நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday 30 April 2016

மனஒருமை



Image result for தெளிவு

மனஒருமை


மனதை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவர திரும்பத் திரும்ப ஒரே செய்தியைக் குறித்து சிந்திக்கவேணடும். அவ்வாறு சிந்திக்கும்போது அச்செய்தியே மந்திரமாகும். நினைத்ததைச் சாதிக்க  இம்மந்திரம் உதவும்.
அடைய வேண்டியதை அழுத்தம் திருத்தமாக நினைக்கா விட்டால், முயற்சி வீணாவதோடு அந்த எண்ணமே மறந்து, மறைந்து போகும் என்கிறார் திருமூலர்.

சகல நன்மைகளுக்கும் மூலமாய் இருப்பது மனஒருமை ஆகும்.
முதலில் மனதை எவன் ஒருமைப்படுத்துகின்றானோ அவனுக்கு சகல செயல்களும் நன்மை தரும்.


தன்னை ஆளக்கற்றுக்கொண்டவன் தரணியை ஆள்வான்.தன் மனதை அறிந்து கொண்டவன் சகலத்தையும் அறியும் ஆற்றல் பெறுவான்.
Image result for குழப்பம் 

தன்னைத்தானே ஆராய்வதன் மூலம் மனதைத் தூய்மையடையச் செய்ய முடியும். மனதை ஒருமுகப்படுத்துதலின் இரகசியம் என்னவென்றால், சாதாரண எண்ணங்களால் மனதை குழப்பமால் பார்த்துக் கொள்வது தான். பணிக்கு சற்றும் தொடர்பில்லாத நினைவுகள் எழுந்தால், அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்காமல், பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு, கவனம் முழுவதையும், பணியில் மட்டும் செலுத்தவும்.
மனமிருந்தால் மார்க்கம் உண்டு”, “உன்னால் முடியும் நம்பு”, “எதையும் சாதிக்கலாம் உள்ளத்தில் துணிவு இருந்தால்என்றெல்லாம் நமக்கு ஊக்கம் அளித்திட பெரியோர்கள் சொல்வார்கள்.
அருள் தந்தை வேதாத்ரி மகரிஷி மனம்ஒரு காந்தம் என்கிறார். நமது உடல் இயக்கங்களின் போதும் ஏற்படும் மின் ஆற்றலால் ஒரிடத்தில் குவிந்து அது இந்த பிரபஞ்சவெளியோடு தொடர்பு கொண்டு மனம் என்ற நிலையை உருவாக்குகிறது.

அதாவது மனம் என்பது உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது பிரபஞ்சவெளியோடு இந்த உடலை இணைக்கும் ஆற்றல். மன ஒருமையினால் நாம் பிரபஞச சக்தியோடு நம்மை இணைத்துக்கொள்ள முடியும்.
இயற்கையிலேயே அதிகச் சக்தியுடனும், திறனுடனும் படைக்கப்பட்டுள்ள நம் மனத்தில் வேண்டாத எண்ணங்களாகிய குப்பைகளையும், கூளங்களையும் நிரப்பி அங்கே துர்நாற்றம் வீசச் செய்வதைத் தவிர்த்து இனிய நினைவுகள், நிகழ்வுகள், நம்மிடமுள்ள சாதகமான அம்சங்கள், திறமைகள், கிடைத்த அங்கீகாரங்கள், இனியும் தொடர்ந்து செய்ய வேண்டிய நற்பணிகள் ஆகியவற்றைக் குறித்துச் சிந்தித்துச் செயலாற்றுவோம். மனதிலுறுதியும், வாக்கினில் இனிமையும், நல்ல எண்ணங்களும் கொண்டவர்களாய் ஒவ்வொரு நாளையும் தொடங்குவோம். மனத்தின் அளப்பரிய ஆற்றலைப் பன்மடங்கு பெருக்குவோம்.
Image result for தெளிவு 

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து. என்பது வள்ளுவம்.
எப்போதும் உயர்வானவற்றையே சிந்தித்து நம் வாழ்வையும் உயர்வானதாகவும், வளமானதாகவும் ஆக்கலாம். இது சாத்தியமே.
‘தன்னையறியத் தனக்கொரு கேடில்லை‘ என்கிறார் திருமூலர். ‘உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்‘ என்கிறார் கண்ணதாசன்.
நச்சுப் பொய்கையிலே யட்சனுடைய வினாக்களுக்கு விடையளித்து கொண்டு வந்த தருமபுத்திரன் சுகம் என்பது என்ன என்ற கேள்விக்கு நல்ல நடத்தையே சுகம் என்றார். நல்ல நடத்தையை நல்குவது நல்ல எண்ணம் அல்லவா?.நல்ல எண்ணம் மன ஒருமையினால் வாய்க்குமென்று சொல்லவும் வேண்டுமா?
சென்னையச் சார்ந்த ஒரு கவிஞர் ஜவகர்லால் என்பவர், தனக்குள் தேடலைத்
தொடங்கி ஒரு உன்னத அனுபவத்தைப் பெறுகிறார். அதை அழகிய கவிதையாக வடித்திருக்கிறார்.


மனத்துள் பயணம் போகின்றேன்-அங்கே
  மலங்கள் மாசுகள் காண்கின்றேன்
மனமே என்பது நான்தானா?-அந்த
   மலமும் மாசும் தான்நானா?

ஆன்ம ஒளிக்கடல் அலைவீச்சில்-ஓர்
  அற்புதச் சோதி ஒளிர்கிறதே
ஆன்மா என்பது நான்தானா?-அந்த
  அழகிற் குளிப்பவன் நான்தானா?

புலன்பொறி யனைத்தையும் அவைபோக்கில்-எங்கும்
  போக விடுபவன் தான்நானா?-
புலன்பொறி அடக்கப் போராட்டம்-நாளும்
   புரிந்தே களைப்பவன் தான்நானா?

 ஆத்திரக் கொடுமுடி தான்நானா?இல்லை
  அமைதிக் கொள்கலம் தான்நானா?
ஆத்திரம் போக்கி அறிவொளியை-என்
  அகத்துள் காண்பவன் தான்நானா?
 எல்லாம் நான்தான் என்றிட்டால்-உள்ளே
  இருப்பவன் அவனும் நான்தானா?
வல்லவன் எனக்குள் அமர்ந்துவிட்டால்-அந்த
  மாயமும் அவனும் தான்நானா?

கவிஞர் தனக்குள் தேடியிருக்கிறார். மிக அருமையான கவிதை. தேடல் உள்ள உயிர்களுக்கே உலகில் ருசியிருக்கும் என்பது ஒரு திரைப்படப்பாடலின் வரி. இந்தக் கவிஞரின் தேடல் இவருக்கு  விடையைத் தந்திருக்கிறது. அவர் தேடியதால் நமக்கு நல்ல கவிதையும் விடையும் கிடைத்திருக்கிறது.

தேவ –அசுர யுத்தத்தின்போது நடந்ததாகச் சொல்லப்படுகின்ற கதையில் பாற்கடலைக் கடைந்தால் முதலில் நஞ்சுதான் வரும். பின்னரே அமுதம் வரும் என்ற செய்தி வருகிறது. மனம் என்பது பாற்கடலானால் அது முதலில் நஞ்சையே(தீயதையே) வெளியே தள்ளும். பின்னரே அமுதத்தை வெளிப்படுத்தும்(கடவுளை) என்ற உண்மையை பாமர மக்களுக்குப் புரியும் வகையில் கதையாக எடுத்துரைத்திருக்கிறார்கள். தற்காலக் கவிஞரின் அனுபவமும் அவ்வாறாகவே இருந்துள்ளது. மலமும் மாசும் தான்நானா? என்று தன் தொடக்கத் தேடலில் தன்னுள்ளே உள்ளதை இனங்காணும் கவிஞர் தொடர் தியானத்தின் இறுதியில் உள்ளே  இருப்பவன் அவனும் நான்தானா? என்று முடிக்கிறார்.   இப்படிப் பலரும் தங்கள் தியான அனுபவங்களைக் கூறுகின்றனர்.
என்றாலும் ஒருசில நாட்களில் இது சாத்தியமாகிடுமா என்று கேட்பவர்களுக்கு, பிரமிட் ஆன்மிக மையத்தின் நிறுவனரான பிரம்மர்ஷி பத்ரிஜி தன்னுடைய தியான அனுபவங்களைக் குறித்து இவ்வாறு கூறுகிறார். “தியானம் முதலில் பழகும்பொழுது, ஓயாத, பயனில்லாத மன அலைகளின் வேகத்தைக் குறைக்கும். விரைவில் ஆழ்ந்த, ஓய்ந்த, நிலையை மனம் அடைகிறது, அதன் மூலம் பயனில்லாத மன அலைகள் முற்றிலும் நின்றுவிடும்.தியானம் மூலமாக படிப்படியாக முற்றிலுமாக மனதை ஓய்வுபடுத்த முடியும். இதை அடைவதற்கு மனம், சுவாசத்தின்பால் கவனம் செலுத்த வேண்டும்.மனம் எப்பொழுது சுவாசத்திலே நிலைக்கிறதோ, அதனைத் தொடர்ச்சியாகச் செய்து வரும்பொழுது, ஓர் அழகான நிகழ்வு ஏற்படுகிறது. ஓயாத மன அலைகள் முற்றுப்பெறுகின்றன. ஒரு அமைதியான, சாந்தமான சலனமற்ற மனம் உருவாகிறது. மனம் வெற்றிடமாகின்றது. மூச்சைக் கவனிக்க, கவனிக்க, மனம் முற்றிலுமாக வெற்றிடமாகின்றது. ஓயாத, தேவையற்ற எண்ணம் அறவே தோன்றாது, மனம் வெற்றிடமாகும் பொழுது, அதிக அளவில் பிரபஞ்ச சக்தி உடலில் பாய்கின்றது. மனம் எவ்வளவு வெற்றிடமாகின்றதோ அவ்வளவு பிரபஞ்ச சக்தி உடலில் நுழைகிறது.
பூஜ்ஜியத்துக்குள் ராஜ்ஜியம் காண முடியும் என்பது இதுதான்.
மனிதன் உருவத்தில் மனிதனாக இருந்தால் போதாது அவன் உள்ளத்தில் நேர்மை மணம் கமழுமானால் அவன் முழுமைப் பெற்ற மனிதன் ஆகிறான். மனம் உள்ளவன் மனிதன். மனம் ஒரு பூக்கூடை, அதில் நச்சரவம் மறைந்திருக்கலாகாது. மலர் வண்ணத்தால் மணத்தால் பலருக்கு பயனளிக்கிறது அதுபோல மனிதன் மனதாலும், செயலாலும் மற்றவர்களுக்கு நன்மை அளிக்க வேண்டும்.

2 comments:

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. மிக நன்றாக உள்ளது

    ReplyDelete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?