அழகே அழகே . . . . . தேவதை
அப்போதுதான் வந்து சேர்ந்திருந்தாள் விமலா. அவளுடைய கல்லூரி விடுதி வாழ்க்கை ஆரம்பித்தாகி விட்டது. எல்லாமே அவளுக்குப் புதுமையாகத் தெரிந்தன. முன்பே இளங்கலைப் பாடத்தைத் தன் சொந்த ஊரில் படித்திருந்தாள். இப்போது முதுகலை படிக்க கோவை வந்திருந்தாள்.
நான்கு மணிநேரம் பயணம் செய்து புதிய ஊரில் அதுவும் தங்கிப் படிக்கும் ஒரு கல்லூரியில் படிக்க வந்திருக்கிறாள். அவள் இளங்கலையில் பெற்ற மதிப்பெண்கள், அவள் படித்த கல்லூரி அவளைப் பாராட்டி பேசிய பேச்சுக்களைக் கேட்டதினால் மனம் நெகிழ்ந்த அவள் தந்தை தன் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டு அவளை தொலைதூரத்திற்கு படிக்க அனுப்ப சம்மதித்திருக்கிறார். அவளுக்கு படிப்பைவிட இன்னும் நல்லபெயர் எடுக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய எண்ணம்.
பாவாடை தாவணி போட்டிருந்த அவளை வராண்டாவைத் தாண்டிச் சென்ற சுடிதார் போட்ட மாணவர்கள் ஒருவிதமாகப் பார்த்துச் செல்வதை அவளும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். ஒருவழியாக அவளுக்கு அறை ஒதுக்கப்பட்டு விட்டது. இருபேர் தங்கும் அறை இன்னொரு மாணவி யாரென்று தெரியவில்லை. அப்பா பிரிய மனமில்லாமல் பிரிந்து செல்வதை கனத்த இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அறைக்குத் திரும்பினாள்.
பூட்டிய அறை திறந்திருந்தது. திகைத்துப் போய் உள்ளே வேகமாக நுழைந்தாள். உள்ளே இருந்த பெண்ணைப் பார்த்துத் திகைத்துப் போனாள். ஓல்லியாக உயரமாக அழகாக நல்ல ரோஜாப்பூ வண்ணத்தில் ஒரு பெண் கண்ணாடி முன் நின்றிருந்தாள். அழகோ அழகு. விமலாவிற்கு வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை. கண்ணாடியில் தெரிந்த விமலாவின் பிம்பத்தைக் கண்டு, இந்த ரூமில்தான் தங்கியிருக்கிறேன். எம்.எஸ்.ஸி பிலாக்ஸ். நீங்க. . . . . ""என்றாள் முகம் நிறைய புன்னகையுடன். விமலா சுய நினைவிற்கு வந்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அன்றிலிருந்து விமலாவிற்கு நன்றாகப் பொழுது போகியது. ஸ்ருதி கலகலப்பாக பேசினாள். அவளைத் தேடி பக்கத்து அறைகளிலிருந்து தோழியர் வந்தனர். விமலாவையும் தன் தோழியர் அறைக்கு அழைத்துச் சென்றாள். ஓரிரு நாட்களிலேயே அனைவரும் தெரிந்தவர்களாகி விட்டனர்.
ஸ்ருதியிடம் ஒரு பழக்கம் எப்போதும் ‘மேக்கப்புடன்’ இருப்பது. காலையில் குளித்து மேக்கப் ஒருமணிநேரம் நடக்கும். அத்தனை விதமான கிரீம்களை விமலா பார்த்ததே இல்லை. ஒவ்வொரு கிரீமிற்கும் ஒரு பயனைச் சொன்னாள். விமலாவிற்கு ஒரு விசயம் புரியவில்லை. ஸ்ருதி மிகவும் அழகான பெண். எதற்கு இத்தனை அலங்காரம்? விமலா தன் குடும்பத்தை நினைத்துக் கொண்டாள். பெற்றோரிடம் விலை அதிகமான ஒரு புத்தகத்தைக் கேட்பதற்குக் கூட அவள் தயங்கினாள். அவள் விடுதியில் தங்கிப் படிப்பதற்கும், பயணச் செலவிற்குமே அவள் குடும்பம் தடுமாறிக் கொண்டிருந்தது. உதவித் தொகை கிடைக்குமா எனக் கேட்க வேண்டும் என நினைத்திருந்தாள்.
அன்றிலிருந்து மூன்றுமாதம் பொழுது போனதே தெரியவில்லை. புதிய கல்லூரி. புதிய ஆசிரியர்கள், புதிய பாடமுறை, புதிய நண்பர்கள் என கல்லூரியும் கொஞ்சம் கொஞ்சமாக புரியத் தொடங்கியிருந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை ஸ்ருதி கேட்டாள். அருகிலுள்ள முருகன் குடிகொண்டுள்ள மலைக்கு சென்று வரலாமா என்று, விமலா மகிழ்ச்சியோடு ஒத்துக் கொண்டாள். இரண்டு கி.மீ. தூரம்தான் என்பதால் காலைவேளை நடந்தே சென்றார்கள். நடைப்பயணம் இனிய பயணமாக இருந்தது. பேருந்துகளும், வண்டிகளும் சர் சர் எனத் தாண்டிப் போய்க் கொண்டே இருந்தன. மலையடிவாரம் வந்து சேர்ந்துவிட்டார்கள். மலைச்சரிவில் ஒரு இடையன் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தான். பெரியதும் சிறியதுமாக பல ஆடுகள். விமலா குட்டி ஆடுகளை பார்த்து ஸ்ருதியிடம் காட்டினாள்.
‘பார் சுருதி அந்த குட்டி ஆடுகள் எவ்வளவு அழகாகத் துள்ளிக் குதிக்கின்றன. எவ்வளவு அழகு’ அவள் மனம் நிறைந்துவிட்டது. தன் கிராமத்தில் இருப்பது போல் உணர்ந்தாள். அவளுக்கு அந்த கல்லூரியில் ஒரு இடர்ப்பாடு இருந்தது. மற்ற மாணவிகளைப் பார்க்கும் பொழுது தான் மிகச் சாதாரணம் அழகிலும் வசதியிலும் என்று தாழ்வு மனப்பான்மை இருந்தது. ஸ்ருதி தனக்குத் தோழியாகக் கிடைத்ததை பெரும் பாக்கியம் என நினைத்திருந்தாள். மிகச்சிறந்த அழகியும், நாகரிகமுள்ள நடத்தையும் கொண்டிருந்த ஸ்ருதியுடன் இருப்பதால் தன் செல்வாக்கும் உயர்ந்து விட்டதாக நினைத்துச் சமாதானப்படுத்தக் கொண்டிருந்தாள். ஸ்ருதி அழகாக தன்னை அலங்கரித்துக் கொள்வதைக் கூட இரசித்துப் பார்ப்பாள். என்னதான் ஸ்ருதி அழகாக இருந்தாலும், தன் அழகை எவ்வளவு நேரம்தான் கண்ணாடியில் நின்று பார்க்க முடியும்? ஆனால் அவள் அழகை அவளுடனே இருப்பதால் தான் பார்த்து இரசிக்க நிறைய நேரமிருப்பதால் தானே அதிர்ஷ்டசாலி என விமலா நினைத்துக் கொண்டிருந்தாள்.
இந்த அழகிய மலையடிவாரத்தில் அழகிய குட்டி ஆடுகளைப் பார்த்ததும் விமலாவின் மனம் மிகவும துள்ளியது. இனிமையான காற்றும், பச்சைப் புல்வெளிகளும் அவளை மெய்மறக்கச் செய்திருந்தது. அப்போது ஸ்ருதி சொன்னாள். ‘ஆமாம் அழகான குட்டி ஆடுகள். இதை சமைச்சு சாப்பிட்டா ரொம்ப ருசியாயிருக்கும். இளங்கறி வறுவல்னா எனக்கு உசிரு’ என்றாள். விமலா காலடியில் எதுவோ நழுவுவதுபோல் இருந்தது. விக்கித்து நின்று விட்டாள். அப்போது அவர்களைக் கடந்த வண்டியிலிருந்து ஒரு பாடல் வழிந்து அவள் காதுகளில் நிறைந்தது. ‘நான் யார் என் உள்ளம் யார். . . .’