வரம்
உதிர்ந்ததை உரமாக்கி மீண்டும்
மலரும் பூமனது வரம்.
புதிதாய்ப் பிறந்த நினைவோடு
வாழும் வாழ்வு பெருவரம்.
கனவுத் தாகங்கள் அற்ற
இரவுகள் அற்புத வரம்.
------------------------------------------------------------------
தன்மாற்றம்
தன்னைத்தானே செதுக்கிக் கொள்ளுங்கள் அவமானஉளிகளால்.
அதைவிட சிறந்த மாற்றம் உலகில் எங்கும் இல்லை.
வெறுப்பின் காரணம் தேடி அலைவதை விடுத்து
அவமானத்திற்கு மாற்றாக அன்பைக் கொடுங்கள்.
உடையும் நீர்க்குமிழி வர்ணசாலம் காட்டி
இந்த நொடி வாழ்வதைப் போல வாழ்ந்து விடுங்கள்.
எதுவும் கடக்கவில்லையென்றாலும் அன்பை
நிரப்பிக் கொண்டால் மனதையாவது கடக்கலாம்.
மழலைபோல வாழ முடியாவிட்டாலும்
மரமாகவாவது மாற முயற்சிக்கலாம்.
---------------------------------------------------------------------------
அலையாகிவிடு....
அலைகள் இருந்தது. இருக்கிறது. இருக்கும்.
கரையில் இருப்பதா? கால் நனைப்பதா?
சில அலைகள் காலை வாரி விடும்.
சில அலைகள் காலை முத்தமிடும்.
சில பாடம் நடத்தும். சில மிரள வைக்கும்.
பார்வையாளனாக இருந்துவிட்டால்?
தரையை அடையவிடாத ஆர்ப்பாட்டம்.
நுரைக் கரங்களோடு அதன் போராட்டம்.
திரும்ப திரும்ப மேலெழும் நீரோட்டம்.
பார்வையாளனாய் இருந்துவிட்டால்
பரவசமில்லை. பார்த்துவிடுவோம்
அலைகளோடு இணைந்திடுவோம்.
-----------------------------------------------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?