நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 27 December 2013

சிலப்பதிகாரம் 21. வஞ்சின மாலை

21. வஞ்சின மாலை
கோப்பெருந்தேவியை நோக்கிக் கண்ணகி கூறுதல்

‘கோவேந்தன் தேவி! கொடுவினை ஆட்டியேன்
யாவும் தெரியா இயல்பினேன் ஆயினும்,
முற்பகல் செய்தான் பிறன் கேடு தன் கேடு
பிற்பகல் காண்குறுhஉம் பெற்றிய - காண்;

கற்புடை மங்கையர் எழுவர் வரலாறு


நல் பகலே,                                    5
வன்னி மரமும் மடைப்பளியும் சான்றாக
முன் நிறுத்திக் காட்டிய மொய் குழலாள்; பொன்னிக்
கரையில், """"மணல் பாவை நின் கணவன் ஆம்""""  என்று,
உரைசெய்த மாதரொடும் போகாள், திரை வந்து
அழியாது சூழ்போக, ஆங்கு உந்தி நின்ற
வரி ஆர் அகல் அல்குல் மாதர்; உரைசான்ற                                        10
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன்-
தன்னைப் புனல் கொள்ள, தான் புனலின் பின் சென்று,
""""கல் நவில் தோளாயோ!"""" என்ன, கடல் வந்து,
முன் நிறுத்திக் காட்ட, அவனைத் தழீ இக்கொண்டு,
பொன் அம் கொடி போலப் போதந்தாள்; மன்னி,                                    15
மணல் மலி பூங் கானல் வரு கலன்கள் நோக்கி,
கணவன் வரக் கல் உருவம் நீத்தாள்; இணை ஆய
மாற்றாள் குழவி விழ, தன் குழவியும் கிணற்று
வீழ்த்து, ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள்; வேற்றொருவன்
நீள் நோக்கம் கண்டு, """"நிறை மதி வாள் முகத்தைத்                                20
தான் ஓர் குரக்கு முகம் ஆக!"""" என்று, போன
கொழுநன் வரவே, குரக்கு முகம் நீத்த
பழு மணி அல்குல் பூம் பாவை; """"விழுமிய,
பெண் அறிவு என்பது பேதைமைத்தே என்று உரைத்த
நுண் அறிவினோர் நோக்கம்; நோக்காதே, எண் இலேன்,                            25
வண்டல் அயர்விடத்து, யான் ஓர் மகள் பெற்றால்,
ஒண்-தொடி! நீ ஓர் மகன் பெறின், கொண்ட
கொழுநன் அவளுக்கு என்று, யான் உரைத்த மாற்றம்
கெழுமியவள் உரைப்பக் கேட்ட விழுமத்தான்
சிந்தை நோய் கூரும், திருவிலேற்கு"""" என்று எடுத்து,                                30
தந்தைக்குத் தாய் உரைப்பக் கேட்டாளாய், முந்தி, ஓர்
கோடிக் கலிங்கம் உடுத்து, குழல் கட்டி,
நீடித் தலையை வணங்கி, தலை சுமந்த
ஆடகப் பூம் பாவை - அவள்; போல்வார் நீடிய
மட்டு ஆர் குழலார் பிறந்த பதிப் பிறந்தேன்;                                        35

அரசோடு மதுரையையும் அழிப்பேன் என்று கண்ணகி கூறி, நீங்குதல்

பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில்,
ஒட்டேன்; அரசோடு ஒழிப்பேன் மதுரையும்! என்
பட்டிமையும் காண்குறுவாய் நீ’ என்னா, விட்டு அகலா-

கண்ணகி தன் இடமுலையைத் திருகி எடுத்து, மதுரையின்மீது எறிதல்

‘நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்,
கூhனக் கடவுளரும், மாதவரும், கேட்டீமின்;                                        40
யான் அமர் காதலன்- தன்னைத் தவறு இழைத்த
கோநகர் சீறினேன்; குற்றமிலேன் யான்’ என்று,
இட முலை கையால் திருகி, மதுரை
வலமுறை மும் முறை வாரா, அலமந்து,
மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து,                                    45
விட்டாள் எறிந்தாள், விளங்கு இழையாள்-

கண்ணகியின் முன் அக்கினித் தெய்வம் தோன்றி வினவுதல்

வட்டித்த
நீல நிறத்துத் திரி செக்கர் வார் சடைப்
பால் புரை வெள் எயிற்றுப் பார்ப்பனக் கோலத்து,
மாலை எரி அங்கி வானவன் - தான் தோன்றி,
‘மா பத்தினி! நின்னை மாணப் பிழைத்த நாள்                                    50
பாய் எரி இந்தப் பதிஊட்ட, பண்டே ஓர்
ஏவல் உடையேனால்; யார் பிழைப்பார், ஈங்கு?’ என்ன-

கண்ணகியின் கட்டளையால் மதுரையில் தீ எழல்

‘பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்,
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டு,
தீத் திறத்தார் பக்கமே சேர்க’ என்று, காய்த்திய                                    55
பொன்-தொடி ஏவ, புகை அழல் மண்டிற்றே-
நல் தேரான் கூடல் நகர்.

வெண்பா

பொற்பு வழுதியும், தன் பூவையரும், மாளிகையும்,
வில் பொலிவும் சேனையும், மா வேழமும், கற்பு உண்ண;
தீத் தரு வெங் கூடல் தெய்வக் கடவுளரும்
மாத்துவத்தான் மறைந்தார் மற்று.

22. அழல் படு காதை

மன்னவன் மாண்டதை அறியாமல், அவையோர் அசைவுற்றிருத்தல்

ஏவல் தெய்வத்து எரி முகம் திறந்தது;
காவல் தெய்வம் கடைமுகம் அடைந்தன;
அரைசர் பெருமான், அடு போர்ச் செழியன்
வளை கோல் இழுக்கத்து உயிர் ஆணி கொடுத்து, ஆங்கு,
இரு நில மடந்தைக்குச் செங்கோல் காட்ட,                                        5
புரை தீர் கற்பின் தேவி - தன்னுடன்
அரைசுகட்டிலில் துஞ்சியது அறியாது;
ஆசான், பெருங்கணி, அறக்களத்து அந்தணர்,
காவிதி, மந்திரக்கணக்கர்-தம்மொடு,
கோயில் மாக்களும், குறுந் தொடி மகளிரும்,                                        10
ஓவியச் சுற்றத்து உரை அவிந்து இருப்ப-

மன்னவன் கோயிலில் தீயைக்கொண்டு, காவலர் முதலியோர் நீங்குதல்

காழோர், வாதுவர், கடுந் தேர் ஊருநர்,
வாய் வாள் மறவர், மயங்கினர் மலிந்து,
கோமகன் கோயில் கொற்ற வாயில்
நீ முகம் கண்டு, தாம் விடைக்கொள்ள-                                            15

பிராமண பூதம்

நித்திலப் பைம் பூண் நிலாத் திகழ் அவிர் ஒளி,
தண் கதிர் மதியத்தன்ன மேனியன்;
ஒண் கதிர் நித்திலம் பூணொடு புனைந்து,
வெண் நிறத் தாமரை, அறுகை, நந்தி, என்று                                        20
 இன்னவை முடித்த நல் நிறச் சென்னியன்;                                       
நுரை என விரிந்த நுண் பூங் கலிங்கம்
புலராது உடுத்த உடையினன்; மலரா
வட்டிகை, விளம்பொரி, வன்னிகை, சந்தனம்,
கொட்டமோடு அரைத்துக் கொண்ட மார்பினன்;
தேனும் பாலும், கட்டியும், பெட்பச்                                                25
சேர்வன பெறுhஉம் தீம் புகை மடையினன்;
தீர்த்தக் கரையும், தேவர் கோட்டமும்,
ஓத்தின் சாலையும், ஒருங்குடன் நின்று,
பின்பகல் பொழுதில் பேணினன் ஊர்வோன்;
நன் பகல் வர அடி ஊன்றிய காலினன்;                                            30
விரி குடை, தண்டே, குண்டிகை, காட்டம்,
பிரியாத் தருப்பை, பிடித்த கையினன்;
நாவினும் மார்பினும் நவின்ற நுhலினன்;
முத் தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ,
வேத முதல்வன் வேள்விக் கருவியோடு,                                        35
ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும்-

அரச பூதம்

வென்றி வெங் கதிர் புரையும் மேனியன்;
குன்றா மணி புனை பூணினன்; பூணொடு
முடிமுதல் கலன்கள் பூண்டணன்; முடியொடு                                        40
சண்பகம், கருவிளை, செங் கூதாளம்,
தண் கமழ் பு நீர்ச் சாதியோடு இனையவை
கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும்,
ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன்;
அங்குலி கையெறிந்து அஞ்சுமகன் விரித்த                                        45
குங்கும வருணம் கொண்ட மார்பினன்;
பொங்கு ஒளி அரத்தப் பூம் பட்டு உடையினன்;
முகிழ்த்த கைச்
சாலி அயினி  பொன் கலத்து ஏந்தி,
ஏலும் நல் சுவை இயல்புளிக் கொணர்ந்து,
வெம்மையின் கொள்ளும் மடையினன்; செம்மையின்                                50
பவளச் செஞ் சுடர் திகழ் ஒளி மேனியன்;
ஆழ் கடல் ஞாலம் ஆள்வோன்-தன்னின்,
முரைசொடு வெண்குடை, கவரி, நெடுங் கொடி,
உரைசால் அங்குசம், வடி வேல், வடிகயிறு,
என இவை பிடித்த கையினன் ஆகி,                                            55
எண்-அரும் சிறப்பின் மன்னரைஓட்டி,
மண்ணகம் கொண்டு, செங்கோல் ஓச்சி,
கொடுந் தொழில் கடிந்து, கொற்றம் கொண்டு;
நடும் புகழ் வளர்த்து, நானிலம் புரக்கும்
உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன                                            60
அரைச பூதத்து அரும் திறல் கடவுளும்-

வணிக பூதம்

செந் நிறப் பசும் பொன் புரையும் மேனியன்;
மன்னிய சிறப்பின் மற வேல் மன்னவர்
அரைசு முடி ஒழிய அமைத்த பூணினன்;
வாணிக மரபின் நீள் நிலம் ஓம்பி,                                                65
நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன்
உரைசால் பொன் நிறம் கொண்ட உடையினன்;
வெட்சி, தாழை, கள் கமழ் ஆம்பல்,
சேடல், நெய்தல், பூளை, மருதம்,
கூட முடித்த சென்னியன்; நீடு ஒளிப்                                            70
பொன் என விரிந்த நல் நிறச் சாந்தம்-
தன்னோடு புனைந்த மின் நிற மார்பினன்;
கொள்ளும், பயறும், துவரையும், உழுந்தும்,
நன்னியம் பலவும் நயந்து உடன் அளைஇ,
‘கொள்’ எனக் கொள்ளும் மடையினன்; புடைதரு                                    75
நெல் உடைக் களனே, புள் உடைக் கழனி,
வாணிகப் பீடிகை, நீள் நிழல் காஞ்சி,
பாணி கைக்கொண்டு, முற்பகல் பொழுதின்
உள் மகிழ்ந்து உண்ணுவோனே; அவனே
நாஞ்சில் அம் படையும், வாய்ந்து உறை துலா முன்                                    80
சூழ் ஒளித் தாலும், யாழும் ஏந்தி,
விளைந்து பதம் மிகுந்து, விருந்து பதம் தந்து,
மலையவும் கடலவும் அரும் பலம் கொணர்ந்து,
விலைய ஆக வேண்டுநர்க்கு அளித்து, ஆங்கு,
உழவு தொழில் உதவும் பழுது இல் வாழ்க்கைக்                                    85
கிழவன் என்போன் கிளர் ஒளிச் சென்னியின்
இளம் பிளை சூடிய இறைவன் வடிவின் ஓர்
விளங்கு ஒளிப் பூத வியன் பெரும் கடவுளும்-

வேளாண் பூதம்

கருவிளை புரையும் மேனியன்; அரியொடு
வெள்ளி புனைந்த பூணினன்; தென் ஒளிக்                                        90
காழகம் செறிந்த உடையினன்; காழ் அகில்
சாந்து புலர்ந்து அகன்ற மார்பினன்; ஏந்திய
கோட்டினும், கொடியினும், நீரினும், நிலத்தினும்,
காட்டிய பூவின் கலந்த பித்தையன்;
கம்மியர் செய்வினைக் கலப்பை ஏந்தி,                                            95
செம்மையின் வரூஉம் சிறப்புப் பொருந்தி,
மண்ணுறு திரு மணி புரையும் மேனியன்;
ஒண் நிறக் காழகம் சேர்ந்த உடையினன்;
ஆடற்கு அமைந்த அவற்றொடு பொருந்தி,
பாடற்கு அமைந்த பல துறை போகி,                                            100
கலி கெழு கூடல் பலி பெறு பூதத்
தலைவன் என்போன்-தானும்-

நால் வகை வருண பூதமும் நீங்குதல்

தோன்றி,
கோமுறை பிழைத்த நாளில், இந் நகர்
தீ முறை உண்பது ஓர் திறன் உண்டு என்பது                                        105
ஆம் முறையாக அறிந்தனம் ஆதலின்,
யாம் முறை போவது இயல்பு அன்றோ?’என,
கொங்கை குறித்த கொற்ற நங்கை முன்
நால் பால் பூதமும் பால்பால் பெயர-

மறவோர் சேரியில் எரி பரவுதல்

கூல மறுகும், கொடித் தேர் வீதியும்,                                           
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும்,                                        110
உரக் குரங்கு உயர்த்த ஒண் நிலை உரவோன்
கா எரிஊட்டிய நாள் போல் கலங்க,
அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது,
மறவோர் சேரி மயங்கு எரி மாண்ட-

நெருப்பினால் நேர்ந்த துன்பம்
மிருகங்களின் நிலை

கறவையும கன்றும், கனல் எரி சேரா,                                            115
அறவை ஆயர் அகன் தெரு அடைந்தன;
மற வெங் களிறும், மடப் பிடி நிறைகளும்,
விரை பரிக் குதிரையும், புறமதில் பெயர்ந்தன;

மடந்தையரிண் நிலை

சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை
மைத் தடங் கண்ணார், மைந்தர்-தம்முடன்,                                        120
செப்பு வாய் அவிழ்ந்த தேம் பொதி நறு விரை
நறுமலர் அவிழ்ந்த நாறு இருமுச்சித்
துறு மலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள்,
குங்குமம் எழுதிய கொங்கை முன்றில்
பைங் காழ் ஆரம், பரிந்தன பரந்த                                                125
தூ மென் சேக்கை, துனிப் பதம் பாராக்
காமக் கள்ளாட்டு அடங்கினர் மயங்க;
குழந்தைகளுடன் மகளிர் வெளியேறுதல்

திதலை அல்குல் தேம் கமழ் குழலியர்
குதலைச் செவ் வாய்க் குறு நடைப் புதல்வரொடு
பஞ்சி ஆர் அமளியில் துஞ்சு துயில் எடுப்பி,                                        130
வால் நரைக் கூந்தல் மகளிரொடு போத;

இல்லறம் வழுவாத மகளிர்

வரு விருந்து ஓம்பி மனையறம் முட்டாப்
பெரு மனைக் கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி,
‘இலங்கு பூண் மார்பின் கணவனை இழந்து,
சிலம்பின் வென்ற சேயிழை நங்கை
கொங்கைப் பூசல் கொடியதோ அன்று’ என,                                        135
பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர்;

நாடக மடந்தையர்

எண்-நான்கு இரட்டி இருங் கலை பயின்ற
பண் இயல் மடந்தையர் பயம் கெழு வீதி,
தண்ணுமை, முழவம், தாழ்தரு தீம் குழல்,
பண்ணுக் கிளை பயிரும் பண் யாழ்ப் பாணியொடு,                                140
நாடக மடந்தையர் ஆடு அரங்கு இழந்து, ஆங்கு,
‘எந் நாட்டான்கொல்? யார் மகள்கொல்லோ?
இந் நாட்டு இவ் ஊர் இறைவனை இழந்து,
தேரா மன்னனைச் சிலம்பின் வென்று, இவ்                                        145
ஊர் தீஊட்டிய ஒரு மகள்’ என்ன-

நித்திய கருமம் நடைபெறாதொழிதல்

அந்தி விழவும், ஆரணஓதையும்,
செந் தீ வேட்டலும், தெய்வம் பரவலும்,
மனை விளக்குறுத்தலும், மாலை அயர்தலும்,
வழங்கு குரல் முரசமும், மடிந்த மா நகர்-                                        150

கண்ணகியின் முன் மதுராபதித் தெய்வம் தோன்றுதல்

காதலன் கெடுத்த நோயொடு உளம் கனன்று,
ஊது உலைக் குருகின் உயிர்த்தனள்; உயிர்த்து,
மறுகிடைமறுகும், கவலையில் கவலும்,
இயங்கலும் இயங்கும், மயங்கலும் மயங்கும்,
ஆர் அஞர் உற்ற வீரபத்தினிமுன்,                                                155
கொந்து அழல் வெம்மைக் கூர் எரி பொறாஅள்
வந்து தோன்றினள் மதுராபதி - என்.




வெண்பா

மாமகளும், நாமகளும், மா மயிடன் செற்று உகந்த
கோமகளும், தாம் படைத்த கொற்றத்தாள்; நாம
முதிரா முலை குறைத்தாள்; முன்னரே வந்தாள்-
மதுராபதி என்னும் மாது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?