நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday, 13 April 2020

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண்நிலை


ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண்நிலை



பெண்பிறப்பு


ஆண் குழந்தைகளைப் போலப் பெண் குழந்தைகள் விரும்பப்படுவதில்லை. “சாண் பிள்ளை ஆணாலும் ஆண் பிள்ளை என்றும் “ஆம்புளப்புள்ள பிறந்ததுக்கு ஒன்பது குலவைப் போடு என்றும் கொண்டாடும் சமூகத்தினர் பெண் குழந்தைகளை இழிபிறப்பாகவே கருதுகின்றனர். பெண் குழந்தைப் பிறப்பை, நாலாம் பேற்றுப் பெண் நாதங்கியை விற்று உண்ணும், அஞ்சாவது பெண் பிறந்தால் அரசனும் ஆண்டியாவான். ஆறாம் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் ஆனான குடித்தனமும் நீராய்விடும், எட்டாம்பேறு பெண் பிறந்தால் எட்டிப்பார்த்த வீடும் குட்டிச்சுவர் என்றும் தங்களின் துயரத்திற்குப் பெண்ணை மாற்றாக காட்டுப்பழக்கம் நாட்டுப்புறத்தில் நிலவி வருகிறது. ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு, திருமணத்தில் கொடுக்க வேண்டிய வரதட்சணை, சீர் போன்றவற்றிற்குப் பயந்து பெண் பிறப்பையே வெறுக்கின்றனர்.


பெண் பிறத்தல் எற்றுக்கு? பின் தாயாகி, உயிர்களை ஈன்று, உலகத்தை வளர்ப்பதற்கன்றோ? பெண் பிறவி இல்லையேல் கடவுளின் படைப்பு நோக்கம் எங்ஙனம் நிறைவேறும்? கடவுளின் படைப்பு நோக்க நிறைவேற்றத்துக்குப் பிறந்த பெண்ணைக் கண்டு கலக்கமுறுவது அறியாமை என்பார் திரு.வி.க. (1998:65) ஆனால், இது போன்ற கூற்றுகள் ஏட்டு அளவிலே நின்றுவிட்டன. சமூகத்தில் எம்மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படவில்லை.

சமுதாயம் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் பிறப்பு முதல் வேறுபடுத்தியே பார்க்கிறது. பெண் குழந்தைகளுக்குப் பிறப்பே முதல் சிக்கலாகி விடுகிறது. பல குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டுவிடுகின்றன. இதையும் மீறி பிறக்கும் குழந்தைகள் சரியாகப் பராமரிக்கப் படாமல் இறந்து விடுகிறார்கள். சரியான மருத்துவ வசதி கொடுக்கப்படுவதில்லை. இவர்களின் உடல் உழைப்பு சுரண்டப்படுகிறது. கல்வி கொடுக்கப்படுவதில்லை. பெண், உணவிலிருந்து உரிமை வரை இரண்டாம்தர நிலையிலேயே நடத்தப்படுகிறாள். பெண் குழந்தை பிறந்தவுடன் தந்தை பாதுகாப்பிலும், மணமானபின் கணவனின் பாதுகாப்பிலும், மகன் பிறந்தால் மணமானபின் தந்தை மகனின் பாதுகாப்பிலும் என்ற வளையத்துக் குள்ளேயே வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டிய நிலை பலவந்தமாக உருவாக்கப்பட்டது. இதனால், பெண் பிறப்பு எனப்படுவதே பெரும் சிக்கல்க்குரியதாகக் கருதப்படுகிறது.” (சிவகாம சுந்தரி.சு, 1998:41)

மேலும், இந்துக் குடும்பங்களில் பெற்றோருக்கு இறுதிக் கடன்களை ஆண் மகன்தான் இற்ற வேண்டும் இல்லையெனில் பெற்றோர் இறந்தபின் நரகத்திற்குத் தான் செல்வர் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் ஆண்பிள்ளைகளையே விரும்புகின்றனர். பெண் பிறந்த வீட்டிலிருந்து திருமணமாகிப் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுகிறாள். பெற்றோர் இறுதிக் காலம் வரை ஆண் குழந்தைகளால் தான் பராமரிக்கப்படுகின்றனர். மேலும், பெண்ணுக்குச் செலவழிக்கும் பொருள் அனைத்தும் வீணே. பெற்றவர்களுக்குப் பெண் எவ்விதத்திலும் ஊதவ மாட்டாள் என்ற எண்ணம் நிலவி வருகிறது. அவள் கணவன் இறந்தாலோ, அவளைக் கைவிட்டாலோ அவள் பிறந்த வீட்டிற்கே திரும்பி வந்து பெற்றவர்களுக்கு மேலும் சுமையைத் தருகிறாள்.

இக்காரணங்களினால் கொங்குச் சமூகத்தில் முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்து விட்டாலே அதைச் சலிப்போடு ஏற்றுக் கொள்ளும் நிலை நிலவி வருவதை அழியாக்கோலம் புதினம் காட்டுகிறது. பெற்றவளே, ஒயோ! பொம்பளையாப் போச்சே என்று அங்கலாய்ப்பாள். தலை நாளில் புள்ளை தானா என்று மற்ற மனிதர்கள் சப்புக் கொட்டுவார்கள் (அ.கோ:154) முதல் குழந்தை பையனாக இருந்து இரண்டாம் குழந்தைப் பெண்ணாகப் பிறந்தாலும் இதே நிலை தான். இதே புதினத்தில் வரும் மாரக்காள் இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்தபோது, பெண்ணாப் போச்சே (ப-156) என்று கவலைப்படுகிறாள். செல்வம் பெருகவே அக்கவலையை மறந்து விடுகிறாள்.

உதயதாரகையில் அருக்காணிக்கு முதல் குழந்தைப் பெண்ணாகப் பிறந்து விடுகிறது. ஆண் பிறக்கவில்லையென்று அவள் மாமியார் அழுகிறாள். பெற்ற தாயே புள்ளெதானுங்க   (ப-60) என்று சலிப்போடு கூறுகிறாள். இணுக்கு இருக்கிற மதிப்பு பெண்மைக்கு அங்கே அளிக்கப்படவில்லை” (ஊ.தா.:61) என்று ஆசிரியர் கூறுகிறார். கொங்கு நாட்டில் பெரும்பாலான குடும்பங்களில் ஒரே மகன்தான் இருப்பான். தனிமரம் தோப்பாவதில்லை என்ற பழமொழிகளெல்லாம் இவர்களிடம் செல்லுபடியாவதில்லை” (சிவ அரசி முத்துக்காளத்தி, 2001:95)

பெண்களுக்குத் திருமணத்தின் போது ஆகும் செலவுகள், நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமேயென்ற கவலை, ஆண்களின் போக்கு, சுற்றம் பற்றிய அச்சம் போன்றவையே பெற்றோர்களுக்குப் பயத்தைத் தருகின்றன. பொட்டைக் கெரகத்தினாலே நாளுந் துக்கம் துக்கந்தானக்கா. இப்பப்பாரு, பெரிய பண்ணாடிக்கு வேலாத்தா இல்லீண்ணா சடவே இருக்காதே! எவங் கையிலேயோ அந்தக் கெரகத்தைப் புடிச்சுக் குடுக்கற மட்டும் அவருக்குக் கூட்டிலே உசிர் இருக்குமா? திங்கற சோறு செறிக்குமா?” (ச.சு.:66) என்று பெண்களே பெண்ணைச் சுமையாகக் கருதிப் பேசுகின்றனர். பெண் பிறப்பதே ஆணுக்கு மனைவியாகித் தொண்டு செய்வதற்காகத்தான் என்ற கருத்தியலினால் அக்கடமையை நிறைவேற்றும் வரை அவளைப் பெரும் சுமையாகவே கருதுகின்றனர்.

எவ்வளவு அன்புடன் இருந்தாலும், அவள் பெற்றோரிடம் இருந்துவிட முடியாது. அவளுடைய ஒவ்வொரு செயலிலும் அவள் புகுந்த வீட்டிற்குச் செல்வதைப் பற்றியே குறிப்பிடப்படுகிறது. இதனால் பிறந்த வீட்டில் பிறப்பு முதலே இரண்டாம் நிலையை இயல்பாய் ஏற்றுக் கொள்கிறாள். பெண்பிறப்பே பெற்றோருக்குச் சுமை என்று வளர்க்கப்படுவதால் எதையும் எதிர்க்கும் துணிவும் இழந்து விடுகிறாள். திருமணம் என்ற நிகழ்வும் கூட அவளை இன்னொரு ஆணின் ஆளுமைக்குள் அவள் அடங்குவதற்கான சடங்கு என்றே போதிக்கப்படுகிறாள்.
“கண்ணாத்தா நீயும் வாரதானே?”  உன்னை அடக்கறவன் எந்த ஊர்லே இருக்கிறாண்ணு கேட்டுப் பார்க்கறேன். எல்லோரும் சிரித்தார்கள். நாச்சக்காளுக்குப் பொறுக்கவில்லை. “அதென்ன நங்கை புருசனா வாரவன் பொம்பளையை அடக்கறதுக்குத்தான் வாரானாக்கும் என்றாள். “இல்லே பூப்போட்டுக் கும்பிடறதுக்கு வாரான்” (ச.க. 63) என்று கிராமத்து உரையாடலைக் காட்டுகிறார்.

பெண்ணாகப் பிறந்துவிட்டால் ஒருவனை மணந்து அவனுக்கு அடங்கி வாழ்வதுதான் அவளுடைய பிறவிப்பயன் என்ற கருத்தோட்டத்திலேயே பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள். மேலும், பெண் குழந்தைப் பிறப்பு இன்றைய நிலையில் மட்டுமின்றி அன்றைய சமூகத்திலும் வெறுக்கப்பட்டு வந்துள்ளதை, சீதை, திரௌபதி, வள்ளி, ஆகிய  புராணப் பெண் மாந்தர் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளே” (தாயம்மாள் அறவாணன், 2002:101) என்ற கூற்று காட்டுகிறது.

5.3.0. குழந்தை வளர்ப்பு
ஆண் குழந்தைகளைப் பெருமையாகவும், பெண் குழந்தைகளைச் சுமையாகவும் கருதி வளர்ப்பது சமுதாயத்தின் நடைமுறையாக உள்ள ஒன்று. ஆனால், ஆணை அடித்து வளர்க்க வேண்டும் பெண்ணைப் போற்றி வளர்க்க வேண்டும்என்பது கொங்கு நாட்டுப் பழமொழி. அதைக் குறிப்பிடும் ஆசிரியர் இருவரையும் போற்றித்தான் வளர்க்க வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறார். ஆண் பிள்ளையை அவர்கள் குடும்பத்தில் அடித்து வளர்க்கவில்லை. அடியாத பிள்ளை - கதிர்வேலு, படியாது என்பது பொய்!  படிப்பிலும் கெட்டி!” (கா.சு.:211) பெண் குழந்தையைப் போற்றி வளர்த்தார்கள்....... இப்படிச் செல்லம் கொடுக்கிறீர்களே! இதுக்கு நாளை உலகம் தெரியுமா? உதவாக்கதை ஆகாமல் உருப்பட வேண்டுமா! என்று தங்கள் கவலையைக் காட்டுமளவு - அத்தனை செல்லம் கொடுத்தார்கள்.  (ப-211) இப்படிப் போற்றி வளர்க்கப்பட்ட இருவருமே படிப்பில், பண்பில் சிந்தனையில் சிறந்து விளங்கினார்கள்.

இளவயதில் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையும், நற்கருத்துக்களையும் மனத்தில் பதியும் வண்ணம் கூற வேண்டும். இளங்குழந்தைகளின் இதயங்களில் வருங்காலக் கனவுகள் உருவாகி வருகிறது. பெண் தீய வழியில் வளர்ந்து வருவளேல், அவள் வழித் தோன்றும் உலகமும் தீயதாகும் பெண் நல்வழியில் வளர்ந்து வருவளேல் அவள் வழித்தோன்றும் உலகமும் நல்லதாகும்” (திரு.வி.க. 1998:65)
கமலத்திற்கு தாத்தா கூறிய கதைகள் பசுமையாக மனதில் தங்கி விடுகிறது. அதன் விளைவாக படிப்பின் மீது இர்வம் கொண்டு பிரவ்னிங் போல கால முழுதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள். அந்தப் பச்சிளம் பாலகியின் மனத்தில் தாத்தா பதித்திட்ட பண்டைக் காவிய நாயகிகளின் கருணாரஸ ரீங்காரம், சித்தர்களின் சித்து விளையாட்டு, வீரர்களின் வீரவாழ்வு, மகான்களின் அருளொளி போன்றவை சதா வட்டமிட்டுக் கொண்டேயிருக்கின்றன.” (கா.சு.:) அதனால், மனித குலம் முழுமைக்கும் சேவை செய்வதற்கான உலக சமாதானப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறாள். சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாள்.

ஆசையும் நேசமும் மீனாட்சிக்கு சிறுவயதில் தாடித்தாத்தா கூறிய கதைகளினால் படிக்க ஆர்வம் பெருகுகிறது. அவளுக்குப் பால பாடத்தையும் வாங்கித் தருகிறார். தானாகவே எழுத்துக் கூட்டிப் படிப்பில் படித்து தேறி விடுகிறாள். இறாம் வகுப்புப் பாடத்தையும் நான்காம் வகுப்புப் பாடத்தையும் எளிதாகப் படிக்கக் கற்றுக் கொள்கிறாள். அல்லி அரசாணிக் கதையைக் கேட்டு தன்னை அல்லியாகக் கற்பனை செய்து கொள்வாள். அல்லி யாருக்குமே அடங்கவில்லையாம்! அந்த ராணியின் கட்டளைக்குத்தான் மற்றவர்கள் கீழ்ப்படிந்தார்களாம்!” (ப-170)

பிற்காலத்தில் தன் சொற்பொழிவால் நல்ல பேரைப் பெற்றதற்கான விதை அவளுடைய பத்து வயதிலேயே இடப்பட்டு விடுகிறது. பெண்கள் தற்சார்புப் பெற்றுத் தங்கள் முழுத்திறனை உணர்வதற்குண்டான வகையில் அவர்களை வளர்க்க வேண்டும். திருமணம் என்பதை  அவளுடைய வாழ்க்கையின் இலட்சியமாகக் கொள்ளாமல் பொறுப்புகளும் இருக்கின்றன என்ற நோக்கில் வளர்க்க வேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் எனத் தனித்தனி நடத்தைகளை வரையறுப்பது தேவையற்றது எனக் கருதும் ஆசிரியர், மீனாட்சியை தன்னியல்பான இயல்புடையவளாகப் படைக்கிறார்.

பல ஊர்களில் நடக்கும் சொற்பொழிவுகளுக்கும் அவள் தனியாகவே சென்று வருகிறாள். இரவு நேரங்களில் பயணம் செய்வதற்கும் அவள் அஞ்சுவதில்லை. காலேஜ், பள்ளிக் கூடங்க, ஆபீஸ்களுக்கு அது மாத்திரமா ரயில்வே பஸ்ஸிலே நடந்தும் தான் போகிற பெண்களுக்கு யாரு துணை? அவுங்களுக்கு அவுங்களே தான் துணை” (ப-158) என்று கூறுகிறார். சிறு வயதிலிருந்து துணிச்சல் பெற்றவர்களாக எதையும் சமாளிக்கக் கூடியவர்களாகப் பண்புடன் பெண்கள் வளர்க்கப்பட்டால், பிற்காலத்தில் அவர்களே தங்களைத் தற்காத்துக் கொள்வார்கள் என்ற கருத்தைக் காணாச்சுனை நாவல் காட்டுகிறது. பெரியம்மா கமலத்திற்காக ரயில்வே ஸ்டேஷனில் காத்திருப்பதாக நடராஜன் பொய் கூறி அவளை அழைத்துச் செல்கிறான். அவன் கூறியது பொய் என அறிந்ததும் கமலத்தின் கண்கள் நெருப்பைக் கக்கின. அவள் முகத்தை அவன் பார்க்கவே அஞ்சினான்.” (ப-208) காலில் விழுந்து கும்பிட்டு ஒடி விடுகிறான்.

பொது அறிவைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பு, நகரச் சூழலில் தங்கும் வாய்ப்பு, சமூக உணர்திறன், உலக அறிவு போன்றவற்றைப் பெறும் பெண்கள் எச்சூழலையும் சமாளித்து முன்னேறுவர் எனலாம். கற்றறிந்த நபர்கள் நற்கருத்துக்களைக் கூறி வளர்க்கும் பொழுது, பெண் குழந்தைகளும் பிற்காலத்தில் நல்லவர்களாக வல்லவர்களாக மாறி, குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கின்றனர். தவறான நடத்தையுடைய நபர்களுடன் குழந்தைகள் பழகும் போது தவறான முடிவை எடுத்து விடுகின்றனர். குஞ்சாள் சுறுசுறுப்பும் அறிவும் உடையவள். ஆனால், பாப்பா என்ற நாடக நடிகையுடன் அவள் கொள்ளும் பழக்கம் அவளை அறியாமையில் மூழ்கடித்து அவள் உயிரைப் பறித்துவிடுகிறது.

5.4.0. கல்வியும், சமுதாயமும்
கல்வியின் இன்றியமையாமை பற்றிக் கூறாத சான்றோர்களே இல்லை. சமுதாய மேன்மைக்கும் தாழ்விற்கும் காரணமாக இருப்பது கல்வியே என்பது வள்ளுவர் கருத்து. மனிதனுக்கு வரும் துன்பத்தை அறிந்து அதைத் தீர்த்துக் கொள்ள ஊதவும் அறிவைக் கொடுப்பது கல்வி மனதைத் தீய வழியில் செல்லாமல் தடுத்து நிறுத்த ஊதவும் அறிவைத் தருவது கல்வி. இக்கல்வியின் பெருமையை நான்மணிக்கடிகை, கல்வி போல ஒருவனுக்குப் பயன் தருவது வேறொன்றில்லை (31) கல்வியறிவில்லாதவன் உடம்பு பெற்றிருந்தும் பயனற்றவன் கல்வியறிவு பெற்றவன் சிறிது நடத்தையில் தவறினாலும் அதைத் தெளிந்து தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு எழுந்து விடுவான்.   கல்லாதவனோ வகை தெரியாமல் கெட்டு அழிந்து போவான் (74)” தெளிவாகக் கற்றறிந்தவன் சிக்கல்களைச் சமாளித்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்வான் (18) என்று கூறும். கல்வி என்பது சமுதாயம் மேன்மை பெறுவதற்கான கொள்கைகளில் வெற்றி பெற வழி காட்டும் கருவி, சமுதாய வளர்ச்சியை அளக்கப் பயன்படும் அளவுகோல்  (இராமலிங்கம். பாஞ்., 2000:30)

கல்வி மனிதனின் உள்ளார்ந்த திறனை வெளிக் கொணரும் இடகமாகவும் விளங்குகிறது. மேலும், இக்கல்வி மனிதர்களின் மன ஆற்றலைப் பண்படுத்தி நற்பண்புகளை உருவாக்கும் சாதனமாகவும் அமைகிறது. பின்னர், அச்சாதனமே மனிதனை நல்வழிப்படுத்தும் பயிற்சியாகவும் அமைகிறது இவ்வாறு கல்வியின் பெருமையைப் பல சான்றோர்கள் கூறிச் சென்றுள்ளனர். அறிவின் பெருமையைக் கூறும் நூல்கள் ஆடவரின் கல்வி பற்றி மட்டுமே கூறுவதாகச் சமுதாயத்தினர் கருதியதன் விளைவு பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது.

ரிக் வேதகாலத்தில் பெண் கல்வியும் பெண்ணுரிமையும், இன்மீக நெறியில் மேன்மையுற்றிருந்தாலும் காலப்போக்கில் மிக விரைவாகப் பெண்ணடிமைத்தனம் புகுத்தப்பட்டுவிட்டது. புத்தர் காலத்துக்கு (கி.மு. 510க்கு முன்பே) பெண்களுடைய உரிமையைப் பறிக்கும் சாத்திர விதிகள் இயற்றப்பட்டு விட்டன.” (மணி.பெ.சு. 2000,:45) சங்க இலக்கியப் பெண்கள் பற்றி அழகம்மை, பெண் குழந்தைகள் வாழ்வில் கற்க வேண்டியது என்பது இல்லப் பணியேயாகும். ஆடவர் வெளியே ஆனிரைகளை மேய்க்கப் பெண் இல்லிலிருந்து கடமையாற்ற வேண்டும் என்ற வேலைப்பகுப்பு, பெண்ணை இல்லப் பணிகளுக்குரியவளாக்கியது. இல்லப்பணியில் பெண்ணின் குடும்ப இலக்கு நான்காகிறது. அவைப் புதல்வரைப் பெறுதல், கணவரைப் பேணல், இற்றியிருத்தல், விருந்தோம்பல் ஆகியவையாகும்”. (2001:118) என்று பெண்கள் இல்லத்திற்குள் முடக்கப் பட்டதைத் தெளிவாக்குகிறார்.

இந்தியாவில் விடுதலைப் போராட்ட கால கட்டத்தில் இக்கருத்தில் மாற்றம் ஏற்பட்டது. பாரதியார், வ.ரா, திரு.வி.க., பாரதிதாசன் போன்ற பெரியவர்கள் பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பல படைப்புகளை வெளியிட்டனர். பெண்களுக்குக் கல்வி கொடுத்தால் சமுதாயம் கெட்டுப் போய்விடும் என்று இதற்கு பலர் மறுப்பு தெரிவித்தனர். பிறர் தமது கண்முன் ஸ்வேச்சையுடன் வாழ்வதைத் தாம் பார்க்கக் கூடாதென்று அசூயையால் சொல்லுகிறார்களேயொழிய வேறொன்றுமில்லை.” (தூரன். பெ., 1978:93) என்கிறார் பாரதியார்.
மேலும், ஜாதி வித்தியாசமும், பாலிய விவாகமும், விதவா மணமும் மற்றும் அநேக விடயங்களும் ஒதுக்க முடியாதவாறு மனத்தை வருத்துகின்றன. இத்தூரப் பியாசங்களுக்கெல்லாம் ஆதாரமாகப் பெண்டிர் நிற்கின்றனர். அவரித்தேசவிருத்திக்கு விரோதிகளாயிருப்பதினாலேயே ஆசாரச் சீர்திருத்தச் சபையோரில் அநேகர் சுறுசுறுப்பாய் வேலை செய்யாது போந்தனர். இதற்குத்தக்க ஒளஷதம் கல்வியேஎனக் கூறுகிறார் (மணி.பெ.சு, 1989:39)

“கல்வி இல்லாத மின்னாளை வாழ்வில் என்றும் மின்னாள் என்று பாரதிதாசன் கூறுவதோடு குடும்பம் நடத்துவதற்கும் மக்களைப் பேணுவதற்கும் கல்வி அவசியம் என்கிறார். கல்வி கற்காத பெண்களால் துயருரும் குடும்பத்தை இருண்ட வீட்டிலும், கல்வி பெற்ற பெண்ணால் உயரும் குடும்பத்தைக் குடும்ப விளக்கிலும் படைத்துக் காட்டியுள்ளார். கல்வி கற்காத பெண்கள் வாழும் வீடு சுடுகாடு அங்கு எல்லா நோயும் தாண்டவமாடும், கல்வி கற்காத பெண்கள் களர் நிலத்திற்கு ஒப்பானவர்கள் அங்குப் புல் விளைந்திடும் புதல்வர்கள் விளைவதில்லை என்பார். ஆண்மகன்களைப் பெற்றெடுத்துச் சான்றோனாக்குவதற்குப் பெண்ணிற்கும் கல்வி அவசியம் என்பது பாரதிதாசனின் கருத்து.

ஆர்.சண்முகசுந்தரம்வின். புதினங்களும் கல்வியால் பெண் பெரும் பயன்களையும், கல்வியின்மையால் நேரும் கேடுகளையும் படிப்படியாக எடுத்துரைத்துச் செல்கிறது.

5.4.1. ஆர்.சண்முகசுந்தரம்புதினங்களில் பெண்கல்வி
கொங்குப் பகுதி சிற்றூர்கள் வறட்சியானவையாதலால் பெண் குழந்தைகளை மட்டுமின்றி ஆண் குழந்தைகளையும் கல்விக் கூடங்களுக்கு அனுப்பாமல் குலக்கல்வியையே போதித்தனர். வருடத்திற்கு பத்து வள்ளம் கம்புக்கும், எட்டுவள்ளம் சோளத்திற்கும், ராகிக் கூழுக்குமாக அடிமைச் சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டுப் பண்ணைகளில் அவதிப்படுகிறதைப் பார்க்குந் தோறும் சாமிக்கவுண்டர் அந்தப் பேசும் பொற் சித்திரங்களைப் பெற்றெடுத்த புண்ணியவாளர்களை எண்ணி இரங்குவார். வசதியுள்ள குடும்பத்தினர் தான் பிள்ளைக் கனியமுதுகளின் எதிர்காலத்தைச் சிந்தித்தார்களா? எதற்காக சிந்திக்க வேண்டும். இருப்பதை வைத்திருந்தால் இதுவே போதும் என்றிருந்தனர்.” (ச.சு:44)

ஆனால், ஒரு சிலர் ஆண் குழந்தைகளை மட்டும் கல்விக் கூடத்திற்கு அனுப்பத் தொடங்கினர். அருகிலுள்ள நகரங்களான திருப்பூர், கோவை போன்ற பகுதிகளுக்கும் அனுப்பி படிக்க வைத்தனர். மாரியப்பனை இராமசாமிக் கவுண்டர் திருப்பூரில் படிக்க வைக்கிறார். (பூ.பி.20) சாமிக்கவுண்டர் திருப்பூர் பள்ளிக் கூடத்தில் படிக்க வைக்க பையன்கள் இருவரையும் அவர் அழைத்துச் சென்ற போது ஊரே விசித்திரமாகப் பார்த்தது”. (ச.சு.:44) ஆனால், பெண்களைப் படிக்க அனுப்பவில்லை. புள்ளைக படிச்சு அரசாளப் போகுதுங்களா? எவன் கையிலோ புடுச்சுக் குடுக்கப் போறோம்” (?? :14)  எவனையோ கட்டிக்கிட்டு பிள்ளைகள் பெத்துக்கிட்டு இருக்கவே அவர்கள் லாயக்கு கை நிறையப் பணத்தை விட்டெறிந்தால் கழுதை கூட குடும்பத்தை நடத்தும்” (கா.சு.:136) என்ற எண்ணம் நிலவியதால் பெண்கள் கல்வி கற்க விரும்பிய போதும் அதை மறுத்து விடுகின்றனர்.

செல்லாயாளுக்கு மாரியப்பனைப் போலத் திருப்பூர் சென்று படிக்க ஆசை. ஆனால், அவள் தந்தை மறுத்து விடுகிறார். (பூ.பி.:20) லட்சுமியும் நன்றாகப் படிக்கக் கூடியவள். கல்லூரிக்குப் போக ஒற்றைக் காலில் நின்றாள். அவள் தகப்பனுக்கு அது எட்டிக்காயாகத் தோன்றியது. (கா.சு.:66)

மகன்களைத் திருப்பூர் பள்ளிக் கூடத்திற்குச் சென்று படிக்கவைக்கும் சாமிக்கவுண்டர் மகளை தூக்கிக் கொஞ்சுவது கூட இல்லை. இறுதிக் காலத்தில் மகன்களை வெறுத்து மகளோடு வாழ நேரும் போது மகன்களுக்குப்பதில் மகளைப் படிக்க வைத்திருக்கலாம் என்று எண்ணுகிறார். (ச.சு.:133) அப்படி பெண்களைக் கல்விக் கூடத்திற்கு அனுப்பினாலும் பாட இடைவேளையில் வீட்டு வேலைக்கு வரவழைத்துக் கொள்கின்றனர் (ஊ.தா.:20)

இதனால் கல்வி மறுக்கப்படும் பெண்கள் மரபுப்பிடிக்குள் சிக்குண்டு, பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். ‘பூவும்பிஞ்சம்‘ செல்லாயாள் மற்றும் ‘அறுவடை‘ தேவானை போன்றோர் பொருந்தாமணக் கொடுமைக்குப் பலியாக்கப்படுகின்றனர். பெண்களுக்குக் கல்வி அளிக்கப்பட்டால் அவர்கள் விழிப்புணர்வு பெற்று விடுவார்கள் என்று அஞ்சியே பெண் கல்விக்குத் தடை விதித்துள்ளனர்.

குடும்ப அமைப்பில் பெண் அடங்கித்தான் இருக்க வேண்டுமென்று சட்ட திட்டங்களையும், பழக்கவழக்கங்களையும் உருவாக்கி வளரும் போதே அவர்களின் சிந்தனை செய்யவிடாதபடி கட்டுப்பாடுகளை விதித்து விடுகின்றனர். இதனால், பொருந்தாமணக் கொடுமைகளுக்கு ஆளாகும் இளம் பெண்கள் சிறுவயதிலேயே விதவையாகி விடுகின்றனர். மேலும் தேவானை போன்ற பெண்கள் காதல் என்ற பெயரால் ஏமாற்றப்படுகின்றனர்.

கல்வி பயின்று உடலியல், உயிரியல், ஒழுக்கவியல், அன்பியல் முதலியவற்றைப் பெண் மக்கள் செவ்வனே உணர்வாரேல் அவர்கள் கனவிலும் தீயொழுக்கத்தை நினையார்கள்” (திரு.வி.க., 1998:77) கல்வியின்மையால் இது போன்ற கேடுகள் சமூகத்தில் ஐராளமாய் நிகழ்ந்து உள்ளன. அதுமட்டுமின்றி, படிக்கறது எப்பவுமே நல்லது. ஒரு காயிதம் வந்தது. படிக்கத் தெரிஞ்சாத்தானே நாமப் படிக்கலாம். இல்லாட்டி இன்னொருத்தர்கிட்டே போக வேண்டியதுதான்” (?? :62) என்று படிப்பின் அவசியத்தை ஆர்.சண்முகசுந்தரம் உணர்த்துகிறார்.



5.4.2. பெண்கல்வி
மாறிவரும் நகரச் சூழலின் காரணமாகச் சிலர் குடும்ப எதிர்ப்பையும் மீறிப் பெண்களைக் கல்விக் கூடங்களுக்கு அனுப்பியதோடு, மேற்படிப்பிற்காக வெளியூரிலும் தங்க வைத்தனர். இதயதாகம் கமலம் ஒரே பெண் என்பதால் அவளுடைய தந்தை கோவையில் படிக்க வைக்கிறார். அங்கு, அவர் தம்பியின் மகன் வீடெடுத்துத் தங்கியிருக்கிறான் என்ற பாதுகாப்பு உணர்வு அவரிடம் உள்ளது. சிற்றூர்களிலிருந்து நகரத்திற்குச்  சென்று படிக்கும் பெண்கள் அந்நாகரிகத்தின் போக்கை உணர முடியாமல் வழி தவறிப் போய்விடுவதுண்டு.

கமலமும் காந்திமதியின் நட்பை உண்மையென்று நம்பி ஏமாந்து போகிறாள். அவள் அறியாமல் ஆராயாமல் கொண்ட நட்பு அவள் மீது களங்கம் ஏற்படக் காரணமாகி விடுகிறது. “உற்றது உரையாதார் உள் கரந்து பாம்புறையும் புற்றன்னர் புல்லறிவினர்” (நான்மணிக்கடிகை : 57) என்ற கூற்று காந்திமதிக்குப் பொருந்தும். ஆனால், சட்டிசுட்டதடாவில் மாரப்பன், மீனாட்சி என்ற பெண்ணுடன் திருமண நாளில்  மண மேடையில் மணப்பெண்ணைக் கைவிட்டு ஒடி விடுகிறான். ஆனால், அவனுக்கு வாழ்க்கையில் எப்பாதிப்பும் ஏற்படுவதில்லை. எனவே, நகரத்திற்குச் சென்று கல்வி கற்ற பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே ஆசிரியர் கூறும் செய்தியாகும்.

ஆண்கள் கல்வி கற்பதற்குப் பெண்களை அனுப்பினாலும், பெண்கள் அறியாமையினால் அதற்குத் தடை விதித்துள்ளனர். இதயதாகம் கமலம் மற்றும் காணாச்சுனை கமலம் போன்றவர்களுக்குத் தாய் மற்றும் மூத்த பெண்கள் தடை விதிக்கின்றனர். அந்த சனியன் பிடிச்ச படிப்பு இல்லாட்டி என்ன? நீ என்ன படிச்சுக்கிட்டு வந்து பெரியாத்தாளுக்கு கை நிறையக் குடுக்கிலேயேண்ணு சமஞ்சுக்குவா போறா? (கா.சு.:22) என்று தடை போடுகின்றனர்.

பெரும்பாலும் பெண்கள் பள்ளி இறுதி வரை தான் படிக்கவைக்கப்படுகின்றனர். பொதுவாகக் குடும்பத்தில் போதிக்கப்படுகின்ற அறிவுரைகளில் முக்கியமானது எதிர்காலக் கணவனுக்காக அவள் சிறு வயதிலிருந்தே பயிற்சியெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே. திருமணமே அவளது பிறவிப்பயன், வாழ்வின் இலட்சியம் என்று போதிக்கப்படும் பெண் மேற்கல்வி குறித்துச் சிந்திப்பதில்லை. விரிந்தமலர், அழியாக்கோலம், சட்டிசுட்டதடா, அதுவா?இதுவா? போன்ற புதினங்களில் இப்போக்கே தென்படுகிறது.

பாலாமணியை அவள் பாட்டி மருத்துவத்திற்குப் படிக்க வைக்க ஆசைப்படுகிறாள். இதே ஊரில் ஒரு பெரிய ஆஸ்பத்திரி கட்டி தன் பேத்தி டாக்டர் அம்மா, டாக்டரம்மா என்று நானா திசைகளிலிருந்தும் பலர் பிரசவத்திற்க வந்து சிரித்த முகத்தோடு குழந்தைகளைப் பெற்றெடுத்து வீடு திரும்ப வேண்டும்.” (வி.ம.:87) அதற்குக் காரணம் அவளது ஒரே மகள் பிரசவத்தில் இறந்து விடுகிறாள் என்பதே. ஆனால்,  அவர்களது ஒரே ஆதரவான மகன் இறந்தவுடன் தன் கொள்கையை விட்டுவிடுகிறாள். எண்பது வயதைக் கடந்த நிலையில் தன் மரணத்தை நினைத்து அச்சப்படுகிறாள். நீ டாக்டரம்மா ஆக வேண்டாம். படிச்சது போதும்!  நான் கட்டை சேர்வதற்கு முன் உனக்கு ஒரு கால்கட்டுப் போட்டுவிட்டுப் போக வழி பண்ணம்மா என்று தினம் பத்து தரம் முறையிட்டாள்” (வி.ம.:46) பெண்ணுக்குத் திருமணமே பாதுகாப்பு என்ற சிந்தனையில் ஊறிவிட்டதால் பாலாமணியும் உடன் திருமணம் செய்து கொள்கிறாள்.

அதுவா?இதுவா? அருக்காணி சிறுவயதில் தன் பெற்றோர் சேர்த்த பள்ளி பிடிக்காமல் தானாகவே வேறு பள்ளி சென்று சேர்ந்தவள். திருமண விசயத்தில் தன் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை விடுத்து, தனக்குப் பிடித்த மாப்பிள்ளையோடு வாழ்க்கை தொடங்கக் கிளம்பிவிடுகிறாள். மேற்படிப்பு பற்றி இப்பெண்கள் எவ்விதச் சிந்தனையும் கொண்டிருப்பதில்லை.

5.4.3. கல்வியின் பயன்
லட்சுமிக்கும் அவளது  தந்தை பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் திருமணத்திற்கு நிச்சயம் செய்கிறார்.  பெண்கள் திறம்பட எதையும் செய்யத் தெரியாதவர்கள் என்பதே நாராயண முதலியின் கருத்து. வியாபார நிமித்தமாகப் பல அலுவலங்களுக்குச் செல்லும் நிலையில் அங்குப் பெண்கள் பணியாற்றுவதை வியப்புடன் பார்க்கின்ற அவர், மேஜைக்கு எதிரே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, பேனாவை வைத்துக் கொண்டு, என்ன யோசிக்கிறார்கள்? என்ன எழுதுகிறார்கள்? இவர்களுக்கு கூட்டல் கணக்கு சரியாக வருமா? (கா.சு. :136) என்று நினைக்கிறார். கிராம சேவகிகள் கிராமங்களில் சுற்றி வருவதைப் பார்க்கும் அவர் படிச்சதுக்கு கிடைச்சது இதுதானா பலன் என்று ஏளனமாகச் சிரிக்கிறார். அதே நாவலில் வரும் கமலத்தின் தந்தையும் பல ஊர்களுக்கு வியாபார நிமித்தமாகச் சென்று வருபவர்தான். அவர் பெண் கல்வியில் உறுதியாக இருக்கிறார். கமலத்தின் அண்ணன் மேற்படிப்பு படித்தவன். இயல்பாகவே கல்வி ஆர்வமுடைய குடும்பம் என்பதால் கமலத்தை மேற்கல்விக்கு அனுப்புகின்றனர். அங்குத் தலைசிறந்த நூல்களையெல்லாம் தேடிப் படிக்கும் வாய்ப்பு கமலத்திற்குக் கிட்டுகிறது. கல்லூரி சூழல், நல்ல தோழிகள், அறிவில் சிறந்த ஆசிரியைகள் போன்றவை அவள் மனதை செம்மைப்படுத்துவதற்கு  உதவுகின்றன. ப்ரவ்னிங் போல வாழ்நாள் முழுவதும் படிக்க வேண்டுமென விரும்புகிறாள். அவளும், அவள் குடும்பத்தினரும் அவள் திருமணத்தைப் பற்றிப் பேசிக் கொள்வதே இல்லை.

தன் தோழியருடன் நாராயண முதலி வீட்டிற்கு விருந்திற்கு வரும் கமலத்தின் அறிவும், அவள் தோழியரின் பேச்சும் நாராயண முதலியாரை அசத்தி விடுகின்றன. அவர் மகள் லட்சுமி அவர்களுக்கு ஆணையாக விவாதிப்பதைக் கேட்டுப் பேராச்சரியம் அடைந்து விடுகிறார். (கா.சு.:118) அப்போதிருந்து, தன் எண்ணத்தை முற்றிலும் மாற்றிக் கொண்டார். எந்த வேளைக்கும் அவர்கள் தகுதியானவர்கள். அதோடு படித்த இளைஞனைப் போலவே பெண்ணும் கற்றிருந்தால் தான் வாழ்க்கை வண்டி ஒழுங்காக  ஒடும். இல்லாவிட்டால் ஊச கூசலாகி, தாளம் தவறும் என உணர்ந்தார்” (ப-136)

கல்வியில் சிறந்த கமலத்தை, கல்லாத தன் மகனுக்கு மண முடிக்க வைக்க விரும்பினார். பெண் எவ்வளவு தான் கற்றாலும் ஒர் ஆணுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். என்ற நோக்கில் மனைவி தடுத்தும், முருகேச முதலியார் மறுத்தும் தன் பிடிவாதத்தில் உறுதியாக நிற்கிறார்.

எத்தனையோ கொம்பன்களைக் கண்டிருக்கிறார். கள்ளுக்கடை, சாராயக்கடை, ஐலம் எடுக்கப் போன போது தான் எத்தனை போட்டிகள்! கத்தி, கத்தித்தடி, அறுவாள் அவருக்கு விசிறி போல” (கா.சு.:36) இனானப்பட்ட யானைக்கே குழி வெட்டிப் பிடித்து விடுகிறார்கள். பல திக்குகளில் கண்ணி வைத்து எதிலாவது முருகேசரை விழச் செய்ய முடியாதா? (ப-181) என்று திட்டம் தீட்டுகிறார். கமலத்தின் தாய் வழிப்பாட்டி மூலம் தாய் பங்கஜத்தை வளைத்து விடுகிறார். கமலத்தை வளைக்க வியூகம் வகுக்கிறார். ஆனால், கல்வி கற்ற கமலத்தின் தெளிவு, கூர்மையான அறிவு, மனிதர்கள் பற்றிய கணிப்பு, உலகப் பார்வை அனைத்திற்கும் முன் நாராயண முதலியார் தலை குனிந்து தோற்றுப் போகிறார். அவரது வியாபார நோக்கம், பெண்களைப் பற்றிய தவறான பார்வை, போன்றவற்றை இனங்கண்டு விடுகிறாள். கல்விகற்ற பெண் தன்னைக் காத்துக் கொள்வதோடு குடும்ப மேன்மைக்கும் உதவுவாள் என்பது காணாச்சுனையின் கருத்தாகும்.

5.4.4. இடையில் நின்ற படிப்பு
குடும்பச் சூழல்களின் காரணமாகவோ, அறியாமை காரணமாகவோ இடையில் படிப்பை நிறுத்திவிடும் பெண்கள் மீண்டும் கல்வியைத் தொடரலாம் என்ற கருத்தை அதுவா? இதுவா?, காணாச்சுனை புதினங்களில் குறிப்பிடுவர். ருக்குவின் அறிவாற்றலைக் கண்ட தோழி அருக்காணி அவளையும் படிக்க அழைக்கிறாள். இடையில் படிப்பை நிறுத்திவிட்ட தன்னைப் பள்ளியில் சேர்த்துக் கொள்வார்களா என்று ருக்கு கேட்க, ஒரு வாத்தியாரை வெச்சுப் படிச்சுக்கறது. அப்புறம் ஆறாவதிலேயே சேந்திர்ரது ...... எங்க வூட்டுக்குக் கிட்டத்தில் தாத்தாக்களே படிக்கிறாங்க” (?? 62)

பள்ளி இறுதிவரை படித்த லட்சுமியை கமலத்தின் தோழிகள் கல்லூரிக்கு அனுப்பும்படி கூற, அப்படியும் முடியுமா?” என்று அதிசயத்தோடு கேட்ட நாராயண முதலியாரிடம், நிறுத்தினா என்ன? மீண்டும் அடுத்த வருஷம் சேர்ப்பதுஎன்று இலோசனை கூறுகிறார்கள். (கா.சு.:131) கிராமத்து மக்கள் முதியோர் கல்வி பற்றியும், இடையில் நின்ற படிப்பைத் தொடருவது பற்றியும் அறியாமையில் மூழ்கித் திளைப்பதைக் காட்டுகிறார்.

5.4.5. கல்வியின் மேன்மை
தமிழ் மாதர் அறிவுப் பயிற்சிகளிலே நிகரற்ற சக்தி படைத்து விடுவார்கள். அறிவுத்திறத்தால் பிறகு விடுதலைக் கோட்டையைக் கைப்பற்றுதல் அதி சுலபமாய்விடும்.” (குப்புசாமி செட்டியார் நல்லி, 1997:16) என்பது பாரதியின் கனவு.

கமலத்தைப் போன்றவள் ஆசையும் நேசமும் மீனாட்சி இலட்சிய குணமும் கொள்கைப் பிடிப்பும் உள்ளவள். அனாதைச் சிறுமியான அவளுக்குத் தமிழாசிரியர் சச்சிதானந்தம் கல்விக் கண் தருகிறார். அவரே வியக்கும் வண்ணம் சிறந்த இலக்கியச் சொற்பொழிவாளராக உயர்கிறாள். சுய உழைப்பின் மூலம் தமிழகத்தின் இலட்சியப் பெண்ணாகப் பெரும்புகழ் பெற்றுத் திகழ்கிறாள். நிமிர்ந்த நன்னடை, நேர்க்கொண்ட பார்வை, திமிர்ந்த ஞானச் செருக்கு உடைய செம்மை மாதராக அவள் விளங்குவதை ஒரு உரையாடல் விளக்கும். தேர்தலுக்காக யார் எத்தனை பணம் தந்தாலும் நீ போயிடாதேஎன்று தாத்தா எச்சரிக்கிறார். உங்கிட்ட இத்தனை நாளா நான் படிச்சதெல்லாம் வீணாப் போயிடும்ணு எனக்குத் தெரியாதா தாத்தா? கூட்டங்களுக்குப் பணத்தை வாங்கிட்டுப் பேசப்போனா அது ஒரு வியாபாரம் இயிடுது. உங்க பேத்தி என்ன ஒரு வியாபாரியா  (இ.நே. :189) என்று கேட்கிறாள்.

அருளானந்தர் எனப்படும் தமிழ் இலக்கியவாதி கேட்டுக் கொண்டதற்கிணங்க மரியாதை நிமித்தம் அரசியல் பிரசங்கம் செய்ய ஒப்புக் கொள்கிறாள். எதிராகத் தன் காதலன் நின்ற போதும், வாக்குத் தவறாமல் பிரசங்கம் முடித்துத் தருகிறாள். காதலன் சேகர் தோல்வியற்ற நிலையில் அவளது வலிமையான பிரசங்கம் தான் தன் தோல்விக்குக் காரணமென்று அவளிடம் சீறுகிறான். உன் வாக்குறுதி தான் முக்கியமானதா?” நிச்சயமாக! இப்போதே என் வாக்குறுதியைக் காற்று வாக்கில் பறக்க விட்டால் நாளை அது எவ்வளவு தூரத்திற்குக் கொண்டு போய் விடும்?” (இ.நே. :202) என்று தன் நியாயத்தை எடுத்து வைக்கிறாள்.

அப்படியெனில் அவளது உறவு தேவையில்லை என அவளை உதறி விடுகிறான். தன் அறிவுத் திறத்தால் தலை நிமிர்ந்து நிற்கிறாள் மீனாட்சி. பல்லாயிரம் நூல்களை மட்டும் வாசிப்பது கல்வியாகாது. பாடங்களை நெட்டுருச் செய்து தேர்வில் வெற்றியடைந்து பட்டம் பெறுவதும் கல்வியாகாது. கல்வி என்பது வாழ்வில் இரண்டறக் கலந்து, வாழ்வதற்குரிய பயனை அளிப்பது” (திரு.வி.க., 1998:73)

இவ்வுண்மையை உணர்ந்த ஆசையும் நேசமும் கமலமும், உதயதாரகை சீதாவும் ஊயர்படிப்பு பயிலச் சென்னை செல்கின்றனர். ஆனால், மேற்படிப்பு பெற்ற சாவித்ரி தனக்குக் கொடுக்கப்பட்ட கல்வி மற்றும் சுதந்திரத்தைத் தன் மனம் போன போக்கில் பயன்படுத்துகிறாள். ஊயர்கல்வி மற்றும் திருமணம் குறித்த எவ்வித லட்சியமும் அவளிடம் இல்லை. கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் தாய் தந்தையற்ற அவளுக்குத் திருமணம் முடித்துவிட அவள் மாமா ஏற்பாடு செய்கிறார். அதை மறுக்கும் உரிமை இருப்பினும் அதைப் பயன்படுத்தாமல் வீட்டை விட்டுக் கிளம்பி விடுகிறாள்.

நாலைந்து மாதங்களாகத் தன் பல தோழியரின் வீடுகளில் தங்கும் அவள் தன் மாமாவிற்குத் தன்னைப் பற்றிய செய்தி எதுவும் தெரிவிப்பதில்லை. அங்குப் பல தீய அனுபவங்களைப் பெறும் அவள் அப்போதும் திருந்தி வீடு திரும்பாமல் தொடர்ந்து தோழியருடன் தங்கி ஊல்லாசமாக இருக்கிறாள். அத்தையும்  மாமனும் செத்துச் சுண்ணாம்பாகிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொள்கிறாள். அப்படி அவர்களை துன்புறுத்தி விளையாட்டுக் காட்டுவதைப் பொழுது போக்காக நினைக்கிறாள். ஆனால், அவள் வீடு சென்று சேருமுன் அவளைப் பற்றிய அவதூறு கடிதங்கள் அவள் மாமனுக்குச் சென்று சேருகின்றன. இதனால் உண்மையறியாத அவர் மாரடைப்பு வந்து இறந்து விடுகிறார். வெளியூர் சென்று படிக்கும் உரிமை பெறும் பெண்கள் அவ்வுரிமையை மனம் போன வழியில் பயன்படுத்தினால் இப்படிப்பட்ட கேடுகளே விளையும் என்பது மூன்று அழைப்பு புதினத்தின் கருத்து.

கிடைத்த கல்வியைக் கொண்டு குடும்பச் சிக்கலைத் தீர்க்க வேண்டுமேயல்லாது, சிக்கலை ஏற்படுத்தி குடும்ப உறுப்பினர்களின் நன்மைக்குத் தீமை விளைவிக்கக் கூடாது என்பதே பொதுவாகப் புதினங்கள் கூறும் செய்தி. ஆசிரியர் ஆரம்ப காலத்தில் இருபாலார்க்கும் கல்வி தேவையில்லை என்ற கருத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பதிவு செய்துள்ளார். முதலில் வெளியூருக்கு ஆண் பிள்ளையைக் கல்வி கற்க அனுப்பியவர்கள் பின்னர் பெண்ணையும் அனுப்பத் தொடங்கியுள்ளனர். ஆனாலும், வசதிபடைத்தவர்களில் வெகு சிலரே பெண்களை வெளியூருக்கு அனுப்பிப் படிக்க வைத்துள்ளனர்.

பள்ளிக் கல்வி முடிந்தவுடன் மண முடித்து வைக்கப்படும் பெண்கள் தான் எண்ணிக்கையில் அதிகம். மேற்படிப்பு தொடர்பான சிந்தனை கொண்டுள்ள பெண்கள் குறைவாகவே உள்ளனர். ஏழைப் பெண்களில் மீனாட்சி தவிர மற்றப் பெண்கள் பற்றிய தகவல் இல்லை. கல்வி கற்கச் செல்லும் பெண்களில் சிலர் நகர நாகரிகத்தில் மயங்கி நற்பெயரை இழக்கின்றனர். கல்வியின் மேன்மை உணர்ந்த பெண்கள் ஆளுமை பெற்றுத் திகழ்கின்றனர்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?