நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday, 19 March 2016

சந்திப்போமா? இன்று சந்திப்போமா? தனிமையில் நம்மைப் பற்றிச் சிந்திப்போமா?



Image result for tiger and elephant fight 

சந்திப்போமா? இன்று சந்திப்போமா?
தனிமையில் நம்மைப் பற்றிச் சிந்திப்போமா?



கலித்தொகை-13

இரவில் தலைவன் தலைவியைச் சந்திப்பதற்காகப் பல கொடிய பாதைகளைக் கடந்து வருகிறான். அவன் வரும் வழியில் அச்சமூட்டும் பல விலங்குகள் இடர்ப்படும். வேடர்கள் விலங்குகளுக்காக வைத்த பொறி மறைந்திருக்கும். காட்டாறு எதிர்ப்படும் இப்படிப்பட்ட கொடுமையான பாதையை அவன் கடந்து வரும்பொழுது அவனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று தோழியும் தலைவியும் அஞ்சுகின்றனர். தலைவன் தலைவியை மணந்து கொள்ளுதலே இதற்குத் தீர்வு. அதை மறைமுகமாக இரவுக்குறி இனி காவல் மிகுந்திருப்பதால் கிடையாது என்றும் இனி பகலில்தான் தலைவியைச் சந்திக்க வேண்டுமென்றும் தோழி உறுதிபடக் கூறுகிறாள்.

Image result for tiger and elephant fight 
மலைநாடனே உன்னுடைய நாட்டிலுள்ள யானைகள் புலியுடன் போரிட்டு வெற்றிக் கொள்கிறது. பின்னர் அயர்ச்சியினால் உறங்குகிறது. போர் செய்த அயர்வினாலே தூங்கும்போது கனவு காண்கிறது. என்ன கனவு? புலி வந்து எதிரே நிற்பது போலவும், சண்டை செய்வது போலவும் கனவு காண்கிறது. உடனே சினந்து எழுகிறது. எழுந்து நின்று உற்றுப் பார்க்கிறது. எதிரே வேங்கை மரம் பூத்துக் குலுங்கி நிற்கிறது. அது வேங்கைப் புலி போல இருக்கிறது. உடனே புலி தான் என்றெண்ணி அதைத் தாக்கி கீழே வீழ்த்துகிறது. வீழ்த்திய பிறகே சினம் தணிகிறது. தணிந்த பிறகு பார்க்கிறது. வீழ்ந்து கிடப்பது வேங்கைப் புலியல்ல. வேங்கை மரம் என்று. உடனே நாணம் கொள்கிறது.

Image result for red wood trees with elephant 
வேங்கை மரத்தையா தாக்கினோம் என்று எண்ணுகிறது யானை. வேங்கை மரம் பக்கம் திரும்பாமலே நாணத்தால் வேறுபுறம் பார்க்கத் தொடங்குகிறது. இது உன் நாட்டில் மட்டும் நடக்கும் நிகழ்ச்சி என்று கருதாதே. என் வீட்டிலும் நடக்கிறது. நான் வேங்கை மரம் ஆனேன். தலைவி சினம் கொண்ட யானையானாள்.

நீ வந்து போன பிறகு ஊரெல்லாம் அலராகி விட்டது. அது கேட்டுத் தலைவியின் தாய் தலைவியைக் கண்டித்தாள். அது அவளுடைய மனதைப் பாதித்து விட்டது. ஊரில் எழுகின்ற அலர் அவளைத் துன்புறுத்தியது. அந்த உணர்வுகளோடே உறங்கச் சென்றாள். கொடிய ஒரு கனவைக் கண்டு பதறி எழுந்தாள். அப்போது அவளருகில் நானிருந்தேன். தலைவனைச் சந்திக்க ஏற்பாடு செய்த நான்தான் அனைத்திற்கும் காரணம் எனக் கருதினாள். உடனே என்னைக் கோபித்தாள். பின்னர்ச் சினம் தணிந்தாள். அவளுடைய ஒழுக்கத்தைக் காத்து நிற்பவளும் நான்தான் என்று உணர்ந்த பிறகு நாணி தலை குனிந்தாள். என்னை நிமிர்ந்து பார்க்கவும் இயலாமல் வேறு பக்கம் பார்த்திருந்தாள் உன்நாட்டு வேழம் போல.

ஆனால், இங்கே நடப்பது எதையும் நீ அறியாமல் நீ இப்போது தலைவி ஏன் வரவில்லை என்று கேட்டு நிற்கிறாய். தலைவி மீது உனக்கு மிகுந்த காதல் என்கிறாய். மழையென்றும் இடி என்றும் பாராது கொடிய பாதை வழியிலே வருவதை எடுத்துரைத்து தலைவியின் மீதான காதலை எடுத்துரைக்கிறாய். இதுவும் நல்லதுதான். ஆனால் அதற்காகக் கொடிய வழி வருவது நல்லதல்ல.
Image result for red wood trees 
தலைவி மீது அன்பு கொண்டாய். துயரம் பொறுத்தாய். அதுவும் நல்லதுதான். அதற்காக மலைச்சாரல் வழி இரவு நேரத்தில் வருவது நல்லதல்ல.

கரிய கூந்தலையுடைய இவளிடம் நீ காதல் கொண்டாய் அது நல்லதுதான். ஆனால் தன்னந்தனியாய் காட்டுவழியில் செல்கிறோம் என்ற உணர்வின்றிக் கையில் வேல் ஏந்தி கொடிய யானைகள் நடமாடும் மலை வழி வருகிறாயே. அதுதான் நல்லதல்ல.

உன்மீது தலைவிக்கும் காதலிருக்கிறது. உன் இரவு நேர கொடிய பயணத்தை அவளால் பொறுக்க இயலாது. ஆகவே இனி இரவில் வராதே. பகல் நேரத்திலேயே வா, வந்து நின்றால் இவளைச் சந்திக்கலாம். அதைவிடச் சிறப்பானது நீ இவளை மணந்து கொள்ளுதலே என்று தோழி தலைவனிடம் எடுத்துக் கூறுகிறாள்.

கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை,
நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின்,
கனவில் கண்டு, கதுமென வெரீஇ,
புதுவதாக மலர்ந்த வேங்கையை
5
'அது' என உணர்ந்து, அதன் அணி நலம் முருக்கி,
பேணா முன்பின் தன் சினம் தணிந்து, அம் மரம்
காணும் பொழுதின் நோக்கல் செல்லாது,
நாணி இறைஞ்சும் நல் மலை நல் நாட!
போது எழில் மலர் உண்கண் இவள்மாட்டு நீ இன்ன
10
காதலை என்பதோ இனிது மற்று இன்னாதே,
மின் ஓரும் கண் ஆக, இடி என்னாய், பெயல் என்னாய்,
இன்னது ஓர் ஆர் இடை, ஈங்கு நீ வருவதை;
இன்புற அளித்தனை இவள்மாட்டு நீ இன்ன
அன்பினை என்பதோ இனிது மற்று இன்னாதே,
15
மணம் கமழ் மார்பினை, மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து,
அணங்குடை ஆர் இடை, ஈங்கு நீ வருவதை;
இருள் உறழ் இருங் கூந்தல் இவள்மாட்டு நீ இன்ன
அருளினை என்பதோ இனிது மற்று இன்னாதே,
ஒளிறு வேல் வலன் ஏந்தி, 'ஒருவன் யான்' என்னாது,
20
களிறு இயங்கு ஆர் இடை, ஈங்கு நீ வருவதை
அதனால்
இரவின் வாரல், ஐய! விரவு வீ
அகல் அறை வரிக்கும் சாரல்,
பகலும் பெறுவை, இவள் தட மென் தோளே.
25





No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?