நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday, 19 March 2016

ஏனடி தோழி, கேளொரு சேதி, இதுதானோ உங்கள் மன்னவன் நீதி?


Image result for தோழி 

ஏனடி தோழி, கேளொரு சேதி, இதுதானோ உங்கள் மன்னவன் நீதி?


களவொழுக்கத்தின்போது விரைவில் வந்து மணமுடிப்பதாகக் கூறிச் சென்ற தலைவன் நெடுநாட்களாகியும் வரவில்லை.  தலைவியோ தலைவனை மறக்கமுடியாமல் தவித்தாள்.  அவனையே நினைத்து வருந்தி உடல் மெலிந்து போனாள்.
தலைவன் மலைநாட்டைச் சேர்ந்தவன்.  வணிகத்தின் பொருட்டு இப்பகுதிக்கு வந்தபோது, தலைவியைக் கண்டு காதல்கொண்டவன்.  அவன் ஊர் தெரியாது.  பேர் தெரியாது.  சென்றவன் திரும்ப அவனாகவே வந்தால்தான் உண்டு.  தலைவியோ யாரிடமும் எதுவும் சொல்லவும் முடியாமல், அவனை மறக்கவும் முடியாமல் உலகை வெறுத்துக் காணப்பட்டாள்.  தோழியால் இதைப்பொறுக்க இயலுமா?

அவள் கவனத்தைத் திசைதிருப்ப முயல்கிறாள்.  வெற்றியும் பெற்று விட்டாள்.  சில நாட்கள் சென்றன.  அத்துயர நாட்களை மீண்டும் நினைவு படுத்துகிறாள்.  இப்போது எதற்காக அந்நாட்களை நினைவுபடுத்த வேண்டும்?  காரணம் வேண்டுமா?  இதோ, கேளுங்கள் இவள் கதையை.
அன்று தலைவனை நினைத்து நீ மிகவும் ஏங்கியிருந்தாய் அல்லவா?  எதிலும் பற்றற்று இருந்தாய்.   பசலை பூத்த உன்மேனி கண்டு நான் மிகவும் பதறிப்போனேன்.  உண்ணாமல், சரியாக உறங்காமலிருந்த உன்னை வேலையில் ஈடுபடுத்திட முயன்றேன் அல்லவா என்று தோழி தலைவியிடம் கேட்கிறாள்.
தலைவி ஒரு பெருமூச்செறிந்தபடி,  “ஆமாம், அதற்கென்ன?” என்கிறாள்.  உண்மையிலே அவள் வேறு கவனம்கொண்டதுபோல் நடிக்கத் துவங்கியிருந்தாள்.  காதலனை நினைத்து தான் வாடுவதை அறிந்து உயிர்த்தோழியும் வாடியிருப்பதை அறிந்ததிலிருந்து மகிழ்ச்சியோடிருப்பதைப்போல நடித்துக்கொண்டிருந்தாள்.  
தலைவி உள்ளுக்குள் நினைத்துக்கொண்டாள். “இந்தத் தோழிதான் எவ்வளவு நல்லவள்,  என் துயரத்தைத் தீர்க்கத்தான் எத்தனை பாடுபட்டாள்!  தன்மீது உயிராய் இருப்பவர்களை வாடவிடுவது தலைவனுக்கு வேண்டுமானால் அழகாயிருக்கலாம்.  எனக்கது அழகில்லையே!  இதை  நான் உணர்ந்தளவில் மிகஅழகாக நடிக்கக் கற்றுக்கொண்டேன்.”
தோழியைப் பார்த்துப் புன்னகைத்தாள்.  தோழி அவள் பாட்டுக்குப் பேசிக்கொண்டேபோனாள்.  “அன்று உரத்த குரலில் இசையோடு அகவினம் பாடுவோம் என்று அழைத்தேனல்லவா.  நீயும் சம்மதித்தாய்.  ஆனால் ஒரு நிபந்தனை விதித்தாய்.  நான் சொல்லும் வேலையை அனைவரும் செய்தபடிதான் அகவினம் பாடவேண்டும் என்றாய்.  நாங்களும் ஒப்புக்கொண்டோம்.  உடனே நீ சந்தனமர உரலைக் கொண்டுவரச் சொன்னாய்.  அது தலைவனின் மலையில் விளைந்த சந்தனமரத்தினால் ஆனது.  பிறகு யானைக் கொம்பு உலக்கை கொண்டுவரச் சொன்னாய்.  அதுவும் தலைவனின் மலையில் வாழ்ந்த இறந்த யானையின் தந்தத்தினால் செய்யப்பட்டது.  பிறகு முற்றிய தினை கொண்டுவரச் சொன்னாய்.  அதுவும் தலைவன் மலையில் விளைந்தது.  உன்மனம் தலைவனின் மலையையே சுற்றிச்சுற்றி வருகிறது என்பதைப் புரிந்துகொண்டோம்.
“நான் ஒரு பார்வை பார்த்தேன்.  அழகிய கண்களுடைய நீ நாணத்தினால் தலைகுனிந்தாய்.  அது முற்றிக் கதிர்வாங்கிய திணை தலைகுனிந்ததைப் போலிருந்தது.  திணையைச் சந்தன மர உரலில் இடச் செய்து, யானைக் கொம்பு உலக்கையினால் மாறி மாறி இடித்தோம்.

Image result for தினைப்புனம் 

“அகவினம் சேர்ந்து பாடுவோம் என்றேன்.  நீயோ உரலையும், உலக்கையையும், தினையையும் பார்த்தபடி பெருமூச்செறிந்து நின்றிருந்தாய்.
“நான் மீண்டும் அகவினம் பாடுவோமா என்றேன்.  சரி என்றாய்.  அம்மலையைப் பற்றி அகவினம் பாடுவோம்!என்றாய்.  எம்மலை என்றேன்.  அதற்கு நோயைத் தந்தவனின் மலை  என்றாய்.  “எந்த நோய்  என்றேன்.   வேறு யாராலும் மருந்து கொடுக்க முடியாத இந்தக் காதல் நோயைத் தான் குறிப்பிடுகிறேன் என்றாய், கோபமாக.
“ சரி.  நீயும் பாடு, நானும் பாடுகிறேன்,  என்றேன்.  நீயோ வாயை இறுக்கி மூடிக் கொண்டாய்.
“உன்னை மகிழ்விக்க உன் தலைவனின் மலையின் சிறப்பைப் பாடினேன்.  “தேன் ஒழுகும் மலை.  தித்திக்கும் மலை.  நம் கு தெய்வம் முருகன் உள்ள மலை.  காந்தள் கை கொண்ட கொடிச்சியர் வணங்கும் மலை.  அங்கு பிறந்தவர் யாவரும் அனைத்து நோய்க்கும் மருந்து தந்து துயர் தீர்ப்பவர்,  என்று பாடினேன்.
“நீயோ முகத்தில் எச்சலனமும் இன்றி உலக்கையை இடித்துக்கொண்டிருந்தாய்.  அங்கு வாழும் குரங்குகளின் இயல்பை வைத்து மேலும் பாடலைத் தொடர்ந்தேன்.  Image result for குரங்குகள்
“ ஆண்குரங்கு ஒன்றும், பெண்குரங்கு ஒன்றும், காதல் கொண்டன.  ஆண்குரங்கு குரங்குக் கூட்டத்திடம் சென்று, தான் காதலித்த பெண்குரங்கு தனக்கே உரியது என்று குரல்கொடுத்தது.  அம்மலை வாழ் குரங்குகளுக்கே உயரிய குணமும் உரிமை முறையும் இருக்கும்போது, அங்குள்ள மாந்தருக்கும் அப்பண்பிருக்குமன்றே, என்று பாடினேன்.
“உடனே நீ எதிர்ப்பாட்டு பாடினாய்.  ‘ மலையிலே தேன் நிறைந்த பூக்கள் உண்டு வண்டு வருகின்றது.  மலரில் அமர்கின்றது.  உண்டபின் பறந்து விடுகின்றது.  அம்மலை மாந்தர்க்கும் இவ்வியல்வு உண்டு’,  என்று பாடினாய்.
நானும் எதிர்ப்பாட்டு பாடினேன்.  ‘ மலையிலே கருத்தரித்த பெண்யானை ஒன்றிருந்தது.  அதற்குக் கரும்பின்மீது ஆசையுண்டு என அறிந்த ஆண்யானை கரும்பைத் தேடிச்சென்று அதைப் பல இடையீடுகளுக்கு இடையில் கொண்டுவந்து கொடுத்தது.  யானைக்குரிய பண்பு மலை நாமனுக்கும் உண்டு’,  என்றேன்.”
 Image result for தினைப்புனம் 

தலைவியிடம் அந்தப்பாட்டை இங்கு மீண்டும் பாடிக் காண்பிக்கிறாள் தோழி.  இதோ, அந்த வள்ளைப்பாட்டு.

தோழி: மலையைப் பாடுவோமோ  தோழி நம்
மனத்துயர் தீர்த்திடும் மலையைப் பாடுவோமா
மந்தியைக் கண்டே கல்லாக் கடுவன்
மயங்கி நின்றதே மயக்கம் தெளிந்ததே
சுற்றம் நாடி மனதைத் திறந்ததே
மந்தியை மணக்க மன்றாடி நின்றதே
கல்லாக் கடுவனின் உயர் பண்பினால்
சுற்றம் மகிழ்ந்ததே மந்தியைக் கொடுத்ததே
கடுவனின் செயல் கண்டே தலைவன் வந்திடுவான்
களிமணம் புரிந்திடுவான் புலம்பித் தவிக்காதே



தலைவி:மலையிலே தேன்நிறை மலர்கள் மிகவுண்டே
மனமயங்கி தேனிண்ட வண்டுகளும் மிகவுண்டே
மதிஅருந்தி மலரை மறந்ததும் நடந்ததுண்டே
மனதைக் குலைக்கும் கதைகளும் கேட்டதுண்டே

மலையைப் பாடுவோமோ?  தோழி எனக்கு
மனத்துயர் தந்திட்ட மலையைப் பாடுவோமா



தோழி:சூழ்கொண்ட பிடிகள் வாழ்ந்திடும் காடு
சூழ்ந்து நிற்கும் கரும்புகள் பாரு
பிடிவிரும்பிய களிறைத் தேடிடும் களிறு
ஓடித்துக் கொடுத்து மகிழ்ந்திடும் அதுமேரு

காட்சியைக் கண்டிடுவான் உன்நலம் நினைத்திடுவான்
காதலில் கரைந்திடுவான் கண்மணி நினைத்திடுவான்
காதல் விலங்குகள் காட்சியும் மிகுதியே
காதலன் வந்திடுவான் உன்னை மறவானவன்


“ஆழ்ந்த கவலையில் என் நம்பிக்கைச்சொற்கள் ஒளிபோல இருந்ததால் நீ மறுபேச்சுப்பேசாமல் வேலையில் ஈடுபட்டாய்.

“அன்றுதான் தலைவன் உன்னைக்காண மீண்டும் வந்திருக்கிறான்.  புன்னை மரத்தின்பின் நின்று உரிய முறையில் சந்திக்கக் காத்திருக்கிறான்.  நானும் நீயும் பாடிய பாட்டுக்களைக் கேட்டிருக்கிறான்.  உன் குரலிலும் முகத்திலும் இருந்த துயரத்தை உன் காதல் வேட்கையை அறிந்தளவில், உன்னைச் சந்திக்காமல் திரும்பச் சென்று விட்டானாம்.


“தற்போது உரிய முறையில், தன் பெற்றோருடன் உன்னைப் பெண்கேட்டு உன் வீட்டிற்கு வந்திருக்கிறான்.  உடனே விரைந்துவா,” எனச் சோலையிலிருந்த தலைவியை அழைக்கிறாள் தோழி.
தலைவன் மறைந்திருந்து பார்த்தளவிலும், கேட்டளவிலுமே யாரும் சொல்லாமல் தலைவியின் துயரத்தை, அவளின் காதலை அறிந்து கொண்டு, நேருக்கு நேராக அவளைச் சந்திக்க இயலாமல், அவள் துயரத்திற்குத் தீர்வு காண விரைந்தோடி, பெற்றோரிடம் உரிய முறையில் சொல்லி விரைவாக உரிய ஏற்பாடுகளோடு வந்திருக்கிறான்.
ஆகா!  எத்தகைய தலைவன்!  எத்தகைய தோழி!
கபிலரின் குறிஞ்சிக்கலி நான்காம் பாடல் இதோ
அகவினம் பாடுவாம், தோழிஅமர் கண்
             நகை மொழி, நல்லவர் நாணும் நிலை போல்,
  
தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ,
               
முகை வளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின் 

      வகை சால் உலக்கை வயின் வயின் ஓச்சி,
5
பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி,
அகவினம் பாடுவாம், நாம்;
ஆய் நுதல், அணி கூந்தல், அம் பணைத் தட மென் தோள்,
தேன் நாறு கதுப்பினாய்! யானும் ஒன்று ஏத்துகு
வேய் நரல் விடரகம் நீ ஒன்று பாடித்தை;
10
கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல்,
எடுத்த நறவின் குலை அலங்காந்தள்
தொடுத்த தேன் சோர, தயங்கும் தன் உற்றார்
இடுக்கண் தவிர்ப்பான் மலை;
கல்லாக் கடுவன் கணம் மலி சுற்றத்து,
15
மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே
தொல் எழில் தோய்ந்தார் தொலையின், அவரினும்
அல்லற்படுவான் மலை;
புரி விரி, புதை துதை, பூத் ததைந்த தாழ் சினைத்
தளிர் அன்ன எழில் மேனி தகை வாட, நோய் செய்தான்
20
அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம்;
விண் தோய் வரை, பந்து எறிந்த அயா வீட,
தண் தாழ் அருவி, அரமகளிர், ஆடுபவே
பெண்டிர் நலம் வௌவி, தன் சாரல் தாது உண்ணும்
வண்டின் துறப்பான் மலை;
25
ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற
கடுஞ்சூல் வயாவிற்கு அமர்ந்து, நெடுஞ் சினைத்
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் உற்றாரின்
நீங்கலம் என்பான் மலை;என நாம்,
30
தன் மலை பாட, நயவந்து கேட்டு, அருளி,
மெய்ம் மலி உவகையன் புகுதந்தான் புணர்ந்து ஆரா
மென் முலை ஆகம் கவின் பெற,
செம்மலை ஆகிய மலைகிழவோனே.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?