ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண் நட்பு
ஆணும் ஆணும் கொள்ளும் நட்பிற்கு பண்டைய தமிழ் இலக்கியங்களில்
பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன், பாரி-கபிலர் போன்று
பல ஆதாரணங்கள் உள்ளன. ஆண்-பெண் நட்பிற்கு ஒளவையார்-அதியமானை ஆதாரணம் காட்டுவர். ஆனால்
ஒரு பெண்ணும் பெண்ணும் இணைந்து வாழ்நாள் முழுவதும் நட்போடு இருந்ததற்கான சான்றுகள்
இல்லை. திருமணத்திற்கு முன்பும் பின்பும் ஆண்களைப் போல நட்பு கொண்டோர் பற்றித்
தகவல்கள் இல்லை. இதற்கான காரணத்தை ஆர்.சண்முகசுந்தரம்நாவல்களின் வழி ஆராய்ந்த போது
சில உண்மைகள் பெறப்பட்டன. கல்வி கற்கும்
வாய்ப்பு கிட்டிய பின்பு தான் பெண்கள் தோழியர் வீடுகளில் சென்று தங்கும்
வாய்ப்பைப் பெற்றனர். அத்தோழிகளுக்கு மணமானபின், அவர்
கணவர்களின் பரந்துபட்ட பார்வையின்மையினால் நெருங்கிய நட்பையும் பெண்கள் இழக்கும்
சூழல் ஏற்பட்டு விடுகிறது. விரிந்த மலரிலும், மூன்று அழைப்பிலும்
தோழியரின் கணவர்கள் நடத்தும் காதல் நாடகத்தால் பாலாமணியும், சாவித்ரியும் மனம் வெறுத்து விடுகிறார்கள்.
சாவித்ரி, தோழியரைச் சந்திக்க இயலாதபடியான
மனக்கசப்பு அவளுக்குள் ஏற்பட ஆண்களே காரணமாகியுள்ளனர். இவ்வாறு, பெண்களின் நட்பு அவர்களின் திருமணத்திற்குப் பின்
நீடிக்காமல் போவதற்கு ஆண்கள் காரணமாகி விடுவதால் மேற்கொண்டு புதிய நட்பை ஏற்படுத்திக்
கொள்ளவும் பெண்கள் விரும்புவதில்லை. இதனால், மனதிலுள்ளதைச்
சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொள்ள இயலாத நிலையில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
தன் தோழி சாவித்ரியிடம் கணவன் தவறாக நடந்து கொண்டதைக்
கேட்டவுடன் கமலத்திற்கு ஹோ” வென்று வாய்விட்டு அழ
வேண்டும் போலிருந்தது. அப்போதும் மௌனமாக அழுது கொண்டு தான் எல்லாவற்றையும் கேட்டு
வந்தாள். நிற்க முடியவில்லை. கால்கள் தடுமாறுகின்றன. இது அவள் வீடு. அப்பா, அம்மா, தாத்தா, அக்காளின் குழந்தை லீலா இத்தனை பேருக்கும் என்ன பதில்
சொல்வது? பாம்பு தேள் கொட்டி விட்டால் எந்தப் பயந்தாங் கொள்ளியும் ஏன், சுத்த வீரனும் அலறத்தான் செய்வான். அவளைப் புலி அல்லவா
குதறிக் கிழித்துப் போட்டிருக்கிறது! கமலம் எப்படிக் கத்தலை அடக்கிக் கொண்டாள்?” (மூ.அ.:28) அதற்குப் பின் தன்
தோழியரிடம் அவள் மன்னிப்பு கேட்கிறாள்.
ஆனால், கமலத்தின் கணவன் கோழை
போல எங்கோ சென்று விடுகிறான். மீண்டும் திரும்பி வந்து தன் மீது தவறில்லை என
வாதாடுவான். கமலம் அனுசூயா போன்றவள். கணவனை ஏற்றுக் கொள்வாள். இனி, சாவித்ரி தான் அவள் எரை நினைத்துப் பார்க்க மாட்டாள் (மூ.அ.:67) என்று கூறும் ஆசிரியர் சாவித்ரி யாரிடமும் கூறாமல் வெளியேறி
உறவை முறித்துக் கொள்கிறாள் என்கிறார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?