முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Wednesday, 6 May 2015

சங்க காலத்தில் போரும் அமைதியும் 18

தாய்வழிச் சமூக நிலை


Image result for போரில் அடிமை மகளிர் நிலை 
போரில் தோற்கடிக்கப்பட்ட நாட்டுப் பெண்களை கொண்டி மகளிர் எனப் பிடித்து வந்ததும் அவர்களை அடக்கி ஒடுக்கியதும் காரணமாகவே பின்னர் தமிழகத்தில் அடிமைமுறை உருவாக மூல விசையாக இருந்தது என்பது ஆ.சிவசுப்பிரமணியம் கூற்றாக உள்ளது. பெண் முதன்மை பெற்ற தாய் வழிச் சமூகம் பின்னுக்குத் தள்ளப்பட்டு குடும்பம், அரசு அதிகாரம் முதலியன மையப்படுத்தப்பட்ட சூழலில் பெண்ணின் இருப்பு என்பது விளிம்புதான் என்பது சொல்லாமலே விளங்கும். அதை ஏற்றுக் கொள்ள முடியாத பெண்ணினம் தன் இயல்பிலிருந்து மாறாமல் இயல்பாய் இருக்க முயல்கிறது. இல்லையெனில் ஆதிக்கச சமூகத்தின் அதிகார மையத்திலிருந்து தன்னை வெளியேற்றிக் கொள்ளல் என்ற நிலையில் செயல்படுகிறது.

பெண்பாற் புலவர்கள் ஔவையா,அள்ளுர் நன்முல்லயார்,வெறியாடியகாமக்கண்ணியார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால் அதிகார மையத்திலிருந்து வெளியேறுவதும் அதைப் புறக்கணிப்பதென்பதும் அனைவராலும் இயல்வதில்லை. ஒரு அரசியாக இருப்பினும், அவளும் ஆதிக்கஅதிகார மையத்திற்குளாய் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும். ஆணின் விருப்பம் முதன்மைப்படுத்தப்பட்ட நிலையில் அதை எதிர்க்கும் அதிகாரம் அவளுக்கில்லை. வையாவிக்கோப்பெரும்பேகன் மனைவியை வெறுத்து ஒதுக்குகிறான். பரத்தையரோடு உறவாடுகிறான். இந்நிலையில் அவன் மனைவி கண்ணகி கணவனை எதிர்த்துக் குரல் கொடுக்க முடிவதில்லை. தன் கணவனுக்காக ஏங்கிக் காத்திருப்பதைத் தவிர அவளால் செய்யக் கூடியது எதுவுமில்லை. (புறம்-143,147)

Image result for போரில் அடிமை மகளிர் நிலை 

வேள் எவ்வியின் மனைவி கைம்மைத்துயர் அடைந்து தவிக்கிறாள். (புறம் 234) ஆணுக்கு கைம்மை நிலை இல்லை. ஆதிக்க அதிகார மையத்திலிருந்து வெளியேற விரும்பினால் மரணம் தான் ஒரே வழி என்பதை பெருங்கோப்பெண்டின் வாழ்க்கை காட்டுகிறது. கைம்மை நோன்பை நோற்றபடி அரசாட்சியைப் பார்த்துக்கொள்ளும்படி சான்றோர் அறிவுரை கூறினும், கைம்மை நோன்பின் கொடுமையைவிட சாவதே மேல் எனக் கூறி மரணத்தையே தேர்வு செய்கிறாள். ஆதிக்கச் சமூகத்தின் கட்டமைப்பிலிருந்து வெளியேற வேண்டுமாயின் மரணம்தான் தீர்வு என்பதும் கூட ஒரு வகை ஆதிக்க மைய நோக்கம்தான்.

பொதுவாக, பாதிக்கப்பாட்டோரின் இதுதான் என பலப் புறப்பாடல்கள் சான்று பகர்கின்றன. தன் ஆற்றல் மறத்தல், அடிபணிந்து வாழல்,தன் நிலைக்கு நொந்து கொள்ளல்,முடியாத நிலையில் ஆதிக்கக் கட்ட்மைப்பிலிருந்து வெளியேறுதல்,எதிர்வினை அரசியலை முன் வைத்தல் போன்றவை அடக்கப்பட்டவர்களின் செயற்பாடுகளாகும்.

Image result for போரில் அடிமை மகளிர் நிலை 
பெண்கள் மட்டுமல்லர். பெண் தெய்வங்களும் கூட விளிம்பில் தள்ளப்பட்டுள்ளன. நால்வகை நிலங்களின் கடவுளர்களாக ஆண் தெய்வங்களே இருப்பது சிந்தித்தற்குரியது. கொற்றவை பாலை நிலக் கடவுளாகக் குறிப்பிடப்படுகிறாள். பதிற்றுப்பத்து அயிரைஎன்னும் பெண் தெய்வம் குறித்துக் குறிப்பிடப்படுவது சிந்தித்தற்குரியது. இத்தெய்வம் மலைக்குரிய தெய்வம். கடவுள் அயிரையின் நிலைஇ கேடு இலவாக பெரும நின் புகழே(ப.ப.79) உருகெழுமரபின் அயிரை(ப.ப.88,98) அயிரை வழிபாடு கொற்றவை வழிபாடு என ஔவை துரைசாமிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.

Image result for பெண் தெய்வங்கள் 

பரிபாடல் திருமாலுக்கு 24, முருகனுக்கு 31, காடுகாள் 1, வையை 26, மதுரை 4 எனப் பாடப்பட்டுள்ளது. இதில் தொல்காப்பியர் குறிப்பிடும் வருணன்,இந்திரன் பற்றிய பாடல்கள் இல்லாமலிருப்பது குறிப்பிடத்தக்கது. மாயோன் என்பது திருமால். சேயோன் முருகன். தொல்காப்பியர் புறத்திணை வெட்சித்திணையில் துறைகளை அடுத்த புறநடையில் கொற்றவை நிலை பற்றிக் குறிப்பிடுகிறார். இத்தெய்வம் பண்டைய நிலையில் தனித்தெய்வமாக இருந்துள்ளது. குறிஞ்சித்திணைக்குப் புறத்திணை வெட்சித்திணை. எனவே கொற்றவைதான் குறிஞ்சித் திணையின் தெய்வமாக இருந்திருக்க வேண்டும். வேட்டைத் தெய்வமாக,போருக்குரிய தெய்வமாக விளங்கிய கொற்றவை ஆதிக்கச் சமூகக் கட்டமைப்பினால் பின்னுக்குத் தள்ளப்பட்டாள். குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து பாலையாக மாறிய நிலையில் நகர வளர்ச்சியின் ஆதிக்கக் கட்டமைப்பில் புறந்தள்ளப்பட்ட எஞ்சிய பழங்குடியினரின் தெய்வமாக மாறிப் போனாள்.
No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?