முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Wednesday, 28 June 2017

மணிமேகலைநாவல் 2

மணிமேகலைநாவல் 2
லைகுனிந்தபடி அமர்ந்திருந்த மாதவியை வயந்தமாலை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பேரழகை மட்டுமல்ல. சிற்பத்திலே செதுக்கியது போன்ற அந்த முகத்தை மட்டுமல்ல. செழித்து அடர்ந்து நீண்ட கரும்பாம்பு போன்ற அந்த கூந்தலை கண்கொட்டாமல் பார்த்தாள்  அழகான சுருண்ட கூந்தல் மாதவியினுடையது. கோவலன் உடனிருக்கும்போது மாதவி மலர்களைச் சூடாத நாள்களே கிடையாது. அந்தக் கூந்தலோடு கோவலன் தொட்டுத்தடவிக் கொஞ்சி இழைந்து எத்தனை நாள் விளையாடி இருக்கிறான்! வயந்தமாலை வருகிறாள் என்று உணர்ந்து அவன் கையைத் தட்டி விட்டு மாதவி எப்படி நாணி இருக்கிறாள்! அவன் வேண்டுமென்றே வயந்தமாலை எதிரில், அவள் பார்க்க அந்தக் கூந்தலைத் தன் கரங்களால் குறும்புப் பார்வையோடு சாண் போட்டு அளந்திருக்கிறான் . 

நினைத்தால் எல்லாம் ஒரு பொய்க்கனவு  போல் தோன்றுகிறது. 

கணிகையர் குலத்தில் இப்படி மோகம் தீர்ந்ததும் அல்லது செல்வம் இழந்ததும் நழுவி விடுகிற எத்தனையோ ஆண்களை வயந்தமாலை பார்த்திருக்கிறாள்.

 மணமிகுந்த பொடிகளைக் கொண்டு நீராடி, எப்போதும் பட்டாடை உடுத்தி அதன் மேல் வாசனைத் திரவியங்களைப் பூசியபடி மற்றவர்களைக் கிறங்கடிக்கும் நறுமணத்தோடு திகழும் மாதவி இப்போது மணமற்ற வாடிப் போன மலர் மாலையைப் போலத் தென்படுகிறாள். அதைக் காண தன் உள்ளமே பொறுக்க முடியாமல் கதறுகிறதே.  சித்ராபதிக்கு எப்படியிருக்கும்? இப்போது தன் அடர்ந்த கூந்தல் சிறிதுகூட தெரியாதபடி தன் எளிய ஆடையின் முந்தானையைத் தலைக்கு முக்காடிட்டு பொட்டிழந்து, முகப்பொலிவிழந்து எப்போதும் உரத்த சிந்தனையோடே ஒரு மூலையில் ஒடுங்கிக் கிடக்கிறாளே?
அரசனும் ஆண்டியும் மயங்கும் இப்பேரழகு மதம் பிடித்த யானையின் சேற்றுக் காலில் மிதிபட்ட துணியைப் போல யாருக்கும் பயன்படாமல் வீணாகிக் கொண்டிருக்கிறதே. அதுவும் தலைக்கோலி பட்டம் பெற்ற மாதவி இப்படி வதங்கிக் கிடப்பது முறையா
தன் சிந்தனையிலிருந்து விடுபட்ட வயந்தமாலை தன் கையை மாதவியை நோக்கி நீட்டினாள். ஆனால் மாதவி தலையைத் திருப்பிக் கொண்டாள்.சுவற்றைப் பார்த்தபடி கூறத் தொடங்கினாள். 
வயந்த மாலை, என் காதலனுக்கு ஏற்பட்ட கடுந்துயரத்தைக் கேட்ட அன்றே நான் உயிர் துறந்து விட்டேன்.  எஞ்சியிருப்பது வெறும் கூடுதான்.  நீ சொன்ன கலைகளைக் கற்ற கோவலன் இறந்த செய்தியைக் கேட்ட அன்றே அந்த மாதவி இறந்து விட்டாள்.  வீணாக என்னை வற்புறுத்தாதே. குலமகள் போல கணவனுடன் இறக்கும் பாக்கியமும் எனக்கில்லை.  கண்ணகி போல மனைவி என்ற உரிமையோடு அவன் பழி துடைக்கும் பேறும் நான் பெறவில்லை. என் இந்தக் கூடு இருப்பதற்குக் காரணமே மணிமேகலை தான். தயவு செய்து இங்கிருந்து போய்விடு. 
மாதவியின் குரல் பெரிதும் மாற்றடைந்திருந்ததை வயந்த மாலை உணர்ந்தாள். அதிகாரத் தோரணையில் எப்போதும் பேசி வரும் மாதவியின் சொற்களில் ‘தயவுசெய்து‘ என்ற சொல்லைக் கேட்ட வயந்தமாலை பேச்சற்று சிறுது நேரம் நின்று விட்டாள்.
ஒரு பெருமூச்சுடன், சரி மாதவி. நீ வர வேண்டாம். மணிமேகலையை அனுப்பி வை.’
மாதவி வெடுக்கென்று தலைநிமிர்ந்து அவளைச் சுட்டெறித்து விடுவதைப் போலப் பார்த்தாள்.
போதும் நிறுத்து வயந்தமாலை. மணிமேகலை கணிகை மகளல்ல. அவள் அந்த கண்ணகியின் மகள். கோவலர் அவளை அப்படித்தான் வளர்த்தார். என்னை துறவியாக ஏற்றுக் கொண்ட அறவண அடிகளிடம் என் மகளை ஒப்படைப்பேனயன்றி என் தாயிடம் என் மகளை ஒரு காலும் அனுப்ப மாட்டேன். நீ இங்கிருந்து சென்று விடு
மாதவி இதுவரை இவ்வளவு கடுமையாகப் பேசியதைக் கண்டறியாத வயந்த மாலை திகைத்தாள்.
தன் தாய் மிகக் கடுமையாகப் பேசியதை அறிந்தேயிராத மணிமேகலை திடுக்கிட்டாள். அவள் கையிலிருந்த பூக்குடலை கீழே விழுந்தது.
வயந்த மாலை, மாதவியையும் மணிமேகலையையும் மாறி மாறி பார்த்தாள். பின் தன் தலையில் அடித்துக் கொண்டுஎல்லாம் விதிஎன்றபடி அங்கிருந்து சென்றாள்.
தாங்கள் இருவரும் பேசியதை மணிமேகலை கேட்டுக் கொண்டு தானிருந்தாள் என்பதையறிந்த மாதவி மேலும் துயறுற்றாள். எதுவும் பேசாமல் தன் காவி உடையை மேலும் இழுத்து, தன் தலையைச் சுற்றிப் போர்த்தபடி தவத்தில் ஆழ்ந்து விட்டாள்.
தாய் இப்போதெல்லாம் மிக்க துயரோடு காட்சியளிப்பதைக் கண்ட மணிமேகலைக்குத் துக்கம் நெஞ்சையடைத்தது. இந்திரவிழாவின் போது தாய் தான் எத்தனை மகிழ்வோடு இருந்தாள்.  எத்தனை ஆடை வகைகளைப் புனைந்தாள். எத்தனை விதமான தலையலங்காரம். எத்தனை எத்தனை நகைகள். தலையிலிருந்து கால் விரல் வரை விதவிதமான நகைகள். சூடகம், காலாதி, பீலி, பரியசம், நூபுரம், பாடகம், சதங்கை, அரியகம், கண்டிகை, முத்துவளை, விரிசிலை, குதம்பை, குறங்கு செறி, சங்கு வளையல், பவழ வளையல், வீரச் சங்கிலி, சரப்பளி, மணிகளால் ஆன கோவை அப்பப்பா இந்த உலகத்தில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனையும் அணிந்து பார்த்தவளாயிற்றேதனக்கும் அணிவித்து அழகு பார்ப்பாளே.
தன்னை இருவேளையும் குளிக்கச் சொல்லி விதவிதமான அணிகலன்களை அணிவித்து அழகு பார்ப்பாளே. தனக்காக எத்தனை வகையான பட்டாடைகளையும் நகைகளையும் ஆசை ஆசையாக வாங்கிக் குவித்திருக்கிறாள். பணிமகளிரை விரட்டி விரட்டி விதவிதமாக பட்சணங்கள் செய்யச் சொல்லி உண்பிப்பாளே?தானே சாப்பிடுகிறேன் என்று சொன்னால் கூட மறுத்து தானே ஊட்டி விடுவாளே?  இப்போது நான் சாப்பிட்டேனா இல்லையா என்று கூட கேட்பதில்லையே. மணிமேகலைக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
கோவலனைத் தான் தான் கொன்று விட்டதாக நினைக்கிறாளோ? தனிமைச் சிறையில் தன்னைத் தள்ளிக் கொள்கிறாளே, என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவள் கண்களில் தான் எத்தனை துயரம்
மணிமேகலைக்கு தன் நிலையை யாரிடம் கூறுவது என்று  தெரியவில்லை. இப்படி ஒரு நிலை வரும் என்று அவள் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. 
சந்தனம், அகில், கருப்பூரம், கத்தூரி, குங்குமம், கலைந்த விரைப்பொடியும், நாவல், திரிபலை, வன்கருங்காலி இவற்றின் பட்டைகளைப் பொடியாக்கிய துவரைப் பொடிகளைத் தானே தன் கையால் தயாரித்து பாராட்டி சீராட்டிய தாய் மாதவியா இப்படி தன்னைக் கண்டு கொள்ளாமல் என்னை நிமிர்ந்தும் பார்க்காமல் விலகி விலகி துறவில் தன்னை மறைத்துக் கொள்வது?
தன்னைக் கண்ணகி மகளென்று கூறினாளே.  தான் இதுவரைக் கண்ணகியைப் பார்த்தது கூட இல்லையே.  இனியும் பார்க்க முடியாது. தந்தையோடு அந்தத் தாயும் வானோருலகம் சென்று விட்டாள். என்னைக் கண்ணகி மகளென்றால் உலகம் அதனை ஏற்குமா? ஏன் நான் இவளின் மகளாகவே வாழ்ந்தால் என்ன? என்னைத் தன்னிடமிருந்து விலக்கி வைத்துப் பேசுகிறாளே
மணிமேகலை, தாய் துறவுக் கோலத்தில் அமர்ந்த பின்பு ஏதும் செய்வதறியாது,  புத்த பகவானுக்குச் சேடியர் பறித்து வந்த மலர்களைக் கோர்க்கத் தொடங்கினாள்.  தன் இருப்பே அவளுக்குச் சுமையாகத் தோன்றியது. தாய் தன்னைப் பெரும் சுமையாகக் கருதுகிறாளோ? அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி அவள் கட்டிக் கொண்டிருந்த மாலைகளை நனைத்தது.
அவளுடைய தோழி சுதமதி அனைத்தையும் பார்த்தும் கொண்டுதானிருந்தாள். சிறிய பெண்ணான மணிமேகலைக்கு நேர்ந்துவிட்ட துயரத்தை அவள் நீக்க முடியாது தான். சுதமதி மணிமேகலையைவிட மூன்று அல்லது நான்கு வயது பெரியவளாக இருப்பாள். என்றாலும் மணிமேகலையை விட மிக்க துயரங்களை அவள் அனுபவித்துவிட்டிருந்தாள். அவள் கதையை மாதவி பலமுறை கேட்டிருந்தும் அவள் எதுவும் கூறியதில்லை. மௌனம் சாதித்து விடுவாள். அவளுடைய துயர முகத்தைப் பார்த்து விட்டால் மாதவிக்கு மேலும் எதுவும் கேட்க் தோன்றாது. அவளுடைய நடவடிக்கைகள் அனைத்தும் மிகவும் கட்டுப்பாடாக வளர்க்கப்பட்ட கண்ணியமான பெண் என்பதையே அனைவருக்கும் உணர்த்திக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட ஒரு பெண் மணிமேகலைக்கு தோழியாகக் கிடைத்ததற்காக மாதவி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாள் அதை வெளிப்படையாகவே பலமுறை மணிமேகலையிடம் கூறியிருக்கிறாள். இந்தக் கணிகை குலத்திற்கு ஓராண்டிற்கு முன்புதான் சுதமதி சேடியாக வந்து சேர்ந்தவள் என்றாலும், மாதவிக்கும் மணிமேகலைக்கும் மற்ற பெண்களை விட நெருக்கமாகி விட்டாள். அவளைப் பற்றி யாருக்கும் எதுவும்தெரியவில்லை என்றாலும், அவள் உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவள் என்பதையே அவளுடைய ஒவ்வொரு சொல்லும் செயலும் காட்டிக் கொண்டிருந்தன. எப்படியோ விதியின் கொடூரத்தால் திசை மாற்றப்பட்டு, கணிகை குலத்தில் வந்து சேர்ந்தாலும் கண்ணியமான வாழ்க்கையையே அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள்.
மணிமேகலைக்கு ஆறுதலாக, அவளுக்கு துணையாக அவளோடு சேர்ந்து மாலை கட்டலாமே என சுதமதி அருகில் அமர்ந்து பூக்களைக் கோர்க்கத் தொடங்கினாள்.  என்னதான் மாதவி கண்களை மூடி தவக்கோலத்தில் அமர்ந்து விட்டாலும், அவள் கண்ணுக்குள் ஓருருவம் தான் நின்றது.  அதுதான் மணிமேகலையின் துயரமான உருவம்.
அவளால் தவத்தைத் தொடர முடியவில்லை.  கண் திறந்து மகளைத் தேட, அங்கு கண்ணீர் பெருக மாலைகளைக் கட்டியபடி மணிமேகலை அமர்ந்திருந்த காட்சி தென்பட்டது. அருகில் அதே துயர முகத்தோடு சுதமதி. தாயின் மனம் பரிதவித்தது.  
விவரம் அறியா சிறுமியைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறோமோ என மனம் துவண்டது.
மாதவி எழுந்து மகளருகில் வந்தமர்ந்தாள்.
தன் குலத்தையும், சமூகத்தின் மீதான அதன் பார்வையையும் எப்படி இவளுக்குப் புரிய வைப்பது? இரண்டுங் கெட்டான் வயதிலிருக்கும் இவளுக்கு உலகு புரிய அதற்குரிய வயது வரவேண்டுமே.  இன்னும் தட்டானைப் பிடித்து விளையாடும் சிறுமியாக அல்லவா இருக்கிறாள்.!
ஆனால் இப்படியே இருந்துவிடலாமா? கூடாது .இனி அவள் இப்படி உலகம் தெரியாமல் இருக்கக் கூடாது. மணிமேகலையின் கண்ணீரைத் துடைத்தாள். அவள் தலையை வருடியபடியேஇந்த மாலைகள் உன் கண்ணீரினால் தூய்மையிழந்து விட்டன . இதைப் பகவானுக்கு அணிவிக்க முடியாது.  நீயே சென்று பகவானுக்கு ஏற்ற மலர்களைப் பறித்து வாஎன்றாள்.

இது வரை மணிமேகலையை அவள் வெளியே அனுப்பியதில்லை. கோழி  தன் குஞ்சுகளைக் காலிடுக்கிலேயே வைத்துக் காப்பது  போலக் காப்பாற்றியவள் அவள். இனிமேல் மணிமேகலை அப்படி வளரக்கூடாது.  துணிச்சலுள்ள பெண்ணாக, எதையும் எதிர்கொள்ளும் பெண்ணாக, இந்தச் சமூகத்தின் இருண்ட பக்கங்களையும், ஒளியுடைய பக்கங்களையும் அறிந்து தனக்கென ஒரு முடிவைப் பகுத்தறிவோடு ஆராய்ந்து எடுக்கக்கூடிய பெண்ணாக இருக்க வேண்டும் என நினைந்தே அவ்வாறு கூறினாள். இனி மணிமேகலை தனித்தே எங்கும் செல்ல வாய்ப்பளிக்க வேண்டும் என நினைத்தாள்.

ஆனால் அதைக்கேட்டு சுதமதி பதறிப் போனாள். அவளுக்கு மாதவிக்கே இன்னும் உலகம் தெரியவில்லை என்றே நினைக்கத் தோன்றியது.  தாய் தன் குட்டியைப் பதினாறு அடி பாயச் சொல்லலாம். ஆனால் குட்டி அதற்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்.

ஒரே நாளில் எதையும் மாற்றிவிட முடியாது. யாரையும் மாற்றி விட முடியாது. பல துன்பங்களையும் அனுபவங்களையும் பெற்ற பின்னரே, பல மனப் போராட்டங்களுக்குப் பின்னரே மாதவி துறவியாவதற்குத் தீர்மானித்தாள். ஆனால் அதை உணராமல் மணிமேகலையை ஒரே நாளில் தான் விரும்பியபடி மாற்ற நினைக்கிறாளே.
அம்மா, மாதவி ஏற்கனவே ஆறாத் துன்பத்தில் மணிமேகலை ஆழ்ந்திருக்கிறாள். மிகுந்த அழகும், இளமையும் உடைய இவளைத் தொலைத் தூரத்திலுள்ள வனத்திற்குப் பூக்களைப் பறிக்க அனுப்புகிறாயே.  இது முறையல்ல.  நான் இங்கு உங்களோடு வந்து சேர்ந்த காரணத்தை நீ பலமுறை கேட்டும் நான் கூறவில்லை. இப்போது கூறுகிறேன்.  நான் சண்பை நகரில் வாழ்ந்த கௌசிகன் என்னும் அந்தணனின் மகள்.  தாயிழந்தவள்.  தந்தை என் மீது மிகுந்த அன்புடையவர். எனினும் மிகுந்த கட்டுப்பாட்டோடு என்னை என் தந்தை வளர்த்தார். என் தந்தை ஒரு நாள் நோய்வாய்பட்டு விட்டதால் தந்தையின் வழிபாட்டிற்காகப்  பூக்களைப் பறிக்க எங்கள் ஊரிலிருந்து சற்று தொலைவிலுள்ள ஒரு மலர் வனத்தில் பூக்களைப் பறித்துக நான் சென்றிருந்தேன். பூக்களைப் பறித்துக் கொண்டிருந்த அந்த தோட்டத்திற்கு இளைப்பாற அப்போது மாருதவேகன் என்னும் ஒருவன் வானில் பறக்கும் விமானத்தில் அங்கு வந்திருந்தான். என்னருகில் வந்து என் அழகைப் புகழ்ந்தான். என்னை விரும்புவதாகத் தெரிவித்தான். என்னை தன்னுடன் வரும்படி அழைத்தான். நான் என் தந்தையைப் பற்றித் தெரிவித்தேன். அவருடைய சம்மதத்தோடுதான் அவனை மணக்க முடியும் எனத் தெரிவித்தேன். அதற்கு சம்மதித்த அவன் தன் விமானத்தில் என்னை என் தந்தையிடம் அழைத்துச் செல்வதாகக் கூறவே நானும் மிகவும் மகிழ்வோடு அவனுடைய விமானத்தில் ஏறினேன். ஆனால் என் தந்தையிடம் அழைத்துச் செல்லாமல்  வேறு திசையில் விமானத்தை பறக்கவிட்டான். அப்போது எனக்கு மணிமேகலையின் வயதுதான் இருக்கும்.‘
சுதமதி சிறிது நேரம் தலைகுனிந்திருந்தாள். அவள் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது.
  வேறு வழியில்லாமல் அவனோடு சில காலம் வாழ்ந்தேன். ஒருநாள் எதுவும் சொல்லாமல், இரக்கமின்றி என்னை இந்த ஊரில் விட்டுப் பறந்து விட்டான். நானும் என் ஊர் செல்லும் வழியறியாமல் சுற்றியலைந்தேன். அதற்குப் பிறகு என்னவெல்லாமோ ஆகி விட்டது......எப்படியோ உன் வீட்டில் உனக்கு சேடியாக இங்கு வந்து வாழ்கிறேன். எனவே மணிமேகலையைத் தனியாக அனுப்பாதே. நான் உவவனத்திற்கு மணிமேகலையுடன் செல்கிறேன்என்று சுதமதியும் கிளம்பினாள்.
  மணிமேகலை சுதமதியோடு வனத்திற்குப் புறப்பட்டதை இப்போது நினைத்துப் பார்த்தாள்.
தன்னை அப்படி யாராவது மயக்கி இந்த இடத்தில் கொண்டு வந்து விட்டிருப்பார்களோ? இங்கு எப்படி வந்தேன்?
சுதமதி..............சுதமதி................. என்று உரக்க அழைத்துப் பார்த்தாள். சுற்றி சுற்றி அலைந்தாள். அது எந்த இடமென்று அவளால் தீர்மானிக்க முடியவில்லை.  இங்கு எப்படி வந்தேன்? அந்தக் கேள்வியே அவளைக் குடைந்தது. திடீரென்று அவளுக்கு உதயகுமரன் நினைவு வந்தது

உவவனத்தில் மலர் பறித்துக் கொண்டிருக்கும்போது, மன்னன் மகன் உதயகுமரன் அங்கு வந்தானே. எப்படி வந்தான்?

  யார் அவனுக்கு நானிங்கிருப்பதைச் சொல்லியிருப்பார்கள். தன் தாயும் வயந்தமாலையும் பேசிய பேச்சில் ஒருமுறை இவன் பெயரும் அடிபட்டதே! தன் தாயைக் கட்டுப்படுத்த வழியறியாத பாட்டி தன்னைப் பற்றி உதயகுமரனிடம் கூறி அவனுக்கு தன் மேல் விருப்பம் தோற்றுவித்து வருவதைப் பற்றிப் பேசிக் கொண்டார்களே. அவனை நான் இதுவரை பார்த்ததில்லை. அவனும் என்னைப் பார்த்ததில்லை. பின் எப்படி என் இருப்பிடம் அறிந்து வந்தான்?     

சுதமதி கூறியது எவ்வளவு உண்மையாயிற்று. சுதமதி தான் உடனடியாகச் செயல்பட்டு பளிக்கறைக்கு உள்ளே செல்லுமாறு தூண்டினாள்.  உதயகுமரன் உள்ளே வர வழியறியாது தடுமாறுவது தெரிந்ததே!

அந்தப் பளிக்கறையின் வெளியே  இருந்தபடியே அவன் என்னைப் பார்த்தானே. அவன் விழிகள்தான் எப்படி வியப்பால் விரிந்தன. அவற்றில் என்ன ஒரு வேட்கை! கண்களாலேயே என்னை விழுங்கி விட நினைக்கும் வேட்கை!

 வழியறியாமல் ஒரு நாழிகைக்கு மேல் பளிக்கறையைச் சுற்றி வந்தவன் வேறு வழியில்லாமல், சுதமதியிடம் சென்று நீண்ட நேரம் பேசிய பின் தன் தேரில் திரும்பிச் சென்றானே. சுதமதி பளிக்கறையின் வழிகளைக் கூறமுடியாது எனத் துணிவோடு மறுத்திருக்க வேண்டும்.
அவனுக்கு அறிவுரையும் கூறியிருக்கவேண்டும். அதனால் தான் கோபத்தோடு அவளிடம் பேசியபடி இருந்தானோ? எத்தனை முறை .அவனுடைய கை அவனுடைய வாளைப் பற்றியது. எவ்வளவு துணிச்சலிருந்தால் சுதமதி தன் உயிரையும் பொருட்படுத்தாது அவனுக்கு வழியைக் கூற முடியாது எனக் கூறியிருப்பாள்.
தான் அற வாழ்க்கை வாழப் போவதையும் கூறியிருப்பாள். அதனால் அவன் சென்றிருப்பானோ? ஆனால்,  எவ்வளவு அழகாக இருந்தான்? மன்னன் மகனுக்குரிய மிடுக்கு. கம்பீரம். அவனுக்கும் தாய் மாதவி போலவே சுருண்ட முடி. எவ்வளவு அனாயசமாகத் தன் கைகளால் அதைத் தள்ளி விட்டபடியே பேசிக் கொண்டிருந்தான். ஒருபுறம் அவன் அழகை வியந்த அவளுடைய மனம் அவனுடைய குணத்தையும் நினைக்கத் தொடங்கியது.
அவன் தன்னைப் பற்றி இழிவாகப் பேசியதை வயந்த மாலை கூறினாளே. ‘கற்பு மரபில் பிறவாதவள் தவ உணர்வு இல்லாதவள். காவலற்றவள். பொருளுக்காகத் தன்னையே விற்கும் விலைமகள். அவளை அடையாமல் விட மாட்டேன்என்றானாமே.
பளிக்கறை விட்டு வந்ததும் சுதமதியிடம் என்ன பேசிக் கொண்டிருந்தாய் என்று கேட்டதற்கு அவள் தன்னைப் பற்றிக் கூறியதாகக் கூறினாளே.[தொடரும்]

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?