ஆய்வு செய்வது எப்படி?
தொடர்ச்சி....
4.தரவுகளைத் திரட்டும் முறை
மூலநூலிலிருந்துத்
துணைநூல்களிலிருந்தும் தரவுகளைச் சேகரிக்கும் பொழுது, சேகரிக்கப்படும்
தகவல்கள் ஆய்வில் கையாளப்பட்டால், மேற்கோளாகப் பயன்படுகின்றன.மேற்கோள்
அட்டை அல்லது ஒருவெள்ளைத்தாளின் கிழித்த பாதிப் பகுதியை தரவுகளைச்
சேகரிக்கப் பயன்படுத்தலாம். இதில் மூன்று தகவல்கள் பதிவுசெய்யப்படவேண்டும்.
1.தரவு பொருண்மையைப் பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும் வகையிலான சிறு தலைப்பு.
2.தரவு பகுதி எடுக்கபட்ட நூலின் பக்கஎண்அல்லது பாடல்எண்
3.நூல்
பற்றிய முழுவிவரங்கள்(நூலாசிரியர் அல்லது பதிப்பாசிரியர் அல்லது
தொகுப்பாசிரியர் பெயர்(கள்)., நூல்பெயர், முகவரி,பதிப்புஆண்டு மற்றும்
பதிப்பு விவரம்முதலானவை)
தரவுகளைச் சேகரிக்கும் பொழுது, அனைத்துத் தரவுகளையும் மேற்கோளாகக்
கையாள்கிறோமோ இல்லையோ. சேகரிக்கும் பொழுதே மேற்கூறிய மூன்று தகவல்களைப்
பதிவு செய்து கொள்ளவேண்டும்.மேற்கோளாகவும்,சான்றென் விளக்கம் மற்றும்
துணைநூற்பட்டியல் போன்ற பய்னபாட்டிற்காகவும் உதவக்கூடிய வகையில் இவை
சேகரிக்கப்படுகின்றன.பதிப்பாசிரியர்கள் நூலாசிரியர்கள் போன்றவர்களை த்
தெளிவாகக் குறித்துக்கொள்ளவேண்டும்.
திருவாசகம்
என்கிற நூலை எழுதியவர் மாணிக்கவாசகர் என்றாலும் அவர் அந்நூலை
வெளியிட்டிருக்கமாட்டார். அந்நூலை யாராவது ஒருவர் தற்காலத்தில் உரை எழுதி
பதிப்பித்திருக்கலாம். அவ்வகையில் பதிப்பாசிரியர் அல்லது உரையாசிரியர்
பெயரைத்தான் குறித்துக் கொள்ளவேண்டும். சிலர் தொகுத்திருக்கலாம். அவர்களைத்
தொகுப்பாசிரியர்களாகக் குறித்துக் கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு தரவுளும் ஏதோ ஒரு பொருண்மையைக் கொண்டிருக்கும். இவற்றைச்
சேகரிக்கும் பொழுதே அதன் பொருண்மையைச் சிறுதலைப்பாக்கி தரவின் மேல்
பகுதியில் அடிக்கோடிட்டு சிறு தலைப்பாக எழுதிக்கொள்ளவேண்டும். தரவுகளைப்
பகுத்து சிறுசிறு தொகுப்பிற்குள் அடக்க இம்முறை உதவும்.ஒரே தலைப்பிற்குள்
மிகுதியான தரவுகள் மூலநூலிலிருந்து கிடைக்கும் பொழுது அதை இயல் தலைப்பாக
அமைத்துக்கொள்ளலாம். ஏனையவற்றை கிடைக்கும் தரவுகளைக் கொண்டு இயல்களுக்குள்
சிறுசிறு உட்தலைப்புகளாகப் பயன்படுத்தலாம். இவ்வாறு சேகரித்து பகுத்துத்
தொகுத்த பின்னரே எழுதத்தொடங்கவேண்டும்.
ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பற்றியோ,ஒரு படைப்பாளரைப் பற்றியோ முன்பே
தீர்மானித்த முடிவை வைத்துக்கொண்டு அதன் கோணத்தில் ஆய்வை
எழுதக்கூடாது.அவ்வாறு எழுதுவது நின்ற இடத்திலேயே நிறபதற்குச் சமம். ஆய்வு
என்னும் படகைச் செலுத்த வேண்டுமெனில், தீர்மானித்த முடிவு என்னும்
கட்டிலிருந்து அதை விடுவித்து விட வேண்டும். அப்போதுதான் ஆய்வு சரியான
பாதையில் முன்னேறும்.
காய்த்தல்,உவத்தல் அகற்றி கிடைத்துள்ள தரவுகளடிப்படையில் ஆய்வு
அறத்திலிருந்து மாறாமல், ஆய்வு நோக்கத்தையே நினைந்து, கருதுகோளை உணர்ந்து
ஆய்வை எழுதத்தொடங்கவேண்டும். ஒவ்வொரு இயலை எழுதத் தொடங்கும்
போதும்,ஆய்வாளர் மனதில் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
நெறியாளரிடம் எழுதிய இயலைக்கொண்டு சேர்க்குமுன்னர், இரு முறையாவது
எழுதிப்பார்த்துவிட வேண்டும். இதனை முதல் வரைவு,இரண்டாம் வரைவு எனக்
குறிப்பிடலாம்.
முதல் வரைவு
முதல் வரைவில் மூன்று செய்திகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
1.என்ன சொல்லப்போகிறோம் அதை எப்படி சொல்லப்போகிறோம் என்பதில் தெளிவு.
2.எந்த நோக்கத்திற்காக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்பதில் கவனம்.
3.ஆய்வினைப் படிப்பவர்களைக் கருத்தில் கொண்ட மொழிநடை.
முதலில்
முதல் இயலைத்தான் எழுதவேண்டும் என்பதில்லை. தரவுகள் மிகுதியாகக்
கிடைத்துள்ள இயல்களை முதலில் எழுதலாம்.முதல் வரைவில் என்ன, எப்படி என்பதில்
தெளிவு தேவைப்படுவதைப்போல, எவ்வளவு தகவல்களைத் தரப்போகிபோகிறோம்
என்பதிலும் தெளிவு தேவை. ஏனெனில்
ஒரு இயலுக்கு ஏராளமானத் தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் கிடைத்த தரவுகள்
அனைத்தையும் பயன்படுத்தி விடவேண்டும்மென்ற ஆர்வத்தில் பிற இயல்களைக்
கருத்தில் கொள்ளாமல் எழுதினால், ஒரு இயல் மிகப் பெரியதாகவும்,மற்றவை மிகச்
சிறியதாகவும் அமைந்து விடும். ஒரு நாற்காலியின் நான்கு கால்களும் எப்படி
சீரானதாக அமைந்துள்ளனவோ அதைப்போல இயல்கள் அமைவதுதான் சிறப்பு. எனவே பக்க
வரையறைகளைக் கருத்தில் கொண்டு உட்தலைப்பிற்கேற்ற வகையில் தரவுகளை
முறைப்படுத்திக்கொண்டு எழுதுவதே சரியாக முறை. தரவுகளை இயலுக்கேற்ப
முறைப்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் ஆய்வு தலைப்பையே கேள்விக் குறியாக்கி
விடும்.
எளிய
மொழிநடையில்,தெளிவான முறையில் சொல்ல வந்த கருத்தை முறைப்படுத்தப்பட்ட
தரவுகளின் அடிப்படையில் சிறு சிறு தொடர்களில் எடுத்துரைக்கவேண்டும்.முதல்
வரைவினை எழுதும் பொழுது தயக்கம் அச்சம் போன்றவை ஏற்படும்.நோக்கத்தை பற்றிக்
கொண்டு தரவுகளைக் மனதில் வரிசைப்படுத்தி கொண்டு அச்சமின்றி எழுத வேண்டும்.
அப்போதுதான் புதிய சிந்தனைகளும் புதிய உத்திகளும் தோன்றும். முதல் வரைவில்
நிறுத்தற்குறி, கருத்துப்பிழை,ஒற்றுப்பிழைகளை கருத்தில் கொள்ளத்
தேவையில்லை.
எதையும்
எழுதுவதற்கு முன் மனதில் ஒரு முறை அதைப் பற்றி சிந்தித்து தெளிவாக்கிக்
கொள்ள வேண்டும். எந்த கருத்தை முதலில் கூறுவது, எந்த கருத்தை
அடுத்தடுத்து கூறுவது எனத் தெளிவாகத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
எழுதும்பொழுது தடங்கலின்றி சொற்கள் இயல்பாக வந்து ஆய்வு நடையில்
அமைய, ஆய்வுப் பொருள் குறித்த தெளிவும், தரவுகளைப் பொருத்தமுற அமைக்கும்
பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.
ஆய்வுப்பொருள் குறித்த மூலநூலையும் துணை நூல்களையும் ஆழ்ந்து
படிந்திருந்தால்தான், ஆய்வு சிறப்பாக அமையும். ஆய்வாளர் தான் சொல்ல வந்த
கருத்தைப் படிப்பவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளும் வகையில்,
எடுத்துரைக்கவில்லையெனில் படிப்பவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரிடும்.
சொற்களின் பொருண்மை பற்றிய அறிவும், அதைச் சரியான இடத்தில் சரியாகப்
பயன்படுத்த வேண்டிய விழிப்புணர்வும் உள்ளவரே சிறந்த ஆய்வாளராக முடியும்.
நிறைய நூல்களைப் படிப்பதால் மட்டுமே ஒருவர் ஏராளமான சொற்களை அறிய முடியும்
அதைச் சரியாகப் பயன்படுத்தவும் முடியும். எனவேதான்,எழுதுவது ஒரு கலை எனப்படுகிறது.
எழுதுவதற்கு
முன் மிகுதியான தரவுகளைச் சேகரித்துவிட்டது போலத்
தோன்றும்.ஆனால்,எழுதும்போது தான் அவற்றில் சில தேவையில்லாதது என்றும்
இன்னும் தேவை என்பதும் தெரியும்.எனினும் தயக்கமின்றி முதல் வரைவை முழுமையாக
எழுதிவிட வேண்டும். ஓரளவிற்கு உருவம் கொடுத்த இயலில் உள்ள குறைகளை
இரண்டாம் வரைவில் சரிசெய்து விட வேண்டும்.
முதல்
வரைவில் உள்ள கருத்துப்பிழை உள்ளிட்ட பிழைகள், உட்தலைப்பில் ஒழுங்கின்மை,
சீரற்ற மொழிநடை, ஒருமை-பன்மை மயக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்தி
தேவைப்படும் மேற்கோளைச் சேகரித்து உரிய இடங்களில் பொருத்தி சரி செய்ய
வேண்டும். இவ்வாறு சரி செய்த முதல் வரைவினை வாய்விட்டு ஒருமுறை படித்துப்
பார்க்க வேண்டும். கண்கள் கண்டுபிடிக்காததை காதுகள்
கண்டுபிடித்துவிடும்.கீழக்கண்ட முறையில் சரிசெய்யலாம்.
^
இரண்டாம் வரைவு
முதல்
வரைவில் திருத்தங்களைச் செய்து, அதிலுள்ள குறைகளை நீக்கி,தேவைப்படும்
புதிய தரவுகளைச் சேகரித்து உரிய இடத்தில் பொருத்திய பின்னரே இரண்டாம்
வரைவு எழுதப்படவேண்டும். இரண்டாம் வரைவில் கவனிக்கப்படவேண்டிய ஒன்று
பத்தியமைப்பு.
ஒரு பத்தி என்பது ஒரு கருத்தைத்
தொடங்கி,அக்கருத்து நிறைவுறும் வகையிலும் தொடரக்கூடியது. அக்கருத்து
நிறைவடையும்போதுதான் அப்பத்தி நிறைவடையும். கருத்தின் தன்மையைப் பொறுத்து
ஒரு பத்தி மூன்று வரிகளிலும் இருக்கலாம். முப்பது வரிகளிலும் இருக்கலாம்.
ஆய்வினைப்
பொறுத்தளவில் தேவையற்ற சொற்கள் என ஒரு சொல் கூட இல்லாதவகையில், சொல்ல வந்த
செய்தியினைச் செறிவுடன் சுருக்கமாக எடுத்துரைக்க வேண்டும். அடு்த்த
கருத்தையோ, அக்கருத்திற்கு மாறான கருத்தையோ,மேற்கோளையோ அடுத்த பத்தியில்
அமைக்கவேண்டும்.
தன்மை,முன்னிலை நிலையில் ஆய்வு
அமையக்கூடாது. படர்க்கை நிலையிலிருந்தே ஆய்வினை நிகழ்த்த வேண்டும்.
உணர்ச்சிநடை,பெருமிதநடை,வினாநடை,பிறமொழி கலப்புநடை முதலான நடைகளைத்
தவிர்த்து கூடுமான வரையில் தூய தமிழ்ச் சொற்கள் மட்டுமே இடம்பெறும் வகையில்
ஆய்வு நிகழ்த்தப்படவேண்டும்.தேவைப்படின் தூய தமிழ்ச்சொற்களுக்கருகில்
பிறமொழிச்சொற்களை அடைப்புக்குறிக்குள் தரலாம். ஒவ்வொரு இயலும்
அவ்வியலுக்குரிய தலைப்பை ஒட்டி சிறு முன்னுரைப் பகுதியைக்
கொண்டிருக்கவேண்டும். அது போல இயலின் முடிவு அந்த இயலில் ஆராயப்பட்டு
கண்டறிந்த மெய்மைகளை தொகுத்து கூறுவதாக அமைய வேண்டும்.
மேற்கோள் என்பது இருவகைப்படும்.
1.படைப்பிலக்கியங்களில் ஆய்வு
நிகழ்த்தப்படுமாயின், மூலநூலிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகள் அல்லது
நாட்டுப்புற ஆய்வு எனின் சேகரிக்கப்பட்ட தரவுகள்
2. மூலநூல் அல்லாத
பிறவற்றிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகள்..
இயல்
தலைப்பிற்கேற்ற வகையிலும்,ஆய்வு நோக்கத்திற்கேற்ற வகையிலும் இத்தரவுகள்
பொருத்தமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மூலநூல் தரவுகளுக்குத்
தொடர்புடைய துணைநூல் தரவுகளைப் பகுத்துத் தொகுக்கும் வகைப்படுத்தும்போது
ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். துணை நூல் தரவுகள்
மூலநூல் தரவுகளுக்கு அரணானவையாகவும் இருக்கலாம். முரணானவையாகவும்
இருக்கலாம்.
மூலநூல் கருத்துக்களைச் சரியாக
விளங்கிக் கொண்டு அதற்கேற்ற தரவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முரணான
சருத்தாயின் எவ்வாறு,எதனடிப்படையில் முரண்படுகிறது அது குறித்த ஆய்வாளரின்
கருத்து யாது, எது ஏற்புடையது என்பதனைத் தெளிவு படுத்திய பின்னரே ஆய்வினை
மேற்கொண்டுத் தொடரவேண்டும்.
உதாரணமாக
மாணிக்கவாசகரின் காலம் குறித்து ஒரு தெளிவின்மை உள்ளது. மூலநூலில் உள்ள
கருத்துக்களை முறையாகப் பயின்று காலம் குறித்த ஒரு தெளிவை உண்டாக்கிக்கொள்ள
வேண்டும். பின் பல்வேறு ஆய்வாளர்களின் மாணிக்கவாசகரின் காலம் குறித்த
கருத்துகளைத் தொகுக்கவேண்டும். அதை வரிசைப் படுத்திக் கொள்ள வேண்டும்.
மறைமலையடிகள், அ.ச.ஞானசம்பந்தன் உள்ளிட்ட பிற அறிஞர்கள் கூறும்
கருத்துக்களில் எது ஏற்புடையது என ஆய்வாளர் கருதுகிறாரோ அக்கருத்தை ஆய்வில்
அதற்கான காரணத்தோடும் ஆதாரத்தோடும் தெளிவுபடுத்தி விட வேண்டும். எனவே,
துணை நூலில் திரட்டப்பட வேண்டிய தரவுகள் சிக்கலுக்கேற்ப திரட்டப்பட
வேண்டும்.
1.மூலநூலிலிருந்து எடுக்கப்படும் தரவுகள், செய்யுள் பகுதியாயின் இவ்வாறு தரலாம்.
"பரலுடை மருங்கிற்
பதுக்கை சேர்த்தி" (புறம் - 264)
"ஊர்நனி யிறந்த
பார்முதிர் பறந்தலை" (புறம் - 265)
உரைநடையாயின், (ஒரு நாவலிலிருந்து எடுக்கப்பட்ட தரவு இது.)
தகப்பன்கொடி
நாவலின் இறுதியில் அம்மாசியின் வாழ்நாள் முடிவுக்கு வரும் நிலையில் அமையும் பகுதி,“தீடிரென்று அவனை ஒரு கை
தூக்கிக்கொண்டு பறந்தது. கோழிக்குஞ்சைப் போலத் தான் தூக்கிச் செல்லப்படுவதாய் நினைத்தான்
அம்மாசி. அதன் தொடுகை மிருதுவாக இருந்தது.
இறக்கையடிப்புகள் மென்மையாக வீசிவிடுவது போல அருகிலேயே அவனை வருடின. மண்ணில் கால்
பரவ விடாமல் சமவெளிகளுக்கும் மலைமுகடுகளுக்கும் நீர்ப்பரப்புகளுக்கும் மேலாய்க் கடந்து பறந்தது அது. மண் தேலியிருக்கிற திட்டுகளில் காலை ஊன்றி
விடலாம் என்று அவன் முயற்சிக்கும் போது அது இன்னும் மேலாய் காற்றில் எழுந்தது”
(தகப்பன் கொடி,
பக.46) என்றவாறாக அமைகிறது.
2. மூலநூல் அல்லாத
பிறவற்றிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகள்..
உரைநடையாயின்,
""""இன்னும்
அவர்கள் உயிரோடு இருக்கப்போவது ஒரு சில ஆண்டுகள் தான். அதுவரை அவர்கள்
தங்கள் விருப்பப்பட்டபடி வாழ்ந்து விட்டுத்தான் போகட்டுமே. அவர்களுக்குத்
தேவையானதை வாங்கிக் கொடுத்து அவர்கள் சொல்லைக் கேட்டு நடந்து அவர்களை
மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் பொறுப்பு இளைய தலைமுறையினருக்கு உண்டு. ""
(நடராஜன்.வி.எஸ் ,2008:123)
மேற்கோள்களை இதழ்களிலிருந்தும் திரட்டலாம். உதாரணமாக,இவ்வாறு தரலாம்.
‘தினகரன்’ நாளிதழில் வெளியான செய்தி ‘அளம்’ நாவலுடன் ஒப்புநோக்கத் தக்கதாக
இருக்கிறது. """" கல்யாணியின் கணவர் கணபதிக்கு வருமானம் போதாததால்
குழந்தைகள் பசியால் வாட வறுமைக்கு வயிறு இரையாகிப் போனதை கல்யாணியால்
சகிக்க முடியவில்லை . அதனால் பெண்கள் கடைக்குக் கூட வராத காலத்தில் டயர்
பஞ்சர் ஒட்டுகிற கடையில் வேலைக்கு சேர்ந்தார் . கணவர் இறந்ததால் அப்பா ,
அம்மா இரண்டு பேருக்குமான கடைமையை முடித்துவிட்டார். மூன்று மகள்களுக்கும் ,
ஒரு மகனுக்கும் திருமணம் செய்து முடித்துவிட்டார். அதற்காக 33 வருடங்களாக
பஞ்சர் ஒட்டிக் கொண்டு இருக்கும் கல்யாணிக்கு வயது 60."" (வசந்தம் -
தினகரன் இணைப்பு, 11 .5. 2008 : 3)
தொடரும்......