நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday, 19 March 2016

நாளை இந்த வேளை பார்த்து ஒடிவா நிலா..... இன்று எந்தன் தலைவன் இல்லை சென்றுவா நிலா.....



Image result for தலைவி  நிலா 

நாளை இந்த வேளை பார்த்து ஒடிவா நிலா.....
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்றுவா நிலா.....

 
குறிஞ்சிக்கலியின் பனிரெண்டாவது பாடல் இது. இப்பாடல் தலைவன் தலைவியை மணக்கும் எண்ணமின்றி, களவுக் காதலிலேயே காலம் கடத்திக் கொண்டிருக்கிறான். இவர்களின் காதலோ ஊராருக்குத் தெரிந்து அவர் பேசுக்கின்றார்கள். இந்நிலையில் தலைவியைச் சந்திக்க வந்திருக்கும் தலைவனை வழி மறித்துத் தோழி அவனிடம் கூறுவதாக இப்பாடல் அடைந்துள்ளது.

மலை நாடனே நான் கூறுவதைச் செவி டுத்து நன்கு கேட்பாயாக . உன்னுடைய மலை நாட்டிலே வளமான காடுகள் உள்ளன. அவை ஒளியை உள்புக விடாதவாறு அடர்ந்துள்ளன. அக்காட்டிலே தான் எட்டுதிசைகளையும் காவல் காக்கக் கூடிய திசை யானைகளைப் போன்ற காட்டுயானைகள் உள்ளன. அவை மழை போல் மதநீர் சொரியும் யானைகள். வேங்கை மலர் போன்ற ஒள்ளிய புள்ளிகளைத் தன் நெற்றியிலே கொண்ட காட்டு யானைகள் அவை. அவற்றின் நெற்றியில் காணப்படும் புள்ளிகளை வேங்கை மலர் என நினைத்துத் தும்பிகள் ஒரு புறம் மொய்த்துக் கொண்டிருக்கும். மறுபுறம் அவற்றின் மதநீர் வாசைனக்காக வண்டுகள் மொய்த்துக் கொண்டிருக்கும்.


Image result for tiger and elephant fight 

அதே நாட்டிலேயே கழுத்துப் பெருத்த மிக்க வலிமையுடைய புலிகள் வாழ்ந்திருக்கும். அவை இந்தக் காட்டு யானைகளுடன் அஞ்சாது போரிடுகின்றன. இது போன்றதொரு சண்டைக் காட்சி தற்போது தலைவியின் வீட்டிலும் நிகழ்ந்து வருகிறது. தலைவியின் பெற்றோர் தம் சுற்றத்தாருடன் தலைவியின் ஒழுக்கத்தைக் குறித்து இவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் களவுக் காதல் வெளிப்பட்டு விட்டதால், ஊராரின் பழிச் சொல்லுக்கு ஆளான தலைவியை அவளுடைய தாய் வீட்டிற்கு அடைத்து விட்டாள். தற்போது அவள் இங்கு வர இயலாது. உன்னையே எண்ணி எண்ணி ஏங்குகிறாள். உடல் மெலிந்து வாடுகிறாள். வளைகள் நெகிழ்ந்து போயின. உன் மலை நாட்டு சுனையிலே இருக்கும் நீலமலரில் எப்படி எப்போதும் ஒளி தங்கியிருக்கிறதோ அதைப்போல அவளுடைய கண்களிலும் எப்போதும் நீர் தங்கியிருக்கிறது. உன் மலை நாட்டிலே இளவேனிற் காலத்திலே நிறம் மாறித் தோன்றும் தளிர்கள் போல அவளும் சலையினால் நிறம் மாறிப் போயிருக்கிறாள். உன் மலைச் சாரலிலே உள்ள வெண் காந்தள் பூக்கள் வெயிலால் வாடிக் காம்புற்று வீழ்வன போல அவளுடைய கைகளிலுள்ள வளையல்கள் நழுவி கீழே விழுகின்றன.

அவள் இவ்வாறு துயரருற்றிருந்தாலும் தன் நிலைக்காக அவள் கலங்கவில்லை. இரவு நேரத்தில் பெய்யும் மலையில் கொடிய மலையைக் கடந்து, காட்டாற்றைக் கடந்து கொடிய விலங்குகளிடமிடருந்து தப்பித்து நீ நல்ல படியாக வரவேண்டுமேயென்றே நினைத்து கலங்குகிறாள். நீ வரும் கொடிய வழியை நினைத்து அச்சுமுறுகிறாள். நடுநிசியில் ஏதாவது ஒசை கேட்டாலும், ஓடிச் சென்று நீ நிற்கும் இடத்தைப் பார்த்து, காணாது ஏமாற்றமடைகிறாள்.
கண்ணீர் விட்டு, கண்ணீர் விட்டு வருந்தியழுது கொண்டேயிருக்கிறாள். சிறிது தூங்கினாலாவது அவளுடைய துயரம் மறையும் என நான் நினைக்கிறேன். தூக்கத்திலேயும் உன்னை நினைத்து உன்னுடன் இன்பப் பொழுது போக்குவதாக மகிழ்ந்து, விழித்துப் பார்க்கும் பொழுது, நீ இல்லாது போனால் அவளது துன்பம் பன்மடங்குகாகி விடுமே என்று எண்ணுகிறேன். எனவே அவள் தன் சிறு தூக்கத்தையும் தூங்காதிருப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.
அவளுடைய தோள்கள் உனக்குச் செய்த தவறு தான் என்ன? உறங்காத அவள் கண்கள் உனக்கு ஏதும் தீங்கிழைத்தனவோ, அல்லது பொன்னில் பதித் மணி போன்று ஒளி வீசும் அவளது மேனி உனக்குத் செய்த பாவம் தான் என்ன? இவற்றின் நலனையெல்லாம் அவள் இழந்தும் அவள் உனக்காவே வருந்திக் கொண்டிருக்கிறாள்.
அவளுடைய பெருந்துயரின் கொடுமையை எண்ணினால், அவை எல்லையறிய முடியாத உன் மலையின் அளவை விடப் பெரியதாகும். நீயோ தலைவி வராத காரணத்தையறியாது அவள் மீது கோபம் கொண்டிருக்கிறாய். அவள் நிலையை உணராதிருக்கிறாய் அவளுடைய இத்துயரத்தைப் போக்கி அவளுடைய இழந்த அழகையெல்லாம் மீண்டும் பெறுமாறு நீ செய்தல் வேண்டும். தலைவியுன் பால் இனியும் கோபம் கொள்ளாது அவளை விரைந்து மணமுடிக்கும் ஏற்பாடுகளை மேற்கொள்வாயாக என்கிறாள்.

ஆம் இழி அணி மலை அலர் வேங்கைத் தகை போல,
தே மூசு, நனை கவுள், திசை காவல் கொளற்கு ஒத்த,
வாய் நில்லா வலி முன்பின், வண்டு ஊது புகர் முகப்
படு மழை அடுக்கத்த, மா விசும்பு ஓங்கிய,
கடி மரத் துருத்திய, கமழ் கடாம் திகழ்தரும்
5
 பெருங் களிற்றினத்தொடு, வீங்கு எருத்து எறுழ் முன்பின்
இரும் புலி மயக்குற்ற இகல் மலை நல் நாட!
வீழ்பெயற் கங்குலின் விளி ஓர்த்த ஒடுக்கத்தால்,
வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறு உண்டோ
தாழ் செறி கடுங் காப்பின் தாய் முன்னர், நின் சாரல்
10
 ஊழ் உறு கோடல் போல், எல் வளை உகுபவால்;
இனைஇருள் இது என ஏங்கி, நின் வரல் நசைஇ,
நினை துயர் உழப்பவள் பாடு இல் கண் பழி உண்டோ
'இனையள்' என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர், நின் சுனைக்
கனை பெயல் நீலம் போல், கண் பனி கலுழ்பவால்;
15
 பல் நாளும் படர், அட பசலையால் உணப்பட்டாள்,
பொன் உரை மணி அன்ன, மாமைக்கண் பழி உண்டோ
இன் நுரைச் செதும்பு அரற்றும் செவ்வியுள், நின் சோலை
மின் உகு தளிர் அன்ன, மெலிவு வந்து உரைப்பதால்;
என ஆங்கு
20
 பின் ஈதல் வேண்டும், நீ பிரிந்தோள் நட்பு என நீவிப்
பூங் கண் படுதலும் அஞ்சுவல்; தாங்கிய
அருந் துயர் அவலம் தூக்கின்,
மருங்கு அறிவாரா மலையினும் பெரிதே.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?