முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Saturday, 2 January 2016

பௌத்தமும் சேலம் நாட்டுப்புற தெய்வ வழிபாட்டு மரபுகளும் – மயிலை சீனி. வேங்கடசாமியின் பார்வையினூடே......பௌத்தமும் சேலம் நாட்டுப்புற தெய்வ வழிபாட்டு மரபுகளும்
மயிலை சீனி. வேங்கடசாமியின் பார்வையினூடே......

முன்னுரை


கிறித்துப் பிறப்பதற்கு முன் தோன்றிய உலகத் தத்துவ ஞானிகளில் மிக உயர்ந்த இடத்தை வகிப்பவர் புத்தர். மனிதர்க்கெட்டாத எந்தத் தத்துவத்தையும் புத்தர் சொல்லவில்லை. வாழ்வியலை நெறிப்படுத்தலும் மக்கள் மனதைப் பண்படுத்துதலுமே அவரின் நோக்கங்கள். புத்தருக்கு சமகாலத்திலிருந்து, கிட்டத்தட்ட கி.பி.11ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் கொங்குமண்ணில் பௌத்தம் சிறப்புற்றிருந்திருக்கிறது. புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடுகள் நடந்துள்ளன. பௌத்த, சமணச் சமயங்கள் 8ம் நூற்றாண்டுக்குப் பின்னர்ப் புறக்கணிக்கப்பட்டு மறக்கடிக்கபட்டுவிட்டன. ஆனால் வழிபாடு செய்யப்பட்ட சிலைகள் சிதைக்கப்பட்டது போக எஞ்சியுள்ளவை அவை புத்தர்சிலைகள் என்று தெரியாமலே இந்து மதக்கடவுளர்களின் சிறுதெய்வங்களாக வழிபடப்பட்டு வருகின்றன.


தென்னிந்தியாவில் உள்ள நிறையக் கிராமத்து தெய்வங்கள் பழைய பௌத்த சமணச் சாமிகளாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, பௌத்த சமய ஆய்வுகளை மேற்கொண்ட மயிலை சீனி வேங்கடசாமி, மற்றும் அயோத்திதாசர் இருவரும் இன்றைக்குப் பல சிற்றூர்களிலும் வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நாட்டுப்புற தெய்வங்கள் புத்தராக இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றனர். இருவருடைய கருத்துக்களையும் அடியொற்றி சேலம் மாவட்டத்து நாட்டுப்புற தெய்வங்களை ஆய்வுக்குட்படுத்தியதில் அக்கூற்றுக்களில் உண்மையிருப்பதை அறிய முடிந்தது.
பவுத்த கோயில்கள் புத்தருடைய பல பெயர்களில்தருமராஜா கோயில்', ‘சாத்தனார் கோயில்', ‘முனீஸ்வரர் கோயில்' உள்ளிட்ட பெயர்களுடன் பண்டைக் காலத்தில் அழைக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் இந்துமதம் செல்வாக்குப் பெற்றபோது, அவை இந்து மதக் கோயிலாக மாற்றப்பட்டு, இந்துமதம் தொடர்பான கதைகளுடன் இணைக்கப்பட்டு, நாளடைவில் அவை கிராம தேவதைக் கோயில்கள் என்னும் நிலைக்கு வந்துவிட்டதாகத் தோன்றுகிறதுஎன்று பவுத்த ஆராய்ச்சியாளர் மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார்.

வடநாட்டில் இன்றும் புத்தர் சிலைகள் தருமராஜா என்றழைக்கப்பட்டு வருவதையும் சான்றாகக் குறிப்பிடுகிறார். பவுத்த மதம் நிலைபெற்றிருந்த மேற்கு வங்கத்தில், சில பவுத்த கோயில்கள் உள்ளன. அந்தக் கோயில்களில் உள்ள புத்த சிலைகளுக்குத்தருமராஜா' அல்லதுதருமதாகூர்' என்று பெயர் வழங்கப்படுகிறது.

“ '
சாஸ்தா' என்னும் பெயரே புத்தருக்குரியது என்றும் புத்தருடைய கோயில்களை 'ஐயனார் கோயில்கள்' என்றும், 'சாதவாகனன் கோயில்கள்' என்றும் சொல்லி, பிற்காலத்து இந்துக்கள் நாளடைவில் அவற்றைக் கிராமதேவதையின் கோயில்களாக்கிப் பெருமை குன்றச்செய்துவிட்டது போலவே ஏனைய சில புத்த பெயர்களுக்கும் வேறு பொருளும் கதையும் கற்பித்து அவற்றையும் மதிப்பிழக்கச் செய்துவிட்டதாகத் தெரிகிறது என்கிறார். சாஸ்தாசாதவாகனராகவும் பின்னர் ஐயனாராகவும் மாற்றப்பட்டதைப் போலவே முனி என்கிற புத்தரின் பெயரை ஈஸ்வரனோடு சேர்த்து முனீஸ்வராகவும், திருமாலின் அவதாரங்களில் ஒருவராகவும் மாற்றியதோடு, தருமராசா என்ற புத்தரின் பெயரை பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்ரரின் பெயர் எனக் கூறியதோடு, அரசமரம் இருக்குமிடத்திலெல்லாம் இருந்த புத்தரை மாற்றிப் பிள்ளையாரை வைத்து வழிபாடு செய்யவும் தொடங்கிவிட்டனர் என்கிறார்.

பிங்கல நிகண்டில் 'தருமன்' என்றும் திவாகரத்திலும் நாமலிங்கானு சாசனத்திலும் 'தர்மராஜன்' என்றும் புத்தருக்கு வேறு பெயர் கூறப்பட்டுள்ளது. இவ்வாறே, தாராதேவி, மங்கலதேவி, சிந்தாதேவி முதலான பௌத்தபெண் தெய்வங்களின் கோயில்களும், பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் கிராமதேவதை கோயில்களான அம்மன் கோயில்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. தாராதேவி கோயில் திரௌபதையம்மன் கோயிலென இப்பொழுது வழங்கப்படுகின்றது, 'தருமராஜா' என்னும் பெயருள்ள புத்தர் கோயில், பிற்காலத்தில், பாண்டவரைச் சேர்ந்த தருமராஜா கோயிலாக்கப்பட்டது போல, 'தாராதேவி' என்னும் பௌத்த அம்மன் கோயில், தருமராஜாவின் மனைவியாகிய திரௌபதியின் கோயிலாக்கப்பட்டது என்றும் கூறுகின்றார்,ஆட்சி மாற்றம் மக்களின் மதமாற்றத்திற்கும் காரணமாகியுள்ளதை மானுட வரலாறு எடுத்துக்காட்டுகிறது. பண்டைக் காலத்தில் பல பெயர்களால் பௌத்தக் கோயில்களும் புத்தருடைய பல பெயர்களில் ஒவ்வொன்றன் பெயரால் 'தருமராஜா கோயில்', 'சாத்தனார் கோயில்','முனீஸ்வரர் கோயில்' என்பன போன்ற பெயர்களுடன் வழங்கப்பட்டு வந்தன என்றும், பிற்காலத்தில், இந்துமதம் செல்வாக்குப் பெற்றபோது அதை இந்துமதக் கோயிலாகச் செய்யப்பட்டு, இந்துமதத் தொடர்பான கதைகளுடன் இணைக்கப்பட்டு, பின்னும் நாளடைவில் அவை கிராமதேவதை கோயில்கள் என்னும் நிலையில் தாழ்ந்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டனவென்றும் தோன்றுகிறது.


மாமல்லபுரம் பஞ்ச பாண்டவ ரதம் வளாகத்தில் உள்ள தர்மராஜா ரதம். பல்லவர்களில் ஒரு பிரிவினர் பவுத்தர்கள் என்பதால், இந்தக் கோயில் பவுத்த கோயிலாக இருந்திருக்க வேண்டும் என்றும் காஞ்சிபுரத்தில் வீடு பேறடைந்த காவியத் தலைவியாகிய மணிமேகலையின் ஆலயந்தான் காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள அன்னபூரணி அம்மன் என்றும், காஞ்சி காமாட்சியம்மன் ஆலயம் பவுத்தரின் தாராதேவி கோயில்என்றும் அயோத்திதாசப்பண்டிதர் கூறுகிறார்.
சேலத்தில் தருமராஜா கோயிலும் முனியப்பன் கோயிலும்
தமிழ்நாட்டிலுள்ள இப்போதைய தருமராஜா கோயில்கள் பண்டைக் காலத்தில் பவுத்த கோயில்களாக இருந்திருக்கக்கூடும் என்ற கருத்தினடிப்படையில் பார்க்கும் பொழுது, சேலம் மாவட்ட மையப்பகுதியில் உள்ள சின்னக்கடை தெருவில் ஒரு தருமராசா கோயில் உள்ளது. இங்கு அரச மரம் உள்ளது. ஆனால் பண்டைக்காலத்துச் சிலைகள் எதுவுமில்லை. பஞ்சபாண்டவர் சிலைகள் சுடுமண்சிற்பத்தினால் செய்யப்பட்டு வணங்கப்படுகிறது.

 
இக்கோயிலுக்கு அருகிலேயே தலைவெட்டி முனியப்பன் கோயில் உள்ளது. தலை வெட்டப்பட்ட புத்தரின் சிலையை மீண்டும் வணங்குவதற்கேற்ற வகையில் மாற்றி, தலை செய்து ஒட்டப்பட்டுத் தற்போது வணங்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இக்கோயில் பூசாரியும் தலைப்பகுதி ஈயம் கொண்டு ஒட்டவைக்கப்பட்டதெனத் தெரிவிக்கிறார். சிலையைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. சிலையின் கழுத்து ஒட்டவைக்கப்பட்டது போல் ஒரு புறம் சாய்ந்துள்ளது.(ஆதாரம் படம் -1)
இந்தக் கோயிலில் மூன்று தெய்வங்கள் உள்ளன. அரசமரத்துப் பிள்ளையார் ஒருபுறம். திருமலையம்மன் எனப்படுகின்ற பெண் தெய்வம் மறுபுறம். நடுவில் தலை வெட்டி முனியப்பன் சிலை உள்ளது. முனியப்பனாக மாற்றப்பட்ட இப்புத்தர் சிலைக்கு ஆடு கோழி வெட்டப்படுகிறது. இப்புத்தர் சிலை மாற்றப்பட்டது போலவே மதுரையிலுள்ள புத்தர் சிலையும் தலை வெட்டப்பட்டுப் பயமுறுத்தும் தோற்றமுடைய முனியின் தலையொன்று பின் ஒட்டவைக்கப்பட்டுப் பாண்டி முனியாக வழங்கப்படுகிறது. ஆனால் இங்கு ஆடு கோழி வெட்டப்படுவதில்லை என்கிறார் ஒரு ஸ்டாலின் ராஜாங்கம் . மேலும் முனி என்ற சொல்லே புத்தரைத்தான் குறிப்பிடுவராகக் குறிப்பிடும் இவர் தமிழ் லெக்சிகனிலிருந்து முனி-புத்தர், முனிசுவ்வேதரர்தீர்த்தங்கரர், முனீந்திரன்புத்தர், அருகன் என்ற ஐந்து பெயர்களை எடுத்துக்காட்டுகிறார். பழைய மதங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள சிலைகள் புதிதாகச் செல்வாக்குக் கொண்டு வளர்ந்துவரும் மதச் சமய நம்பிக்கைகளில் ஒன்றி அதற்கேற்ப வேறொன்றாக மாறிவிடுவதையே இது காட்டுகிறது.. இந்தக் கோயிலில் உள்ள தலவரலாற்றுப் பாடலில்தலையைத் திருகி தனத்தை எடுத்து.....என்ற வரிகள் அக்காலத்தில் எங்கும் விரவியிருந்த புத்தர் சிலைகளை மக்களைக் கொண்டு உடைப்பதற்காகப் புத்தர் சிலைக்குள் புதையல் இருக்கலாம் சொல்லப்பட்ட பொய்யாக இருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு.

புத்தர் சித்தராக....

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுக்காவில் தியாகனூர் கிராமத்தில் இரண்டு புத்தர் சிலைகள் உள்ளன. வயல்வெளியில் கிடந்த இவற்றில் ஒருசிலை தியான மண்டபம் கட்டப்பட்டு உள்ளே வைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் புத்தர் சிலைஉள்ளது. மற்றொரு சிலையானது தனியாருடைய குல தெய்வமாக வணங்கப்படுகிறது. கோவிலைப் பராமரிக்கும் பூசாரிக்கு(தகவலாளி-பெருமாள்75 வயது) அது புத்தர் சிலையென்று தெரியவில்லை. அதை ஒரு சித்தருடையது என்றும் அவர்களின் முன்னோரில் ஒருவர் என்றும் கூறுகிறார். அச்சிலை காவியுடுத்தி சந்தனம் குங்குமப் பொட்டு வைத்துக் கற்பூரம் காட்டப்பட்டுச் சித்தராகவே வணங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை துணைக் கண்காணிப்பாளர் திருக் கி.ஸ்ரீதரன்இச்சிலை கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும், முசிறி-ஆத்தூர் அக்காலத்தில் சிறந்த வணிகத்தலமாக இருந்திருக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் பல இடங்களில் காணப்பட்ட புத்தர் சிலைகள் அங்குப் பௌத்த சமயம் செழிப்பான நிலையில் இருந்ததை உணர்த்துகிறது என்றும், வணிக நோக்கில் இப்பகுதிக்கு வந்த பௌத்த சமயத்தவர் இச்சிலையைச் செதுக்கியிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். நாயன்மார்கள்-ஆழ்வார்கள் காலத்தில் பௌத்தச் சமயத்திற்கு வீழ்ச்சி ஏற்பட்டது என்று கூறப்பட்டாலும்கூட அவர்களுக்குப் பின் சோழர் ஆட்சியில் இந்தச் சமயமானது சிறப்புற்று இருந்ததை இப்பகுதியில் காணப்படுகிற புத்தர் சிலைகள் உறுதிகூறுகின்றன.