ஏனடி தோழி, கேளொரு சேதி, இதுதானோ உங்கள் மன்னவன் நீதி?
களவொழுக்கத்தின்போது
விரைவில் வந்து மணமுடிப்பதாகக் கூறிச் சென்ற தலைவன் நெடுநாட்களாகியும்
வரவில்லை. தலைவியோ தலைவனை மறக்கமுடியாமல் தவித்தாள். அவனையே நினைத்து
வருந்தி உடல் மெலிந்து போனாள்.
தலைவன் மலைநாட்டைச் சேர்ந்தவன்.
வணிகத்தின் பொருட்டு இப்பகுதிக்கு வந்தபோது, தலைவியைக் கண்டு
காதல்கொண்டவன். அவன் ஊர் தெரியாது. பேர் தெரியாது. சென்றவன் திரும்ப
அவனாகவே வந்தால்தான் உண்டு. தலைவியோ யாரிடமும் எதுவும் சொல்லவும்
முடியாமல், அவனை மறக்கவும் முடியாமல் உலகை வெறுத்துக் காணப்பட்டாள்.
தோழியால் இதைப்பொறுக்க இயலுமா?