இரகசியம்
சொல்லுக்குள் ஒளிந்திருக்கும் பொருள் போல
புல்லுக்குள் ஒளிந்திருக்கும் குளிர்போல
கண்ணுக்குள் ஒளிந்திருக்கும் கருணை போல
விண்ணுக்குள் ஒளிந்திருக்கும் மழைபோல
மண்ணுக்குள் ஒளிந்திருக்கும் உயிர்ப்புபோல
பண்ணுக்குள் ஒளிந்திருக்கும் இசைபோல
மலைக்குள் ஒளிந்திருக்கும் சுனைபோல
மனதிற்குள் ஒளிந்திருக்கும் இதயம்போல
ஒவ்வொன்றுக்குள்ளும் அரியவொன்று ஒளிந்துள்ளது.
நாமறியாத இரகசியங்கள் நம்மிலும் உண்டு
நம்மில் நம்மை இயக்கும் இரகசியமுமுண்டு.
---------------------------------------------------------------
தகுதி
சிறு மழைக்கே பெரும்புதர்..
வீட்டுத் தோட்டப் புதர்களென
அவரைப் பக்கம் போனால்...
பூக்கள் காட்டிச் சிரிக்கிறது.
பூசணி சுரைக்கொடிகள் ...
பிஞ்சுக்காய் காட்டி இறைஞ்சுகிறது.
புற்களின் மேலுள்ள பனித்துளிக்குள்...
அடடா உலகமே கவிழ்ந்து கிடக்கிறது.
தோட்டக்காரராவதற்குக் கூட...
மனித உறவுகளை
வெட்டி எறிபவர்களின்...
மனதைரியம் வேண்டும் போலிருக்கிறது.
------------------------------------------
வானம்
மேகம்
பருவம்
காற்று
ஆறு
நேரம்
கடந்து கொண்டே இருக்கிறது.
ஊரடங்கியிருந்தாலும்
உள்ளடங்கியிருந்தாலும்
சாட்டையாக மாறி சுழற்றும்
காலதேவனின் கைகளிலிருந்து மீளமுடியாமல்
பம்பரம்போல் ஓரிடத்தில் குவிந்து
சுழன்று கொண்டிருக்கும்
நினைவுகளால்...தேங்கிப் போகும் நாம்.....
நினைவு முடிவதற்குள் இந்த நிமிடம்...
நம்மைக் கடந்து திரும்பிப் பார்த்துச் சிரிக்கிறது.
-------------------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?