முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Wednesday, 6 May 2015

சங்க காலத்தில் போரும் அமைதியும் 16புலவர்களின் பார்வையில் குறுநில மன்னர்களும் வேந்தர்களும்பாடறிந்து ஒழுகுதலை யாரிடம் கற்கலாம்?


முல்லைநில மக்களில் ஒரு வேட்டுவனின் மனைவியின் விருந்தோம்பல் பண்பும், விலங்குகளின் மீதான ஈவிரக்கமும் மிக அழகுற காட்டப்பட்டுள்ளன.


Image result for பாடறிந்து ஒழுகல் 

யானையை மிக எளிதாக வேட்டையாடக் கூடிய ஒரு வேட்டுவன் களைப்பினால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறான். அவன் தன் குழந்தைகளுக்குக் காட்டுவதற்கான ஒரு இளைய பெண்மானை பிடித்துவந்து மரத்தில் கட்டி வைத்திருக்கிறான். அப்பெண்மானை விரும்பும் ஆண் மான் அதனைத் தேடி வந்து அப்பெண்மானை கண்டளவில் அதனைத் தழுவி திளைத்து விளையாடியது. இதைக் காண்கிறாள் வேட்டுவனின் மனைவி. இரு இளமான்களின் அன்புக் காட்சியைக் கண்டு அவள் மனதில் அன்பு ஊற்றெடுக்கிறது. வேட்டுவன் எழுந்தால் ஆண்மானை கொன்றுவிடுவான். யானையை எளிதாக வேட்டையாடக்கூடிய அவனுக்கு இந்த மானை வேட்டையாடுவது மிக எளிய செயலே. அவனோ , ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறான். அவன் உறக்கம் கலைந்து எழுந்துவிடுவானோ என்று அவளுக்கு அச்சம் தோன்றுகிறது. எனவே, அவன் உறங்கும் இடத்திற்கும் மான்கள் இருக்கும் இடத்திற்கும் இடையில் ஏதோ வேலை செய்பவளைப் போல மறைத்துக் கொண்டு நிற்கிறாள்.


கொடிய வறுமை நிலவும் அம்முல்லை நிலக் காட்டில், மிகச் சிறிதளவே விளைந்த திணையை மான் தோலில் அவள் உலர்த்தியுள்ளாள். அத்தினையைக் காட்டுக்கோழியும், இதல் என்ற பறவையும் உண்ணத் தொடங்கின. வேட்டுவனின் மனைவியோ மானைக் காப்பாற்றுவதா, திணையைக் காப்பாற்றுவதா எனத் தடுமாற்றம். எனினும், அன்பால் இணைந்திருக்கும் மான்களைக் காப்பாற்றவே அவள் மனம் விரும்புவதால், மானிற்கும் வேடனுக்கும் இடையிலேயே நின்று கொண்டிருக்கிறாள். இப்படிப்பட்ட இரக்க குணமுடைய இந்த வேட்டுவள், அவ்வூர் மக்களுக்காகக் கிடைத்த ஆரல் மீனையும், பெரிய இறைச்சித்துண்டுகளையும், சந்தன விறகில் சமைத்துத் தருவாள். அவள் சமைக்கும்போது ஆரல் மீன், இறைச்சி மணத்தோடு சந்தன மணமும் சேர்ந்து அவ்வூரெங்கும் தவழும். எனவே பாணனே உண்னுடைய பெரிய சுற்றத்திற்கு இவ்வூரில் உணவு கிடைக்குமோ என எண்ண வேண்டாம். போரின் போது அரசனால் தரப்பட்ட மிகச்சிறந்த பொருட்களைக் கூடத் தனக்கென வைத்துக்கொள்ளாமல், உன்போன்ற பாணர்களுக்கு வழங்குகின்ற, வள்ளல்தன்மை மிகுந்த ஊர் இதுவாகும் என வீரை வெளியனார் முல்லை நில மக்களின் விருந்தோம்பல் காட்சியை ஒரு வேட்டூவச்சியின் செயல் மூலம் காட்டுகிறார்.
முல்லைநில மக்கள் மிகச்சிறிதளவே விளையும் வரகினைத் துய்மைப்படுத்தி அதை மூன்றாகப் பிரிப்பர்.

1.
கடன் தந்தோர்க்குத் தருதல்
2.
பாணர்க்கு வழங்குதல்
3.
சுற்றத்தாரை உண்பித்தல்

இதை ஒரு பாடல் காட்டுகிறது.
எருதுகால் (புறம். 327) கிடைத்த சிறிதளவு திணையையும் தானே வைத்துக் கொள்ளாமல், பாணருக்கும், சுற்றத்தாருக்கும் உண்பிக்கும் நிலை இடைக்குழு வாழ்க்கையின் தன்மையைக் குறிக்கிறது.


முல்லை நிலத்தில் வாழும் சிறுவர்கள் கூடப் பிள்ளை விளையாட்டாக வேட்டையாடல் தொழிலையே மேற்கொள்வர். விரைந்து ஓடும் எலியையும், முயலையும் வேட்டையாடி பயிற்சி பெறும் இளஞ்சிறுவர்கள் உள்ள நாடு. இத்தகைய நாட்டிலுள்ள வீர இளைஞர்கள் வேந்தர்களுக்கு உறக்கம் வராமல் செய்கின்ற வீரத்தை உடையவர்கள். நன்செய் நிலமான வேந்தனுடைய ஊரையும், தம் வீரத்தினால் புன்செய் நிலமாக்கும் தன்மை கொண்ட இவ்வீரர்களின் பெயரைக்கேட்டளவில் பெருநில வேந்தர்களும் அச்சம் கொள்வர் என்கிறார் ஆவூர் கிழார்.

""""
தண்பணை ஆளும் வேந்தர்க்குக்
கண்படை ஈயா வேலோன் ஊரே"""" (புறம்.322/9-10)Image result for வேட்டுவச் சிறுவர் 
பலபோர்களில் வெற்றியைக் கண்ட வேந்தர்கள் ஒருங்குசேர்ந்து பகையெடுத்து வந்தாலும், அவர்கள் அனைவரையும் இம்முல்லை நில வீரன் ஒருவன்தான் ஒருவனாகவே நின்று எதிர்த்துத் தாங்குவதற்கு உரிய வலிமையுடையவன்என முதுகண்ணன் சாத்தனார் முல்லைநில சீறூர் வீரன் ஒருவனின் வல்லாண்மையைப் பாராட்டுகிறார். மற்றொரு பாடல் வீரத்தில் இவ்வீரனுக்கு நிகராகப் பெருவேந்தர்கள் இருக்கலாம். ஆனால், கொடைத் தன்மையிலும், விருந்தோம்பல் திறத்திலும் இச்சீறூர் மன்னர்களுக்கு இணையாக வேந்தர்கள் நிற்க முடியாது என்கிறது (புறம். 330) வது பாடல்.
இச்சீறூர் மன்னன் வழங்கும் கொடையானது வேந்தன் வழங்கும் கொடையை விடமேலானது. வேந்தர்கள் தம்மையும், தம் வீரத்தையும், கொடையையும் பாடியவர்க்கே பரிசில் வழங்குவார்கள். ஆனால் இச்சீறூர் மன்னர்கள் அனைவருக்கும் வழங்கும் தன்மையுடையவன். இப்பாடலில் வேந்தர்கள் தம் புகழுக்காகவே கொடை வழங்கும் நிலையை மதுரைக் கணக்காயனார் சுட்டிக்காட்டுகிறார்.


வேந்தனாகிய சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் பரிசில் நீட்டித்த வழி கோனாட்டு எறிச்சலுர் மாடலன் மதுரைக் குமரனார் சீறூர் மன்னர்களின் கொடைத்திறத்திற்கு முன் வேந்தர்களின் பெருமை ஒன்றுமில்லை என ஒரு பாடலில் வெளிப்படையாகவே சோழனைப் பார்த்துக் கூறுகிறார். சீறூர் மன்னர்களை வேந்தர்கள் இழிவாகக் கருதுவது போலவே, வேந்தர்களையும் சீறூர் மக்கள் இழிவாகக் கருதியுள்ளனர்.


Image result for புலவர் வறுமை 

பிறருக்காக வாரி வழங்கும் பெருமிதமுள்ள சீறூர்களின் இக்கொடைப்பண்பிற்கும் பெருமைக்கும் காரணமான அவர்களில் வயல்புலத்தைத அழிப்பதால் அவர்களின் பெருமையையும் அழிக்கலாம் என நினைத்தே வேந்தர்கள் சீறூர் மன்னர்களின் தினைப் புன வயல்களை அழித்துள்ளனர்.


பெருநிலவேந்தர் குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை முதலான பல படைகளையும், பொருள் செல்வத்தையும் உடையவராக இருந்தாலும், அவற்றையெல்லாம் எம்மைப்போன்ற புலவர்கள் பெரிதாக நினைக்கமாட்டோம். மாறாக வறுமையில் வாடினாலும் பிறர் துன்பத்தைக் கண்டு விருந்தோம்பும் பண்புடைய சீறூர் மன்னர்களையே உயர்வாகக் கருதுவோம் என்கிறார். (புறம்.197) இப்பாடலில் வந்துள்ள வரிகளில் பெருவேந்தரைக் குறிக்குமிடத்து `தேரினர், களிற்றினர், வென்றியர்என்றும் சீறூர் மன்னரைக்குறிக்குமிடத்து குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடக, புன்புல வரகின் சொன்றியோடு பெறுஉம்என்றும் செல்வப் பெருக்கம், எளிய விருந்தோம்பல் திறத்திற்கு இணையாகக் கூறப்பட்டுள்ளது. அடுத்தச் சிலவரிகளில்வேந்தர் வெண்குடைச் செல்வம் வியத்தலும் இலமேஎன்று வேந்தர் தம் செல்வம் வியப்பதற்குரியது இல்லை என்கிறார். மாறாகப் புலவர்கள் வியப்பதற்குரியது எது? அது யாரிடம் உள்ளது எனில், எம்மால் வியக்கப்படூஉமோரை. . . . . . .. . . . . .’என்றுரைத்து அதற்குரிய விளக்கத்தை அடுத்த வரிகளில் சுட்டுகிறார்.

சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின்
பாடு அறிந்து ஒழுகும் பண்பினாரே’(புறம்.197)

எனப் பாணர்களின் வறுமைநிலையை உணர்ந்து, உடனடியாக விருந்தோம்பல் செய்யும் சீறூர் மன்னர்களே வியப்பதற்கும் பாராட்டுவதற்கும் உரியவர் என்கிறார்.


பிறரது துன்பத்தை உணர்ந்து உடனடியாக உதவாமல் காலம் நீடித்து வழங்கும் மன்னர்கள்உணர்ச்சி இல்லோர்ஆவர். அத்தகையோர் தரும் பரிசு பெரிதாயினும், உயர்ந்ததாயினும் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்கிறார்.உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளோம்என்ற புலவரின் பாடல் வரிகள் வேந்தரின் பிறர் துன்பமறியா வன்னெஞ்சை இடித்துரைப்பதாக உள்ளது.

பண்பெனப்படுப்பவது பாடறிந்து ஒழுகல்’ (கலி.133-8)

""""
ஈத்துவக்கும் இன்பம் அறியார் சொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்கணவர்"""" (குறள் 228) முதலான பாடல் வரிகளைப் புலவரின் சொற்கள் நினைவூட்டுகின்றன. பிறர் துன்பம் அறிந்து உடனடியாக உதவுபவர்களேபண்புடையவர் என்ற புலவரின் குரல் வேந்தர்களின் பண்பற்ற நிலையைச் சுட்டி காட்டவே எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?