முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Saturday, 19 March 2016

பூங்காற்றிலே தேடிய உயிர்மூச்சு!

Image result for தலைவி தோழி 

பூங்காற்றிலே உன் சுவாசத்தை நான் தேடித் தேடிப் பார்த்தேன்.......
குறிஞ்சிக்கலி நான்காம் பாடலைப்போன்ற பாடலே இதுவும்.  எனினும் இவள் வேறொரு தலைவி.  தோழியும் வேறொரு தோழி.  துயரம் ஒன்றாக இருந்தாலும், அவரவர் பாடு அவரவர்களுக்கு.
தலைவன் தன் நாட்டிற்குச் சென்று தன் பெற்றோர் ஒப்புதல் பெற்று உடன் தெரிவதாகத் தெரிவித்தான்.  போனான்.  போயே விட்டான்.  வந்தபாடில்லை.
போகும்போது, ‘இனி உன்னைப் பிரியேன்’ என்றான். 

தலைவி சொன்னாள், ‘நீ பிரிந்தால் நான் உயிர் தரியேன்’ எனவே ‘விரைந்து செல் விரைந்து வா!’
சொன்ன சொல் என்னவாயிற்று?

Image result for தலைவி தோழிImage result for தலைவி தோழிImage result for தலைவி தோழி
வந்தானில்லை.  ஏங்கித் தவித்தாள்.  யாரிடமும் சொல்ல இயலாமல் தனிமைத் துயரில் தவித்தாள்.  நாட்கள் நகர்ந்தன.
பார்த்தாள் தோழி, இப்படித் துயருற்ற முகத்துடன் சோம்பியிருந்தால் தாய் பார்த்திடுவாள்.  சேதி கேட்டிடுவாள்.  களவு வெளிப்பட்டுவிடும்.
ஓர் உபாயம் செய்தாள்.  உலக்கையில் சேம்பின் இலையிலே கொண்டுவந்த தினையைக் கொட்டினாள்.  யானைத் தந்த உலக்கையை எடுத்துவந்தாள்.  தலைவி கையில் ஒன்றைக் கொடுத்தாள்.  இடிக்கும்படி கூறினாள்.  தலைவியும் பதுமைபோல வந்து இடிக்கத் தொடங்கினாள்.
“பாட்டு ஒன்றும் பாடுவோம்,” என்றாள்.
தலைவி, “என்ன பாட்டு,” என்றாள். 
“வள்ளைப் பாட்டுதான்!”
“சரி, தொடங்கு!”
தலைவி வாய் திறக்கவில்லை.  தோழியே பாடத் தொடங்குகிறாள்.
தோழி:
பொய் உரைத்தானோ அவன் பொய் உரைத்தானோ
காப்பேன் என்றவன் தான் பொய் உரைத்தானோ
பொய்யுரைப்பார் நாட்டிலே மழையும் பொய்த்திடுமே
மெய்தான் அவனுள்ளம் மெய்தான் அவனுள்ளம்!
தலைவி:
என் கைவளை நெகிழ்கிறதே பசலை பூக்கிறதே
இன்னுமேன் வரவில்லை மெலிந்தே போனேனே
என்னை அறியானோ தன்னை அறியானோ
என்மனம் துடிக்கிறதே ஓடியின்னும் வரவில்லையே!
தோழி:‘
பொய்யர் நாட்டிலே மழைதான் பொய்த்திடுமே
பெரியார் சொல்லும் என்றும் பொய்க்காதே
மழை பொழிகிறதே மின்னல் வெட்டுகிறதே
மன்னவனும் வந்திடுவான் மனமழிந்து போகாதே!
தலைவி
மழை பொழிகிறதே மின்னல் வெட்டுகிறதே
இடி இடிக்கிறதே ஆறும் பெருகியதே
இதுதான் ஆச்சர்யம் இதுதான் ஆச்சரியம்
பொய்யர் நாட்டிலே மழை பொழிகிறதே!
தோழி-

குவளை மலர்
குளத்தில் பூக்கும் குவளை மலர் வாடிப் போனதுண்டோ?
அவனுள்ள குளத்தில் பூத்த நீயும் வாடிப்போவாயோ?
வந்திடுவான் வாழ்க்கையும் தந்திடுவான்
வாடிப் போகாதே மனமேங்கிப் புலம்பாதே!
தலைவி:
என்னிடம் உனைப்  பிரியேன் என்றானே
பிரியின் உயிர் தரியேன் என்றேனே
என்னிடம் விரைவில் வருவேன் என்றானே
உடனே விரைந்து வா என்றேனே
அவன் இன்னும் ஏன்  வரவில்லை
அவன் இன்னும் ஏன் வரவில்லை
தோழி:
பொய்யர் நாட்டிலே மழை பெய்த்திடுமோ
பெரியர் சொல் பொய்த்துப் போகாதே
மழை பொழிகிறதே தலைவன் வந்திடுவான்
வாட்டம் தவிர்த்துவிடு வாழ்க்கை இனித்திடுமே
தலைவி –
இன்றேனும் நினைத்து வந்திடுவானோ தலைவன்
இளமையைக் காக்க துணைதான் ஆவானோ?
கவலையோடு அமர்ந்திருக்கும் தலைவியிடம், தோழி சிலநாள் கழித்துப் பழைய பாட்டை நினைவுபடுத்திப் பாடுகிறாள்.
மெய் தான் அவனுள்ளம் மெய் தான் அவனுள்ளம்
வாட்டம் தீர்க்க தலைவனுமே
சுற்றத்தோடு  தான் வந்திட்டான்
தந்தையும் ஒப்புதல் தந்திட்டார்
மணநாளும் உடனே குறித்திட்டார்
பிடியோடு மேய்ந்திடும் களிறுள்ள மலை
இடியோடு எப்போதும் பெய்திடும் மழை
நல்லவர்கள் வாழும் தலைவன் மலை
உன்னை விரும்பும் தலைவனின் மலை
எனத் தலைவனின் நாட்டையும் அவனையும் தலைவி மகிழும் வண்ணம் புகழ்ந்து பாடுகிறாள்.
கபிலரின் 5 வது பாடல்:
பாடுகம், வா வாழி, தோழி! வயக் களிற்றுக்
கோடு உலக்கையாக, நல் சேம்பின் இலை சுளகா,
ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம்
பாடுகம், வா வாழி தோழி! நல் தோழி! பாடுற்று;
இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடு நாள்,
5
கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்து,
பிடியொடு மேயும் புன்செய் யானை
அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன்
நெடு வரை ஆசினிப் பணவை ஏறி,
கடு விசைக் கவணையில் கல் கை விடுதலின்,
10
இறு வரை வேங்கை ஒள் வீ சிதறி,
ஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா,
தேன் செய் இறாஅல் துளைபடப் போகி,
நறு வடி மாவின் பைந் துணர் உழக்கி,
குலையுடை வாழைக் கொழு மடல் கிழியா,
15
பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனைப்
பாடுகம், வா வாழி, தோழி! நல் தோழி! பாடுற்று;
இலங்கும் அருவித்து; இலங்கும் அருவித்தே;
வானின் இலங்கும் அருவித்தே தான் உற்ற
சூள் பேணான் பொய்த்தான் மலை;
20
பொய்த்தற்கு உரியனோ? பொய்த்தற்கு உரியனோ?
அஞ்சல் ஓம்புஎன்றாரைப் பொய்த்தற்கு உரியனோ?
குன்று அகல் நல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின்,
திங்களுள் தீத் தோன்றியற்று;
இள மழை ஆடும்; இள மழை ஆடும்;
25
இள மழை வைகலும் ஆடும் என் முன்கை
வளை நெகிழ வாராதோன் குன்று;
வாராது அமைவானோ? வாராது அமைவானோ?
வாராது அமைகுவான் அல்லன் மலைநாடன்
ஈரத்துள் இன்னவை தோன்றின், நிழற் கயத்து
30
நீருள் குவளை வெந்தற்று;
மணி போலத் தோன்றும்; மணி போலத் தோன்றும்;
மண்ணா மணி போலத் தோன்றும் என் மேனியைத்
துன்னான் துறந்தான் மலை;
துறக்குவன் அல்லன்; துறக்குவன் அல்லன்;
35
தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன்
தொடர்புள் இனையவை தோன்றின், விசும்பில்
சுடருள் இருள் தோன்றியற்று;
என ஆங்கு
நன்று ஆகின்றால் தோழி! நம் வள்ளையுள்
40
ஒன்றி நாம் பாட, மறை நின்று கேட்டு அருளி,
மென் தோட் கிழவனும் வந்தனன்; நுந்தையும்
மன்றல் வேங்கைக் கீழ் இருந்து,
மணம் நயந்தனன், அம் மலைகிழவோற்கே.  

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?