முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Friday, 15 April 2016

ஒரு ஊரில் அழகே உருவாய், ஒருத்தி இருந்தாளே ! அழகுக்கு இலக்கணம் எழுத, அவளும் பிறந்தாளே !


   ஒரு ஊரில் அழகே உருவாய்,
ஒருத்தி இருந்தாளே !
அழகுக்கு இலக்கணம் எழுத,
அவளும் பிறந்தாளே !

Image result for காதலி 

தலைவன் தலைவியை விரைவில் வந்து மணமுடிக்கக் கூறும் வகையில் தோழி கூற்றாகக் குறிஞ்சிக்கலி பதினான்காவது பாடல் அமைந்துள்ளது. தலைவியின் குணச்சிறப்பையும், தலைவியின் மென்மைச் சிறப்பையும் இப்பாடல் எடுத்தியம்புகிறது.

தோழி தலைவனிடம் கூறுகிறாள்
""""சூரியனுடைய கிரணங்கள் உள்ளே புகாதவாறு இருள் படரந்திருக்கும் பல சேலைகள் கொண்ட மலை நாடனே. உன்னுடைய நாட்டில் மூங்கில் நுனிகள் தாமாகவே முற்றி விளைந்து கிடக்கும் . அவற்றில் மூங்கில் நெல் காணப்படும். அந்நெல்லை உன் மலைநாட்டிலுள்ள பெண்யானைகள் வளைத்து உண்டு மகிழும். மூங்கில் குறுத்துகளையும், நெல்லையும் வேண்டுமளவு உண்டு மகிழும்.  பின் வாழைத் தோட்டம் சென்று கனிந்த வாழைப் பழங்களைப் பறித்துத் தின்றுவிட்டு சோலையை நோக்கிச் செல்லும் அச்சோலையில் சென்று யானை ஒரு கவலையுமின்றி ஒரு பக்கமாகப் படுத்துறங்கும். உன் நாட்டிலுள்ள விலங்குகள் கூட விரும்பியபடி வாழ்ந்து அச்சமின்றி இன்ப வாழ்க்கையை நடத்துகின்றன.ஆனால் நீ விரும்பும் தலைவியோ உன்னால் அச்சத்துடன் உள்ளாள். நெடுநாள் குழந்தையின்றி வாடிய பெரும் செல்வக் குடுபத்தில் பிறந்த ஒரே மகள் உன் தலைவி. கனிந்த பலாப்பழத்தையும், தேன் கலந்த பெரும் சோற்றையும் உண்டு வாழ்ந்த குறவரின் சிறு குடியிலே தோன்றி அச்சமைன்பதையே அறியாது வளர்ந்தவள்.

Image result for காதலன் காதலி 
நீ தலைவியை விரும்புவதாகச் சொன்னபோது நான் உன் குணத்தை எண்ணிப் பார்த்தேன். நீ கொடை மிகுந்த வள்ளல் . நீ புலவர்க்கு வாரி வழங்கிப் பிறர் துன்பத்தைப் போக்கியவன் . விரைந்து செல்லும் குதிரைகளைக் கூடத் தாற்றுக்கோலால் குத்தி துன்புறுத்தாத பண்புடையவன். உன்னிடம் உள்ள இத்தகைய உயர்ந்த பண்புகளை அறிந்தே தலைவியிடம் உன்னைச் சேர்த்து வைத்தேன்.

தற்போது நீ கொடிய வலிமை மிகுந்த வில்லின் மேல் கை வைத்த வனவேடனைப் போலக் காணப்படுகின்றாய். என் தலைவியை விரும்புகிறாயென்றால், அவளைப் பிரியா திருப்பதன்றோ முறை. ஆனால் சில நாட்களாக அவளைச் சந்திக்க நீ வரவில்லை. வளைகள் நிறைந்த முன் கையையுடைய அவள் உன் பிரிவால் மயங்கி, கிளி ட்டுதலையும் மறந்து செயலற்று இருக்கிறாள். இது தான் முறையா? அவள் சிந்தை உன்னையே சுற்றி வருகிறது. அவள் தொழிலை மறக்கச் செய்துவிட்டாய். 

உன் காதலை விரும்பியவள் உன் காத்தலையும் விரும்புகிறாள். நீ அவளோடு டைவிடாது எப்போதும் இருக்க வேண்டும் என விரும்புகிறாள்.
 
குதிரை வேகமாகத் தான் ஓடும் என்றாலும், குதிரை வண்டிக்காரன் சாட்டைக்சோலால் வீசுகிறான். குதிரை இன்னும் வேகமாக ஓட வேண்டுமென்பதற்காகவே அவ்வாறு செய்கிறான். நானும் அவ்வாறே உன்னை விரைவு படுத்துகிறேன்.

கானவர்கள்,  காட்டிலே பிடித்து வந்த மான்குட்டியை நன்கு பாதுகாத்து இன்பமுடன் வளர்த்து வருவார்கள். அவர்கள் சற்றே பிரிந்தாலும் மான் குட்டியானது துள்ளி ஓடுவிடுவது போல, என் தோழியின் அழகும் நீ சற்றே பிரிந்தாலும் அவளைவிட்டு நீங்கி விடும்.
உன்
மலைநாட்டிலே எளிய உயிரினங்கள் அஞ்சாது உறங்குகின்றன. அதுபோல என் தலைவியும் உன் வீட்டிலே அஞ்சாது உறங்க வேண்டும். இதுவே என்
வேண்டுகோள். இதனை மறவாமல் மனதில் சிந்தத்துப் பார்ப்பாயாக!
 
தலைவியின்
அழகின் மீதான அக்கறையை மான் குட்டியோடு ஒப்பிடும் இடம் அழகு.வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு வைகல்,மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி,
தூங்கு இலை வாழை நளி புக்கு, ஞாங்கர்
வருடை மட மறி ஊர்வு இடைத் துஞ்சும்
இருள் தூங்கு சோலை, இலங்கு நீர் வெற்ப!
அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த
உரவு வில் மேல் அசைத்த கையை, ஓராங்கு
நிரை வளை முன்கை என் தோழியை நோக்கிப்,
படி கிளி பாயும் பசும் குரல் ஏனல்
கடிதல் மறப்பித்தாய் ஆயின், இனி நீ
நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும்; இவளே
பல் கோள் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி
அல்கு அறைக் கொண்டு ஊண் அமலைச் சிறுகுடி
நல்கூர்ந்தார் செல்வ மகள்.
நீயே, வளியின் இகல் மிகும் தேரும், களிறும்
தளியின் சிறந்தனை - வந்த புலவர்க்கு
அளியொடு கைதூவலை;
அதனால்,
கடு மா கடவுறூஉம் கோல் போல், எனைத்தும்
கொடுமை இலை ஆவது அறிந்தும், அடுப்பல் -
வழை வளர் சாரல் வருடை நல் மான்
குழவி வளர்ப்பவர் போலப் பாராட்டி,
உழையின் பிரியின், பிரியும்,
இழை அணி அல்குல் என் தோழியது கவினே! 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?