மனித சமுதாய வரலாற்றில் சமயம், பண்பாடு, அரசியல் முதலிய
காரணங்களால் தோற்றுவிக்கப்பட்ட பல கருத்தியல்களைப் பெண்ணியம் திறனாய்கிறது. நமது
சிந்தனை அமைப்பு மொழி அமைப்பைப் பொறுத்தே அமைகிறது. குறிப்பிட்ட சமுதாயத்தில்
வழங்கப்படும் சொற்கள் அச்சமூகத்தினருடைய பெண்கள் தொடர்பான அச்சமுதாயத்தினரின்
பார்வையைக் காட்டும். ஒரு சமூகத்தில் பெண்களின் தகுதியையும் அவர்கள் தொடர்பான
கருத்தியல்களையும் அச்சமூகத்தின் மொழியை ஆராய்வதன் மூலம் அறியலாம்.
பெண்ணடிமைத்தனத்திற்கு முதற் காரணமாகக் கருதப்பட
வேண்டியவற்றில் சமூக மயமாக்கலும், மொழியும்
முதலிடத்தைப் பெறுகின்றன. ஆண், பெண் இருபாலார் தொடர்பான சமூகக் கருத்தியல்களை அடுத்தடுத்து
தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வது மொழிதான். எனவே, மொழியில்
பெண்களை இழிவு படுத்தும், இரண்டாம் நிலைக்குத்
தள்ளவைக்கும் சொற்களைக் இனங்கண்டறிந்து அதை நீக்க விளக்குகின்ற ஆய்வுகள் பெண்ணியத்
திறனாய்வின் ஒரு பகுதியாக விளங்கி வருகின்றன.
கொங்குச் சமூகத்தில் பெண்கள் தொடர்பாக வழங்கி வருகின்ற பல
சொற்கள் ஆர்.சண்முகசுந்தரத்தின்புதினங்களில் வழங்கி வருகின்றன. கைம்பெண்கள்
தொடர்பான பல சொற்கள் கீழ்நிலையில் வழங்கப்படுகின்றன. முண்டைப்பிராணி (த.வ.:83) பொம்பளமுண்டே (நாக.:83) போன்றவை உணர்ச்சிவயப்பட்ட
நிலையில் இழிவு படுத்தவேண்டி பயன்படுத்தப்படுகின்றன. நாகம்மாளை மரியாதையாக
நடத்திவந்த சின்னப்பன், அவள் சொத்து கேட்கும்
நிலையில் மூக்குப்போன மூதேவி (நாக.:45) பாதகி
(நாக.:94) ஜாலக்காரி (67) பழிகாரி
(நாக.:42) போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றான். ஆண்களுக்கு ஆணையான
சில சொற்கள் பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
கவுண்டர் - கவுண்டச்சி (அ.கோ:11)
துரை - துரைசாணி (அ.கோ:3)
தாத்தா - தாத்தி (கா.சு.:81)
சித்தப்பா - சின்னாத்தா (அ?.இ?.:10) போன்றவை.
சுமங்கலிகளுக்கு, கட்டுக்கழுத்தி” (த.வ.:56) என
வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆணின் வழியே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். நம்ப
ரங்கசாமி முதலியார் மகளயா? (மாயத்தாகம்17) இராமசாமிக்கவுண்டரின் மனைவி (பூ.பி) பெண்ணின் சுய அடையாளம்
புறக்கணிக்கப்பட்டு ஆணின் வழி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது பெண்களின் இரண்டாம்
நிலையையே காட்டுகிறது. சொற்களுக்கு ஆணையான ஆண்பாற் சொற்கள் வழக்கில் இல்லை. எனினும், எழுத்தாளர்கள் சமூகத்தில் பெண்களின் நிலையை ஊயர்த்த
புதினத்தை எழுதி இருந்தாலும்
தன்னையறியாமல்,
பாவம் பெண்தானே என்று பரிதாபப்பட்டு எழுதியிருப்பின்
அதுவும் பெண்ணைத் தாழ்ந்தவளாகச் சித்திரிக்கும் போக்காகவே கருதப்படும்.
தேவானை சுப்ரமணியன் தன்னை ஏமாற்றியதை அறிந்து அவனை அறைந்துவிடுகிறாள்.
அதைத்தவிர அவளால் என்ன செய்துவிட முடியும்? (அ.வ.:69)கைம்பெண் முத்தாயாளைக் குறித்து ” என்ன இருந்தாலும் பெண் தானே? இவளால்
வேறு என்ன செய்ய இயலும்? (பனித்துளி49) என்ற ஆசிரியரின் பரிதாபக் குரல் பெண்ணினத்தை இயலாதவளாகவே
காட்டுகிறது. ஆண் தொடர்பான இழி சொற்கள் புதினங்களில் மிகக் குறைவாகவே
வழங்கப்பட்டுள்ளன.
மேலும், கைம்பெண்கள்
நிர்வாகம் செய்யும் வீடுகள் ஏதாவது சிக்கலில் சிக்கித் தவிக்கும் என்ற எண்ணமுடையவராக
ஊள்ளார். அனேகமாக நாகம்மாளுடைய அரசு தான் வீட்டில் நடக்கிறதென்றாலும்
சின்னப்பனுக்கும் அவனது மனைவி இராமாயிக்கும் இதுவரை எவ்விதமான தீங்கும் ஏற்பட்டதாகத்
தெரியவில்லை”
(நாக.:10) பொதுவாக, ஆண் எழுத்தாளர்கள் ஆண்களுக்கான கதையை ஆண்களுக்குச் சொல்வது
போலவே எழுதிச் செல்கிறார்கள். எனவே, அவர்களின்
படைப்புகளில் ஆணாதிக்கக் கருத்தியல் இடம்பிடித்து விடுகிறது. பெண் தொடர்பான ஒரு
சில முன்னேற்றக் கருத்துக்களை ஆர்.சண்முகசுந்தரம்பிற்காலப் புதினங்களில்
கூறியிருந்தாலும் ஆண்களின் கருத்தியல்களுக்குள்ளாகவே நின்றுகொண்டு தான் அவற்றையும்
வெளிப்படுத்துகிறார்.
பெண் தொடர்பான பழமொழிகளும் பெண்களை இழிவுபடுத்தும் நிலையிலே
தான் உள்ளன. கொமுரிக்கும் நாய்க்கும் குடி போறதிலே கொண்டாட்டம்னு சொல்லறது (ச.சு.:35) வௌம்பா முண்டே வெறகுக்குப் போனா வெறகு சிக்கினாலும்
கொடிசிக்காது (ச.சு.:63) இவ்வாறு பெண்
தொடர்பான பழமொழியிலும் பெண்ணை இழிந்தவளாக, நிர்வாகத் திறமை அற்றவளாக, பிரிவினை
எண்ணமுடையவளாக அவளுடைய நிர்வாகம் குறைபாடுடையதாக இருக்கும் என்ற நோக்கில்
சித்திரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?