முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Wednesday, 28 June 2017

மணிமேகலை 12

மணமேகலா தெய்வம் மறைந்தது. 
உடனே மணிமேகலை ஒருவிதத்தெளிவுக்கு மீண்டாள். மீண்டும் ஒருமுறை    மணிபல்லவத்தீவினைச்சுற்றிப்பார்க்க தோன்றியது.  தீவினை மணிமேகலை சுற்றி வந்தாள். அப்போது  திடீரென்று  வானிலிருந்து இறங்கியது போல்அவள்முன் ஒருபெண் தோன்றினாள்.
 மணிமேகலை அதிர்ச்சியோடு பார்க்க, ‘அஞ்சாதே!நான் தீவதிலகை.. இந்தத் தீவின் காவல் தெய்வம். இத்தீவிலுள்ள மாணிக்கப் புத்த பீடிகைக்கு என்னைக் காவல் தெயவமாக இந்திரன் நியமித்துள்ளான். இத்தீவிற்கு எத்தனையோ பேர் வந்துள்ளனர். ஆனால் மக்களின் துயர் துடைக்க எவரும் நினைத்ததில்லை. பசிப்பிணியின் வேரறுக்க யாரும் வைராக்கியம் கொண்டதில்லை. நீ தான் பிறருக்குக் கொடுத்து அவர்களின் துன்பத்தைப் போக்க வேண்டும் என்று நினைத்தாய். நீயே ஏற்றவள். இந்தத் தீவில் புத்த பீடிகைக்கு முன்னுள்ள பொய்கையில்  அமுத சுரபி என்ற பெயருள்ள பாத்திரம் ஒன்று  தோன்றும். அது ஆபுத்திரன் என்பவனுடையது. அதைப் பெற உன்னைப் போன்றவர்கள்தான் தேவை.’ என அவளை அழைத்துச் சென்று அமுத சுரபி பாத்திரத்தைக் அவள் கையில் கொடுத்து அவளை வாழ்த்திவிட்டு மறைந்தது.
மணிமேகலைக்கு நனவா? கனவா? எனப் புரியவில்லை. கையில் இருந்த பாத்திரம் நடந்தது உண்மை தான் என்றது. பிறருக்குக் கொடுக்க நினைப்பவர்களுக்குத் தான் தெய்வம் கொடுக்கும்’ என்ற முதுமொழி உண்மைதானா? பசியோடு இத்தீவில் ஒரு புறம் நானிருக்க, அழுத மொழி இங்கேயே இன்னொருபுறம் இருந்திருக்கிறது. என் மனதில் மாற்றம் ஏற்பட்ட உடனே அது என் கைகளுக்குள் வந்து  விட்டதே’ 
அவளுக்கு அப்போது  மீண்டும் மிகவும் பசித்தது.  அந்த தீவதிலகை சொன்னது போல் அதனுள் உணவு இருக்குமா என்று உள்ளே  கைவிட்டுப் பார்த்தாள். உணவு வரவில்லை. 
கவிழ்த்துப் பார்த்தாள்.
 புத்த கடிகை மீது வைத்துப் பார்த்தாள். அப்போதும்    உணவு வரவில்லை. தெய்வம் சொன்னது பொய்யோ?குழப்ப மடைந்தாள். 
பசி அதிகரிக்கவே தாயின் நினைவு தோன்றியது. விண்ணில் பறக்கும் மந்திரத்தை உச்சரித்துப் பறந்தாள். நீண்ட கடலைக் கணநேரத்தில் கடந்து மாதவி முன்நின்றாள். 
மாதவி இளைத்துப் போயிருந்தாள். திடீரென்றுஅங்கு தோன்றிய மகளைக் கண்டதும், கட்டியணைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டாள். 
‘மணிமேகலை... மணிமேகலை .... ‘அவளுக்கு ஆனந்தத்தில் பேச்சே வரவில்லை.ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டாள். 
மாதவியின் பேச்சுக்குரல் கேட்ட சுதமதி ஓடி வந்தாள். மணிமேகலையைக் கண்டதும், ஓடிவந்து கைகளைப் பற்றினாள். அவள் கையிலிருந்த திருவோடு பார்த்ததும் ஆச்சரியமடைந்தாள். 
‘மணிமேகலை எப்படியம்மா இருக்கிறாய்? எங்கேயம்மா போயிருந்தாய்?. நாங்கள் உன்னைக் காணாமல் உயிரே போனது போலிருந்தோம். என்ன நடந்தது சொல். எங்குச் சென்றாய்? இப்படி இளைத்துப்போயிருக்கிறாயே’ 
மணிமேகலை தீவில் நடந்ததைச் சொன்னாள். சென்ற பிறவியில் நானும் சுதமதியும் அக்கா தங்கைகளா? 
மாதவியும் சுதமதியும் மணிமேகலை கூறியவற்றையெல்லாம் வியப்போடு கேட்டார்கள். 
‘கடல் கடந்து போனாயா? 
‘தீவெங்கும் பாம்புகளா. நினைக்கும் பொழுதே திடுக்கென்கிறதே? 
‘அய்யோ எப்படிப் பயந்து போயிருப்பாய்.‘ 
‘நீயாகவே வானில் பறந்து வந்தாயா?‘ 
‘மணிபல்லவத்தீவா?‘ 
‘புத்தபீடிகையா?‘ 
‘மணிமேகலா தெய்வம்தான் உன்னைக் காத்ததா?‘ 
கேள்விமேல் கேள்வி கேட்டு திகைத்துப்போனார்கள்.. 
மாதவியும் சுதமதியும் சென்ற பிறவியில், தாரையும் வீரையும் என்றபெயரில் அவளுடைய மூத்த சகோதரிகளாகப் பிறந்து, ஒரு மன்னனையே மணந்து மனமகிழ்வுடன் வாழ்ந்ததையும், தாரையின் இறப்பைத் தாங்காது, வீரையும் இறந்ததையும் காட்சி போல் கண்டதைச் சொன்னாள். தான் சென்ற பிறவியில் இலட்சுமியாகப் பிறந்ததையும் சொன்னாள். உதயகுமரனைப் பற்றி எதுவும் சொல்லா தோன்றாமல் மறைத்துவிட்டாள். 
மாதவியும் சுதமதியும், தற்போது இப்பிறவியிலும் தன்னோடு பிறந்து முன்வினை பயனை அனுபவிப்பதையும் நல்வினையால் அறிந்ததைச் சொன்னாள். அதைக் கேட்ட அவர்கள் வியந்து போனார்கள். அவர்களுக்குள் மேலும் நெருக்கம் ஏற்படுவதை உணர்ந்தார்கள். சென்ற பிறவியில் அரசிகளாக வாழ்ந்தவர்கள் இந்தப்பிறவியில் கணிகைகளாக......வாழ்க்கை ஒரு சக்கரம் தான். அந்தச்சக்கரம்  மேலும் கீழுமாக உயர்வதும் தாழ்வதும்.....அரசியாக .பின் கணிகையாக ...
பின் அவர்கள் இருவரும் மணிமேகலையிடம் இருந்த , அமுதசுரபியைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார்கள். அதனுள்ளே  கைவிட்டுப் பார்த்தார்கள். எதுவும் வரவில்லையே. 
இதில் ஏன் எதுவும் வரவில்லை? 
சுதமதி கேட்டாள் 
மணிமேகலை விழித்தாள். 
மாதவி தான் பொருத்தமான பதில் சொன்னாள் 
 ‘அறவண அடிகளிடம் கேட்போம். அவர் தான் உரிய வழி காட்டுவார்! என்றாள் 
' அவரைப்பற்றி இன்னும் சற்று விவரமாகச் சொல் '
மணி மேகலை  கேட்டாள். 
உன் தந்தை இறந்தததைக்  கேள்விப்பட்டு அரிய மாணிக்கத்தைக் கடலில் தொலைத்துவிட்டவளைப் போல மனங்கலங்கி நான் நின்றேன் அப்போது புத்தபிட்சுக்கள் தம் உணவை இறந்து உண்பது போல்,, உண்கலத்தைக் கையில் ஏந்தியபடி வாசலில் நின்றிருந்தார் அறவண அடிகள்.
அருள் கனிந்த அந்த முகத்தைக் கண்டதுமே என்னுள்ளில் என்னையறியாமல் ஒரு தேறுதல்செ வேண்டும் வேட்கை எழுந்தது நான் அவரது திருவடிகளில் சென்று  விழுந்தேன். என் மாளாத  துயரத்தைச் சொல்லி அழுதேன். அடிகள் என் நிலையைக் கூர்ந்து கேட்டார்.

பின் பிறந்தவர் அனைவரும் பெறுவதெல்லாம் துன்பங்களே. இந்த உலகில் பிறாவாதவரே துன்பமில்லாதவர்.  ஆனால் இப்பிறவியிலேயே நாம் பிறவா நிலையடைய முடியும். பிறப்பென்பதே நம்முடைய ஆசைகளினால் வருவதே. நாம் ஆசைகளை அறவே விட்டுவிட்டால் இப்பிறவியிலேயே பிறவாநிலையடைந்து இன்பம் பெற முடியும்.
செத்துப் பிழைப்பதெல்லாம் நாம் உலகப் பொருட்களின் மீதும் , உறவுகளின் மீதும் வைக்கும் பற்றினால் தான்’என்று அறிவுரை கூறி என் மனதிற்கு ஆறுதலளித்தார். முக்காலமும் உணர்ந்த அவரிடம் இப்பாத்திரத்தைப் பற்றிக் கேட்போம். காவல்தெ தெய்வத்தின் வாக்கு  பொய்க்காது. யாவும் அறிந்த அவர்  உணவை வரவழைக்க  உதவுவார். என்றாள்.
[தொடரும்]

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?