நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday, 27 December 2013

சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம் 24. குன்றக் குரவை

மூன்றாவது
வஞ்சிக் காண்டம்
24. குன்றக் குரவை
உரைப் பாட்டு மடை

குறவர் கண்ணகியை வினவுதல்

குருவி ஓப்பியும் கிளி கடிந்தும்
குன்றத்துச் சென்று வைகி,
அருவி ஆடியும் சுனை குடைந்தும்
அலவுற்று வருவேம் முன்,
மலை வேங்கை நறு நிழலின்,
வள்ளி போல்வீர்! மனம் நடுங்க,
முலை இழந்து வந்து நின்றீர்;
யாவிரோ?’ என-


கண்ணகி உரைத்த விடை

முனியாதே,
‘மண மதுரையோடு அரசு கேடுற
வல் வினை வந்து உருத்தகாலை,                                                5
கணவனை அங்கு இழந்து போந்த
கடு வினையேன் யான்’ என்றாள்.

கண்ணகி தன் கணவனுடன் வான ஊர்தியில் செல்லக் கண்ட குன்றக்குறவர்கள்
அவளைத் தெய்வமாகக் கருதி, வழிபடுதல்

என்றலும், இறைஞ்சி, அஞ்சி,
இணை வளைக் கை எதிர் கூப்பி,
நின்ற எல்லையுள், வானவரும்
நெடு மாரி மலர் பொழிந்து,
குன்றவரும் கண்டு நிற்ப,
கொழுநனொடு கொண்டு போயினார்;
இவள் போலும் நம் குலத்துக்கு ஓர்
இருந் தெய்வம் இல்லை; ஆதலின்,                                                10
சிறுகுடியீரே! சிறுகுடியீரே!
தெய்வம் கொள்ளுமின், சிறுகுடியீரே!
பிறம் கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை,
நறுஞ் சினை வேங்கை நல் நிழல்கீழ், ஓர்
தெய்வம் கொள்ளுமின், சிறுகுடியீரே!                                            15
தொண்டகம் தொடுமின்; சிறுபறை தொடுமின்;
கோடு வாய் வைம்மின்; கொடு மணி இயக்குமின்;
குறிஞ்சி பாடுமின்; நறும் புகை எடுமின்;
பூப் பலி செய்ம்மின்; காப்புக்கடை நிறுமின்;
பரவலும் பரவுமின்; விரவு மலர் தூவுமின்-                                        20
ஒரு முலை இழந்த நங்கைக்கு,
பெரு மலை துஞ்சாது வளம் சுரக்க எனவே,

கொளுச் சொல்

ஆங்கு ஒன்று காணாய், அணி - இழாய்! ஈங்கு இது காண்;
அஞ்சனப் பூழி, அரி தாரத்து இன் இடியல்,
சிந்துரச் சுண்ம் செயித் தூய், தேம கமழ்ந்து,
இந்திரவில்லின் எழில் கொண்டு, இழும் என்று
வந்து, ஈங்கு, இழியும் மலை அருவி ஆடுதுமே.                                    2

ஆடுதுமே, தோழி! ஆடுதுமே, தோழி!
‘அஞ்சல் ஓம்பு’ என்று, நலன் உண்டு நல்காதான்
மஞ்சு சூழ் சோலை மலை அருவி ஆடுதுமே.                                        3

தலைவன் சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது

எற்று ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைக்
கல் தீண்டி வந்த புதுப் புனல்;
கல் தீண்டி வந்த புதுப் புனல் மற்றையார்
உற்று ஆடின் நோம், தோழி! நெஞ்சு - அன்றே.                                    4

என் ஒன்றும் காணேம் புலத்தல் , அவர் மலைப்
பொன் ஆடி வந்த புதுப் புனல்;
பொன் ஆடி வந்த புதுப் புனல் மற்றையார்
முன் ஆடி நோம், தோழி! நெஞ்சு - அன்றே.                                        5

யாது ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைப்
போது ஆடி வந்த புதுப் புனல்;
போது ஆடி வந்த புதுப் புனல் மற்றையார்
மீது ஆடின் நோம், தோழி! நெஞ்சு- அன்றே.                                        6

பாட்டு மடை

உரை இனி, மாதராய்! ஊண் கண் சிவப்ப,
புரை தீர் புனல் குடைந்து ஆடின், நேரம் ஆயின்,
உரவுநீர் மா கொன்ற வேல்-ஏத்தி,
குரவை தொடுத்து, ஒன்று பாடுகம் வா, தோழி!                                    7

வரைவு முடிதல் வேண்டித் தெய்வம் பராயது

சீர் கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்,
ஏரகமும், நீங்கா இறைவன் கை வேல் - அன்றே-
பார் இரும் பளவத்தினுள் புக்கு, பண்டு ஒருநாள்,
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே.                                        8

அணி  முகங்கள் ஓர் ஆறும், ஈர் - ஆறுகையும்,
இணை இன்றித் தான் உடையான் ஏந்திய வேல்-அன்றே-
பிணிமுகம் மேற்கொண்டு, அவுணர் பீடு அழியும்வண்ணம்
மணி விசும்பும் கோன் ஏத்த, மாறு அட்ட வெள் வேலே.                                9

சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்
திரு முலைப் பால் உண்டான் திருக் கை வேல் - அன்றே -
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து,
குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடு வேலே.                                    10

தலைவி அறத்தொடு நிற்றல்

இறை வளை நல்லாய்! இது நகை ஆகின்றே-
கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க
அறியாள் மற்று அன்னை, அலர் கடம்பன் என்றே,
வெறியாடல் தான் விரும்பி, ‘வேலன், வருக’ என்றாள்!                                11

ஆய் வளை நல்லாய்! இது நகை ஆகின்றே-
மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்!
வரும்ஆயின் வேலன் மடவன்; அவனின்
குருகு பெயர்க் குன்றம் கொன்றாள் மடவன்.                                        12

செறி வளைக் கை நல்லாய்! இது நகை ஆகின்றே-
வெளி கமழ் வெற்பன் நோய்  தீர்க்க வரும் வேலன்!
வேலன் மடவன்; அவனினும் தான் மடவன்,
ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும்ஆயின்.                                        13

நேர் இழை நல்லாய்! நகை ஆம்-மலை நாடன்
மார்பு தரு வெந் நோய் தீர்க்க வரும் வேலன்!
தீர்க்க வரும்வேலன் - தன்னினும் தான் மடவன்,
கார்க் கடப்பந் தார் எம் கடவுள் வரும்ஆயின்.                                        14

தலைவன் சிறைப்புறத்தானுகத் தோழி கூறுயது

வேலனார் வந்து வெறியாடும் வெங் களத்து,
நீலப் பறவைமேல் நேர் - இழை - தன்னோடும்
ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும்; வந்தால்,
மால் வரை வெற்பன் மண அணி வேண்டுதுமே.                                    15

கயிலை நல் மலை இறை மகனை! நின் மதி நுதல்
மயில் இயல் மடவரல்மலையர் - தம் மகளார்,
செயலைய மலர் புரை திருவடி தொழுதேம்-
அயல் - மணம் ஒழி; அருள், அவர் மணம் எனவே,                                    16

மலைமகள் மகனை! நின் மதி நுதல்மடவரல்
குல மலை உறைதரு குறவர் - தம் மகளார்,
நிலை உயர்கடவுள்! நின் இணை அடி தொழுதேம்-
பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே.                                        17

குறமகள் அவள் எம் குலமகள் அவளொடும்,
அறுமுக ஒருவ! பின் அடி இணை தொழுதேம்-
துறைமிசை நினது இரு திருவடி தொடுநர்
பெறுக நல் மணம்; விடு பிழை மணம் எனவே,                                    18

தோழி தலைமகனுக்கு அலர் அறிவுறுத்தி, வரைவுகடாதல்

என்று யாம் பாட, மறை நின்று கேட்டருளி,
மன்றல் அம் கண்ணி மலை நாடன் போவான் முன்
சென்றேன்; அவன் - தன் திருவடி கைதொழுது
நின்றேன் உரைத்தது கேள்; வாழி, தோழி!                                        19

‘கடம்பு சூடி, உடம்பிடி ஏந்தி,
மடந்தை பொருட்டால் வருவது இவ் ஊர்;
அறுமுகம் இல்லை; அணி மயில் இல்லை;
குறமகள் இல்லை; செறி தோள் இல்லை;
கடம் பூண் தெய்வமாக நேரார்,
மடவர் மன்ற, இச் சிறுகுடியோரே.’                                                20

தலைமகளுக்குத் தோழி வரைவு கூறுதல்

என்று, ஈங்கு,
அலர் பாடு பெற்றமை யான் உரைப்பக் கேட்டு,
புலவர் வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன
மலர் தலை வெற்ன் வரைவானும் போலும்;
முலையினால் மா மதுரை கோள் இழைத்தாள் காதல்
தலைவனை வானோர் தமராரும் கூடி,
பலர் தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த
நிலை ஒன்று பாடுதும் யாம்.                                                    21

பாடுகம் வா, தோழி, வாழி! யாம் பாடுகம்;
பாடுகம் வா, வாழி, தோழி! யாம் பாடுகம்;
கோமுறை நிங்கக் கொடி மாடக் கூடலைத்
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம்;
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுங்கால்,
மா மலை வெற்பன் மண அணி வேண்டுதுமே.                                    22

பாடு உற்று,
பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாள் ஓர்
பைத்தரவு அல்குல் நம் பைம் புனத்து உள்ளாளே;
பைத்தரவு அல்குல் கணவனை வானோர்கள்
உய்த்துக் கொடுக்கும் உரையோ ஒழியாரே.                                        23

வானவ வாழ்க்கை அமரர் தொழுது ஏத்த,
கான நறு வேங்கைக் கீழாள் ஓர் காரிகையே;
கான நறு வேங்கைக் கீழாள் கணவனொடும்
வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே.                                        24

மறுதரவு இல்லாளை ஏத்தி, நாம் பாட,
பெறுகதில் அம்ம இவ் ஊரு ஓர் பெற்றி!
பெற்றி உடையதே, பெற்றி உடையதே,
பொன் தொடி மாதர் கணவன் மணம் காணப்
பெற்றி உடையது, இவ் ஊர்,                                                    25
சேரனை வாழ்த்துதல்
என்று, யாம்
கொண்டுநிலை பாடி, ஆடும் குரவையைக்
கண்டு, நம் காதலர் கைவந்தார்; ஆனாது
உண்டு மகிழ்ந்து, ஆனா வைகலும் வாழியர்-
வில் எழுதிய இமயத்தொடு
கொல்லி ஆண்ட குடவர் கோவே!                                                26

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?