வழியில் ஒரு கடையில் புத்தா நீ...
உன்னை வாங்க தூண்டும் மனம்...
உன் சிலையின் மீதான ஆசை கூட
உன் கொள்கைக்கு முரணானது...
நீயோ கனத்த மெனளம் காக்கிறாய்...
உன்னை உனக்கு அடையாளம் காட்டிய
போதி மரம் எங்கே தொலைந்தது?
புடவைகளிலும், ஜாக்கெட்டுகளிலும்,
பைகளிலும்... அழகழகான வண்ணங்களி்ல் நீ.
அரண்மனை விடுத்து,
அன்னையை விடுத்து,
அன்பு மனைவியை விடுத்து,
அருமை குழந்தை விடுத்து
உன் தவத்தின் விளைவாய்
கடவுளே இல்லையென்றாய்...
உன்னையே கடவுளாக்கிவிட்டார்கள்
அப்போது கண்களை இழுத்து மூடினாயோ?
இப்போது விற்பனைப் பொருளானாய்...
இறுகிய உதடுகளின் இதழ்களில்
தென்படும் குறுநகை....
இகழ்ச்சியா....ஞானச் சிரிப்பா?
ஊமையாகி உள்ளுக்குள் குமுறுகின்றன
சொல்ல முடியா வார்த்தைகள்....
மௌனம் உடைக்கவே மொழிகள் முயல்கின்றன.
அதை மறைக்க சிரித்துப் பேசி நடித்தால்
வாழ்க்கை முழுதும் நடிக்க வேண்டி வரும்...
அது தேவையற்றது....
புத்தா உன் கண் மூடலிலும்
இறுகிய உதடுகளிலும்
நீ இன்னும் எதைப் போதிக்கின்றாய்?
மோன நிலையின் அற்புதத்தையா?
சிலையின் மௌனம் கலையாகும்
கடலின் மௌனம் முத்தாகும்
விதையின் மௌனம் மலராகும்
மௌனமே இங்குச் சிறையானால்?
உன் சிலை எனக்கு வேண்டாம்.
உன் மெளனச் சிறை போதும்.
எப்போதும் நீ போதிதான்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?