னனின் உடல் கிடத்தப்பட்ட பிறகு, புலையன் சோறும்,கள்ளும் படைக்க, இறந்தவன் அதை வாங்கி உண்பான் என்று நம்பப் பட்டது. அதன்பின்
உடலுக்கு எரியூட்டப்படும்.
இதைக்
குறிப்பிடும் பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.
“புல்லகத்திட்ட சில்அவிழ் வல்சி
புலையன் ஏவப் புல்மேல் அமர்ந்து உண்டு
அழல்வாய்ப் புக்க…
இப்பாடலை (எண்: 360) மேற்கோள் காட்டிப் புலையர் புரோகிதராயிருந்தனர் என்று பொருள்
தந்துள்ளது லெக்சிகன்.
ஆனால்
இதே புறநானூற்றில் இன்னொரு பாடலும் உள்ளது. இதில் இறுதிக்கடன் தீர்க்கும் தகுதி
புதல்வனுக்கு மட்டுமே உண்டு என்று வலியுறுத்தப் படுகிறது.
இப்பாடலில்
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இவ்வாறு கூறுகிறான்:
“இதோ அம்பு செலுத்த ஆயத்தமாகிவிட்டேன். அதற்குமுன்
பசுக்களும், பார்ப்பனரும், பெண்களும், இறந்தோர் கடன்முடிக்கப் பிள்ளை
பெறாதவர்களும் விலகியோடிப் பாதுகாப்பு தேடிக்கொள்ளுங்கள்!” (புறம்: 9).
“ஆவும், ஆனியல் பார்ப்பன மாக்களும்
…………………………………………….
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன்
இறுக்கும்
பொன்போல் புதல்வரைப் பெறாதீரும்
……… நும் அரண் சேர்மின்”.
பல யாகசாலைகள்
நிறுவி வேள்விகள் நடத்த உதவிய அந்த மன்னனைப் புகழும் புலவர் வைதிகச் சார்பினர்
என்று கொள்ளலாம். இவர் இறுதிச் சடங்கில் புலையனின் முக்கிய இடத்தை
மறுத்துவிடுகிறார்.
செத்தவனுக்குக்
கொடுக்கப்படும் உணவுதான் அவனது எதிர்கால வாழ்வைப் பாதுகாக்கும். இந்த மிக
முக்கியமான சடங்குதான் இப்புறப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார் உ.வே.சா.
ஆனால் புறநானூற்றில் இரண்டு பாடல்களில் (360,
363) பிண்டம்
கொடுக்கும் சடங்கைப் புலையன் செய்ததாக வந்துள்ளது. அன்று தமிழகத்தில் வந்து
குடியேறியிருந்த வைதிகர் பார்வையில் இது படுபயங்கரமான பாவமாகும். இருந்தாலும்
எதிர்ப்புக்குரல் மிக பலவீனமாகவும், மறைமுகமாகவும்தான்
ஒலிக்கிறது.
புலையன் பிண்டம் தரலாகாது என்று நேரடியாகத் தடை செய்வதற்குப் பதில் புதல்வனைப் பெறாதோர்க்குக்
கதிமோட்சமில்லை என்று நுட்பமாக உரைக்கிறது; புலையனின் இடத்தில் புதல்வனை
வைக்கிறது.
புலையர்குடியினர்
இறந்தோரை வைத்துப் புதைக்கும் முதுமக்கள்தாழியையும் செய்பவர்களாக இருந்தனர். எனவே
சுடுகாட்டில் புரோகிதம் செய்வது மட்டுமன்றி இடுகாட்டிலும் இவர்கள் பணி
இன்றியமையாததாக இருந்தது. இறுதியடக்கம் செய்ய உதவுவதை இழிவானது என்று நாகரிகம்
படைத்தவர்கள் நினைக்கமாட்டார்கள்.
சுடுகாடு
மற்றும் இடுகாடு குறித்துப் பார்ப்பனியத்தில் உள்ளதுபோல் அருவருப்பு அடைவது
அர்த்தமற்றதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இத்தகைய நல்ல நாகரிகம்
இருந்தது. பார்ப்பனியப் பண்பாட்டால் இந்நாகரிகத்தை நாம் இழந்தோம்.
“கலம்செய் கோவே, கலம்செய் கோவே! வண்டிச் சக்கரத்தில் ஒட்டிக்கொண்டு வந்த பல்லி
போல, என் கணவனோடு பல ஆபத்தான பாதைகளைக்
கடந்து வந்தேன். ஆனால் அவனோ இன்று இறந்துபோனான். அவனைப் புதைக்க ஒரு ஈமத்தாழி
செய்து எனக்குத் தந்தருள். அதையும் சற்றுப் பெரியதாகச் செய்துவிடு– எனக்கும் அதில் இடம் இருக்குமாறு.” இப்படி ஒரு புலையரை இறைஞ்சுகிறாள் ஒரு புறநானூற்றுப் பெண்.
இது ஓர்
அற்புதமான புறப்பாடல் செய்தி (எண்: 256). இதைவிட அற்புதம் ஒரு கைவினைஞன்
போற்றப்பட்டு “கோ”
என அழைக்கப்
பட்டிருப்பது. “அருள்கூர்ந்து தாழியைச் செய்துதா,” என்று புலையனான அவன் தயவு கோரப்படுகிறது.
இவையனைத்தையும்
தொகுத்துப் பார்க்கும்பொழுது பழந்தமிழகத்தில் புலையர் போற்றப்பட்டிருந்தமை
புலனாகும் .இவர்கள் பொதுவாகப் பறையர் ,பாணர் முதலிய குடிகளைச்
சேர்ந்தவர்களாக இருந்தனர்.குடிமக்களும் ,மன்னர்களும் தமக்குள்ள
எத்தனையோ மாறுபாடுகள் இருந்தாலும் இப்புரோகிதரைப் பெரிதும் மதித்தார்கள்.
மெகஸ்தின்
என்னும் கிரேக்கர் சந்திரகுத்த மயூரனின் அரண்மணையில் கி. மு. 302-முதல் சிலகாலம் தங்கியிருந்தார். இவர் இந்தியாவைப்பற்றிய ஒரு
நூல் எழுதியிருந்தார். அதிற் காணப்படும் சில பகுதிகள் அக்கால இந்திய மக்களின்
வாழ்க்கை முறைகளை நன்கு விளக்குவன. அவர் கூறுவன :
இந்தியர் ஏழுவகையாகப் பிரிக்கப்பட்டிருந்தனர்.
தத்துவசாத்திரத்தில் தேர்ந்த ஒரு கூட்டத்தினர் முதற் குலத்தினராகக்
கொள்ளப்பட்டனர். மற்றைக் கூட்டத்தினரைவிட இவர்களின் தொகை குறைவாயிருந்தது. இவர்கள்
எசமானராகவோ வேலைக்காரராகவோ இருக்கவில்லை. மறு உலகத்திற்குரிய பொருள்களை எல்லாம்
இவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள் என மக்கள் நம்பினார்கள். ஆகவே, அவர்கள் இவர்களைப் பிணச்சடங்குகள் புரிவதற்கும் உரிய
காலங்களிற் கடவுட்பலியைச் செலுத்துவதற்கும் அழைத்தார்கள். இவ்வகைக் கிரியைகள்
புரிவதற்குக் கைம்மாறாக இவர்கள் மிகுந்த பொருளைப் பெற்றனர்.(தமிழ் இந்தியா -
யாழ்ப்பாணத்து நவாலியூர்திரு.ந.சி.கந்தையா பிள்ளை, ப -89)
அப்படியெனில்
தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் என்பது எப்படி பூணூல் எனக் கருதப்பட்டது?
தொல்காப்பியர்
குறிப்பிடும் அந்தணர் என்பவர் யார்?
அப்படியெனில்
தொல்காப்பியத்தில் பிற்காலத்தில் வருணம் தொடர்பான பாடல்கள் இடைச்செருகல்கள்
செய்யப்பட்டனவா?
எனில் தொல்காப்பியத்தில்
இடைச்செருகல் – எவை
தொல்காப்பியத்தின் ஒவ்வொரு
இயலிலும் நூற்பாக்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஒழுங்கடுக்கில்
தொடர்பில்லாத சில நூற்பாக்கள் இடையில் வருகின்றன.
அவற்றை அறிஞர்கள் இடைச்செருகல்
எனக் குறிப்பிடுகின்றனர்.
அகத்திணையியலில்,
‘மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே’ என்றும்,
புறத்திணையியலில்,
‘அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின்
அரசர் பக்கமும்
இருமூன்று
மரபின் ஏனோர் பக்கமும்’ என்றும்
கற்பியலில்,
‘மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய
காலமும் உண்டே’ என்றும்
பொருளியலில்,
‘பரத்தை வாயில் நால்வர்க்கு முரித்தே’ என்றும்,
எழுத்ததிகாரத்தில்
எழுத்தை உச்சரிக்கும் ஒலியளவுக்கு இலக்கணமாக,
‘அளபின் கோடல் அந்தணர் மறைத்தே’ என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இவ்வாறாக, மரபியல் தவிர வேறுபல இயல்களிலும் நால் வர்ணம் தொடர்பான, பிராம்மணரின் மறை தொடர்பான சுட்டுகள் உள்ளன..இவற்றை குறித்த
தமிழாய்வாளர்களின் கருத்துக்கள்
1.முனைவர் சி இலக்குவனார் தம் ஆங்கில மொழிபெயர்ப்புத்
தொல்காப்பிய நூலில், மரபியல் பகுதியில் 24 நூற்பாக்களை உடுக்குறி(*)யால் இடைச்செருகல் எனப்
பாகுபடுத்தியுள்ளார்.
மக்களில்
பிறப்பால் வரும் நான்கு வருண உடைமைகளைக் கூறும் நூற்பாக்கள் 15 (71-85)
செய்யுளியலில்
கூறாமல் மரபியலின் இறுதியில் தொடர்பில்லாமல் சேர்க்கப்பட்டிருக்கும் 9 நூற்பாக்கள்ஆக 24 நூற்பாக்கள் இடைச்செருகல் என்கிறார். மேலும், அகத்திணையியலில் பிரிவைப் பற்றிச் சொல்லும்போது, 13 நூற்பாக்களில் (24 முதல் 36) குலப் பிரிவு சேர்க்கப்பட்டுக் குழப்பம் செய்யப்பட்டுள்ளது.
இவையும் இடைச்செருகல்கள் என்பது தெளிவு என்றும்இவை இடைச்செருகல்களேஎன்பதை
உரையாசிரியர்களின் மேற்கோள்களால் அறியலாம்.சங்கநூல் பாடல்களில் இவற்றிற்கான
மேற்கோள் பாடல்கள் இல்லாமல் பண்டைய உரையாசிரியர்களே புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கல விருத்திமுதலான பிற்கால நூல் தரும் பாடல்களைத்
தருகின்றனர்என்றும் விளக்கம் தருகிறார்.
2.அகத்திணையியலில் மக்களை ஆயர், வேட்டுவர் எனப் பகுத்துக் காட்டும் பகுதி தொல்காப்பியருடையது.
சங்கப்பாடல்களில் இத்தகைய பாகுபாடுகளே உள்ளன. நால்வர், உயர்ந்தோர், பின்னோர் எனக் கூறும் 6 நூற்பாக்கள் இடைச்செருகல்.
மரபியலில் ஆண், பெண் விலங்கினங்களின் பெயரைக் கூறிய பின்னர், புல் மர வகைகளின் இலை, பூ, காய் வகைகளை விளக்குவதற்கு முன்னர் இடையில் அந்தணர், அரசர், வைசியர், வேளாண்-மாந்தர் ஆகியோரைப் பற்றிப் பேசும் 15 நூற்பாக்கள் இடைச்செருகல்கள்.
மேலும்
ஆங்காங்கே சங்க காலத்துக்குப் பிற்பட்டபழக்க வழக்கங்களைக் கூறும் சிறுசிறு
மாற்றங்கள் தெளிவாகத் தெரிக்ன்றன.வைசிகன் என்னும் சொல் சங்கநூல்களில் இல்லை.
வணிகன் என்னும் சொல்கூடப் பிற்காலத்தில் சங்கநூல்களைத் தொகுத்தவர் சூட்டிய புலவர்
பெயர்களில் மட்டும் வருகின்றன.வேளாண்-தர் ன்னும் ர““தந்மா ல்லாட்சியும்சொ
.சங்கநூல்களில் இல்லை..
வேளாண்-சிறுபதம் வேளாண்-வாயில் போன்ற
ஒருசில சொற்களும் வேளாண்மைத் தொழிலைக் குறிப்பன அல்ல.வேளாண்மை என வரும் சொல்கூட உதவி செய்தல் என்னும்
பொருளில் மட்டுமே வருகிறது.இந்த நான்கு-சாதிப் பாகுபாட்டைக் காட்டும்
குறிப்புகள்கூடச் சங்கநூல்களில் இல்லை. • INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE
ANCIENNE (1970) (சங்கநூல்
சொல்லடைவு) முயற்சி இல்லாமல் பெற்ற சிற்றுணவு-நீர் -புறம் 74,கொடை வழங்கும் வாயில் பொருநராற்றுப்படை அடி 75 , கலித்தொகை (101-44) (திருக்குறள் 212) எனவே இந்த சான்கு-சாதிப் பாகுபாட்டு முறைகளைக் காட்டும் நூற்பாக்கள்
தொல்காப்பியத்தில் செருகப்பட்டவை.செருகப்பட்டுள்ள இடமும் மேலும் கீழும் உள்ள
நூற்பாக்களைப் பார்க்கும்போது மரபியல் சொற்களுக்குத் தொடர்பில்லாதவை என்பது
விளங்கும். நன்றி.விக்கிப்பீடியா.
3.மின்தமிழ் என்னும் இணையக்குழு விவாதத்தில் சேசாத்திரி
ஸ்ரீதரன் என்பவர், “மரபியலில் நால்வகை வருணம் இடம்
பெற்றிருப்பது இடைச்செருகல் ஆகும். தொல்காப்பியர் எழுதியதில்லை அது. அச்
செய்திகளில் கூறப்படும் இடம், சூழல் ஆகியவற்றை காணும் போது
அது இடைச் செருகல் எனத் தெற்றெனத் தெரியும்.தொல்காப்பியம் பொருளதிகார மரபியலில்
உயிரினங்களை, அவற்றின் பெயர்களை விளக்கிக் கொண்டு
வரும் போது 71 ஆவது நூற்பாவாக வருணம்
பற்றிய செய்தி வருகிறது. அதிலிருந்து 85 ஆவது நூற்பா வரையிலும் அது
தொடர்பான செய்திகளே கூறப்படுகின்றன. 86 ஆவது நூற்பா, விடுபட்டுப் போன மரபியலின்
தொடர்ச்சியாக 'புறக் காழனவே புல்லெனப்படுமே' என விளங்குகிறது. அறிவியல்
செய்திகளுக்கு ஊடாக சமூகவியல் கொள்கை இடம் பெற்றிருப்பது முற்றிலும் பொருத்தமாக
இல்லை. எனவே, வருணம் பற்றிய தொல்காப்பியர் காலத்தில்
ஆரியப் பார்ப்பனர்கள் சமூகச் செல்வாக்கு பெற்ற ஒரு பிரிவாக இல்லவே இல்லை. எனவே
தொல்காப்பியர் நால் வருணம் பற்றி பேச வாய்ப்பில்லை. இடைச்காலத்தைச் சேர்ந்த பாறை
ஓவியங்கள் கிடைத்துள்ளன. அதில் உள்ள உருவங்கள் சிலவற்றில் பூணூல் போன்று
மார்புக்குக் குறுக்கே வரையப்பட்டுள்ளது. அது பூசாரிகளின் ஓவியங்களாக இருக்கலாம்
என அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், பூணூல்
அணிதல் என்பது சூரிய வழிபாடு தொடர்புடைய ஒரு மதச் சின்னம். இஸ்லாமியர்கள் தலையில்
குல்லாய் அணிவது போல இது ஒரு மதச் சின்னம் அவ்வளவே.
பிரவாஹன்
என்பவர்,தொல்காப்பியம் புறத்திணை-இயல் பார்ப்பன பக்கம், அரசர்
பக்கம், ஏனோர் பக்கம் - என்னும் பாகுபாடுகள் தொல்காப்பியத்தின்
பொருளதிகாரத்திலேயே பார்ப்பனரின் முதுகில் பூணூல் மாட்டப்பட்டு விடுகிறது.” என்கிறார். http://www.sooddram.com/Articles/otherbooks/Mar2013/Mar252013_Tamilenthi.htm.
உண்மையில்
தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் பூணூல்தானா?
என்றால் இல்லவே
இல்லை என்பதே ஆய்ந்தபின் கிடைத்த பதில்.
தொல்காப்பியர்
குறிப்பிடும் நூல் பூணூலே அல்ல
தொல்காப்பியர்
குறிப்பிடும் நூல் என்பதை பூணூலாகக் கருதியதன் விளைவே இச்சர்ச்சைகளுக்குக்
காரணம்.பெரும்பாலும் உரையாசிரியர்கள் அனைவரும் நூல் என்பதற்குத் தோளில் அணியும்
பூணூலையேக் குறிப்பதாகக் கருதி உரை வகுத்துள்ளனர். அதை அடிப்படையாகக் கொண்டே
விவாதங்களும் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஆனால், பூணூலைத்தான் நூல் என்ற சொல்
குறிக்கிறதா எனபதை சங்கப் பாடல்களைக் கொண்டு ஆராய்ந்தால், நூல் என்னும் சொல் பூணுலைக் குறிக்கவேயில்லை என்பது தெளிவாகப்
புலப்படும்.
நூற்பாவினை
ஊன்றிக் கவனமாகப் படித்துப் பார்த்தால் ஒரு செய்தி புலப்படும். தொல்காப்பியர்
கையில் எடுத்துச்செல்லும் பொருட்களைத்தான் பட்டியலிடுகிறார்.
நூலே கரகம்
முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க்
குரிய (தொல்.3: 615)
அந்தணராக
இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி பூணூலைக் கையில்
எடுத்துச் செல்ல மாட்டார்கள். தோளில்தான் அணிவார்கள்.ஆனால்,தொல்காப்பியர்,அந்தணர் கையில் எடுத்துச்
செல்லும் பொருட்களாக நூல், கரகம், முக்கோல், மணை முதலானவற்றைக் குறிப்பிடுகிறார்.
கையில் நூலை
எதற்காக எடுத்துச் செல்ல வேண்டும்?
நூலை
அடுத்து கரகம் இடம் பெற்றிருப்பதால், அது கரகத்தை எடுத்துச்
செல்வதற்குரிய நூலையேக் குறிக்கிறது.சங்க இலக்கியப் பாடல்களில் இதற்கு சிறப்பான
உதாரணம் உள்ளது. பல மெல்லிய நூல்களைக் கொண்டு முறுக்கப்பட்ட கயிறு ‘புரிநூல்’ என்று அழைக்கப்பட்டுள்ளது.
இப்புரிநூல் சிறிய பொருட்களைக் கட்டி எடுத்துச் செல்வதற்கு உறியாகப்
பயன்பட்டுள்ளது
முனிவர்கள்
‘கரண்டை’ எனப்படும் சிறிய பானையை நீர்
எடுத்துச் செல்லப் பயன்படுத்தியுள்ளனர். இக்கரண்டையானது கல்லில் பொத்தல் ஏற்படுத்தினாற்
போன்ற சிறிய வாயினை உடையது. கரண்டை கீழே சாய்ந்தாலும் சிறிய அளவு நீரே வீணாகும்.
இக்கரண்டை எனப்படும் சிறிய பானையைப் பல வடங்களுடையப் புரி நூலால் செய்யப்பட்ட
உறியில் வைத்துக் கையில் எடுத்துச் சென்றுள்ளனர். பல வடமுடையப் புரிநூலால் ஆன
உறியானது ‘சிமிலி’ என அழைக்கப்பட்டுள்ளது.
""""கல்பொறிந்தன்ன இட்டு வாய்க் கரண்டைப்
பல்புரிச் சிமிலி நாற்ற நல்கி
வர"" (மதுரைக் காஞ்சி. 483-484)
கல்லினால்
பொத்தல் ஏற்படுத்தினாற் போன்ற சிறிய வாயினையுடைய கரண்டை எனப்படும் சிறிய பானையைப், பல புரிகளுடைய நூலைக்கொண்டு கட்டி, அந்நூலை கையால் பற்றிய படி எடுத்துச்சென்றனர் என்பது இதன்
பொருளாகும். இந்நூல் சிமிலி என்றழைக்கப்பட்டுள்ளது. (கையில் எடுத்துச் செல்லும்
விளக்கையும் சிமிலி என அழைத்திருக்கலாம். அதுவே, ஆங்கிலத்தில்
சிம்னி என வழங்கியிருக்கலாம்.)
மணிமேகலை ‘சிமிலியில்’ கரண்டை எனப்படும் பானையை
வைத்து எடுத்துச் செல்லும் முனிவர்களைச் ‘சிமிலிக் கரண்டையான்’ (மணி. 3: 86) எனக் கூறுகிறது.
கலித்தொகை
‘உறித் தாழ்ந்த கரகம்’(கலி.9) என இதைப் பதிவு செய்துள்ளது. கரகம் என்பது கரண்டையாகும் (சிறிய
பானை).
"எறித்தரு கதிர்தாங்கி
ஏந்திய குடைநீழல்
உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்
நெறிப்படச் சுவல்அசைஇ வேறோரா நெஞ்சத்துக்
குறிப்பேவல் செயல்மாலைக் கொளைநடை அந்தணீர்" (பாலைக்கலி.9)
என்ற வரிகளால்
இதைஅறியலாம்.
தொல்காப்பியர்
எங்குமே தோளில் அணியக்கூடிய நூலைப் பற்றிக் குறிப்பிடவில்லை. கையில்
எடுத்துச்செல்லும் நூலையே குறிப்பிடுகிறார் என்பதை இதிலிருந்து அறியலாம்.
தொல்காப்பியரின்
" வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் (640.641.தொ.பொருள்) என்ற நூற்பாவின் மூலம் பிறப்பாலல்லாமல் தகுதியாலும், புலமையாலும், துறவுத் தன்மையாலும், கற்றறிந்தஅறிஞரையே அந்தணர் என்று கருதியுள்ளார் எனலாம்.
எவ்வருணத்தாராக இருந்தாலும்,துறவு மேற்கொண்டுள்ளவர்கள்
அந்தணர்கள் என அழைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் கையில் எடுத்துச்செல்லும் பொருட்களாக
உறிநூல், சிறிய பானை, முக்கோல்,மனை போன்ற பொருட்கள்
இருந்துள்ளன.பிற்காலத்தில் மண்பானையை விடுத்து,
பித்தளை மற்றும்
செம்பு போன்ற பொருட்கள் புழக்கத்தில் வந்த காலத்து அவ்வுலோகங்களினால் ஆன
கைப்பிடிகள் தூக்கிச்செல்வதற்கேற்ற வகையில் கரகத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
முடிவுரை
தொல்காப்பிய
மரபியல் நூற்பாவில் காணலாகும் ஒரு சொல்லிற்கு உரையாசிரியர்கள், சாதி மற்றும் வருணச்சாயம் பூசி,அதில்
தங்கள் கருத்தை ஏற்றிப் பலவாறாகப் பொருள் கொண்டுள்ளனர். இது தொடர்பாக இன்னும்
விவாதங்கள் நடந்தபடியே இருப்பதுதான் பெரு வியப்பு. நடுநிலைமையோடு அணுகியிருந்தால்
தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் என்பது கரகம் எடுத்துச்செல்ல உதவும் உறிநூலே
என்பது தெற்றன விளங்கும்.
காந்தியார்
தன் சுயசரிதையில் “சூத்திரர்கள் பூணூல் அணிந்து
கொள்ளக்கூடாது என்றால், மற்ற வருணத் தாருக்கு மட்டும்
அதை அணிந்து கொள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று அவர்களுடன் வாதாடினேன்.
பூணூல் அணிந்து கொள்வது தேவையற்ற பழக்கம் என்பது என் கருத்து. சமயங்கள் பல இருந்து
வரும் வரையில், ஒவ்வொரு சமயத்திற்கும் வெளிப்படையான
சின்னம் ஏதாவது அவசியமாக இருக்கலாம். ஆனால்,
அந்தச் சின்னமே
பிரமாதமாக்கப்பட்டு, இன்னொரு மதத்தை விட தன் மதமே உயர்வானது
என்று காட்டுவதற்கு அது பயன் படுத்தப்படுமாயின் அப்பொழுது அச்சின்னம்
புறக்கணிக்கப்படுவதற்கே ஏற்றதாகும்.ஹிந்து சமயத்தை மேன்மைப் படுத்துவதற்கான
சாதனமாக பூணூல் உள்ளது என்று எனக்குத் தோன்றவில்லை. ஆகையால், அதில் எனக்குக் கவலையும் இல்லை”என்கிறார்.
தொல்காப்பியர் "வினையின் நீங்கி விளங்கிய அறிவு"(தொல். மரபு. 95) எனக் குறிப்பாக உணர்த்துவதில்
இருந்து யாரும் முனைவனாருவாக வரலாம் என்பது தெரிகிறது. இது பிறப்பில் அல்லாமல்
அறிவாற்றலில் உள்ளது என்கிறார். எனவே, தொல்காப்பியர் குறிப்பிடும்
நூல் என்பது பூணூல் அல்ல என்பது தெளிவு. நூல் என்று மரபியலில் குறிப்பிடும் சொல்
கையில் எடுத்துச் செல்லும் நூலையேக் குறிப்பதால் அது கரண்டையைத் தாங்கும் நூலாக
இருக்கலாம் அல்லது ஓலைச் சுவடியாக இருக்கலாம்.