நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday, 13 April 2020

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் விலை மகளிர் நிலை



ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் விலை மகளிர் நிலை

ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிப்படையில் இல்லாமல், பொருளுக்காகக் கன்னித் தன்மையை இழந்து பின் பலருடன் பொருளுக்காக உடலுறவு கொள்பவரே விலை மகளிர் இவார்” (கலைமதி. இ. 4 புனிதாம்பாள்.மு., 2003:1161) இவர்களின் நிலையை, இறுதிக் கால வாழ்க்கையை ஆர்.சண்முகசுந்தரம்வெளிப்படுத்தி உள்ளார்.

ஆண்களுடைய போகத்திற்கு இளாகும் இப்பெண்கள் சமூகத்தால் இழிவாக நடத்தப்படுகின்றனர். இவர்களைப் பயன்படுத்தும் ஆடவரும் இவர்கள் வாழ்க்கையில் சிக்கல் ஏற்படும் நிலையில் ஒதுங்கிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள். வயிற்றுப் பாட்டிற்காக இத்தொழிலை மேற்கொள்ளும் இப்பெண்கள் பிற பெண்களின் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இப்பெண்களைப் பயன்படுத்தும் ஆண்கள் தம்முடைய சமூகக் கடமையை மறந்து விடுவதால் இவர்களுக்கு விடிவுகாலம் ஏற்படுவது இல்லை. இப்பெண்களை இழிவாக்கி வெறுத்தொதுக்கும் சமூகம் அவர்களைப் பயன்படுத்தும் ஆண்களை ஒன்றும் செய்வதில்லை.

1. பல்லடம் பொன்னாள் (அ.வ.)
2. மீனாட்சி (ச.சு.)
3. ஆண்டிச்சி அங்காள் (உ.தா.)

சட்டிசுட்டதடா மீனாட்சி, சிறுவயதில் பருவக் கோளாறின் காரணமாகப் பலரிடம் கை மாறி இறுதிக்காலத்தில் மனந்திருந்துகிறாள். சாமியாரிணியாகச் சாமிக் கவுண்டரின் ஒரத்த பாளையத்திற்கு வருகிறாள். அவருடைய மகன்களின் வாழ்வில் தான் ஏற்படுத்திய துயரத்தைத் துடைக்க நினைக்கும் அவள், தன்னைப் பார்க்க வரும் மக்கள் தரும் பணத்தைப் பரிகாரமாக மாரப்பனிடம் கொடுத்துவருகிறாள். சாமிக்கவுண்டரிடம், வேலாத்தாளுக்கு மாப்பிள்ளைப் பார்த்துத்தருவதாகக் கூறுகிறாள். சாமிக்கவுண்டர் உயிருக்குப் போராடிய போது தன் மகனை அனுப்பி அவரைக் காப்பாற்றுகிறாள். சாமிக்கவுண்டர் மனதில் ஆறாத வடுவாக இருந்த அவள் இறுதிக் காலத்தில் அவருக்கு உதவி செய்து அதை ஆற்றுகிறாள். இவ்வாறு, பெண்களில் சிலர் தன் தவறுக்குப் பிராயச்சித்தம் தேடுகின்றனர்.

இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் சிலரின் மனநிலையைக் காட்டுகிறார். சாமியப்ப முதலியரிடம், எத்தனையோ பெண்கள் இரண்டு மாதம், மூன்றுமாதம் வந்து தங்கியிருந்து விட்டு... எண்ணிச் சுட்ட பணியாரம் மாதிரி கணக்காத்தான் கொடுப்பார். புதுப்பொண்ணா முதலியார் சர்வாலங்கார பூஷிதையாகப் பூட்டிப் பார்ப்பதற்கு? அவர்களைப் பற்றி எல்லாம் அவள் நினைப்பதேயில்லை. (அ.வ.:43) இவரிடம் வந்து சேர்ந்த பல்லடம் பொன்னாளை, அவள் விருப்பமின்றி இதற்கு முன்னால் வைத்துக் கொண்டிருந்தவன் இழுத்துப் போகிறான். அவளுடைய அபயக் குரல் அவரை அசைக்கவில்லை. அவளைக் கழுத்தை நெறித்துப் பாழுங்கிணற்றில் போட்டு விடுகிறான். (அ.வ.:44) கொலைவழக்கில் சாட்சி சொல்லிப் போன சின்னப்ப முதலியாரிடம் கொலைகாரனின் மனைவி வேண்டுகிறாள். ஆனால், அவள் வந்தால் கூட அவர் ஆதரிக்கத் தயார் தான் (ப-44) என்று நினைக்கிறார். ஒரு பெண் இல்லையெனில் இன்னொரு பெண் என்று நினைக்கும் ஆண் வர்க்கம் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.

ஆண்டிச்சி அங்காள் பெரிய கவுண்டரிடம் இறுதியாக தஞ்சமடைந்தாள். சொத்திற்குப் பயந்து அவருடைய சம்பந்தி சுப்பண கவுண்டர் அவளைக் கொலை செய்யச் சொல்ல, அவளுடைய பாதுகாவலனே அவளைப் பணத்திற்காகக் கொன்று விடுகிறான். வயிற்றுப் பிழைப்பிற்காக இத்தொழிலை மேற்கொள்ளும் பெண்களின் வாழ்க்கையில் மீட்சி இறப்புக்குப் பின்னர்தான் கிடைக்கிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?