நகர்ந்து போன நந்தவன நாட்களை
சாட்டையால் அடித்தது யாருடைய கைகள்?
நம் வீட்டுத் தெருக்களில் பாம்புகளை
நெளிய விட்டது யாருடைய கைகள்?
நமக்கானத் தென்றலைத் திசை மாற்றித்
திருப்பி விட்டது யாருடைய கைகள்?
நமக்கான வசந்தங்களை விசமாக்கியது
யாருடைய விச நச்சுக் கைகள்?
எப்போதாவது உண்ணும் கால் வயிற்றுக் கஞ்சியை
பறித்தது யாருடைய விசமக் கைகள்?
மனிதம் மறைவதற்குக் காரணமாக இருந்தவை
யாருடைய அரக்கக் கைகள்?
சக மனிதனைச் சாவின் தூதுவனாகப் பார்க்கத்
தூண்டியவை யாருடைய கைகள்?
மகத்துவமெல்லாம் வெறும் மண்ணாகிப் போகக்
காரணமாக இருந்தவை யாருடைய கைகள்?
வியர்வை வழிய சேலை செய்பவனை
இழிவாகப் பார்க்கும் சோம்பேறிக்கைகள்!
மூத்த தலைமுறையைச் சுமையாகக் கருதி
தன் போக்கில் வாழ நினைக்கும் அல்ல கைகள்!
உழைப்பை மறுத்து உறிஞ்சிக் கொளுத்து
தலைமுறைகளைக் காக்கும் பெருங்கைகள்!
பூமிப் பந்தினைத் தன் காலத்திலேயே
பூக்காத பந்தாகப் பாலைவனமாக்கும் நம் கைகள்!
--------------------------------------------
அறிவியலை வளர்ச்சி என்றார்கள் உண்மைதான்
தந்தை முகம் மகன் காணமுடியவில்லை
புத்துலகு அனுப்பப் பெற்ற மகன்
கொள்ளியிட முடியவில்லை
மனைவியோ உறவுகளற்ற தனிமையில்
பார்த்துப் பாரத்துக் கட்டிய
பளிங்கு மாளிகையில் கால் வைக்க ஆளில்லை
தொலைவிலிருந்தே தொலைபேசி விசாரிப்புகள்
ஒரு பந்தியில்லை
சேகண்டியின் மணியொலியில்லை
சொர்க்க ரதமில்லை
ஒப்பாரியுமில்லை
மீண்டும் சந்திக்கும் சூழல் ஏற்பட்டால்....
எத்தனை போர் இருப்போமோ?
-------------------------------------------------------
பயிர் அறுவடையல்ல
கதிர் அறுவடையல்ல
உயிர் அறுவடை
உறவு அறுவடை
உணர்வு அறுவடை
மன அறுவடை
ஆம் இதுவும் கூட...
அறுவடை காலம்தான்
-----------------------------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?