முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Tuesday, 1 March 2016

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா. . ...கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா. . ...Image result for தலைவன் ஓவியம் 
தாய் மகளின் காதலை அறிந்து கொண்டாள். இதனால் காவல் மிகுந்தது. ஏச்சும் பேச்சும் எழுந்தது. தலைவி, தலைவனைச் சந்திக்க இயலாமல் தவிக்கிறாள். மனம் புழுங்குகிறாள். காதலினால் வருந்துகிறாள். மேனி வாடிப் போனது. தலைவியின் இத்துயரம் கண்ட தோழி தலைவனைச் சந்திக்கின்றாள். தலைவியின் நிலையை எடுத்துக் கூறினாள். அவனுடைய அருளற்ற கொடுந்தன்மையினால் தலைவி படும் துயரத்தை அறிந்த அவன் ஊர் சென்றான். தற்போது உற்றாருடன் உரிய முறையில் பெண் கேட்க வந்துள்ளான். இதை தலைவியிடம் கூறுகிறாள் தோழி.


தலைவன் உன்னைச் சந்திக்கப் பலமுறை வந்தான். காவல் மிகுதியினால் நீ வர முடியாத துயரத்தை நான் எடுத்துரைத்தேன். உன்னைச் சந்திக்க வேண்டுமென்றால் திருமணம் ஒன்றே வழி என்றேன். அவன் சுற்றம் நினைத்து யோசித்தான். நான் அவனிடம் மலை நாட்டைச் சேர்ந்தவனே, உன்னுடைய மலையிலே மூங்கில்கள் மிக நீண்டு நெருங்கி வளர்ந்துள்ளன. அதனால் சூரியஒளி கூட உள்ளே நுழைய முடியாது. அக்காட்டில் ஆங்காங்கே சிறு சிறு சுனைகள் உள்ளன. அக்காட்டில் உன் மலைக்கே சிறப்புடைய காந்தள் மலர்கள் பூத்திருக்கின்றன. கண்ணுக்கு விருந்து தரும் அக்காட்சி மிக இனிய காட்சி. நல்ல வளமுடைய மலை நாடன் தான் நீ.

காந்தள் மலர் பூத்திருக்கும் மலையிலே பேய் காற்றுடன் பெருமழை பொழிந்தது. மேகங்கள் சிங்கங்கள் போல முழங்கின. அந்த ஒலி எங்கும் பரவியதால் நாகங்கள் அஞ்சி நடுங்கி பாறையிடுக்குகளில் மறைந்தன. இடியின் ஓசையினால் சிறு குடிமக்கள் துயில் கொள்ளாது துன்புற்றனர். அந்நாகத்தைப் போலவும், அச்சிறுகுடி மக்கள் போலவும் தலைவியும் அஞ்சி நடுங்கி துயில் கொள்ளாது துன்புறுத்தி வருந்துகிறாள். இங்கு அவளைத் துன்புறுத்துவது உன்னுடைய திருமண முயற்சியின்மையே. உங்களுடைய களவு வெளிப்பட்டதால் தாயும் அவளை இடிபோல் முழங்கி அச்சுறுத்துகிறான்.

Image result for காந்தள் மலர்Image result for காந்தள் விரல்கள் Image result for கண்ணீர்
மிக்க வளமுடைய மலைநாட்டைச் சார்ந்தவன் என்ற மமதையினால் நீ அருளின்றி இருக்கின்றாயா? இல்லை அவள் கைவிரல்கள் போன்ற காந்தள் மலர்கள் உன் மலை நாட்டில் ஏராளமாக உள்ளன என்ற மமதையினால் காலம் தாழ்த்துகிறாயாநீ இவ்வாறு செய்வதால் தலைவிக்கு மிகுந்த வருத்தம். இதனால் கண்கள் ஒளியிழந்து விட்டன. உன் மலைநாட்டு சுனை நீரைப் போல அவள் கண்களிலிருந்தும் நீர் பெருகியபடியே உள்ளது. அவள் மீது உனக்கு இரக்கமில்லையா? சொல்.

என்னுடைய தலைவியின் தோள்கள் மிக அழகியவை. அவை உன் நாட்டில் வளர்ந்திருக்கும் மூங்கில் போன்றவை. இன்றோ அவை சோர்ந்து போய் அழகிழந்து காணப்படுகின்றன. யானையுடன் புலி போரிடும் உன் மலை காட்டிலே அவளுடைய தோளைப் போன்ற மூங்கில்கள் மிகுதியாக உள்ளன என்ற மமதையினால்தான் அவளை மணமுடிக்காமல் உள்ளாயா? அவள் மேல் உனக்கு இரக்கமில்லையா? சொல்.

Image result for காந்தள் விரல் 
தலைவி நடு யாமத்தில் துயில் கொள்ளாமல் காவல் மிகுதியால் மனம் தடுமாறி தவிக்கிறாள். அவளுடைய அழகிய எழில் கெடும்படி நீ காலம் தாழ்த்தி வருகிறாய். தனிமைத் துயரில் உருக்குலைந்து விட்டாள். உன் மலைநாட்டில் பக்க மலையில் பூத்திருக்கும் செழிப்பான வேங்கை மரங்கள் தலைவியைப் போல செழித்துள்ளன என்ற மமதையினால் இவ்வாறு செய்கிறாயா? அவள் மேல் அருளில்லையா? என்றெல்லாம் தலைவனிடம் தோழி அவனுடைய பொல்லாங்குகளையெல்லாம் எடுத்துரைக்கிறாள். அவனுடைய தவறுகளைச் சுட்டிக்காட்டி தலைவியின் பசலை நோய்க்கும், உறுப்பு நலனழிதலுக்கும், தனிமைத் துயருக்கும் தலைவனே காரணம் என உணர்த்துகிறாள்.

Image result for திருமணம் ஓவியம் 
இதனால், தலைவன் தன் சுற்றத்தாரை நாடினான். தலைவியைப் பற்றி எடுத்துரைத்து தன் விருப்பத்தையும் உறுதியையும் கூறினான். தற்போது பெண் கேட்டு வந்துள்ளான். உன் பெற்றோரும் பெண் கொடுக்க இசைந்து விட்டனர் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறாள்.

களவும்  கண்டிப்பும் குறித்த கபிலரின் அப்பாடல் ...


விடியல் வெங் கதிர் காயும் வேய் அமல் அகல் அறை,
கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை,
அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து,
பெரும் மலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனை பெயல்
உருமுக் கண்ணுறுதலின், உயர் குரல் ஒலி ஓடி,
5
நறு வீய நனஞ் சாரல் சிலம்பலின், கதுமென,
சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப!
கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின்
மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ
புல் ஆராப் புணர்ச்சியால் புலம்பிய என் தோழி
10
பல் இதழ் மலர் உண்கண் பசப்ப, நீ சிதைத்ததை;
புகர் முகக் களிறொடு புலி பொருது உழக்கும் நின்
அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ
கடை எனக் கலுழும் நோய் கைம்மிக, என் தோழி
தடையின திரண்ட தோள் தகை வாட, சிதைத்ததை;
15
சுடர் உற உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த
விடர் வரை எரி வேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ
யாமத்தும் துயிலலள் அலமரும் என் தோழி
காமரு நல் எழில் கவின் வாட, சிதைத்ததை;
என ஆங்கு,
20
தன் தீமை பல கூறிக் கழறலின், என் தோழி
மறையில் தான் மருவுற மணந்த நட்பு அருகலான்,
பிறை புரை நுதல்! அவர்ப் பேணி நம்
உறை வரைந்தனர், அவர் உவக்கும் நாளே.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?