நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday 6 May 2015

சங்க காலத்தில் போரும் அமைதியும் 15



சங்க காலத்தில் போர்கள் உருவாவதற்குக் காரணங்கள்

 

Image result for யானை  வேல் 
சிறுகுடிகளாக இருந்து இனக்குழு வாழ்க்கை வாழ்ந்து வீரத்தினாலும் கொடையினாலும் தலைவர்களாகவும், பின்னர்ச் சிறுகுடி மன்னர்களாகவும் உயர்ந்த சிலருடைய மண்ணாசை போர்கள் ஏற்படக் காரணமாகியுள்ளது.


பெருநிலப்பகுதியை ஆளவேண்டும் என்ற பேராசை போர்களுக்குக்காரணமாகியுள்ளன.

 மற்ற சீறூர் தலைவர்களின் புகழையும், அவர் நாட்டு குடியின் வளமையும் கேட்டளவில் பொறாமை கொண்டு, அவர் நாட்டைத் தன் நாடாக்கிக் கொள்ளும் வேட்கை காரணமாகப் போர் ஏற்பட்டுள்ளது.
 
தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில் தோள்கள் தினவெடுக்கமிகை மறத்தின்காரணமாகப் போர்கள் ஏற்பட்டுள்ளன.

  வளமான நாட்டைப்பெற்றுப் பெருநிலப்பரப்பை ஆளும் நிலையில், சீறூர் மன்னர்களிடம் குவிந்துள்ள பெருஞ்செல்வத்திற்கு ஆசைப்பட்டு அவர் மகளை மணந்தால், பெருஞ்செல்வம்மகட்கொடையாகக் கிடைக்கும் என நினைத்து மகள் கேட்டல். மகட்கொடை மறுத்த நிலையில் போர் ஏற்பட்டுள்ளது.

பெண்ணாசை காரணமாகவும் போர்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

தன்னொத்த மன்னனை மற்றொரு மன்னன் ஏதோ ஒரு காரணம் பற்றி எள்ளி நகையாடும்பொழுது இழிவு பொறுக்காமல் போரின் மூலமாகப் பழிதீர்க்க முயல்தல் முதலான காரணங்களினால்போர்கள் ஏற்பட்டுள்ளன.

சேர சோழ பாண்டியர் யார்?


சீறூர் மன்னர்களையும், வளமான மருதநில ஊர்களை ஆண்ட முதுகுடி மன்னர்களையும் வென்ற சேர, சோழ, பாண்டியர்கள் யார் என்பதற்கு ஔவை, சு.துரைசாமிப்பிள்ளைசேர, சோழ, பாண்டியர்களும் குழு வாழ்க்கையிலிருந்து தோன்றியவர்களேஎன்கிறார், (தமிழர் சால்பு, பாரி புத்தகப்பண்ணை, சென்னை)


இனக்குழு வாழ்க்கை சார்ந்த பிற சீறூர் மன்னர்களைப் போன்றிருந்த சேர, சோழ, பாண்டியர்கள் மண்ணாசையால் தம்மொத்த குழுக்களுடன் போரிட்டுத் தம் பகுதியை விரிவாக்கிக் கொண்டனர். சேர சோழ பாண்டியர்களுக்குள்ளாகவே பல பிரிவுகள் இருந்துள்ளன. சோழர்கள் ஒன்பது குடிகளாக இருந்தனர். இரத்த உறவுடைய இவர்கள் இவர்களுக்குள் போரிட்டுக்கொண்டனர். இதற்குக் கரிகாலன் வரலாறே சான்று. கரிகாலன் அரியனை ஏறுவதற்கு முன் தம் உறவுடைய குடிகளுடன் போரிட்டு வென்ற பின்னரே அரியனை ஏறினான். கிள்ளிவளவன் அரியனை ஏறிய போதும் ஒன்பது மன்னர்களின் எதிர்ப்பை போரிட்டு வென்றே சேரன் செங்குட்டுவனின் உதவியால் அரியனை ஏறினான். (பதிற்றுப்பத்து. 5ம்பத்துப் பதிகம்)


பாண்டியர்களும், மாறன், வழுதி, பஞ்சவர் முதலான பல குடிகளை உடையவரே. சேரர்களும் குட்டுவர், குடவர், பூழியர், முதியர் போன்ற பல குடிகளைச் சேர்ந்தவர்களே. இவர்கள் இவர்களுக்குள் போரிட்டு ஒருவரை வென்று மற்றொருவர் தம் நாட்டு எல்லையைப் பெருக்கிக் கொண்டுள்ளனர். நாட்டு எல்லையைப் பெருக்கி வேந்தர் நிலைக்கு உயர்ந்த பின்னர் மற்ற குடிகளிடம் போரிட்டுள்ளனர்.

மூவேந்தர்

 Image result for மூவேந்தர்


Image result for சேர சோழ பாண்டியர் இனக்குழு வாழ்க்கை - சீறூர் வாழ்க்கை-அரசு உருவாக்கம் - பேரரசு உருவாக்கம் என்ற நிலைகளைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. சேரர்,சோழர், பாண்டியர் என்ற முப்பெருவேந்தர்களும் முப்பெரும் பேரரசும் உருவாவதற்குப் போர்களும், பகை புல அழிப்புகளும் பேரளவில் அளவிற்கு உதவியாக இருந்துள்ளன என்பதைச் சங்கப் பாடல்கள் காட்டி நிற்கின்றன.



சோழப்பேரரசு


சோழப்பேரரசு உருவாக்கத்திற்குக் காரணமான ஒரு போரில், இராச சூயம் வேட்ட பெருநெற்கிள்ளி பகைவர் தம் காவலமைந்த மருத நிலத்தூர்கள் பாழாகப் பகைவரின் நாட்டையே எரியூட்டிய செய்தியை (புறம் 16) மழபுலவஞ்சிப் பாடல் காட்டுகிறது.
வஞ்சித்திணையின் ஒரு துறை மழபுலவஞ்சி. பகைவர் நாடு பாழாக்கப்படுவதைக் கூறும் புறத்துறை இது. பெருநற்கிள்ளி போரிட வருவதற்கு முன் பகை நாடு கரும்பு வயல்களைக் கொண்டிருந்தது. வள்ளைக்கொடி, ஆம்பற்கொடி, பகன்றைக் கொடி, பாகல் கொடி போன்றவையெல்லாம் பிரிக்க முடியாதவாறு பிணைந்திருந்தன.  போரிட வந்த பின்னர் அந்நாட்டின் நிலை என்னவாயிற்று?

நீ நாட்டைக் கவர்ந்த பின் பெருந்தண் பணை பாழ் ஆக’ (புறம். 16), எங்கும் தீயின் நாக்குகள் அழலாட, உன் யானைகள் உன் மனமறிந்து கரும்பு வயலை சூறையாட பகைநாடு அழிக்கப் பெற்றது‘ எனப்பாண்டரங்கண்ணனார் பெருநற்கிள்ளியைப் பார்த்துக் கூறுகிறார்.


சோழப்பேரரசனாகிய கிள்ளிவளவன் சினமுற்று நோக்குமிடமெல்லாம் எரிதழல் கனன்று எரியும் என்கிறது (புறம் 38/5) ஒரு பாடல்.

இம்மன்னன் காற்றோடு எரி நிகழ்ந்தாற்போன்று விரைந்து சென்று போர்த்தொழிலில் ஈடுபடக் கூடியவன் என்கிறது (புறம் 16-18) மற்றொரு பாடல் .

விரைந்து சென்று போர் செய்வதற்கேற்ற வகையில் எப்போதும் படைக் கருவிகளையும், படைவீரர்களையும் தயார் நிலையில் வைத்திருப்பான் என்பது இதன் பொருள்.

சோழப்பேரரசு உருவாவதற்குக் காரணமான ஒரு போர் உறந்தைப் போராகும். இதைத் தித்தன் என்பவன் ஆண்டு வந்தான்.நொச்சி வேலித் தித்தன் உறந்தை’ (அகம். 122 , 21)

மாவண் தித்தன் என்ட நெல்லின் உறந்தை (அகம். 6/ 4-5) முதலானபாடல் வரிகள் உறந்தையை ஆண்ட தித்தன் என்ற மன்னனைக் குறித்தும் அவனது ஊர் நெல்வயல்கள் நிரம்பிய வளமுடையது என்றும் கூறுகின்றன. இம்மன்னனை வென்று சோழர் உறந்தையைத் தமதாக்கிக் கொண்டனர். பிற்காலப் பாடல்களில்மறங்கெழு சோழர் உறந்தை’ (புறம். 39/8) என உறந்தை சோழர்க்கு உரியதாகப் பாடப்பட்டுள்ளது.

பாண்டிய பேரரசு உருவாக்கத்திற்குக் காரணமான போர்கள்

மதுரை யாருக்குரியது? மதுரையின் பழைய பெயர் கூடல். இக்கூடல் சீறூர் அகுதை என்ற வேளிர் குல அரசனுக்குரியது. மதுரையின் பழைய பெயரை அகநானூற்றுப்பாடல்கள் (296,93) சுட்டுகின்றன.

""""மலைபுரை நெடு நகர்க் கூடல் """" (அகம் 296/12)
கூடல் அகுதைக் குரியது என்பதைப் புறநானூற்றுப்பாடல் குறிப்பிடுகிறது.

எறிந்தலை முறிந்த ததுவாய் வேலன்
மணநாறு மார்பின் மறப்போ ரகுதை
குண்டுநீர் வரைப்பிற கூடலன்ன (புறம். 347 / 4-6)


இந்த அகுதையடமிருந்து கூடல் நகரை முதலில் கைப்பற்றியவன் நெடுஞ்தேர்ச்செழியன் என்ற கொற்கைப் பாண்டியன். கூடல் அகுதை காலத்திலேயே மிகவும் புகழ்ப்பெற்றிருந்தது. பின்னரே பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டு ஆளப்பட்டது. அகுதை வளம்பெற்ற ஊரின் மன்னராகப் புகழ்பெற்றிருந்த காலத்தில், மகட்கொடை வேண்டி பாண்டிய வேந்தர் அவர்களிடம் போரிட்டு அவர் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர்.


வளமான கூடலைக் கைப்பற்றிய பின்னர். பாண்டியர், பல போர்களில் ஈடுபட்டு பல ஊர்களையும் வணிக நகரங்களையும் கைப்பற்றுவதில் ஈடுபட்டனர்.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் நாள்தோறும் பல கொடிய வினைகளைப் புரிந்தான். பகைவர் நாட்டிலிருந்த நன்றாகத் தொழிலமையைக் கட்டப்பட்ட உயர்ந்த இல்லங்களை எரியூட்டினான். பகைநாட்டில் உள்ள விளைந்த வயல்களையும், சோலைகளையும் நகப்புறங்களையும் எரியூட்டியதால் அதன் ஓசையும் அதனால் எழுந்த அவலக்குரலும் எங்கும் கேட்டது. மக்கள் சமைக்கும் நெருப்பைப் பெருநெருப்பு அழித்ததால், சமையல் தொழிலும் அந்நாட்டில் ஒழிந்தது. கொல்லப்பட்ட மன்னனின் மனைவியும் அவர்தம் மக்களும் உயிர் வாழ்வதற்காக வேளைக்கீரையைக் பறித்து உண்டனர். அம்மன்னனின் ஆட்சிமுடிவிற்கு வந்தது என்பதை மக்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டுக் காவற்காட்டிலுள்ள காவல் மரங்கள் கூரான கோடாரியால் பிளக்கப்பட்டு விறகாக்கப்பட்டன.


பாண்டியன் நெடுஞ்செழியன் காற்றென விரைந்து சென்று எதிரிநாடு கெட எரி பரப்பித் தலையாலங்கானத்தில் பகைவர் அஞ்சத்தங்கி அரசுபட அமருழக்கி முரசு கொண்டு களவேள்வி செய்தான். (மது. 125-130)


தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் எதிரிநாட்டிலுள்ள காவலுடைய பொழிவைக் கெடுத்து, மருதநிலங்களை எரியுண்ணச் செய்து, நாடென்னம் பெயரைக் காடென மாற்றினான். (மது. 152-156)

இவ்வாறு பல போர்களில் ஈடுபட்ட பாண்டியன் நெடுஞ்செழியன் ஏழு இனக்குழு மன்னர்களை வென்று அவர் நாட்டைத் தன்னாட்டோடு இணைத்துக் கொண்டான். சேரன், செம்பியன், திதியன், எழினி, எருமையூரன் இருங்கோ வேண்மான், பொருநன் (அகம். 36/ 14-19) போன்றோரை வென்றான்.

சேரர்


இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் தான் அழிக்கக் கருதிய நாட்டிற்குச் சென்று அங்கேயே தங்கி பகைவர் நாட்டை எரியூட்டினான். (பதி. 15/ 1,2)


கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் பகைவர் ஊர்களை எரியூட்டியதைப் பார்வையிட்டான்.. அப்போது அவன் அணிந்திருந்த மாலையின் இதழ்கள் ஊரையெறியூட்டியதால் ஏற்பட்ட வெப்பம் தாங்காமல் கருகிப்போயின. அவன் மார்பில் பூசிய சந்தனம் உலர்ந்து விழுந்தது (பதி. 48/ 10-12)
பெருஞ்சேரவிரும் பொறை சிந்தெழுந்து சென்று வைத்த போர் எரி பகைவர் ஊரைக் கவர்ந்து அடுதலால் எழுந்த புகை திசையை மறைத்தது (பதி. 71/9,10)

சேரனின் படை எரி நிகழ்ந்தன்ன நிறுத்தற்கரிய சீற்றத்தையுடையது (பதி. தி. 1-7)

இவ்வாறு ஒவ்வொரு போரிலும் எதிரிநாட்டை எரித்து, அதை தனக்குரிய நாடாக மாற்ற இப்படிப்பட்ட செயல்களில் மன்னர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்றும் இது தொடர்வதை நாம் காண முடிகிறது.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?