முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Wednesday, 13 January 2016

திருமங்கையாழ்வார் - பன்முகநோக்கு


திருமங்கையாழ்வார் - பன்முகநோக்கு


முன்னுரை


Image result for திருமங்கையாழ்வார் 
ஆழ்வார்களில் மிக அதிகமான பாமாலைகளை வகை வகையாகத் திருமாலுக்குப் புனைந்தவர். ஆழ்வார்களில் கடைசியாக அவதரித்தவர். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஓராயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். இந்தியா முழுமையுமுள்ள 108 திருமால் திவ்ய தேசங்களில் 86 திருமால் திவ்ய தேசங்களைத் தரிசித்து அத்தலங்களின் பெருமையுணர்த்தும் வகையில் அவற்றின் மீது பாடல்களைப் பாடியவர். தம் துணைவியார் குமுதவல்லியுடன் எழுந்தருளியுள்ள பெருமைக்குரியவர். திருமாலின் அவதாரங்களை அனைத்துப் பாசுரங்களிலும் இடம்பெறுமாறு பாடியவர். இயற்கைச் சூழலை வர்ணிப்பதில் வல்லவர் எனப் பல பெருமைக்குரியவர் திருமங்கையாழ்வார். ஆசுகவி, மதுரகவி,சித்திரக்கவி, வித்தாரக்கவி என்னும் நான்கு வகையான கவி புனைவதில் வல்லவர். எனவேநாலுகவிப் பெருமாள்எனப்பட்டவர். பல்வேறு யாப்பு வடிவங்களைப் பக்தியிலக்கியத்தில் பயன்படுத்திக் கொண்ட இவருடைய படைப்புகளின் சிறப்புக் குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.

இவருடைய படைப்புகள்

1.
பெரிய திருமொழி 2. திருவெழுக்கூற்றிருக்கை 3. திருக் குறுந்தாண்டகம்
4.
திரு நெடுந்தாண்டகம் 5. பெரிய திருமடல் 6. சிறிய திருமடல் போன்றவையாகும்.


பெரிய திருமொழிImage result for பெரியதிருமொழி 
பெரியதிருமொழி 11 பெரும்பகுப்புகளை உடையது. இவை 11 பத்துக்கள் எனப்படுகின்றன. ஒவ்வொரு பத்தும் 10 திருமொழிகளாகவும் ஒவ்வொரு திருமொழியும் 10 பாசுரங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளன. பெரும்பகுப்புக்கள் முதல் 10 திருமொழிகளில் 100 பாசுரங்கள் வீதம் மொத்தம் ஆயிரம் பாடல்களையும், 11ம் பத்து மட்டும் 8திருமொழிகளை அதாவது 80 பாசுரங்களை உடையதாகவும் உள்ளது. பெரிய திருமொழி மொத்தம் 1084 பாசுரங்களைக் கொண்டுள்ளது. பொதுவாகப் பத்துப் பாடல்களைக் கொண்டவை பதிகம் எனப்படும். இங்குத் திருமொழி எனப்படுகிறது. இத்திருமொழிகள் பல சிற்றிலக்கியக் கூறுகளைக் கொண்டிருக்கின்றன. பவ்வக யாப்புகளில் பாடியுள்ளார். அனைத்துப் பாசுரங்களும் திருமாலின் பத்து அவதாரங்களைக் கூறுகின்றன. திருமால் எழுந்தருளியுள்ள 86 தலங்களைப் பற்றியும்  பாடல்கள் எடுத்துரைக்கின்றன. திருக்காழிச்சீராம விண்ணகரம், திருக்கண்ணபுரம், கூடலூர், பூதங்குடி, திருப்புல்லாணி, திருவெள்ளியங்குடி, இந்தளூர், திருப்பார்த்தன்பள்ளி, திருக்காவளம்பாடி, திருமணிக்கூடம், திருநாங்கூர், திருமடந்தை, திருவாலி போன்றவை திருமங்கையாழ்வார் பாடிய சில தலங்கள். குறிப்பிட்ட தலங்களைப் பற்றிக் கூறுமிடத்து அப்பகுதியில் சிறப்புற்றிருக்கும் தாவரங்களைப் பற்றிய தகவல்களையும் தருகிறார்.

""காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்
எங்கும் மாம் பொழில்களின் நடுவே
வாய்ந்த நீர்பாயும் மண்ணியின் தென்பால்
திருவெள்ளியங்குடி யதுவே"" (4-10-1)
இவை போலப் பாசுரங்கள் தோறும் இயற்கை வருணனைகள் அமைந்துள்ளன.


இவருடைய படைப்புகளில் மீண்டும் பிறந்து மனிதப்பிறவி எடுத்து விடுவோமோ என்ற அச்சமே பல உவமைகளில் வெளிப்பட்டு நிற்கின்றது. ஆற்றங்கரை வாழ்மரம் போல் அஞ்சுகின்றேன் என்றும், காற்றில் அகப்பட்ட கலத்தில் உள்ளவர்களின் மனம் போல் நடுங்குகின்றேன் (2023) என்றும், பாம்போடு ஒரு கூரையில் வாழ்வது போல மனம் அஞ்சுகின்றது (2024) என்றும், இருபக்கமும் நெருப்பு எரிகிற கொள்ளியில் மாட்டிக்கொண்ட எறும்பு போல் என் உள்ளம் உருகுகின்றது (2025) என்றும், வெள்ளத்திடை சிக்கிக் கொண்ட நரிக்கூட்டம் போல் என் உள்ளம் தடுமாறுகிறது என்றும் பிறவிப்பிணி  தாக்கிவிடுமோ என அஞ்சுகிறார். பிறவிப்பிணியைஇடும்பைக்குழிஎன்கிறார். இறைவனோடு தான் இரண்டறக் கலந்து விட விரும்புவதை, ‘இரும்பு அனன்று உண்ட நீர் போல’ (2036) என்ற அழகிய உவமை மூலம் வெளிப்படுத்துகிறார்.பெரிய திருமொழியில் பல உத்திகளைப் பயன்படுத்தியுள்ளார். அதில் ஒன்று வினாவிடை முறை ஆகும். இவ்வுத்தியை மிகச்சிறப்பாகத் திருமங்கையாழ்வார் கருத்துப்புலப்பாட்டிற்குப் பயன்படுத்துகிறார். 8ம் பத்தின் 4ம் திருமொழியானது வினா எழுப்பி, திருக்கோத்தும்பியை நோக்கி திருமாலின் திருத்துழாயில் வந்து தேனருந்துமாறும், ஊதுமாறும் விளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மாணிக்கவாசகரின் திருக்கோத்தும்பியை நினைவூட்டும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது. திருகண்ணபுரம் சௌரி ராஜப் பெருமாளின் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது.

அண்டமலரெல்லாம் ஊதி நீ என்பெறுதி?
அண்ட முதல்வன் அமரர்களெல்லாரும்
கண்டு வணங்கும் கண்ணபுரதெம் பெருமான்
வண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பி‘ (8-4,4)
தும்பியை நோக்கி திருமங்கையாழ்வார் கேள்விகள் கேட்டு அதற்குத் தானே பதிலிறுக்கும் வகையில் இப்பாடல்கள் அமைந்துள்ளன.

இவ்வாறு அஃறிணை உயிரான தும்பியை நோக்கி வினவி அதற்குத் தானே விடைதரும் வகையில் திருமாலின் பெருமைகளை ஆழ்வார் உணர்த்துகிறார்.

எட்டாம் பத்தும் முதல் திருமொழியில் முதலில் விடையைக் கூறிப்பின்னர் வினாவைக் கூறும் உத்தி கையாளப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் நிலையை விடையாக உரைத்தும், அந்த நிலைக்குக் காரணம் திருகண்ணபுரம் சௌரி ராஜப் பெருமாளாக இருப்பாரோ என இறுதியில் வினாவைத் தொடுக்கும் வண்ணம் இத்திருமொழி அமைந்துள்ளது.

வடித்தடங்கண் மலரவளோ வரையாகத்
துள்ளியிருப்பாளென்கின்றாளால்
கடிக்கமலம் கள்ளுக்கும் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொலோ?‘ (8.1.5)

இதைப் போலவே பலஇடங்களில்முன்பைவிட அன்பாயிருக்கின்றாள்‘, ‘மன்றூடே வருகின்றானென்கின்றாள்‘, ‘மணிமுடி மேல் மணநாறு மென்கின்றாள்என்றெல்லாம் விடையாக எடுத்துரைத்து இவள் இவ்வாறு கூறக்காரணம்தம்மானைக் கண்டாள் கொலோ?’ என வினாவாகத் தொடுப்பது இத்திருமொழியில் சிறப்பான உத்தியாக அமைக்கப்பட்டுள்ளது.


Image result for திருச்சாழல் 
இருபெண்கள் கேள்வி கேட்டுப் பதிலிருக்கும் நாட்டுப்புற இலக்கிய வடிவமானதிருச்சாழல்வடிவத்தையும் திருமங்கையாழ்வார் பயன்படுத்தியுள்ளார். பெருமாளின் எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிர் எதிராகக் கூறும் வினாவிடை உத்திமூலம் இது அமைந்துள்ளது. நாட்டுப்புறப்பாடல் மூலம் எழுதப்படிக்கத்தெரியாத மக்களிடம் அப்பாடலை நினைவில் வைத்துப் பாடுகின்ற ஆற்றலும் வாய்ப்பும் உருவாகும் எனக் கருதிருக்கலாம்.
Image result for திருமால்
 
 
வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆசிலும்
எண்ணிற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே

இதே உத்தியை மாணிக்கவாசகரும் பயன்படுத்தியுள்ளார்.

வினாவிற்கு மாற்றாக வினாவிலேயே பதிலிருக்கும் வினா எதிர்வினாதல் உத்தி முறையையும் கையாண்டுள்ளார்.

கள்வன் கொல்? யான்அறியேன் கரியான் ஒரு காளை வந்து
வள்ளிமருங்குல் என்தன் மடமானினைப் போதடுவன்று
வெள்ளிவளைக்கை பற்றப் பெற்ற தாயரை விட்டகன்று
அள்லிலம் பூங்கழனி அணியாலிபுகுவர் கொலோ?‘ (3-7-16)

கள்வன் சொல்என்றவினாவிற்குயான்அறியேன் என விடை தந்து தொடர்ச்சியாக ஒரு வினாவை எழுப்பி அவ்வினாவில் விடை தந்து செல்லும் வகையில் இத்திருமொழி அமைந்துள்ளது.

அகப்பொருள் துறை

தாய் நிலையிலிருந்து புலம்புதல்

பெரிய திருமொழியின் 5ம் பத்தின் 5ம் திருமொழி மாலை காதலித்த தன் மகளின்கண்டு ஒரு தாய் இரங்கி புலம்பி அரற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் பாடாத புதுமை இது இப்பாடலில் வேங்கடமே, வேங்கடமே, என்றழைத்து, மகள் துயில் மறந்து, நீர் மல்க, வளைசோர, இயற்கண்ணுக்கு மையெழுதாமல், ஊனுருகி நிற்பதைக் கண்டு துடிக்கும் ஒரு தாயாக மாறிவிடுகிறார் திருமங்கையாழ்வார். ஒரு தாயைப் போலக் கையற்று நிற்கும் தன் நிலையை எளிய சொற்களால் அழகுற காட்டி விடுகிறார்.

கலையாளா அகலல்குல் கனவளையும்
கையாளா என் செய்கேன் நான்?‘(5-5-2)
ஆனாயாளா என் மகளைச் செய்தனகள்
ஆம்மனையீர்!அறிகிலேனே‘(5-5-3)
தூதலின் என்மகளைச் செய்தனகள்
எங்ஙனம் நான் சொல்லுகேனே?‘(5-5-6)
பந்தோடுகழல் மருவாள் பைங்கிளியும்
பாலூட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன் வந்தானோ‘(5-5-9)

என்று துள்ளித் திரிந்து விளையாடிய மகள் திருமால் நினைவால் துவண்டு கிடந்து துடிதுடிப்பதைக்கண்ட தாயின் துடிப்பை அழகுற வெளிப்படுத்தியுள்ளார்.

அகப்பொருள் துறையில் உடன் போக்கில் சென்ற தலைமகளை நினைத்து தாய் புலம்பி அரற்றுவாள்.

இங்குத் திருமாலே காதலனாக அமைந்து விட்டபடியால், தன்மகளை அழைத்துச் செல்ல திருமால் இன்னும் வரவில்லையே என்று ஏங்கும் விதமாகவும், மகள் நிலை கண்டு கையற்று புலம்பும் விதமாகவும் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அகப்பொருள் துறையின் மற்றொரு சிறப்பு நெஞ்சை நோக்கி புலம்புவது, அஃறிணை உயிர்களை நோக்கிப் புலம்புவது போன்றவையாகும். திருமங்கையாழ்வாரின் அகப்பொருள் துறையில் அமைந்த பாடல்களில் நெஞ்சை நோக்கிக் கூறுவது, மனதை நோக்கி ஆற்றுப்படுத்துவது போன்ற பாடல்கள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன.

மடையோட நின்று மதுவிம்மு நாங்கூர்
மணிமடக் கோயில் வணங்கு என் மனனே!‘ (3-9-9)

9
ம் பத்தின் 7,8 திருமொழிகளில் இந்த உத்தியைப் பயன்படுத்துகிறார். நெஞ்சை நோக்கி ஆற்றப்படுத்தும் விதத்திலமைந்த இப்பாடல்களில் தொன்மைக் கதைகள் ஏராளமாக நிறைந்துள்ளன. அஃறிணை உயிரான தும்பியை நோக்கியும் நாராயை நோக்கியும் திருமங்கையாழ்வார் கேள்விகள் கேட்டு அதற்குத் தானே பதிலிறுக்கும் வகையிலும் பாடல்கள் அமைந்துள்ளன.


நாயக-நாயகி பாவம்

தமிழ் இலக்கிய உலகில் விரிந்த ஆய்வுக்கு உரியவர் திருமங்கையாழ்வார். தமிழ் இலக்கிய மரபுகளை ஆழ்ந்து பயின்றவராக இருக்கின்ற காரணத்தினால் பல புதுமைகளையும் படைத்தளித்தவர். அவ்வகையில் தாண்டகம் என்னும் இலக்கியத்தைக் கூறலாம். தாண்டகம் என்ற இலக்கிய வடிவத்தைத் திருநாவுக்கரசரும், திருமங்கையாழ்வாருமே பாடியுள்ளனர். திருநாவுக்கரசர் முதலில் பாடியதால்தாண்டக வேந்தர்எனப்பட்டார். எனினும் தாண்டக இலக்கிய வகையில் திருக்குறுந்தாண்டகம், திருநெடுந் தாண்டகம் என எழுதியிருப்பவர் திருமங்கையாழ்வாரே. திருநாவுக்கரசர் பொருளடிப்படையில் தாண்டங்களைப் பாடியுள்ளார். திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகத்தில் 20 பாடல்களையும், திருநெடுந்தாண்டகத்தில் 30 பாடல்களையும் பாடியுள்ளார். திருநெடுந்தாண்டகம் 3 பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பத்துப்பாடல்கள் நாயக-நாயகி பாவத்தில் அமைந்துள்ளது. இதில் நாயகி நாயகனான திருமாலை நினைத்து உருகுவதைப் போலப் பாடல்கள் அமைந்துள்ளன. அடுத்தப் பத்துபாடல்கள் தன் மகளின் நிலை கண்டு மனம் பொறாத தாயின் நிலையிலிருந்து பாடப்பாட்டுள்ளன. இறுதி பத்துப் பாடல்கள் நாயக-நாயகி பாவத்தில் அமைந்து தன் துயரத்தைத் தீர்த்திட திருமால் உதவிடவேண்டும் என்பது போல் உள்ளது.

நாயகி பாவத்தில் நாராயைத் தூதுவிடும் பாடலொன்றில்,

செங்கால் மடநாராய்! இன்றே சென்று
திருகண்ணபுரம் புக்கு என் செங்கண்மாலுக்கு
என் காதல் என் துணைவார்க்கு உரைத்தியாகில்
இதுவொப்பது எமக்கின்பமில்லை” (திருநெடு.27)

தாயாகி மாறி நிற்கும் பாவத்தில்,
""
பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள்
பனிநெடுங்கண்நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள்
எள்துணைப்போது என் சூடங்காலிருக்கக் கில்லாள்
எம் எம்பெருமான் திருவரங்கம் எங்கே?""’ (திருநெடு.11)

என்று கயல் கண்கள் நீரரும்ப நிற்கும் தன் மகளைக் கண்டு உள்ளம் பதைக்கிறார்.

திருக்குறுந்தாண்டக 20 பாடல்களும் திருமாலின் அருமை பெருமைகளை அதைத் தான் உணர்ந்த திறத்தை திருமங்கையாழ்வார் எடுத்துரைக்கும் வண்ணம் உள்ளன.

மாயிருள்சோலை மேய மைந்தனை வணங்கினேனே
(
திருக்குறு-3)
""
காவி போல் வண்ணர் வந்து என் கண்ணுள்ளே தோன்றினாரே""
(
திருக்குறு-12)

சிறிய திருமடல், பெரிய திருமடல்


Image result for மடலேறுதல் 
சிறிய திருமடல், பெரிய திருமடல்  இவ்விரண்டு நூல்களும் திருமங்கையாழ்வார் தமிழ் இலக்கியத்திற்கு அளித்த மிகப்பெரும் கொடைகளாகும். பெண்கள் மடலூரார் என்ற இலக்கிய மரபினை உணர்ந்து, அதை வெளிப்படுத்திப் பின்னர் அதனை விலக்கி, திருமாலின் மீது காதல் கொண்ட பெண் மடலூர்வதைப் போலப் படைத்தளித்திருக்கிறார். இவை கண்ணிகளாக அமைந்துள்ளன. சிறிய திருமடல் 77 கண்ணிகளையும், பெரிய திருமடல் 148 கண்ணிகளையும் உடையதாக விளங்குகின்றன. திருமாலின் அவதார மகிமைகளை இருமடல்களும் எடுத்துரைக்கின்றன. இவ்விருமடல்களும் தனிச் சொல்லின்றி இன்னிசைக் கலிவெண்பாவில் வெண்டளை தப்பாது பாடப்பட்டுள்ளன. சிறிய திருமடலின் விரிவாகவே பெரிய திருமடல் பாடப்பட்டுள்ளது. தலைவியின் துன்பநிலை, பழிதூறல் போன்ற பகுதிகள் பெரிய திருமடலில் மிகுதியாக உள்ளன.


சிறிய திருமடலில் சங்ககால மரபுகளைக் காணமுடிகிறது. பாட்டுடைத்தலைவனான கண்ணன் குடக்கூத்தாடி வருகின்ற போது கண்ணுற்ற தலைவி காதல் கொள்கிறாள். அதனால் எழுந்த காதல் மிகுதியினால் ஏற்படும் மாற்றங்களை உணராத தாயார், சாத்தா என்னும் தெய்வத்திற்கு அஞ்சலி செய்வித்தும் நோய் தீராததால், பாட்டிமார்களின் ஆலோசனைப்படி குறி கேட்கிறாள். கட்டுவிச்சி தலைவியின் நோய் திருமாலால் விளைந்ததே என்கிறாள். தலைவி தன் நெஞ்சை திருமாலிடம் தூது விடுக்கிறாள். ஆனால் செஞ்சம் திருமாலிடம் தங்கிவிட, காதல் மிகுந்த நிலையில் தலைவன் அருள்தரும் வரை திருவேங்கடம் முதல் வட முதுரை வரை ப தலங்களுக்கும் சென்று அவன் அருளாத்தை யாவருக்கும் உரைத்து அவனைத் தூற்றி மடலூர்வேன் என்கிறாள்.

முதல்பகுதியில்,
Image result for மடலேறுதல்
‘வாராயோ வென்றார்க்குச் என் வல்வினையால்
காரார்மணி நிறமும் கைவளையும் காணேன் நான்‘ (சிறிய திரு.14)
என்று தன் திருமாலின் நினைவினால் தலைவி கைவளை நழுவுவதாகக் கூறுகிறாள்.

‘நீராய் உருகும் என்னாவி நெடுங்கண்கள்
ஊரா ருறங்கிலும் தானுறங்கா உத்தமன்தன்‘(சிறிய திரு-63)
என்றெல்லாம் தன் நிலையை உரைக்கும் நாயகி காமமிக்க நிலையில்,
பேராயிரமும் பிதற்றி பெருந் தெடுவே
ஊராரிகழிலும் ஊரா தொழியேன் நான்
வாரார் பூம் பெண்ணை மடல் (சிறிய திரு-77)

என்று மடலூர்ந்தே தீருவதாக உரைக்கின்றாள்.
திருமாலின் மீது கொண்ட மட்டற்ற காதலை திருமங்கையாழ்வார் இவ்வாறு வெளிப்படுத்துகின்றார் என்றே கொள்ள வேண்டும்.

திருவெழுகூற்றிருக்கை

தமிழ் யாப்பு வகைகளில் எண்களை வைத்துப் பாடக்கூடிய சித்திரக்கவி வகையைச் சார்ந்த திருவெழுகூற்றிருக்கை என்னும் இலக்கிய வகையைத்

Image result for திருவெழுகூற்றிருக்கை  


திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். தமிழ் யாப்பு வகைகளிலேயே மிகக் கடினமானது இவ்வகை என்பார். திருகுடந்தையில் கோயில் கொண்டுள்ள திருமாலின் பெருமைகளையும், குடந்தை நகரின் இயற்கை நலக் காட்சிகளையும் இப்பாடல் எடுத்துரைக்கிறது. திருமங்கையாழ்வார் தன் இறை பக்தியை எண்ணில்அமைத்து விளையாடியுள்ளார்.

ஒரு தனி வேழத்து அரந்தையை ஒருநாள்
இருநீர் மருவுள் தீர்த்தனை முத்தீ
நான்மறை ஐவகை வேள்வி அறுதொழில்
அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன்
அகத்தினுள் செறுத்து நான்குடனடக்கி
முக்குணத்து இரண்டவை யகற்றி ஒன்றினில்
ஒன்றிநின்று ஆங்கு இரு பிறப்பறுப்போர்

ஒன்று இரண்டு எனத் தொடங்கி, இரண்டிலிருந்து ஒன்று என முடித்து மீண்டும் ஒன்று, இரண்டு, மூன்று எனத் தொடங்கி, மூன்றிலிருந்து ஒன்று வரை முடித்து, மீண்டும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு வரை தொடங்கி, நான்கிலிருந்து மூன்று, இரண்டு, ஒன்று என முடித்து மீண்டும் ஐந்து வரை தொடங்கி, ஐந்திலிருந்து ஒன்று வரை முடித்து, மீண்டும் ஆறுவரை தொடங்கி ஆறிலிருந்து ஒன்று வரை முடித்து, ஒன்றிலிருந்து மீண்டும் ஏழு வரை தொடங்கி ஏழிலிருந்து ஒன்று வரை முடித்துப் பின் இறைவன் உறையும் திருக்குடந்தைச் சிறப்பை சொல்லும் வகையில் பாடல் முடிகின்றது.

ஒன்று என வருமிடங்களிலெல்லாம்,
ஒரு பேருந்தி, ஒரு சிலை, ஒருமுறை,
ஒரு தனிவேழம், ஒரு நாள், ஒன்றினில் ஒன்றிநின்று,
ஒன்றி மதிமுகம், ஒன்றாய் எனத் தொடர்கள்

திருமாலே முழுமுதற்தனிக் கடவுள் என்கிற அடிப்படையில் பயின்று வருகின்றன.

இரண்டு என வருமிடங்களிலெல்லாம்,
இருமலர்த்தவிசு, ஈரடி இரு சுடர், ஈரெயிற்றழல்வாய்,
இரு பிறப்பு, இரு செவி வேழம், இருநீர் மடுவு,

இருபிறப்பறுப்போர், இருவகைப்பயன் எனத் திருமாலை வணங்குவதால் உயிர்கள் பெறும் பயன் மற்றும் கஜேந்திரன் என்னும் யானை பெற்ற பயன் முதலானவை கூறப்பட்டுள்ளன.

மூன்று என வருமிடங்களிலெல்லாம்,
மும்மதில் இலங்கை, மூவடி நானிலம், மூவுலகளந்தவன், முத்தீ, முக்கண், மூர்த்தி மூன்றாய் என வாமன அவதாரமெடுத்து மூவடி அளந்த அவதாரச் சிறப்பும், பிற அவதார மகிமைகளும் கூறப்பட்டுள்ளன.

நான்கு என வருமிடங்களில்,
நானிலம் வேண்டி, நால்திசை நடுங்க,
நான்மறை, நான்குடனடக்கி, நால்தோள் வண்ண,
நால்வகை வருணமுமாயினை, அறம்முதலான நான்கவையாய் ஆயினை
எனத் திருமாலின் ஆற்றல் நிலை உணர்த்தப்படுகிறது.

ஐந்து என வருமிடங்களில்,
ஐவகை வேள்வி, ஐம்புலன் செறுத்து, ஐவாயரவோடு,
ஐம்படை அங்கை, ஐம்பெரும் பூதமும் நீயே,
ஐம்பாலோதியை ஆகத்திருத்தினை என
ஐவகை வேள்வி செய்த பெருமையோடு, ஐந்து தலை நாகம், ஐந்து வகைப் படை, ஐம்பெரும் பூதமான சிறப்புப் போன்றவை எடுத்துரைக்கப்படுகின்றன.

ஆறு என்ற என் வருமிடங்களிலெல்லாம், ஆறுபொதி சடையோன், அறுசுவைப் பயனுமாயினை, அறுவகைச் சமயமும் அறிந்த நிலை எனச் சிவன் முதலானவர்கள் அறிந்த பெருமை, அறுவகைச் சுவையாகவும், சமயத் தன்மைகளை அறிந்த அறிவாகவும் விளங்கும் திருமாலின் அறிவுச் சிறப்பு உணர்த்தப்பட்டுள்ளது.

ஏழு என வருமிடங்களில்,
ஏழுலகு எயிற்றினில் கொண்டனை, ஏழ்விடையடங்கச்
செற்றனை என வராகமூர்த்தி அவதாரச்
சிறப்பும், அரக்கனை அழித்த சிறப்பும் விளக்கப்படுகிறது.

ஒன்று எண்ணுக்குரிய தொடர்கள் அதிகமாகவும், படிப்படியாக அவை குறைந்து ஏழு என்ற எண்ணுக்குரிய தொடர்களில் ஓரிரண்டு தொடர்களே வருவது போலவும் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இரதபந்தன வகைச் சித்திரக்கவி வடிவில் இப்பாடல் இயற்றப்பட்டுள்ளது. கவிதை முழுவதும் திருக்குடந்தைப் பெருமானின் பெருமை இடம் பெற்றுள்ளது. பக்தியை எண்களில் அமைத்து வெளிப்படுத்த முடியும் என்பதற்கு இப் பாசுரம் ஓர் எடுத்துக்காட்டு.

முடிவுரை


திருமங்கையாழ்வார் பக்தியை வெளிப்படுத்த பல்வேறு யாப்பு வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளார். தப் படைப்புகளில் நாட்டுப்புறப்பாடல் வகைகளையும், வினாவிடை உத்தி முறையையும் கருத்துப்புலப்பாட்டிற்குப் பயன்படுத்தியுள்ளார். திருவெழுகூற்றிருக்கை மூலம் சித்திரக்கவி படைத்துப் பக்தியிலக்கியத்திற்கு வளம் சேர்த்துள்ளார். வட்டாரத் தன்மைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் 86 வட்டாரத் திவ்ய தேசங்களின் சிறப்பைக் கவினுற இயற்கை வருணனைகளோடு இணைத்துப் பாடியுள்ளார். அகப்பொருள் துறையில் நல்ல தேர்ச்சியுடையவராக இருக்கின்ற காரணத்தினால் நெஞ்சை நோக்கிப் பாடுதல், தாய் நிலையிலிருந்து புலம்புதல் முதலான உத்திகளைப் பயன்படுத்தியுள்ளார். நாயக நாயக நிலையிலிருந்து பாடியிருப்பவை இவருடைய அகப்பொருள் துறையின் முதிர்ச்சியைக் காட்டுவனவாகும். மடல் என்னும் துறை வழி புதிய சிற்றிலக்கிய வகையைப் படைத்தளித்த பெருமைக்குரியவர்.
1 comment:

 1. 2016 தைப்பொங்கல் நாளில்
  கோடி நன்மைகள் தேடி வர
  என்றும் நல்லதையே செய்யும்
  தங்களுக்கும்
  தங்கள் குடும்பத்தினருக்கும்
  உங்கள் யாழ்பாவாணனின்
  இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  ReplyDelete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?